கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

இறையாண்மை - குடிமக்கள் - வாழ்குடிகள்: சில சிந்தனைகள் - தோழர் கி.வெங்கட்ராமன்

(திசம்பர் 2008 இதழில் வெளியான பேரா.த. செயராமன் அவர்களின் “இறையாண்மைக் கோட்பாடும், இந்திய ஆளும் வர்க்கமும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரையைப் பார்க்கவும்.)

பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சு நாட்டின் தேசிய அவையானது “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் குறித்த அறிக்கை” வெளியிட்டதை பேரா.த.செயராமன் எடுத்துக்காட்டுகிறார். (‘மனிதன்’, ‘குடிமகன்’ என்ற ஆண்பால் சொற்கள் பயன்பட்டாலும், அவை இருபாலரையும் குறிப்பனவே என்பது தெளிவு).

இங்கு ‘மனிதன்’ (Man) ‘குடிமகன்’ (Citizen) என்று இரு தனித்தனிச் சொல்லாடல்களை பிரெஞ்சு தேசிய அவை பயன்படுத்துவது கவனிக்கத் தக்கது. ஏனெனில் பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் உள்ள வாழ்வுரிமை அல்லது குடிமை உரிமையும், குடிமக்களுக்கு உள்ள உரிமையும் வேறுபட்டத் தன்மையன, மனித உரிமை என்பது அரசியல் எல்லைகளைக் கடந்த, உலகு தழுவிய பொதுவான தன்மையுடையது. குடிமக்களின் உரிமை என்பது அரசியல் தன்மையுடையது; அரசதிகாரத்துடன் தொடர்புடையது. ‘குடிமக்கள்’ என்ற வகையினமே மனித குல வரலாற்றில் ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் மலர்ந்ததுதான்.

மனிதன் எப்போதுமே சமூக உயிரிதான். இந்த சமூகம் என்பது தனித்தனி மனிதர்கள் தம் விருப்பம்போல் தேர்வு செய்து, சேர்ந்து கொள்கிற கூட்டம் அல்ல. இயற்கையாக அமைந்தது. மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் இந்த சமூகம் என்பது இரத்த உறவு உள்ள மனிதத் தொகுதியாகவே இருந்தது. ‘குலம்’, ‘கணம்’ என்பதாக இவர்கள் அறியப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு கட்டத்தில் நிலைத்த வாழ்க்கை ஏற்பட்டது. அந்த நிலம் அச்சமூகத்தின் தாயகமாக மாறியது. இவர்களுக்குள் இரத்த உறவோடு, தாயக உறவும் இணைந்து கொண்டது.

இதன்பிறகு குடி அல்லது பழங்குடி, மரபினம் என்பதாக மனித சமூகம் வளர்ந்தது. பழங்குடிச் சமூகத்திற்குள்ளும் இரத்த உறவு தொடர்ந்தாலும், அது முன்பைவிட தளர்ந்ததாக இருந்தது. குலங்களின் தொகுப்பாக அந்தப் பழங்குடி இருந்தது. இவர்களுக்குள் சமூக உறவைக் கட்டியெழுப்புகிற முக்கிய காரணியாக மொழி வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதற்கேற்ப இவர்களது தாயகமும் விரிந்தது. மரபினத்தின் ஒருங்கிணைப்புக்குக் காரணிகளாக மொழியும், தாயகமுமே முதன்மை பெற்றன. மனித சமூக வளர்ச்சிப்போக்கில் வர்க்கங்கள் தோன்றி அதன் விளைவாக அரசுகள் உருவாயின. அரசுக்கும், இச்சமூக உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவு அரசு-வாழ்குடி (State-Subject) என்பதாக இருந்தது. அரசருக்கும், வாழ்குடி அல்லது குடிபடை (Subject) களுக்கும் இடையிலான உறவு அரசியல் உறவுதான்.

என்றாலும் ஆட்சியதிகாரத்தில் வாழ்குடிகளுக்கு எவ்விதப் பங்கும் கிடையாது. வாழ்குடிகளின் பாதுகாப்புக்கும், நலவாழ்வுக்கும் அரசன் பொறுப்பேற்கிறான். வர்க்க ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கிலேயே இக்கடமையினை அரசன் நிறைவேற்றுகிறான். இங்கு அரசதிகாரம் அல்லது இறையாண்மை மன்னனைச் சார்ந்தது. மன்னனின் ஆட்சிப்பரப்பு முழுவதிலும் அவனது இறையாண்மை செல்லுபடியாகும். மன்னனின் போர் வலுவைப் பொருத்து அவனது ஆட்சிப் பரப்பு விரியும் அல்லது சுருங்கும். இதன் போக்கில் ஒரு பேரரசனின் வாள் வலிமையிடம் தமது இறையாண்மையை ஒப்புக்கொடுத்து, கப்பம் கட்டிய அரசர்களும் உண்டு. அதாவது அரசனின் இறையாண்மை நிலையற்றது.

பல்வேறு சமூகங்களை, அவர்களது தாயகத்தை ஒரு அரசன் கட்டியாண்டாலும், அச்சமூகங்கள் அனைத்தின் உறுப்பினர்களும் இம்மன்னனின் வாழ்குடிகள்தாம். மன்னன் எவ்வளவு சிறிய பரப்பை ஆட்சி செய்தாலும், அங்குள்ள வாழ்குடிகள் தங்களது குறைகள் பிரச்சினைகள் குறித்து மன்னனிடம் முறையிடலாமே தவிர, உரிமையாக எதையும் வலியுறுத்திக் கேட்க முடியாது. அவனது ஆட்சிமுறை பற்றியோ, நீதிமுறை குறித்தோ எவ்வகை முடிவையும் வாழ்குடிகள் மேற்கொள்ள முடியாது; செயல்படுத்த முடியாது. இருப்பினும் கிரேக்கத்திலும் தமிழகத்திலும் "உயர்குடிகளைக்" கொண்டு தேர்வு செய்யப்பட்ட சான்றோர் அவை அல்லது செனட் இருந்தது.

இவற்றிடம் ஆலோசனை கலக்க வேண்டிய கட்டாயக் கடமை அரசனுக்கு இருந்தது. இறுதி அதிகாரம் அரசனுக்கு இருந்தாலும், இந்த அவையின் தார்மீகச் செல்வாக்கிற்கு உட்பட்டே அவனது ஆட்சியதிகாரம் அல்லது இறையாண்மை செயல்பட்டது. தொழில் புரட்சி ஏற்பட்டு, அச்சு ஊடகம் வளர்ந்து, மரபினம் தேசிய இனமாக படிமலர்ச்சி பெறும்போது, அதன் கூடவே சனநாயகமும் மலர்ந்தது. "மக்களிடமிருந்தே அதிகாரம்" என்ற புதிய பாய்ச்சல் ஏற்பட்டது.

மக்கள் சமூகம் தேசிய இனச் சமூகமாக அடையாளங்கொண்டது. ஒரு தேசிய இனத்துக்கு ஒரு தேசம், அத்தேசத்துக்கான தேச அரசு என்பது உருவானது. ஒரு பொது மொழியும், ஒரு பொதுத் தாயகமும் ஒரு தேசிய இனத்தின் தீர்மானகரமான கூறுகள் ஆயின, அத்தேசிய இனத்தின் வரலாறும், பொதுப் பண்பாடும், அதனடியாகப் பிறந்த "நாம்" (We) என்ற உணர்ச்சியும் அத்தேசிய இனத்தின் இணைப்பு சக்தியாக (Welding force) செயல்பட்டது.

தேசிய இனத்தின் அடிப்படை அலகாக குடிமக்கள் (Citizens) உருவானார்கள். இவர்கள் இனி அரசதிகாரம் ஏதுமற்ற வாழ்குடிகள் (Subjects) அல்லர். மாறாக இவர்களிடமிருந்துதான் அரசதிகாரம் பிறக்கிறது. வரலாற்றில் எப்போதுமே மனிதர்கள் ஒரு சமூகத்தின் உறுப்பாக இருந்திருக்கிறார்களே தவிர உதிரியான தனி ஆளாக (Individual) இருந்ததில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்களை தனித்தனி மனிதர்களின் கூட்டமாக மாற்ற உலகமயம் முயல்கிறது. மனிதர்களைத் தனித்தனி ஆளாகப் பிரித்து, தனிமனித உரிமை என்பதை அதற்குத் துணையாகக் கொள்வதை பின்- நவீனத்துவவாதிகள் வழமையாகக் கொண்டுள்ளனர்.

தேசிய இனமாக மனிதகுலம் வளர்ந்த பிறகு, அத்தேசிய இனத்திற்கு தேச அரசு அமைத்துக்கொள்ளும் உரிமை அதாவது இறையாண்மை அதாவது தன்னுரிமை (Right to self determination) அடிப்படை பிறப்புரிமை ஆகிறது. வெளியார் குறுக்கீடு ஏதுமின்றி, தன் தீர்மானிப்பின்படி அத்தேசிய இனம் தனக்கான அரசை அமைத்துக்கொள்ளலாம். இவ்வாறான தேசிய இறையாண்மையானது அத்தேசிய இனத்தின் அடிப்படை அலகான குடிமக்களிடமே தங்கியிருக்கிறது. வேறுவகையில் சொல்வதானால், குடிமக்களிடமிருந்தே இறையாண்மை ஊற்றெடுக்கிறது.

ஆயினும் வர்க்கப்பிளவும், முதலாளிய ஆதிக்கமும் உள்ள சமூகமாகத்தான் ஒரு தேசிய இனம் விளங்குகிறது. இதனால் தேசிய இறையாண்மையைப் பெற்ற ஒரு தேச அரசில் கூட அக்குடிமக்கள் தமது இறையாண்மையை முழுஅளவில் செயல்படுத்த முடிவதில்லை. இம்மக்கள் தேசிய வகையில் சுதந்திரமானவர்களாக இருந்தாலும், வர்க்க ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதன் விளைவு இது.

ஒரு தேசிய இனத்தின் விருப்பத்தை உறுதி செய்யாமல், வலுவந்தமாக நிறுவப்பட்ட பல் தேசிய இன நாடாக ஒரு நாடு இருக்குமானால், அத்தேசிய இனம் அங்கு தமது இறையாண்மையைப் பறிகொடுத்து நிற்கிறது என்று பொருள். இவ்வாறு இறையாண்மையைப் பறிகொடுத்து நிற்கும் தேசிய இனத்தின் குடிமக்கள், அந்நாட்டில் உண்மையான பொருளில் குடிமக்களாக நடத்தப்படமாட்டார்கள் மாறாக அவர்கள் வாழ்குடிகளாகவே (Subjects) நடத்தப்படுவார்கள்.

ஆயினும் பழைய காலத்தில் இருந்ததுபோல் அரசனுக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட்ட வாழ்குடிகளாக இவர்கள் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் இன்றைக்கு சனநாயக அரிதாரம் பூசிக் கொள்ளாத அரசுகளை காண்பது அரிது. இதற்குத் தகுந்தாற்போல் இந்த வாழ்குடிகள் நடத்தப்படுவார்கள்.

இந்த வாழ்குடிகள் இனி வெறும் வாழ்குடிகள் அல்லர், இவர்கள் வாக்காளர்கள் (Voters) என்ற பட்டுச்சட்டை அணிந்த வாழ்குடிகள். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. வாக்காளர் என்ற வடிவமெடுத்துள்ள இந்த வாழ்குடிகள் ஆளுங்கட்சியைத் தேர்வு செய்யலாம். ஆனால் தேச அரசை நிறுவிக் கொள்ளமுடியாது. அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது.

இந்தியாவைப் பொருத்த அளவில் தேசிய இனம் என்ற வகையில் இந்தித் தேசிய இனம் ஆளும் தேசிய இனமாக இருக்கிறது. ஆயினும் முதலாளிய பார்ப்பனிய சக்திகள் ஆளும் சக்திகளாக இருப்பதால் இத்தேசிய இன மக்கள் முதலாளியச் சுரண்டலுக்கும், பார்ப்பனிய ஒடுக்கு முறைக்கும் உள்ளாகிறார்கள். அதாவது இந்தித் தேசிய இன மக்கள் தேசிய இறையாண்மையைப் பெற்றுவிட்ட போதிலும், அவர்களில் பெரும்பான்மையோர் வர்க்கச் சுரண்டலுக்கும், சாதி ஒடுக்கு முறைக்கும் ஆளாகி இருப்பதால் அவர்கள் தமது இறையாண்மையை முழுஅளவில் செயல்படுத்த முடிவதில்லை என்று பொருள்.

முதலாளிய- பார்ப்பனிய-இந்தி ஆதிக்க சக்திகள்தான் முழு இறையாண்மையை சுவைக்கின்றனர். இந்தியாவைப் பொருத்த அளவில் அரசமைப்புச் சட்டம் தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமையைப் பறிக்கிற ஆவணமாக இருக்கிறது. இந்த அடிப்படைச் சட்டத்திற்கு இசைய பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு, செயல்படுகின்றன.

முதலாளிய, பார்ப்பனிய, இந்தி ஆதிக்க சக்திகளின் ஆதிக்கப் புனைவான ”இந்தியத் தேசியம்” இத்துணைக் கண்டத்தின் உண்மையான தேசிய இனங்களின் இருப்பையே மறுக்கிறது. இங்கு தேசிய இன உரிமையை வலியுறுத்துவது பிரிவினைவாதமாக வரையறுக்கப்படுகிறது. ”இந்திய இறையாண்மை” என்ற பெயரால் தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை மறுக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புக்கும், இந்திய இறையாண்மைக்கும் விசுவாசம் காட்ட உறுதியளிப்பவர் மட்டும் இங்கு நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ, ஊராட்சி மன்றத்திற்கோ போட்டியிட முடியும் என்பது சட்ட நிபந்தனை.

இவ்வாறான உறுதிமொழியில் கையெழுத்திட்டதற்குப் பிறகே இம்மன்றங்களின் உறுப்பினர் பதவியில் ஒருவர் அமர முடியும். எனவே தேர்தல் முறையில் இந்தியாவில் தமிழர்கள் தமது தேசிய இறையாண்மையை நிலை நாட்ட முடியாது. இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி முறை என்று பெயர் சூட்டப்பட்டாலும், தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் ஒப்புதலைப் பெற்று உருவாக்கப்பட்டக் கூட்டரசு அன்று.

இங்கு நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசிய இறையாண்மை குறித்தக் கேள்வியை முன் வைப்பதே சாத்தியமில்லை. அதற்கு சட்டம் இடம் அளிக்காது. காசுமீரில் கருத்து வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவது கவனிக்கத் தக்கது. அதாவது நிலவும் அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தமிழர்கள் வாக்காளர்களாக இருக்கலாமே தவிர, குடிமக்கள் என்ற முழுத் தகுதியைப் பெற முடியாது. தமிழர்களின் தாயக உரிமை உள்ளிட்ட எது ஒன்று பற்றியும் தில்லி ஆட்சியாளர்கள் தம்மிச்சையாக எந்த முடிவும் மேற்கொள்ளலாம். அதற்குத் தமிழர்களின் ஒப்புதலோ, தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தின் ஒப்புதலோ தேவையில்லை. கச்சத்தீவு பறிக்கப்பட்ட முறை இதற்கொரு சான்று. இந்திய ஆட்சியில் தமிழர்கள் வாழ்குடிகளாக மட்டுமே நடத்தப்படுகிறார்களே தவிர குடிமக்களாக உண்மைப் பொருளில் அங்கீகரிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் ”இந்தியக் குடிமக்கள்” பிரித்தானிய இந்திய வாழ்குடிகளாக (British Indian Subjects) நடத்தப்பட்டது போல், இந்தியாவில் தமிழ்க்குடிமக்கள் இந்திய வாழ்குடிகளாக நடத்தப்படுகிறார்கள்.

இந்திய இறையாண்மை என்ற பெயரால் தமிழ்த் தேசிய இறையாண்மையை மறுப்பது போலவே, இந்தியாவின் குடிமக்கள் (Citizen of India) என்ற பெயரால் தமிழ்க் குடிமக்களின் குடியுரிமையை மறைக்கிறார்கள். ”இந்திய இறையாண்மை” என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் பேராட்சியை நிலைநாட்டுவதற்கு சொல்லப்படும் நியாயமே தவிர வேறல்ல. பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து ”இந்திய இறையாண்மை” கோரியவர்களை ”ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தவர்கள்” என்று பிரித்தானிய அரசு குற்றம் சுமத்தியது. அதேபோல், இன்று தமிழத் தேசத்திற்கு இறையாண்மை இல்லையே என்று கவலை தெரிவிப்பவர் மீது ஆட்சியைக் கவிழ்க்க சதி (124A) "பிரிவினைவாதிகள்" என்று குற்றம் சுமத்துகிறது இந்தியச் சட்டம்.

இந்திய இறையாண்மை என்ற பெயரால் உண்மையான தேசிய இறையாண்மை மறுக்கப்படுகிறது. இந்தியக் குடிமக்கள் என்ற பெயரால் உண்மையான தேசியக் குடியுரிமை மறுக்கப்படுகிறது. வாக்காளர் என்ற பட்டமும், தேர்தல் என்ற திருவிழாவும் இந்த அடிமைத்தனத்தை உணரவிடாமல் தடுக்கின்றன. இதிலிருந்து தமிழர்கள் விடுபடவேண்டும். தேசிய விழிப்புணர்வு பெறவேண்டும்.

0 கருத்துகள்: