கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்

ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"சந்திராயன் வெற்றியும் நிலவில் சூழல் சூறையாடலும்!"---"தோழர்" கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

சந்திராயன் வெற்றியும்
நிலவில் சூழல் சூறையாடலும்!
=========================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=========================

சந்திராயன் 3 நிலவில் இறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு தமிழ்நாட்டு மக்களையும், அறிவியல் வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரையும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் இரசியாவின் லூனா விண்கலம் விழுந்து நொறுங்கிய பகுதியான நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயனிலிருந்து விக்ரம் லாண்டர் 23.8.2023 மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகும்.

சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவதாக நிலவில் தடம் பதித்த பெருமையைத் தாண்டி, நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைச் சந்திராயன் 3-இன் பயணம் நிலைநாட்டியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இச் சாதனைப் பயணத்தில் பணியாற்றிய அறிவியலாளர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக, சந்திராயன் 3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீரமுத்துவேல், துணை இயக்குநர்களாக கல்பனா, வனிதா முத்தையன் ஆகிய தமிழர்கள் பணியாற்றியிருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரும் பெருமை. வளர்ந்துவரும் எந்தப் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் தமிழர்கள் முன்வரிசையில் இருப்பார்கள் என்பதை இவர்கள் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற வகையில் ஒருபுறம் மகிழத்தக்தாக சந்திராயன் 3 நிலவுப்பயணம் அமைந்திருந்தாலும், அதன் பின்னணி நோக்கத்தை அறியும்போது அதிர்ச்சியும் பதட்டமும் ஏற்படுகிறது.

விண்வெளிப் பயணத்தில் ஏற்கெனவே முன்னேறியுள்ள அமெரிக்கா, சீனா நாடுகளைப் போன்றில்லாமல் நிலவின் இருட்டுப் பகுதியான தென் துருவத்தை தேர்ந்தெடுத்து, அதைநோக்கி சந்திராயன் 3 பயணத்தை நடத்தி, அத் தென்துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரை இறக்கி, அதிலிருந்து ரோவர் என்ற நடமாடும் ஆய்வு நிலையத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்றால் அதன் உண்மையான நோக்கம்தான் என்ன?

நிலவைப்பற்றிய அறிவியல் உண்மைகளைக் கண்டறிவதும், அதன்வழியாக இப் பேரண்டம் பற்றிய அறிவை விரிவாக்குவதும்தான் இந்திய அரசின் நோக்கமா? இல்லை! இந்திய அரசின் முதன்மையான நோக்கம் நிலவின் கனிம வளத்தை தன் பங்கிற்குச் சூறையாடுவதுதான். அதன் துணைவிளைவாக, பேரண்டம் பற்றிய இந்திய மக்களின்-தமிழர்களின் அறிவு விரிவடையலாம். ஆனால், முதன்மை நோக்கம் வளச் சுரண்டல்தான்!

இந்தப் பூமி மட்டுமின்றி, விண்வெளியும் சந்தை வேட்டைக்கு உள்ளாகி நெடு நாளாகிவிட்டது! பூமியைச் சுற்றியுள்ள இயற்கை வளமான மின்காந்த அலைகளைத் தனிச் சொத்தாக்கி விலைவைத்து விற்பது பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

விண்ணில் செயற்கைக் கோள்களை ஏவுவது, அவற்றைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு மின்காந்த அலைகளைத் தருவது ஆகியவை பல இலட்சம் கோடி ரூபாய் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் நடைபெற்ற அலைக்கற்றை ஊழல், அலைப்பட்டை ஊழல் போன்றவை இந்திய அரசியலின் புதிய இயல்புநிலை ஆகிவிட்டன.

இப்போது அதைத்தாண்டி, நிலாவும், வெள்ளியும், புதனும், சூரியனும் கூட வள-வேட்டைக்கு உள்ளாக இருக்கின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில், 800 கோடி டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளிச் சந்தை (Indian Space Market) வரும் 2040-இல் 5 மடங்கு வளர்ந்து 4 ஆயிரம் கோடி டாலராக வளர்வதற்கு வாய்ப்புள்ளதென இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2022-23 கூறியது.

நிலாவின் தென் துருவத்தில் உறைபனி நீர் (Water Ice) ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி டாலர் பெறுமதியான அளவுக்கு உடனடியாகக் கிடைக்கும் என்கிறார்கள்.

இதைவிட, ஹீலியம்-3 (He3 ion) அயனி ஏறத்தாழ 10000 கோடி கோடி (10¹⁸) டாலர் பெறுமதியான அளவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

இந்த ஹீலியம் 3 அயனி அணுப்பிணைப்பு வழியில் (Nuclear fusion) அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இதுவும் அணுக்கதிரியக்கத்தை வெளியிடும். ஹீலியம் - 3 பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிப்பதற்கான பிரான்ஸ் தலைமையிலான 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால், மோடி அரசு சப்பானோடு ஹீலியம்-3 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹீலியம்-3 யிலிருந்து அணுபிணைப்பு மின்சாரம் உருவாக்குவதில் இந்தியாவிற்கு சப்பான் தொழில் நுட்ப உதவியை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என்பதும், நிலாவிலிருந்து இந்தியா ஹீலியம்-3 ஐ எடுக்குமானால், அதனை சப்பானோடு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து கொள்வது என்பதும் இவ் ஒப்பந்தத்தின் சாரம்.

இது தவிர புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்குத் தேவையான அரிய கனிமங்களான லாண்ட்டனைடு, ஸ்கேன்டியம், (scandium) இட்ரியம் (yttrium ) போன்றவையும் நிலவின் தென்துருவத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன.

இவ்வாறு நிலவின் வளத்தை சூறையாடுவதற்கான வல்லரசுகளின் போட்டி கடந்த 2015 லிருந்தே தொடங்கிவிட்டது. இனி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியாம், குளோபல் ஆர்ஜின் போன்ற அமெரிக்க தனியார் நிறுவனங்கள் 2025 லிருந்து அடுத்தடுத்து நிலவில் ஆய்வுக் கலங்களை இறக்கிவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தகுந்தாற்போல் அமெரிக்க அரசு கடந்த 2015 லேயே விண்வெளி கனிமவளச் சட்டம் என்ற ஒன்றை இயற்றி அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தனியார் பெருங்குழுமங்களும் கூட்டாகச் செயல்படுவதற்கு வழி திறந்துவிட்டிருக்கிறது.

மோடி அரசும் ஏற்கெனவே, இஸ்ரோவோடு சேர்ந்து தனியார் பெருங்குழுமங்கள் நிலா உள்ளிட்ட விண்பொருள் வளங்களைச் சூறையாடுவதற்கு ஏற்ப சட்டம் இயற்றிவிட்டது.

ஈர்ப்பு விசையும், வளிமண்டலமும் பூமியை ஒப்பிட வலு குறைவாக உள்ள நிலாவில் இந்த வளச் சுரண்டல் வேட்டை எந்த வகையான சுற்றுச் சூழல் விளைவுகளை ஏற்படுத்தும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

ஆனால் அது மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

மண்ணையும், கடலையும் சூறையாடியது போதாதென்று இப்போது விண்ணுக்கும் புறப்பட்டுவிட்டார்கள்.

சந்திராயன் 3 அறிவியல் சாதனைதான் என்றாலும் அது உயிர்மக் கோள(Bio-sphere)த்திற்கும் மனித குலத்திற்கும் ஏற்படுத்த உள்ள பேரழிவை உணரும்போது அச்சமாக இருக்கிறது.

“கண்டுபிடிப்புகளை நிறுத்துங்கள். காப்பாற்றும் வழியை யோசியுங்கள்” என்று 2019-இல் ஸ்பெயினில் நடந்த ஐ.நா. சுற்றுச் சூழல் மாநாட்டில் சூழலியலாளர்கள் எழுப்பிய முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.

வரம்பற்ற அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி அறவாழ்வை அழிக்கிறது என்பதையும் சேர்த்து இளையோர் சிந்திக்க வேண்டும். அவரவர் மண்ணையும் அம் மண்ணின் உயிர்களையும் பாதுகாக்கும் அற அரசியல்-பொருளியலுக்குத் திரும்ப வேண்டும். அறிவியல் வளர்ச்சி அதற்கு இசைவாக விளங்க வேண்டும்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

"தமிழ்நாடு அரசு நிர்வாகம் வெளியார்மயம்!"----- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

தமிழ்நாடு அரசு நிர்வாகம் வெளியார்மயம்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த திரு. இறையன்பு பணி ஓய்வு பெற்றதையடுத்து, திரு. சிவதாஸ் மீனா அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலாளராகப் பணியமர்த்தி இருக்கிறார். அதுபோல், புதிய காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சங்கர் ஜிவாலும், சென்னைக் காவல் ஆணையர்களாக சந்திப்ராய் ரத்தோர், பிரேமானந்த் சின்கா, கபில்குமார் சரத்கார் ஆகியோரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதற்குமேல், கூடுதல் தலைமைச் செயலாளர்களாக இருக்கும் அதுல்யா மித்ரா, சந்தீப் சக்சேனா, மணீந்திர ரெட்டி, விக்ரம் கபூர் போன்றவர்களும் வெளி மாநிலத்தவர்களே!

இத்தோடு, பல்வேறு துறைச் செயலாளர்கள், மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோரையும் கணக்கில் கொண்டால், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் நிர்வாகம் வெளியார் மயமாகி இருப்பது புலப்படும்!

ஏற்கெனவே, தமிழ்நாட்டின் தொழில், வணிகம் ஆகியவை மார்வாடிகள், மலையாளிகள், ஆந்திரத் தெலுங்கர்கள் வசம் சிக்கிவிட்டன. தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்கள், இந்திக்காரர் மயமாகிவிட்டன. முக்கியமான தொழில் நகரங்கள் மட்டுமின்றி, பேரூராட்சிப் பகுதிகள் கூட வடமாநிலத் தொழிலாளர்களால் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், அனைத்துநிலை உயரதிகாரிகளும் வெளி மாநிலத்தவராக இருக்கும்போது, தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை மட்டும் உள்ள அடிமைக் குடிகளாக அலையும் நிலை ஏற்படும். கீழ்மட்ட உழைப்பிலிருந்து, உயர்மட்ட அரசு நிர்வாகம் வரை வெளி மாநிலத்தவர்களால் நிரம்பும்போது, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்பதே பொருளற்றதாக மாறிவிடுகிறது.

நடைமுறையில், மார்வாடி - மலையாளி போன்ற வெளிமாநில வணிகர்களோடும், இந்திக்காரத் தொழிலாளர் களோடும் உள்ளூர் தமிழர்களுக்கு அங்கங்கே முரண்பாடுகள் - உரசல்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டிற்குள்ளேயே வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் பார்க்கிறோம்.

இவ்வாறான சூழலில், பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஞாயம் கேட்டு, மாவட்ட நிர்வாகத்தையோ காவல்துறையையோ அணுகும்போது, அங்கே வெளிமாநில அதிகாரிகள் இருக்கும்நிலையில், தங்களது பாதிப்பை மனம் விட்டு சொல்வதற்குக் கூட தயக்கம் ஏற்படும். ஞாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு மட்டத்திலும் மறுக்கப்படும்.

அடிப்படையில், இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.), இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்.) போன்ற அனைத்திந்திய பணிகளே கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் கூறி வருகிறது.

1990 பிப்ரவரி 25 அன்று, சென்னையில் நடத்திய தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டிலேயே இந்தியாவை இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் ஒன்றியமாக மறுசீரமைக்க வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம், இந்தியக் குடிமைப் பணிகள் குறித்த தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்.) பதிலாக தமிழ்நாடு ஆட்சிப் பணியும், இந்தியக் காவல் பணிக்கு மாற்றாக தமிழ்நாடு காவல் பணியும், இந்திய வருவாய்ப் பணிக்கு மாற்றாக தமிழ்நாடு வருவாய்ப் பணியும், இந்திய வனத்துறைப் பணிக்கு பதிலாக தமிழ்நாடு வனத்துறைப் பணியும் உருவாக்கப்பட வேண்டுமென்று கூறியது.

இந்த அடிப்படை மறுசீரமைப்பு ஒருபுறமிருக்க, உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் பணிகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பணியமர்த்தக் கூடாது!

பெரும்பாலும், அமைச்சர்கள் அன்றாட நிர்வாகப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளால் வழி நடத்தப்படுவது இயல்பு. இவ்வாறான சூழலில், இந்த உயர்மட்ட அதிகாரிகள் பெரும்பாலோர் வெளியாராக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் கூட இந்த மண்ணின் மக்களுக்கு உரியதாக இருக்காது. அமைச்சர்களே நினைத்தாலும்கூட, தமிழர்களுக்கு ஆதரவான முடிவுகளை செயல்படுத்துவதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முட்டுக்கட்டைகள் போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு நிர்வாகமே, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு புறம்பானதாக முற்றிலும் மாறிப்போகும்!

இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் உயர்மட்டப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை பணியமர்த்துவதைக் கைவிட வேண்டும்! தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளையே அமர்த்த வேண்டும்!

இப்போது, தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகிய உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத்து அதிகாரிகளை மாற்றிவிட்டு, தகுதியுள்ள தமிழ்நாட்டு அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

"மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல்! தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம்!"----- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல்!

தொடர்வண்டித்துறையின்
தமிழினப் பகைக்குக் கண்டனம்!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!

========================================

தமிழ்நாட்டு மக்களால் இன்றளவும் போற்றப்படுபவர்கள் மூவேந்தர்கள். அதில் மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். குறிப்பாக பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனால் உருவாக்கப்பட்டதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். அதுபோல் நீதிக்காக பாண்டிய மன்னனிடம் கண்ணகி வாதாடியதும் மதுரையில் தான்.

மதுரையில் 1981ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் மூவேந்தர்களின் பெயரால் சேர, சோழ, பாண்டியர் தோரண வாயில்கள் உருவாக்கப்பட்டது.

அதுதவிர, குலசேகர பாண்டியனுக்கோ, கண்ணகிக்கோ எந்த அடையாளச் சின்னமும் தமிழக அரசால் இதுவரை நிறுவப்படவே இல்லை.

1999ஆம் ஆண்டு பாண்டிய மன்னர்களின் நினைவைப் போற்றும் விதமாக மதுரை தொடர்வண்டி நிலையம் கிழக்கு நுழைவு வாயில் முன்பு ஒன்றோடு ஒன்று துள்ளிக் குதிக்கும் மூன்று மீன் கொண்ட வெண்கலச் சிலையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நிறுவப்பட்டது. இந்த வெண்கல மீன் சிலைகள் 15 அடி உயரமும், 3 டன் எடையும் கொண்டவை.

இருபது வருடங்களாக நீடித்து நிலைபெற்று பார்ப்போரை கவர்ந்திழுத்து வந்த மூன்று மீன் சிலைகளையும் 2019ஆம் ஆண்டில் தொடர்வண்டி நிர்வாகம் அகற்றியது.

தொடர்வண்டி நுழைவு வாயில் பகுதியில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், அழகு படுத்துவதற்கும் மீன் சிலைகளை அகற்றுவதாக கூறிய தொடர்வண்டி நிர்வாகமே தமது வளாக அறையில் சிலைகளை பூட்டி பாதுகாத்து வந்தது.

தொடர்வண்டி நிலைய மேம்பாட்டு வேலைகள் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் சிலை வைக்கும் முயற்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஈடுபட்டது.

2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினரும், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும் தெற்கு தொடர்வண்டி கோட்ட மேலாளர் ஆனந்த் அவர்களை சந்தித்து மீன் சிலை வைப்பதற்கு அனுமதி கேட்டனர். அவரும் தேசியக் கொடி கம்பம் அருகில் உள்ள 100 அடி இடத்தில் சிலையை வைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து சிலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் செங்கல் வைத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், இரயில்வே கோட்ட தலைமைப் பொறியாளர் வில்லியம்ஸ் ஜோய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் அவர்களும், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும், "மீன் சிலை மட்டுமின்றி சிலையின் வலது மற்றும் இடது பக்கமாக தலா மூன்று வண்ண நீரூற்றுகளையும் அமைக்க உள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ரூ 20 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒரு மாதத்தில் மக்களின் பார்வைக்கு சிலை வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் ஓராண்டாகியும் மீன் சிலை நிறுவப்படவில்லை. இதற்கிடையில் 2022ஆம் ஆண்டு நவம்பரில் மீன் சிலையை வைக்கக் கோரி தமிழர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது பதிலளித்த மதுரை தொடர்வண்டி கோட்ட நிர்வாகம் மீன் சிலை நிறுவப்பட்டு விட்டதாக பொய்யான தகவலை தெரிவித்தது. வழக்கும் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.

தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில் பொய்யான தகவலை தந்ததாகக் கூறி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

2023 நவம்பர் 3ஆம் நாளன்று நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஆர். விஜயகுமார் ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில், மீன்கள் சிலையை வைத்த தொழில் வர்த்தக சங்கத்தினரே விரிவாக்க பணியின் போது எடுத்துவிட்டனர் என்றும், தொடர்வண்டி நிலையப் பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவு சின்னங்கள் உள்ளிட்டவை வைக்கக் கூடாது என்று தொடர்வண்டித் துறையின் சுற்றறிக்கை உள்ளதாகவும், இதனால், வேறு பகுதியில் மீன் சிலைகள் வைத்துக் கொள்ளுமாறு கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகும். 2021ஆம் ஆண்டு தெற்கு தொடர்வண்டி கோட்ட மேலாளர் ஆனந்த் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் மீண்டும் மீன் சிலை வைப்பதற்காக செங்கல் வைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

1999இல் மீன் சிலை வைப்பதற்கும், எடுத்த சிலையை 2021இல் மீண்டும் நிறுவுவதற்கும் அனுமதி கொடுத்த தொடர்வண்டி நிர்வாகம் தற்போது தொடர்வண்டித்துறை விடுத்த சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏற்கும்படியாக இல்லை.

அண்மையில் தென்மேற்கு தொடர்வண்டித் துறை சார்பில் கர்நாடகா மாநிலம் ஹீப்ளி நிலையத்திற்குள்ளேயே காந்தி சிலையை தொடர்வண்டித் துறை கோட்ட மேலாளர் திறந்து வைத்துள்ளார். மேலும் அங்கு யோகி சித்தாரூத சுவாமிகள் சிலையும் உள்ளது. அது போல போபால் நிலையத்தில் ராணி கமலா பாட்டி சிலையும், மைசூர் நிலையத்தில் சிற்பக் கலைஞர் யுவராஜ் வடிவமைத்த சிலைகளும் பெல்லாரி நிலையத்தில் காந்தி சிலையும் உள்ளது.

இதுபோல், பல்வேறு தொடர்வண்டி நிலையங்களில் தலைவர்களின் சிலைகளும், நினைவுச் சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளது.

அவ்வாறு உள்ளபோது, திடீரென்று சுற்றறிக்கை இருப்பதாகக் கூறி மதுரை தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் பாண்டியர்களின் மீன் சிலையை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று வாதிடுவது அப்பட்டமான தமிழின பண்பாட்டு அடையாள எதிர்ப்பு நிலையாகும்.

உடனடியாக தெற்கு தொடர்வண்டி கோட்ட நிர்வாகம் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நிறுவிய மீன் சிலையை அதே இடத்தில் நிறுவிட அனுமதிக்க வேண்டும்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளச் சின்னமான மீன் சிலையை நிறுவுதற்கு தமிழ்நாடு அரசும் இதில் தலையிட வேண்டுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
================================== 

"மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல்! தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!