கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

பி.ட்டி. கத்தரிக்குத் தடை: தொடர வேண்டிய விழிப்புணர்வு

பி.ட்டி. கத்தரிக்குத் தடை: தொடர வேண்டிய விழிப்புணர்வு

அக்கறையுள்ள அறிவாளர்களும், உழவர்களும் ஒன்றிணைந்து போராடினால் அரசைப் பணியவைக்க முடியும் என்பதற்கு பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு. மான்சான்டோ நிறுவனத்தின் பி.ட்டி.கத்தரியைத் தற்போதைக்கு சந்தைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 09.02.2010 அன்று இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அறிவித்தார்.

பி.ட்டி.பருத்தியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு அறிவாளர்களையும், உழவர்களையும் விழிப்புறச்செய்தது. பி.ட்டி. கத்தரியை அனுமதித்தால் பிற உணவுப் பயிர்களுக்கும் கம்பெனி ஆதிக்கம் தொடரும் என்பதை இவர்கள் உணர்ந்தனர். எனவே பி.ட்டி.கத்தரி பற்றிய விவாதத்தில் இவர்கள் கூர்மையாகப் பங்கேற்றனர். ஆயினும் இந்திய அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு அறிவியல் வழிப்பட்ட எந்தவித எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கடந்த 2009 அக்டோபர் 14 அன்று பி.ட்டி.கத்தரி விற்பனைக்கு ஏற்பு வழங்கியது. இக்குழுவில் உச்சநீதிமன்றத்தின் பார்வையாளராக இடம் பெற்றிருந்த செல் உயிரியலாளர் முனைவர். பி.எம்.பர்கவா இம்முடிவு எவ்வாறு தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்தினார். பி.ட்டி.கத்தரிக்கு ஏற்பு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட உள்குழு பெரிதும் அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டோவின் கையாள்களால் நிரப்பப்பட்டிருந்தது என்பதை டவுன் டு எர்த் இதழ் அம்பலப்படுத்தியது. (காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பிப்ரவரி 2010)

ஆயினும், வலுவான எதிர்ப்பு தொடர்ந்ததன் காரணமாக இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னால் மக்கள் கருத்து கேட்டு அறியப்படும் என இந்திய அரசு அறிவித்தது.

இதற்கேற்ப கொல்கத்தா, புவனேஸ்வர், ஆமதாபாத், சண்டிகர், ஐதராபாத், பெங்களுர் ஆகிய இடங்களில் பொது விசாரணைகள் நடைபெற்றன. எல்லா இடங்களிலும் அறிவாளர்கள், உழவர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்களமைப்புகள் ஆகியவற்றின் பேராளர்கள் பங்கேற்று பி.ட்டி.கத்தரியினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினர். உத்தரப்பிரதேசம், ஜார்கண்டு, கேரளா, ஆந்திரம், கர்நாடகா ஆகியவற்றின் முதலமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் பி.ட்டி.கத்தரியை ஆய்வின்றி சந்தைக்கு அனுமதித்துவிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இவற்றின் விளைவாக ‘பி.ட்டி.கத்தரி’ குறித்து எழுந்துள்ள எதிர்க்கருத்துக்களை உரியவாறு ஆய்வு செய்த பிறகே அதனை சந்தைக்கு இந்திய அரசு அனுமதிக்கும்’ என்று 09.02.2010 அன்று சுற்றுச்சூழல் இணை அமைச்சர் செயராம் ரமேசு அறிவித்தார்.

அவரது விரிவான அறிக்கை இச்சிக்கல் குறித்து நாமும் வேறு பல அமைப்பினரும் எழுப்பிய ஐயங்களை உறுதிசெய்வதாக அமைந்தது.

பி.ட்டி.கத்தரி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுயேச்சையான ஆய்வகங்களில் செய்யப்பட்டவை அல்ல. மாறாக மான்சான்டோவின் துணைநிறுவன ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை அப்படியே ஏற்பிசைவுக்குழு கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அரசு அறிக்கை ஒப்புக்கொண்டது. பி.ட்டி.பருத்தி சட்டவிரோதமான வழிகளில் சந்தைக்கு வந்து, சந்தையை ஆக்கிரமித்து உள்ளுர் பருத்தி வகைகளை முந்திச்சென்றது என அமைச்சரின் அறிக்கை (பத்தி 12,13 ) கூறுகிறது. இதுபற்றி மீளாய்வு செய்யவேண்டியது அவசியம்தான்என்றும் ஏற்றுக்கொள்கிறது.

பி..ட்டி.கத்தரிக்கு ஒப்புதல் வழங்கும் முன் பல் சூழல் கள ஆய்வு செய்யப்படவில்லை என்று பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற அறிவியலாளர் செரிலானி, நியூசிலாந்தின் நுண்ணுரியியல் ஆய்வாளர் ஜாக் ஹய்ன்மேன் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டியதை சரியான செய்தி என்று அமைச்சரின் அறிக்கை ஏற்றுக்கொண்டது (பத்தி 16).

சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய நாட்டின் உள்நாட்டு மருத்துவ முறைகளில் மருந்துப்பொருளாக பயன்படும் கத்தரியில் மரபீனி மாற்றுத் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை ஆய்வுக்குழு ஆய்வுக்கே எடுத்துக்கொள்ளவில்லை என்பதை மாற்று மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். அமைச்சரின் அறிக்கை இச்சிக்கலை உறுதிப்படுத்துகிறது (பத்தி 20)

பி.ட்டி.கத்தரிக்குப் பதிலாக கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் “சொந்தமாக உருவாக்கியுள்ள” மரபீனி மாற்று கத்தரியை அனுமதிக்கப்போவதாக சட்டமன்றத்தில் தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார். இது மான்சான்டோவின் பி.ட்டி.கத்தரிக்கு உள்ளுர் முகமூடி அணிவித்து உலவவிடும் சூதான முயற்சி என்பதை எச்சரிக்கையாகக் கூறியிருந்தோம் (காண்க: பிப்ரவரி இதழ்). சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தற்சார்பு வேளாண்மை வல்லுனர்களும் தமிழக முதலமைச்சரை சந்தித்தபிறகு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் சட்டமன்ற அறிவிப்பு கடைபிடிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஆபத்தானது என நாம் எடுத்துக்காட்டியதை அமைச்சர் செயராம் ரமேசின் அறிக்கையும் உறுதிசெய்கிறது.

“2005 மார்ச்சு மாதத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், மான்சான்டோவும் செய்துகொண்ட பொருள் மாற்ற உடன்பாடு. (விணீtமீக்ஷீவீணீறீ ஜிக்ஷீணீஸீsயீமீக்ஷீ கிரீக்ஷீமீமீனீமீஸீt) கவலையோடு கவனிக்கத்தக்கது. இந்த ஆய்வின் விளைவாக உருவாகும் மரபணு மற்றும் பிற மரபீனி மாற்ற கத்தரி விளைபொருள்கள் இறுதியில் மான்சான்டோ நிறுவனத்திற்கே உரிமையானது என்பதை மேற்சொன்ன உடன்பாடு வலியுறுத்துகிறது” என அமைச்சர் அறிக்கை பத்தி 11 சுட்டிக்காட்டுகிறது.

பி.ட்டி.கத்தரிக்கு மான்சான்டோவே உலக உரிமம் பெற்றிருக்கும்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘சொந்தத் தயாரிப்பாக உருவாக்கப்படுவதாக’ தமிழக அரசு கூறியது ஒரு மோசடி அறிவிப்பு என்பது உறுதியாகிறது.

மான்சான்டோவின் பி.ட்டி.கத்தரிக்கு பல்கலைக்கழக முகமூடி அணிவித்து வெளியிடுவதை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். ஏனெனில் பி.ட்டி.கத்தரிக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் இந்த முகமூடிக் கத்தரிக்கும் பொருந்தும்.

ஆந்திராவில் அக்கறையுள்ள அறிவியலாளர்கள் முன் முயற்சி எடுத்து ஆறு இலட்சம் உழவர்களை ஒன்றிணைத்து இருபது இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளும் பூச்சிக் கொல்லியில்லா வேளாண்மை. சிந்தித்துப்பார்க்க வேண்டிய மாற்று என அமைச்சர் செயராம் ரமேசு அறிக்கையே ஒத்துக்கொள்கிறது.

இதனைத் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

தமிழர்களை நோயாளியாக்கும், உழவர்களை கடனாளியாக்கும், மண்ணை மலடாக்கும், வெளிநாட்டு மன்சான்டோவின் காலடியில் மண்ணின் வேளாண்மையைக் கட்டிப்போடும் மரபீனி மாற்றக் கத்தரியை எந்தவடிவிலும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. மண்ணின் மரபான நுட்பம் சார்ந்து தலை நிமிரும் தற்சார்பு வேளாண்மைக்கு அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.மரபீனி மாற்றப் பயிர்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு இன்றி இவற்றை அனுமதிக்கக் கூடாது.

பி.ட்டி.பருத்தி, பி.ட்டி. வெண்டை, பி.ட்டி. நெல் உள்ளிட்ட அனைத்து மரபீனிப் பயிர்களின் வெளி ஆய்வு மற்றும் விற்பனையை இந்திய அரசு மீளாய்வு செய்து அவற்றிற்கு உரியவாறு தடைவிதிக்க வேண்டும்.

இத்திசையில் இந்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ்நாட்டு உழவர்கள் வலியுறுத்த வேண்டும். அறிவியலாளர்கள் இம்முயற்சியில் முன்னோடியாகத் திகழ வேண்டும்.

0 கருத்துகள்:

உயர்கல்வி: அதிகாரக் குவிப்பும் உலகமயமும்

உயர்கல்வி: அதிகாரக் குவிப்பும் உலகமயமும்
அடுத்தடுத்து கல்வியை இந்திய - பன்னாட்டு ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டு வருகின்றது. இந்தி பேசாத மாநில மாணவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றும், உயர்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்த இந்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் இப்போது இத்திசையில் அடுத்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய ஆணையம், அனைத்திந்திய அளவில் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்று அடுக்கடுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை மறுத்து, மாநில உரிமைகளைப் பறித்து உலகமயத்திற்கு கல்வியைத் திறந்து விடும் உள்நோக்கம் கொண்டவை.

மனித வளத்துறை நிறுவிய வல்லுநர் குழு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கான தேசிய ஆணையம் குறித்த வரைவை வெளியிட்டுள்ளது. உயர்கல்வியில் திட்டமிடுதல், நிர்வாகம், ஒழுங்குமுறை, நிதிஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் இந்திய மைய அதிகாரத்தில் குவிக்கிற ஏற்பாடே இந்த ஆணையம்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்விக் கொள்ளைக்கு வழிவகுத்த நிலை குறித்து சில வாரங்களுக்கு முன்னால் இந்திய அரசு எழுப்பியக் கூச்சல் உண்மையில் கல்வியின் பால் உள்ள அக்கறையினால் அல்ல, மாறாக இச்சிக்கலை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியை தனது பேராதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கெட்ட நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதே என்பது இப்போது தெளிவாகிறது.

உயர்கல்வியில் ஊழல்மயம், அரசியல் குறுக்கீடு ஆகியவற்றை தடுத்து கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் நல்ல நோக்கத்திலேயே இவ்வாறான தேசிய ஆணையம் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள வரைவு சொல்லிக் கொண்டாலும், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது.

தேசிய உயர்கல்வி ஆணையம், தேர்தல் ஆணையத்தைப் போல உயர் தன்னாட்சி பெற்ற கல்வி நிர்வாக அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்த வரைவை கூர்ந்து பார்த்தால் அதிகாரமும் ஊழலும் மையப்படுவதற்கே இது வழிவகுக்கும் என்பது புலனாகும்.

ஒரு கல்வியாளர் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஆணையமாக இந்த உயர்கல்வி ஆணையம் இருக்குமாம். இதற்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்றவர்கள், பல்துறை வல்லுநர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட பேரவை ஒன்று நிறுவப்படும் என்று இந்த சட்டவரைவு கூறுகிறது. இப்பேரவையில் அடிப்படை உறுப்பினர்கள் என்று சிலரும் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் என்று வேறு சிலரும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்கள் கூடுதல் அதிகாரம் பெற்றவர்களாகவும் இணை உறுப்பினர்கள் அதிகாரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்களை இந்திய அரசு நியமிக்கும். இணை உறுப்பினர்களை மாநில அரசுகளின் ஆலோசனைப் பட்டியலிலிருந்து ஆணையம் பொறுக்கி எடுத்துக் கொள்ளும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முழுக்க முழுக்க உயர்கல்வி ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிலிருந்து உயர்கல்வியைப் பாதுகாப்பதற்கே இந்த ஏற்பாடு என வரைவுச் சட்டம் கூறிக்கொள்கிறது. மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிற்கு துணைவேந்தர் நியமனம் அடிக்கடி உள்ளாகிறது என்பது உண்மையே. ஆனால், இந்திய அரசு நிறுவனமான ஆணைய அதிகாரத்தின் கீழ் துணைவேந்தர் நியமனம் நடைபெற்றால் அங்கே அரசியல் குறுக்கீடு இருக்காது என்று நம்புவதற்கு மக்கள் ஒன்றும் அறியாதவர்களல்ல. இன்றைய தேர்தல் ஆணையர், சி.பி.ஐ. போன்ற நிறுவனங்கள் ஆளுங்கட்சியின் ஆணைக்கு ஏற்ப ஆடுவதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

இதே போன்ற நிலை தான், உயர்கல்வி ஆணையத்திற்கும் ஏற்படும்.

மாநில அரசுகள் பல்கலைக்கழகங்கள் நிறுவும் உரிமை இவ்வாணைய அதிகாரத்தின் கீழ் வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.

உயர்கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு எந்தத் தடையும் இல்லாத வகையில் இவ்வாறான அதிகாரக்குவியல் உருவாக்கப்படுகிறது. ஏற்கெனவே பல்கலைக்கழக நல்கைக் குழு(ஹி.நி.சி.) தொழில்நுட்பக் கல்வி தேசியக் கழகம், இந்திய மருத்துவக் குழு (வி.சி.மி.) போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலம் கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் குறுக்கப்பட்டது. அவசரநிலை காலத்தில் கல்வி அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நடுவண் அரசின் அதிகாரம் வலுப்பட வழிசெய்யப்பட்டது.

இப்போது நடுவண் அரசிற்குள்ளேயே பல்வேறு துறைகளின் அதிகாரத்தின் கீழிருந்த உயர்கல்வி ஏழு நபர் ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

உலகமயமும், இந்தியமயமும் இணைந்து நின்று மாநிலங்களின் கல்வி அதிகாரத்தை பறிக்கின்றன. கேள்வி முறையின்றி உயர்கல்வியை உலகமய வேட்டைக்கு திறந்து விடும் நோக்கில் இந்த அதிகாரக் குவியல் நடக்கிறது. தில்லி ஆளுங்கட்சி கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது.

இதற்கு ஏற்ப பள்ளிக் கல்வியை இந்திய மயப்படுத்தும் முயற்சி தான் கபில்சிபல் அறிவித்துள்ள ‘தேசியக் கல்வித் திட்டம்’ என்பது. பள்ளிக்கல்வியிலும் தேசிய இனத் தனித்தன்மை, மாநில அரசின் உரிமை ஆகியவற்றை மறுக்கும் திட்டமே இது. புவியியல், உயிரியல், கணிதம் போன்றவற்றில் கூட பா.ச.க. ஆட்சிக் காலத்தில் ஒரே பாடத்திட்டம் என்ற பெயரால் இந்துத்துவ கருத்துகள் புகுத்தப்பட்டதை நாடறியும்.

பல்வேறு தேசிய இன மாநிலங்களின் தனித்தன்மைகள், அவற்றின் குறிப்பான தேவைகள் ஆகியவற்றை மறுத்து ஒற்றைத் தன்மையில் இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் புகுத்தப்பட இது வழிவகுக்கும்.

பள்ளிக்கல்வியின் சி.பி.எஸ்.சி., கேந்திர வித்தயாலயா போன்ற வழிகளில் குறுக்கிட்டது போதாதென்று இப்போது தேசியப் பாடத்திட்டம் என்ற போர்வையில் தனது பிடியை இறுக்குவதற்கு தில்லி அரசு முனைகிறது. இது இந்தித் திணிப்பை இணைத்துக் கொண்டே வரும் என்பது தெளிவு.

கல்வியை இந்தியமயமாக்கும் அடுத்த முயற்சியே அனைத்திந்திய நுழைவுத் தேர்வு என்பதும் ஆகும். தொழில் வகைப் படிப்புகளுக்கு இனி அனைத்திந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் சில அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகள் பெரிதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கின்றன. சி.பி.எஸ்.சி. 12ஆம் வகுப்புப் பாடங்களிலிருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டு, மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் வெளியில் நிறுத்தப்படுவது மெய்நிலையாகும்.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் பார்ப்பன - இந்தி மயமான பாடத்திட்டமாகும். தேசிய இனங்கள், சிறுபான்மை மதங்கள் ஆகியவை இப்பாடத் திட்டங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கல்வியாளர்கள் பலரும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர்.

ஆனால், அதனைத் திருத்திக் கொள்ளாமல் அதே திசையிலேயே இன்னும் வேகமாக தில்லி அரசு பயணிக்கிறது என்பதற்கான அடையாளமே இந்த அனைத்திந்திய நுழைவுத் தேர்வுத் திட்டமாகும்.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நீக்கப்பட்ட பிறகு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் முன்பை விட அதிகம் இடம் பிடிக்க முடிந்திருப்பது மெய்ப்பிக்கப்பட்ட நிலை. இப்போது அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் புறந்தள்ளப் படுவார்கள்.

இந் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் நடைபெறும் என்பது திண்ணம். தமிழ்நாட்டு அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் வடநாட்டு மாணவர்கள் அதிகமாக இடம் பிடிப்பதற்கு இது வழி ஏற்படுத்தும்.

ஏற்கெனவே உயர்கல்வியில் தன்நிதிக் கல்லூரிகள் கோலோச்சுவதன் காரணமாக கேள்வி முறையின்றி வெளிமாநில மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் பெரும் எண்ணிக்கையில் புகுந்து இனச் சமநிலையை சீர்குலைத்தது போதாதென்று அரசு சார் கல்லூரிகளிலும் வெளியார் குவிவது தீவிரப்படும். தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு இன்னும் சுருக்கப்படும்.

உயர்கல்வி ஆணையம், அனைத்திந்தியப் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய நுழைவுத் தேர்வு ஆகிய இந்த அறிவிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை. தேசிய இன உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்டவை. உலகமய வேட்டைக்கும் வெளியார் ஆதிக்கத்திற்கும் வழி ஏற்படுத்துபவை. எனவே, இந்திய அரசின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாட்டு மாணவர்களும், அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மார்ச் மாத இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்: