கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

வளமான தமிழர் மரபின் தெளிவான பேராளர் நம்மாழ்வர் - தோழர் கி.வெங்கட்ராமன்

ஒவ்வொரு நாளையும் சக மனிதர்களுக்கு பயனுள்ள நாளாக்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவர். அப்படிப்பட்ட சிறப்பான தொரு வாழ்க்கையை நடத்தி மறைந்தவர் இயற்கைவேளாண் அறிவியலாளர், சூழலியல் போராளி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்கள்.தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தில் 1938 ஏப்ரல் 6 ஆம் நாள் பிறந்த நம்மாழ்வார் அவர்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து கடந்த 30.12.2013 அன்று இயற்கை எய்தினார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் இளம் அறிவியல் பட்டம் பெற்று, கோயில்பட்டி மண்டல வேளாண் ஆய்வுமையத்தில் வேளாண் அறிவியலாளராக பணியாற்றினார். அது பசுமைப் புரட்சி என்றப் பெயரால் வேதியியல் வேளாண்மை தொடங்கபட்டக் காலம்.
ஒட்டுமொத்த அரசுத்துறையும் வேளாண் தொழில் நிறுவனங்களின் முகவர்களாக மாற்றப்பட்டதையும், ஒட்டுமொத்த வேளாண்மை வெளி இடுபொருள்களைச் சார்ந்து அதிக செலவு பிடிக்கும் தொழிலாக மாற்றப்பட்டதையும் , வேளாண் நிலம் வேதி உப்புகளை கொட்டும் களமாக மாற்றப்பட்டதையும் கண்ட நம்மாழ்வார் இந்த அழிவுப் பணியில் தாமும் பங்குதாரராக இருக்க விரும்பாமல் அப்பணியிலிருந்து வெளியேறினார்.
இயற்கையோடு இயைந்த, வெளி இடுபொருள்கள் சாராத தற்சார் பான வேளாண்மையே மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் என்று உணர்ந்த நம்மாழ்வார் அதை பரப்புவதையே தம் வாழ் நாள் பணியாக முடிவு செய்து கொண்டார்.
இது அடுத்தடுத்தத் தளங்களில் அவருடைய கவனம் விரிவடைய காரணமாயிற்று. அரசு முன்வைத்துள்ள கல்வி முறை, பொருளியல் கொள்கை, ஆட்சி முறை, ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தற்சார்பை குலைத்து வருவதை எதிர்த்து போராடினால் அன்றி வேளாண்மையை மட்டும் தனியாகப் பாதுகாத்துவிட முடியாது என்று உணர்ந்த நம்மாழ்வார் பன்முகத் தளங்களில் தமதுப் பணிகளை விரிவுபடுத்தினார். இயற்கையை பாதுகாக்கும் சூழலியல் போராளியாக மலர்ந்தார்.
1979 ஆம் ஆண்டு “குடும்பம்’’ என்ற தொண்டு அமைப்பை நிறுவி இப் பணிகளை தொடங்கிய நம்மாழ்வார் அடுத்தடுத்து பல்வேறு அமைப்புகளை உருவாக்கி தமதுப் பணிகளைத் தொடர்ந்தார். இறுதியில் கடவூர் அருகில் அவர் நிறுவிய “வானகம்’’ மாற்று வாழ்வியல் பயிற்சி நிலையமாக உருவானது.
மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது, மக்களுக்கு கற்றுத் தருவது என்பதை தமது வாழ்க்கை நெடுகிலும் கடைபிடித்தார். அந்த வகையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த உழவர்கள் கூட இவரால் நாடெங்கிலும் வேளாண் அறிவியலாளராக அறிமுகப்படுத் தப்பட்டார்.
இன்றையக் கல்வி முறை உழைப் பிலிருந்து மனிதர்களைப் பிரித்து விடுவதையும், உழைப்பை இழிவாகக் கருத வைப்பதையும் பார்த்த நம்மாழ்வார் உழைப்போடு இணைந்த மாற்றுக் கல்வி முறைகளையும் சிந்தித்தார்.
இயற்கையோடு இயைந்த உற்பத்திமுறை ,உணவு முறை, வாழ் வியல் முறை ஆகியவை குறித்து நம்மாழ்வார் சிறார்களிடம் உரை யாடுகிற முறையே தனிச் சிறப்பானது. சிறார்களுடன் உரையாடுகிற போது மிக சிக்கலான அறிவியல் செய்திகளை மிக எளிமையா கவும் நேர்த்தியாகவும் அழகுற அவர் சொல்லும் பாங்கு அவருக்கே உரியத் தனிச் சிறப்பான ஒன்று. அப்போது அக்குழந்தைகளுக்கு இடையே தாடிவைத்த மூத்த குழந்தை ஒன்றை நாம் பார்க்க முடியும்.
1990-களில் தொடங்கி அடுத்தடுத்து தீவிரம் பெற்றுள்ள உலக மயப் பொருளியல் ஒட்டுமொத்த இயற்கையை சூறையாடுவதையும், மக்களிடம் பொதிந்துள்ள மரபான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை கொள்ளை அடிப்பதையும் மக்களுக்கு விளக்கி போராட்டக் களங்களை அமைப்பதில் நம்மாழ் வார் கவனம் செலுத்தினார்.
காலம் காலமாக மனிதர்களுக்கு மருந்தாகவும், வேளாண்மையில் பூச்சி விரட்டியாகவும் இன்னும் பல முனைகளில் பயன்படும் பொரு ளாகவும் விளங்கிவந்த வேம்பு, கிரேஸ் என்ற வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனத் தால் காப்பு ரிமை என்ற பெயரால் கிரேஸ் நீம் என்று பெயர் சூட்டப்பட்டு அந் நிறுவனத்தின் தனிச் சொத்தாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு அவரவர் தோட்டத்தில் நிற்கும் வேப்பமரம் கூட கிரேஸ் நீம் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட சொத்தாக மாறியது. அதன் இலையையோ பழத்தையோ, கொட்டையையோ, மரப்பட்டையையோ, வேப்ப எண்ணெய்யையோ எதைப் பயன்படுத்தினாலும் கிரேஸ் நிறுவனத்தாருக்கு காப்புத்தொகை கட்ட வேண்டிய சட்ட நிலைமை ஏற்பட்டது.
இதனைக் கண்டு நம்மாழ்வாரும் வடநாட்டில் வந்தனாசிவா அம்மையாரும் கொதித் தெழுந்தார் கள். நாடெங்கும் இந்த அநீதியை எதிர்க்க மக்களை அணிதிரட்டு வதில் பெருமுயற்சி மேற்கொண்டார்கள்.
உலக வர்த்தக அமைப்பு மாநாடு 1998 மே மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற போது அம்மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து இந்தியக் கொடியை கையிலேந்திக் கொண்டு நம்மாழ் வாரும் வந்தனா சிவாவும் நடத்திய ஆர்ப்பாட்டம் உலகின் கவனத்தை இச்சிக்கலில் ஈர்த்தது. வந்தனா சிவா தொடுத்த வழக்கின் காரணமாக வேம்பு தொடர்பான காப் புரிமை இரத்து செய்யப்பட்டது.
தமிழ் மக்களிடையே புழக்கத்தில் உள்ள பழமொழிகள், சொற் றொடர்கள், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை ஆழ்ந்து நோக்கிய நம்மாழ்வார் தமிழ் இனத்தின் அறிவியல் மரபை கண்டுணர்ந்து மக்களிடம் வெளிப்படுத்தியதோடு அவற்றை செயல்முறையில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் முனைப்புக் காட்டினார்.அந்த வகையில் தமிழினத்தின் வளமான அறிவியல், அறவியல் மரபின் செறிவான பேராளராக நம்மாழ்வார் திகழ்ந்தார்.
தமிழகத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும் நம்மாழ்வார் தம்மை இணைத்துக் கொண்டார்.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பு வகித்த தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பில் 2003 டிசம்பர் 13 அன்று கல்லனையில் தொடங்கி காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம் பத்து நாட்கள் நடைபெற்று டிசம்பர் 22 அன்று நெய்வேலியில்முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
”காவிரி மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தரக் கூடாது’’ என்ற முழக்கத்தை முன் வைத்து பலதரப்பட்ட மக்களின் பேராதரவோடு நடைப்பெற்ற எழுச்சிமிக்க பரப்புரைப் போராட்டம் அது. கல்லணையில் அந்த நடைபயணத்தை தொடங்கி வைத்த வர் நம்மாழ்வார். ஆழமான எழுச் சியுரையாற்றி நடைப்பயணத்தை தொடங்கி வைத்ததும் இல்லாமல் திருக்காட்டுப் பள்ளி வரை ஏறத் தாழ 22 கிலோமீட்டர் நடைப் பயணத்தில் பங்கேற்று நடந்து வந்தார்.
வேளாண்மையிலிருந்து உழவர் களை வெளியேற்றும் நோக்கத் தோடு 2009-ஆம் ஆண்டு தி.மு.க அரசு கொண்டுவந்த வேளாண் மன்றச் சட்டம் சட்டமன்றத்தில் எந்த வேறுபாடுமில்லாமல் அனைத்துக் கட்சிகளின் ஆதர வோடு நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட கட்சி சார் பற்ற உழவர் அமைப்புகள், சென் னையில் கூடி, ஆலோசித்து அச் சட்டத்தை எதிர்த்து திண்டிவனம் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி உழவர் நெடும்பயணம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.இப்பரப்புரைப் போராட்டத்திற்கு தலைமையேற்க நம்மாழ்வார் இசைந்தார். அதற் கானப் பணிகள் விரைந்து மேற் கொள்ளப்பட்ட நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை திரும்பப் பெற்றது.
முல்லைப் பெரியாறு உரிமைப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் போராட்டங்களிலும் நம்மாழ்வார் பங்கு செலுத்தினார்.மரபீனி மாற்று விதைகள் குறித்து மிக சிக்கலான அறிவியல் செய்திகளை எளிமையாக விளக்கி அதனை எதிர்த்து மக்களைத் திரட்டியதில் நம்மாழ்வாரின் பங்கு தமிழ் நாட்டில் தலையாயது.
மான்சாண்டோ எதிர்ப்பு நாளில் 12.10.2013 அன்று திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நம்மாழ்வார் வெளிப்படுத்திய போர்க்குணம் மகத்தானது.திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகம் 2007 ஆம் ஆண்டு நம்மாழ்வார் அவர்களின் வாழ்நாள் பணிகளைப் பாராட்டி முனைவர் பட்டம் வழங்கியது.
காவிரிப் பாசனப் பகுதியை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக் கும் திட்டத்தைக் கண்டித்து கிராமம் கிராமமாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் கிராமக் குழுக்களை உருவாக்கும் முயற்சியில் தமது உடல் நலத்தையும் பாராமல் தீவிரமாக செயலாற்றினார். சொல்லுக்கும் செயலுக்கும் இடை வெளி யின்றி அவர் வாழ்ந்தார்.
மீத்தேன் பேரழிப்பு திட்டத் திற்கு எதிரான பரப்புரைப் பணிகளுக்கு இடையில் அப்போராட் டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.கே. ஆர்.லெனின் அவர்களது இல்லத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பிச்சினிக்காட்டில் 30.12.2013அன்று இரவு அமைதியாக இயற்கை எய்தினார்.
கடைசி நாள் வரை ஓயாது மக்கள் பணியாற்றிய அய்யா நம் மாழ்வார் மறைவை எடுத்த எடுப்பில் யாருமே நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை ஆகிவிட்டது.
தமிழ் இனத்தின் மரபார்ந்த, அறம் சார்ந்த அறிவியல் வழிப் பட்டு இயற்கையோடு இயைந்து வாழ்வதும், இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வுடன் தொடர்ந்து போராடுவதும் தான் அய்யா நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழர்கள் செய்யும் கைம்மாறு.
அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்.

0 கருத்துகள்:

நடராசர் ஆலயத்தை தமிழக அரசு ஏற்க தனிச் சட்டம் தேவை

சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தியது செல்லாது என கடந்த 6.1.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு எதிர்பாராத ஒன்றல்ல என்ற போதிலும் நீதியின் பாற்பட்டதல்ல என்ற வகையில் ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த தி.மு.க ஆட்சியில் 30.4.2007 நாளிட்ட அரசாணைப்படி சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் நிர்வாகம் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் கொணரப்பட்டு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 2009ல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.
இவ்வழக்கு முதன்மை எதிர்த் தரப்பே (பிரதிவாதியே) இல்லாத வழக்கு போல் நடந்து முடிந்துள்ளது. தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம் சாமி ஒரு வாதியாக தன்னை இணைத்துக் கொண்டார். எதிர்த் தரப்பில் தமிழக அரசோடு சிவனடியார் ஆறுமுக சாமியும், சிவ நெறியாளர் சத்தியவேல் முருகனாரும் இணைந்து கொண்டனர்.
ஆனால், முதன்மை எதிர்வாதியான தமிழக அரசு தீட்சிதர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டது. அரசாணையை ஆதரித்து வலுவாக வழக்கு நடத்தவில்லை. மூத்த வழக்கறிஞர் யாரையும் நியமிக்காமல் ஏனோதானோ என்று இவ்வழக்கை நடத்தியது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு ஜெயலலிதா அரசின் இப்போக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தி.மு.க ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான சூழலில் சிதம்பரம் தீட்சிதர்கள் ஒரு குழுவாக சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான செயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்ததையும் அப்போது அவர்களுக்கு இவ்வழக்கில் செயலலிதா அதரவு அளித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதே தீட்சிதர்களோடு செயலலிதா கூட்டணி சேர்ந்துவிட்டார். அதன் விளைவாகவே தமிழக அரசு சார்பில் அக்கறையற்ற தன்மையில் இவ்வழக்கு இப்போது நடத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள வழக்கின் உண்மை நிலையை ஆய்ந்து முடிவு சொல்ல வேண்டிய நீதிமன்றம் தனது சட்டக் கடமையிலிருந்து தவறிவிட்டதை இவ்வழக்கை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கூடப் புரியும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக சுப்பிரமணியம் சாமி கேவலமான உத்திகளை தமது வாதத்தில் கையாண்டார். திராவிடர் கழகத்தில் இளமைக் காலத்தில் இருந்த போது “சிறீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ” என்று மேடைகளில் கருணாநிதி பேசியதையும், அன்று அவர் பேசிய கடவுள் மறுப்பு உரைகளையும் நீதிபதிகள் முன்னால் வைத்து, இன்றும் அத்திராவிடர் கழகத்தோடு தோழமை கொண்டுள்ள கருணாநிதியின் நோக்கம் இக் கோயிலை இடிப்பது தான் என்று கொஞ்சமும் கூச்சம் இன்றி நெஞ்சாரப் பொய் கூறினார். தேவாரம், திருவாசகம் பாடவேண்டும் என்று திமுக ஆட்சியினர் கூறுவது புனித மொழியான சமஸ்கிருதத்தை புறக்கணிப்பதற்குத்தான் என்று வாதிட்டார். ம.க.இ.க வினரும் அவர்களது தோழமை அமைப்பினரும் நீதிமன்ற ஆணைப்படி 2.3.2008 அன்று ஆறுமுகசாமியை தேவாரம் பாடவைக்க அழைத்துச் சென்றபோது தீட்சிதர்கள் தடுத்ததையும் அதையொட்டி காவல்துறையினரை தீட்சிதர்கள் தாக்கியபோது ஏற்பட்ட பதட்டத்தையும் ஏடுகள் படமாக வெளியிட்டன. அப்படத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டிய சுப்பிரமணியம் சாமி, "அக் கூட்டத்தில் நாத்திகம் பேசும் கம்யூனிஸ்ட் கலகக்காரர்கள் இருப்பதைப் பாருங்கள்" என்று கூறினார்.
ஊரறிந்த ஆத்திகரான ஜெயலலிதாவின் தமிழக அரசு வலுவாக இதில் தலையிட்டிருந்தால் “நாத்திகர்களின் சூழ்ச்சி” என்ற சுப்பிரமணியம் சாமியின் சூது வாதத்தை முறியடித்திருக்க முடியும்.
மற்றபடி நீதிமன்றத்திற்கு 'புதிய வெளிச்சம் பாய்ச்சக் கூடிய' எந்த வலுவான வாதத்தையும் சுப்பிரமணியம் சாமி வைக்கவில்லை.
தில்லை கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது செல்லுமா செல்லாதா என்ற வழக்கானது தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் தீட்சிதர்கள் தனித்த சமயப் பிரிவினரா? அல்லது வகையறாவினரா? (Religious Denomination or section ) என்றக் கேள்வியையும் தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்கள் சொத்தாக அவர்கள் நிர்வாகத்திலேயே இருந்து வந்ததா என்ற கேள்வியையும் சுற்றியே நடந்து வருகிறது. இப்போதும் இவ்விரண்டு சிக்கல்கள் தான் முதன்மையாக விவாதிக்கப்பட்டன.
சீரூர் மடம் தொடர்பான வழக்கில் சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கும் இணைக்கப்பட்டு 1954-ல் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பைத்தான் தீட்சிதர்களும் சுப்பிரமணியம் சாமியும் முதன்மையாக முன்வைத்தார்கள்.
ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயத்தின் முன்னாள் இவ்வழக்கில் கர்நாடகாவின் சீரூர் மடம் தொடர்பான சிக்கலே பெரிதும் விவாதிக்கப்பட்டது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது தீட்சிதர்களுடைய மேல் முறையீடும் நிலுவையில் இருந்தது. தாங்கள் தனித்த சமயப் பிரிவினர் எனபதை தங்கள் மேல் முறையீட்டில் முதன்மை வாதமாக தீட்சிதர்கள் முன் வைத்தனர். தில்லை தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினரா என்ற அந்தக் குறிப்பிட்ட கேள்வி மட்டும் சீரூர் மட வழக்கோடு இணைத்து விவாதிக்கப்பட்டது.
தாங்கள் தனித்த சமயப் பிரிவினர் என தீட்சிதர்கள் வாதம் செய்வதற்கு ஒரு அடிப்படையான காரணம் உண்டு. தாங்கள் தனித்த சமயப் பிரிவினர் என்று மெய்ப்பித்துவிட்டால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 26–ன் பாதுகாப்பை அவர்கள் பெற்றுவிடலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 26-ன், குறிப்பாக அதன் உட் பிரிவுகள் (b) மற்றும் (d) ஆகியவற்றின் துணையோடு மீண்டுவிடலாம் என்பதே தீட்சிதர்களின் முயற்சி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 26 நான்கு உட் பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் இவ்வழக்குக்குத் தொடர்புடையவற்றை பார்க்கலாம்.
"26 பொது ஒழுங்கு, ஒழுக்கம் , சுகாதாரம் ஆகியவற்றிக்கு உட்பட்டு மதம் தொடர்பான செயல்பாடுகளை நிர்வகிக்கும் சுதந்திரம்; ஒவ்வொரு மத பிரிவினர் அல்லது மதத்தின் வகையறாவினர் கீழ்வருவனவற்றுக்கு உரிமைப்படைத்தவர்கள் ஆவர்.
(a)          .......................................................................................................................................................
(b)          மதம் தொடர்பான தங்கள் சொந்த செயல்பாடுகளை தாங்களே நிர்வகித்துக் கொள்ளலாம்.
(c)           .......................................................................................................................................................
(d)          சட்ட நெறிப்படி இவ்வாறான சொத்துகளை நிர்வாகம் செய்துகொள்ளலாம். ”

மேற்கண்ட அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு இணங்க தாங்கள் தனித்த மதப் பிரிவினர் (Religious Denomination ) என்றும், தில்லை நடராசர் ஆலயம் மற்றும் அதனுடைய சொத்துகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் அதனால் அவற்றை தாங்களே நிர்வகித்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் தீட்சிதர்கள் வாதிடுகின்றனர்.
இது உண்மையா என்பதைப் பார்க்க வேண்டும.
சுப்பிரமணியம் சாமி வளைத்து வளைத்து மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிற சீரூர் மடத்தீர்ப்பு அவர் கருதுகிற அளவுக்கு தீட்சிதர் தரப்புக்கு அவ்வளவு வலு கூட்டும் தன்மையது அல்ல. ஏனெனில், தீட்சிதர்கள் தனிமதப் பிரிவினர் என்று அத்தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது வெறும் கருத்துரையே (observation) தவிர தீர்ப்புரை அல்ல.
அது தீட்சிதர்களைப் பற்றி கீழ்வருமாறு கூறுகிறது.
“தீட்சிதர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள் ஆவர். இந்த வகுப்பை சேர்ந்த பிறர் யாரும் வழிபாடுப் பணிகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தனிச் சிறப்பான ஒட்டுமொத்த சிறப்புரிமை பல நூற்றாண்டுகளாக நிலைப்பட்டு அங்கீகரிக்கப்படுள்ளது”
இது எவ்வளவு வலுவற்ற வரையறை என்பது மேம்போக்காகப் பார்த்தாலே புரியும். மிகப் பெரும்பாலான கோயில்களில் பிராமணர்களே வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் அர்ச்சகர்களாக உள்ளனர். பார்ப்பனர்களுக்குள்ளேயே இவர்கள் தனிக் குழுவினராகவும் பல இடங்களில் கீழ் நிலையினராகவும் நடத்தப்படுகின்றனர். அதை வைத்து இவர்களை தனித்த சமயப் பிரிவினர் என்று யாரும் அழைப்பதில்லை. அவர்களும் அவ்வாறு அழைத்துக் கொள்வதில்லை.
உண்மையில் தீட்சிதர்கள் பெரிய புராணம் கூறும் “தில்லைவாழ் அந்தணர்கள்” அல்லர். தில்லைவாழ் அந்தனர்கள் ஆதி சைவர்கள். பார்ப்பன‌ர் அல்லர். தீட்சிதர்கள் 8-ஆம் நூற்றாண்டில் கேரளப்பகுதியிலிருந்து வந்தவர்கள். இது ஒருபுறமிருக்க...
சீருர் மடத்தீர்ப்பின் முக்கிய பலவீனமே அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 26 கூறுகிற மதப்பிரிவினர் (Religious Denomination) என்பதை ஓர் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளாமல், ‘பிரிவினர்’ ( Denomination ) என்பதை மட்டும் தனிப்பிரித்து விவாதிக்கிறது. ஆக்ஸ்போர்டு அகர முதலியிலிருந்தும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தீர்ப்புகள் சிலவற்றிலிருந்தும் ‘பிரிவு’ அல்லது ‘பிரிவினர்’ என்பதற்கு அளித்துள்ள விளக்கத்தை மேற்கோள் காட்டி அதையே மதப் பிரிவினர் (Religious Denomination ) என்பதற்கான விளக்கமாக கொடுக்கிறது.
இந்தக் குறைபாட்டை பின்னால் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சரி செய்து தெளிவுரை வழங்கியிருக்கின்றன. அவற்றுள் 1961-ல் நீதிபதி கஜேந்திரக் கட்கர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் தர்கா குழு – எதிர்- சையத் உசைன் அலி என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு முக்கியமானது. (AIR ,1961 – SC- 1402) பிரிவு அல்லது பிரிவினர் என்பது மதத்தோடு இணைந்தே அரசமைப்புச் சட்ட பிரிவு 26-ல் குறிக்கப்படுகிறது என விளக்கமளித்த இந்த ஆயம் மதப் பிரிவினர் (Religious Denomination ) என்பதற்கு மூன்று கூறுகளை வரையறுப்பாக எடுத்து வைத்தது.
1)            ஆன்ம உயர் வாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் தனித்த மத நம்பிக்கைகளின் தொகுப்பு, ஒருவகை நம்பிக்கைகளின் அமைவு; அதாவது பொது நம்பிக்கை.
2)            பொது அமைப்பு முறை.
3)            தனித்த வகையானப் பெயர்.
இந்த வரையறுப்பின் படி தீட்சிதர்கள் தனி மதப்பிரிவினர் அல்லர்; தனி மத வகையறாவினர் அல்லர் என்பது தெளிவாகும். அவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள் என்கிறபோது அல்லது அவர்களிலேயே ஒரு குழுவினர் என்கிற போது அவர்கள் தங்களுக்குள் தனிவகையான பொது நம்பிக்கை கொண்ட குழுவினர் அல்லர் என்பது தெளிவாகும்.
"பொது தீட்சிதர்கள் என்பது இவர்கள் தங்கள் வாழ் நெறி முழுவதையும் கட்டுப்படுத்துவதற்காக வைத்துக் கொண்ட முறைமை அல்ல. கோயில் நிர்வாகம் தொடர்பாக மட்டுமே செயல்படுகிற ஒரு அமைப்பு வடிவமே தவிர வேறல்ல. எனவே, இத்தீர்ப்பு கூறுகிற இரண்டாவது வரையறையும் தீட்சிதர்களுக்குப் பொருந்தி வராது.
கோயிலில் சமயப் பணி செய்வதால் கிடைக்கிற வருமானம் மட்டுமே தங்களுக்குள்ள வாழ்வூதியம் என்று தீட்சிதர்கள் கூறிக்கொள்வது முழு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதைக் கொண்டு இவர்கள் தனித்த மதப் பிரிவினர் என்று கொள்ள முடியாது.
சீரூர் மட வழக்கு தீர்ப்பில் அம்மடாதிபதிகள் மத்துவாச்சாரியாரை தங்கள் குருவாகக் கொண்டு ஒழுகுகிற சிவாலி பிராமணர்கள் என்று கூறி அவர்களை தனித்த மதப் பிரிவினர் என்று உச்ச நீதிமன்றம் கூறியது அந்த வரையறை தீட்சிதர்களுக்குப் பொருந்தாது. இத் தீர்ப்பும், இப்போது சுப்பிரமணியம் சாமியும் கூறுவது போல் தீட்சிதர்கள் வேதமத ஒழுகலாறு கொண்ட ஸ்மார்த்த பிராமணர்கள் என்றான பிறகு இவர்களை தனித்த மதப் பிரிவினர் என்று கூறுவது சற்றும் பொருந்தாது. இவர்கள் வழிபடும் கடவுளோ, வழிபடும் முறைகளோ வேறுபட்ட ஒன்றல்ல.
 அரவிந்தர் வழி வந்த தாங்கள் தனித்த மதப் பிரிவினர் என்று கூறி தங்களுடைய சொத்துகளுக்கு அரசமைப்புச் சட்ட விதி 26-ன் படி பாதுகாப்புக் கோரி புதுச்சேரி ஆரோவில்லிருந்து சிலர் வழக்கு தொடுத்தபோது ஆர்.எஸ் மிட்டல் – எதிர் - இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் 1995-ல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் சில தனித்த சடங்குகளைப் பின்பற்றி ஒரு சான்றோரை தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு ஒரு சிலர் செயல்படுவதாலேயே அவர்களை தனித்த மதப் பிரிவினர் என வரையறுக்க முடியாது எனக் கூறியது. மேற்கண்டவற்றை நோக்கும் போது தீட்சிதர்கள் தங்களை தனித்த மதப் பிரிவினர் என்று கூறிக் கொண்டு அரசமைப்புச் சட்டபிரிவு 26-ன் பாதுகாப்பைக் கோர முடியாது என்பது தெளிவு.
அடுத்து இவர்கள் தனித்த மதப் பிரிவினரே ஆயினும் சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இவர்கள் தான் கட்டி, பாதுகாத்து வருகிறார்கள் என்பதை மெய்ப்பித்தால் தான் இக் கோயிலை தங்களுடைய சொத்து என்று உரிமை கோர முடியும். அதற்கான ஆதாரம் எதையும் இவர்கள் முன் வைக்கவில்லை.
தங்களிடம் எந்த ஆவணமும் இல்லை என சுப்பிரமணியம் சாமியே ஒத்துக் கொள்கிறார். அவர் தன்னுடைய வாதுரையில் கீழ்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.
"தீட்சிதர்கள் இந்தக் கோயிலை நிறுவினார்கள் என மெய்ப்பிக்க எழுத்து வழிபட்ட எந்த ஆவணமும் இல்லை என்ற போதிலும், இது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. சிதம்பரத்திலோ அல்லது வேறு எங்கிருந்தோ எந்த குழுவினரும் இக் கோயில் தொடர்பாக உரிமை கோரவில்லை”
இது தான் சுப்பிரமணியம் சாமியின் ஆகப் பெரிய வாதமே.
 இவர்கள் வரையறைப்படி இந்த வழக்கில் எதிர்வாதியாக இருக்கிற ஆறுமுக சாமியும் இந்து தானே? சத்தியவேல் முருகனாரும் இந்து தானே? இவர்களும் இவர்களைப் போல் பல கோடிபேரும் தில்லை நடராசர் ஆலயம் தீட்சிதர்களால் நிறுவப்பட்டதல்ல என்று கருதுகிறார்கள். அப்படி இருக்க ஒட்டு மொத்த இந்துக்களின் நம்பிக்கையாக சுப்பிரமணியம் சாமி அடித்துக் கூறுவது கடைந்தெடுத்த பொய் அல்லவா!
இச் சிக்கலில் மதம் சார்ந்த குழு மற்றும் நம்பிக்கைகள் என்பது ஒரு பகுதியாகவும் நடராசர் கோயில் அது தொடர்பான சொத்துகள் இன்னொரு பகுதியாகவும் விவாதிக்கப் படுகின்றன. சொத்து சிக்கல் என்று வருகிற போது அதற்கு ஆவணச் சான்றுகள் முக்கியம். அப்படி ஒன்றும் எங்களிடம் இல்லை என்று சுப்பிரமணியம் சாமியே ஒத்துக் கொள்கிறார். ஒட்டு மொத்த இந்துக்களின் நம்பிகை இது என்று அவர் கூறுவதும் பொய் என்பதை மெய்நடப்பு கூறுகிறது.
எந்தக் குழுவினரும் உரிமைக் கோரவில்லை என்று அடுத்து சுப்பிரமணியம் சாமி கூறுகிற பொய்யுரை நகைப்புக்கிடமானது. ஏனெனில், இதிலுள்ள மையமான வாதமே சிதம்பரம் நடராசர் ஆலயம் தீட்சிதர்களுக்கோ வேறு யாருக்குமோ தனிச் சொத்து அல்ல என்பது தான். எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை; ஆனால் வேறு எந்தக் குழுவினரும் இதற்கு உரிமை கோரவில்லை என்பதால் அது எங்களுடைய சொத்து என்று கூறும் சுப்பிரமணியம் சாமியின் வாதம் திருடர்களின் வாதமே தவிர வேறொன்றுமில்லை.
இக் கோயில் மன்னர்களால் நிறுவப்பட்டு மன்னர்களால் பராமரிக்கப்பட்டு, மன்னர்களால் விரிவாக்கப்பட்டு செயல்படுகிற ஒன்று என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரம் உண்டு.
கிளியூர் இலங்கேஸ்வரன் என்பவர் நாள்தோறும் நடராசருக்கு 200 செந்தாமரை மலர்கள் கொண்டுவர பணியாளர்களை நியமித்ததையும் அதற்கு இராச இராச சோழன் இசைவு அளித்ததையும் இக் கோயிலிலேயே உள்ள இராசராசன் காலத்து கல்வெட்டு கூறுகிறது. (ARE 284 / 1913).
இக் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் தென் பகுதியில் உள்ள பாண்டிய தேவன் கல்வெட்டு இக் கோயில் நிர்வாகம் பாண்டியர் பொறுப்பில் இருந்ததையும் நீர்நிலைப் பராமரிப்புத் தொடர்பாக அம்மன்னன் வரித்தள்ளுபடி செய்ததையும் குறிப்பிடுகிறது. ஆதித்த சோழன் (871- 907) தனது ஆட்சிக் காலத்தில் பொன் கூரை வேய்ந்தான் என்று நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகிறது.
 இக் கோயிலின் முதல் திருச்சுற்று (பிரகாரம்) விக்கிரம சோழன் திருமாளிகை என்றும், இரண்டாம் திருச்சுற்று குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும், மூன்றாம் திருசுற்று தம்பிரான் திருவீதி என்றும் அழைக்கப்பட்டன. மேற்கு கோபுர வாயில் குலோத்துங்க சோழன் திருமாளிகை பெருவாயில் என்று அழைக்கப்பட்டது.
விஜய நகரப் பேரரசு காலத்தில் இக் கோயில் தனி நிர்வாகிகள் மூலம் அரசரால் நிர்வகிக்கப்பட்டது. நிர்வாகிகளில் ஒருவரான தேவர் மகாராயர் என்பவர் பற்றி இக் கோயில் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கிறது.
1680-ல் சைவ வேளாளர் சிவப் பிரகாசமும் 1684-ல் தில்லை சிற்றம்பலத் தவமுனி என்பவரும் 1711-ல் தில்லைக் காசித் தம்பிரான் என்பவரும் கோயில் நிர்வாகிகளாக இருந்ததற்கு செப்பேட்டு ஆதாரங்கள் உள்ளன.
பின்னாளில் பிச்சாவரம் சமீன்தார்கள் பொறுப்பில் சிதம்பரம் நடராசர் கோயில் நிருவகிக்கப்பட்டு வந்தது. நள்ளிரவு பூசை முடிந்த பிறகு கோயிலைப் பூட்டி சாவியை பல்லக்கில் வைத்து தீட்சிதர்கள் பிச்சாவரம் எடுத்துச் சென்று சமீன்தாரிடம் கொடுத்துவிட்டு, காலையில் மீண்டும் பெறுகிற பழக்கம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு தொடர்ந்திருக்கிறது.
பிச்சாவரம் சமீன்தார் நலிந்து போகிற வரை அதாவது 1925 ஆம் ஆண்டு வரை இந்தப் பழக்கம் கடைபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.(விரிவிற்கு காண்க : கரையான் புற்றுக்குள் கருநாகம் – முனைவர் த.செயராமன், தமிழர் கண்ணோட்டம் 2008 ஏப்ரல் இதழ்)
தீட்சிதர்கள் நடராசர் கோயிலின் பணியாளர்களாக இருந்து வந்தார்களே அன்றி ஒரு காலத்திலும் கோயில் நிர்வாகம் அவர்கள் கையில் இருந்ததில்லை. ஆனால் பிச்சாவரம் சமீன் பலவீனம் அடைந்ததைப் பயன்படுத்தி கோயில் மற்றும் அதன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்ற தீட்சிதர்கள் முனைந்தார்கள்.
அப்போது வெள்ளையர் ஆட்சி. பல்லாயிரக் கணக்கான கோயில்கள் வரலாற்று வழியில் பல மன்னர்களால் கட்டப்பட்டு அதற்கு வலுவான வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் அவற்றை நிர்வாகம் செய்வதற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு வெள்ளையர் ஆட்சி பல வரைவுச் சட்டங்களை உருவாக்க முனைந்தது. அச் சூழலில் 1922-ல் சென்னை மாகாண நீதிக் கட்சி ஆட்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டு 1927-ல் அது செயலுக்கு வந்தது.
அப்போதிருந்தே அரசின் கட்டுப்பாட்டிற்குள் நடராசர் கோயில் சென்றுவிடாமல் தடுப்பதற்கு அடுத்தடுத்து வழக்குகளை தீட்சிதர்கள் தொடுப்பதும், அவ்வப்போது இக்கோயில் நிர்வாகத்தை ஏற்க அரசு ஆணை பிறப்பிப்பதும், அவற்றை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு தொடுப்பதும் தொடர்கதையாக நீடிக்கிறது.
சுப்பிரமணியம் சாமி சொல்வது போல் தனித்த சமூகக் குழுவினர் யாரும் உரிமை கோராது போனாலும் அரசர்கள் உருவாக்கிய கோயில் என்பதால் அரசு நிர்வாகம் செய்ய முனைந்து கொண்டிருப்பதுதான் தொடரும் வரலாறு. ஏனென்றால் இது பொதுச் சொத்து.
ஆனால், இந்த உண்மைகளை உச்ச நீதிமன்றத்தில் செயலலிதா அரசு எடுத்துவைத்து வலுவாக வாதாட வில்லை. நீதிபதிகளும் இந்த உண்மைகளை கவனிக்கத் தவறிவிட்டார்கள். அதனால், மாபெரும் அநீதி தீர்ப்புரையாக வந்திருக்கிறது.
தீட்சிதர்கள் கைகளில் இக் கோயில் இருக்கும் வரை சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட வாய்ப்பில்லை. தமிழ் உரிமையை, தமிழர் உரிமையை நிலை நாட்ட வேண்டுமானால் இக் கோயில் அரசின் பொறுப்பில் இருப்பது தேவை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக இது வந்துவிட்டாலும் இத் தீர்ப்பை எதிர்கொண்டு மீண்டும் சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வழி இல்லாமல் போய்விடவில்லை.
சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்த அரசாணையாக இல்லாமல் தனிச் சட்டம் ஒன்றை தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். உடனடியாகக் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவசரச் சட்டம் இயற்றி நடராசர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
செயலலிதா அரசு இதைத் தானாக செய்யும் என நம்புவதற்கில்லை. எனவே சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த தனிச் சட்டம் கொண்டுவருமாறு வலியுறுத்தி இக்கோயில் மீது அக்கறையுள்ளோரும் தமிழின உணர்வாளர்களும், தொடர் போராட்டங்கள் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
- கி.வெங்கட்ராமன் (kevaetamil@gmail.com)

0 கருத்துகள்:

அட்டப்பாடி பழங்குடியினாரின் நில உரிமைக் காப்போம் - தோழர் கி.வெங்கட்ராமன்

கோவை மாவட்டம் அருகிலுள்ள அட்டப்பாடியில் பழங்குடியினர் நிலமீட்பு என்ற பெயரில் கேரள அரசு தமிழர்களை வெளியேற்றுகிறது என்ற அச்சம் வெளியிடப்பட்டது. இது குறித்து உண்மை நிலையை அறிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், கோவை மாவட்ட சிறுதொழில் அமைப்பான “கோப்மா’’ அமைப்பின் தலைவர் திரு.கருப்பசாமி, சூழலியலாளர் திரு. இராசபாண்டியன் உள்ளிட்ட குழுவினர் 17.12.2013 அன்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இச்சிக்கலின் அடிப்படை உண்மைகள் தெளிவானது.
சிலர் கருதுவது போல் இது கேரள மலையாள அரசு வழக்கமாக தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றல்ல.இச்சிக்கலானது அடிப்படையில் அட்டப்பாடியின் மண்ணின் மக்களான இருளர் பழங்குடியினரின் நில உரிமைச் சிக்கலாகும். இருளர் பழங்குடியினர் அட்டப்பாடியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் பழங்குடிமக்கள் ஆவர்.

இன்றுள்ள கோவை மாநகர் காடும் விளை நிலமுமாக இருந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கை யில் வாழ்ந்தவர்கள் இருளர் ஆவர். விஜயநகரப் பேரரசு படையெடுப்பின் போதும், அதன் பின்னாளில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போதும் தோற்கடிக்கப் பட்டு பெருந்தொகையில் புலம் பெயர்ந்து, அட்டப் பாடி வனங்களில் குவிந்த மக்கள் ஆவர். இன்றும் கோவை கோணியம்மன் கோவில் திருவிழாவில் முதல்மரியாதை இருளர்களுக்கே இருப்பதிலிருந்தே அவர்களது இந்த வரலாற்றுத் தடம் தெளிவாகும்.
இம்மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த அட்டப்பாடியில் பொள்ளாச்சியிலிருந்தும், கோவையிலிருந்தும் சென்ற தமிழர்களும் பாலக் காடுக்கு அப்பால் உள்ள மலையாளிகளும் இருளர் மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பெருமளவு நிலங்களை சிறு தொகைக் கொடுத்துக் கையகப் படுத்தினர்.
1970 களில் இம்மக்களை அமைப்பாக்கிய உள்ளூர் அமைப்பினரும் தொண்டு நிறுவனத்தின ரும், தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் வாயிலாக, 1976 ஆம் ஆண்டு கேரள அரசு பழங்குடி மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நில மீட்பு தொடர் பான சட்டம் ஒன்றை இயற்றியது.
அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்தே 1986 இல் இதற்கான விதிமுறைகள் வரையப்பட்டு செயலுக்கு வந்தன. இதனைக் கேரள அரசு சரி வர அமல்படுத்த வில்லை என்ற வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று அதன டிப்படையில் இதை செயல்படுத்துமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இதற்கு இணங்க கேரள அரசு நிலமீட்பு ஆணைப் பிறப்பித்தது. இதன்படி பழங்குடி யினரிடம் நிலம் வாங்கிய புதிய உரிமையாளர்களின் 5ஏக்கருக்கு மேற்பட்ட நிலமே கையகப்படுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்வரம்பின் படி ஏற்கெனவே பலர் மிகுதியுள்ள தங்கள் நிலத்தை ஒப்படைத் துவிட்டனர். மீதமுள்ள 77 பேருக்கு கேரள அரசு அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பி யுள்ளது. இவர்களில் 19 பேர் மட்டுமே தமிழர்கள். மீதமுள்ள 58 பேர் மலையாளிகள் ஆவர்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கியுள்ள சிலருக்கு மாற்று இடம் தருவதற்கும் கேரள அரசு இணங்கியுள்ளது.
இச்சிக்கலில் பெருமளவு நிலமிழந்த இருளர்கள் தமிழ் பழங்குடியினர் (ஆதிவாசிகள்) ஆவர். அவர்களது நில உரிமையை மீட்பது நல்லெண்ணம் கொண்டோர் அனைவரது கடமையுமாகும். ஒரு வேளை இச்சட்டத்தின் கீழ் மீண்டும் நிலம் பெருவோர் மலையாள மொழி பேசும் பழங்குடி மக்களாக இருந்தாலும் அவர்களது நில உரிமையை சமவெளித் தமிழர்களின் பெயரால் மறுப்பதை ஏற்க முடியாது.
பஞ்சமி நில உரிமைப் போலவே, பழங்குடியின ரின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.
இருளர் உள்ளிட்ட அட்டப்பாடி பழங்குடி மக்களின் நில மீட்பு உரிமையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி ஆதரிக்கிறது.
இருளர்களிடமிருந்தும், சமவெளி மக்கள் உள்ளிட்டு வேறு மக்களிடமிருந்தும் சுஸ்லான் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு வடநாட்டு நிறுவனங் கள், அரசியல் பெரும் புள்ளிகள் ஆகியோர் பல நூறு ஏக்கர் நிலங்களை அட்டப்பாடி பகுதியில் வளைத்துப் போட்டுள்ளனர். அவர்களையும் வெளி யேற்றி உரிய மக்களுக்கு நிலம் மீட்டுத்தர கேரள அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் .

0 கருத்துகள்: