கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

ரியோ + 20 அழிவுத்திட்டம் - தமிழ்த் தேசியமே மாற்று வழி - தோழர் கி.வெங்கட்ராமன்

மனித குலத்தின் எதிர்காலம் இனி புதிய கருவிகளின் கண்டுப்பிடிப்புகளில் இல்லை அது இயற்கையைப் பாதுகாப்பதில் இருக்கிறது. சகமனிதனை ஒருவன் கொன்றுவிட்டால் அவன் குற்றவாளி ஆகிறான். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக மண்ணின் மக்களும், பல இலட்சம் உயிரினங்களும் வாழும் இயற்கையை கொன்று அழித்தால் அவன் முதலாளி ஆகிறான். மனிதர்கள் இயற்கை கூறும் செய்திக்கு செவிமடுக்க வேண்டும். மனிதர்க்கு இருப்பது போலவே இயற்கைக்கும் வாழ்வுரிமை உண்டு. இதைக் கேட்பதற்கு இப்போது வேடிக்கையாக தெரியலாம். ஒரு காலத்தில் அடிமைக்கும் உரிமை உண்டு; அவன் குரலையும் கேட்க வேண்டும் என்று யாராவது கூறினால் அவர்களை பைத்தியக்காரன் என்று தான் கூறியிருப்பார்கள். அந்த காலம் இப்போது மாறி விட்டது. அதே போல் இந்த புவி அன்னைக்கும், சுற்றியுள்ள இயற்கைக்கும் உரிமை உண்டு என்று சொல்வதை இப்போது ஏளனம் செய்பவர்கள் நாளை அதை உணர்வார்கள் மாநாடுகள் நடத்துவது இயற்கைக்கு இரங்கல் உரை ஆற்றுவதற்காக அல்ல” -
- பாப்லோ சாலோ(Pablo Salo), பொலிவியாவின் முன்னாள் ஐ.நா சிறப்பு தூதர்
உலகம் முழுவதுமிருந்து 120 நாடுகளைச் சேர்ந்த 190 தலைவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோ நகரில் கூடினார்கள், கை குலுக்கிக் கொண்டார்கள். புன்னகையோடும், கவலையோடும், கோபத்தோடும் ஏதேதோ பேசினார்கள். புகைப்படத்திற்கு முகம் காட்டினார்கள். இறுதியில் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு உருப்படியான எதுவும் செய்யாத ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு விட்டு கலைந்தார்கள். ஆனால் இயற்கையை, இந்த ஒட்டுமொத்த புவியை பன்னாட்டு பெருநிறுவனங்களின் தனிச் சொத்தாக மாற்றும் ஒரு கொலைகார திட்டத்தை ஓசையில்லாமல் இறுதி செய்து விட்டுத்தான் கலைந்தார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இதே ரியோ டி ஜெனிரோ நகரில் 1992 ஆம் ஆண்டு வளங்குன்றா வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு(UN conference on sustainable develop ment) நடைபெற்றது. அதன் முடிவிற்கிணங்க இருபது ஆண்டுகள் கழித்து இம்மாநாடு நடைபெற்றது. அதனால் இம்மாநாடு ரியோ+20 என்றும், +20புவி உச்சி மாநாடு என்றும் அழைக்கபட்டது.
ரியோ+20 மாநாடு நடக்கும் நேரத்தில் சுருங்கி வரும் குடிதண்ணீர் வாய்ப்புகள், குறைந்து வரும் விளைநிலங்கள், விரைந்து உயரும் புவி வெப்பநிலை, அச்சுறுத்தும் பருவநிலை மாற்றங்கள், எங்கு பார்த்தாலும் நீரும், நிலமும், காற்றும் வேதி கழிவுகளால் நிரப்பப்பட்டுள்ள சீர்கேடு, பல்லாயிரம் ஏக்கர் காடு அழிப்பு, உருகும் பனிப்பாறைகள், உயரும் கடல் மட்டங்கள் பொழியும் அமில மழைகள்.... என மீட்க முடியாத பேரழிவில் இந்த புவிக்கோளம் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது.
வரம்பற்று இயற்கையை சுரண்டி இலாபம் பார்க்கும் தாராளமய தனியார் தொழில் வளர்ச்சி, இயற்கையை துய்த்து துப்பிவிட வேண்டும் என்ற நுகர்வுவெறி ஆகியவைதான் இப்பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
சூழ்ந்து வந்த இந்த ஆபத்தை 1992 ரியோ மாநாடு முன்னறிந்து கூறியது. அம்மாநாட்டின் வழி காட்டுதலுக்கு இணங்க 1994-ல் ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் வெளியிடப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் (Kyoto Protocol) மாசுவளி உமிழ்தலின் அளவைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்து அளித்தது. அதிகம் மாசுப்படுத்திய நாடுகள் சூழல் மாசுபாட்டை குறைப்பதில் கூடுதல் பங்கேற்கும் வகையில் “அனைவருக்கும் பொதுவான ஆனால் வேறுபட்ட அளவிலான பொறுப்பேற்பு (Common But Differential Responsibility) என்ற கோட்பாட்டை வகுத்துக் கொடுத்தது. 1990- ஆம் ஆண்டை ஒப்பிட 2012 -இல் இம்மாசுவளி உமிழ்தலின் அளவை 5.2 % குறைக்க வேண்டும் என பொது இலக்கும் வரையறுக்கப்பட்டது.
ஆனால் 20 ஆண்டு கழித்து இப்போது பார்த்தால் மாசுவளி உமிழ்தலின் அளவு 5.2% குறைவதற்கு மாறாக 45% அதிகரித்துள்ளது. ஆர்க்டிக் கடலின் பனிப்பாறை 1990-ல் இருந்ததைவிட 30 இலட்சம் சதுர கிலோமீட்டர் குறைந் துள்ளது. புவி வெப்ப உயர்வால் இவ்வளவு பெருமளவு பனிப் பாறை உருகிவிட்டது என்று பொருள். இது கடல் மட்டத்தை எதிர்பாராத அளவு உயர்த்தி விட்டது. இதனால் சின்னஞ்சிறிய தீவுகள் கடலுக்குள் காணாமல் போய் விட்டன. உலகம் முழுவதும் உள்ள தீவு நாடுகள் பெருமளவு நில அரிப்பால் ஆபத்தில் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் எண்ணூர், விழுப்புரம், நாகை, கடலோரப் பகுதிகளிலும் புதுவையிலும் மீனவ கிராமங்கள் தீவிர மண்ணரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. உலகெங்கும் பல்லாயிரம் ஏக்கர் வெப்ப மண்டல காடுகள் அழித்து வீழ்த்தப்பட்டுள்ளன.
இவ்வளவு கடும் ஆபத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வெறும் நல்விருப்பங்களை சொல்தோரணங்களாக கோத்து 49 பக்க கூட்டறிக்கையை மாநாட்டின் இறுதி நாளான 22.06.2012 அன்று உலகத் தலைவர்கள் வெளியிட்டார்கள். இந்த ரியோ+20 கூட்டறிக்கைக்கு ”நாங்கள் விரும்பும் எதிர்காலம்” (Future We Want) என பெயர் சூட்டியிருந்தார்கள். “வளங்குன்றா வளர்ச்சி மற்றும் ஏழ்மை ஒழிப்பு என்ற பின்புலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பசுமை பொருளியல் என்ற இம் மாநாட்டின் மைய கருத்தோட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் அனைவரும் உறுதியுடன் இருக்கிறோம். இதற்கான நிறுவன வழி ஏற்பாடுகளில் உடன் நிற்போம் என உறுதி கூறுகிறோம்” என இவ்வறிக்கை கூறுகிறது. இதற்கென 51,300 கோடி டாலர் நிதி தேவைப்படும் என்றும் இதில் பெருமளவை தனியாரிடமிருந்து திரட்டி கொள்வது என்றும் இம்மாநாடு முடிவு செய்தது. இதற்கான வழிமுறைகளை இறுதி செய்வதற்கு 30 நாடுகளைக் கொண்ட ’வெளிப்படையான செயல்பாட்டு குழு’ (Open Working Group) நிறுவப்படுவதாக இத்தீர்மானம் அறிவித்தது.
இவ்வொப்பந்தம் கூறும் பசுமைப் பொருளியல் (Green Economy) என்பது பசுத்தோல் போர்த்திய புலி ஆகும். அது இயற்கையை பாதுகாக்கும் வளங்குன்றா பொருளியல் திட்டமாக இருக்கும் என அதன் பெயரை பார்த்து மதிப்பிட்டால் நாம் ஏமாந்து போவோம். மண்ணையும், மலையையும், ஆற்று நீரையும், ஊற்று நீரையும் காற்றையும், காட்டையும், காட்டில் உலவும் வண்ணத்து பூச்சியையும் கூட தனியார் குழுமங்களின் உடைமையாக்குகிற கொலைகார பொருளியல் திட்டமே ‘பசுமைப் பொருளியல்’ ஆகும்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டம் (United Nations Environmental Programme -UNEP) சார்பில் முன்மொழிப்பட்ட இந்தப் பசுமைப் பொருளியலை வரைந்தவர் பவான் சுகதேவ் என்பவராவார். பன்னாட்டு வணிகக் குழுமங்களின் காலடியில் உலக நாட்டு உழைப்பாளர்களை வைப்பதற்கு திட்டம் வரைந்த ஆர்தர் டங்கலின் டங்கல் திட்டம் போல் இப்புவியின் இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு குழுமங்களின் சொத்தாக மாற்று வதில் சுகதேவின் பசுமைப் பொருளியல் பாரதூரமான பங்காற்றவல்லது. ரியோ+20 மாநாட்டு முடிவில் உலகச் சுற்றுச்சூழல் அமைப்பு (W.E.O) என்ற அமைப்பு உருவாக்கப்படவில்லையே தவிர ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் இதற்கு நிகராக வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இந்த பவான் சுகதேவ் ஜெர்மன் நாட்டு வங்கியான டொய்ச் வங்கியின் சார்பில் இத்திட்டத்தில் பணியாற்றப் புகுந்தவர். இவரது ஒருங்கிணைப்பில் UNEP சார்பில் முன்வைக்கப் பட்ட வரைவுதான் ”பசுமைப் பொருளியல் நோக்கி : வளங்குன்றா வளர்ச்சிக்கும் ஏழ்மை ஒழிப்புக்குமான பாதை” (Towards a Green Economy : Pathways to sustainable development and poverty eradication) என்ற ரியோ +20 மாநாட்டின்மைய ஆவணமாகும். இது 2012 மார்ச்சில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு மாநாட்டு வரைவாக (Zero Draft) முன்வைக்கப்பட்டது. அதுதான் மாநாட்டு தீர்மானத்தில் மையத் திட்டமாக ஏற்கப்பட்டுள்ளது.
பசுமை பொருளியலின் அடிப்படை ஆய்வறிக்கையாக இருப்பது 2008 மே இல் பவான் சுகதேவ் வரைந்தளித்த "சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் பொருளியல் - (The Economics of Eco Systems and Bio Diversity - TEEB)” என்பதாகும்.
சுகதேவின் ஆய்வறிகையின் படி (Thesis) இயற்கை என்பது ஒரு மூலதனமாக கொள்ளப்படுகிறது. பண மூலதனம், உழைப்பு மூலதனம் போல் இயற்கையும் மூலதனம்தான் என்கிறார் சுகதேவ். அதற்கு இயற்கை மூலதனம் (Nature Capital) என பெயர் சூட்டினார். இதன்படி ஆறுகள், குளங்கள், காடுகள், கடல் மீன்கள், காட்டு உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்துமே சந்தையில் வாங்கி விற்கின்ற சரக்குகள் ஆகும். இவை எல்லாவற்றையும் பணமதிப்பாக அளந்துவிடலாம்; சந்தைப்படுத்தலாம் என்றாகிறது. காட்டு மரங்களையும், கடலின் பவழப் பாறைகளையும் சுகதேவின்’ பசுமைப் பொருளியல் சந்தையின் இயற்கை சொத்தாக (Nature Assets) வரையறுக்கிறது. காட்டு மரங்கள் கரியமில வளியை உறிஞ்சி சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதும் தேனீக்கள் மலர் விட்டு மலர்தாவி மகரந்த சேர்க்கைக்கு துணைபுரிவதும் பண மதிப்பால் அளக்கதக்க சேவைகளாக (Services) வரையறுக்கிறது.
ஒரு பெருமுதலாளி நிறுவனம் சிலநூறு ஏக்கர் காட்டை பணம் கொடுத்து நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்து விடலாம். அதன் பிறகு தேனீயின் மகரந்த சேர்க்கைப் பணிக்கு அந்நிறுவனம் உடைமையாளராகி விடுகிறது. அத்தேனீயின் ’சேவைக்கு நிகரான’ பண மதிப்பை அந்நிறுவனம் பெற்று கொள்ளலாம். காட்டில் இருந்து கிடைக்கும் காய் கனிகளுக்கு உரிய விலை மட்டுமின்றி இந்த தேனீ சேவைக்கும் ஒரு தொகையை அக்காய்கனியை வாங்குபவர் அந்நிறுவனத்திற்கு கொடுத்தாக வேண்டும்.
இதே போல் ஒரு கடற்பரப்பை குத்தகைக்கு எடுக்கிற நிறுவனத்திற்கு அங்குள்ள பவழப் பாறைகளின் கரி உறிஞ்சும் சேவையும் உரிமையாகி விடுகிறது. பவழப் பாறையின் சேவைக்கு நிகரான பணமதிப்பை அந்நிறுவனம் சந்தைப் படுத்தலாம்.
இயற்கையின் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கை செய்லபாடுகளுக்கும் பண மதிப்பு கூறுகிற ஒரு கணக்கியல் முறையையும் சுகதேவ் அவரது குழுவினருடன் இணைந்து உருவாக்கி கொடுத்திருக்கிறார். அதற்கு சூழல் பொருளியல் கணக்கு பதிவீட்டு முறை என்று பெயர் (System of Environmental Economic Accounting - SEEA). மனம் போன போக்கில் அள்ளிப்புள்ளியாக ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை அறிவித்து அதனை ஒரு கணக்கீட்டு முறையாக தொகுத்து கொடுத்திருக்கிறார் சுகதேவ். இதன்படி ஓர் ஆண்டில் உற்பத்தியாகும் இயற்கை வளங்கள் மற்றும் சேவைகளின் பணமதிப்பு 3 இலட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர் எனக்கூறுகிறார் சுகதேவ். இவ்வளங்களை அவை உள்ள நாடுகள் சந்தையில் மேற் சொன்ன பண மதிப்பில் விற்றுக் கொள்ளலாமாம்.
சூழல்பாதுகாப்புக்கு இயைந்த தொழில்களில் இலாபமான முதலீட்டு வாய்ப்புகளைக் காட்டி சந்தை வழியிலேயே பன்னாட்டுப் பெருமுதலாளி நிறுவனங்களை சூழல பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறக்கிவிடுவது என்ற பெயரில் பசுமைப் பொருளியல் நியாயப்படுத்தப்படுகிறது. "முதலாளிய நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்ச்சூழலின் நிலைத்தன்மைக்கும் முரண்பாடு ஏதுமில்லை" என பசுமைப் பொருளியல் அடித்து கூறுகிறது.
கற்பனை செய்து பார்த்திராத வகையில் மலரின் சிரிப்பும், மழலையின் சொல்லும், தாயின் பாசமும் இன்னும் அனைத்தும் முதலாளிகளின் வரவு செலவு கணக்குகளுக்குள் கொண்டு செலுத்தப்படுகின்றன. எல்லாவற்றின் மீதும் விலைப்பட்டியல் தொங்க விடப்படுகிறது. மொத்தத்தில் மனிதமே சந்தை சரக்காக சீரழிக்கப்படுகிறது.
ரியோ+20 ஒப்பந்தம் காட்டையும், கடலையும் , ஆற்றையும். ஒட்டு மொத்த இயற்கையையும் சந்தை சரக்காக மாற்றியதோடு அல்லாமல், காடுகளில் வாழும் பலகோடி மக்களையும், கடலோடு வாழும் கோடான கோடி மீனவர்களையும் ஆற்று வளம் சார்ந்த உழவர்களையும் மிகப்பெரும் அளவிற்கு அவர்களது வாழிடங்களிலிருந்து- அவர்களது வரலாற்று தாயகங்களிலிருந்து தொகை தொகையாக வெளியேற்ற வழி செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பிருந்தே இந்திய அரசு இதன் கூறுகளை சட்டமாக்க துவங்கிவிட்டது. வனப்பாதுகாப்பு சட்டம், தேசிய நீர் கொள்கை, இரண்டாம் பசுமை புரட்சி, அறிவு சார் முன்முயற்சி ஒப்பந்தம் ஆகியவை அவற்றுள் சில. ரியோ+20 ஒப்பந்தம் அணு உலை மின்சாரத்தை தூய்மையான மின்சாரம் என வகைப்படுத்தி நீடித்த வளர்ச்சிக்கான வழியாக பரிந்துரைக்கிறது. பயங்கர விளைவுகளை உருவாக்கும் அணுக் கழிவுகளை பற்றி அது வாய்திறக்கவில்லை. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னாலேயே இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு இத்திசையில் பல மைல் தொலைவு சென்று விட்டதை நாம் அறிவோம்.
ரியோ+20 மாநாடு புவி வெப்பமாதலையோ, பருவநிலை குலைவையோ, இயற்கை அழிப்பையோ தடுப்பதற்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என மென்மையாக கடிந்து கொள்வோர் இதில் காணப்பட்ட ஒப்பந்தத்தின் பேரழிவு திட்டத்தை உணரத் தவறுகிறார்கள். ரியோ+20 புவி உச்சி மாநாடு இந்த பூமித் தாயை ஏலம் போட்டு விற்கும் திட்டத்தை இறுதி செய்துவிட்டது. எதுவும் விட்டு வைக்கப்படவில்லை; அனைத்தும் முதலாளிய சந்தையின் சரக்காக மாற்றப்பட்டு விட்டது. முதலாளியம் எல்லாத் திரைகளையும் விலக்கிவிட்டு தனது கொடிய முகத்தை வெளிக்காட்டி விட்டது.
இன்றைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் முதலாளியம் குறித்து முன்னறிந்து கூறியவை அனைத்தும் உண்மை என்பது இப்போது ஐயத்திற்கு இடமின்றி மெய்பிக்கபட்டு விட்டது. 1848 -இல் தாங்கள் வெளியிட்ட கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இம் மேதைகள் கீழ்வருமாறு கூறினர்.
“முதலாளியமானது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தை தவிர, பரிவு உணர்ச்சி இல்லாத பண பட்டுவாடாவை தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கியது...மனிதனது மாண்பினை பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ, துறக்கவோ முடியாத எண்ணிலடங்கா சுதந்திரங்களுக்கு பதிலாக வெட்கங்கெட்ட வணிக சுதந்திரம் எனும் ஒரே ஒரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொன்னால், சமயத் துறை மயக்கங்களாலும் அரசியல் மயக்கங்களாலும் திரையிட்டு மறைக்கப் பட்ட சுரண்டலுக்கு பதிலாக முதலாளிய வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, அம்மணமான, நேரடியான, மிருகத் தனமான சுரண்டலை நிலை நாட்டியது. இது காறும் போற்றி பாராட்டப்பட்டு பணிவுக்கும் , பக்திக்கும் உரியதாய் கருதப் பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளிய வர்க்கம் மதிப்பிழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும். வழக்கறிஞரையும், சமய குருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப் பாளிகளாய் ஆக்கி விட்டது. முதலாளிய பொருளுற்பத்தி உறவுகளில் சுதந்திரம் என்பதற்கு சுதந்திரமான வணிகம், சுதந்திரமான விற்றல், வாங்கல் என்பது மட்டுமே பொருள்”.
பசுமைப் பொருளியல் ஆவணம் பெரு முதலாளிகளின் இலாப வேட்டையும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல முடியும் என்று பசப்புகிறது. முதலாளியத்தின் வரம்பற்ற மூலதனக்குவிப்பும், சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல முடியாதவை என்பதே உண்மை. அதுவும் வரம்பற்ற இலாப வேட்கையை அடிப்படையாக கொண்ட புதிய தாராளமயப் பொருளியல் தொடரும் வரை மண்னைக் காப்பதோ, மனிதரைக் காப்பதோ இயலவே இயலாது.
இது முதன்மையாக தனி நபரின் தன்னல குணம் சார்ந்த சிக்கல் அல்ல. மாறாக புதிய தாராளமயப் பொருளியல் என்ற அமைவின் பிரிக்கமுடியாத விளைவாகும். மார்க்சிய அறிஞர் ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் (John Bellamy foster) கூறுவது போல் புதிய தாராளமய பொருளியல் அமைவில் கீழ் வரும் 6 முக்கிய காரணிகள் ஒன்றிணைந்த வகையில் செயலாற்றுகின்றன.
1. மூலதனக் குவிப்பு மேலும் மூலதனக்குவிப்பு என்ற மூலதனத்தின் இயங்கு சக்தி.
2. உழைபாளர்கள் மேலும் மேலும் சுயத் தொழில்களை விட்டுவிட்டு கூலித் தொழிலாளர்களாக மாறுவது.
3.உற்பத்தியை விரிவாக்கிக் கொண்டே செல்லும் புதிய புதிய தொழில் நுட்பங்கள்.
4.செயற்கையாக உருவாக்கப்படும் தேவைகள். (Manufac tured Wants)
5.சமூகப் பாதுகாப்பை விட இந்தப் பொருளியல் வளர்ச்சிக்குத் துணை செய்வதே அரசாங்கத்தின் தலையாயபணி என்ற ஆட்சிக் கோட்பாடு.
6. செல்வக் குவிப்பே செயல் திறனின் அடையாளம் என்ற கருத்தை பதியவைக்கும் தகவல் அமைப்பு, கல்வி அமைப்பு மற்றும் விழுமிய அமைவு (Value System)
(சூழலியல் நோக்கில் முதலாளியத்தைத் திறனாய்வு செய்தவர் ஃபாஸ்டர்: விரிவிற்கு காண்க : ‘சூழலியல் புரட்சி’ - தமிழில் துரை. மடங்கன் ‘விடியல் வெளியீடு கோவை)
புதிய தாராளமய பொருளியலின் உள்ளார்ந்த தன்மைகள் (In-Built Characters) இவை. அதுவும் நிதி மூலதனம் கோலோச்சுகிற இன்றைய காலக் கட்டத்தில் மூலதனக் குவிப்புக்கான கால இடைவெளி சுருங்கி வருகிறது. ஏனெனில் சந்தைப் பொருளியலின் ஏற்ற இறக்கங்கள் எப்போது ஒரு குலைவிற்கு இட்டுச்செல்லுமோ என்ற அச்சுறுத்தல் மூலதனத்தைத் துரத்தி கொண்டி ருக்கிற காலமிது எனவே ‘மிக அதிக இலாபம் மிக விரைவாக’ என்பதே இன்றைய புதிய தாராளமயத்தின் வழிகாட்டும் நெறி.
இதற்குத் துணை செய்கிற தொழில் நுட்பங்கள் மட்டுமே ஊக்குவிக்கப்படும். தங்களது இலாப வேட்டைக்கு இடையூறாக வரும் எந்த தொழில் நுட்ப வளர்ச்சியிலும் முற்றுரிமை முதலாளியம் நாட்டம் செலுத்தாது. தங்களது ஆலைகள் அல்லது நிறுவனங்கள் உமிழும் மாசுபாட்டுவளிகளை மறுசுழற்சி செய்யவோ, நச்சு நீக்கம் செய்யவோ இவை முன் வருவதில்லை. தங்கள் இலாபத்தை குறைக்கின்ற நடவடிக்கையாகவே இவற்றை மதிப்பிடுகின்றன.
இந்த வரம்பற்ற இலாப வேட்டையும் இயற்கை பாதுகாப்பும் இணைந்து செல்லவே முடியாதவை. இந்த உண்மையை மறைத்து தங்குதடையற்ற வேட்டைக்கு இயற்கையை திறந்து விடுவதே ரியோ+20 இல் ஏற்கப்பட்டுள்ள பசுமை பொருளியலின் அடிப்படை நோக்கமாகும்.
இதுவரை இயற்கையை தங்களது பொருளியல் வேட்டைக்கான ஒரு ஊற்றாக (Resource) முதலாளிகள் கருதிச் செயல்பட்டு வந்தனர். இனி இயற்கையை தங்களது மூலதனமாக (Capital) கைப்பற்றிக் கொள்ள போகின்றனர். இதற்கு உரிமம் வழங்கும் நடவடிக்கையே ரியோ+20 ஒப்பந்தம் ஆகும். இது வரலாற்றில் இது வரை கண்டிராத பண்பு நிலை மாற்றமாகும்.
உலகமய முதலாளியத்தோடு இயற்கை பாதுகாப்பும், எளிய மனிதர்களின் வாழ்வுரிமை பாதுகாப்பும் இணைந்து செல்லவே முடியாதவை என்பது முன் எப்போதையும் விட இப்போது தெள்ளத் தெளிவாக்கப் பட்டு விட்டது. இயற்கையும் அதன் வளங்களும் அனைவருக்கும் பொது (Commons) என்பது போய் அவை அணியமாக உள்ள உடைமைகள் - தனியாரின் உடைமைகள் என்ற நிலை உருவாக்கப்படுகிறது. முதலாளியத்தின் கட்டற்ற இலாப வெறியில் சீரழிந்த உச்சம் இது.
முதலாளிய அமைப்பில் இருந்து, முதலாளிய பொருளியலிலிருந்து வெளியேறி மக்களுக்கான மாற்று பொருளியலை, மாற்றும் அமைப்பு முறையை படைத்து கொள்வதை தவிர இனி வேறு வழியில்லை. இயற்கை அனைவருக்கும் பொது என்பது உருவாக்கப் பட வேண்டும்.
“உயர் வடிவ சமூகப் பொருளியல் அமைப்பு என்ற நிலையிலிருந்து நோக்கினால் சக மனிதனை ஒரு மனிதன் தனது உடைமையாக்குவது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போல் இப்புவியின் மீது ஒரு தனிமனிதன்உடைமை உரிமைக் கோருவதும் முட்டாள் தனமானது எனபது விளங்கும். ஒரு முழுச்சமூகமோ அல்லது ஒரு தேசமோ அல்லது ஒரு காலத்தில் நிலவும் சமூகங்கள் அனைத்தும் இணைந்தோ கூட புவியின் உடைமையாளர்கள் எனக் கூறிக் கொள்ள முடியாது. அவர்கள் இந்தப் பூமியின் துய்ப்பாளர்கள், பயனாளிகள் அவ்வளவுதான் அவர்கள். ஒரு நல்ல குடும்பத்தின் தலைவன் போல நடந்து கொள்ள வேண்டும். இப்போது உள்ளதை விட உயர் நிலையில் இந்த பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்” என்றார் கார்ல் மார்க்ஸ் (Capital - 3rd volume - p911)
இன்று தனித்தனி நாடுகளின் சட்டங்களை வளைத்து, ஒரே தன்மையதாக்கி தங்கள் தங்கு தடையற்ற வேட்டைக்கு உகந்த ஒற்றைச் சந்தையாக்குகிற உலக மயப் பொருளியல் நெறியை உடைக்க வேண்டும். தனித்தனி தேசியச் சந்தைகளை நிலைப் படுத்த வேண்டும். அந்தந்த தேசிய இனங்களின் மண்ணிற் கேற்ற மரபான தொழில் நுட்பங்கள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை மீட்க வேண்டும்.
இந்தியா என்ற அரசியல், சந்தைக் கட்டமைப்பில் இது இயலாத ஒன்று ஏனெனில் உலகமயச் சந்தை வேட்டையின் பங்காளிகள் இந்தியப் பெருமுதலாளிகள் இந்தியாவை ஆளும் ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னல் இதனோடு இணைந்த ஒன்று.
எனவே இந்தியக் கட்டமைப்பில் இருந்து வெளியேறாத தேசிய இனம் தனது இயற்கைகையை பாதுகாத்து கொள்ளுவதற்கான மாற்றுப் பொருளியலுக்கு செல்லவே முடியாது.
தமிழ்த் தேசிய இனம் தனது இயற்கை வளத்தை இனியும் உலகமய வேட்டையிலிருந்து பாதுகாத்து கொள்ள விரும்பினால் தனது இறையாண்மையை அது மீட்டு கொள்வது முதல் தேவையாகும்.
தமிழினத்தின் மரபார்ந்த அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமின்றி தமிழர்களின் அறம் இம்மண்ணையும் அதன் இயற்கை வளத்தையும் பேணி பாதுகாக்கவல்லது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை” தமிழர்களின் அறம் வலியுறுத்துகிறது. இங்கு கூறப்படும் பல்லுயிர் ஓம்புதல் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. வளங்களை, நலன்களை சக மனிதர்களிடம் மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் பகுத்து கொடுத்து வாழ்வதை தமிழர் அறம் வலியுறுத்துகிறது. வளங்குன்றா வளர்ச்சியின் (Sustainable Deve lopment) திறவுகோல் இதுதான்.
தமிழ்த் தேசத்தின் அரசுரிமையை மீட்டு தனக்கான பொருளியல் இறையாண்மையை நிலைநாட்டி கொள்வதுதான் தமிழினத்தின் முன் உள்ள ஒரே மாற்றுவழி.
ரியோ+20 வழியாக நம் மக்களை சூழவரும் ஆபத்திலிருந்து தற்காத்து கொள்வதற்கு அதுவே வழி.
இருக்கும் நிலைக்குள்ளேயே சில, பல திருத்தங்களைச் செய்து, பெருநிறுவனங்களுக்கும் இசைவான மாற்றுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீளலாம் எனக் கருதுவது மிகவும் பிழையானது.
இதை உணருவதற்கான கடைசி வாய்ப்பு இதுதான். ரியோ+20 அந்த விளிம்பில் நம்மை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போதாவது இதைத் தமிழர்கள் உணர வேண்டும்.

0 கருத்துகள்: