கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் மாய்மாலக் கணக்குகளில் ஒளிந்துள்ள மக்கள் பகைத் திட்டம் - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

உண்மை நிலையைச் சொல்வது போன்ற பாவனையில் பித்தலாட்டங்கள், அறிவார்ந்த மேற்கோள்களுக்கு அடியில் இழிவான நோக்கம், மாய்மாலக் கணக்குகளில் பதுங்கி இருக்கும் மக்கள் பகைத்திட்டம் – இதுவே ப.சிதம்பரம் முன் வைத்துள்ள வரவு -செலவுத் திட்டம்.
நாடாளுமனற மக்களவையில் 28-02-2013 அன்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்த இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் 2013 – 2014, வளர்ச்சி நோக்கிய  நிதித் திட்டம் என்று மன்மோகன்சிங் மட்டுமே பாராட்ட முடியும். பன்னாட்டு பெரு நிறுவனங்கள் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும்.
நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னாலேயே தனித்தனி அறிவிப்புகள் மூலம் மக்கள் மீது நிதிச் சுமைகளை ஏற்றுவது அண்மைக்காலமாக வழக்கமாகிவிட்ட ஒன்று. இந்த வரவு செலவு திட்டத்திற்கு முன்பாகவே பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தபட்டுவிட்டன. மண்ணெண்ணெய் அளவு வெட்டப்பட்டுவிட்டது. மானியவிலை எரிவளி உருளைகளுக்கு வரம்புகட்டப்பட்டுவிட்டது. இதற்கு முதல் நாள் முன்வைக்கப்பட்ட தொடர்வண்டி வரவு செலவு அறிக்கையில் சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. ஆறு மாதத்துக்கு ஒருமுறை பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திக்கொள்ள நிரந்தர ஏற்பாடும் செய்யப்பட்டுவிட்டது.
பட்ஜெட் அறிவித்த மறுநாள்(01.03.2013) அன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இவைபோன்ற தில்லி அரசின் கொள்கைகளால் ஏற்கெனவே பண வீக்கமும், விலை உயர்வும் மக்களை அழுத்திவருகின்றன. இதற்குமேல் ப.சிதம்பரம் மக்களுக்கான மானியச் செலவுகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் கடுமையாகக் குறைத்துவிட்டார். வேளாண்மை மற்றும் சமூக நல மானியங்கள் சென்ற ஆண்டை ஒப்பிட 26,571 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எரி எண்ணெய் மானியம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.  உணவு மானியத்துக்கு சென்ற ஆண்டை விட கூடுதலாக குறைந்தது 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என இதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ள  நிலையில் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.  பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் இதுவும் குறையும்.
இவை அனைத்தும் விலை உயர்வை இன்னும் அதிகரிக்கும்.
சென்ற வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் போது கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 5,21,25,000 கோடிரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் மேற்கண்ட திட்ட மதிப்பீடு திருத்திய மதிப்பீட்டில் 4,29,1840 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு திட்ட செலவுகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் வழியாக செயல்படுத்தப்படுபவை ஆகும். நிதிவரவை நம்பி மாநில அரசுகள் பல நலத்திட்டங்களுக்கு செலவு செய்துவிட்டன. இந்நிலையில் திருத்திய மதிப்பீட்டில் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக அறிவிக்கப்பட்டால் மாநில அரசுகள் இக்கட்டான நிலையில் வைக்கப்படும்.
இந்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நம்ப முடியாத பித்தலாட்டமாக இழிந்துவிட்டதை இது எடுத்துக்காட்டுகிறது. 
ப.சிதம்பரம் விதித்துள்ள வரியினங்கள் பெரும்பாலும்  மேல்வரி (சர் சார்ஜ்), சேவை வரி போன்றவையே ஆகும். இந்த வரி வருமானத்தில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டியதில்லை. எனவே மாநில வரிப் பங்கு உயர வாய்ப்பில்லை  மாறாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் மாநிலங்களுக்கான வரி வருமானப் பங்கு 8000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  பல தலைப்புகளில் மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கி வந்த நிதித்தொகை 38,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.
வேளாண்மைக்கு சென்ற நிதியாண்டைவிட 1.25 இலட்சம் கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து 7 இலட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக வாண வேடிக்கை காட்டப்பட்டுள்ளது.   வரவு - செலவு திட்டத்தில் இதற்கென்று ஒரு ரூபாய் கூட  ஒதுக்கப்படவில்லை. இது அரசு வங்கிகளுக்கான வழிகாட்டல் இலக்கே தவிர வேறொன்றுமில்லை.
கடந்த 2007-க்குப் பிறகு ’வேளாண்மை’ என்ற வகையினத்துக்குள் வேளாண்மைக்கு மறைமுகமாகத் துணை செய்பவை என்ற பெயரால் உணவுப் பதப்படுத்துதல், உரம், நீர் மோட்டார்கள், உழவு எந்திரங்கள், விதை உற்ப்பத்தி போன்ற பலத்தொழில்களும் கொண்டுவரப்பட்டுவிட்டன.
இத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் வேளாண்மைக் கடன் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப் படுகிறது. உழவர்கள் பெயரால் இம்பீரியல் டொபாக்கோ, இந்துஸ்தான் லீவர், கிரிலோஸ்கர், மகிந்திரா, பைசர், மான்சாண்டோ ஆகிய பெரு நிறுவனங்களுக்கும், அவற்றின் துணை நிறுவனங்களுக்கும் மக்களின் சேமிப்புப் பணம் சலுகைக் கடனாக வழங்கப்படுகிறது.
அரசுடைமை வங்கிகளின் வேளாண் கடன் விவரங்களை உற்று நோக்கினால் இது புரியும். 
கடந்த 20 ஆண்டுகளில் அரசு வங்கிகளின் கிராமப்புற கிளைகள் வழங்கிய வேளாண்மைக் கடன் அவ்வங்கிகளின் மொத்தக் கடன் வழங்கலில் 55 விழுக்காட்டிலிருந்து 38.4 விழுக்காடாக குறைந்துள்ளது.   மாறாக நகரங்களிலும், பெரு நகரங்களிலும் உள்ள அரசு வங்கிக் கிளைகளில் பெறப்பட்டுள்ள வேளாண்மைக்கடன் இதே கால இடைவெளியில் 4 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.
வேளாண்மைக் கடன் என்ற பெயரால் 2 இலட்சத்திற்கு மேல் 25 கோடி ரூபாய்வரை கடன் பெற்றுள்ளவர்கள் விழுக்காடே உயர்ந்துவருகிறது.  எடுத்துகாட்டாக கடந்த 20 ஆண்டுகளில் 2 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளவர்களுக்கு கடன்வழங்கல் தொகை 83 விழுக்காட்டிலிருந்து 44 விழுக்காடாக சரிந்துள்ளது. இதுதான் உண்மையில் உழவர்கள் பெற்ற பயிர்க் கடனாகும். உழவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கல் குறைந்து வரும் அதே காலத்தில் வேளாண்மைக் கடன் என்றப் பெயரால் 25 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோருக்கான கடன் வழங்கல் விழுக்காடு 5% லிருந்து 18 % ஆக உயர்ந்துள்ளது.
இது தாராள மயமாக்கலுக்குப் பிறகு படிப்படியாக வளர்ந்து வரும் போக்காகும். இதுபற்றி ஆய்வறிக்கைகளை மேற்கோள்காட்டி அவ்வப்போது சுட்டிக்காட்டிவருகிறோம். (எ.கா: காண்க: எதிர்க்கப்பட வேண்டிய வரவு செலவுத்திட்டம் – கி.வெங்கட்ராமன் , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மார்ச் 16 – 31, 2011 இதழ்)  
அரசுத்துறை நிறுவன பங்குகளை தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையே வரும் நிதியாண்டில் வருவாயைத் திரட்ட  முதன்மையான வழியாக ப.சிதம்பரத்தின் வரவு செலவுத் திட்டம் கூறுகிறது. இவ்வாறு வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.   பாட்டன் சேர்த்த சொத்தை விற்று செலவு செய்யும் நாட்டுப்புற சோக்காளிகளின் ஊதாரித்தனத்துக்கு பெரிய பொருளியல் திட்டம் போன்ற ஒப்பனை செய்யப்படுகிறது.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு பத்து விழுக்காடு மேல் வரி போடப்பட்டுள்ளது. பணக்காரர்கள் மேல் வரிவிதித்து அத்தொகையை ஏழைகளுக்கு செலவு செய்யும்  ஆகப்பெரிய மக்கள் நலத்திட்டம் போல் இதனை காங்கிரசு தலைமை புகழ்ந்து தள்ளுகிறது.
ஆனால், இந்த வரவு செலவுத்திட்டத்தில் மட்டும் இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய  மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை 5,73,630 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு பெரும் தொகையை  பெருமுதலாளிகளுக்கு வரிகுறைப்பாக வாரி வழங்கிவிட்டு நிதிப் பற்றாக்குறை இந்திய அரசை நிமிர முடியாமல் அழுத்துவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் புலம்புகிறார்.
அவர் கூறுகிற நிதிப்பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டின்படி 5,20,925 கோடி ரூபாய் ஆகும். பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட மேற்கூறிய வரிச்சலுகையை விட இந்த நிதிப் பற்றாக்குறை குறைவானது. அதாவது பெருமுதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காகவே  நிதிப்பற்றாக்குறையை இந்திய அரசு சுமக்கிறது. இந்த சுமையை அப்படியே மக்கள் மீதும், மாநிலங்கள் மீதும் இறக்கிவிடுகிறது.
இந்த மக்கள் பகைத்திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு மாய்மாலக் கணக்குகளைக் காட்டி மக்கள் கண்ணில் மண் தூவ முயல்கிறார் ப.சிதம்பரம்.
இவண்,
கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

0 கருத்துகள்:

பிப்ரவரி 23 திருவாரூர், அடியக்க மங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறு முற்றுகை - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு.

 
காவிரி மீட்க கட்சி கடந்து களம் காண்போம் !
-    மயிலாடுதுறை பொதுக் கூட்டத்தில்  தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு.

தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் ”இனி என்ன செய்யப் போகிறோம் ?” விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம் 06-02-2013 மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் நடைபெற்றது.  
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டததுக்கு தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் இரா.முரளிதரன் தலைமைத் தாங்கினார்.   ச.ஞானசேகரன் (மாநில தலைவர், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை), எஸ்.என்.சேகர் (நாகை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கம்) கோ.திருநாவுக்கரசு (தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்),  எழிலன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), ப.பெரியார் செல்வம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), இரா.இளங்கோவன் (நாம் தமிழர் கட்சி), எஸ், கார்திகேயன் (மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர இளைஞர் கழகம் ) ப.சுகுமாறன் (மாநில துணைச் செயலாளர், குறளரசுக் கழகம்) த.பன்னீர் செல்வம் ( நகர செயலாளர், ம.தி.மு.க ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

”தமிழக மின்வெட்டும் மின் கட்டண உயர்வும்” என்பது குறித்து தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி அவர்களும்,   “சில்லரை வணிகத்தில் நேரடி அயல் முதலீடு” குறித்து  முனைவர் த.செயராமன் அவர்களும் சிறப்புரையாற்றினர். காவிரி நீர் சிக்கல் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தோழர் கி.வெங்கட்ராமன் பேசும்போது “ காவிரி தீர்ப்பாயம் ஆணையிட்டும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியும் கூட ஒரு சொட்டு தண்ணீரும் தர முடியாது என கர்நாடகம் கொக்கரிக்கிறது.  இந்திய அரசின் வலுவான துணையோடு காவிரி உரிமையை கர்நாடகம் மறுத்துள்ளது. காவிரி சிக்கல் வெறும் தண்ணீர் பிரச்சினையல்ல, அது அடிப்படையில் ஒரு இனப் பிரச்சினை. தமிழினத்தின் மீதான ஆரிய இந்தியத்தின் இனப்பகை அரசியலின் வெளிப்பாடு இது.
இதனை வெறும் தண்ணீர் பகிர்வுப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் இதிலுள்ள இனப்பகையை நாம் புரிந்து கொண்டால் தான் காவிரியை மீட்க முடியும். பொருளாதரத்தின் இன்றியமையாத கூறு நீர் வளம். தமிழகத்தின் உயிர் நீரான காவிரியைத் தடுத்து தமிழகத்தின் மீது  கர்நாடகம் பொருளாதார தடையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு அதற்குத் துணைபோகிறது.

காவிரி உரிமை மறுக்கும் இந்திய, கர்நாடகம் அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் போராட்டத்தில் தமிழர்கள் இறங்கவேண்டும். தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் பாதைகளை மூடி பொருளாதார தடை ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து மட்டும் நாள்தோறும் கர்நாடகத்துக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது. கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக மின்சாரத்தை நிறுத்த வேண்டும். இலங்கையில் சிங்கள அரசோடு கை கோத்து தமிழினத்தைக் கொன்று குவித்த இந்திய அரசு, அதே  இனப் பகையோடு கர்நாடகத்தோடு இணைந்துகொண்டு தமிழினத்தை வஞ்சிக்கிறது. இந்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

காவிரி ஆற்றுப் படுகையான திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு (ONGC)  நிறுவனம் அமைத்து பெட்ரோல் - எரிவளி வளத்தை கொள்ளையிட்டு வருகிறது.  வருகிற பிரவரி 23 அன்று திருவாரூர் - அடியக்க மங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறுகளை (ONGC)  முற்றுகையிடும் போராட்டத்தை  ‘காவிரி உரிமை மீட்புக் குழு’ அறிவித்துள்ளது .

”காவிரி என்னும் தமிழரின் இயற்கை வளத்தை பாதுகாத்துத் தராத தில்லி அரசே! காவிரி படுகையிலிருந்து கிடைக்கும் மற்றொரு இயற்கை வளமான  பெட்ரோலியத்தை எடுக்காதே” என்ற முழக்கத்தோடு  கட்சி வண்ணங்களை கடந்து சாதி வேற்றுமை பாராமல்  தமிழர்களாக ஒன்றுபட்டு காவிரியை மீட்க களம் காணவேண்டும்” என  அப்போது அவர் பேசினார். 

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

0 கருத்துகள்:

அப்சல் குருவுக்குத் தூக்கு - கொன்று புதைக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சி - தோழர் கி.வெங்கட்ராமன்

பாரதிய சனதாவின் தீவிர இந்துத்துவத்திற்கும் காங்கிரசின் மிதவாத இந்துத்துவத்திற்கும் இடையே நடக்கிற போட்டியில் சட்ட நெறிகளும், நீதி நியாயங்களும், அறம் சார்ந்த ஆட்சிமுறையும் வீசி எறியப்பட்டு ஒரு அப்பாவி அவசர அவசர மாகத் தூக்கிலடப்பட்டு, ஒரு பச்சைப் படுகொலை அரங்கேறிவிட்டது.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல்குரு 9-2-2013 அன்று காலை 7.56 க்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி, அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ தெரிவிக்காமல் தில்லி திகார் சிறையில் கமுக்கமாகத் தூக்கிலடப்பட்டு, அவரது உடல் சிறை வளாகத்துக்குள்ளேயே புதைக்கப்பட்டது. இச்செய்தியை இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே அன்று காலை 8 மணிக்கு அறிவித்து அது தொலைக்காட்சிகளில் செய்தியாக காட்டப்பட்டபோது தான் அப்சல் குருவின் மனைவிக்கே அச்செய்தி தெரிந் துள்ளது.
இச்சாவுத் தண்டனை நிறைவேற்றப் படும் போது ஜம்மு- காசுமீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு, கைப்பேசி, இணையதளத் தொடர்புகள் அனைத்தும் அம் மாநி லத்தில் முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டு போராட்டத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு ஒட்டு மொத்த காசுமீரும் அரச பயங்கர வாத அதிரடியில் வைக்கப்பட்டிருந்தது.
வாஜ்பாய் தலைமையில் பாரதிய சனதா கூட்டணி ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் 13-12-2001 அன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத் தில் வெள்ளை அம்பாசிடர் காரில் நுழைந்த 5 பயங் கரவாதிகள் நாடாளு மன்றத்தைத் தகர்க் கும் நோக் குடன் வந்தார்கள் என்பதே வழக்கு. நாடாளு மன்றப் பாதுகாவல் படையின ருக்கும், தாக்குதல் நடத்தியோ ருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையை அன்று தொலைக்காட்சி ஒளிபரப்பி யது.
உள்துறை அமைச்சகத்தின் அனுமதி ஒட்டி (ஸ்டிக்கர்) போலியாகத் தயாரிக்கப்பட்டு அம்பாசிடர் காரில் ஒட்டப் பட்டிருந்ததால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் காவலர்களின் அனுமதியைப் பெற்று அந்த கார் உள்ளே நுழைய முடிந்தது என்று தில்லி காவல்துறை விளக்கமளித்தது. வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த வரிசையில் காரை நிறுத்த முயலும் போது அங்கு நிறுத்திவைக்கப்படிருந்த குடியரசுத் துணைத் தலைவரின் வண்டியில் இந்த அம்பாசிடர் கார் இடித்ததால் நாடாளு மன்றக் காவல் படையினர் அங்கு விரைந்ததாகவும் அப் போது வெள்ளை அம்பாசிடரி லிருந்து வெளியே வந்த 5 பேரும் துப்பாக்கியால் சுடத் தொடங்கி சண்டை நடை பெற்றதாகவும் அரசு கூறியது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ‘பயங்கரவாதிகள்’ 5 பேரும் நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் படையினர் 8 பேர் தோட்டக் காரர் ஒருவர் என அரசுத் தரப்பில் 9 பேர் கொல்லப் பட்டனர்.
வந்தவர்களின் நோக்கம் நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கி தகர்ப்பதுதான் எனக் கூறிய அன்றைய பிரதமர் வாஜ்பாய், நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்புக்கு இணையான சர்வதேச இசுலாமிய பயங்கரவாதத்தின் இன்னொரு தாக்குதல் இது என வர்ணித்தார்.
பயங்கரவாதிகள் வந்த காரில் அவர்கள் பயன்படுத்திய ஆயு தங்கள், கைப்பேசி சிம் கார்டு, மடிக்கணினி, அவர்களில் சிலரது புகைப்படங்கள், உலர்ந்த பழங்கள், அவற்றோடு ஒரு காதல் கடிதம்வேறு கிடந்து கைப்பற்றப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
தாக்குதல் நடந்த இரண்டா வது நாளே அதாவது 15.12.2001 அன்றே வழக்கின் முழுப் பரி மாணமும் தெளிவாகி விட் டதாகக் கூறிய தில்லி காவல் துறை இக்குற்றத்தில் ஈடுபட்ட பயங்ரவாதிகள் 4 பேரைக் கைது செய்துவிட்டதாகவும் அறிவித் தது.
1999 இல் இந்திய விமானம் ஒன்று பாக்கிசுத்தானிய பயங் கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்த்தானத்தின் கந்தகார் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் இந்திய அரசோடு நடந்த பேச்சு வார்த் தையின் விளைவாக அவர் களது நிபந்தனைப்படி இந்தியச் சிறையிலிருந்து ஜெய்ஷ் - சே- முகமது என்ற அமைப்பின் தலைவர் மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.
மசூத் அசார் விடுதலையான உடனேயே தீட்டிய திட்டம் தான் நாடாளுமன்றத் தாக்குதல் என்று இந்திய அரசு கூறியது. மசூத் அசார் இத்தாக்குதல் செயலுக்கான பொறுப்பை அவ்வமைப்பை சேர்ந்த அடுத்த நிலைத் தலைவரான காசி பாபா என்பவரிடம் ஒப்படைத்ததா கவும், இந்த காசி பாபா இதனை நிறைவேற்ற தாரிக் அகமது என்ற பாக்கிசுத்தானியரை ஈடு படுத்தியதாகவும் அவரது திட் டப்படி பாக்கிசுத்தானி லிருந்து 5 பயங்கரவாதிகள் தில்லி மாநகருக்குள் ஊடுருவியதா கவும் தில்லி காவல்துறை தனது வழக்குரையில் கூறியது.
இத்தாக்குதலுக்கான சதிச் செயலில் வெவ்வேறு பாத்திரம் வகித்ததாக பேராசிரியர் எஸ்.ஏ. ஆர் கிலானி, சௌகத் உசைன் குரு, அவருடைய மனைவி அப்சான் குரு மற்றும் அப்சல் குரு ஆகிய நால்வர் கைது செய் யப்பட்டு இவர்களில் அப்சான் குருவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் மற்ற மூவருக் கும் மரண தண்டனையும் விரைவு நீதிமன்றத்தில் வழங்கப் பட்டன. மேல் முறையீட்டில் வெவ்வேறு கட்டங்களில் சௌகத் குருவுக்கு பத்தாண்டு தண்டனையும், பேராசிரியர் கிலானிக்கு விடுதலையும் வழங் கப்பட்டது. உச்ச நீதிமன்றம் 4.8.2005 அன்று அளித்த தீர்ப் பில் அப்சல் குருவின் சாவுத் தண்டனையை உறுதி செய்தது.
இந்த ஒட்டுமொத்த வழக்கே உண்மையான குற்றவாளிக ளைக்கண்டுபிடிக்காமல் கையில் கிடைத்தவர்களைக் கொண்டு புனையப்பட்ட ஒன்று என்பதை உச்ச நீதி மன்றம் உணர்ந்தே இருந்தது. நீதிபதிகள் வெங்கட்டராம ரெட்டி மற்றும் நாவலேக்கர் ஆகிய இருவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புரையில் வெவ்வேறு வகை யில் இது ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது.
உயர் பாதுகாப்புப் பகுதி யான நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் கை பேசி, சிம்கார்டு, லேப்டாப் போன்ற பல தடயங்களைக் கையோடு கொண்டுவந்ததாகக் காவல்துறை கூறுவதே நம்பும் படியாக இல்லை.
தில்லி காவல்துறை புனை வில் பல ஓட்டைகள் இருந் தாலும் அவற்றை எடுத்துக் கூறி வலுவாக வாதாடி வழக்கு நடத்த அப்சல் குருவுக்கு உரிய வாய்ப்பு வழங்கப் படவில்லை. இவர் களுக்கு வழக்காட முன்வந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானியின் வீடு தாக்கப் பட்டது. எனவே முன்னணி வழக்கறிஞர்கள் இவர்களுக்காக வழக்காடத் தயங்கினர். விரைவு நீதிமன்றம் அப்சல் குருவுக்காக மிக இளைய வழக்குரைஞரை அமர்த்தியது. பயிற்சி பெற்ற காவல்துறை அதிகாரிகள் புனைந்த வழக்கை எதிர் கொள் ளும் அளவுக்குப் போதிய பயிற்சி இல்லாதவர் அவர்.
இந்த வழக்குரைஞரும் ஒரு முறைகூட சிறையிலடைக்கப் பட்டிருந்த அப்சல் குருவை சந்தித்து வழக்கு பற்றி கலந்து ஆலோசிக்கவில்லை. தனிமைச் சிறையில் மிகுந்த கெடுபிடிக்கு இடையில் இருந்த அப்சல் குரு வறியவர் என்பதால் முன்னணி வழக்குரைஞர்களை அமர்த்தி கொள்ளவும் அவரால் முடிய வில்லை.
அப்சல் குருவை இவ்வழக்கில் சேர்ப்பதற்கிருந்த முக்கிய மான சான்றுக்கருவிகள் மடிக் கணினி, கைப்பேசி, சிம்கார்டு மற்றும் தக்குதலுக்குப் பயன் பட்ட வெள்ளை அம்பாசிடர் கார் ஆகியவை ஆகும்.
இந்த அம்பாசிடர் காரைத் தீவிரவாதிகளுக்கு அப்சல் குரு தான் வாங்கிக்கொடுத்தார் என்பதற்கான, ஐயத்திற்கிடமற்ற எந்தச் சான்றையும் காவல்துறை வைக்கவில்லை. எதற்கு இந்த வாகனம் பயன்படப்போகிறது என்பதை அறிந்திருந்தார் என்ப தையும் ஐயத்திற்கிடமின்றி காவல்துறை மெய்ப்பிக்க வில்லை. அப்சல்குருவை 15.12. 2001 அன்று ஜம்மு காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகரில் மடிக்கணிணி மற்றும் மோட் டரோலா கைப்பேசியுடன் கைது செய்ததாக கைது ஆவ ணத்தில் (அரஸ்ட் மெமோ) கூறிய காவல்துறை இப் பொருள்களைக் கைப்பற்றிய தற்கான சான்றாவணத்தில் (சீசர் மெமோ) அவை தில்லியில் கை பற்றப்பட்டதாக கூறியது. அதற்கு தில்லியை சேர்ந்த பிஸ் மில்லா என்பவரிடம் சாட்சிக் கையொப்பமும் காட்டியது.
திசம்பர் 12 அன்று கைப் பேசி, அதிலுள்ள சிம் கார் டுடன் வாங்கப்பட்டதாக சாட் சிகள் மூலம் கூறிய தில்லி காவல்துறையானது இந்த சிம் கார்டு ஏற்கெனவே நவம்பர் மாதத்திலிருந்தே செயல் பாட்டி லிருந்திருக்கிறது என்பதை கிலானி குறித்த குறுக்கு விசார ணையில் ஏற்றுக் கொண்டது. முக்கியமான இந்த முரண் பாட்டைக் கீழ் நீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லை. உச்ச நீதிமன்றம் இந்த ஓட்டை யைக் கவனமாகக் குறிப்பிடு கிறது. ஆயினும் அப்சல் குரு குற்றவாளி அல்ல என்ற முடி வுக்கு வரமறுத்தது.
அப்சல் குருவிடம் திசம்பர் 15 அன்று கைப்பற்றிய மடிக் கணினியை 2002 சனவரி 16 அன்று தான் சீலிட்ட உறையில் காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மடிக்கணினி அப்சல் குருவின் பயன்பாட்டில் நீண்டகாலம் இருந்ததாக சொல்லும் தில்லி காவல்துறை அக்கணினியில் தீவிரவாதி களுக்கு உருவாக்கிய போலி அடையாள அட்டைகள், உள் துறை அமைச்சகத்தின் அனு மதி பெற்றதாக போலியாக தயாரிக் கப்பட்ட போலி ஒட்டிகள் ஆகியவற்றுக்கான பதிவுகள் மட்டுமே இருந்ததா கவும் மற்றவற்றை கைப்பற்றப் படுவதற்கு முன்னதாகவே அப்சல் குரு அழித்துவிட்ட தாகவும் கூறினர். மற்றவற்றை அழித்த அப்சல் குரு முக்கிய மான இந்தத் தடயத்தை மட்டும் எப்படி அழிக்காமல் விட்டார் என்பதற்கு காவல்துறை உருப் படியான எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நீதிமன்றமும் இதனைக் கண்டு கொள்ள வில்லை.
நீதிமன்றத்தில் தாக்கல் செய் ததாக சொல்லப்பட்ட நாளுக் குப் பின்னாலும் மடிக்கணி னியில் புதிய பதிவுகள் இருந் தது கண்டறியப்பட்டது. விரைவு நீதிமன்றத்தின் பொறுப்பிலிருந்த மடிக்கணி னியில் புதிய பதிவுகள் எப்படி வந்தன என்பது விளக்கப்பட வும் இல்லை.
அதைவிட தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டு நிகழ் விடத்திலேயே கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்கள் பற்றி ஆதாரப் பூர்வமான எந்தத் தகவலையும் இது நாள்வரை காவல்துறை முன்வைக்கவே இல்லை. கொடும் சித்ரவதைகளின் ஊடே அப்சல் குரு கூறியதாக சொல்லப்படும் பெயர்கள் மட்டுமே உள்ளன. அதற்குத் தற்சார்பான வேறு எந்தச் சான்றும் இல்லை.
மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவ்வாறான குறை பாடுகள் மலிந்திருப்பதை ஏற் றுக்கொண்டது. அப்சல் குரு வுக்கு எதிராக நேரடிச் சான் றுகள் எதுவுமே இல்லை, சுற்ற டியான சான்றுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறியது. ஆயினும் “தேசத்தின் மனச்சான்றையே உலுக்கிய இவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயலுக்கு அப்சல் குருவை தூக்கிலிடாவிட்டால் தேசத் தின் கூட்டுமனச்சான்று நிறை வடையாது என்பதால் அரிதி லும் அரிதான வழக்காக கருதி அவருக்கு உயிர் பிரியும் வரை தூக்கிலிடும் தண்டனையை உறுதிசெய்கிறோம் ”என நீதி பதிகள் வெங்கட்ட ரெட்டியும் நாவலேக்கரும் தங்கள் தீர்ப்பு ரையில் குறிப்பிட்டனர்.
இந்துத்துவா வெறிபிடித்த இரத்தக் காட்டேரியான பாரத மாதாவுக்கு ஏதாவது ஒரு மனித உயிரை பலிகொடுத்தால்தான் அவள் மலையேறுவாள் என் பதை இந்த நீதிமன்ற பூசாரிகள் மென்மையான சொற்களில் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பாரத மாதாவின் பலிபீடத் தில் ஒரு அப்பாவி காசுமீரியின் உயிர் காவுகொடுக்கப்பட நீதி யின் பெயராலேயே இவ்வாறான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தேசத்தின் கூட்டு மனச் சான்று எதைக் கோருகிறது என அறிவதற்கு கருத்துக் கணிப்பு ஏதும் வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்தார் களா? இல்லை. இந்தக் கூட்டு மனச்சான்றுக்குள் காசுமீரி மக்களின் மனவிருப்பமும், நாடு முழுவதும் உள்ள இசுலா மியர்களின் கூட்டு மன விருப்ப மும் கணக்கில் கொள்ளப் பட்டதா? அதுவும் இல்லை.
இந்துத்துவ - இந்தியத் தேசிய வெறியர்கள் சிலரின் ஊடக வெறிக்கூச்சல் மட்டுமே உச்ச நீதி மன்றத்தால் நாட்டின் கூட்டு மனச்சான்று என கொள்ளப்பட்டிருக்கிறது.
சரி, இந்தக் கூட்டு மனச் சான்று என்பதன் பொருள் என்ன? பழிக்குப் பழி வாங்கு வது என்பது தானே ! ஒரு கொலையில் உயிரிழந்தவரின் உறவினர்களோ, கொலையுண் டவர்களின் மீது அனுதாபம் கொண்டவர்களோ பழிக்குப் பழியாக மரணதண்டனையைக் கோருவது இயல்பு. சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலை நாட்டவேண்டியப் பொறுப் பிலுள்ள நீதிமன்றம் இந்த உணர்வலைகளுக்கு ஆட்படக் கூடாது. அவ்வாறு ஆட்பட் டால் கொலையுண்டவர்களின் குடும்பம் சார்பாக பழிக்குப் பழியாகக் கொலைக் குற்றத்தில் ஈடுபடுகிற நிறுவனமாக நீதி மன்றம் மாறிவிடும். இதனை உச்ச நீதிமன்றத்தின் பலத் தீர்ப்புகள் எச்சரிக்கையாக கூறிச் சென்றிருக்கின்றன.
இதனால்தான் பழிக்குப் பழி என்ற மரணதண்டனை கூடாது என்ற குரல் உலகமெங்கும் இன்று ஓங்கி ஒலிக்கிறது.
அப்சல்குரு தொடர்பில் சட்ட வழிமுறைகளின்படி “அரிதிலும் அரிதான வழக்கு” என்பதைக்கூட உச்ச நீதி மன்றம் மெய்ப்பித்துவிட வில்லை. அப்சல் குரு எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர் அல்லர், பயங்கரவாத செயல் எதிலும் அவர் ஈடு படவில்லை என்று சான்று ரைக்கும் உச்ச நீதிமன்றம், இத் தாக்குதலில் ஒன்பது பேர் மரணமடைவதற்கு அப்சல் குரு காரணமாக இருந்தார் என்ப தற்கு நேரடிச் சான்றுகள் எதுவு மில்லை என எடுத்துரைக்கும் உச்ச நீதிமன்றம், இது மரண தண்டனை வழங்கத்தக்க அரிதி லும் அரிதான வழக்கு என் பதை சட்ட நெறிப்படி நிலை நாட்டவும் இல்லை. “இவ்வழக் கில் ஒருவருக்காவது மரண தண்டனை வழங்க வில்லை என்றால் நாட்டு மக்கள் திருப்தி அடைய மாட்டார்கள் ”என வாதிடுவது சட்டத்தின் ஆட் சிக்கு எதிரானது. நேயர் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டுப் பாடும் பாடகர் அல்லர் நீதி பதிகள்.
அப்சல் குருவின் சாவுத் தண்டனைக்கு எதிராகக் கரு ணை மனு தன்னிடம் வந்த போது குடியரசுத்தலைவர் சாவுத்தண்டனையை நீக்கி சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டியிருக்க வேண்டும். இந்திய அமைச்சரவையின் சார் பில் உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க மறுத்து அவரது சாவுத்தண்டனையை உறுதி செய்து பரிந்துரை அளித்தபின் குடியரசுத்தலைவர் தம்மிச் சையாக வேறு ஒரு முடிவு எடுக்கமுடியாதுதான். ஆயினும் அந்தக் கோப்பில் உடனடியா கக் கையெழுத்திடுவதை பிர ணாப் முகர்ஜி தவிர்த்திருக் கலாம்.
2013 சனவரி 21 அன்று உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும் கோப்பை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அனுப்பியது. 2013 பிப்ரவரி 3 அன்று அப்பரிந்துரையை ஏற்று பிரணாப் முகர்ஜி அவசரமாகக் கையெழுத்திட வேண்டிய சட்டத்தேவை எதுவு மில்லை.
சாவுத்தண்டணை தொடர் பாக முக்கியமான சில வழக்கு கள் உச்ச நீதிமன்ற விசாரணை யில் உள்ளன. சாவுத் தண் டணை வழங்கப்பட்டு நீண்ட காலம் சிறையிலிருப்பவர்க ளுக்கு, அந்த நீண்டகால சிறை வாசத்தையே காரணமாகக் காட்டி சாவுத்தண்டணையை ரத்து செய்து வாழ்நாள் சிறை யாக மாற்றி, குடியரசுத் தலை வரும் மாநில ஆளுநரும் கருணை வழங்கலாமா என்ற முக்கிய சிக்கல் உச்ச நீதிமன்ற ஆய்வில் உள்ளது. “நீண்டகால சிறைவாசம்” என எவ்வளவு ஆண்டு சிறைவாசத்தை வரை யறுப்பது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இவ்வழக்கு களில் நிலுவையில் உள்ளன.
தவிரவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனம்போன போக் கில் மரணதண்டனை வழங்கிய போது சட்ட அறியாமை (ஜீமீக்ஷீ வீஸீநீuக்ஷீவீuனீ) என்ற தவறு நேர்ந்து விட்டதையும், அவ்வகைத் தீர்ப்புகளின் காரணமாக ஏற் கெனவே இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதையும் உச்ச நீதிமன்றமே வலுவான ஆதாரங் களோடு எடுத்துக் காட்டியிருக் கிறது. (விரிவிற்கு காண்க : “மூன்று தமிழர் கருணை மனுவுக்கு ஆதரவான புதிய சட்ட நிலை” -கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசியத் தமிழர் கண் ணோட்டம், சனவரி 16-31, 2013 )
இவை அனைத்துமே கருணை மனுத் தொடர்பான வழக்குகளாக உள்ளவை. எனவே, நியாயமாகப் பார்த்தால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்வழக்குகளின் தீர்ப்பு வரும்வரை அப்சல் குரு கோப்பில் ஒப்புதல் கையெழுத் திடுவதை தவிர்த்திருக்க வேண்டும். மாறாகக் கோப்பு வந்து இரண்டு வாரத்துக் குள்ளாகவே அவசர அவசரமாக கையெழுத்திட்டுருக்கிறார்.
கருணை மனு நிராகரிக்கப் பட்ட பிறகு தூக்கில் போடுவ தற்கான நாள் குறிக்கப்பட்டதை தொடர்புடையவரின் குடும்பத் திற்குத் தெரிவிப்பது ஆட்சியா ளர்களின் சட்டக் கடமை. அப்சல் குரு மனைவியின் பெயர் குறிப்பிட்டு சோப்பூரில் உள்ள அவரது முகவரிக்கு விரைவு அஞ்சலில் தூக்கிலிடும் நாள் தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் சிண்டே கூறுகிறார். அஞ்சலில் அனுப்பிவிட்டு ஊரடங்கு உத் தரவும் பிறப்பித்தனர். ஊர டங்கு நேரத்தில் அஞ்சலகர்கள் வெளியில் செல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை.
கடிதம் போய் சேர்வதற்குள் ளாக அப்சல் குருவை கொன்று விட வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் உண்மையான நோக்கம்.
ஏன் இவ்வளவு கமுக்கமாக அப்சல் குருவின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றி னார்கள் என்ற வினாவுக்கு அரசுத் தரப்பிலிருந்து கசிந்து வரும் விடை அதிர்ச்சி அளிக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு தூக்கி லிடுவதற்கான நாள் முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட தால்தான் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இது தொடர்பாக உயர்நீதி மன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டு தடையாணையும் பெறப்பட்டது. இனி இவ்வாறான நிலை ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடாது என ஆட்சியாளர்கள் முடிவெடுத்துவிட்டார்களாம். ஏற்கெனவே அஜ்மல் கசாப் கடந்த 2012 நவம்பர் 12 அன்று இதே போல் கமுக்கமான முறையில் தூக்கிலிடப்பட் டதை நோக்கும் போது கசிந்து வந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.
தங்களது போட்டி இந்துத்துவ - இந்திய வெறி அரசியலுக்கு தோதாக சட்டத்தின் ஆட்சியையே குழி தோண்டிப் புதைக்கிறார்கள். இந்தப் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ‘இடதுசாரிகளும்’, மாயாவதி, நிதீஷ்குமார், முலாயம் சிங் உள்ளிட்ட ‘சமூக நீதிக்காவலர்களும்’ ஒரே ஆரிய இந்தியப் படை வரிசையில் தான் அணிவகுக்கிறார்கள். இது மிக ஆபத்தானது.
அப்சல் குருவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக் கப்பட்டால் அவரது இறுதி ஊர்வலமே ஜம்மு- காசுமீரில் பயங்கரமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனக் காரணம் காட்டி அவரது உடலைக்கூட அவரது மனை வியிடம் ஒப்படைக்க மறுக்கி றது இந்தியப் பேயாட்சி.
சேகுவேராவின் உடலுக்கும், பின்லேடன் உடலுக்கும், தமிழீத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளின் உடலுக்கும், காசுமீர் போராளி மக்புல் பட்டின் உடலுக்கும் நேர்ந்த நிலையே அப்சல் குருவுக்கும் நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் வல்லாதிக்க - இன வெறியர்கள் ஒன்று போலவே நடந்துகொள்கிறார்கள்.
தூக்கில் கொன்று புதைக்கப் பட்டது அப்சல் குரு மட்டுமல்ல சட்டத்தின் ஆட்சியும் தான்.

0 கருத்துகள்:

மூன்று தமிழர் கருணை மனுவுக்கு ஆதரவான புதிய சட்ட நிலை - தோழர் கி.வெங்கட்ராமன்

பொதுவாக மரண தண்டனையை அரிதாக்கும் முறையிலும், குறிப்பாக மூன்று தமிழர் கருணை மனு வழக்கில் உதவி செய்யும் வகையிலும் அண்மையில் ஒரு தீர்ப்பு வெளியாகி உள்ளது. சங்கீத் - எதிர் - அரியானா மாநில அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் 2012 நவம்பர் 20ஆம் நாள் வழங்கிய தீர்ப்பே அது.
உண்மையில் இத்தீர்ப்பு 2009 தொடங்கி உச்சநீதிமன்றம் சாவுத்தண்டனை குறித்து பல்வேறு வழக்குகளில் வழங்கிய முக்கியத் தீர்ப்புகளின் தொடர்ச்சியான வளர்ச்சியே ஆகும்.
மரண தண்டனை குறித்து உச்சநீதிமன்றம் மேற்கொண்ட அணுகு முறைகளை “சங்கீத் தீர்ப்பு” வழங்கிய நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் மூன்று கட்டங்களாக பிரித்து விவாதிக்கிறார்கள்.
ஜக்மோகன் – எதிர் - உ.பி. மாநில அரசு தீர்ப்பு வந்த காலத்தில் இருந்த நிலையை முதல் கட்டம் என்றும் பச்சன் சிங் - -எதிர்- - பஞ்சாப் மாநில அரசு தீர்ப்புக்கு பின் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை இருந்த அணுகுமுறையை இரண்டாவது கட்டம் என்றும், 2009 மே 13 அன்று வெளியான சந்தோஷ்குமார் பரியார் - எதிர் - மராட்டிய மாநில அரசு தீர்ப்புக்கு பிந்தைய நிலையை மூன்றாம் கட்டம் என்றும் இத் தீர்ப்புரை வகைப்படுத்தி விவாதிக்கிறது.
இங்கு குறிப்பிடப்படும் ‘ஜக்மோகன் வழக்கு’ மரண தண்டனை வரலாற்றில் முக்கியமான தொரு வழக்காகும். 1973ஆம் ஆண்டில் வெளியான இவ்வழக்கின் தீர்ப்பு, மரணதண்டனை எல்லா கொலை வழக்குகளிலும் வழங்கப்படுவதை திறனாய்வு செய்தாலும் அன்றைக்கு நடப்பிலிருந்த குற்றவியல் நடைமுறை சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது.
சாவுத் தண்டனை பற்றிய பெரும் விவாதப்புயல் இத்தீர்ப்பை தொடர்ந்து எழுந்தது. ஏனெனில், வெள்ளையர் ஆட்சி இயற்றி சுதந்திர இந்தியாவிலும் செயலில் இருந்த குற்றவியல் நடைமுறை சட்டம் 1898, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனையை ஒரு பொது விதியாகவும், வாழ்நாள் சிறைத் தண்டனையை விதிவிலக்காகவும் கொண்டிருந்தது.
எழுந்த விவாதங்களின் விளைவாக இந்திய அரசின் சட்ட ஆணையம் பரிந்துரைத்தவாறு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இந்திய அரசு சில முக்கியத் திருத்தங்கள் செய்தது. குறிப்பாக சாவுத்தண்டனைக் குறித்து 354 (3) என்ற விதி உருவாக்கப்பட்டது.
இவ்விதியின்படி கொலைக் குற்றத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை என்பது பொதுவிதியாகவும், சாவுத் தண்டனை என்பது விதிவிலக்கானதாகவும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு விதிவிலக்காக சாவுத் தண்டனையை தீர்ப்புரைக்கும் நீதி மன்றம் அதற்கான சிறப்புக் காரணங்களை (Special reasons) எழுத்து வடிவில் விளக்க வேண்டும் என்றும் இவ்விதி நிபந்தனை விதித்தது.
இவ்விதி கூறும் விதிவிலக்கான தருணங்கள் யாவை, சிறப்புக் காரணங்கள் எவை எவை என்பது குறித்து நீதி மன்றங்கள் பல்வேறு வழக்கு களில் விவாதித்தன. இவ்விவா தம் உயிர் வாழும் உரிமை மட்டுமின்றி தனி நபர் உரிமை குறித்ததாகவும் விரிந்தது.
ஏனெனில், இந்திய அரச மைப்பு சட்ட விதி 21 “உயிர் வாழும் உரிமை மற்றும் ஆளு டைமை உரிமை” (Right To Life And Personal Liberty) ஆகியவற்றை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. இந்த உரிமையை சட்டத்தின் வழி உருவாக் கப்பட்ட நடைமுறைகளின் மூலமின்றி வேறு வகைகளில் பறிக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கிறது.
இங்கு கூறப்படும் “சட்டத்தின் வழி உருவாக்கப்பட்ட நடைமுறை” தான் குற்றவியல் நடைமுறை சட்டவிதி 354 (3) ஆகும்.
உயிர் வாழும் உரிமை மற்றும் ஆளுடைமை உரிமையில் அரசு அல்லது நீதிமன்றம் குறுக்கிடும் சட்ட நடைமுறை எவ்வாறானதாக அமையவேண்டும் என்பதை மேனகா காந்தி- - எதிர் - -இந்திய ஒன்றிய அரசு என்ற புகழ் பெற்ற வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தியது. 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற ஆயம் 1978 ல் வழங்கிய இத்தீர்ப்பு “அரசமைப்புச் சட்ட விதி 21 வழங்கும் உரிமையில் குறுக்கிடும் சட்ட நடைமுறையானது, தன்னிச்சையானதாகவோ, நியாயமற்றதாகவோ, ஒடுக்கும் வகையினதாகவோ,உரிய காரணமற்றதாகவோ இருக்கக் கூடாது” என வரம் பிட்டது.
மேனகா காந்தி வழக்கு தீர்ப்பின் வெளிச்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 354(3)க்கு விளக்கமளித்த தீர்ப்புதான் பச்சன்சிங் - எதிர் -- பஞ்சாப் மாநில அரசு என்ற புகழ் பெற்ற தீர்ப்பாகும் (1980, 2, SCC, 684).
“அரிதிலும் அரிதான வழக்கு களில்தான் சாவுத்தண்டனை வழங்கப்படவேண்டும் ” என்று இத்தீர்ப்பு வரையறுத்தது. சட்ட விதி 354(3)ன் நோக்கம் அது தான் என இத்தீர்ப்பு விளக்கம் அளித்தது. இவ்விதியில் சொல் லப்பட்டுள்ள “சிறப்புக் கார ணங்கள்” (Special reasons) என்பதற்கு ”விதிவிலக்கான காரணங்கள்” (Exceptional reasons) என்றும் பொருளுரைத்தது.
“தண்டனை வழங்கும் போது நடைபெற்ற கொலைக்குற்றம், அது நடந்த முறை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு செய்யக்கூடாது. குற்ற வாளியின் தன்மையையும் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று கூறியது.
தண்டனையைத் தணிக்கும் காரணிகளாக சிலவற்றை இத் தீர்ப்பு கோடிட்டு காட்டுகிறது.
¨ கொலையாளி தீவிரமான மன உளைச்சலுக்கு ஆட்பட்ட நிலையிலோ உணர்ச்சி வசப்பட்ட நிலையிலோ குற்றம் செய்தி ருந்தால்
¨ குற்றம் சாட்டப்பட்டவர் மிக இளையவராகவோ மிகவும் வயது முதிர்ந்தவராகவோ இருந்தால்
¨ சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் குற்றவாளி தொடர்ந்து ஈடுபட மாட்டார் என்ற வாய்ப்பிருந்தால்
¨ குற்றம் சுமத்தப்பட்டவரை திருத்துவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் வாய்ப்பிருந்தால்
¨ குற்றம் நடந்த சூழலில் தான் அக்குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அறம் சார்ந்த காரணம் இருப்பதாக குற்றவாளி கருதியிருந்தால்
¨ வேறொருவரின் அச்சுறுத்தல் அல்லது ஆதிக்கத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் அக்குற்றச் செயலில் ஈடுபட்டிருந் தால்
¨ குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து தான் செய்யும் குற்றத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாத மன நிலையிலிருந்தால்
அக்குற்றவாளிக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ‘பச்சன் சிங் தீர்ப்பு’ கூறியது. அரிதிலும் அரிதான வழக்கு என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கமளித்த இத்தீர்ப்பு இப்பட்டியலில் உள்ளவை மட்டுமே முடிந்த முடிபான வரையறை அல்ல என்றும் தெளிவுபடுத்தியது.
பச்சன் சிங் தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் தீர்ப்பு என்ற போதிலும் பிறகு வந்த வழக்குகளில் இதைவிட எண்ணிக்கை குறைவான நீதிப திகள் கொண்ட ஆயங்கள் கூட இத்தீர்ப்பை முறையாகப் பின் பற்றவில்லை. ‘அரிதிலும் அரிதான’ என்பதற்கு மனம் போன போக்கில் நீதிபதிகள் விளக்கம் அளித்து மரண தண்டனையை உறுதி செய் தனர். வீரப்பன் கூட்டாளி என்ற பெயரில் சிவப்பிரகாசம் என்பவருக்கு அளிக்கப்பட்ட வாழ்நாள் தண்டனையை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து மரண தண்டனையாக மாற்றிய கொடுமையும் அரிதிலும் அரி தான வழக்கு என்ற பெயரில் நடந்தேறியது.
இதன் உச்சமாக ராவ்ஜி - எதிர் - ராஜஸ்தான் மாநில அரசு என்ற வழக்கில் (1996, 2, SCC 175) தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் குற்றவாளியின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை. கொலைக் குற்றம் கொடூரமாக நடந்திருந்தால் அதுவே மரண தண்ட னையை உறுதி செய்ய போதுமானது. அரிதிலும் அரிதானதாக இதனை வரையறுக்கலாம் எனக் கூறி மரண தண்டனை யை உறுதி செய்தது.
ராவ்ஜி தீர்ப்பை பின்பற்றி அடுத்தடுத்து மரண தண்டனைகள் வழங்கப்பட்டன.
சந்தோஷ்குமார் பரியார் - எதிர்- - மகாராஷ்டிர மாநில அரசு (Santoshkumar Bhariyar Vs State Of Maharashtra) என்ற வழக்கின் தீர்ப்பில் (2009, 6, SCC 498) மேற்கண்ட தீர்ப்புகள் அனைத்தும் விரிவாக விவாதிக் கப்பட்டன. உச்சநீதிமன்ற ஆயத்தின் நீதிபதிகள் எஸ்.பி சின்கா மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர் மிகவும் நுணுக்கமாக அறிவார்ந்த முறையில் பச்சன் சிங் தீர்ப்புக்கு பிறகான பல தீர்ப்புகளை ஆய்ந்தனர்.
ராவ்ஜி வழக்கு தீர்ப்பிலும் அதைத் தொடர்ந்த சில தீர்ப்புகளிலும் “அரிதிலும் அரிதான வழக்கு” என்பதற்கு மனம்போன போக்கில் பொருள் கொள் ளப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறிய இத்தீர்ப்புரை குறிப்பாக 7 வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அவை நீதிபதி களின் சட்ட அறியாமையால் (per incurium) அளிக்கப்பட்ட தவறான சட்ட விரோத தீர்ப் புகள் என வரையறுத்தது.
சட்ட அறியாமையால் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகளின் அடிப்படையில் ஏற்கெனவே இரண்டு பேர் தூக்கிலிடப் பட்டு கொல்லப்பட்டு விட்டனர். இத்தீர்ப்புகளால் தூக்கு மரநிழலில் நிற்கிற 13 பேரை யாவது பாதுகாக்க வேண்டும் எனக் கோரி 14 முன்னாள் நீதிபதிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு 2012 சூலை 25 அன்று கடிதம் அனுப்பியுள்ளனர். பி.கே சபர்வால், ஏ.பி.ஷா, கே.பி சிவசுப்பிரமணியன், எஸ்.என் பர்கவா, பிரபா சிறீதேவன் ஆகியோர் இவர்களில் சிலர்.
சங்கீத் தீர்ப்பு மரண தண்டனை குறித்தும், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்குமாறு அளிக்கும் தீர்ப்புகள் குறித்தும் விரிவாக திறனாய்வு செய்கிறது. பரியார் தீர்ப்புக்கு பிறகு மரண தண்டனை குறித்த மூன்றாவது கட்டமாக புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாக உரைக்கிறது (20 ஆண்டுகளைத் தாண்டிய வாழ் நாள் தண்டனை குறித்து இத்தீர்ப்பு கூறுவதும் தமிழர்கள் கவனிக்க வேண்டிய செய்தி. ஆயினும் அது குறித்து வேறு வாய்ப்பில் பார்க்கலாம்).
சங்கீத் வழக்குத் தீர்ப்பில் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் ஆகியோர் கரு ணை மனுக்களை ஆய்வு செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விவாதிக்கவில்லை. ஆயினும் குற்றவியல் நடைமுறைச் சட்டவிதி 432படி தண்டனைக் குறைப்பு வழங்குவதை நீதி மன்றங்கள் தடுத்துவிடக்கூ டாது எனத் திறனாய்வு செய்கிறது.
இருந்த போதிலும் இத்திற னாய்வை கருணை மனு வழக்கு களில் குறிப்பாக பேரறிவாளன், முருகன்,சாந்தன் கருணைமனு வழக்கில் உறுதியாக துணைக்கு அழைக்கலாம்.
பச்சன் சிங் தீர்ப்புக்கு உரை எழுதுவது போல் வரையப் பட்டுள்ள பரியார் வழக்குத் தீர்ப்புரை மூன்று தமிழர் கருணை மனு வழக்கில் கட்டாயம் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் .
அரிதிலும் அரிதான வழக்கு என பச்சன் சிங்தீர்ப்பு கூறும் வரையறுப்புக்கு பரியார் தீர்ப்பு அளிக்கும் விளக்கமும், குற்றச் செயலை மட்டுமின்றி குற்றவாளியின் தன்மையையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பச்சன் சிங் தீர்ப்பு கூறுவதன் விளக்க உரையாக பரியார் தீர்ப்பு எடுத்துரைப்பதும் ஊன்றி கவனிக்கத் தக்கவை.
மூன்று தமிழர் கருணை மனு வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் பரியார் தீர்ப்பின் இந்த ஆய்வுரையைக் கவனத்தில் கொண்டே ஆகவேண்டும்.
பச்சன்சிங் தீர்ப்புக்கு விளக்க மளிக்கும் பரியார் வழக்கு தீர்ப்பு மரண தண்டனைக்கு இரண்டு முக்கிய நிபந்தனைகளை வைக்கிறது.
ஒருவர் மீது கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனையை வரையறுத்து தீர்ப்பு வழங்கும் கட்டத்துக்கு வரும்போது நீதிமன்றம் குற்றவாளியின் முன் நடத்தை, கொலைக்குற்றம் நடை பெற்ற சூழல், அக்குற்றம் நடைபெற்ற போது இருந்த கொலையாளியின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். (மரண தண்டனைக்கு பச்சன் சிங் தீர்ப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளின் பட்டியலை மீண்டும் ஒருமுறை பாருங்கள். அப்போது இதன் இன்றியமையாமை புரியும்.)
மரண தண்டனை வழங்காமல் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கினால் அக்குற்றவாளி திருந்த மாட்டார் அவரால் சமூகத்தில் பதட்டமும் அமைதியற்ற சூழலுமே ஏற்படும் என்பதை அரசுத்தரப்பு வலுவான ஆதாரங்களோடு மெய்ப்பிக்க வேண்டும்.
இவ்விரண்டு நிபந்தனைகளையும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு பொருத்திப் பார்த்தால் கருணை மனுவை ஆதரவான முறையில் குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என ஆணையிடு வதை தவிர உச்சநீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை
.ஏனெனில், இம்மூவரும் ராசீவ் நிகழ்வுக்கு முன்னர் எந்த குற்றவியல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள். அரசின் வழக்குரைப்படியே இம் மூவரும் “விடுதலைப்புலித் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடந்தவர்கள்”. அதாவது, சொந்த முறையில் இக் குற்றச் செயலில் ஈடுபடும் உள் நோக்கம் இல்லாதவர்கள்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருமே இவர்களது வரையறைப்படியே கூட மனம் திருந்தியவர்கள் தாம். அவர்களது சிறை நடத்தையே உறுதியான சான்று கூறும்.
பரியார் தீர்ப்பு, சங்கீத் தீர்ப்பு ஆகியவற்றின் வெளிச்சத்தில் பார்த்தால் இம் மூன்று தமிழருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனை நீதி தவறிய ஒன்றாகும்.
வேறு 13 பேருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவரைக் கோரி அளித்துள்ள மனுவில் முன்னாள் நீதிபதிகள் முன்வைத்துள்ள “சட்ட அறியாமைத் தீர்ப்பு ” (per incurium) என்ற வாதம் நம் மூவர் வழக்கிற்கும் தெளிவாகப் பொருந்தும்.
உச்ச நீதி மன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு தவறாக அளிக்கப்பட்ட தீர்ப்பை நேர் செய்ய வேண்டிய கடமை குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் மட்டுமே உள்ளது.
மூவர் வழக்கில் குடியரசுத் தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்டது சரியா தவறா என தீர்ப்பளிக்க வேண்டிய சட்டக்கடமையில் உச்ச நீதிமன்றம் இப்போது உள்ளது.
“கருணை மனுவை ஆய்வு செய்யும் போது குடியரசுத் தலைவரோ அல்லது மாநில ஆளுநரோ உச்ச நீதி மன்றத்தின் மேல் முறையீட்டு மன்றமாக செயல்பட முடியாதுதான் என்றாலும், வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் முழுவதையும் சுதந்திரமாக மறு ஆய்வு செய்து அவர்கள் முற்றிலும் வேறுபட்ட முடிவுக்கு வரலாம். அதனடிப்படையில் கருணை மனு மீதான ஒரு புதிய முடிவை மேற்கொள்ளலாம். அவ்வாறு குடியரசுத் தலைவரோ மாநில ஆளுநரோ சுதந்திரமாக ஆய்வு செய்துதான் முடிவெடுத் தார்களா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத் தலாம்” என்று கேஹர் சிங் வழக்கிலும் (1989, 1, SCC, 204) சுவரன் சிங் வழக்கிலும் (1998, 4, SCC, 75) உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, குடியரசுத் தலைவர் மூன்று தமிழர் கருணை மனுவை நிராகரித்தது சட்டப்படி சரிதானா என்று ஆய்வு செய்ய வேண்டிய பணி இப்போது உச்ச நீதி மன்றத்திடம் உள்ளது.
பச்சன் சிங் தீர்ப்புக்குப் பிறகான காலத்தில்தான், அதை விட குறைவான எண்ணிக்கை கொண்ட (3 பேர்) நீதிபதிகளின் உச்ச நீதிமன்ற ஆயத்தினால் தான் இராசீவ் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்படி பச்சன் சிங் தீர்ப் பின் அளவு கோல்கள் இராசீவ் காந்தி வழக்கில் பின்பற்றப் பட்டிருக்க வேண்டும். அவ் வாறு பின்பற்றப்பட்டு தான் மரண தண்டனை விதிக்கப் பட்டதா என்பதை கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்தாரா என்பதை திறனாய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் இப்போது உச்ச நீதிமன்றம் உள்ளது.
மூவர் மரண தண்டனை குறித்து அத்தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற மூவர் ஆயத்தின் தலைவராக இருந்த நீதிபதி கே.டி.தாமஸ் பின்னாளில் கூறியதை உச்ச நீதிமன்றம் இப்போது கவனத் தில் கொள்ள வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி கே.டி.தாமஸ் 2011 செப்டம்பர் 2 ஆம் நாள் தி ஏசியன் ஏஜ் (The Asian Age)) இதழாளரிடம் பேசும் போது, தான் அவ்வாறு மரண தண்டனை வழங்கிய ஆயத்திற்கு தலைமை தாங்க நேர்ந்தது கெடுவாய்ப்பானது என நொந்துகொண்டார். மேலும் “கொலையுண்டவர் புகழ் பெற்றவராக இருந்தால் அவ்வழக்கில் மரண தண்டனை வழங்குவது அடிக்கடி நடக்கிறது. அக்கொலையை அரிதிலும் அரிதான ஒன்றாக சித்தரித்து தங்களது முடிவை நியாயப்படுத்துவது நடக்கிறது” என்றார். தனது கூற்றுக்கு இந்திராகாந்தி கொலை வழக்கு, இராசீவ் காந்தி கொலை வழக்கு, தளபதி வைத்தியா கொலைவழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டுகளாக கூறினார்.
கே.டி.தாமஸ் மட்டுமல்ல முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனும் தனது தன் வரலாற்று நூலில் தனக்கு நேர்ந்த இது போன்ற ஒரு இக்கட்டை குறிப்பிடுகிறார்.
இந்திராகாந்தி கொலை வழக்கில் கேஹர் சிங் என்ப வருக்கு நியாயமற்ற முறையில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரது கருணை மனு அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனிடம் சென்றது. அரசமைப்புச் சட்ட விதி 72 படி இப்பிரச்சினையில் குடியரசுத் தலைவர் இறுதிக்கும் இறுதியாக இந்திய அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். கேஹர் சிங் மரண தண்டனையை உறுதி செய்து கருணை மனுவை நிராகரித்து அமைச்சரவை குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை அனுப்பியது. அதனை ஏற்பதைத் தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு வழியில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்டு கேஹர் சிங் தூக்கிலிடப்பட்டார்.
தன் வரலாற்று நூலில் இதைக்குறிப்பிடும் ஆர்.வெங் கட்ராமன் “கேஹர் சிங் கருணை மனு நிராகரிப்பு என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தில் மேற்கொள்ளப் பட்ட முடிவு” எனக் கூறினார்.
வழக்கை ஆய்வு செய்கிற எந்த நடுநிலையாளரும் இராசீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் கருணை மனு நிராகரிப்பும் முழுக்க முழுக்க அரசியல் உள் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை உறுதியாகக் கூறுவார்கள்.
சட்ட அறியாமையால் (per incurium) அளிக்கப்பட்ட தீர்ப்பை அரசியல் உள் நோக்கத்தில் உறுதி செய்தால் அது இன்னும் ஒரு சட்டக் கொலையாகிவிடும்.
எனவே, பரியார், சங்கீத் தீர்ப்புகளை கருத்தில் கொண்டு மூன்று தமிழர் கருனை மனு வை குடியரசுத்தலைவர் ஆதர வான முறையில் மீளாய்வு செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைக்க வேண்டும்.
பரியார், சங்கீத், தீர்ப்புக ளுக்குப் பிறகு எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டாவது தமிழக அரசு அரசமைப்புச் சட்ட விதி 161 -ன் படி ஆளுநர் மூலமாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மரண தண்டனையை நீக்க வேண்டும்.
அப்போது தான் தமிழினத்துக்கு மறுக்கப்பட்டுவரும் நியாயங்களில் ஒன்றாவது மீட்கப் பட்டதாக ஆகும்.

0 கருத்துகள்:

“இந்தியாவுக்குப் புரிய வைக்க முடியாது – பணிய வைக்க முடியும்” -தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு

சென்னையில், 03.02.2013 அன்று மக்கள் நலவாழ்வு இயக்கம் சார்பில், “தமிழீழ இனப் படுகொலையும் தமிழ சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில், சிறப்புக் கருத்தரங்கம் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை இலயோலா கல்லூரிபி.எட்அரங்கம் இசைப்பிரியா நினைவு மேடையில் மூன்று பிரிவுகளாக வெவ்வெறு தலைப்புகளில் நடைப்பெற்றது.
காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை “இலங்கை இனப்படுகொலையும்சர்வதேச சமூகத்தின் தோல்வியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது இக் கருத்தரங்கத்திற்கு, நாம் தமிழர் கட்சி சர்வதேசத் தொடர்பாளர் திரு அய்யநாதன் தலைமையேற்றார். பெரியார் அண்ணா பேரவை திருச்சி திரு கே.செளந்தரராஜன் அவர்கள் இசைப்பிரியா படத்தை திறந்து வைத்தார். மக்கள் நல்வாழ்வு இயக்கம் திரு பொன்.சந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். பேராசிரியர் பால்நியூமென்(பெங்களூர் பல்கலைக்கழகம்) படக்காட்சியுடன் தொடக்க உரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் திரு. சி.மகேந்திரன்திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் திரு. விடுதலை இராஜேந்திரன்மார்க்சியத் திறனாய்வாளர் திரு கோவை ஈசுவரன்தமிழ்த் தேசிய விடுதலை இஅயக்கம் பொதுச் செயலாளர் திரு தியாகுமே பதிணேழு இயக்க ஒருகிணைப்பாளர் திரு திருமுருகன்மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி திரு தமிழேந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக சமர்பா கலைக்குழு திருகுமரன் தமிழீழ எழுச்சிப் பாடல்களை பாடினார்.
மதிய அமர்வு 2.30 மணி முதல் 4.30 மணி வரை “இலங்கை இனப்படுகொலையும்சர்வதேச்சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதலும்” என்ற தலைப்பில் நடைப்பெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு நாடாளுமன்ற உறுப்பினர் பேரா.சரஸ்வதி தலைமையேற்றார்மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் திரு ஹென்றிடிபேன் தொடக்க உரையாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் திரு மணிவண்ணன்கீற்று இணையதள ஆசிரியர் திரு இரமேஷ், THE WEEKEND LEADER இணைய இதழ் ஆசிரியர் திரு பி.சி.வினோஜ்குமார்தமிழர் காப்பு இயக்கம் (SAVE TAMILS) ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், “இலங்கை இனப்படுகொலையும்தமிழீழ மக்கள் விடுதலையில் தமிழ்நாடு மற்றும் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் நடைப்பெற்றது.
இக்கருத்தருங்கத்திற்கு திரைப்பட இயக்குநர் திரு புகழேந்தி தங்கராஜ் தலைமையேற்றார். மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு கண.குறிஞ்சி தொடக்க உரையாற்றினார். ம.தி.மு.பொதுச் செயலாளர் திரு வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுச் செயலாளர் திரு வேல்முருகன்இந்திய சோசலிச ஜனநாயக கட்சித் தலைவர் திரு. தெஹ்லான் பாகவிகவிஞர் புலமைப்பித்தன்ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நீலவேந்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்  தலைமை நிலையச் செயலாளர் தோழர் குமாரதேவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர் பேசும் போது, தமிழீழ விடுதலைக்கானப் போராட்டத்தில் நாம் இன்னும் அரசியல் தெளிவு பெற வேண்டும். கடந்த காலங்களில் எவ்வளவு எழுச்சியாக நடைபெற்றிருந்தாலும், நாம் செய்தப் போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. இந்திய அரசுக்கு நம் வலியை, புரிய வைக்க முடியாது என்பது தான் இதிலிருந்து நாம் பெறுகின்ற படிப்பினை.
தமிழீழ மக்களுக்கு மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்குமான எதிரியாக உள்ள இந்திய அரசை, பகை சக்தியாக, எதிரியாக நாம் வரையறுத்துக் கொண்டால் மட்டும் தான், அதற்குப் புரிய வைக்க முடியாது, அதைப் பணிய வைக்கத்தான் முடியும் என்ற தெளிவுக்கு நாம் வர முடியும். போருக்குப் பின்னர் வெளியான பல்வேறு ஆதாரங்களும், ஐ.நா. மன்றக் கூட்டங்களின் போது நடந்த சூழ்ச்சிகளும், இந்திய அரசின் தமிழினப் பகையை, பல்வேறு கட்டங்களில் அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வளவு தெளிவாக தமிழினத்திற்கு எதிராக போர் புரியும் இந்திய அரசை, நமக்கு நட்பாக்கிக் கொள்ளும் முயற்சி ஒருக்காலும் சாத்தியமாகப் போவதில்லை.
எனவே, இந்திய அரசை, அதன் அரசு நிறுவனங்களை தமிழகத்தில் செயல்படவிடாத அளவிற்கு முடக்குகின்ற போராட்டங்களைத் தான் இனி நாம் செய்தாக வேண்டும். அது தான் இன்றைக்குத் தேவை.
ஐ.நா. மன்றத்தில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தமிழீழச் சிக்கலுக்கு அரசியல் தீர்வை முன்மொழியாமல், வெறும் சமஉரிமை – மறுவாழ்வு போன்ற நிவாரணத் திட்டங்களே தீர்மானமாக அமெரிக்காவால் முன்வைக்கப்படும் எனத் தெரிகின்றது. அப்படியான தீர்மானம் வந்தால், இந்திய அரசு கூட அதனை ஆதரிக்கும். அதே கோரிக்கைகளைத் தான், இங்கே டெசோ என்ற பெயரில் அமைப்பு நடத்தி, முன் வைத்துக் கொண்டுள்ளார்கள். அமெரிக்கா – இந்தியா – டெசோ ஆகியவை நேர்கோட்டில் பயணிப்பது இந்தப் புள்ளியில் தான்.
அனைத்துலக நாடுகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அந்தந்த நாடுகள் அவரவர் தேவையை ஒட்டி தான், தமிழீழச் சிக்கலில் நகர்வுகளை மேற் கொள்கின்றனர் என்ற உண்மை வெளிப்படுகின்றது. நமது விடுதலையை வெறும் ஞாயம் என்பதற்காக, யாரும் ஆதாரிப்பதும் இல்லை. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் ஆகிய மூன்று உலக நாடுகளைக் கடந்து நாம் நான்காம் உலக நாடுகளின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டிய நேரமிது.
நம்மைப் போல, நாடற்ற தேசங்களைக் கொண்டு போராடுகின்ற ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களை, நமக்கு நட்பு சக்திகளாக்கிக் கொண்டு, அவர்களுடன் ஒருங்கிணைப்பை பலப்படுத்திக் கொண்டு நாம் முன்னேற வேண்டியக் காலமும் இதுவே. அதற்கு மையமாக, தமிழீழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமான ஒருங்கிணைப்பும் அவசியமாக உள்ளது. அதை சாத்தியப்படுத்த உழைப்போம்! என பேசினார்.
திரு ஜார்ஜ்(பூவுலகின் நண்பர்கள்) கருத்தரங்கத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந்தார். கரலொலியுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில், திரு பிரமீதியஸ்(மக்கள் நல்வாழ்வு இயக்கம்) நன்றியுரையாற்றினார். நிகழ்வில், திரளான உணர்வாளர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.
 

0 கருத்துகள்: