கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை - தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்.

நிதி ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை த.தே.பொ.க பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்.

நாம் மதிப்பிட்டதைப் போலவே இந்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை  மாநிலங்களின் மீது சுமத்துவதற்கு உறுதியான திட்டம் தீட்டிவிட்டது. அதிலும் தமிழ் நாட்டை வஞ்சிப்பதில் குறியாக உள்ளது.  இந்திய அரசு தான் வசூலிக்கும் வரி வருமானத்தில்  மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது  என்பது குறித்து ஆய்வு செய்ய  இந்திய நிதியமைச்சர் நியமித்த இரகுராம்ராஜன் குழு  அளித்துள்ள அறிக்கை 26.09.2013 அன்று வெளியாகி உள்ளது.

இரகுராம் ராஜன் குழு தனது பரிந்துரையை கடந்த செப்டம்பர் 2 ஆம் நாளே நிதியமைச்சரிடம் அளித்துவிட்ட போதிலும் அவ்வறிக்கை  நிதியமைச்சகத்தின் ஆய்வுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைமுக வரியிலும், நேரடி வரியிலும் இந்திய அரசு திரட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படும் வரியினங்களின் பங்கீட்டு விகித்ததை தீர்மானிக்கவும், மாநிலங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யவும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. இப்போது 13 ஆவது  நிதி ஆணையம் செயலில் உள்ளது.

நிதி ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்படும் அமைப்பாகும். அது இருக்கும் போதே அரசமைப்புச் சட்டத்திற்கு தொடர்பில்லாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதே செய்தி குறித்து முடிவு செய்ய  இன்னொருக் குழுவை  நியமைச்சர் ப.சிதம்பரம் நியமித்ததே கடும் அத்துமீறலாகும்.

நிதியாணையம் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டப் பின்பே தனது பரிந்துரையை அளிக்கிறது.  ஆனால், நிதியமைச்சர் நியமித்த  நிதிப்பங்கீட்டு குழுவுக்கு அப்படி ஒரு சட்டக் கடப்பாடே இல்லை. எனவே, தானடித்த மூப்பாக இப்பரிந்துரையை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டுமொத்த வரிப்பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கு  இரகுராம் ராஜன் குழு அளித்துள்ளப் பரிந்துரையை உற்று நோக்கினால், செயல்திறன் உள்ள மாநிலங்களை தண்டிக்கும் நோக்கில் அது அமைந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.  குறிப்பாக இப்பரிந்துரை  தமிழகத்தின் மீதுமிகக் கொடுமையான நிதித்தாக்குதலைத் தொடுக்கிறது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தகுதியான ஒட்டுமொத்த வரி நிதியில் அனைத்து மாநிலங்களுக்கும்  தலா 8.4 விழுக்காட்டுத் தொகை  வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 91.6 விழுக்காட்டு நிதியை தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு  முக்கால் பங்கும் செயல்திறன் உள்ள மாநிலங்களுக்கு கால்பங்கும் என்ற அளவில் பிரித்துக்கொடுக்கலாம் என்றும் இரகுராம் ராஜன் குழு அறிக்கை வரையறுக்கிறது. 

தேவையுள்ள மாநிலங்கள் (needed states) என்பதைத் தீர்மானிக்க வளர்ச்சியின்மையை (underdevelopment ) அளவுகோலாக இரகுராம்ராஜன் குழு வைத்துக்கொள்கிறது. வளர்ச்சி குறித்த 10 முக்கிய அளவுகோல்களைக் கொண்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டை (underdevelopment  index)      இக்குழு வரையறுத்தது.

1)       மாநிலத்தின் தனி நபர் மாத நுகர்வுச் செலவு 2) கல்வி நிலை 3) உடல் நலம் 4) குடும்பத்தில் உள்ள வசதிகள் 5) வறுமை விகிதம் 6)பெண் கல்வி 7) மாநில மக்கள் தொகையில்  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் 8) நகரமயமாக்கல் விகிதம் 9) மக்களிடையே நிதி ஆதாரப்பகிர்வு 10) சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்  ஆகிய  பத்து கூறுகளில்  ஒரு  மாநிலம் எந்த அளவுக்கு பின் தங்கியிருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கான வளர்சியின்மைக் குறியீடு வழங்கப்படும்.

இந்த வளர்ச்சியின்மைக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை  மூன்று தொகுதிகளாக இரகுராம் ராஜன் குழு வகைப்படுத்துகிறது.

முற்றிலும் எந்த வளர்ச்சியும் இன்மை என்பதை  1 ஆகக் கொண்டு இந்த குறியீட்டு அளவு  தீர்மானிக்கப்பட்டது.   இதன்படி 0.6 க்கு மேல் வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள்  “மிகவும் வளர்ச்சிக்குறைவான   மாநிலங்கள்    (least developed) என்றும், 0.4 க்கும் 0.6 க்கும் இடைப்பட்ட வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள்  “வளர்ச்சிக் குறைவான   (less developed)  மாநிலங்கள் என்றும் 0.4 க்குக் கீழ் வளச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் ஒப்பீட்டளவில் வளர்ந்த  (relatively developed)  மாநிலங்கள்  என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.  

பீகார் , மத்தியப் பிரதேசம்,  இராசஸ்தான், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்கள்  மிகவும் வளர்ச்சிக் குறைவான மாநிலங்கள் என்றப் பட்டியலில் வருகின்றன. இவற்றிக்கு நிதித்தேவை அதிகம் என மதிப்பிடப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதே இரகுராம்ராஜன் குழுவின் பரிந்துரை.

இவ் வகைப்பாட்டின்படி குசராத் , ஆந்திரா, பஞ்சாப்  போன்ற மாநிலங்கள் கூட வளர்ச்சிக்குறைவான மாநிலங்கள்  எனப் பட்டியலிடப்பட்டு அவற்றிக்கு தமிழ்நாட்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டில்  0.34 பெற்று ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலம் எனற கிரீடம் சூட்டப்பட்டு  நிதி ஒதுக்கிட்டில் கீழ் நிலையில் வைக்கப்படுகிறது.

கல்வி, சாலை வசதி உள்ளிட்டவற்றில் பிற மாநிலங்களைவிட  சொந்த முயற்சியில்  முன்னேற்றம் கண்டதால் தமிழ் நாட்டிற்கு இரகுராம் ராஜன் குழு அளிக்கிற பரிசு இது.

வரி வசூலில் தமிழ்நாடு இந்தியாவின் பெரும்பாலான பிற மாநிலங்களை விட திறன் பெற்ற மாநிலமாகும்.  இங்கேயும் வரி ஏய்ப்பவர்கள் உண்டு என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவு.

 தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகக் கூறப்படும் குசராத், மகாராட்டிராவை விட தமிழ்நாட்டில்  வரி வசூல் விகிதம் அதிகமாகும்.  2012-2013 ஆம் நிதியாண்டில் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசு அள்ளிச்சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.  இது இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வசூலில் 14.12 விழுக்காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த  நிதி ஆண்டு  தமிழகத்திற்கு ஒதுக்கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங்களின்  மொத்த அளவு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

மாநிலங்களுக்கென்று இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மொத்த நிதித்தொகையில் தமிழகத்திற்கு வழங்குவது 4.18 விழுக்காடே ஆகும். அதாவது 14.12 விழுக்காடு எடுத்துக்கொண்டு வரிப் பங்காக 4.18 மட்டுமே வழங்குகிறது.

13 ஆவது நிதி ஆணையம் இந்திய அரசு  மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்யும் மொத்த நிதித் தொகையில் தமிழ்நாட்டுக்கு 5.01 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.  திட்டக்குழு  4.46  விழுக்காடு பகிர்ந்த்தளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால் இந்திய அரசு தமிழத்திற்கு அளித்ததோ 4.18 விழுக்காடு  தொகை.

 இதையும் ஏறத்தாழ பாதியாகக் குறைத்து 2.51   விழுக்காடு தொகையை தமிழ் நாட்டிற்குக் கொடுத்தால் போதும் என இரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்றப் பட்டியலில்  தமிழ்நாட்டை விட  முன்னே உள்ள கேரளாவுக்கு செய்த நிதி ஒதுக்கீட்டையும் விட இது குறைவானது.  இதற்கு முன்னர் மாநிலங்களுக்கு இடையில் நிதிப்பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கபட்ட  காட்கில் வழிமுறை (பார்முலா), காட்கில்- முகர்ஜி வழிமுறை  ஆகிய  அனைத்தையும் விட இரகுராம் ராஜன் குழு வழிமுறை தமிழகத்தைப் பெரிதும் வஞ்சிக்கக்கூடியது.

இந்திய அரசு தமிழ் நாட்டிலிருந்து அள்ளிச்செல்லும் வரி வருமானத்தில் பாதியையாவது தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, இருக்கும் குறைவான ஒதுக்கீட்டையும் இன்னும் பாதியாகக் குறைப்பது  இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கில் இன்னும் ஒரு கொடிய நடவடிக்கையாகும்.

இந்திய அரசின் இந்த நிதித் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக முதலமைச்சர் செயலலிதா தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இரகுராம் ராஜன் குழு பரிந்துரையை  இந்திய அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும்.


இந்திய அரசு தனது நயவஞ்சகத்தை தொடருமேயானால் தமிழகத்திலிருந்து இந்திய அரசு வரி வசூல் செய்வதை தடுப்போம் என தமிழக அரசும் மக்களும் களம் இறங்கவேண்டிய  நேரமிது. 
    
                                                                                  கி.வெங்கட்ராமன் 
 பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்:

இலங்கைக்குப் போர்க்கப்பல்கள் - யாரை எதிர்த்து? - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழின அழிப்பு செயல்பாட்டில் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத தீவிர வன்மத்தோடு இந்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. இலங்கை அரசுக்கு இரண்டு போர்க்கப்பல்களை வழங்குவதற்கு செய்து கொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தம் அத்தகையது.
கோவா கப்பல் கட்டும் கூடத்தில் இரண்டு அதி நவீன போர்க்கப்பல்களைக் கட்டி முடித்து வரும் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியஅரசு இவ்வொப் பந்தபடி வழங்க இருக்கிறது.
2008--2009 தமிழின அழிப்புப் போரில் சிங்கள வெறி இலங்கைக்கு எல்லா வகை உதவிகளையும் செய்து அந்த போரை இணைந்து நடத்தியது இந்தியா. போர்க் கருவிகள், உளவுத்தகவல்கள், உளவுக்கருவிகள் போன்ற வற்றைக் கொடுத்ததோடு சிங்கள அரசுடன் இணைந்து போரை வழிநடத்தியது இந்தியஅரசு.
எல்லாம் முடிந்த பிறகு இப்போது இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல்களை வழங்க வேண்டிய அவசி யம் என்ன? இந்தியப் பெருங்கடல் வல்லரசு களான சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு நண்பர்கள். சீனா வால் இலங்கைக்கு ஆபத்து வரப்போவது இல்லை. பாகிஸ்தானும் இலங் கைக்கு நட்புநாடுதான் இவ்வாறு இருக்க இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்து ஆபத்து வந்து விடப் போகிறது? எதுவும் இல்லை.
சர்வதேச பயங்கரவாதிகள் மூலமான அச்சுறுத்தல் இந்தியாவின் தெற்கிலிருந்து வரக்கூடும் என்றால் அதற்கு இந்தியா தனது கடற்படையை வலுப்படுத்திக் கொள்ளுமேயல்லாமல் இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் தருவதன் மூலமாக இந்த பாதுகாப்பு நட வடிக்கையை மேற் கொண்டுவிட முடியாது.
‘நாம் தரவில்லை என்றால், சீனா தந்து விடும்’ என்ற நிரந்தரப் பல்லவியை இதற்கும் பாடுகிறார்கள். இந்தியாப் போர்க்கப்பல்கள் தந்துவிட்டால் இலங்கை சீனாவிடம் போர்க்கப்பலோ வேறு நவீன ஆயுதங்களோ வாங்காது என்ற உத்தரவாதம் ஏதும் உண்டா? அதுவும் இல்லை. பிறகு எதற்காக இலங்கைக்குப் போர்க்கப்பல் வழங்க வேண்டும்?
ஈழத்தமிழர்களை அழித்தாயிற்று. இனி தமிழ் நாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தலில் வைக்க வேண் டும் என்பதே இந்நடவடிக் கையின் முதன்மை யான உள்நோக்க மாகும்.
இப்போது ஏற்பட்ட அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவார்களானால் அதற்கும் முன்தடுப்பாக இது அமைய வேண்டும் என்பது அடுத்த நிலை நோக்கமாகும்.
கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்ததே இல்லை என்று அப்பட்டமான ஒரு பொய்யுரையை உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசு அளித்துள்ளதையும் இந்த நடவடிக்கையையும் இணைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குவதற்கும், வரும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சி கொண்டால் அதை எதிர் கொள்வ தற்கு சிங்கள இலங்கையைக் கூட்டாளியாக பயன் படுத்திக் கொள்வதற்கும் இசைய செய்யப்பட்டுள்ள தொலை நோக்குத் திட்டமே போர்க்கப்பல் வழங்கும் திட்டமாகும்.
சீனா குறித்த அணுகுமுறை தொடர்பாக இந்தியா விற்கும் இலங்கைக்கும் எவ்வளவுதான் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழின அழிப்பில் இந்த இரண்டு ஆரிய வகை அரசுகளும் எப்போதும் கூட்டாளியாகவே இருப் பார்கள்.
இலங்கைக்கு இந்தியா போர்க் கப்பல்கள் வழங்கும் திட்டம் தமிழர்களுக்கு மேலுமொரு எச்சரிக்கையாகும்.

0 கருத்துகள்:

கச்சத் தீவு ஒப்பந்தத்தின் சட்ட மீறல் - தோழர் கி.வெங்கட்ராமன்

இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற உண்மையை இதற்குப் பிறகும் புரிந்து கொள்ளவில்லையென்றால் தமிழர்களைப்போல ஏமாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.
கச்சத்தீவு குறித்த உச்ச நீதிமன்ற வழக்கில் இந்திய அரசு 30.8.2013 அன்று முன் வைத்த உறுதி உரையையே (பிரமாணப்பத்திரம்) இங்கு குறிப்பிடுகிறோம்.
கச்சத்தீவையும் இந்தியப் பெருங்கடல் பரப்பில் தமிழகத்தை ஒட்டியப் பகுதிகளில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையையும் இலங்கைக்கு அளித்த 1974 ஒப்பந்தம், 1976 ஒப்பந்தம் ஆகியவற்றை எதிர்த்து தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இதன் விசாரணை 30.8.2013 அன்று நீதிபதிகள் பி.எஸ். சவான், எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இதில் தனது உறுதி உரையை தாக்கல் செய்த இந்திய அரசு “இந்தியாவுக்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பரப்பும் இவ்வொப் பந்தங்களில் மூலம் இலங்கைக்கு பிரித்து அளிக்கப்படவில்லை.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒத்துக் கொள்ளபட்ட எல்லை வரையறுப்பு இல்லாத நிலையில் கச்சத்தீவும் அதை தொடர்ந்துள்ள கடல் பரப்பும் விவாதத்திற்குரிய ஆட்சிப் பரப்பாகவே இருந்தன. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் இச்சிக்கலைத் தீர்த்து எல்லை வரையறுப்புச் செய்ய வழி ஏற்படுத்தின. இக்கடற் பரப்பில் இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி உரிமைக் கோரமுடியாது” எனக்கூறியது.
பொய்யிலேயே ஈவு இரக்கமற்ற பொய் என்பது இதுதான். கச்சத்தீவும் அதைத் தொடர்ந்த கடற்பரப்பும் பன்னெடுங்காலமாக தமிழர்களின் பரப்பாக இருந்ததை மறுக்கும் அப்பட்டமானப் பொய்யுரை இது.
இச்சிக்கலில் இந்திய அரசின் தமிழ்ப்பகைச் சூதை புரிந்துகொள்ள கச்சத்தீவு குறித்த 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை அறிந்துகொள்வது தேவையானது.
1974 ஒப்பந்தமும் 1976 ஒப்பந்தமும் தனித்தனியானவை. ஒன்றின் துணை ஒப்பந்த மாக இன்னொன்றைப் புரிந்துகொள்ளக் கூடாது.
இந்தியாவின் தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே உள்ள கடற்பரப்பு மூன்று பகுதிகளைக் கொண்டது.
1.            இராமேசுவரத்திற்கும் இலங்கையின் (ஈழத்தின்) தலைமன்னாருக்கும் இடையில் ஆதம்பாலம் வரை உள்ள பாக் நீரிணைக் கடற்பரப்பு. இப்பரப்பில் இராமேசுவரத்திலிருந்து வடகிழக்கில் 12 கடல் மைல் தலைமன்னாரிலிருந்து வட மேற்கில் 18 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு உள்ளது.
2.            ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா வரை உள்ள கடற் பரப்பு.
3.            பாக் நீரிணை, மன்னார் வளைகுடா தவிர்த்த வங்காள வளைகுடாவில் பிற பகுதிகள்.
கச்சத்தீவு ஒப்பந்தம் என்று பொது வழக்கில் நாம் பேசுகிற 1974 ஒப்பந்தம் பாக் நீரிணை கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தமாகும். இதற்குள் கச்சத்தீவு வருகிறது. இவ்வொப்பந்தத்தின் மையச் சிக்கலும் அதுதான். அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 1974 சூன் 26 அன்றும், இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்கா 1974 சூன் 28 அன்றும் கையொப்பமிட்டு 1974 சூலை 8 முதல் செயலுக்கு வந்த ஒப்பந்தம் இது.
1976 ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள வளை குடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக் கும் உள்ள உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். 26.3.1976 அன்று இந்திய அரசின்வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் இலங்கை அரசு பாதுகாப்புத்துறைச் செயலாளர் டபிள்யூ. ட்டி ஜெய சிங்கே ஆகியோர் கையெழுத்திட்டனர். மன்னார் வளைகுடா பகுதியிலும் வங்காள வளைகுடா கடல் பரப்பிலும் இந்திய (தமிழ்நாடு) மீனவர்கள் மீன்பிடிக்க மாட்டார்கள். இந்தியக் கடல் எல்லையை ஒட்டியே அவர்கள் புழங்குவார்கள் என இவ்வொப்பந்தம், வரையறுக்கிறது.
இந்த இரு ஒப்பந்தங்களுமே தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தையும், உயிர் வாழும் உரிமையையும் பாதிக்ககூடியவையாகும். ஆயினும் கச்சத் தீவு குறித்த 1974 ஒப்பந்தம் மீனவர்களை வாழ்வுரிமைச் சிக்கல் மட்டுமின்றி தமிழ்நாட்டின் தாயக உரிமை பறிப்பும் ஆகும்.
எனவே கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்தே இங்கே முதன்மையாக விவாதிக்கிறோம்.
தமிழினத்திற்கெதிரான வன்மத்தோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும் இது. இந்திய அரசின் தமிழினப்பகைக் கொள்கை வரலாறு நெடுகிலும் சாரத்தில் ஒரே நிலையிலேயே உள்ளது என்பதை இவ்வொப்பந்தமும், இது குறித்த இந்திய அரசின் நீதிமன்ற உறுதியுரையும் தெளிவுப்படுத்தும். இந்திய அரசின் இந்த இனப்பகைப் போக்கு இந்திரா காந்திக்கு முன் இந்திரா காந்திக்குப் பின் எனப் பிரித்துப்பார்க்க முடியாதது என்பதையும் இது உறுதிப்படுத்தும்.
“1974 ஒப்பந்தத்தின் வழியாக இந்தியாவின் ஆட்சிப்பரப்பில் எந்தப் பகுதியும் பிரித்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு வழங்கப்படவில்லை.” என்று இந்திய அரசுக் கூறுவது அப்பட்டமானப் பொய்யுரை என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துக்காட்ட முடியும்.
கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததையும், சுதந்திர இந்தியாவில் சமீன் முறை ஒழிக்கப்பட்ட பிறகும் அது இராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப் பதையும் முதல் நிலை ஆதாரங்களோடு புலவர் செ. இராசு உறுதிப்படுத்தி யிருக்கிறார்.
(“நமது கச்சத்தீவு” என்ற புலவர் செ. இராசு அவர்களின் நூல் முதல் பதிப்பாக 1997 இல் வந்த போது அதன் வெளியீட்டு விழாவை மாபெரும் எழுச்சிக் கூட்டமாக 12.4.1997 அன்று தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. இந்நூலின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2009 இல் ஈரோடு புதுமலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.)
•             1605 முதல் குத்துக்கால் தீவு, இராமசாமித்தீவு, மண்ணாளித் தீவு, கச்சத்தீவு, குருசடித் தீவு, நடுத்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும் 69 கடற்கரை கிராமங்களும் சேது அரசர்க்கு உரியதாக இருந்தன.
•             கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறுகிறது.
•             1803 முதல் சென்னை மாகாணத்தில் சமீன்தாரி முறை செயலுக்கு வந்தது. இராணி மங்களேசுவரி நாச்சியார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவோடு 1803 முதல் 1812 வரை சேதுபதி சமீன்தாரிணியாக இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட சமீன் உரிமைப்பட்டயத்தில் கச்சத்தீவுக் குறிக்கப்பட்டது.
•             1822 இல் கிழக்கிந்தியக் கம்பெனி சேதுபதி சமீனிடமிருந்து கச்சத்தீவை குத்த ககைக்குப் பெற்றது அதற்கான பத்திர ஆவணங்கள் உள்ளன.
•             1858 இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாக் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து விக்டோரியா பேரரசி வெளியிட்ட பேரறிக்கையில் கச்சத்தீவு சேதுபதி மன்னர்களுக்கு உரிய பகுதியாகவே குறிக்கப்பட்டது. இலங்கை அரசுச் செயலாளராக 1966 இல் இருந்த பி.பி. பியரிஸ் இதனை உறுதி செய்திருக்கிறார்.
•             1913 சூலை 1 முதல் 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவு உள்ளிட்ட சில தீவுகளை சென்னை மாகாண அரசு குத்தகைக்குப் பெற்றது. இராமநாதபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இத்தீவுகள் இராமநாதபுரம் அரசர்களுக்கு உரியவை என தெளிவாக்கப்பட்டுள்ளது.
•             1947 இல் பதிவான இன்னொரு குத்தகைப் பத்திரத்திலும் “இராமநாதபுரம் ஜில்லா இராமேசுவரம் சப் ரிஜிஸ்டிரேசனுக்கு தனுஸ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே இருக்கும் சமஸ்தானத்திற்குப் பாத்தியமான கச்சத்தீவு” என்று இருக்கிறது.
•             1957 இல் வெளியான இராமநாதபுரம் பதிவாளர் மாவட்டம் குறித்த அரசின் ஆவணக் குறிப்பில் பக்கம் 107 இல் தனுஸ் கோடி கிராம நிர்வாகத்திற்கு உட்பட்டதாக கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.
இந்திராகாந்தியும் சிறீமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக 1972 இல் வெளியான இராமநாதபுர மாவட்ட விவரச் சுவடியில் (இராமநாதபுரம் கெசட்டியர்-1972) “கச்சத்தீவு இராமேசுவரத் திற்கு வட கிழக்கில் 10 மைல் தொலைவில் இருக்கும் அம்மாவட்ட பகுதி” என்றும் அதன் சர்வே எண்:1250 என்றும் அத்தீவின் பரப்பளவு: 285.20 ஏக்கர் என்றும் அங்குள்ள கத்தோலிக்க ஆலயத்தில் தங்கச்சி மடம் பங்குத் தந்தை வழிபாடு நடத்திக் கொடுப்பார் என்றும் குறிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி இராமேசுவரம் கர்ணம் (அன்றைய கிராம நிர்வாக அலுவலர்) நிர்வாகத்தில் கச்சத் தீவு இருக்கிறது என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
அதாவது 1974 ஒப்பந்தம் கையொப்பமிடும் காலத்தில் சர்வே எண் 1250 எனக் குறிக்கப் பட்ட இராமநாதபுர மாவட்ட பகுதியைத்தான் தமிழகத்தின் இசைவின்றி இலங்கைக்கு சட்டவிரோதமாக இந்தியா அளித்துள்ளது.
ஆனால் அப்படி ஒரு பகுதியே இந்தியாவின் எல்லைக் குட்பட்டு இல்லையென்று இப்போது உச்ச நீதிமன்றத்தில் சத்தியம் செய்கிறது.
இந்திய எல்லைக்குட்பட்ட தமிழகத்தின் தாயகப் பகுதியான கச்சத்தீவை இரு பிரதமர் களின் ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே கொடுத்தது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தான் செய்துள்ள இந்தக் குற்றச் செயலை மறைப்பதற்காக கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்ததே இல்லை என நெஞ்சாரப் பொய்சொல்கிறது.
இது போன்ற ஒரு பொய்யை மேற்கு வங்கம் தொடர்பாக இந்திய அரசு உச்சநீதி மன்றத்தில் சொன்ன போது அப்பொய்யை உச்சநீதிமன்றம் கடுமையாக நிராகரித்த வரலாறு உண்டு. பெருபாரி குறித்த வழக்கு அது.
மேற்கு வங்கத்தின் பகுதியாக இருந்த பெருபாரி யூனியன் என்ற 8.75 சதுரமைல் பரப்புள்ள பகுதியை 1958 செப்டம்பரில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்தது. அன்று மேற்கு வங்காள முதலமைச்சராக இருந்த காங்கிரசு கட்சியின் பி.சி. இராய் இந்த ஒப்பந்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எதிர்ப்புக் கிளப்பினார்.
இது குறித்து சட்ட நிலையை விளக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்றத்தை அணுகினார். 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் இது குறித்து விசாரித்து 1960 மார்ச்சில் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கிலும் இந்திய அரசு “சர்ச்சைக்குரிய எல்லைச் சிக்கலை தீர்த்துக் கொள்வ தற்கான ஒப்பந்தம்தானே தவிர இந்திய ஆட்சிப் பகுதி எதையும் பாகிஸ்தானுக்கு அளிக்கவில்லை” என்று வாதிட்டது. இது முற்றிலும் பொய் எனக் கடுமையாகச் சாடி உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது. இந்திய ஆட்சிப் பரப்பாக பெருபாரி யூனியன் இருந்ததை உறுதி செய்து, அப்பகுதியை பாகிஸ்தானுக்கு அளித்தது. அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனத் தெளிவுப்படுத்தியது.
இவ்வொப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் அரசமைப்புச் சட்டக் கூறு 368 இன்படி, அரசமைப்புச் சட்ட கூறு 1 இல் திருத்தம் செய்ய வேண்டும். என வழி காட்டியது.
இதே நிலைதான் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கும் உள்ளது. 1974 இல் ஒப்பந்தம் செய்யப் பட்டாலும் இன்று வரை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் எதுவும் செய்யப் படவில்லை. அரசமைப்புச் சட்டக் கூறு 3 இன் படி மாநில எல்லை மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச்சட்டம் கூட நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து 1974 சூலை 23 அன்று நாடாளு மன்ற மக்களவையில் இவ்வொப்பந்தம் குறித்து ஒரு விவர அறிக்கை தாக்கல் செய்ததோடு முடித்துக் கொண்டது.
அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மேற்கு வங்கத்தின் பி.சி.இராயைப் போல வலுவாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அரசமைப்புச் சட்டத் தில் திருத்தம் செய்யாமல் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தியிருக்கவே முடியாது.
அன்று இருந்த சூழலில் அரசமைப்புச் சட்ட திருத்தத்திற்குத் தேவையான 3 இல் 2 பங்கு பெரும்பான்மை என்பது இந்திராகாந்திக்கு கடினமான ஒன்றாகும் இருந்திருக்கும்.
மாறாக அன்று தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறி கருணாநிதிக்கு பெரும் சவாலாக இருந்ததால், அதிலிருந்து மீள்வதற்காக காங்கிரசின் பக்கம் கருணாநிதி சாய்ந்தார். அவர் மீது எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றல்சாட்டுகளை பயன்படுத்தி இந்திரா காந்தியும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தன் பதவி அரசியலைப் பாதுகாத்துக் கொள்ள கச்சத்தீவை காவு கொடுக்க கருணாநிதி இசைந்தார். ஒப்புக்கு எதிர்ப்புதெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்.
மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகே 2008 இல் செயலலிதாவும் வழக்குத் தொடர்ந்தார்.
1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது.
“பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகிறபோது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.
‘கடல் பரப்பு குறித்த ஐ.நா. ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது.
இவ்வொப்பந்ததின் விதி 6(2) (article-6(2)) கீழ் வருமாறு கூறுகிறது
“இரண்டு அண்டை நாடுகளுக்கிடையில் கடல் எல்லை வரையறுப்பு நடப்பதென்றால் அவ்வாறான எல்லை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு  அது சிறப்புச் சூழல்களை விளக்கி நிலை நாட்டாது போனால் எல்லை பிரிப்பின் போது அருகாமை எல்லையிலிருந்து சம தொலைவு என்ற கோட்பாடே பின்பற்ற பட வேண்டும். இதுதான் 1958 ஐ.நா. சட்டம் கூறும் நிபந்தனையாகும்.
அதாவது இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்ததில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதன் படி பார்த்தால் கச்சத்தீவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது என்பது தெளிவாகும்.
1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின் பற்றப் படவில்லை. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல் சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்புதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் தலை மன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது.
வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டிருக்கிறது.
பெருபாரி ஒப்பந்தத்தில் கூட எல்லைப் பிரிப்பில் பரம எதிரியான பாகிஸ்தானோடு கூட சம தொலைவுக் கோட்பாடு பின்பற்றபட்டுள்ளது. எல்லைப் பகுதி கிடக்கையில் பாதிபாதியாகப் பிரிக்கப்பட்டது என உச்சநீதி மன்றமும் அதனை உறுதி செய்தது. 1976 இந்திய இலங்கை கடல் ஒப்பந்தத்தில் கூட சம தொலைவுக் கோட்பாடு பின்பற்ற பட்டிருக்கிறது.
ஆனால் 1974 ஒப்பந்தத்தில் மட்டும் சம தொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958 ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திரா சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்பட வில்லை.
”வரலாற்று ஆதாரங்களை கணக்கில் கொண்டும் இச்சிக்கலின் தன்மையை அனைத்துக் கோணங்களில் ஆய்ந்த பிறகும்” இவ்வொப்பந்தம் செய்யப்படுவதாக ஒப்பந்த ஆவணம் கூறுகிறது.
வரலாற்று ஆதாரங்களை கணக்கில் கொள்ளவே இல்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். சமதொலைவுக் கோட்பாட்டிலிருந்து விலகி வளைந்து எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டதற்கு தெளிவான சிறப்புக் காரணம் எதையும் குறிப்பிடாமல் ‘சிக்கலின் தன்மையை அனைத்துக் கோணங்களிலும் ஆய்ந்தபிறகு’ என மொட்டை யாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புக்காரணம் என்பது இந்திய அரசின் தமிழினப் பகைக் கொள்கைதான் அதை வெளிப்படையாக ஒப்பந்தத்தில் சொல்ல முடியாது என்பதால் ’சிக்கலின் தன்மையை அனைத்துக் கோணங்களிலும் ஆய்ந்தபிறகு’ என அரச உத்தி சொற்களில் கூறிச் செல்கிறார்கள்.
1958 க்குப்பிறகு பன்னாட்டு கடல் சட்டங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந் தாலும் சமதொலைவுக் கோட்பாடே இன்றளவும் செயலில் உள்ளது.
எடுத்துக்காட்டாக இப்போது செயலில் இருக்கும் 1982 கடல் சட்ட ஐ.நா. ஒப்பந்தத்தின் பிரிவு 15 சமதொலைவுக் கோட்பாட்டையே அடிப்படையில் வலியுறுத்துகிறது. சம வாய்ப்புப் பகிர்வு அடிப்படையில் எல்லை வரையறுப்பு (equitable delimitation) என்பதை சிறப்புக்காரணமாக கூறுகிறது.
1969 வட கடல் வழக்கு, 1993 ஜன் மாயேன் வழக்கு 2001 கத்தார்- பாஹ்ரைன் கடல் எல்லை வழக்கு ஆகிய அனைத்திலும் சம தொலைவுக் கோட்பாடே நடைமுறைச் சாத்தியமானது என பன்னாட்டு நீதி மன்றங்கள் வகுத்துக் கூறியுள்ளன.
எந்த நிலையிலும் 1974 கச்சத் தீவு ஒப்பந்தத்தை நியாயப்படுத்தவே முடியாது.
கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணானது.
எந்த சட்ட மீறலில் இறங்கியாவது தனது தமிழினப் பகை நோக்கை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே இந்திய வல்லாதிக்க அரசு குறியாக உள்ளது. 30.8.2013 அன்று உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியுரையும் இதனை உறுதி செய்கிறது.
இனியாவது இந்திய அரசின் இந்த இனப் பகைக் கொள்கையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடனடிப் பணியாக கச்சத்தீவை மீட்க களம் காண வேண்டும்.

0 கருத்துகள்:

தமிழை வழக்காடு மொழியாக்கும் போராட்டத்தை நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடத்த வேண்டும்! - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழக உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, மதுரையிலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஊர்திப் பரப்புரையாக மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 06.09.2013 அன்று காலை சென்னை வந்தடைந்தனர்.
இப்பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா, சென்னை பாரிமுனை உயர்நீதிமன்றம் வாயிலில் நடைபெற்றது. மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.இராமசாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன், முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பால். கனகராஜ் உள்ளிட்ட பல முன்னணி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும், திரளான வழக்கறிஞர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் அ.சவுந்திரராசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத் தமிழ்வேலன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சை யப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்னெடுத்து மதுரை வழக்கறிஞர்கள் முன்முயற்சியில் ஊர்திப் பரப்புரையும், இக்கண்டன ஆர்ப்பாட்டமும் முனைப்புடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அவர் களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி 348(2)இன்படி நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டுமெனக் கோருகிறோம். 1991ஆம் ஆண்டு இதே சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே புகுந்து, முதன்மை நீதிபதியின் அரங்கத்திற்கு வெளியே தமிழை வழக் காடு மொழியாக அறிவிக்கக் கோரி முழக்கம் எழுப்பினோம். துண்டறிக்கை விநியோகித்த எங்கள் தோழர்களை காவல் துறை கைது செய்தது.
அதன் பிறகு, தொடர்ச்சியாக இக்கோரிக்கையை நாம் முன்வைத்து வருகிறோம். அப்பொழுதெல்லாம், நமது வழக்கறிஞர்களிடையே கூட இக்கோரிக்கை குறித்து போதிய தெளிவில்லாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கு இக் கோரிக்கை தமிழக வழக்கறிஞர்களின் ஒட்டு மொத்தக் கோரிக் கையாக மலர்ந் திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக் கிறது.
அரசமைப்புச் சட்டவிதி 348(2) - ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியை, அம்மாநில நீதிமன்ற மொழியாக அறிவிக்க அம்மா நிலத்தின் அமைச்சரவை கூடி முடி வெடுத் தால் போதும் எனச் சொல்கிறது. ஆனால், இது தமிழர் களின் ஒட்டுமொத்த கோரிக்கை என்கிற வகையில், 2006ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை யிலேயே இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலை வருக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிமிடம் வரை இதற்கு பதிலில்லை.
தமிழ் - தமிழ்நாட்டின் அலுவல் மொழி மட்டுமல்ல, தமிழ் நாட்டின் தேசிய மொழியும் அதுவே! தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பது, இங்குள்ள ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது வழக்கு களில் என்ன நடைபெறுகின்றது என்பதைக் கூட அறிய விடாமல் அவர்களைக் கண்ணாடித் தடுப்பைப் போட்டு மறைக் கின்ற செயலாகும். ஒடுக்கப்பட்ட சமூக வழக்கறிஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்ற தடைக் கல்லாகும்.
வழக்கறிஞர்களாகிய உங்களிடம் நான் ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழை வழக்கு மொழி யாக்க வேண்டுமென்ற நமது போராட்டம், நீதி மன்றத்திற்கு வெளியே மட்டுமல்ல நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடைபெற வேண்டியி ருக்கிறது.
எனவே, இங்குள்ள வழக்கறி ஞர்கள் அனைவரும் இனி தாங்கள் உயர் நீதிமன்றத்தில் தமிழில்தான் வாதாடுவேன் என உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழிலேயே வழக்காட வேண்டும். அது ஒரு அழுத்தத்தைத் தரும்”.
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
இந்நிகழ்வில், திரளான வழக்கறிஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தை யொட்டி, 6.9.2013 அன்று ஒருநாள் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்து, தமிழை உயர்நீதி மன்றத்தின் மொழியாக்க வலியுறுத்தி த.தே.பொ.க. சார்பில் சென்னையின் பல பகுதிகளில் சுவரொட் டிகள் ஒட்டப் பட்டன.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலா ளர் தோழர் இரா.இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோ வேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் தமிழர் கண்ணோட்டம் இணைய இதழ் பொறுப்பாளர் தோழர் கோபிநாத், பாலா உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இந் நிகழ்வில் பங் கேற்றனர்.

0 கருத்துகள்:

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு சட்டப்படித் தவறு - தோழர் கி.வெங்கட்ராமன்

இனக்கொலையாளி இராசபட்சேயை உலகக் கண்டனத்திலிருந்தும், பன்னாட்டு நீதிமன்ற விசார ணையிலிருந்தும் பாதுகாக்க இந்தியா பல முனைகளி லும் முயன்றுவருகிறது. அவற்றுள் ஒன்றுதான் இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் முயற்சி.
உலகெங்குமுள்ள பல்வேறு மனித உரிமை அமைப்பு களின் எதிர்ப்புகளுக்கிடையே வரும் 2013 நவம்பர் 15 முதல் 17 வரை காமன்வெல்த் நாட்டு அரசுகளின் தலைவர்கள் 23ஆவது மாநாடு - அதாவது காமன் வெல்த் உச்சி மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்பு வில் நடைபெற உள்ளது. காமன்வெல்த் மரபுப்படி எந்த நாட்டில் உச்சி மாநாடு நடக்கிறதோ அந்த நாட்டின் அரசுத் தலைவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக இருப்பார். அந்த வகையில் இலங்கையில் இம்மாநாடு நடப்பதன் மூலம் வரும் இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அவைத்தலைவராக இனக் கொலை யாளி இராசபட்சே இருப்பான்.
உலகமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, கேள்விமுறையின்றி 2008-2009 இல் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் உலகச் சமூகத்தின் மனச்சான்று இப்போது தான் இலேசாக விழித்துப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. தமிழின உரிமை அமைப்புகளும் உலகெங்குமுள்ள மனித உரிமை செயல் பாட்டாளர்களும், சேனல்4 போன்ற ஊடகவியலாளர் களும் இடையறாது செய்த முயற்சிகளின் விளைவாக, சிங்களப் பேரினவாதம் அம்பலப்பட்டு வருகிறது.
2009 இல் இனக்கொலையாளி இராசபட்சேவுக்கு பாராட்டுரை வழங்கிய ஐ.நா. மனித உரிமை மன்றம் இன்று அவனைக் குற்றவாளி என இனங்காணத் தொடங்கிவிட்டது.
ஆனால் இந்த இனக்கொலையாளிக் கும்பலை பாதுகாக்கும் அரணாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. ஐ.நா,. மனித உரிமை ஆணையர் விரிவான முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு தமிழர்களுக்கெதிராக “இலங்கை அரசும் அதன் படைகளும் முள்ளிவாய்க் காலில் செய்துள்ள பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க தற்சார்பான புலன் விசார ணைக்குழு நியமிக்கப்பட்டு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத் தப்பட வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
காமன்வெல்த் அமைப்பிலும் இது எதிரொலித் தது. காமன்வெல்த் தலைமைச் செயலகம் இந்த மனித உரிமை மீறல் குறித்து வெளிப் படையான கண்டன அறிக்கை வெளியிட வேண்டும் என்ற முயற்சி 2009 இறுதியில் நடந்த போது அதை தடுத்ததும் இந்தியாதான். சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சில ஊடகங்கள் புகைப்பட மற்றும் காணொளி ஆதாரத்தோடு வெளி யிட்ட தகவல்களின் அடிப்படை யில் முள்ளிவாய்க்கால் பேரவலத் திற்கு காமன்வெல்த் தலைமைச் செயலகம் வெளிப்படையான கண் டன அறிக்கை வெளியிட வேண் டும் என அத்தலைமைச் செயலக அதிகாரிகள் உள்ளக அறிக்கை ஒன்றை அணியம் செய்து காமன் வெல்த் தலைமைச் செயலாளருக்கு 2009 அக்டோபரில் அளித்தனர். உறுப்புநாடுகளில் நிகழ்ந்த உள் நாட்டுச் சிக்கல் தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிட வேண் டாம் எனக் கூறி காமன்வெல்த் தலைமைச் செயலாளர் கமலேஷ் சர்மா நிராகரித்தார். இவர் இந்தி யாவைச் சேர்ந்தவர்.
அமுக்கப்பட்ட இந்த உள்ளக அறிக்கை 2010 ஆண்டில் கார்டியன் இதழில் கசிந்து வந்த போது உல கெங்கும் கண்டனக் குரல்கள் எழுந் தன.
இவ்வாறு கமலேஷ் சர்மா அறிக்கையை அமுக்கியது காமன் வெல்த் தீர்மானத்திற்கு எதிரானது. 1995 இல் நடைபெற்ற காமன் வெல்த் உச்சி மாநாட்டு அறிக்கை யில் “ஏதாவது ஒரு உறுப்பு நாடு தனது உள்நாட்டு மக்கள் தொடர் பாக கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருந்தால் அக்குற் றத்தை கண்டித்தோ அல்லது அக் குற்றச்செயல் வருத்தமளிப்பதாக அறிவித்தோ காமன்வெல்த் தலை மைச்செயலகம் வெளிப்படையான அறிக்கை வெளியிடலாம்.” என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கமலேஷ் சர்மா தன்னுடைய செயலக அதிகாரிகள் அறிக்கை தயாரித்தளித்த பிறகும் அதை வெளியிடாமல் இனக் கொலையாளி இராசபட்சேயை காப்பாற்றியது இந்திய அரசின் தூண்டுதலில்தான் என்று கருத இடமுண்டு.
காமன்வெல்த் அமைப்பின் வரலாற்றில் அதன் உறுப்பு நாடு கள் மீது கண்டனம் தெரிவிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ நடக்காத ஒன்றல்ல.
பெரிதும் பிரிட்டனின் முன் னாள் காலனிநாடுகளைக் கொண்டு 1949 இல் நிறுவப்பட்ட “காமன் வெல்த் தேசங்கள்” என்ற அமைப்பு இப்போது 54 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டு இயங்கு கிறது. அண்மையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பிஜிநாடு தற்காலிக மாக நீக்கிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 53 நாடுகளைக் கொண்டு காமன்வெல்த் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தலைவ ராக பிரிட்டனின் பேரரசி இரண் டாம் எலிசபெத் இருக்கிறார்.
எந்த உருப்படியான கட்டுத் திட்டமும் இல்லாத ஓர் அமைப் பாக இது தொடங்கப்பட்டிருந் தாலும் ஆண்டுகள் செல்ல செல்ல காமன்வெல்த் அமைப்பிலும் பல் வேறு சீர்திருத்தங்கள் நடை பெற் றன. அடிப்படையான சில மனித விழுமியங்களை பாதுகாப்பது காமன்வெல்த் அமைப்பின் கடமை யாகக் கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் காமன் வெல்த் அமைப்பின் நடவடிக்கை களும் சில நேரங்களில் அமைந்தன.
தென்னாப்பிரிக்கா அரசு 1960 ஆம் ஆண்டு கருப்பின மக்களுக் கெதிரான வெள்ளை நிறவெறி கொள்கையை தனது குடியரசுக் கொள்கையாக அறிவித்தது. உடன டியாக காமன் வெல்த்திலிருந்து தென்னாப்பிரிக்கா நீக்கப்பட்டது.
உகாண்டா அதிபர் இடிஅமீன் சாராயம் குடித்த குரங்குபோல் கண்மண்தெரியாத சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது 1977 இல் உகாண்டா நாடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிவைக்கப் பட்டது. அப்போது ஒரு நாட்டின் உள்நாட்டு சிக்கல் தொடர்பாக காமன்வெல்த் அமைப்பு தலையீடு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எல்லை மீறிய மனித உரிமை மீறல் நடக்கும் போது அதனை உள்நாட்டுச் சிக்க லென்று தள்ளிவிட முடியாது என இந்தியா உள்ளிட்ட நாடுகள் அப்போது காமன்வெல்த்தில் வாதம் புரிந்தன. அதன் பிறகே உகாண்டாவை நீக்கிவைக்கும் தீர்மானம் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் நிறைவேறியது.
வெள்ளை நிற வெறி தென்னாப் பிரிக்காவை உறுப்பாண்மையிலி ருந்து நீக்கியதோடு நிற்கவில்லை. காமன்வெல்த் உறுப்பு நாடுகள் தென்னாப்பிரிக்காவோடு எந்த வகை வணிக உறவும் விளை யாட்டு உள்ளிட்ட பண்பாட்டுத் துறை உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று 1985 இல் தீர்மானம் இயற்றியது. விளையாட்டுத் துறை யைப் பொருத்தளவில் 1977லிருந்தே தென்னப்பிரிக்கா புறக்கணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. மேற் சொன்ன தீர்மானம் அதனை மறு உறுதி செய்தது.
நெல்சன் மண்டேலா தலை மையில் நடைபெற்ற கருப்பின மக் களின் உரிமைப் போராட்டம் வெற்றிபெற்று, இன ஒதுக்கல் கொள்கை கைவிடப்படுவதாக 1994 இல் அறிவிக்கப்படும் வரை தென் னாப்பிரிக்கா மீது இந்த பொருளா தார தடை நீடித்தது.
இத்தீர்மானங்களை முன் மொழிந்து ஆதரவு திரட்டுவதில் முனைப்புக் காட்டிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் ஈழத் தமிழர்களை இனக் கொலை செய்த சிங்களப் பேரின வாத ஆட்சியாளர்களைப் பாது காப்பதில் இதே இந்தியா முனைப் புக் காட்டுகிறது.
காமன்வெல்த் தலைமைச் செய லாளர் இலங்கைக்கெதிரான கண் டன அறிக்கை கொடுக்க மறுத்த செய்தி கடந்த காமன்வெல்த் மாநாட்டில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது.
முன்னணி நபர்கள் குழு (Eminent Persons Group-EPG) என்பது காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளைப் பற்றி அறிக்கை தயாரித்து அளிக்கும் ஓர் வல்லுநர் குழுவாகும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையும் தேவையை ஒட்டியும் இந்த குழு நிறுவப்படும். மலேசியா வைச் சேர்ந்த அப்துல்லா அகமது பதாவி என்பவர் தலைமையில் நிறுவப்பட்டிருந்த பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட முன் னணி நபர்கள் குழு காமன் வெல்த் அமைப்பின் செயல்பாடு குறித்து கடந்த 2011 அக்டோபரில் ஆஸ்தி ரேலியாவில் நடந்த காமன்வெல்த் 22 ஆவது உச்சி மாநாட்டில் அறிக்கை முன் வைத்தது. தலைமைச் செயலகம் உள்பட காமன்வெல்த் அமைப்பின் ஒட்டுமொத்தச் செயல் பாடு கவலையளிக்கும் நிலையில் உள்ளது என்றும் இப்படியே போனால் காமன்வெல்த் என்ற ஒன்றே தேவையற்றதாக மாறி விடும் என்றும் இந்த அறிக்கை கூறியது.
இவ்வறிக்கை குறித்து 2011 இல் காமன்வெல்த் மாநாடு கூர்மை யான, சூடான விவாதங்களை நடத்தியது. அவ்விவாதத்தின் ஊடாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதெல் லாம் துள்ளிக்குதித்துச் சென்று அவ்விவாதத்தைத் தடுத்தவர்கள் இந்தியப் பேராளர்கள் ஆவர்.
காமன்வெல்த் உச்சி மாநாடு களின் விவாதங்களில் எலிசபெத் பேரரசி கலந்து கொள்வது மிக மிக அரிதான செய்தியாகும். ஆனால் கடந்த மாநாட்டில் விவாதத்தின் ஊடாக எலிசபெத் பேசினார். “உறுப்பு நாடுகளுக்குள் நடை பெறும் கடும் மனித உரிமை மீறல்களை காமன்வெல்த் கண்டு கொள்ளாமல் விட்டுவிடமுடியாது. இதற்குரிய அமைப்பு வழிப்பட்ட ஏற்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
இதனை அடுத்துப் பேசிய பிரிட்டன் பிரதமர் கேமரூன் “எல்லா உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கட்டுப்படும் வகையிலான கொள் கைப்பட்டயம் ஒன்றை (சார்ட்டர்) உருவாக்கலாம்” என்றார். இந்த முன்மொழிவு ஒரு மனதாக ஏற்கப் பட்டு அதற்கான குழு அமர்த்தப் பட்டது.
கடந்த இரண்டாண்டுகள் உறுப்புநாடுகளுக்கிடையே நடை பெற்ற தொடர் விவாதங்களை அடுத்து “காமன்வெல்த் பேரறிக்கை அல்லது கொள்கைப் பட்டயம் (காமன்வெல்த் சார்ட்டர்)” கடந்த 2012 அக்டோபரில் இறுதி செய்யப் பட்டது. காமன் வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசி கையெழுத் திட்டதை அடுத்து 2013 மார்ச்சு 1 முதல் இந்த காமன்வெல்த் கொள்கைப் பட்டயம் செயலுக்கு வந்தது. இந்தக் கொள்கைப் பட்டயம் காமன்வெல்த் உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தும் அதா வது இதனை மீறும் நாடுகள் மீது காமன்வெல்த் நடவடிக்கை எடுக்க லாம்.
16 கூறுகளைக் கொண்ட இந்தக் கொள்கைப் பட்டயம் உறுப்பு நாடுகளில் தேர்தல் வழிப்பட்ட சனநாயகம், மனித உரிமைப் பாது காப்பு, கருத்துரிமை, முரண்பட்ட சமூகங்களிக்கிடையே சகிப்புத் தன்மை, அதிகாரப்பரவல், சட்டத் தின் ஆட்சி ஆகியவை கட்டாயம் நிலவ வேண்டும் எனக்கூறுகிறது.
இலங்கையை பொருத்தளவில் மேற்கண்ட எதுவுமே செயலில் இல்லை.
இப்பிரச்சினையை கடந்த மாநாட்டிலேயே கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பெர் எடுத்துக்காட்டி கண்டன உரை யாற்றினார். குறிப்பாக காமன் வெல்த் 23 ஆவது உச்சி மாநாடு 2013 இல் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என இந்தியா உள் ளிட்ட நாடுகள் முன்மொழிந்த போது ஸ்டீபன் ஹார்பெர் மட்டு மின்றி அன்றைய ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியா கில்லார்ட் அம்மையாரும் கடுமையாக எதிர்த் தனர். மாநாட்டில் இராசபட்சே பேச எழுந்த போது “இரத்த வாடை வீசும் இந்த மனிதனின் பேச்சை எங்களால் செவி மெடுக்க முடி யாது” என்று கூறி ஸ்டீபன் ஹார் பெர் வெளிநடப்பு செய்தார். இலங்கையில் அடுத்த மாநாடு நடக் குமானால் அதில் கனடா பங்கு பெறாது எனவும் அறிவித்தார்.
இதற்கு முன்னர் இருந்த நிலைமை எதுவாக இருப்பினும் காமன்வெல்த்தின் கடந்த உச்சி மாநாட்டிற்கு பிறகு ஓர் புதிய நிலைமை தோன்றியுள்ளது. அது தான் 2013 மார்ச்சு 1 இல் செயலுக்கு வந்த காமன்வெல்த் கொள்கைப் பட்டயம்.
இக்கொள்கைப் பட்டயம் மனித உரிமைப்பாதுகாப்பு, அதிகாரப் பரவல், சட்டத்தின் ஆட்சி, சமூகங் களிக்கிடையே சகிப்புத் தன்மை, கருத்துரிமை, ஆகியவற்றை கட் டாயமாக்குகிறது என்பதை மேலே குறிப்பிட்டோம்.
இதில் மீறல் நடைபெற்றால் தொடர்புடைய நாடு காமன் வெல்த்தில் உறுப்பு வகிக்கத் தகுதி இழக்கிறது என்றாகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றம் உள்ளிட்ட பல்வேறு உலகநாட்டு அமைப்புகள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை ஏற்கவில்லையென்றா லும் மனிதகுலத்திற்கெதிரான குற்றம் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள் ளதை உறுதி செய்து விட்டன. இக்குற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் எனவும் தீர் மானித்து விட்டன.
இதுவே இலங்கையின் மீதான குற்றச்சாட்டுரையாகும். இக்குற்றச் சாட்டை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை காமன் வெல்த் அமைப்பிலிருந்து உடனடி யாக நீக்க வேண்டும். பிஜியைப் போல, பாகிஸ்தானை செய்ததை போல குறைந்தது இடை நீக்கம் செய்ய வேண்டும்.
அதற்கு முதல் படியாக 2013 இல் நவம்பரில் நடைபெறும் 23 ஆவது உச்சி மாநாட்டை வேறுநாட்டிற்கு மாற்ற வேண்டும். கொழும்புவில் நடத்தக் கூடாது.
இவ்வாறு கொழும்புவில் நடந்து காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக வரும் இரண்டாண்டு களுக்கு இனக்கொலையாளி இராச பட்சே நியமிக்கப்பட்டால் அவன் மீது தற்சார்பான பன்னாட்டு புலன் விசாரணை நடத்துவது சிக்கலாகும். இதைத்தான் இந்தியா விரும்புகிறது.
இந்தியாவின் இந்த இனப்பகை முயற்சியை எதிர்த்து தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் பெருந்திரள் போராட்டம் நடத்த களம் அமைப்பது உடனடித் தேவை ஆகும்.

0 கருத்துகள்:

உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் - தோழர் கி.வெங்கட்ராமன்

ஆவடியில் இயங்கும் இந்திய அரசுப் பாது காப்புத் துறைக்குச் சொந்தமான திண்ணூர்தி தொழிற்சாலை (Heavy Vehicles Factory - HVF) யிலும், பல்வேறு அரசுத் தொழில் நிறுவனங்களிலும் 2004ஆம் ஆண்டு தொடங்கி நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து, 25.08.2013 ஞாயிறு அன்று ஒருநாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடை பெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு நலச்சங்கம் (NPSERA) சார்பில், ஆவடி பேருந்து நிலையம் அருகில், காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடை பெற்ற இப்போராட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் திரு. மு.கண்ணன், செயலாளர் திரு. இரட்சகராஜா ஆகியோர் தலைமையேற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ், தமிழ் நாடு ஆசிரியர் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் திருமதி. தமிழ்ச்செல்வி, பத்திரிகையாளர் திரு. டி.எஸ்.எஸ்.மணி, தமிழின மான மீட்பு இயக்கத் தலைவர் திரு. சேக்காடு ஐ.மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர்.
நிறைவாக, மாலையில், தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன் உண்ணாப் போராட்டத்தை பழரசம் வழங்கி முடித்து வைத்து, நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:
“காலை முதல் மாலை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற நாம், ஓய்வூதி யத்தின் கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமெனக் கருதுகிறேன்.
வெறும் 33 ரூபாய்க்கு மேலே ஒருவர் சம்பாதித்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலானவர் என வரையறுத்துள்ள இந்தியத் திட்டக்குழுத் துணைத் தலைவராக உள்ள மாண்டேக் சிங் அலுவாலியா, தன்னுடைய அலுவ லக கழிப்பறையை சீரமைப் பதற்கு மட்டும் 66 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.
அவர் கேட்கிறார், தொழிலா ளர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமே, வேலை முடிந்து வீட்டுக் குச் சென்ற பிறகும் உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? எதற்காக உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கேட்கிறார். உங்களால் நாட்டுக்கு என்ன செல்வமதிப்பு சேர்க்கப்படு கிறது எனக் கேட்கிறார். இது கோட் பாட்டுப் பிரச்சினை.
ஓய்வூதியம் குறித்த கோட் பாட்டை நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான் அவருக்கு நாம் பதிலளிக்க முடியும். நாம் வாங்கு கின்ற சம்பளத்தின் ஒரு பகுதி தான் ஓய்வூதியமாக நமக்கு வழங்கப்படு கின்றது என்ற உண்மையை அவருக்குப் புரிய வைக்க வேண்டும்.
1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அப் போது போனஸ் வழங்குவது நிறுத் தப்பட்டது. நிறுவனத்திற்கு இலா பம் இருந்தால் மட்டும் தான், அதன் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு போனசாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலாபமில்லை யெனில் போனஸ் கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டது.
இதனை எதிர்த்து நீதிமன்றத் தில் முறையிட்ட போது, நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறப்பா னத் தீர்ப்பை வழங்கினார். போனஸ் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் (Deffered Wage) என அவர் தீர்ப்பு வழங்கினார். போனஸ் என்பது சம்பளத்தின் ஒரு பகுதி தான் என்பதை அத்தீர்ப்பின் மூலம் அவர் உறுதி செய்தார்.
அதே போல ஓய்வூதியம் (Pension) என்பது உழைப்புச் சக்திக்கான தேய்மானம் (Labour Power depreciation). ஒரு எந்திரம் இருக்கிற தென்றால் அதற்கென்று உள்ள வாராண்டி (Warranty) தனியாக வழங்கப்பட்டும் கூட, இருப்பு நிலைக்குறிப்பில் (Balance Sheet) அதன் தேய்மானமும் குறிப்பிடப் படுகின்றது. கட்டிடத்திற்கு தேய் மான நிதி வழங்கப்படுகிறது. அதே போல, உழைப்புச் சக்தியை வெளியி டும் தொழிலாளர்களுக்கான தேய் மானம் தான் ஓய்வூதியம். இதற் குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டும். இதை எல்லா நிலைக ளிலும் தொழிற்சங்கத் தோழர்கள் வலியுறுத்த வேண்டும். இதை உண ருவதில், உணர்த்துவதில் எவ்வித சமரசமும் கூடாது.
ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற் சாலையில் (Automated Industry) பணிபுரியும் தொழிலாளர் களுக்கு, உடல் உழைப்பாக இருக் கட்டும் அல்லது மூளை உழைப் பாக இருக்கட்டும், நாளொன்றுக்கு சராசரியாக 3200 கலோரிகள் சக்தி தேவைப்படுகின்றது. வயது முதிரும் போது இது நாளொன்றுக்கு 2100 ஆக தேய்கிறது.
ஒரு இயந்திரத்திற்கு பதில் இன்னொரு இயந்திரத்தை அவர் கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தொழிலாளர்களை அப் படி தூக்கிப்போட்டுவிட முடியாது. எனவே தான், தொழிலாளர் சக்தியின் (Labour power) இந்தத் தேய் மானத்தையே நாம் ஓய்வூதியமாகக் கேட்கிறோம். இந்தக் கோட் பாட்டை நாம் அழுத்தம் திருத்த மாகச் சொல்ல வேண்டும்.
தொழிற்சங்கங்கள் சமூக உணர் வுடன் வளர்த்தெடுக்கப்பட வேண் டியவை. பொதுப் பிரச்சினைகளில், பொது உரிமைச் சிக்கல்களில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும். ஆனால் நடப்ப தென்ன? தொழிற்சங்கங்கள் நடை முறையில் கூட்டு சுயநலமாக (Collective Selfishness) மாறிவிட்டன. தொழிலாளர்களின் இது போன்ற பலவீனங்களை வாய்ப்பாக பயன் படுத்திக் கொள்கின்ற ஆட்சியா ளர்கள், அதற்கென அவர்கள் காலம் எடுத்துக் கொண்டாலும் நம்மை பிளவுபடுத்தி காரியம் சாதிக்கின்றனர்.
அதனால் தான், தொழிற்சங் கங்கள், இரசிகர்களுக்கு ஏற்ப கச்சேரி வாசிக்கும் மன்றங்களாகச் சுருங்கி விட்டன. எனவே, தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மட்டுமின்றி, பொதுப் பிரச்சினைகளிலும் ஆர் வம் செலுத்த வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண் டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்கின்ற நாம், அதற்கு அடிப் படையான புதிய பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்தாக வேண்டும். அதை எதிர்க்காமல் இதை மட்டும் எதிர்க்க முடியாது. நம்முடைய ஞாயங்களை வலிமை யாக உணர்த்த வேண்டும். நாம் போராடுவது வீணல்ல. நம் போராட்டங்களுக்கு வலிமை யுண்டு. நம்முடைய ஞாயங்களுக்கும் வலிமையுண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக் கையோடு போராடுவோம்!”
இவ்வாறு தோழர் கி.வெங்கட் ராமன் பேசினார்.
இப்போராட்டத்தில், எச்.வி.எப். தொழிலாளர்களும், தமிழுணர் வாளர்களும் திரளாகப் பங்கேற்ற னர்.

0 கருத்துகள்: