கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு நிறுவனங்கள் - மன்மோகன் சிங்கின் பொய் மூட்டையும், உண்மை நிலையும்

உயர் விலையுள்ள பொருள்கள் அனைத்தையும் வாங்கிக் குவிக்கும் வல்லமையுள்ள, நுகர்விய வெறிகொண்ட உயர் வருமானம் பெறும் 10 விழுக்காடு மக்கள் இருந்தால் போதும். மற்றவர்கள் உழைப்பாளர்களாய், வாக்காளர்களாய் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்பதுதான் இந்திய ஆட்சியாளர்களின் விருப்பமாக உள்ளது. இந்த விருப்பமே அவர்களது கொள்கை அறிவிப்புகளின் வழியாக வெளிப்படுகிறது. 
வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றுவது, கடல் பகுதிகளிலிருந்து மீனவர்களை வெளியேற்றுவது, துணி உற்பத்தியிலிருந்து நெசவாளர்களை வெளியேற்றுவது இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது. இவர்களின் திட்டங்கள், பொருளியல் கொள்கைகள் ஆகிய அனைத்தும் இத்திசையிலேயே செயல்பட்டு வருகின்றன. இப்போது சில்லரை வணிகத்திலிருந்து மண்ணின் வணிகர்களை வெளியேற்றும் திட்டத்தை தில்லி அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஒரு துறை வணிகத்தில் – ஒரு வணிக முத்திரை வணிகத்தில் (Single Brand Retail) நூற்றுக்கு நூறு வெளிநாட்டு மூலதனத்தை இந்திய அரசு அனுமதித்துவிட்டது. இதன்படி ஒரு நிறுவனம் தனது தயாரிப்பில் ஒரு வணிக முத்திரை உள்ள பொருள்களை எந்தத் தடையுமின்றி விற்றுக்கொள்ள தனித்த கடைகளை இந்தியாவிற்குள் திறந்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக அடிடாஸ் (Addidas) என்ற வணிக முத்திரையில் தயாராகும் அனைத்துப் பொருள்களையும் அந்த அயல் நாட்டு நிறுவனம் இந்தியச் சந்தையில் விற்றுக்கொள்ள தானே நேரடியாகக் கடைகளை நடத்தலாம். ஆயினும் அதே நிறுவனத்தின் ரீபோக் (Reebok) வணிக முத்திரைப் பொருள்களை அக்கடையில் விற்க முடியாது. அதற்கு வேறு கடை திறக்க வேண்டும்.
இப்போது இந்த வரம்பையும் இந்திய அரசு நீக்கி விட்டது. எந்த வணிக முத்திரையில் இருந்தாலும் எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும் எந்த வரம்புமின்றி அயல் நாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நேரடியாகப் பொருள்களை வாடிக்கையாளருக்கு விற்றுக்கொள்ளலாம். சில்லரை வணிகத்தில் அயல் நாட்டு முதலீடு 51 விழுக்காடு வரை அனுமதிக்கப்படும் என இந்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுவிட்டது.
இனி வடஅமெரிக்காவின் வால்மார்ட் (Wal-Mart), பிரிட்டனின் டெஸ்கோ (Tesco), பிரான்சின் கேர்ஃபோர் (Careffore) போன்ற மலை விழுங்கி நிறுவனங்கள் சில்லரை விற்பனை நிலையங்களை இந்தியாவில் நிறுவிக்கொள்ளலாம். 10 இலட்சம் மக்கள் தொகையுள்ள மாநகரங்களில் மட்டுமே இது அனுமதிக்கப்படுவதால் தள்ளு வண்டி வியாபாரிகள் கவலைப்பட வேண்டாம் என பிரதமர் மன்மோகன் சிங் ஆறுதல் மொழி கூறுகிறார். வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் நீங்கள் அழைத்தாலும் குக்கிராமங்களில் கடை விரிக்கப்போவதில்லை. அவர்கள் குறியும் மாநகரங்கள் மட்டுமே.
இதுமட்டுமின்றி 10 இலட்சம் மக்கள் தொகையுள்ள மாநகரங்கள் இல்லாத மாநிலங்களில் அயல் நாட்டு பெரு நிறுவனங்கள் எங்கு வேண்டுமானாலும் சில்லரைக் கடை நடத்தலாம் என அரசின் அறிவிக்கை அனுமதி அளிக்கிறது. எனவே எந்த மாநிலமும் தப்பிக்கப்போவதில்லை என்பது தெளிவு.
மாநில அரசுகள் விரும்பவில்லையென்றால் சில்லரை வணிகத்தில் அயல் நாட்டுப் பெரு நிறுவனங்கள் அம்மாநிலத்தில் கடை தொடங்காமல் தடுத்துக் கொள்ளலாம் என தில்லி அரசின் அறிவிக்கை கூறுகிறது. ஆயினும் இது தற்காலிகப் பாதுகாப்புதான். ஏனெனில் உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தின் படி மாநில அரசின் தடைகளை நீக்கி சில்லரை வணிகத்தில் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது இந்திய அரசின் கடமை என ஏற்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் தில்லி அரசுக்கு இதற்கான அதிகாரங்கள் உள்ளன.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 20.09.2012 அன்று அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம் – கடையடைப்பு நடைபெற்றது. இதற்கு அடுத்த நாள், 21.09.2012 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் சில்லரை வணிகத்தில் அயல் நாட்டு முதலாளிகளை அனுமதித்ததை நியாயப்படுத்தி, அதற்கான காரணங்களை அடுக்கினார்.
”இந்தியாவில் சில்லரை வணிகம் விரிவடைவதற்குப் பன்மடங்கு வாய்ப்புகள் பெருகி வருவதால் உள்நாட்டு சில்லரை வணிகர்கள், வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பாருமே அக்கம்பக்கமாக வளர வாய்ப்புள்ளது. எனவே இந்தியாவில் உள்ள சில்லரை வணிகர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பீதியூட்டுகின்றன. அதற்கு மக்கள் இரையாகிவிட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
மன்மோகன் சிங்கின் உரை பலியாட்டை குளிப்பாட்டி மாலை போடுகிற வேலை. ஒன்றும் ஆகாது என அவர் கூறுவது திட்டமிட்ட, கடைந்தெடுத்த பொய். உலக அனுபவங்களும், இந்தியப் பெருநிறுவனங்களால் சில்லரை நிறுவனங்கள் பெற்றுள்ள பட்டறிவுகளுமே இதற்குச் சான்று கூறும்.
சில்லரை வணிகம் என்பது நுகர்வோரிடம் நேரடியாக பொருள்களை விற்கும் கடைகளைக் குறிக்கும் இவ்வகை கடைகள் சிறுநிறுவனங்களாக இப்போது இருப்பதை வைத்துக்கொண்டு வர இருக்கிற வால் மார்ட்டும், டெஸ்கோவும், சிறிய கடைகளை திறக்கப் போவதாக கருத வேண்டியதில்லை. இந்நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து நுகர்வோரிடம் நேரடியாக பொருள்களை விற்பனை செய்கின்ற நிறுவனங்கள் என்ற வகையில் மட்டுமே சில்லரை வணிக நிறுவனங்களாகும். ஆனால் இவை சிறு நிறுவனங்கள் அல்ல.
தமிழ்நாட்டில் சுமார் 20 இலட்சம் சில்லரைக் கடைகள் உள்ளன. இவற்றில் கணிசமானவை அதை நடத்துகிற உரிமையாளர் தன் குடும்பத்தினர் உழைப்பில் நடத்துகிற சுய தொழில்களாகும். குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்து நடத்தப்படுகிற நிறுவனங்களே பெரும்பாலானவை ஆகும். அதிகம் போனால் 500 சதுர அடிப் பரப்பில் கடை வைத்துள்ள சில்லரை வணிகர்களே மிகப் பெரும்பாலோர் ஆவர். 100பேர் என்ற அளவில் பணியாளர்களை அமர்த்தி வணிகம் செய்யும் சில்லரை வணிகர்கள் மிகச்சிலரே ஆவர். இவ்வாறான சில்லரை வணிகம் சார்ந்து தமிழ்நாட்டில் ஏறத்தாழ 80 இலட்சம் பேர் பிழைக்கின்றனர்.
இந்தியா முழுமைக்கும் சில்லரை வணிகம் சார்ந்து வாழ்க்கை நடத்துவோர் 4 கோடி பேர் உள்ளனர். 100 பேருக்கு 1 கடை என்ற விகிதத்தில் சில்லரை விற்பனைக் கடைகள் விரிந்துள்ள நாடு இந்தியா.
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் அதிகம் மக்கள் சில்லரை வணிகத்தைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.
வால்மார்ட், டெஸ்கோ போன்ற சில்லரை வணிக நிறுவனங்கள் பல்லாயிரம் சதுரஅடி பரப்பில் அடுக்குமாடி வளாகம் அமைத்து வணிகம் செய்கிற நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் உலகநாடுகளில் சில்லரை வணிகர்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
வட அமெரிக்க அரசு 2009 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை ஒரு வால்மார்ட் கடை திறக்கப்பட்டால் 150 சில்லரைக் கடைகள் வெளியேற்றப்படுகின்றன; ஆண்டுக்கு 12 இலட்சம் டாலர் விற்பனை கைமாறுகிறது. எனக் கூறுகிறது.
சிலி நாட்டின் சாண்டியாகோ மாநகரத்தில் வால்மார்ட், டெஸ்கோ போன்ற பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டபிறகு 1991 – 1995 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் சிலி வணிகர்கள் நடத்திய 15,777 சில்லரைக் கடைகள் மூடப்பட்டன. அந்நாட்டின் பல்கலைக் கழகம் ஒன்று மேற்கொண்ட கள ஆய்வு இச்செய்தியை கூறுகிறது. அர்ஜெண்டினாவில் உணவுத்துறையில் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக 61000 சிறு உணவு விடுதிகள் மூடப்பட்டன் ஹாங்காங்கில் வெளிநாட்டுப் பெரு நிறுவனங்களின் நுழைவால் 30% மளிகைக் கடைகள் வெளியேற்றப்பட்டன.
தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் ஜெயத்தி கோஷ் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் ஒவ்வொரு வால்மார்ட் கடைத் திறக்கப்படும் போதும் 1400 சில்லரைக் கடைகள் மூடப்படுகின்றன; 5000 பேர் வேலை இழக்கின்றனர். என தெளிவாக்கி உள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பது தான் இப்போது நிகழ்கிறதே தவிர இந்தியப் பெரு முதலாளிகள் இங்குள்ள சில்லரை வணிகத்தில் காலூன்றுவது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதன் விளைவுகள் குறித்தும் ஆய்வுகள் உள்ளன.
மும்பை நகரத்தில் ரிலையன்ஸ், டாடா, பிர்லா, ரஹேஜா, போன்ற இந்தியப் பெரு முதலாளி நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் காலூன்றின. அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் அனுராதா கல்கான் இச்சிக்கல் குறித்து 2007 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினார். இதே பேராசிரியர் பெங்களூரில் பின்னலாடை சிறு தொழில்கள் மீது மேற்கண்ட பெரு நிறுவன சில்லரை வணிகம் ஏற்படுத்திய தாக்கத்தையும் 2009 ஆம் ஆண்டு ஆய்வு செய்தார்.
இவருடைய ஆய்வு முடிவுகள் சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் நுழைவு ஏற்படுத்தப்போகும் விளைவுகளை புரிந்துக் கொள்ள உதவும்.
பேராசிரியர் அனுராதா தள்ளுவண்டியில் வணிகம் செய்வோர் தொடங்கி 600 ச.அடியில் கடை நடத்துவோர் வரை உள்ள பல்துறை வணிகர்களை தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். ரிலையன்ஸ், பிர்லா போன்ற பெரு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நுழைந்த 3 ஆண்டுகளுக்குள்ளேயே மும்பையின் சில்லரை வணிகர்களில் 71 விழுக்காட்டினர் தங்கள் இலாபத்தில் 40 விழுக்காட்டை இழந்தனர். இன்னும் 10-15 விழுக்காடு இலாபம் குறையுமானால் கடை நடத்துவதில் பொருள் இல்லை என அவர்கள் கூறினர். மும்பை சில்லரை வணிகர்களில் 16 விழுக்காட்டினர் இந்த மூன்று ஆண்டுக்குள்ளேயே கடைகளை மூடிவிட்டனர். 36 விழுக்காட்டினர் தங்கள் விற்பனையில் பாதியை இழந்து மூடும் மனநிலையில் இருந்தனர். வெறும் 14 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் வருமானத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என அறிவித்தனர்.
பெங்களூரில் பின்னலாடைத் தொழிலில் பெரும் சில்லரை வணிகர்களின் தாக்கம் குறித்து பேராசிரியர் அனுராதா மேகொண்ட ஆய்வுகளும் இதே போன்ற முடிவுகளையே அறிவித்தன.
தில்லியில் பார்தி மிட்டல் நிறுவனத்துடன் வால்மார்ட் இணைந்து பார்தி – வால்மார்ட் என்ற பெயரில் வடிவம் கொண்ட பெரு நிறுவனத்தின் பாதிப்பை நவதானியா என்ற தொண்டு நிறுவனம் நடத்தும் வந்தனாசிவா கண்டறிந்து கூறினார். தில்லியின் சில்லரை வணிகர்களில் 45 விழுக்காட்டினர் தங்கள் விற்பனை பாதியாக குறைந்து விட்டதாக கூறினர். 30 ஆண்டுகளுக்கு மேலாக சில்லரை வணிகத்தில் ஊன்றியிருந்த தில்லி வணிகர்களில் 59 விழுக்காட்டினர் தொழிலை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தனர். கணிசமான சில்லரை வணிகர்கள் வணிகத்தில் தொடர்ந்து நீடிப்பதற்காக 14 மணிநேரம், 15 மணிநேரம் கடை நடத்துவதாக கலக்கத்துடன் கூறினர்.
ரிலையன்ஸ், பிர்லா போன்ற சில்லரை வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளே இவ்வாறு எனில் வால்மார்ட், டெஸ்கோ போன்ற மலைவிழுங்கி நிறுவனங்கள் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் கற்பனை செய்ய முடியாதவை.
இம்மண்ணின் சில்லரை வணிகர்களை முற்றிலும் துடைத்து அழிப்பதே விரைவில் நிகழ இருக்கிறது. பெரு வணிகர்கள் என்ற மிடுக்கோடு சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களில் வளைய வரும் தமிழ்நாட்டு வணிகர்களும் இத்தாக்குதலில் இருந்து தப்ப முடியாது.
இது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எவ்வளவுதான் பொய்யுரைத்தாலும் அவரது அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் மன்மோகனின் பொய்யை உடைத்துவிடுகிறது.
மாண்டேக் சிங் அலுவாலியா கடந்த 22.2.2012 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த விடையில் “மோட்டார் வந்ததற்குப் பிறகும் கை ரிக்‌ஷாவை வைத்துக்கொண்டு காலம் தள்ள வேண்டுமா?” என்று கேட்டார். பளபளக்கும் வால்மார்ட் வந்த பிறகு அழுக்கடைந்த அண்ணாச்சிக் கடைகள் எதற்கு என்பதே அவர் கேள்வியின் பொருள். இம்மண்ணின் சில்லரை வணிகர்கள் வால் மார்ட் வருகையால் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பதை அலுவாலியாவின் சொற்கள் உறுதி செய்கின்றன. எல்லோரும் விளையாட விரிந்த மைதானம் உள்ளது என மன்மோகன் சிங் சொல்வது பொய்யுரை ஆகும். மைதானத்திலிருந்து மண்ணின் விளையாட்டு வீரர்களை அப்புறப்படுத்தியே வால்மார்ட் அணி விளையாட இருக்கிறது.
பெப்சி, கோக் ஆகிய பெரு நிறுவனங்களின் நுழைவு காளிமார்க், வின்செண்ட், மாப்பிள்ளை விநாயகர் போன்ற பலநூறு நிறுவனங்களை வெளியேற்றியதை நாம் கண்டிருக்கிறோம். ஹிந்துஸ்தான் லீவரின் படையெடுப்பு உள்ளூர் ஐஸ்கிரீம் நிறுவனங்களை விழுங்கியதை நாம் அறிவோம். ஆலுக்காசும், டாடாவும் நுழைந்த பிறகு நகைத் தொழிலை இழந்தவர்கள் ஏராளம். மன்மோகன் சிங் பொய்யை நம்புவதற்கு தமிழர்கள் சிறு குழந்தைகள் அல்லர்.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்குக் கூறிய அடுத்த பொய்யாகும்.
இந்தியா முழுமைக்கும் சில்லரை வணிகத்தில் புழங்கும் முதலீடு ஏறத்தாழ 20 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த முதலீடு அளித்துள்ள வேலை வாய்ப்பு 4 கோடி ஆகும். வால்மார்ட் என்ற ஒற்றை நிறுவனத்தின் முதலீடும் கிட்டத்தட்ட இதே அளவுதான். ஆனால் உலகம் முழுவதும் உள்ள வால்மார்ட் கடைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 21 இலட்சம் பேர் தான். கணினி, தானியங்கிமயமான வால்மார்டில் சற்றுக் கூடுதல் சம்பளத்திற்கு வேலை கிடைக்கும். ஆனால் அவ்வாறு உருவாகும் வேலையின் எண்ணிக்கை இப்போதுள்ள சில்லரை வணிக வேலை வாய்ப்பில் 119 விழுக்காடு தான்.
வெளிநாட்டு அனுபவமும் இதையே உறுதி செய்கிறது. கடந்த 2011 இல் பிரிட்டன் அரசு வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுவதாவது : ”டெஸ்கோ கடை விரித்தப் போது 25000 பேருக்கு புதிதாக வேலை தருவோம் என்றார்கள். ஆனால் 2008 – 2010 ஆகிய இரண்டாண்டுக்குள் ஏற்கெனவே இருந்த 850 பணியாட்களை ஆட்குறைப்பு செய்ததுதான் நடந்தது”.
வால்மார்ட் தங்கள் கடைகளில் ஆட்குறைப்பு செய்வதும், பணியாற்றும் ஊழியர்களிடம் சட்ட விரோதமான முறையில் மிகை வேலை வாங்குவதும் உலகம் முழுவதும் சந்தி சிரிக்கிறது. பலநாடுகளில் நீதிமன்றங்கள் வால்மார்ட்டை கண்டித்துள்ளன, தண்டம் விதித்துள்ளன.
எனவே சில்லரை வணிகத்தில் வெளிநாட்டுப் பெரு நிறுவனங்கள் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பொய்யுரையாகும்.
மேற்கத்திய பெரு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் அனுமதிக்கப்படுவதால் விலை குறையும் என்றும், சேவை மேம்படும் என்றும் மன்மோகன் சிங் வாதாடுகிறார்.
இதுவும் பொய்யுரையே எனபதற்கு மேற்கத்திய நாடுகளின் அனுபவங்களே சான்று.
வட அமெரிக்க அரசின் வேண்டுகோளின் படி ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்ட கள ஆய்வு இதனைக் கூறுகிறது. அமெரிக்க நுகர்வோரில் 38 விழுக்காட்டினர் வால்மார்ட்டின் சேவை தரமற்றது என்றும் இவர்கள் முற்றுரிமை விலையில் (Monopoly Price) விற்கிறார்கள் என்றும் குற்றம் கூறினர். கள ஆய்வில் சாட்சியம் கூறிய நுகர்வோரில் 56 விழுக்காட்டினர் ”வால்மார்ட் அமெரிக்காவுக்கு ஒத்துவராது” (Bad for America) என்றனர்.
நியூயார்க்கில் வால்மார்ட் கடைத் தொடங்க முயன்ற போது உள்ளூர் நிர்வாகத்தாலயே அது விரட்டியடிக்கப்பட்டது என்பது அண்மைய செய்தி.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவும் வால்மார்ட், டெஸ்கோ குறித்து வலுவான எதிர்க் கருத்துகளை பதிவுசெய்துள்ளது.
இங்கு நுகர்வோர் என மன்மோகன் சிங்கும், உலகமயப் பொருளியல் வல்லுநர்களும் வரையறுப்பது தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதவருமானம் உள்ள 18இலட்சம் குடும்பத்தினரைதான். இந்தியா முழுவதும் இதுபோன்ற உயர் வருமானம் உள்ளோர் 2.5 கோடி குடும்பங்கள் மட்டுமே. இவர்களைக் கொண்ட உயர் நடுத்தர வர்க்க சந்தையையே இவர்கள் சந்தையாகப் பார்க்கின்றனர். நுகர்வோர் என்ற இவர்களது கணக்கில் வருவோர் இம்மக்கள் மட்டுமே. தமிழ்நாட்டில் வாழும் ஏனைய 5 கோடி பேர் இவர்களது கணக்கில் நுகர்வோர் என்ற வரையறுப்பின் கீழ் வராதவர்கள்.
உலகச் சந்தையில் கிடைக்கும் அத்தனை பொருள்களையும் துய்த்து துப்பி விட வேண்டும் என்ற நுகர்வு வெறி கொண்ட இந்த உயர் வருமானத்தினரையே சில்லரை வணிகத்தில் நுழையும் வால்மார்ட் , டெஸ்கோ போன்ற பெரு நிறுவனங்கள் குறி வைக்கின்றன. இந்தியாவில் உள்ள இந்த உயர் வருமானப் பிரிவின் மக்கள் தொகை பல வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமானது. இந்தச் சந்தையில் விற்பது மட்டுமே இவர்களால் இயலும்.
ஆயினும் இந்நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்கம் கீழ்நிலை வருமானம் பெறும் பெரும் பகுதி மக்களை தொழில் அற்றவர்களாக, வருமானம் பறிக்கப்பட்டவர்களாக மாற்றிவிடும்.
இருந்தபோதிலும் இம்மக்களுக்கு அவ்வப்போது இலவசங்கள் வழங்கி அவர்களை வாக்காளர்களாகத் தக்கவைத்து கொள்வதே இந்திய சன்நாயகத்திற்குப் போதுமானது.
‘சில்லரை வணிகத்தில் அயல் நாட்டுப் பெரு நிறுவனங்கள் நுழைவதால் இடைத் தரகர்கள் நீக்கப்பட்டு உழவர்களும், சிறுதொழில் முனைவோரும் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கு கூடுதல் விலை பெற வாய்ப்பு ஏற்படும். வேளாண்மையும், சிறுதொழிலும் இலாபகரமான தொழிலாக மாறும்’ என்பது மன்மோகன் சிங்கின் இன்னொரு வாதமாகும்.
வால்மார்ட்டும், டெஸ்கோவும், கேர்ஃபோர்ரும் சில்லரை வணிகத்தில் கோலோச்சுகிற மேற்குலக நாடுகளில் தான் உலகிலேயே அதிகமான வேளாண் மானியம் வழங்கப்படுகிறது. பச்சை பெட்டி (Green Box) , பழுப்பு பெட்டி (Brown Box) என்ற பலபெயர்களில் அளிக்கப்படுகிற வேளாண் மானியங்கள் நிறுத்தப்பட்டால் அந்நாடுகளின் வேளாண் பண்ணைகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழும் என்பதை அந்நாட்டு அரசுகளும் ஐ.நா நிறுவனங்களின் ஆய்வும் பலமுறை எடுத்துக்காட்டிவிட்ட உண்மையாகும். அங்கெல்லாம் சில்லரை வணிகத்தில் நிலைத்துவிட்ட வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் வேளாண்மையை இலாபகரமானதாக மாற்றிவிடவில்லை.
வட அமெரிக்காவில் பால் உற்பத்தியாளர்கள் வால்மார்ட் நுழைவதற்கு முன்னால் சந்தை விலையில் 70 விழுக்காடு தொகையை கொள்முதல் விலையாகப் பெற்றனர். ஆனால் வால்மார்ட் இவர்களது பாலை வாங்கி விற்கத் தொடங்கிய பிறகு சந்தை விலையில் 30 விழுக்காடு மட்டுமே பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையாகப் பெறுகிறார்கள். அமெரிக்க அரசின் ஆய்வு எடுத்துகாட்டும் உண்மை இது. அதேபோல் வேளாண் உற்பத்தியாளர்களும் சந்தை விலையில் 38 விழுக்காடு மட்டுமே தங்களது விளைபொருள்களுக்கு விலையாகப் பெறுகிறார்கள்.
வெளித்தோற்றத்தில் விளைப்பொருள் கொள்முதலில் இடைத்தரகர்கள் நீக்கப்பட்டது போன்று தெரியும். உண்மையில் இந்த இடைத் தரகர் பணிகளை வெவ்வேறு பெயர்களில் வால்மார்ட்டே செய்து கொள்கிறது. தர நிர்ணய முகமை, தரக்கட்டுபாடு நிறுவனம், பதப்படுத்துதல் நிறுவனம் என்று பல இடைக்கட்டங்களில் வால்மார்ட்டே இடைத்தரகராக செயல்படுகிறது. உண்மையில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பெறும் இடைத் தொகையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே உற்பத்தியாளர்கள் பெறுகிற தொகையின் விகிதம் குறைந்து காணப்படுகிறது.
சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கும் இதே நிலைதான்.
இது மேற்குலக நாடுகளில் பெரும் சிக்கலாக அடிக்கடி வெளிப்பட்டு அரசுகளுக்கு புகார்கள் எழுந்தன. அரசுகளும் விசாரணை நடத்தி அறிக்கைகள் அளித்துள்ளன.
பிரிட்டனின் போட்டி கண்காணிப்பு ஆணையம் (Competition Commision Of UK) டெஸ்கோ பற்றி கீழ்வருமாறு கூறுகிறது.
“சில்லரை வணிகத்தில் உள்ள இந்நிறுவனங்கள் மிகை இலாபம் பெற முயல்கின்றன. இடுபொருள் குறித்தும் உற்பத்தி பொருள் குறித்தும் கடும் கட்டுபாடுகளை விதிக்கின்றன. அளவுக்கு மீறி கொள்முதல் விலையைக் குறைக்கின்றன. நேரந்தவறிய வழங்கல் என தள்ளுபடி செய்வதன் மூலம் உற்பத்தியாளர்களை நிரந்தர அச்சத்தில் வைக்கின்றன. வேளாண் பண்ணைகளும், சிறு தொழில்களும் அழுத்தத்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. குறைந்த நேரத்தில், குறைந்த இலாபத்தில் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுவதால் சிறுதொழிலகளும் பண்ணைகளும் தங்களது தொழிலாளர்களை மிகை வேகத்தில், மிகை நேரம் பணியாற்ற வலியுறுத்துகின்றன. தொழிலாளர் சட்டங்கள் காற்றில் விடப்படுகின்றன. தங்களது சந்தை வாய்ப்பையும் தாண்டி கூடுதல் அளவு வழங்கல் கிடைக்கும் அளவுக்கு சிறு தொழில்களையும் , பண்ணைகளையும் சில்லரை வணிக நிறுவனங்கள் பதிவு செய்துகொள்கின்றன. ஒன்றைக்காட்டி இன்னொன்றுக்கு கொள்முதல் விலையைக் குறைக்கின்றன. எனவே சிறு தொழில் உற்பத்தியாளர்களும் வேளாண் பண்ணைகளும் தங்கள் விளை பொருள்களை போட்டிப் போட்டுக்கொண்டு குறைந்த விலைக்கு கொடுக்க முன்வருகின்றன. அதற்கு இசைய தங்களது உற்பத்திச் செலவை குறைப்பதற்காக பெண்களையும், இடம்பெயர் தொழிலாளர்களையும் அமர்த்திக்கொள்கின்றன.”
இங்கிலாந்திலேயே இதுதான் நிலைமை என்றால் கீழிருந்து மேல் வரை ஊழல் மலிந்து எளிதாக சட்டங்கள் வளைக்கப்படுகிற தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்படவிருக்கும் கேடுகளைக் கற்பனை செய்யவே முடியாது. அதுவும் வலுவற்ற சிறு உழவர்களும், சிறு தொழில் முனைவோரும் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் சில்லரை வணிகத்தில் நுழையும் அயல் நாட்டுப் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மிகப்பெரும் குலைவை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.
இப்பெரு நிறுவனங்கள் முன்தொகை கொடுத்து உழவர்களையும், சிறுதொழில் முனைவோரையும் ஒப்பந்த உற்பத்தியாளராக பதிவுச் செய்து கொண்டு நடைமுறையில் அவர்களை கொத்தடிமை போல் நடத்தும். தரம், நேரம் தவறாமை, விலை என்ற பலமுனைகளிலும் உழவர்களும், உற்பத்தியாளர்களும் கொடும்தாக்குதலுக்கு உள்ளாவார்கள். அதுவும் மண்ணின் சில்லரை வணிகர்கள் களத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதற்குப் பிறகு வால்மார்ட், டெஸ்கோ போன்றவற்றின் சந்தை முற்றுரிமை நிலைநாட்டப்பட்டதற்குப் பிறகு இந்நிறுவனங்கள் வைத்ததே சட்டம் என்றாகிவிடும். உழவர்களும் சிறு உற்பத்தியாளர்களும் தங்கள் உற்பத்திப் பொருள்களை தாங்கள் நேரடியாக சந்தைப்படுத்தவும் முடியாது. இப்பெரு நிறுவனங்களை விட்டால் தங்கள் பொருள்களை விற்பதற்கு வேறு இடமும் கிடையாது என்ற நிலை ஏற்படும் போது இவர்கள் புழு, பூச்சிகளாக நடத்தப்படுவார்கள்.
 வால்மார்ட் , டெஸ்கோ போன்றவை தாங்கள் எங்கு கடை நடத்தினாலும் அதற்கு உலகம் முழுவதுமிருந்து எங்கு குறைந்த விலைக்கு உற்பத்தி பொருள் கிடைக்குமோ அந்நாடுகளிலிருந்து கொள்முதல் செய்து விற்பதை நடைமுறையாகக் கொண்டுள்ளன.
இப்போதே சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்தியச் சந்தையில் பொருள்கள் கிடைப்பதால் சிறு தொழில்கள் நலிந்து வருவதை பார்க்கிறோம். வால்மார்ட் நுழைந்தால் இந்தப்போக்கு பலமடங்கு தீவிரப்படும்.
மன்மோகன் சிங் சொல்வது போல் உழவர்களும், சிறு உற்பத்தியாளர்களும் இப்போது உள்ளதை விட இலாபகரமானதாக தங்கள் தொழில்களை நடத்துவதற்கு வால்மார்ட் மூலம் வழி கிடைத்துவிடாது.
தற்போதுள்ள இந்தியாவின் பொருளியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்தக்கடுமையான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மன்மோகன் சிங் கூறினார். 1991 இல் தான் நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது இருந்த பொருளியல் நெருக்கடி நிலை மீண்டும் இப்போது நிலவுவதாகக் கூறிய அவர் ”இதைச் சமாளிப்பதற்கு பணம் தேவை, அந்தப் பணம் மரத்தில் காய்க்கவில்லை; வெளிநாட்டு முதலீடுகள் வழியாகத்தான் அது கிடைக்கும். வெளிநாட்டு முதலாளிகள் நம்பும் அளவிற்கு தொழில் சூழலை உருவாக்க வேண்டும். அதற்காகவே சில்லரை வணிகத்தில் அயல் நாட்டு நேரடி முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.” என்றார்.
அதாவது வெளிநாட்டு முதலாளிகளின் நம்பிக்கையைப் பெறுவத்ற்காக உள்நாட்டு சில்லரை வணிகர்களும், உழவர்களும், சிறு உற்பத்தியாளர்களும் நசுங்க வேண்டும் என்பதே மன்மோகன் சிங்கின் வாதம். உண்மையில் மன்மோகன் சிங் கூறுவது போல் அயல்நாட்டு பணம் இந்தியக் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போவதுமில்லை.
இதற்கு முன்னால் ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகத்தில் நேரடி அயல் நாட்டு முதலீட்டை அனுமதிப்பதென தில்லி அரசு முடிவு செய்தபோதும் இதே பசையை தான் மன்மோகன் சிங் அன்றைக்கும் காட்டினார். 40 ஆயிரம் கோடி டாலர் அயல் முதலீடு வரும் என நம்பிக்கை கூறினார். அவ்வாறு அவர் அனுமதித்து 5 ஆண்டு ஆகிவிட்டது. இந்த ஐந்தாண்டுகளில் அயல் முதலீடு 4 கோடி டாலரைக் கூட தொடவில்லை.
ஏனெனில் இன்றைய முதலாளியப் பொருளியல் நெருக்கடி அந்த நிலையில் உள்ளது. இச்சூழலில் மக்களை நசுக்கி சில்லரை வணிகத்தின் வாயிலாக அயல் முதலீட்டை ஈர்ப்பது என்பது முட்டுச்சந்தில் இந்தியப் பொருளியலை நிறுத்துமேயன்றி மீட்க உதவாது.
1991 முதல் தான் கடைபிடித்து வந்த திறந்த பொருளியல் கொள்கை நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றதாகவும் அதை வேகப்படுத்தவே இம்முடிவை எடுத்திருப்பதாகவும் மன்மோகன் சிங் கூறிக்கொண்டார். உண்மையில் இதுநாள்வரை அரசுத்துறை நிறுவனங்கள் என்ற வடிவில் கட்டி எழுப்பப்பட்ட அரசின் சொத்துக்கள் ஒவ்வொன்றாக விற்பதன் மூலம் நிதியைத் திரட்டி, அன்றன்றைக்கு ஏற்படும் பொருளியல் தேவைகளை நிறைவு செய்து கொண்டு, பிரச்சினையை தள்ளிப்போட்டு வந்த உத்தியைத் தான் அவர் கடைபிடித்து வந்தார். அது மேலும் மேலும் சிக்கலை ஆழப்படுத்தி வந்திருக்கிறதே தவிர மீட்டு விட வில்லை.
இந்தியப் பொருளியலின் வளர்ச்சி விகிதம் 2010 – 2011 இல் 8.4 விழுக்காடு GDP ஆக இருந்தது. 2011 – 2012 6.5 விழுக்காடாக குறைந்தது. 2012-13 நிதியாண்டில் முதல் காலாண்டில் இது இன்னும் கீழிறங்கி 5.5 விழுக்காடாக தாழ்ந்துள்ளது. இதிலும் உற்பத்தி துறை வளர்ச்சி நின்று போய் -3.2 விழுக்காடு என்ற அளவில் தேய்மானம் அடைந்து வருகிறது.
இதுவரை இந்திய அரசு பின்பற்றி வந்த தாராளமயப் பொருளியலின் தவிர்க்க முடியாத விளைவு இது.
இந்தப் பாதையில் மன்மோகன் சிங் சொல்லும் பொருளியல் வளர்ச்சி மூன்று அடிப்படைகளை கொண்டு இயங்கியது.
1. ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி. இது இன்று தேங்கியுள்ளது.ஏனெனில் 2008 இல் தொடங்கிய மேற்குலக நாடுகளின் பொருளியல் தேக்க நிலை ஒரு நீடித்த மந்தமாக நிலைபெற்றுவிட்டது. அந்நாடுகளுக்கு சென்ற ஏற்றுமதிகள் நின்று விட்டன. அந்நாடுகளின் பன்னாட்டு முதலாளிகள் இந்தியாவில் செய்திருந்த முதலீடுகளைத் திரும்பப் பெற்று டாலராக மாற்றி தங்களை நிலைப்படுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் அயல் செலாவணி கையிருப்பு குறைந்து ரூபாய் மதிப்பும் சரிந்தது.
2. வந்த வெளிநாட்டு மூலதனங்கள் பெரும்பாலும், மனைத்தொழிலிலும் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டன. இது செயற்கையாக அவற்றின் மதிப்பை ஊதி பெருக்கச்செய்து ஒரு பொய் தோற்றப் பொருளியலை நிலைநிறுத்தின. இது ஏற்கெனவே மேற்குலகம் சென்ற பாதைதான். இதற்கான மூலதனமும் கடன் மூலதனம் தான். 2008 இல் ஒரு நீர்க்குமிழி போல் உடைந்து மேற்குலக நாடுகளை நிலை குலையச் செய்த பாதை இது. புதிதாக உண்மையான செல்வத்தை உற்பத்தி செய்யாமல், இருப்பதையே செயற்கையாக ஊதிக்காட்டுகிற கண்கட்டி வித்தை இது. இது இந்தியப் பொருளியலின் நிலைத் தன்மைக்கு உதவாது.
3. அடுத்தது உயர் வருமான பிரிவினரின் நுகர்வு பொருள்களை உற்பத்தி செய்கிற வளர்ச்சி முறை. இன்று அது நெருக்கடிகளை சந்திக்க தொடங்கி விட்டது. வெளிநாட்டு சந்தையை சார்ந்து திடீர் வளர்ச்சி பெற்ற தகவல் தொழில் நுட்பத் துறை, கடன் நிதிக் குமிழியில் தோற்றமெடுத்த மனைத் தொழில் ஆகியவற்றை சார்ந்த உயர் சம்பள பிரிவினரை சார்ந்து வளர்ந்த நுகர்வு பொருள் உற்பத்தி துறையாகும் இது. சேமிப்பில் பொருள் வாங்குவதற்குப் பதில், பொருள் வாங்கிய பின் பணம் செலுத்துகிற கடன் அட்டைப் பொருளியல் இது. தகவல் தொழில்நுட்பம் துறையில் வெளிநாட்டு பணிகள் சுருங்கி விட்டதால் இந்த உயர் சம்பள பிரிவினரிடையே வேலை இழப்பும், ஊதியத் தேக்கமும், உண்மை ஊதிய அரிப்பும் ஏற்பட்டு வருகிறது.
மனைத் தொழிலிலும் இதே நிலை தொடங்கிவிட்டது. இதைச் சார்ந்த நுகர்வு தொழில் வளர்ச்சியும் குறைந்து வருகிறது.
2008 இல் மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட குலைவு இந்தியாவை அதே அளவு தாக்காமல் இருந்ததற்கு அடிப்படை காரணம் இந்தியா சிறு தொழில்களையும், சில்லரை வணிகத்தையும் கடனட்டையில் பொருள் வாங்காமல் சேமிப்பில் பொருள் சேர்க்கும் பண்பாட்டையும் சார்ந்திருந்ததேயாகும். இது அதிர்வு தாங்கியாக செயல்பட்டு காத்தது.
சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்த வலுவான அதிர்வு தாங்கிகளில் ஒன்றை அழிக்க முனைகிறார் மன்மோகன் சிங். மேற்குலகம் எதில் தோற்றதோ அதே பாதையில் இந்தியாவை இறக்கிவிடுகிறார் மன்மோகன் சிங்.
சில்லரை வணிகத்தில் அயல் நாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கூறும் எந்தக் காரணமும் ஏற்புடையதல்ல. இம்முடிவை இந்திய அரசு திரும்பப் பெறும் வரை விடாமல் போராடுவதே மக்களுக்கான தற்காப்புப் பாதையாகும்.
- கி.வெங்கட்ராமன்

0 கருத்துகள்:

தமிழ்நாட்டின் மீது உயர்ந்து வரும் நிதித் தாக்குதல் - தோழர் கி.வெங்கட்ராமன்

இந்திய ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டின் மீது தனது பொருளியல் தாக்குதலை வேகப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து வரி வருவாயை கொள்ளையடித்துச் செல்லும் தில்லி ஏகாதிபத்தியம், தமிழகத்தின் மீது புதுப்புது நிதிச்சுமைகளை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் இந்திய அரசு மானிய விலை எரிவளி உருளைகளுக்கு வரம்பு கட்டி அறிவித்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6உருளைகள் தான் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்தது. இதைப் பல்வேறு கட்சிகளும், மாநில அரசுகளும் எதிர்த்தன. தமிழக அரசும் எதிர்த்தது. 6 உருளைகளுக்கு மேல் மக்களுக்கு மானிய விலையில் எரிவளியை தர விரும்பும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்கள் சொந்த பொறுப்பில் கூடுதல் மானியம் வழங்கி இதற்கு மேல் எண்ணிக்கையில் எரிவளி உருளைகளை வழங்கிக் கொள்ளட்டும் என இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திமிர் வாதம் பேசினார்.
இப்போது நியாய விலைக்கடைகளில் வழங்குவதற்காக இதுவரை தில்லி அரசு அளித்து வந்த துவரம் பருப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. ஏற்கெனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானிய விலை துவரம் பருப்பின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு மாதத்திற்கு 2 ஆயிரம் டன் என்ற அளவில் குறுக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல் வேறு பருப்பு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட்டதும் நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு இந்திய அரசு வழங்கி வரும் சர்க்கரையின் மானியமும் கிட்டத்தட்ட முழுவதுமாக நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இது உண்மையென்றால் தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ரூபாய் 23 என்ற அளவிற்கு உயரும் ஆபத்து உள்ளது. இது இப்போதைய நியாய விலைக்கடை விலையை விட 80 விழுக்காடு அதிகம் ஆகும்.
இந்த விலையேற்றங்களையெல்லாம் மக்கள் மீது சுமத்தாமல் தமிழக அரசே ஏற்பதென்றால் ஆண்டுக்கு ஏறத்தாழ் 700 கோடி ரூபாய் நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்க வேண்டி வரும்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பே தமிழக நியாய விலைக் கடைகளுக்கு இந்திய அரசு அளித்து வந்த மானிய விலை மண்ணெண்ணெய் ஆண்டுக்கு 59,780 கிலோ லிட்டரிலிருந்து 44,580 கிலோ லிட்டராகக் கடுமையாக வெட்டப்பட்டது. அதேபோல் தமிழகத்திற்கு இந்திய அரசு அளித்து வந்த வரிப்பங்கீடும் குறுக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி (Central Excise Duty) கடந்த ஆண்டு 9376 கோடி ரூபாயாக இருந்தது. சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி, செல்வ வரி, ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தில்லி அரசு தமிழ்நாட்டில் திரட்டிய சேவை வரி கடந்த ஆண்டில் 5594 கோடி ரூபாய்.
ஆக மொத்தம் கடந்த நிதியாண்டில் இந்திய ஏகாதிபத்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து அள்ளிச் சென்ற வரி வருமானம் 79,631 கோடி ரூபாய் ஆகும். ஆனால் தமிழகத்திற்கு அளித்த வரி வருவாய்ப் பங்கீடோ வெறும் 13,100 கோடி ரூபாய் மட்டுமே. நிலவும் பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் உண்மையளவில் (Real Terms) தமிழகத்தின் வரிப் பங்கீடு கடந்த நிதியாண்டை விட 7 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்கும் மேல் தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைத்துக் கொண்டு தன் சொந்த பொறுப்பில் தமிழ்நாட்டில் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், தன் சொந்த நிதியிலிருந்து மானியத்தை அதிகரித்து எரிவளி உருளைகளை மக்களுக்கு வழங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தில்லி அரசு நிர்ப்பந்திக்கிறது.
இது தவிர மின் வாரியங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை இந்த ஆண்டோடு நிறுத்தி விடப் போவதாகவும், இனிமேல் ஆண்டுதோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்றும் தில்லி அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே வகைத்தொகையின்றி தமிழகத்தின் கனி வளங்களையும் கடல் வளங்களையும், எண்ணெய் வளங்களையும் அள்ளிச்செல்லும் தில்லி ஏகாதிபத்தியம் தமிழகத்தின் மீது தொடுத்துள்ள நிதித் தாக்குதல் கொடும் உயர் அளவை இப்போது எட்டியுள்ளது. இந்தியாவின் காலனியாக தமிழ்நாடு நீடிப்பதால் இக்கொடுமை தொடர்கிறது.
ஆயினும் இன்றைய இந்தியக் கட்டமைப்புக்குள்ளேயே தமிழக அரசு பதிலடி நடவடிக்கையில் இறங்கினால் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இந்த நிதித்தாக்குதலை ஓரளவாவது தடுத்து நிறுத்த முடியும்.
”தமிழக அரசு நிறுவனங்களான போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், டாமின், ஆவின், உள்ளிட்டவை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிறுவன வருமான வரியை செலுத்த மாட்டோம்” எனத் தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தலாம். அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட பிற நிதி இனங்களை பிடித்தம் செய்து தர மறுக்கலாம்.
இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட முடியாமல் தற்காலிகமாக முடக்கி வைக்கலாம்.
இதைவிடுத்து முதலமைச்சர் செயலலிதா விடுக்கும் வெற்று ஆரவார கண்டனக் கடிதங்களால் பயன் ஏதும் விளையப் போவதில்லை. கடைசியில் இந்திய அரசு வஞ்சித்துவிட்டது, தி.மு.க காட்டி கொடுத்துவிட்டது என கண்டன அறிக்கைகள் கொடுத்துவிட்டு அத்தனை நிதிச்சுமையையும் தமிழக மக்கள் மீது சுமத்துவதில் முடியும்.

0 கருத்துகள்: