கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

ஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள்

நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர் களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்சியும் புத்துணர்வும் சரியான அரசியல் திசைவழியில் செலுத்தப்படாது போனால் தமிழினம் வரலாறு வழங்கியிருக்கிற இன்னொரு வாய்ப்பையும் இழக்க நேரிடும்.

ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை - இந்தியத் தேசியத்தைத் தமது பகை சக்தி என புரிந்து கொள்வதே புதிய திசைவழிப் பயணத்தின் மையப்புள்ளியாகும். தமிழின உரிமை குறித்த சிக்கலில் இந்தியா நட்பு நாடோ நடுநிலை நாடோ அல்ல என்ற தெளிவு தமிழின உணர்வாளர்களிடையே உரிய அளவு இன்னும் உருவாகவில்லை.

தமிழீழ சிக்கலில் இந்தியாவின் பாத்திரம் குறித்து இந்திராவுக்கு முன் - இந்திராவுக்குப் பின் என்று பார்ப்பதோ, ராஜீவ்காந்திக்கு முன் - ராஜீவ்காந்திக்குப் பின் என்று பார்ப்பதோ, சோனியா காந்தியின் பழிவாங்கும் வெறியாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதோ, காங்கிரஸ் கட்சியின் அல்லது தி.மு.க. தலைமையின் அணுகுமுறையோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதோ உண்மையை உணர உதவாது என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். மேற்கண்ட காரணிகள் தமிழீழச் சிக்கலில் ஏற்படுத்திய தாக்கங்களை அங்கீகரித்துக் கொண்டு தான் இதனைக் கூறுகிறோம்.

இன்றைய உலகில் எந்த தேசிய இனப் புரட்சியும், மக்கள் திரள் புரட்சியும் உலக நாடுகளின் புவிசார் அரசியல் நகர்வுகளை கணக்கில் எடுக்காமல் வெற்றிகரமாக நடத்தப்பட முடியாது. புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு வல்லரசுகளின் பொருளியல் - அரசியல் - வர்க்கத் தேவைகள் மட்டுமே காரணியாக அமைந்துவிடுவதில்லை. இன ஆதிக்க நலன்களும் புவிசார் அரசியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. பல நேரங்களில் இன அரசியலே புவி அரசியலின் முதன்மைக் காரணியாக அமைவதும் உண்டு. தமிழீழச் சிக்கலில் இந்தியாவின் தலையீட்டை இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்வது அவசியம். உண்மை நிலையிலும், உத்தி என்ற வகையிலும் இதில் தெளிவு ஏற்படுவது இன்றியமையாதது.

சிங்களத்திற்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் களம் இறங்குவதால் தான் இந்தியா தமிழர்களுக்கு எதிராக தானும் செயல்பட வேண்டிய புவி அரசியல் நெருக்குதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவோர் உண்டு. இது உள்ள நிலையை தலைகீழாகப் புரிந்து கொள்வதாகும். செஞ்சீனம் உருவாவதற்கு முன்னாலேயே, இந்திய சுதந்திரத்திற்கு முன்னாலேயே காங்கிரசின் அணுகுமுறை இலங்கைத் தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளும் நோக்கம் கொண்டது தான். 1945இல் இலங்கை சென்ற நேருவும், பட்டாபி சீத்தாராமையாவும் இலங்கை சுதந்திர இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கலாம் என்று பேசினார்கள்.

இலங்கையை இந்தியாவின் ஒருபகுதியாக இணைத்துக் கொள்ள முடியாத போதும் அதனை தங்கள் செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையே இந்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. சிங்கள ஆளும் வர்க்கத்தை நட்பாக்கிக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்கு துணை செய்வதே இந்திய அரசின் தொடர் அணுகுமுறையாகும். இந்திய அரசின் இந்த அணுகுமுறை தான் சீனாவின் சிங்கள ஆதரவுப் போக்கை விரைவு படுத்தியது.

இந்திய அரசின் அணுகுமுறை தமிழருக்கு எதிரானதாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் அணுகுமுறை தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் காலம் வரையிலும் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருக்கிறது. அதனால், எந்த நல்ல பயனும் விளையவில்லை என்பதே இனக்கொலை வரலாறு காட்டுகின்ற உண்மையாகும். மூர்க்கமான தமிழின எதிரியாகவே இந்தியா நடந்து கொள்கிறது. இது சீன அரசின் போக்கிற்கு எதிர்வினை அல்ல. இந்திய அரசின் தலையீட்டிற்கு எதிர்வினையே சீனத்தலையீடு என்பது உற்று நோக்கினால் புலனாகும்.

இந்தியாவின் அணுகுமுறைக்கு வர்க்க நோக்கங்கள் இருப்பது உண்மையே ஆயினும் அது முதன்மைக் காரணி அல்ல. ஏனெனில், தமிழீழ விடுதலைக்கு துணை செய்வதன் மூலம் தனது புவிசார் வர்க்க நலன்களை நிறைவேற்றிக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பெரிய தடை ஏதும் இருக்கவில்லை. அதற்கான வாய்ப்பான சூழலையே விடுதலைப்புலிகளின் நட்பான அணுகுமுறை ஏற்படுத்தியிருந்தது.

தமிழினத்திற்கு எதிரான இனப்பகையே இந்தியாவை நகர்த்திய முதன்மைக் காரணியாகும். அதனால் தான் நட்புக்கரம் நீட்டிய ஈழத்தமிழர்களை அழித்து ஒழிப்பதில் இந்தியா முதன்மைப்பாத்திரம் வகித்தது. இந்தியாவின் இந்த இனப்பகையானது வரலாற்றின் ஒரு கட்டத்தில் உருவாகி மறைகிற தற்காலிகப் பகையன்று. இது அடிப்படையானது; நீடித்து நிலைப்பது. ஏனெனில், இந்தியா என்பது ஆரியத்தின் நவீன வடிவம். ஆரியர் - தமிழர் பகை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, தொடர்ந்து, தீவிரம் பெற்று வருவதாகும். சிங்களமும், ஆரிய மரபினத்தின் வழித் தோன்றல் தான். தமிழினப் பகை என்பது அதன் அடிப்படை இயல்பு.

ரிக் வேதம் தொடங்கி, இன்று ஆட்சியாளர்கள் யாராய் இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் தில்லி இராம் லீலா விழா வரை அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளிலும், கருத்தாடல்களிலும் இந்தப் பகை மக்கள் சமூகத்தில் ஆழமாக மீண்டும் மீண்டும் விதைக்கப்படுகிறது. தமிழ் மொழி சமஸ்கிருதத்திற்கு எதிரானது, தமிழர்கள் ஆரிய இந்தியாவின் பகைவர்கள், தமிழ் இனம் ஆரிய அதாவது இந்திய இருப்புக்கு அச்சுறுத்தலான இனம் என்பது இந்தியாவில் வேரூன்ற வைக்கப் பட்டிருக்கிற அடிப்படைக் கருத்தாகும்.

மக்கள் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த பொதுக் கருத்து அளிக்கிற வலுவில் நின்று தான் ‘சனநாயக’ இந்தியா எந்த சிக்கலும் இன்றி இந்த இனக்கொலைப் போரை வழிநடத்தியது. இதனை எதிர்ப்பவர்கள் யாராய் இருந்தாலும் - இந்திய ஒற்றுமைக்கு துணை நிற்போம் என்று சூடமேற்றி சத்தியம் செய்பவரே ஆயினும் - இந்தியாவின் பகைவர்கள், இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பட்டம் சூட்டுவது எளிதாக நடக்கிறது.

“பாரத வர்ஷே, பரத கண்டே” என்ற ஆரிய புராணப் புனைவு இந்த நாட்டுக்கு பாரதம் என பெயர் சூட்ட அடிப்படையாகக் கொள்ளப் பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் அது உறுதி செய்யப்படுகிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்ற அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய தமிழர் தாயக இருப்பை மேற்கண்ட புராணப் புனைவு சட்டவழியிலேயே புறக்கணிக்கிறது. எனவே, தமிழர் தாயக உரிமை பேசுவோர் பிரிவினைவாதிகளாக சட்டத்தினால் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

சிங்கள ஆரியமும் இதே போன்று மகா வம்ச புனைவை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தீவின் அரசமைப்பை உருவாக்கியது. தமிழினப் பகை என்பது இதன் அசைக்க முடியாத ஆதார அச்சு. ஆரியத்தின் இன்றைய வடிவங்களான இந்தியத் தேசியமும், சிங்களத் தேசியமும் தமிழின பகை கொண்டு இயங்குவது இயற்கை யானது. இந்த இயற்கையான தன்மையை புரிந்து கொள்ளாது போனால் தமிழினம் உரிமைப் போராட்டத்தில் வெல்ல முடியாது. இவற்றுள் சிங்களத்தை மட்டும் எதிர்ப்பது இந்தியாவை நட்பாகப் பார்ப்பது அல்லது நடுநிலையாக்க முயல்வது மீண்டும் மீண்டும் பேரழிவையே ஏற்படுத்தும்.

இந்தியா போன்ற ஒரு வல்லரசை எதிர்த்து தமிழீழம் அல்லது தமிழ்த்தேசம் போன்ற சிறிய தேசம் தனது இறையாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா என்ற கேள்வி சிலரால் எழுப்பப் படுகிறது. அதிலும், சின்னஞ்சிறிய தமிழீழம் இந்தியாவை பகைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது சரியான உத்திதானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

உண்மை நிலையின் அடிப்படையில் தான் புரட்சியின் உத்திகள் வகுக்கப்பட முடியும். இந்தியா தமிழினத்தின் பகை என்பது உறுதியான உண்மை நிலை.

உத்தி என்ற வகையிலும் சின்னஞ்சிறிய தேசம் உலக அணி சேர்க்கையில் தனக்கான அணுகு முறையைக் கைக்கொள்வது வெற்றிக்கு இன்றியமையாத ஒன்றாகும். எல்லா நாடுகளுக்கும் நண்பனாக இருக்க முயலும் ஒரு விடுதலை இயக்கம் நடைமுறையில் எல்லா நாடுகளின் பகையை பெறுவதில் தான் முடியும் என்பதற்கு தமிழீழ நான்காம் போர் தெளிவான எடுத்துக் காட்டாகும்.

தமிழீழ விடுதலைக்கு இந்தியா பகை சக்தி என்ற தெளிவோடு உத்தி வகுத்தால் தான் உலக புவி அரசியலில் இந்தியாவிற்கு எதிரான நாடுகளை நட்பாக்கிக் கொள்ள வாய்ப்பு திறந்து விடப்படும். உண்மை நிலையை உணர்ந்து வகுக்கப்படும் உத்தியாகவும் இது அமையும். உலக அரங்கில் இதற்கான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பாலஸ்தீனம், கொசோவா இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.

பைபிள் பழைய ஏற்பாட்டு கதையின் அடிப்படையில் உருவான யூத இனவெறிக் கோட்பாடு தான் ஜியோனியம். இந்த ஜியோனிசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது தான் இசுரேல் நாடு. பாலஸ்தீன தேசத்தை ஆக்கிரமித்தே அந்நாடு உருவாக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக ஜியோனிய யூதவெறி இசுரேல் பாலஸ்தீனத்தை குருதிக் காடாக்கி வருகிறது. கேள்விமுறையற்ற இனக்கொலை அங்கு அன்றாடம் அரங்கேறி வருகிறது.

பல்வேறு அரபு தேசங்களின் இன உறவோடு இருக்கும் பாலஸ் தீனத்தை, புடம் போட்ட போராட்ட மரபுள்ள பாலஸ்தீனர்களை இசுரேல் என்ற சிறிய நாடு தொடர்ந்து அடிமைப்படுத்த முடிகிறது என்றால் அது இசுரேலின் தனித்த வலுவினால் அல்ல. மாறாக, அமெரிக்க வல்லரசின் உறுதியான பின்பலம் இருப்பதால் தான் கேள்விமுறை யின்றி இன அழிப்பை இசுரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. அங்குள்ள எண்ணெய் வளம் என்ற பொருளியல் சுரண்டல் நோக்கு அமெரிக்க வல்லரசின் அணுகுமுறைக்கு ஒரு முக்கியக் காரணம் என்றாலும், அது முதன்மைக் காரணி அல்ல.

எண்ணெய் ஆதிக்கம் தான் முதன்மை நோக்கு என்றால், அரபு தேசிய இனத்தை நட்பாக்கிக் கொண்டு சாதிப்பதை அமெரிக்கா முதன்மை உத்தியாக வகுத்திருக்க முடியும். ஏனெனில் அரபு தேசிய இன நாடுகளில் தான் எண்ணெய் வளம் அதிகம். மாறாக, இசுரேலை சார்ந்திருப்பதற்கு இனக் காரணமே முதன்மையானது.

யூத இனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வலுவான செல்வாக்குப் பெற்ற இனமாகும்.

பொருளியல், கருத்தியல் மற்றும் அதிகார வர்க்கத் தளங்களில் யூத இனத்தின் பிடி அமெரிக்காவில் வலுவானது. ‘அமெரிக்க இசுரேல் பொதுமக்கள் துறைக் குழு’ என்ற அமைப்பு அமெரிக்க அரசியலாளர் களுக்கு பணம் அள்ளித்தரும் முதன்மையான ஊற்றாகும். யூத முதலாளிகள் படைவகை உற்பத்தியிலும் வங்கித் துறையிலும் வலுவானவர்கள்.

அமெரிக்காவில் சனநாயகக் கட்சியோ குடியரசுக் கட்சியோ யார் ஆட்சி நடந்தாலும், யூத இன செல்வாக்கு என்பது மையமானது. “பாலஸ்தீனம் மட்டுமல்ல அமெரிக்க நாடாளுமன்றமும் இசுரேல் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிரதேசம் தான்” என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் பேட்ரிக் புக்கனான் ஒருமுறை கூறினார்.

டைமஸ் வார்னர், வால்ட் டிஸ்னி, பாக்ஸ் நியூஸ், ஏ.பி.சி., என்.பி.சி., அசோசியேட்டட் பிரஸ், நியூஸ் வீக், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட வலுவான ஊடகங்கள் அனைத்தும் யூதர்களுடையவை. அங்கு பணி யாற்றும் முதன்மைச் செய்தியாளர் கள், ஆசிரியர் குழுவினர் பெரும்பாலோர் யூதர்கள் தான். ஹாலிவுட் திரைத்துறை யூத ஆதிக்கத்திற்கு உட்பட்டது. எனவே, அமெரிக்கக் குடிமக்களின் கருத்தை ஆள்பவர்கள் யூதர்களே. இந்த யூத இணைப்பு தான் அமெரிக்க - இசுரேல் அச்சின் அடிப்படையாகும்.

எனவே, பாலஸ்தீனர்கள் இசுரேலையும் அமெரிக்க வல்லரசையும் ஒரு சேர எதிர்த்தார்கள். பாலஸ்தீன குழந்தைகள் கூட அமெரிக்கா தனது எதிரி என்று தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடக்கத்திலிருந்தே அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்ததால், உலக அரங்கில் அதற்கு வலுவான ஆதரவு கிடைத்தது.

இந்தத் தெளிவிலிருந்து மாறி, குழம்பியபோது தான் பாலஸ்தீனப் போராட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுவரை அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 1991 சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, தடுமாறத் தொடங்கினார். எதிரியான அமெரிக்காவிடம் பஞ்சாயத்துக் கோரினார். 1993 ஆஸ்லோ உடன்பாடு பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை மிகப்பெரிய வீழ்ச்சியில் தள்ளியது. அதன் விளைவாக இன்று பாலஸ்தீனம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

சின்னஞ்சிறிய கொசோவா செர்பிய கொடுங்கோல் ஆட்சியில் சிக்கிச் சீரழிந்தது. செர்பியா நடத்திய இனக்கொலைக்கு எல்லாம் வலுவான பின்னணியாக ரசியா இருந்தது. ரசியாவின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் இன உறவு தான். செர்பியர்களும், ரசியர்களும் சுலோவானிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள். கொசோவா விடுதலை இயக்கம் செர்பியாவை எதிர்த்தது போலவே ரசிய வல்லரசையும் எதிர்த்தது. இதனால், புவி அரசியலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை பெற முடிந்தது.

இன்று, கொசோவா புதிதாகப் பிறந்த தேசமாக உலகப் படத்தில் இடம் பெற்றுவிட்டது. இந்தப் படிப்பினைகளை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலாவது யூத செல்வாக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்தியா என்பதே ஆரியக் கட்டமைப்பு. இது தமிழின எதிர்ப்பு என்ற அடிப்படைத் தன்மையுடையது.

இந்தியக் கட்டமைப்பில் சட்டப்படி சமத்தன்மையுள்ள மாநிலங்களாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகியவை இருந்த போதும் தில்லி அரசு இத்தேசிய இனங்களை சமமான வகையில் அணுகவில்லை. கன்னடர், மலையாளிகள், தெலுங்கர் ஆகியோருக்கு ஆதரவாகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இந்தியா நடந்து கொள்கிறது. ஆரிய - தமிழர் பகை இந்தியா என்ற கட்டமைப்பின் ஊடாக தொடர்வதின் வெளிப்பாடே இது. கச்சத்தீவு, மீனவர் சிக்கலிலும் இந்தப் பகை தெளிவாகப் புலனாகும்.

இந்த உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு இந்தியாவை எதிர்த்துப் போராடுவது, தவிர்க்க முடியாத தேவையாகும். எனவே தான் இரண்டின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும் தமிழீழ விடுதலையும், தமிழ்த் தேசப் புரட்சியும் இணையாக நடைபெற வேண்டிய போராட்டங்கள் என்கிறோம்.

தமிழர்க்குத் தேவை இரண்டு நாடுகள் என்கிறோம்.

ஒன்றே முடியாத போது, இரண்டு தமிழ்த் தேச விடுதலை சாத்தியமா என்று கேள்வி எழுப்புவது உலக நிலைமையை உணராததின் வெளிப்பாடு. அதனதன் தன்மையிலேயே தமிழீழ விடுதலையும், தமிழ்த் தேச விடுதலையும் தவிர்க்க முடியாத தேவை. அதுமட்டுமின்றி இரண்டு முனைகளில் ஓரு இனம் போராடுவது வெற்றியை எளிதாக்கும் உத்தியாகும். இவ்வாறான தெளிவோடு நமது அடுத்தக் கட்ட பயணத்தின் திசைவழி தீர்மானிக்கப்பட்டால் தான் தமிழினம் அடிமைத் தளையிலிருந்து விடுதலையாக முடியும்.

எனவே, ‘தமிழீழம் வெல்லட்டும், தமிழ்த்தேசம் மலரட்டும்’ என்ற இரட்டை முழக்கத்தின் கீழ் உலகத்தமிழினம் ஒன்று திரளட்டும்!

- கி.வெங்கட்ராமன்

(மயிலாடுதுறையில் 18.05.2010 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் சார்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால வீரவணக்கக் கூட்டத்தில் ஆற்றிய உரையைத் தழுவியது.)

0 கருத்துகள்:

பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை

அன்றாடம் வான் தாக்குதல், வாரம் சராசரியாக 40 பழங்குடியினர் பலி. 3 இலட்சம் பேர் அகதிகளாக காடுகளில் தஞ்சம்... இதுதான் இன்று மைய இந்திய மாநிலங்களில் உள்ள நிலைமை. இதற்கு ஆட்சியாளர்கள் வைத்துள்ள பெயர், “பச்சை வேட்டை’ என்பதாகும்.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை தேடுகிறோம் என்ற பெயரில் இந்திய அரசின் ஒருங்கிணைப்பில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநில அரசுகள் இந்த வேட்டையை நடத்துகின்றன.

இந்திய விமானப்படையின் கருடா என்ற போர் விமானமும் பல்லாயிரம் தரைப்படையினரும் இணைந்த ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய, மாநிலப்படை இக்கொடுந் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்து பழங்குடி மக்கள் வாழ்கிற பகுதிகளிலிருந்து அம்மக்களை மன்மோகன் சிங் ஆட்சி வெளியேற்றி வருகிறது. காட்டு வளங்களையும், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, வைரம், நிலக்கரி, பாக்சைட், ஸ்டெர்லைட் போன்ற கனி வளங்களையும் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறது தில்லி அரசு.

இதனை எதிர்த்து தங்கள் வாழ்வா தாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தனித்தோ அல்லது மாவோயிஸ்டுகள் தலைமையிலோ போராடுகின்ற பழங்குடி இன மக்கள் மீது ஈவிரக்கமற்றப் போரை கட்டவிழ்த்துள்ளது இந்திய அரசு. மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பழங்குடியினக் காவலர்கள் என்று வேடங்கட்டிய அனைத்து முதலமைச்சர்களும் இந்தப் போரில் இந்திய வல்லரசோடு இணைந்து நிற்கின்றனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஸ்டர் மண்டலம் என்றழைக்கப்படும் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்குள் 26 ஆயிரம் படையாட்கள் குவிக்கப் பட்டு இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், குழந்தை காப்பகங்கள் ஆகியவை படைமுகாம் களாக மாற்றப்பட்டுள்ளன. தங்களது அன்றாட தேவைகளுக்காக காட்டுப் பழவகைகளை சேகரித்து உண்பதற்காக குடியிருப்பை விட்டு வெளியில் வரும் பழங்குடியினர் பச்சை வேட்டையில் பலியாகின்றனர். பெண்களும், குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் கேள்வி முறையின்றித் தொடர்கிறது.

“இப்பகுதிகளில் பழங்குடியினர் அரசு அமைக்கும் கண் காணிப்பு முகாம்களில் தங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சொந்த வீட்டில் வாழ்வதே தீவிரவாதக் குற்றமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. பள்ளிக் கட்டிடங்கள் படையினரின் பாசறையாக மாற்றப் பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகள் படிப்பதற்கான மரத்தடிகளில் தான் அங்கு கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் கூட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக குற்றம் சுமத்தப்படுகிறார்கள். முற்றமுழுதான பொருளியல் முற்றுகையில் அப்பழங்குடி மக்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிடுவது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.

ஈராக் போரில் ஜார்ஜ் புஷ் கொக்கரித்தது போல இந்திய வல்லரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “தேடுதலின் போது கொல்லப் படுபவர்களின் எண்ணிக் கை குறித்து நாங்கள் கணக்கில் பதிவு செய்து கொள்வதில்லை’’ என்று ஆணவமாய் கொக்கரிக்கிறார்.

ஈழத்தில் தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்தோடு சேர்ந்து ‘ஆபரேசன் பெக்கான்’ திட்டம் தீட்டியதைப் போலவே சாட்சியற்ற படுகொலை செய்ய இங்கேயும் தில்லி ஆட்சியாளர்கள் திட்டமிட்டி ருக்கின்றனர். ‘மாவோயிஸ்ட் அபாயத்தை 2013க்குள் முற்றிலும் ஒழிப்போம்’ என்று மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்துள்ளது.

ஈழத்தில் செய்தது போலவே இங்கேயும் பழங்குடியினரிடையே ஆள்காட்டிகளை இந்திய உளவுத் துறை உருவாக்கியது. சால்வாஜூடும், சிறப்புக் காவல்படை, சாந்தி சேனா, ஹர்மத் வாஹினி போன்ற பல பெயர்களில் இவ்வாறான ஆள்காட்டி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர் களுக்கு ஆயுதம், பணம், வாகனம், பாதுகாப்பு ஆகியவற்றை அரசுகள் வழங்கு கின்றன.

இது குறித்து இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2009ஆம் ஆண்டு வரைவறிக்கை கூறுவது இந்திய வல்லரசின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலவும் வேளாண் உறவுகள் மற்றும் நிலச்சீர்திருத்தம் குறித்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் நான்காம் துணைக்குழு கீழ் வருமாறு கூறுகிறது:

“சல்வாஜூடும், சட்டீஸ் கர் மாநில அரசால் உருவாக்கப் பட்டு ஆயுதபாணி யாக வளர்த் தெடுக்கப்பட்டது. இதற்கு நடுவண் அரசின் ஆயுத உதவியும் அமைப்புவகை வழி காட்டலும் அளிக்கப்பட்டது”.

அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர், அன்றாட கண்காணிப்புக்கும் சோதனையிடலுக்கும் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். படை யாட்களின் அத்துமீறலுக்கு இப் பழங்குடியின பெண்களும், குழந்தை களும் கேள்வி முறையின்றி ஆளாக்கப்படுகின்றனர். இடை விடாத உளவியல் அச்சறுத்தலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். அல்ஜீரியாவில் பிரான்சும், வியட்நாமும், அமெரிக்காவும், வன்னியில் சிங்கள இந்தியக் கூட்டணியும் கையாண்ட அதே உத்தி பழங்குடி மக்களிடையேயும் இன்று தொடர்கிறது.

‘வேதாந்தா ரிசோர்சஸ்’ என்ற ஸ்டெர்லைட் குழுமத்தின் பங்குதாரராக ப.சிதம்பரம் 2004வரை இருந்தவர். இன்றும் மறைமுகமாக அந்த உறவு தொடர்கிறது. அமைச்சராவதற்கு முன் அவரும், அதற்குப் பின் அவரது மனைவியும் இந்நிறுவனத்தின் நிரந்தர வழக்கறிஞர்களாக இருக்கின்றனர். டாட்டா, எஸ்ஸார், பாஸ்கோ, மிட்டல், ஜிண்டால் குழுமங்களுடன் சோனியா - மன்மோகன் சிங் கும்பலுக்கு இருக்கும் பணஉறவு ஊரறிந்த ஒன்று.

பச்சை வேட்டையை இவர்கள் வேகமாக நடத்துவதற்கு இந்த பணஉறவும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

படையாட்களால் கொல்லப் பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கும், தொடர்புடைய குடும்பங்களுக்கும் இந்திய, மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனித உரிமை அமைப்பினர் தாக்கல் செய்த இந்தப் பொதுநல மனு விசாரிக்கப் படாமலேயே 2007ஆம் ஆண்டி லிருந்து உச்சநீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் லால்கார், கிழக்கு சிங்கூர், மேற்கு சிங்கூர், குந்தி, கும்லா, பொக்காரோ அசாரிபாக் ஆகிய பகுதிகளும் ஒட்டு மொத்தமாக இராணுவக் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மட்டும் பாஸ்கோ, மிட்டல், டாடா, வேதாந்தா முதலான 200 நிறுவனங்களுடன் தில்லி அரசும், மாநில அரசுகளும் தொழில் முனைவு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளன. கிழக்கிந்திய வெள் ளைக்கார கம்பெனிக்கு அடியாட் களாக பிரித்தானியப் படைகள் காலனி நாடுகளில் செயல்பட்டதைப் போல இந்த கொள்ளைக்கார கம்பெனிகளுக்கு அடியாள் படையாக இந்தியப் படைகள் பச்சை வேட்டையில் ஈடுபடுகின்றன.

எடுத்துக்காட்டாக, சோட் டா நாக்பூர் மண்டலத்தில் கடந்த ஜூலை 2009லிருந்து நடைபெற்று பச்சை வேட்டையில், மாவோயிஸ்டு களும் அவர்களுக்கு ஆதரவான பழங்குடி மக்களும் வெளியேற்றி விடபட்டுவிட்டனர் என்று அரசு அறிவித்த உடனேயே பன்னாட்டு எஃகு பகாசுர கம்பெனியான பாஸ்கோ சோட்டா - நாக்பூரில் 54 ஆயிரம் கோடி முதலீட்டில் இரும்புத் தொழிற்சாலை தொடங்கப் போவதாக அறிவித்தது.

தங்கள் சொந்த மண்ணில் அமைதியாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் வளர்ச்சி என்ற பெயரால் வாழிடங்களை விட்டு தொகைத் தொகையாக வெளியேற்றப் படுகின்றனர். வாய்பேச வழியில்லாத அரசியல் அநாதைகளான இந்த மக்களுக்கு உற்ற அரணாக மாவோயிஸ்டுகள் போராடி வருகிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதனை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் காட்டி தொடர் அடக்குமுறையை இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டாலும், மாவோயிஸ்டுளை ஒழித்து விட முடியவில்லை. இது அடிப்படையில் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. மாறாக ஆழமான சமூகப் பொருளியல் பிரச்சினையாகும். மக்களைச் சார்ந்த அரசியல் திசை வழியில் தீர்க்கப் படாமல் போனால் இது மீண்டும் மீண்டும் தலையெடுக்கவே செய்யும்.

எனவே, இந்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும். அவ்வமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். சிறையில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர்களை விடுதலை செய்து அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பழங் குடியினரின் அவரவர் வாழிடங் களுக்கு செல்ல அனுமதித்து அவர்களின் இயல்பான வாழ்க்கை யை அனுமதிக்க வேண்டும். அடக்கு முறையின் மூலமாக இச்சிக்கலைத் தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டும்.

இறையாண்மை பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு என்று பெயர் சூட்டி மனித வேட்டையில் ஈடுபடும் இந்திய அரசுக்கு இது தெரியாத தல்ல.

சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் வாழும் கோல்டு, கோயா, தோர்லா ஆகிய பழங்குடி மக்கள் தங்கள் தாய் நிலத்தைப் பாதுகாக்க வெள்ளைக் காரர்கள் முயன்ற போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வீரஞ் செறிந்த போராட்டம் நடத்தி யவர்கள். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்று அவர்களுக்கு அரணாக இருந்து மாவோயிஸ்டுகள் அவர்களது வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

இப்பகுதிகளில் மாவோ யிஸ்டுகள் தலைமையில் தொடக்க நிலையிலான மாற்று நிர்வாக ஏற்பாடுகள் பழங்குடி மக்களின் மரபுகளை உள்வாங்கி செய்யப் பட்டுள்ளது. 3 முதல் 5 கிராமங்களை உள்ளடக்கிய புரட்சிகர மக்கள் குழு உள்ளூர் நிர்வாகமாக செயல்படு கின்றது. இது போன்ற 15 புரட்சிகர மக்கள் குழுக்கள் இணைந்தது பிரதேச புரட்சிகர மக்கள் குழு ஆகும்.

ஆயினும், பல்லாயிரக் கணக்கில் போராளிகளை ஈகம் செய்து கடந்த நாற்பது ஆண்டுகளாக போராட்டத் தீயிலேயே பயணம் செய்து வரும் மாவோயிஸ்டுகள் தங்கள் இலக்கை இன்னும் அடையமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை தன்னாய்வுச் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

போர்க்களமாகக் காட்சி யளிக்கிற பழங்குடி மலையக பிரதேசங்களைத் தாண்டி அவற்றிற்கு அருகிலுள்ள சமவெளிப் பகுதியில் மக்கள் ஆதரவை அமைப்பு வழியில் திரட்ட முடியாததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியா என்ற கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு அதில் புரட்சிகர மக்கள் போர் மூலம் புதிய சனநாயக அரசை நிறுவி விடலாம் என்று கருதுவது பிழையானது.

இந்தியா என்ற கட்டமைப்பில் பழைய சனநாயகமோ, புதிய சனநாயகமோ எதற்கும் இடமில்லை.

இந்திப் பகுதியில் கூட வெவ்வேறு மொழி களைக் கொண்ட பழங்குடியினரே பெருமளவில் திரட்டப்படுகின்றனர் என்பது தற்செயலானதல்ல.

இந்தியத் தேசியம் என்ற புதை சேற்றிலிருந்து விடுபட்டு பல்வேறு தேசியப் போராட்டங்களாக மறுவார்ப்பு செய்யப்படுவதே அம்மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும். மாவோயிஸ்டுகளின் ஈகமும் வீணாகாமல் இலக்கை எட்டும்.

0 கருத்துகள்:

வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம்

துறைதோறும் துறைதோறும் நாட்டை விற்பதற்கு வணிக முகவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற அலங்காரப் பெயரில் இவர்கள் பவனி வருகிறார்கள். தலைமை முகவர், தலைமை அமைச்சர் என்ற பெயரில் இருக்கிறார். அவர் தான் மன்மோகன் சிங். இவரது தலைமையில் கல்வி வணிக முகவராக செயல்படுகிறவர் கபில் சிபில். மனிதவள மேம்பாட்டு அமைச்சர் என்பது இவரது பதவிக்கான சட்டப்பூர்வ பெயர்.

உயர்கல்வியை உள்நாட்டு வணிகர்களுக்கு திறந்து விட்டது போதாதென்று வெளிநாட்டு கொள்ளையர்களுக்கும் திறந்துவிட முயல்கிறார். இதற்காகவே “வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள்(நுழைவு மற்றும் செயல்பாட்டு ஒழுங்காற்று) சட்ட வரைவு, 2010” (Foreign Educational Institutions [Regulation of Entry and Operation] Bill, 2010) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திற்கான உயர்கல்வியை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா விற்குள்ளேயே வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. “இந்தியாவில் பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் 100க்கு 12பேர் மட்டுமே உயர் கல்வியில் நுழைகின்றனர். இது வளர்ச்சியடைந்த நாடுகளில் 55 விழுக்காடாகவும் உலக சராசரி அளவில் 23 விழுக்காடாகவும் இருக்கிறது. 2015ஆம் ஆண்டிற்குள் இந்த அளவை இந்தியாவில் 23 விழுக்காடாக உயர்த்துவதற்கு அரசிடம் போதிய நிதி இல்லை. இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டும் இப்போதுள்ள நிலையை மாற்ற முடியாது. இதற்காகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் கல்வி நிலையங்கள் அமைக்க அழைக்கிறோம்” என்று கபில் சிபல் கூறுகிறார்.

இப்போது வட அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற மேற்குலக நாடுகளில் மருத்துவம், மேலாண்மை, பொறியியல் போன்ற உயர்கல்வி பெறுவதற்கு 5 இலட்சம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு 750 கோடி டாலர், அதாவது 34,500 கோடி ரூபாய் வெளிநாடுகளில் செலவழிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் வரவழைத்துவிட்டால் அதைவிட குறைவான செலவில், இந்திய சூழலில் குடும்பத்தை விட்டு அதிக தொலைவு செல்லாமல் படிக்க வசதி ஏற்படும் என்பதும் கபில்சிபிலின் வாதம்.

ஆனால் கூர்ந்து நோக்கினால் திறமையற்ற வணிக முகவரின் விளம்பர உத்தி இது என்பது தெளிவாகும்.

பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் மிகச் சிலரே உயர்கல்வி வரை செல்வதற்கு கல்வி நிறுவனங்களின் போதாமை முதன்மைக் காரணி அல்ல, மாறாக மக்களிடம் நிலவும் வறுமையும், வாய்ப்பின்மையுமே உயர்க்கல்வியில் நுழைவோர் 12 விழுக்காடாக தேங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த அனைவருக்குமே இடம் கொடுத்த பிறகும் காலி இடங்கள் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கைப் போதாமல் இல்லை.

வெளிநாடு சென்று உயர்கல்வியில் சேருவது அந்நாடுகளில் வேலையில் சேருவதற்கு வாய்ப்பை வழங்குகிறது என்பதால் தான் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்று படிக்கிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் எதிர்கால வாழ்க்கை என்ற கனவில் வெளிநாடு சென்று படிப்பவர்களை கபில்சிபிலின் திட்டம் நிறுத்தி விடாது.

இலாப வேட்டைக்காக வரும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது என்றும், நியாயமான இலாபம் ஈட்டுவதை அரசு தடுக்காது என்றும் இச்சட்ட வரைவு கூறிக்கொள்கிறது. வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் 51 விழுக்காடு வரை தான் தங்கள் பங்கு மூலதனத்தை வைத்துக் கொள்ள முடியும் என்றும், குறைந்தது 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இந்தியக் குடிமக்களை பங்காளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இச்சட்ட வரைவு நிபந்தனை விதிக்கிறது.

மேலும் இக்கல்வி நிறுவனங்கள் கிடைக்கும் இலாபத்தை இங்கேயே மறுமுதலீடு செய்ய வேண்டுமே தவிர தங்கள் நாட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் இச்சட்ட நிபந்தனை கூறுகிறது.

வெளிநாடுகளில் இலாப நோக்கமின்றி தரமான உயர்கல்வி வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறான பல்கலைக் கழகங்களை இப்புதிய சட்டம் இந்தியாவிற்குள் ஈர்த்து விடாது. ஏனெனில் 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இவர்கள் இலாப நோக்கம் இல்லாதவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இது அரிதிலும் அரிது. ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் போன்ற இத்தகைய பல்கலைக் கழகங்கள் இலாப நோக்கமற்ற இந்திய குடிமக்களை தேடுகிற கடுமையான பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் மாட்டா.

மேலும் இச்சட்டம் வெளியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் பல்கலைக் கழக நல்கைக் குழு சட்டப்படி ‘நிகர்நிலைப் பல்கலைக்கழக’ அந்தஸ்து தான் முதலில் வழங்கப்படும் என்கிறது. உலகப் புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த நிபந்தனையை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பல்கலைக்கழகம் துவங்குவதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக கபில்சிபல் கூறுவது முற்றிலும் பொய்யானது.

வெளிநாடுகளில் சேருவாரின்றி கடைதிறந்து வைத்திருக்கும் தரமற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வருவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது

உயர்படிப்பு பயிற்சித் திட்டம், களப்பயிற்சி விரிவாக்கத்திட்டம், தொழில் மேலாண்மை நேரடிப் பயிற்சி என்ற பல மோசடிப் பெயர்களில் இலாபத் தொகையை தங்கள் நாடுகளுக்கு எடுத்து செல்லத் தெரிந்த தில்லுமுல்லு நிறுவனங்களே இச்சட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறத்தக்கவை.

அவ்வகை பல்கலைக்கழகங்களே இங்கு கடை விரிக்கும் என்பது தெளிவு.

இவ்வகை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு இருக்காது.

வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற வணிக முத்திரையை பயன்படுத்தி கண் மண் தெரியாத கட்டணக் கொள்ளையில் இந்நிறுவனங்கள் ஈடுபடும். பிற தனியார் கல்வி நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள ஒரு நியாயத்தை வழங்கிவிடும்.

மேற்கத்திய நுகர்வுப் பண்பாட்டு படையெடுப்பை இக்கல்வி நிறுவனங்கள் தீவிரப்படுத்தி விடும்.

எல்லா வகையிலும் தீமை நிறைந்த, கல்விக் கொள்ளையில் வெளிநாட்டு நிறுவனங்களைத் தடையேதுமின்றி அனுமதிக்கின்ற “வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சட்டத்தை” கல்வியில் அக்கரையுள்ள அனைவரும் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

உழவர்களை ஒழிக்க அடுக்கடுக்கான சட்டங்கள்


தில்லி அரசு வேளாண்மையின் மீது ஓர் போர் பிரகடனம் அறிவித்துள்ளது. உழவர்களை நசுக்கும் அடுக்கடுக்கான சட்டங்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டுள்ளன.

I

விதைச் சட்டம்

இந்திய ஆட்சியாளர்களின் துணையோடு ‘விதை ஏகாதிபத்தியம்’ நிறுவப்படுகிறது. நம் ஊர் உழவர்களின் கொல்லையில் எதை விதைக்க வேண்டும்; என்ன விலை கொடுத்து அந்த விதையை வாங்க வேண்டும், அதற்கு என்ன பூச்சிக் கொல்லி போட வேண்டும் என்பதை மான்சண்டோ நிறுவனம் முடிவு செய்யும். உழவர்கள் கைகட்டி வாய் பொத்தி அம்முடிவை நிறைவேற்ற வேண்டும்.

ஆழிப்பேரலை அடித்த டிசம்பர் 26, 2004 அன்று விதை அவசரச் சட்டம் -2004The Seeds Ordinance, 2004) பிறப்பிக்கப்பட்டது. அதை நிரந்தரச் சட்டமாக்குவதற்கு விதைச் சட்ட வரைவு-2004 (The Seeds Bill - 2004) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இது உடனடியாக சட்டமாகாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் தலைமையில் அமைக்கப்பட்ட நிலைக்குழு பல்வேறு உழவர் அமைப்புகளிடம் கருத்து கேட்டது. விதைச்சட்ட வரைவு உழவர்களுக்கு எதிரானது; விதை இறையாண்மையைப் பறிப்பது என எடுத்துக்காட்டிய இந்த நிலைக்குழு இச்சட்டவரைவை பெருமளவு மாற்றும்படி பரிந்துரைத்தது.

ஆனால் மன்மோகன் சிங் அரசு இதனை புறந்தள்ளி விட்டு புதிய விதைச் சட்ட வரைவை முன்வைத்துள்ளது.

உழவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளில் முக்கியமான ஒன்று விதையுரிமை. இந்த விதையுரிமையைப் பறித்து பன்னாட்டு விதைக் கம்பெனிகளுக்கு வழங்குவது ஒன்றுதான் புதிய விதை மசோதாவின் நோக்கமாகும்.

அது மட்டுமின்றி பல்வேறு தேசிய இனமக்களின் மரபான வேளாண் தொழில்நுட்ப அறிவைத் துடைத்தழிப்பதற்கு இச்சட்டம் துணை செய்கிறது. தேசிய இன மாநிலங்களின் வேளாண்துறை அதிகாரத்தை வெட்டிக் குறுக்குகிறது.

மாநில உரிமை பறிப்பு

இச்சட்ட வரைவின் விதி 3(1)இன் கீழ் மைய விதைக்குழு ((Central Seed Committee) ஒன்றை தில்லி அரசு நிறுவி விதைச் சட்டத்தைச் செயலாக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட உயர்மட்ட அமைப்பாக இது திகழும். ஏற்கெனவே நடப்பில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தில் மையவிதைக்குழு என்பது அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட ஒருவித கூட்டுக்குழுவாக இருந்தது. இப்பிரதிநிதிகளை அம்மாநில அரசுகளே நியமிக்கும்.

ஆனால் புதிய சட்டத்தின் விதி 4(1) “மையவிதைக் குழுவை மைய அரசு நியமிக்கும்” என்று கூறுகிறது. இந்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் இக்குழுவில் பெரும்பான்மையோராக இருப்பர். எல்லா மாநிலங்களிலிருந்தும் உறுப்பினர்கள் இடம் பெற மாட்டார்கள். அதற்குப் பதிலாக இந்திய மாநிலங்கள் ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஏதேனும் மூன்றிலிருந்து தொகுதிக்கு ஒருவராக மொத்தம் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். இவர்களும் தில்லி அரசாலேயே நியமிக்கப்படுவர்.

தாவரத் திருட்டு


கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் வெள்ளையர்கள் இங்கிருந்து பஞ்சு, அவுரிச் செடி போன்றவற்றை அடி மாட்டு விலைக்கு வாங்கித் துணியாக்கி நம் மக்களிடையே அதை விற்று கொழுத்தார்கள். இன்று அதற்கு ஒருபடி மேலே போய் வெள்ளையர் கம்பெனிகள் இங்குள்ள தாவரப் பொருட்களைத் (Plant Materials) திருடிச் சென்று காப்புரிமைப் பதிவின் வழி தமதாக்கிக் கொண்டு சிறுசிறு மாற்றங்கள் செய்து மீண்டும் நம் உழவர்களிடமே விற்பனை செய்கிறார்கள். இதற்கு உயிரித் தொழில்நுட்பம்(Bio-technology) என்ற உயர் தொழில்நுட்பத்தைத் துணை கொள்கிறார்கள்.

இதற்கு அரண் சேர்க்கவே இந்த விதைச் சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்டை அயலாரிடம் கூட உழவர்கள் விதையை விற்பனை செய்ய முடியாது. இச்சட்ட விதி 13(1) “பதிவு செய்யாத எந்த விதையையும் விற்கக்கூடாது” என்று தடை விதிக்கிறது. சரி, சொந்தப் பயன்பாட்டுக்காக விதை வைத்துக் கொள்ளத் தடை ஏதுமில்லை என சுதந்திரமாக இருக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. இச்சட்டப்படி நியமிக்கப்படும் விதை ஆய்வாளர் (Seed Inspector) ஒரு உழவர் வைத்திருக்கும் பதிவு செய்யப்படாத விதை சொந்தப் பயன்பாட்டுக்காக அல்ல விற்பனைக்குத்தான் என ஐயுற்றால் அவ்விதையை அவர் பறிமுதல் செய்யலாம்.

தமிழக உழவர்களில் ஒரு பகுதியினர் அடுத்த போகத்திற்கான விதையைத் தாங்களே சொந்தாமாக சேமிக்கின்றனர். அல்லது அக்கம்பக்கத்து உழவர்களிடம் பறிமாற்றம் செய்து கொள்வதும் உண்டு. இங்குள்ள சிறுநிறுவனங்கள் உற்பத்தி செய்யும் விதைகளைப் பயன்படுத்துவோரும் உண்டு. ஆனால் இந்தத் தங்குதடையற்ற விதைச் சுதந்திரம் பறிபோகிறது.

பதிவு செய்வதற்கு இச்சட்டம் விதிக்கும் நிபந்தனை மிகக் கடுமையானது. விதையைப் பதிவு செய்வதற்கு முன்னால் வேறுபட்ட பல இடங்களில் பயிரிட்டுப் பரிசோதிக்கப்பட வேண்டும் (Multilocational Trial) என நிபந்தனை விதிக்கிறது. மரபான விதைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே பொருத்தமானவை. வறட்சிப் பகுதியில் வறட்சி தாங்கும் ரகங்கள் பயிராகின்றன. மண்ணுக்கு மண் விளைச்சல் வேறுபடும். இந்நிலையில் பல இடங்களில் பரிசோதிப்பது என்பது உள்ளூர் வகைகளை நிராகரிப்பதற்கான சூதான உத்தியே ஆகும்.

உள்ளுர் சிறுநிறுவனங்களும் இந்நிபந்தனையை நிறைவேற்ற முடியாது. இவ்வளவு தரக்கட்டுப்பாடு விதிக்கும் இந்த விதைச் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களிடம் பல்லிளிக்கிறது. இச்சட்ட விதி 15 இதற்கொரு சான்றாகும்.

மரபீனி மாற்று விதைகளை (Genetically modified seeds or Transgenic Seeds) 1986ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வுக்குட்படுத்திய பிறகே விற்பனைக்கு அனுமதிக்க முடியும் என விதி 15(1) மீசையை முறுக்கிறது.

ஆனால் அடுத்த பத்தியிலேயே இவ்வாறான ஆய்வேதுமின்றி இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிக உரிமம் அளிக்கத் தடை ஏதுமில்லை என்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுகிறது.

இவ்விதைச் சட்டம் உழவர்களை எந்நேரமும் ஒருவகை கண்காணிப்பிலேயே வைத்திருக்க விதை ஆய்வாளர் (Seeds Inspector) என்ற ஏற்பாட்டைச் செய்கிறது (விதி 34). இந்த விதை அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகாமல் உழவர்கள் ஒடுங்கிக்கிடக்க வேண்டும். விதை ஆய்வாளர் எந்த உழவரின் வீட்டிற்குள்ளும் நுழைந்து, சந்தேகப்படும்படியான எந்த பண்டப் பாத்திரத்தையும் திறந்து பார்க்க, பூட்டிக்கிடந்தால் உடைத்துத் திறக்க அதிகாரம் பெற்றவர் என்று இச்சட்டம் கூறுகிறது. விதைச் சோதனையின் போது (Seed Raid) அவருக்குத் தேவையான காவல்துறையினரை மாநில அரசு அனுப்ப வேண்டும் என இச்சட்டம் பணிக்கிறது.

மாநில உரிமையைப் பறிக்கிற தமிழர்களின் மரபான அறிவியல் தொழில்நுட்பத்தை அழிக்கிற, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிற இந்த விதைச் சட்டத்தை தடுக்க உழவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

II

உயிரித் தொழில்நுட்பச் சட்டம்

இந்திய அமெரிக்க அரசுகளின் கூட்டுச் சதி விளைவாக மேலும் ஒரு மக்கள் விரோதச் சட்டம் வர உள்ளது. “இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்றுச் சட்டம் 2009, ((Bio-technology Regulatory Act of India 2009) என்பதே அது. இன்று சட்ட முன்வடிவாக இது முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2005, ஜூலை 18-ல் வாசிங்டனில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்ஷூடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இந்திய அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி (Indo-U.S. Knowledge Initiative) என்பதும் ஒன்று. அதற்கு இணங்கவே உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று வரைவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உயிரித் தொழில்நுட்பச் சட்டம் எனப் பொதுப்படக் கூறப்பட்டாலும், குறிப்பாக மரபீனிமாற்று உயிர்களைப் பற்றியே இச்சட்டம் பேசுகிறது. எனவே மரபீனி மாற்ற உயிரிகள் சட்டம் என்பதாகவே இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மரபீனி மாற்றப் பயிர்களின் தீமை குறித்து ஏற்கெனவே பலரும் அறிந்ததுதான்.

உழவர்களின் வாழ்வுரிமையை, பல்வேறு தேசிய இனங்களின் மரபான அறிவியல் - தொழில்நுட்ப மரபுரிமையை மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கிற, மண்ணையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்குகிற, நல்வாழ்வைக் கேள்விக்குறி ஆக்குகிற ஒரு மக்கள் விரோதச் சட்டமே 2009 இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் ஆகும்.

மாநில உரிமை பறிப்பு


மரபீனி மாற்ற உயிரிகள் குறித்து மாநில அரசுகள் எந்தவித ஒழுங்குமுறைச் சட்டங்கள் அல்லது ஆணைகள் பிறப்பித்திருந்தாலும் இனி அவை இப்புதிய சட்டப்படி நீக்கப்படுகின்றன என்று உயிரித் தொழில்நுட்பச் சட்ட வரைவு கூறுகிறது. தங்கள் தங்கள் மாநில எல்லைக்குள் மரபீனி மாற்றப் பயிர்களையோ, மற்ற உயிரிகளையோ மாநில அரசுகள் இனி தடை செய்ய முடியாது. ஏற்கெனவே கேரள மாநில அரசும், ஜார்கண்ட் மாநில அரசம் தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்ற உயிரிகளை வளர்க்கக்கூடாது எனத் தடை விதித்துள்ளன.

பி.ட்டி கத்தரிக்கு பல்வேறு மாநில அரசுகள் மாநிலங்களில் தடை விதித்தன. அதன் பிறகு இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியா முழுவதற்கும் பி.ட்டி கத்தரிக்கு தற்காலிகத் தடைவிதித்தது.

இச்சட்டம் செயலுக்கு வருமானால் இத்தடைகள் தானாகவே நீங்கிவிடும்.

அறிவுசார் ஒப்பந்தமும், அதிகாரக் குவிப்பும்

பெரிதும் வட அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களால் வழி நடத்தப்படுகிற உலகமயப் பொருளியலின் ஓரு பகுதியாக இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தம் உருவாக்கப் பட்டுள்ளது.

இதனைச் செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள அறிவு வாரியத்தில் மான்சாண்டோ, வால்மார்ட் பிரதிநிதிகளும், எம்.எஸ்.சாமிநாதனும் இடம் பெற்றுள்ளனர்.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள புதிதாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் என்பதில் மரபீனிப் பொறியியல் குறித்ததாக ‘இந்திய உயிரித் தொழில்நுட்பச் சட்டம் 2009’ உள்ளது.

இதுவரை மரபீனி மாற்ற உயிரிகள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிகரீதியானப் பயன்பாட்டுக்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு (Genetical Engineering Approval Committee-GEAC) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபீனி மாற்ற உயிரிகளால் தொடர் சூழல் மாசுபாடு நிகழும் என்ற ஐயம் உள்ளதால், மரபீனி மாற்ற உயிரிகளுக்கு ஏற்பு வழங்குவதில் வரம்பு விதிப்பதற்காகவே இவ்வகை ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள உயிரித்தொழில் நுட்பச் சட்டப்படி நிறுவப்படும் “தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்” (National Biotechnology Regulatory Authority -NBRA) ஒரு சர்வாதிகார அமைப்பாகவே செயல்படும் ஆபத்து உள்ளது.

இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவரும், ஒழுங்குமுறை அதிகாரிகளும் இருப்பார்கள். அதேநேரம் ஆணையத் தலைவரின் அதிகாரமே மேலோங்கியதாக இருக்கும் என்பதை இச்சட்டம் தெளிவாக்குகிறது.

ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்ட முறையிலோ, ஆணைய உறுப்பினர்களின் தகுதியிலோ ஆணையம் முடிவெடுத்த முறைமையிலோ (Procedure) முறைகேடு நடந்திருப்பதாகக் காட்டி ஆணையத் தலைவரின் முடிவை செல்லத் தகாததாகக் கூற முடியாது என இச்சட்டம் சாற்றுகிறது.

இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்ப்பாயம் மட்டுமே ஆணையத்தலைவர் மேற்கொண்ட முடிவின் மீது மேல்முறையீட்டை விசாரிக்கலாம். தவிர வேறு எந்த நீதிமன்றத்திற்கும் அத்தகைய அதிகாரம் கிடையாது என இவ்வரைவுச் சட்டம் கூறுகிறது.

ஆணையத்தின் தலைவரோ, பிற அதிகாரிகளோ ஒருதலைச் சார்பாக நடந்து கொண்டு, நியாயமற்ற முறையில் ஒரு மரபீனி மாற்ற விதைக்கோ, மருந்துப் பொருளுக்கோ அனுமதி வழங்கினார்கள் என்று குற்றம் சாட்டி எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாது என தடை செய்கிறது.

அறிவியலுக்கு எதிரானது - கருத்துரிமையைப் பறிப்பது


இச்சட்ட வரைவின் 13(63)-வது பிரிவின்படி மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக தக்க ஆதாரங்களின்றி பொதுமக்களிடையே பரப்புரை செய்பவர்கள் ஆறுமாதம் வரை சிறைத் தண்டனைப் பெறுவதுடன் இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்த வேண்டி வரும். இப்பிரிவு அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானது. அறிவியலில் பிழையாத்தன்மை என்ற ஒன்று இல்லை. ஆகவே இவர்கள் கூறும் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிரான கருதுகோளை முன்வைப்பது அறிவியலுக்கு புறம்பானது அல்ல. அதற்கு தண்டனை என்பது கம்பெனிக்காரர்களின் அறிவே இறுதியானது என அறிவியலுக்கு வரம்புக்கட்டும் சூழ்ச்சித் திட்டமாகும். அறிவைக் கைது செய்யும் முயற்சி ஆகும்.

இச்சட்ட வரைவின் 4ஆம் அத்தியாயம், அறிவியலாளர்கள் தனியார் ஆய்வகங்களில் கம்பெனிகளின் மரபீனி மாற்ற விதைகளை ஆய்வு செய்வதைத் தடை செய்கிறது. மான்சாண்டோ நிறுவனம் சொல்லுவது சரியா தவறா என்று கண்டறிவதற்கு சொந்த முறையில் ஒருவர் தனிப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்டால் 5 ஆண்டு சிறை அல்லது 10 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என இவ்விதி அறிவியலாளர்களை அச்சுறுத்துகிறது.

மேலும் சட்டமுன்வரைவு 27(1)ன் படி மரபீனி மாற்றப்பயிர்களின் ஆய்வு முடிவுகள், அவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி போன்றவை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் பெற முடியாது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் இத்தொழில்நுட்பம் குறித்து அறியும் உரிமையை உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் இச்சட்டம் மறுக்கிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் சட்டமாகும் இது.

ஒருபுறம், அறிவாளர்கள் சொந்த முறையில் மரபீனி மாற்ற விதைகளை ஆய்வு செய்யவும் கூடாது; தகவல் பெறவும் முடியாது என்று ஆதாரங்களை அடைத்து வைத்துவிட்டு, ஆதாரம் இல்லாமல் திறனாய்வு சொன்னால் 6 மாதம் சிறை என்று அச்சுறுத்துவது அப்பட்டமான கம்பெனி ஆட்சி நடக்கிறது என்பதையே எடுத்துக்கூறுகிறது.

பி.ட்டி கத்தரி குறித்த முடிவுகளை அறிவதற்கு தகவல் உரிமை சட்டப்படி உச்சநீதிமன்றத்தைக் கிரீன் பீஸ் அணுகியது. தகவல் பெற்றது. அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டியது. பல்வேறு அறிவாளர்களும், உழவர்களும் திரட்டினர். இனி இவ்வாறு நடக்காமல் தடுப்பதே இச்சட்டவரைவின் நோக்கம்.

மான்சண்டோ, சின்ஜென்டா, டூபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குச் சேவை செய்யவே இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம், 2009 கொண்டு வரப்படுகிறது.

III

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பண்ணை அமைக்க அனுமதி

இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தத்திற்கு இசைய மேலும் ஒரு சட்டம் வர இருக்கிறது. வேளாண் நிலங்களை அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கும் சட்டவரைவே இது.

இதுவரை வெளிநாட்டவர் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நகர்ப்புற நிலங்களையும் மனைகளையும் வாங்குவதற்கு சட்ட வாய்ப்பு இருந்தது. ஆயினும் வேளாண் நிலங்களை வாங்குவதற்கு தடை இருக்கிறது. இந்தத் தடையே கூட பல்வேறு விதிவிலக்குகளின் மூலமாக ஏற்கெனவே பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வரப்படும் சட்டவரைவு எந்த விதிவிலக்குகளும், தடைகளும் இல்லாமல் வேளாண் நிலங்களை வாங்கிக் குவிப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இசைவு அளிக்கிறது. வேளாண் பொருள் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்துதல் (உணவுப் பதப்படுத்துதல், சந்தை வாய்ப்பு, உயிரி எரிபொருள் போன்றவை) ஆகியவற்றில் அமெரிக்க பகாசுர நிறுவனங்களை அனுமதிப்பது என 2005-ல் ஜார்ஜ் புஷ்ஷூ‘_ம் மன்மோகன் சிங்கும் கையெழுத்திட்ட இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தம் வலியுறுத்தியது.

இது தான் இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட வரைவாக முன் வைக்கப்பட்டுள்ளது.

2010 - 2011 ஆம் நிதியாண்டுக்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திலும் அதற்கு முன்பும் அடுக்கடுக்கான உழவர் எதிர்ப்பு திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேதி உரங்கள் மீதான விலைக் கட்டுப்பாடு நீக்கம், விதைச் சட்டம், உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் என உழவர்கள் ஒரு மூச்சு முட்டும் முற்றுகையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே காவிரி நீர் வரவில்லை. முல்லைப் பெரியாறு மறுக்கப்படுகிறது. பாலாற்றில் கசிந்து வரும் நீரும் மறிக்கப்படுகிறது.

இவையெல்லாம் சேர்ந்து உழவர்களை வேளாண்மை செய்ய விடாமல் நசுக்குகின்றன. இவற்றில் சிக்கிய உழவர்கள் எதிர்த்துப் போராடமல் இருந்தால், வேளாண்மையை விட்டுவிட்டு வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு ஊரை காலி செய்து உள்நாட்டு அகதிகளாக அலைய வேண்டிய அவலம் தான் நேரும்.

இதைத்தான் இந்திய, பன்னாட்டு பெரு முதலாளிகளும் தில்லி ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள். நிலத்தை குறைந்த விலைக்கு முகம் தெரியாதவர்களிடம் விற்கிற இந்த மண்ணின் உழவர்கள் தங்கள் கண்ணெதிரிலேயே அதே நிலம் பலமடங்கு விலைக்கு கைமாறப் போவதையும், அங்கு வடநாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் வேலியிட்டு பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணைகள் அமைப்பதை கையைப் பிசைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான் வரும்.

இவ்வாறு நிலத்தையும் ஊரையும் இழக்கும் உழவர்களுக்கு செழிப்பான, மனநிறைவான வாழ்வளிக்கும் நிலையில் நகரங்களும் இல்லை.

இருக்கிற நிலத்தையும் இழந்து, புதிய வாழ்க்கையும் கிடைக்காமல் சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக உழல நேரும்.

எனவே, பன்னாட்டு நிறுவனங்களை பண்ணை அமைத்துக் கொள்ள, வேளாண் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக் குவிக்க அனுமதிக்கும் சட்ட வரைவை உழவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்: