கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசின் கருத்து தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது பேரறிவாளன் , முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்




தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கு ஆணையிட்ட தமிழக அரசின் முடிவு கட்சி வேறுபாடின்றி தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் இராகுல் காந்தி இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். தூக்குமர நிழலிலும், சிறைக்குள்ளும் 23 ஆண்டுகள் கழித்தபிறகே இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்பதையும், அதுவும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய சூழலில் இந்த விடுதலை உத்தரவு வந்திருக்கிறது என்பதையும் மறந்து இராகுல் காந்தி தெரிவித்துள்ள எதிர்ப்பு அவரது பழிவாங்கும் வன்மத்தையே காட்டுகிறது.
ஆனால், இந்த வன்ம எதிர்ப்புக்கு இந்திய அரசு துணைபோய்விடுமோ என்ற ஐயம் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என் சிங் அவர்களின் கூற்றின் மூலம் ஏற்படுகிறது. இச் சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்தும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.
குற்றவியல் நடைமுறை சட்ட விதி 432 (1) மற்றும் 433 (A) ன் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் தற்சார்பானது, தங்கு தடையற்றது. குற்றவியல் சட்ட விதி 435 இராசீவ்காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செயல்பட முடியாதது என்ற போதிலும், ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு தமிழக அரசு 435 (1) கீழ் மத்திய அரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவேளை இத்தண்டனைக் குறைப்பை, அதாவது 7 பேரின் விடுதலையை எதிர்க்குமானால் அது தமிழக அரசைக் கட்டுப்படுத்தக் கூடியது அல்ல! அவ்வாறான நடுவண் அரசின் கருத்தை தமிழக அரசு பொருட்படுத்தத் தேவை இல்லை. எந்த தயக்கமும் இன்றி 7 பேரையும் விடுதலை செய்து விடலாம்.
இராசீவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் மேல் முறையிட்டில் உச்ச நீதிமன்றம் இவ் வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று முடிவு அறிவித்துதான் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.
அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 14 பேர் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் தடை சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு, விசாரணைக் காலத்தில் சிறையிலிருந்த ஆண்டுகளையே அத்தண்டனைக் காலமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அதாவது இப்போது சிறையில் உள்ள ஏழுபேரும் ஏற்கனெவே விடுதலை செய்யப்பட்ட 19 பேரில் 14 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி உள்ள அதிகபட்ச தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் ஆவர்.
இந் நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் முழு தண்டனையையும் அனுபவித்து முடித்துவிட்டார்கள் எஞ்சி இருப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழுள்ள கொலைக் குற்றத்திற்கான தண்டனை தான்.
இந் நிலையில் மத்திய அரசாங்கத்தின் சட்டம் எதுவும் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கு குறுக்கே வர முடியாது. 432 -ன் கீழ் உள்ள மாநில அரசின் தங்கு தடையற்ற முழு அதிகாரத்தின் படியே இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுக் குழு நடத்தியது என்பதற்காகவே 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
435 (1) –ன்படி மத்திய அரசுடன் கருத்து கேட்டு கலந்து ஆலோசிப்பது அடிப்படையில் ஒரு சட்ட சடங்கு தானே தவிர மத்திய அரசின் கருத்து மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.
435(1) மற்றும் 435 (2) ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் இந்த வேறுபாடு துல்லியமாகத் தெளிவாகும் .
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டனை வழங்கப்பட்டிருந்தால் தான் அவ்வாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசின் கருத்து மேலோங்கும் நிலை இருக்கும். இதைத் தான் 435 (2) கூறுகிறது.
இந்த ஏழுபேரும் மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் உள்ள முழு தண்டனைக் காலத்தையும் சிறையில் அனுபவித்துவிட்டவர்கள். இந்த ஏழுபேரில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிறகு வாழ் நாள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்குபேரும் 433 (A) –ன் படி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கடந்து விட்டவர்கள் ஆவர்.
23 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையின் துடிப்புமிக்க காலத்தை சிறையில் கழித்த இந்த ஏழுபேரை இனியும் தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு மனித நேயத்தின்பால்பட்டது என்பது மட்டுமின்றி அண்மையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சுட்டிக் காட்டியதற்கு இசைவானதும் ஆகும்.
எனவே அறிவித்துள்ள படி மூன்று நாள் கால அவகாசம் முடிந்ததும் இந்த ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

0 கருத்துகள்:

சூழலைக் காக்க நமக்கான மாற்று அரசியல் எது? - தோழர் கி.வெங்கட்ராமன்

உலக சதுப்பு நிலப்பாதுகாப்பு நாளான பிப்ரவரி 2 அன்று, பூவுலகின் நண்பர்கள் மற்றும் இலயோலா சூழலியல் மன்றம் (என்விரோ கிளப்) ஆகிய அமைப்புகளின் சார்பில், சென்னை இலயோலாக் கல்லூரியில் ‘ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழா’ சிறப்புற நடைபெற்றது.
காலை 10 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. சந்துரு, காலை அமர்வுக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். இலயோலாக் கல்லூரிச் செயலாளர் அருட்தந்தை முனைவர் ஆல்பர்ட் வில்லியம் வாழ்த்துரை வழங்கினார்.
நீதிபதி சந்துரு அவர்கள், இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு.கோ.நம்மாழ்வார் அவர்களது படத்தைத் திறந்து வைத்தார். கானுயிர் புகைப்படக் கண்காட்சியை எழுத்தாளர் ஞாநி கேமரா கிளிக் செய்து தொடங்கி வைத்தார். தொல்காப்பியத்திலுள்ள ஐம்பூதக்கோட்பாட்டை விளக்கி, தமிழிய ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் க.நெடுஞ்செழியன் சிறப்புரை வழங்கினார்.
தொடர்ந்து, ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய தலைப்புகளில் நடைபெற்றக் கருத்தரங்கில் இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. பாமயன், இயக்குநர் ம.செந்தமிழன், மருத்துவர் பாரதிச் செல்வன், சென்னை வானிலை மைய இயக்குநர் திரு. இரமணன், எழுத்தாளர் நக்கீரன், அரச்சலூர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் கலந்து கொண்டு, கருத்துரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் :
“பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஐம்பூதச் சூற்றுச்சூழல் விழா சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக் கும் எமது பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள் கிறேன்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய பெரும்பாலானத் தோழர்கள், அணுஉலை எதிர்ப்பு, மீத்தேன் எரிவாயுத் திட்ட எதிர்ப்பு, கெயில் எண்ணெய்க் குழாய்த் திட்ட எதிர்ப்பு என சூழலியல் சார்ந்த தமிழகத்தின் வாழ் வாதார உரிமைகளுக்கானப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களாக உள்ளதை நான் பார்க்கிறேன்.
இக்கருத்தரங்கத்தில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பிலும், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பறைசாற்றிப் பேச முடியும். அந்தளவிற்கு, மரபு அறிவியலைக் கொண்ட செம்மாந்த இனமாக நாம் வாழ்ந்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு இந்த இனம் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்தக் கொள்ளப் பலமுனைகளிலும் போராடிக் கொண்டுள்ளது.
இயற்கையை தெய்வமாக வழிபடும் வடநாட்டுப் பண்பாட்டுக்கும் இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதும் மேற்கத்தியப் பண்பாட்டுக்கும் மாறாக இயற்கையை சமூகத்தின் ஓர் உறுப்பாக, மூத்த உறுப்பினராகப் பார்த்தப் பண்பாடு பண்டைத் தமிழர் பண்பாடு, ஆனால் அது இன்று மேற்குலகப் பார்வைக்குத் தாழ்ந்துள்ளது. இதற்குக் காரணமென்ன?
தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் சாதிக் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக, சமூகத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் முனையிலும் போரா டிய திராவிட இயக்கமாகட்டும், உழைக்கும் மக்களின் பொருளியல் உரிமைகளுக்காகக் களமாடிய பொதுவுடைமை இயக்கமாகட்டும், இவ்விரண்டு முற்போக்கு இயக்கங்களும் சில பிற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்தன. நமது சமூகத்தின் வேராக இருந்த கிராமங்களை, இம்முற்போக்கு இயக்கங்கள் பிற்போக்கின் அடையாளமாகவே கண்டன. நிலத்தை இழந்தால் நாம் அனைத்தையும் இழப்போம் என்ற சமூகப் பார் வையை மக்களிடம் வளர்க்க வேண்டிய இவ்வியக்கங்கள், ‘நிலம்’ - ஒரு விற்பனைக்குரிய பண்டம் என்ற நுகர்வியப் பார்வையையே மக்களிடம் வளர்த்தன.
இவ்விரண்டு இயக்கங்களும், மக்கள் வளர்ச்சிக்கு பெரும் ஈகங்களை செய்துள்ள போதிலும், தேசிய இனம் மற்றும் தாயகம் குறித்த தெளிவான பார்வை இல்லாத போது, அந்த ஈகங்கள் நம்மை மீண்டும் வந்த இடத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
“நிலங்களை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு ஓடிச் சென்று நகரங்களில் குடியேறுங்கள். அது தான் முற்போக்கு, கிராமங்கள் - வெறும் பிற்போக்கின் அடையாளம்’’ என்று கூறி, நகரமயமாக்கலுக்கு இக்கருத்தியல்கள் பெரிதும் துணை நின்றன. பொதுவுடைமை இயக்கங்களோ, நிலத்திற்கு அதிக விலை கேட்டு இயக்கம் நடத்தியதே தவிர, ‘நிலம்’ - நமது தாய் அது நமது தாயகம் என மக்களை உணர்வூட்டி வளர்க்க வில்லை.
எனவே தான், வல்லாதிக்க பெருங்குழும நிறுவனங்கள் உங்கள் நிலத்தை விற்றுவிடுங்கள் என்று கூறும்போது, நம் மக்கள் எளிதாக ஏமாறுகிறார்கள். நிலத்தடி நீரை விற்கக்கோரும் போது நம் மக்கள் நீருக்கு விலை கேட்கிறார்கள்.
இவ்வாறான உலகமயச் சூழலில், நமக்கு மாற்று நுகர்வியக் கொள்கையும் மாற்றுத் தொழில்நுட்பமும் தேவையானவைதான். பூச்சுக் கொல்லிகளை சேர்க்காமல் இயற்கை வேளாண்மை செய்வது, கதிரவன் ஒளியிலிருந்து மின்சாரம் பயன்படுத்துவது என நாம் நடைமுறையில் பல மாற்றுத் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது தேவைதான். நுகர்வு வெறிப் பண் பாட்டிலிருந்து மக்களை மீட்பதும் தேவைதான். இந் தத் தளங்களில் இப்போது செய்யப்படும் முயற்சிகள் தொடர வேண்டும். ஆனால் முதன்மையாக அதை நிலையானதாக்க, அதற்கான மாற்று அரசியல் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
பொலீவியாவில் தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டங்களும், அம்மண்ணின் பிற போராட்டங்களும் ஒரு மாற்று அரசியலோடு இணைக்கப்பட்டன. அந்த மாற்றங்கள், ஒரு மாற்று அரசியலின் கீழ் இணைக்கப்பட்ட பிறகே அது நிலைக்க முடிந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல் கட்சிகளையே நடத்துமளவிற்கு வளர்ந்துவிட்டன. கட்சிகளும், கம்பெனிகளும் இரண்டறக் கலந்து விட்டன. அரசியல் என்பது காசு போட்டு காசு எடுக்கும் தொழிலாகிவிட்டது. நீதித்துறை, ஊடகத் துறை என அனைத்துத் துறை அநீதியாளர் களுடனும் கார்ப்பரேட்டுகள் கைகோக்கும் ஒட்டுண்ணி அரசியல் இங்கு மேலோங்கியுள்ளது. இந்த ஆதிக்க அரசியலை நாம் தகர்த்தாக வேண்டும்.
உலகளவில் இன்று நிகரமைச் சூழலியல் (Eco-Socialism) குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெறும் விவாதங்களாக இல்லாமல், பல குழுக்கள் பன்னாட்டு அரங்கில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சூழலியல் சிக்கல்களை எதிர் கொள்ள பசுமை மார்க்சியம் என்ற மாற்றுக் கோட் பாடுகளை முன்வைத்து அவர்கள் விவாதிக்கின்றனர். இந்திய அளவில், நமது மூத்தவர் கோ.நம்மாழ்வார், மூ.வந்தனா சிவா, காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா என பலரும் இது குறித்த நிறைய வெளிப்படுத்தியுள்ளனர். புறக்கணிக்கப்பட்ட ஒரு மாபெரும் பொருளியலாளர் ஜே.சி.குமாரப்பா. ஆனால் அவர் வர்ண-சாதி இந்த மாற்றுக்குத் துணையாக இருக்கட்டும் என்றார். இந்தியத் தேசியத்திற்குள் அவர் முன் மொழிந்தார். இதுதான் அவரது முரண்.
இந்திய சுதேசியம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அது வெறும் கற்பனையே! இந்தியா விடுதலை பெறும் போது, காந்தியும் வெளியே வைக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது, சிலருக்கு அவசிய மாகவும், சிலருக்குத் தேவையாகவும் இருந்தது. கொன்றவன் கொலையாளி என அகப்பட்டுக் கொண்டான். அவர் கொல்லப்பட வேண்டியவர் என நினைத் தவர்கள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டனர். அவர் தேவையற்றவர் எனக் கருதியவர் மனிதருள் மாணிக்கம் எனக் கொண்டாடப்பட்டார்.
காந்தியின் சுதேசியம், தற்சார்பு கிராமப் பொருளியல் கொள்கை உள்ளிட்ட கொள்கைகள், இந்திய விடுத லைக்குப் பிறகு காந்தியைப் போலவே வெளியில் வைக் கப்பட்டன. மனித குலத்திற்கெதிரான சனாதன தர்மத் தின் வழியேதான் காந்தி இதை சிந்தித்தார். என்ற போதிலும், இது போன்ற மாற்றுத் திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, பெரிய பெரிய தொழிற்சாலைகள், பெரிய பெரிய அணைகள் என சூழலியல் நாசத் திட்டங்களை முன்வைத்த நேருதான் இன்றுவரை நவீன இந்தியாவின் சிற்பி என இந்தியத் தேசியவாதி களால் எடுத்துரைக்கப்படுகிறார்.
இது போன்ற பெரியக் கட்டமைப்புகளை, மையத்தில் குவிந்த அதிகாரம் அடக்குமுறைகளை வைத்துக் கொண்டு தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும் என இந்தியத் தேசியவாதிகள் தெளிவாக நம்புகிறார்கள். உலகமயத்துடனோ, பன்னாட்டு மூல தனத்துடனோ இணையாமல் இது நடப்பதில்லை. அதனால்தான், இந்திய சுதேசியம் என ஒன்று கிடையாதென நாம் அடித்துக் கூறுகிறோம்.
ஆனால், பலர் முன் வைக்கும் ‘Think Globally Act Locally’ என்ற முழக்கம் சரியானதல்ல. உலகளவில் சூழலியல் சிக்கல்களுக்கானத் தீர்வு என்பது, உலகளவில் ஒரு தீர்வல்ல. உலகு தழுவிய தீர்வை உள்ளூரில் செயல் படுத்த ஒன்றுமில்லை. அத்தீர்வு, ஒவ்வொரு மண்ணிற் கும் வேறுவேறாகும்.
இதில் வரும் ‘லிஷீநீணீறீ’ என்பது என்ன? இந்த ‘லிஷீநீணீறீ’ என்பது அந்தந்த மொழி சார்ந்த மண் என்பதாகும். இங்கு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள், தொல் காப்பியத்திலுள்ள ஐம்பூதக் கோட்பாடுகளை சிறப்பாக விளக்கிப் பேசினார். ஆரியர்கள் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு கூறுகளை மட்டும் பேசிக் கொண்டிருந்த போது, சதுர்பூதம் என்ற போது நமது மூதாதையர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘விசும்பு’ எனப்பெயரிட்டு, காற்று அல்லாத வெளியை அடையாளப்படுத்தியிருந்தனர். இது இந்த இனத்தின் மரபான அறிவியலின் வெளிப்பாடு!
இந்த, மரபார்ந்த அறிவை, அறிவியலையும் வேறு எந்த இனத்தில் காண முடியும்? சூழலியல் சிக்கல்களுக் கானத் தீர்வுகளை நோக்கிப் புறப்படும் முன், இந்த மரபான அறிவையும், தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய மொழியைப் புறக்கணித்தால் நமக்குப் பயன் உண்டா?
பூவை ‘பூ’ என்று நாம் சொன்னால், ஆரியர்கள் அதை ‘புஷ்பம்’ எனச் சொல்வார்கள். ‘பூ’ என்றால் உனக்கும் மட்டும் புரியும் ‘புஷ்பம்’ என்றால் நம்மிரு வருக்கும் புரியும். எனவே அதையே வைத்துக் கொள் வோம் என்று ஆரியன் வடமொழிக்காரன் சொல்வான் மொழியில் என்ன இருக்கிறது எனக் கருதி, நமது தாய் மொழியைப் புறக்கணித்தால் அதே இடத்தில் இன் னொரு மொழி வந்து ஆதிக்கம் செலுத்தும். எனவே, மொழியைப் பாதுகாக்காமல் மரபு அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் நாம் பாதுகாக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். மொழியைப் பாது காத்துக் கொள்வதற்கான அரசு கட்டமைப்பு இல்லா மல் இது முடியாது என உணர வேண்டும். ஜே.சி. குமரப்பா இடறி விழுந்த இடம் இது தான்!
எனவே, மொழி சார்ந்து தான் மண் இருக்க முடியும். மொழி சார்ந்து தான் மரபு இருக்க முடியும். மரபு சார்ந்து தான் அவ்வினத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் இருக்க முடியும். அந்த மரபின் அடித்தளத்தில் நின்றுதான் நவீனத்தை வளர்க்க வேண்டும். ஆனால், மொழியை மறுப்பதன் மூலம் நாம் மரபு, அறிவியல் என அனைத்தையும் மறுக்கிறோம் என்பதை சிலர் புரிந்தும், புரியாமலும் இங்கு பேசுகிறார்கள்.
தமிழ் இந்து நாளேட்டில், தமிழ் இனத்திற்கு தொழில்நுட்பம்தான் தெரியும், அறிவியல் தெரியாது என்று எழுதினார்கள். அடிப்படை அறிவியல் தெரிந்த வர்கள்தான், தொழில்நுட்பத்தைப் படிப்பார்கள் என்ற அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் இங்கு எழுதுகிறார்கள்.
தஞ்சை பெரிய கோவில் எழுப்புவதற்கு முன் இவர்கள், எத்தனை கோபுரங்களை கட்டி இடித்தார் கள்? நவீன கால கணக்கியல் வளந்திராத அந்த காலத்திலேயே, இம்மி என்றால் எவ்வளவு என கணக்குப் போட்டுத் தந்திருக்கிறது தமிழினம். சோழர்களின் நில அளவீடு முறையைக் கண்டு எல்லோரும் வியக்கின்றனர். அறிவியலை அறியாமல் இவற்றையெல்லாம் தமிழன் படைத்திருப்பானா?
பரத நாட்டியம் பரவலாக புழங்குவது, தமிழ் நாட்டில்தான். ஆனால், அதற்கான பரத சாஸ்திரத்தை ஆரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். சிற்பக்கலை யில் சிறந்து விளங்குவது தமிழகம்தான். ஆனால், ஆரியர்கள் சில்பசாஸ்திரம் என அதை எழுதி வைத்தி ருக்கிறார்கள். நாம் கோட்பாடுகளை எழுதி வைக்க வில்லை, அல்லது நம் முன்னோர்களின் நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஆரியர்கள் கோட் பாடுகளை மட்டுமே எழுதி வைத்திருக்கிறார்கள்.
தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜச்சோழன் கட்டினான் என்றால், அவன் காலத்தில் வாழ்ந்த கொத்தனாருக்கு சிற்ப சாத்திரம் தெரிந்திருக்கிறது. சிற்பக் கலை நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது என்று பொருள். அவரைக் கொத்தனார் என்று ஒதுக்கி விட்டோம். அதையே மற்றொருவர் ஆங்கில வழியில் சொன்னால் அவரை என்ஜினியர் என்று உயரே வைத்தோம். எனவே, மொழியை இழப்பதென்பது நமது வரலாற்றை இழப்பதென்று பொருள். வரலாற்றை இழப்பதென்பது நாம் நம்மையே இழக்கிறோம் என்று பொருள். எனவே, நமது மொழியை, - வரலாற்றை மீட்கும் போதுதான், மரபார்ந்த அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் நாம் முழுமையாக மீட்டெ டுக்க முடியும்.
இந்தியமும் இன ஒடுக்குமுறையும், மொழி ஒடுக்கு முறையும் பிரிக்க முடியாதது. இந்தியத்திற்கு அடிப்படை யான ஆரிய - பார்ப்பனியமும் சாதி ஒடுக்குமுறையும் இணைந்திருப்பது.
பிறப்பு அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் இச்சமூகத்தில், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் வகையில் இட ஒதுக்கீடு தேவையென நாம் போராடுகிறோம். அது சரியே! அதே நேரத்தில், மருத்துவம் - பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மரபார்ந்த அறிவுடன் நடைமுறையில் இயங்கிக் கொண்டுள்ள சமூகத்தினருக்கு இந்த இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டு மெனவும் நாம் கருதுகிறோம்.
இசைத்துறையில் இளையராஜா சாதித்ததை போல எல்லோரும் சாதித்துவிட முடியாது. புறக்கணிக் கப்பட்ட பறையை அவர் மேடையேற்றினார். அந்த இசையின் மேன்மையும் அதைக் கையாண்ட மக்களின் மேன்மையும் வெளிப்பட்டது. எனவே தான், மரபார்ந்த அறிவியல் அறிவைக் கொண்டுள்ள சமூகங்களின் ஆற்றலை வெளிப்படுத்த தனி இடஒதுக்கீடு வழங்கி, அவர்களது மரபு அறிவை, அறிவியலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறோம். இவ்வாறான, மாற்று வளர்ச்சி முறை ஒவ்வொரு மொழி சார்ந்த மண்ணுக்கும் வேறுவேறானவையே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஐதராபாத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே மாற்று கிடையாது. அரிசி, நெல் கூட நமக்கு வேறுவேறானவை. அதே போல், தில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே மாற்று கிடையாது. அது போலவே, உலகம் முழு மைக்குமோ, இந்தியா முழுமைக்குமோ ஒரு மாற்று கிடையாது. ஒவ்வொரு மொழி சார்ந்த மண்ணுக்கும், அம்மண்ணிக்கேற்ப உள்ள தனித்தன்மையுடன் இணைந்தே இம்மாற்று செயல்திட்டங்கள் நடை முறைப்படுத்த வேண்டும். அதற்கான மாற்று அரசி யலை உருவாக்க வேண்டும்.
ஆங்கில இலக்கண முறைப்படி கி றிமீஷீஜீறீமீ என்றால் தவறு என சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு மக்கள் சமூகம் என்றால், அது ஒரு தேசிய இனம் சார்ந்த மக்கள் சமூகம் தான். ஒரு மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான தனித்த வரலாறு கொண்ட மக்கள் சமூகம் தான்.
சோமாலியா நம் கண் முன்னே உள்ள எடுத்துக் காட்டு. சோமாலியர்கள், தாங்கள் ஆட்சியுரிமை பெற்ற பிறகு தங்கள் அழிந்து போன மொழியைத் தான் முதலில் மீட்டார்கள். அதன்பின்னர், அம்மொழியின் மரபார்ந்த அறிவியலை மீட்டார்கள்.
சோமாலியாவின், கிராம மக்களுக்கு உள்ள கால்நடை அறிவியல் (Vertinary science) என்பது உலகம் வியக்கும் அளவிற்கு புகழ் பெற்றது. 1000 ஆடுகளை மேய்த்துச் செல்லும் ஒரு சோமாலியர், எந்த ஆடு நொண்டி நொண்டி நடக்கிறது, அதற்கு என்ன குறை என சில நிமிடங்களில் சொல்லிவிடுவார். ஆனால், அவரை ‘நாட்டு வைத்தியர்’ என மேற்கத்திய மருத்துவர்கள் இழிவுபடுத்துவர்கள். ஆம் அவர் ‘நாட்டு வைத்தியர்’ தான். அவருக்கென ஒரு நாடு இருக்கிறது. அவர் அந்த நாட்டுக்கான மருத்துவர்!
நம்முடைய மரபான மருத்துவத்தை ‘நாட்டு வைத்தியம்’ என்றுதான் கூறுகிறார்கள். நாட்டு வைத்தியம் இருக்கிறது அதை அங்கீகரிப்பதற்கு நாடு தான் நமக்கு இல்லை.
தமிழர்களே, நமக்கான நாடு எது? தமிழ்நாடுதான்! அதை அடையும் திசை நோக்கி நாம் கரம்கோப்போம்! அதுவே நமக்கான மாற்று அரசியல்! அதுவே, நம் மொழியையும், மரபார்ந்த அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் மீட்டெடுக்கும்! அதற்கான போராட் டங்களில் நாம் கை கோப்போம் எனத் தெரிவித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மீண்டுமொரு நன்றி கூறி விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
மாலையில், திருவண்ணாமலை பாப்பம்பாடி ஜமா முனுசாமி குழுவினரின் பெரிய மேளம் இசை நிகழ்ச்சியும், சூழலியல் சார்ந்த நூல்கள் வெளியீடும், தமிழர்களின் மரபார்ந்த சிறுதானியங்களால் செய்யப் பட்ட உணவு வகைக்களைக் கொண்ட சிறுதானிய உணவுத் திருவிழாவும் பெருந்திரள் பங்கேற்போடு நடைபெற்றது.

0 கருத்துகள்:

“பி.ட்டி கத்திரி - நியூட்ரினோ ஆய்வு” - பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்புக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்


 
 
பி.ட்டி கத்தரிக்கு அனுமதி மற்றும் நியூட்ரினோ ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு என பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
.
ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் மரபீனீ மாற்ற விதை நிறுவனங்களின் பேச்சாளர் போல் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 
பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனீ மாற்றப் பயிர்களுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று போகிற போக்கில் அவர் சொல்வது மாண்சாண்டோ , சின்ஜெண்டா ஆகிய மரபீனீ விதை நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளது. 
ஏனெனில், இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் நியமித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையையே தூக்கி வீசுகிற சனநாயகப் பகை அறிவிப்பாக இது உள்ளது. 
நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழுவில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். 
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் விரிவான கள ஆய்வுகளும் ஆவண ஆய்வுகளும் மேற்கொண்ட இக் குழு உலக அளவிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு 506 பக்க அறிக்கையை 2012 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அளித்தது. 
“ மரபீனி மாற்ற உயிரிகள் – வாய்ப்புகளும் சவால்களும்” என்றத் தலைப்பிலான இந்த ஆய்வறிக்கை மரபீனி மாற்றப் பயிர்கள் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மைக்கும் மீட்க முடியாத தீங்குகளை ஏற்படுத்திவிடும் என்று முடிவு செய்து அன்று இசைவு அளிக்கப்பட்ட பி.ட்டி கத்தரிக்கும் இசைவுக்காக காத்திருந்த பிற மரபீனீ மாற்றப் பயிர்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என பரிந்துரை செய்தது.
பி.ட்டி கத்தரிக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதையும் இக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. 
அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு நியமித்த பி.ட்டி கத்தரி குறித்த ஆய்வுக் குழுவில் கணிசமானோர் அமெரிக்காவின் மரபீனி மாற்றப் பயிர் பெருங்குழுமமான மாண்சாண்டோ மற்றும் அதன் துணை நிறுவனமான மேஹைகோ நிறுவனம் ஆகியவற்றிடம் பணப்பயன் பெற்றவர்கள் என்பதை பாசுதேவ் ஆச்சார்யா குழு வெளிப்படுத்தியது. 
பி.ட்டி கத்தரிக்கு ஏற்பிசைவு வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற கே.கே திரிபாதி, மதுரா ராய் , வசந்தா முத்துசாமி, சசிகிரன் , அனந்தகுமார், திலீப் குமார் ஆகியோர் தங்கள் ஆய்வுக்காகவும் வேறு பணிகளுக்காகவும் இந் நிறுவனங்களிடம் நிதி பெற்றவர்கள், இக் குழுமங்களுக்கு ஆதரவாக வலுவான பரப்புரை செய்தவர்கள் என்பது பல தளங்களிலும் வெளிப்பட்ட செய்திதான். 
அரசே நியமித்த, காங்கிரசு உறுப்பினர்களும் இடம் பெற்ற ஆய்வுக் குழுவின் அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு , அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும் , பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. 
அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப் பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன் மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். 
அப்பகுதி மக்களும் , தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந் நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும். 
கூடங்குளம் அணு உலைக்கும் மீதேன் திட்டத்திற்கும், நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பையும் , கவலைகளையும் கண்டுகொள்ளாமல் இவ்வாறு மக்கள் நலனுக்கெதிரான திட்டங்களைத் தொடருவது மன்மோகன் சிங் அரசின் தமிழினப் பகைப் போக்கையே காட்டுகிறது.
பிரதமர் மன் மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவையும் நியூட்ரினோ திட்டத்தை தொடரும் முடிவையும் இந்திய அரசு கைவிட வேண்டும்.

0 கருத்துகள்:

பசுமை மார்க்சியம் - காந்தியம் - தமிழ்த் தேசியம்

உலகம் அழிந்துவிடுமோ, அதாவது இப்புவிப்பந்தில் மானுட இனம் அழிந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு சூழலியல் சிக்கல்கள் உலகு தழுவியும், தமிழகத்திலும் தீவிரப் பட்டிருக்கும் காலமிது.
சூழலியல் பேரழிப்புகள்
சுருங்கிவரும் தண்ணீர் வாய்ப்புகள், குறைந்துவரும் விளைநிலங்கள், விரைந்து உயரும் புவி வெப்பநிலை, அச்சுறுத்தும் பருவநிலை மாற்றங்கள், எங்கு பார்த்தாலும் நீரும், நிலமும், காற்றும் வேதிக்கழிவுகளால் நிரம்பிவழியும் நிலை, பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிப்பு, உருகும் பனிப்பாறைகள், உயரும் கடல் மட்டங்கள், கடல் அரிப்பில் காணாமல் போகும் சிறு தீவுகள்... என புவிக் கோளம் திணறிக் கொண்டிருக்கிறது.
ஆழிப்பேரலை தவிர, இப்பேரழிவுகள் பெரும்பாலும் மனிதர்கள் உண்டாக்கிய பேரழிப்புத் திட்டங்களால் ஏற்பட்டவையே. வளர்ச்சித் திட்டங்கள், நவீன வளர்ச்சிமுறை என்ற பெயர்களாலேயே இந்தப் பேரழிப்பு செயல்பாடுகள் அரங்கேறுகின்றன. இலாபவெறி கொண்ட பெருமுதலாளிகளும், அரசாங்கங்களும் இணைந்தே இதில் ஈடுபடுகின்றன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாநகரம் ஆகியவற்றை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கல்பாக்கம் அணுஉலை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தையே அழிக்கக் காத்திருக்கும் கூடங்குளம் அணுஉலை, தேனி மாவட்டம் தேவாரத்தின் அம்பரப்பா மலைக்குன்றின் அடியில் நிலை கொண்டு தமிழ்நாட்டை அணுக்கழிவுகளின் கிடங்காக மாற்றத் துடிக்கும் நியூட்ரினோத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம் பழைய காயலில் அமிழ்ந்திருக்கும் கதிரியக்கத்தை வெளியில் கொணர்ந்து ஆபத்தை விளைவிக்கும் சிர்க்கோனியம் திட்டம், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இல்மனைட், ரூட்டைல், மோனோசைட், கார்னெட் போன்ற அரிய வகை மணல்களை அள்ளியெடுத்து கதிரியக்கத்தால் புற்றுநோயைப் பரப்பும் திட்டம், காவிரி பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கத் துடிக்கும் மீத்தேன் திட்டம், திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் தொகை தொகையாக உழவர்களை வெளியேற்றும் கெயில் குழாய்த் திட்டம்.... என அடுக்கடுக்கான பேரழிப்புத் திட்டங்கள் தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ளன.
இவை சூழலியல் சிக்கல்கள் மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சிக்கல்கள். மக்களின் தாயகப் பறிப்புச் சிக்கல், தலைமுறை தலைமுறையாக தமிழினத்தை பாதிக்கும் சிக்கல். இப்பேரழிப்புத் திட்டங்களை எதிர்த்து அந்தந்தப் பகுதியில் குடிமைச் சமூக அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும் நடத்தும் போராட்டங்கள் பெருந்திரள் இயக்கங்களாக வடிவம் கொள்வதன் காரணமும் இதுதான்.
இந்தியாவின் பிறபகுதிகளிலும், உலக நாடுகள் பலவற்றுள்ளும் சூழல் பேரழிப்புகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன ஒரு சில இடங்களில் தற்காலிக வெற்றிகளும் கிடைக்கின்றன. ஆயினும் புதிய வடிவிலும் புதுப்புது இடங்களிலும் இவ்வகை பேரழிப்புத் திட்டங்கள் தொடர்ந்து முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றை எதிர்த்தப் போராட்டங்களும் மீண்டும் மீண்டும் எழுகின்றன.
தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு அப்பால் மக்கள் திரளும் போராட்டங்களாகப் பெரிதும் இவ்வகைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் போராட்டங்களே அமைந்துள்ளன. இப்போராட்ட இயக்கங்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் துணையாக இயங்கும் முயற்சிகளும் முன்னேறி வருகின்றன. உலக அளவிலும் ஒன்றுபட்ட நிகழ்வுகள் அவ்வப்போது அடையாளமாகவாவது நடக்கின்றன.
ஆயினும் இச்சிக்கல்கள் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அரசுகள் பின்பற்றும் திட்டவட்டமான அரசியல் - பொருளியல் கொள்கைகளின் விளைவே இவை. இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் தாராளமய - உலகமயப் பொருளியல் கொள்கைகளை செயல்படுத்துவதில் ஒரே திசையில் பயணிக்கின்றன. இதற்கு இசைவான நுகர்வு வெறியும், அரசியல் - பண்பியல் கருத்தியல்களும் கட்டமைக்கப்படுகின்றன. உலகெங்கிலும் அரசுகளின், அரசியல் கட்சிகளின் முழுநேரப் பணியாக இவையே உள்ளன.
இச்சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள் போராட்டங்கள், இப்போராட்டங்களுக்கு ஆதரவான அறிவாளர்கள் சிலரின் அழுத்தங்கள் ஆகியவற்றின் விளைவாக இச்சூழலியல் சிக்கல்களுக்கு மாற்று வழிகள் காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆயினும் இம்முயற்சிகள் தெளிவான மாற்று அரசியல் - பொருளியல் கோட்பாடுகளின் வழி நடத்தப்பெறுவதாக இல்லை. இருக்கிற தாராளமயச் சந்தை கட்டமைப்புக்குள்ளேயே மாற்றுத் திட்டங்கள் முன் வைப்பது, மாற்று நுகர்வுமுறைகளைப் பரப்புவது, மாற்றுத் தொழில்நுட்பத்தின் மூலமாக தீர்வு காண்பது, அரசற்ற சூழலியல் முயற்சிகள், பசுமை மார்க்சியம், காந்தியம். என மாற்று முயற்சிகள் முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான இயக்கங்களும் செயல்படுகின்றன.
இம்மாற்று முயற்சிகளை திறனாய்வு செய்து உறுதியான மாற்றுத் திட்டத்தை முன்மொழிவதே இக்கட்டுரையின் நோக்கம்.
சந்தைப் பொருளியலுக்குள்ளே மாற்றுத் திட்டம்
ஐ.நா. முன்முயற்சியில் 1992 ரியோ புவி உச்சி மாநாடு தொடங்கி ஆண்டு தவறாமல் கூட்டங்கள் நடைபெறுவதும் சில மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்படுவதும், அவற்றின் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் அவை சரியாக செயலாவது குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.
1997இல் ஜப்பானின், கியோட்டோ நகரில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தாராளமய சந்தை விதிகளுக்கு உட்பட்டே மாற்றுத்திட்டங்களை முன் வைத்தது. அவையும்கூட நாடுகளை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களாக இல்லை. மாசுபாட்டை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு செய்யும் முயற்சிகளாகவே அவை பெரிதும் அமைந்தன. அதற்கும் அரசுப் பணத்தை தனியார் முதலாளிகளுக்கு எடுத்து வழங்கும் திட்டங்களே வகுக்கப்பட்டன.
புவி வெப்பமாதலுக்கும் தாறுமாறான பருவ நிலை மாற்றங்களுக்கும் காரணமான கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்டிரசு ஆக்சைடு ஆகிய மாசு வளிகளின் அளவை 1990ஆம் ஆண்டோடு ஒப்பிட 2012க்குள் 5.2 விழுக்காடு குறைக்க வேண்டும் என்ற திட்டம் கியோட்டோவில் ஏற்கப்பட்டது. அதனை செயல்படுத்த ஒவ்வொரு நாடும் எந்தெந்த அளவு மாசு வளி அளவைக் குறைக்க பொறுப்பேற்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது. ஆனால், 2012இல் கணக்குப் பார்க்கும்போது மாசு வளி உமிழ்தலின் அளவு 5.2 விழுக்காடு குறைவதற்கு மாறாக 45 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1990ஐ ஒப்பிட ஆர்க்டிக் பனிப்பாறைகளின் அளவு 30 இலட்சம் சதுர கிலோ மீட்டர் குறைந்துவிட்டது. பனிப் பாறைகள் உருகி, கடல்மட்டம் உயர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்லாயிரம் தீவுகளில் ஏறத்தாழ நூறு தீவுகளும், வங்காள தேசத்தின் போலோ, குதுப்தியா தீவுப் பகுதிகளும், மாலத் தீவின் தாழ்ந்தப் பகுதிகளும் காணாமல் போய் விட்டன. ஆனாலும் உலக நாட்டுத் தலைவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து அவ்வப்போது பேசுவதும் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டறிக்கைகளை வெளியிடுவதும் தொடர்கிறது. மக்களுக்கு சில ஆறுதல் சொற்களை, அலங்கார மொழிகளில் கூறிவிட்டு இயற்கையைச் சூறையாடும் தங்களது போக்கில் தொடர்கிறார்கள்.
இந்த வரிசையில் சிலநூறு கோடி டாலர்கள் நிவாரணத் தொகையாக அறிவித்துவிட்டு ஒட்டுமொத்த உலகத்தையும், இயற்கையையும் முதலாளிகளின் தனியுடமையாக்கும் கொலைகாரத் திட்டம் பசுமைப் பொருளியல் என்ற பெயரில் கடந்த 2012 சூனில் ரியோ-டி-ஜெனிரோ மாநகரில் நடைபெற்ற ரியோ +20 புவி உச்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டு அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) சார்பில் பவான் சுகதேவ் என்பவர் முன்வைத்த “சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பொருளியல்''. (The Economics of Eco Systems and Bio Diversity - TEED) இயற்கை என்பதை ஒரு மூலதனமாகக் கொள்கிறது, பண மூலதனம், உழைப்பு மூலதனம் போல இது இயற்கை மூலதனம் (Nature Capital) என்றார். இதன்படி ஆறுகள், குளங்கள், காடுகள், கடல் மீன்கள், காட்டு உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்துமே சந்தை சரக்குகள். இவை எதுவுமே மக்கள் அனைவருக்கும் பொதுவான உடைமைகள் (Commons) இல்லை. இதற்கான கணக்குப் பதிவீட்டு முறையையும் பவான் சுகதேவ் முன்வைத்தார். இவை அனைத்தும் ரியோ உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்டு அண்மையில் 2013 நவம்பர் 11 தொடங்கி 22 வரை போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் அவற்றின் செயல்பாடுகளுக்காகப் பேசப்பட்டது. 2015இல் பாரிசில் நடைபெறும் அடுத்த உச்சி மாநாட்டில் இது முழு செயல்வடிவம் பெறும்.
அதன்பிறகு இயற்கை முழுவதும் தனி முதலாளிகளின் உடைமையாக மாறி கோடிக் கணக்கான மீனவர்களும், காடுகளிலும் அதை சுற்றி வாழும் பல கோடி மக்களின் நீர்வளம் சார்ந்து பிழைக்கும் பல கோடி உழவர்களும் அவர்களது வாழ்வுரிமை இழந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த தங்கள் தாயகங்களில் இருந்து விரட்டப்படுவார்கள்.
தாராளமய முதலாளியத்துக்கு மாற்று ஏதும் இல்லை (There Is No Alternative – TINA) என்ற கொக்கரிப்பின்கீழ் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றுத் திட்டங்கள் உண்மையில் சூழல் சமநிலையைப் பாதுக்காப்பதற்குப் பதிலாக பெரும் குலைவையே ஏற்படுத்தும்.
முதலாளிய சந்தைப் பொருளியல் கட்டமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு இயற்கையை அழிவிலிருந்து பாதுகாப்பது என்பது ஒருக்காலும் நடக்காத செயல் ஆகும்.
மாற்று வாழ்முறை என்ற பரப்புரை
ஆயினும் நிலவும் பொருளியல் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தாமல் மாற்று வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் வளங்குன்றா வளர்ச்சிக்கு வழிமுறைகள் முன்வைக்கப் படுகின்றன. பக்கத்து தெருவுக்குப் போக நடந்து செல்லுங்கள், கொஞ்சம் கூடுதல் தொலைவுக்கு மிதிவண்டியைப் பயன்படுத்துங்கள், ஒரு மகிழுந்தில் நாலு பேர் பங்கிட்டுக் கொண்டு செல்லுங்கள், பிட்சா - பர்கர் மற்றும் புட்டிகளில் அடைத்த உணவுகளை பயன்படுத்தாதீர்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்... என்பன போன்ற மாற்று நுகர்வு முறைகள் முன்வைக்கப்படுகின்றன.
மிகை நுகர்வைக் குறைத்துக் கொள்வதின் மூலம் இயற்கையை பாதுகாக்கலாம் என்ற கோட்பாட்டு சிக்கலை நிலவும் அரசியல் - பொருளியல் அமைப்பிலிருந்து நுகர்வோர் தோளுக்கு மாற்றுகிறது.
இந்த மாற்று வாழ்முறைகள் பின்பற்றப்பட வேண்டியதுதான் என்றாலும் சூறையாடலில் இருந்து இயற்கையை பாதுக்காத்துத்தர இது முதன்மை வழியாகாது. சிக்கலின் காரணத்தைக் கவனிக்காமல் விளைவுகளின் தீவிரத்தை குறைக்க மட்டுமே முயலும் பாதை இது.
தொழில் நுட்பத் தீர்வா?
மாற்றுத் தொழில்நுட்பத்தை தீர்வாக முன்வைக்கிற இன்னொருப் பார்வை உள்ளது. பெட்ரோலுக்கு பதில் எத்தனாலைப் பயன்படுத்துங்கள், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் சிதிலி பல்புகளை பயன்படுத்துங்கள், காற்றாலை, கடலலை, கதிரவன் மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள், வண்டிகளின் மாசுபடுத்தும் அளவினை கணக்கெடுத்து மாசுபாட்டு வரியை விதியுங்கள், மாற்றுத் தொழில்நுட்பம் பயன்படுத்துவோருக்கு மானியம் அளியுங்கள் என்பன போன்ற வழிகள் கூறப்படுகின்றன.
வேதி உரங்களை திணிக்கும் பசுமைப் புரட்சி வேளாண்மைக்கு மாற்றாக இயற்கை வேளாண்மை உள்ளிட்ட நீடித்த வேளாண் நுட்பங்களை மாற்றுத் திட்டமாக முன்வைக்கப்படுவதும் உண்டு. நம்மளவில் இதை பின்பற்றினால் போதும். அரசின் திட்டங்களை முறியடித்துவிடலாம் என்று கருதுவோரும் உண்டு.
இவை உடனடியாக பின்பற்றத் தகுந்த, உடனடி எதிர்காலத்துக்கு துயர் தணிப்பை ஏற்படுத்த பயன்படும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் இது சூறையாடலில் இருந்து இயற்கையை பாதுகாக்க நிரந்தரத் தீர்வாக அமையாது. முதலாளிகளின் இலாப வேட்டைக்கும் இயற்கை சுரண்டலுக்கும் உள்ள. உறவின் வலுவை மிகவும் குறைத்து மதிப்பிடுவதால் ஏற்படுகின்ற குறைப்பார்வை இது.
எரிஎண்ணெய் முதலாளிகள், மகிழுந்து, சுமையுந்து, பேருந்து, இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் முதலாளிகள்; சாலை, மேம்பாலங்கள் போன்ற கட்டுமான முதலாளிகள், மனைவணிக முதலாளிகள் ஆகியோருக்கிடையே நிலவும் கூட்டணி வலுவானது. இவர்களுக்கும் தேர்தல் கட்சிப் புள்ளிகளுக்கும் இடையே நிலவும் ஒட்டுண்ணி உறவும் வலுவானது. தனியார் - பொதுத்துறை கூட்டு என்ற பெயரால் இத்துறைகளில் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் வளர் முகமாக இருப்பதே இதற்குச் சான்று.
சூழலியல் அரசிலிவாதம்
விரல்விட்டு எண்ணக்கூடிய வேறுசிலர் சூழலியல் அரசிலிவாதம் (Eco - Anarchism) என்பதை மாற்றாக கூறுகின்றனர். எந்தவித நிர்வாகக் கட்டமைப்பு இருந்தாலும் அங்கே வன்முறையும் இயற்கையின் மீதான ஆதிக்கமும் இருக்கும், எனவே ஒரு சிலர் குழுவாக இணைந்து தங்களுக்குள் எளிய பொருள்களை உற்பத்தி செய்து அதைப் பரிமாற்றம் செய்து கொண்டு அமைதியாக ஒதுங்கி வாழ்வது ஒன்றே மாற்று என்றும் இவர்கள் கூறுகின்றனர். முதலாளிகள் - அரசதிகாரம் இணைந்த பொறியமைவு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு இப்புவிப்பந்தின் மூலைமுடுக்கெல்லாம் தம் கொடுங்கரங்களைப் பரப்பி வருகின்ற இந்த கால கட்டத்தில் இது வெகு மக்களுக்கு பயன்பட முடியாத கற்பனைவாதமாகவே இருக்கும்.
பசுமை மார்க்சியம்
பசுமை மார்க்சியம் என்பது இன்று உலக அளவில் பேசப்பட்டுவரும் ஒப்பீட்டளவில் வலுவான மாற்றுக் கொள்கையாகும். மார்க்சிய சூழலியல்வாதம் (Marxist Ecology), திணைம நிகரமைக் கொள்கை (Eco - Socialism) என்ற பல பெயர்களில் கூறப்பட்டாலும் அடிப்படையில் இவை ஒன்றுதான்.
ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் (John Bellamy Faster), ஜோயல் கொவெல் (Joel Kovel), மைக்கல் லொவி (Michal Lowy), ஜேம்ஸ் ஓ கூன்னூர் (James O’ Connor) போன்ற இப்பசுமை மார்க்சியர்கள் முதலாளியத்தை வைத்துக் கொண்டு இயற்கையைப் பாதுகாத்து விட முடியாது என்பதை பல வலுவான சான்றுகளோடு தெளிவாக நிறுவி வருகின்றனர்.
புதிய தாராளமயப் பின்புலத்தில் கீழ்வரும் ஆறு முதன்மைக் காரணிகள் ஒன்றிணைந்த வகையில் செயலாற்றுகின்றன என்பதை ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் தெளிவாக்குகிறார். அவை.,
1.            மூலதனக்குவிப்பு, மேலும் மூலதனக் குவிப்பு என்ற மூலதனத்தின் இயங்கு சக்தி.
2.            உழைப்பாளர்கள் மேலும் மேலும் சுயத் தொழில்களை விட்டுவிட்டு கூலித் தொழிலாளர்களாக மாறுவது.
3.            உற்பத்தியை விரிவாக்கிக் கொண்டே செல்லும் புதிய புதிய தொழில்நுட்பங்கள்.
4.            செயற்கையாக உருவாக்கப்படும் தேவைப்பாடுகள் (Manufactured Wants)
5.            சமூகப் பாதுக்காப்பைவிட இந்தப் பொருளியல் வளர்ச்சிக்கு துணைச் செய்வதே அரசாங்கத்தின் தலையாயப் பணி என்ற ஆட்சிக் கோட்பாடு.
6.            செல்வக் குவிப்பே செயல்திறனின் அடையாளம் என்ற கருத்தைப் பதியவைக்கும் தகவலமைப்பு, கல்வியமைப்பு, விழுமிய அமைவு (Value System)
(விரிவிற்கு காண்க:சூழலியல் புரட்சி - விடியல் வெளியீடு, கோவை)
தாராளமய முதலாளியப் பொருளியலின் தவிர்க்க முடியாத குணங்கள் இவை. அதுவும் நிதி மூலதனம் கோலோச்சுகிற இன்றைய கால கட்டத்தில் மூலதனக் குவிப்புக்கான கால இடைவெளி மேலும் மேலும் சுருங்கி வருகிறது. ஏனெனில் சந்தைப் பொருளியலின் ஏற்ற இறக்கங்கள் எப்போது ஒரு குலைவிற்கு இட்டுச் செல்லுமோ என்ற அச்சுறுத்தல், மூலதனத்தை துரத்திக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இது. எனவே ‘மிக அதிக இலாபம், மிக விரைவாக’ என்பது இன்றைய புதிய தாராளமயத்தின் வழிகாட்டும் நெறி.
முதலாளிய உற்பத்தியின் முதன்மை நோக்கமே இலாபம்தான். இந்த இலாபம்தான் அடுத்து மூலதனமாக விரிவடைகிறது. சந்தை விலையை உயர்த்துவது, உற்பத்திச் செலவைக் குறைப்பது ஆகிய இரண்டு வழிகள்தான் மூலதனக் குவிப்புக்கு உற்ற வழி. எவ்வளவுதான் முற்றுரிமை (Monopoly) வளர்ந்திருந்தாலும், முற்றுரிமை நிறுவனங்களுக் கிடையில் போட்டி தொடர்கிறது. சந்தை விலையை ஓரளவுக்கு மேல் உயர்த்த முடியாத வரம்பு சக்தியாக இந்தப் போட்டி விளங்குகிறது.
எனவே மூலதனக்குவிப்பு விரிவடைவதற்கு முதன்மையான வழி உற்பத்திச் செலவை குறைப்பதுதான். இயற்கையில் கிடைக்கும் முதல் நிலைப் பொருள்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்குவது, உழைப்பாளிகளின் உண்மை ஊதியத்தை குறைப்பது. ஆகிய இரண்டு வழிகளிலேயே இது செயல்படுகிறது.
இவ்வாறான மூலதனக்குவிப்பில் ஈடுபடாத பணம், வெறும் நுகர்வுப் பொருள் வாங்குவதற்கான ஊடகமாக சுருங்கிவிடும். முதலாளியத்தின் அடிப்படை இயங்குவிதி இதனை அனுமதிக்காது. இந்த மூலதனக் குவிப்பில் திறன் இல்லாதவர் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியாது. மூலதனக்குவிப்பில் திறன் இல்லாத நிறுவனம் சந்தையிலிருந்து விரைவில் வெளியேற்றப்பட்டுவிடும்.
எனவே, மூலதனக்குவிப்பு, மேலும் மூலதனக் குவிப்பு என்பது முதலாளியத்தின் ‘மரபீனியிலேயே’ பொதிந்துவிட்ட பிறவிக் குணம்.
இந்த மூலதனக்குவிப்பின் வழியிலேயே உற்பத்திச் செலவைக் குறைக்கின்ற புதிய புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. இவை பல நேரங்களில் மிகை உற்பத்தியை விளை விக்கின்றன. இந்த மிகை உற்பத்திக்கு ஏற்ற சந்தை விரிவாக்கம் விளம்பரங்களின் மூலமும், போர்களின் மூலமும் உருவாக்கப் படுகின்றன.
குறைந்த விலையில் இயற்கைப் பொருள்களைப் பெறவும் போர்கள் பயன்படுகின்றன.
இதற்கு இசைவான நுகர்வுப் பண்பாடும், இன வெறியும், நிறவெறியும் பரப்பப்படுகிறது. மனிதர்கள் உதிரிகளாக்கப்பட்டு, அவரது செல்வக்குவிப்பு, நுகர்வின் அளவு ஆகியவற்றை வைத்தே அவரது தகுதியைத் தீர்மானிக்கும் பண்பாடு வளர்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்றாற்போல் ஊடகங்கள் தகவல் பரிமாற்றக் களமாக இல்லாமல் பொருள் விளம்பரங்களுக்கானக் களமாக மாற்றப்படுகின்றன.
ஆட்சியாளர்களின் பணி நாடுகளுக்கிடையே அல்லது நாட்டு மக்களுக்கிடையே உறவை மேம்படுத்துவதைவிட சந்தைப் பங்கீட்டுப் பணியாக பெரிதும் மாற்றப்படுகிறது.
தாராளமய முதலாளியம் என்பது முதலாளியத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சி நிலை. எனவே முதலாளிய அமைப்பு முறையை வைத்துக் கொண்டு இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாப்பது முயற்கொம்பே! பசுமை மார்க்சியர்கள் இந்த உண்மையை வலுவாக எடுத்துரைக்கிறார்கள்.
அதே நேரம் பெரும் தொழிற்சாலைகள், பெரிய பெரிய அணைக்கட்டுகள், பெரும் பெரும் திட்டங்கள் போன்றவை அதிகாரக் குவிப்பை முதலாளியத்தில் உருவாக்கியது போலவே இதே வழிமுறை பின்பற்றப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஆண்ட சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் உருவாக்கியது என்பதையும் பெரும்பாலான பசுமை மார்க்சியர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
இந்நாடுகளில் நடைபெற்ற இத்தவறான பாதைக்கு மார்க்சிய மூலவர்களான காரல் மாக்சும் - பிரடரிக் ஏங்கல்சும் பொறுப்பாளிகள் அல்லர் என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள்.
உண்மைதான். மார்க்சியப் பகைவர்கள் கூறுவதுபோல் மார்க்சும் ஏங்கல்சும் இயற்கையைப் பற்றியோ சூழல்வளம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியோ கூறாதவர்கள் அல்லர்.
“மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்'' என்ற சிறிய சீரிய தமது நூலில் ஏங்கல்சு முதலாளியம் எவ்வாறு இயற்கையை வேட்டையாடுகிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறார். “இயற்கையை மனிதன் தாக்கினால் ஒரு கட்டத்தில் இயற்கை திருப்பித் தாக்கும்” என்றும் எச்சரிக்கிறார்.
“உயர்வடிவ சமூகப் பொருளியல் அமைப்பு என்ற நிலையிலிருந்து நோக்கினால், சக மனிதனை ஒரு மனிதன் தனது உடைமையாக்குவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதுபோல் இப்புவியின் மீது ஒரு தனிமனிதன் உடைமை உரிமை கோருவதும் முட்டாள் தனமானது என்று விளங்கும். ஒரு முழு சமூகமோ அல்லது ஒரு தேசமோ அல்லது ஒரு காலத்தில் நிலவும் சமூகங்கள் அனைத்தும் இணைந்தோ கூட புவியின் உடைமையாளர்கள் என கூறிக்கொள்ள முடியாது. அவர்கள் இந்தப் பூமியின் துய்ப்பாளர்கள், பயனாளிகள் அவ்வளவுதான். அவர்கள் ஒரு நல்ல குடும்பத்தின் தலைவன் போல் நடந்து கொள்ள வேண்டும். இப்போது உள்ளதைவிட உயர்நிலையில் இந்த பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்.” என்றார் காரல் மார்க்சு (Capital 3rd Vol. P-911)
இயற்கையின் சுழற்சியில் தலையிடுவது ஓர் மாபெரும் வளர்சிதைப் பிளவு என்ற ஆபத்தை விளைவிக்கும் என ஜெர்மானிய உயிரியலாளர் வான் லீபிக் கூறுவதை மேற்கோள் காட்டி மார்க்சு எச்சரிக்கிறார்.
தொழில்துறை முதலாளியம் தலையெடுப்பதற்கு முன்னால், உற்பத்தி நிகழும் இடங்களைச் சுற்றியே நுகர்வோரும் இருந்தனர். வேளாண் உற்பத்தி என்பது, அம்மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் உருவாக்கிய நுண்ணூட்டச்சத்தை உட்கொண்டே நடக்கிறது. இவ்வாறு உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை உண்ணும் மனிதர்கள், உணவு எச்சத்தையும் மனிதக் கழிவுகளையும் அப்பகுதிகளைச் சுற்றியே விடுகிறார்கள். மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட நுண்ணூட்டங்கள் இவ்வாறு வடிவம் மாறி, மீண்டும் மண்ணை அடைகின்றன. அதே போல், எல்லா உயிரினங்களும் ஒன்றிற்கு உணவாக மற்றொன்று என்றும், ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உணவு என்றும் ஓர் உயிர்மச் சுழற்சியில் இயங்குகின்றன.
தொழில்துறை முதலாளியம் தோன்றி, உணவு உற்பத்தி மையங்களும் நுகர்வோர் மையங்களும், வெவ்வேறு இடங்களில் வெகுத் தொலைவுக்குப் பிரிக்கப்படுகின்றன. நுகர்வு மையங்களாக இருக்கும் நகரங்களின் கழிவுகள் ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் கலக்கப்பட்டு, அவை மாசுபாடு அடைகின்றன. இந்தக் கழிவுகளை உட்கொண்டு, வளர்ந்து, அதன் போக்கில் அச்சூழலைத் தூய்மைப் படுத்துவதற்கான வேளாண் உற்பத்தி மையங்கள், அந்நகரங்களில் இல்லாமல் எங்கோ தொலைவில் உள்ளன.
மறுபுறம், உணவு உற்பத்தியில் நுண்ணூட்டங்கள் உறிஞ்சப்பட்ட கிராமத்து நிலங்களில் அவற்றில் உற்பத்தியான உணவுப் பொருள்கள் வேறெங்கோ எடுத்துச் செல்லப்பட்டதால், அதன் எச்சங்கள் அந்நிலங்களில் இடப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
இவ்வாறு, உயிர்மச் சுழற்சியில் ஏற்படுகிற முறிவையே, வளர்சிதைப் பிளவு என லீபிக் வரையறுத்தார்.
இதை எடுத்துக்காட்டும் மார்க்சு, இதன் விளைவுகள் வளங்களை மீட்க முடியாத பெரும் அபாயமாக முடியும் என எச்சரிக்கிறார்.
இவ்வாறு, மார்க்சிய மூலவர்களுக்கு இயற்கையைப் பாதுகாப்பது குறித்த அக்கறை இருந்தது. முதலாளிய உற்பத்தி முறையில் இவை சீரழிக்கப்படுவதைப் பற்றி தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.
ஆயினும் “இயற்கையை வெல்வது”, “இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவது”, “இயற்கையை மனிதனுக்குக் கீழ்ப்படிய செய்வது” போன்ற கருத்தியல்கள் பின்னால் மார்க்சிய முகாமிலேயே வளர்வதற்கு, அடிப்படை வாய்ப்புகள் மார்க்சியத்திலேயே இருந்ததைக் கவனிக்காமல் இருக்க முடியாது.
இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மார்க்சு அங்கங்கே சொல்லிச் சென்றாலும் அவரது தலையாய பொருளியல் கோட்பாட்டில் அது இடம் பெறவில்லை. இலாபம், வட்டி ஆகியவை எங்கிருந்து வருகின்றன என்கிற புதிருக்கு விடையளித்து பொருளியல் சிந்தனையில் ஒரு பெரும் புரட்சியை விளைவித்தவர் மார்க்சு.
ஒரு பொருள் சொந்த நுகர்வுக்காக பயன்படுகிற வரையிலும் அது வெறும் பொருள்தான் (Substance); அது சந்தைப் பரிமாற்றத்துக்கு வரும் போதுதான் அது ஒரு சரக்கு (Commodity) ஆகிறது. இந்த சரக்கு ஊடாட்டம்தான் முதலாளியத்தின் உயிர்ப்பாக இருக்கிறது என்று மார்க்சு கூறினார்.
ஒரு பொருள் சரக்காக மாறுவதற்கு அதன் மீது உழைப்புச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். என்பதை நுணுக்கமாக எடுத்துக் கூறினார்.
இலாபம் என்பது சந்தைப் பரிமாற்றத்தில் கிடைக்கின்ற ஒன்று என்பதே மார்க்சுக்கு முன்னால் நிலைப்பெற்றிருந்த பொருளியல் கொள்கையாகும். வழங்கலுக்கும் தேவைப் பாட்டுக்கும் உள்ள இடைவெளியைப் பயன்படுத்தியே சந்தைப் பரிமாற்றத்தில், இலாபம் உருவாகிறது, அதுவே அடுத்த கட்ட மூலதனமாக விரிவடைகிறது என்று முதலாளியப் பொருளியல் அறிஞர்கள் கூறி வந்தனர். கண்ணுக்குத் தெரியாத கையாக சந்தை செயல்பட்டு, இலாபத்தை உறுதி செய்து உற்பத்திப் பெருக்கத்திற்கு வழி சமைக்கிறது என்பதே ஆதம் ஸ்சிமித்தின் கொள்கையாகும்.
ஆனால், இவற்றை மறுத்த காரல் மார்க்சு சந்தையில் வழங்கல் - தேவைப்பாடு மட்டுமே செயல்படுவதாக இருந்தால், அது ஒருவருக்கு இலாபம் கொடுத்து மற்றவருக்கு இழப்பை (நட்டத்தை) ஏற்படுத்துமே தவிர அனைத்து முதலாளிகளும் இலாபம் பெறும் சூழலை விளைவிக்காதே என்று வினா எழுப்பினார்.
சந்தைக்கு வருவதற்கு முன்னாலேயே உற்பத்தி நிலையிலேயே உபரி மதிப்பு (Surplus Value) என்ற வகையில், அது பிறப்பெடுக்கிறது என தெளிந்து கூறினார். இந்த உபரி மதிப்பே இலாபம், வட்டி, வாடகை என்பதாக கிளைப் பரப்புகிறது என்றும், இதற்கு மேல் சந்தையில் வழங்கலுக்கும் தேவைப்பாட்டுக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி தனித்தனி முதலாளிகளுக்கு மிகை இலாபத்தை உருவாக்கித் தருகிறது என்றும் விளக்கினார்.
உற்பத்தி நிகழும் முறையை அக்கக்காக ஆய்வு செய்து இதனை தெளிவுபட விளக்கினார். உழைப்பாளிகளின் அறிவு மற்றும் உடல் ஆற்றல், உழைப்பு சக்தி (Labour Power) என்ற வகையில் சந்தை சரக்காக கைமாறுகிறது என்று அவர் கண்டறிந்து கூறியது தான் மேதைமையின் உச்சம்.
தொழிலாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் அவர்களது உழைப்பின் விலை என்றும், மற்ற பொருள்களைப் போலவே இதற்கும் இவ்வாறு விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்றும், அதன் விளைவாக உற்பத்தி நடந்து, உற்பத்தியான சரக்கு சந்தைக்குச் சென்று வழங்கல் - தேவை சமன்பாட்டுக்கேற்ப இலாபம் உருவாகிறது என்றும் அதுவரை கூறப்பட்டு வந்ததை மார்க்சு உடைத்தார்.
இதற்கு, சரக்கில் நிலவும் மதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
அவரது ஆய்வின்படி, ஒரு சரக்கானது பயன்மதிப்பு (Use Value), பரிமாற்ற மதிப்பு (Exchange Value) ஆகிய இரு மதிப்புகளைக் கொண்டது.
அச்சரக்கின் பயன் மதிப்பு அதன் உள்கூறுகளின் காரணமாக பெற்றுள்ள பயன்பாட்டு மதிப்பு ஆகும். பயன்பாடு இல்லாத எந்தப் பொருளும் சரக்கு என்ற வடிவம் எடுத்து சந்தைக்கு வர முடியாது. வெவ்வேறு பயன் மதிப்புள்ள சரக்குகள் சந்தையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இந்த பரிமாற்றத்தின் போது பரிமாற்ற மதிப்பு உருவா கிறது. அது பெரிதும் பண அளவால் குறிக்கப் படுகிறது.
இந்த பரிமாற்ற மதிப்பே மதிப்பு என்பதாக மார்க்சால் கொள்ளப்படுகிறது.
வரலாற்றுப் போக்கில் சந்தை பரிமாற்றம் எவ்வாறு வளர்ந்தது என்பதை மார்க்சு விளக்குகிறார். முதலில் ஒரு சரக்கு சந்தையில் பரிமாறப்பட்டு அதற்கு இணையாக வேறு தேவையான சரக்குகள் பெறப்படுகின்றன. இதனை C - C என்ற வாய்ப்பாட்டால் விளக்குகிறார். இங்கு C என்பது சரக்கை (Commodity) குறிக்கும்.
அடுத்த நிலையில் சந்தையின் வளர்ச்சிப் போக்கில் சரக்கு பரிமாற்றத்தை எளிமைப்படுத்த அரசு முத்திரையுடன் பணம் (Money) வருகிறது. சரக்கைக் கொடுத்து அதற்கு ஈடாக பணத்தைப் பெற்று அப்பணத்தை வைத்துக் கொண்டு வேறொரு சரக்கை வாங்கிக் கொள்வது என்பது நடக்கிறது. இதனை C – M – C என்று கூறுகிறார். இந்தப் பரிமாற்றத்தின் தொடக்கத்தில் இருந்த சரக்குக்கு நிகராக வேறொரு சரக்கு பெறப்படுகிறது. பணம் என்பது கைமாற்றிக் கொடுக்கின்ற ஊடகமாக மட்டுமே செயல்படுகிறது.
முதலாளியச் சந்தையில் இது M–C–M ஆக மாறுகிறது. இங்கு தொடக்கத்தில் இருக்கின்ற பணமும் சரக்கு கைமாற்றப் பட்டபின் கடைசியில் வருகின்ற பணமும் ஒரே அளவுதான் இதில் இலாபமோ உபரியோ எதுவும் இல்லை. ஆனால் நடப்பதோ M–C–MI ஆகும். இங்கு MI என்பது M+ΔM ஆகும். இந்த ΔM தான் கிடைத்த உபரியாகும் இதனையே காரல் மார்க்சு உபரி மதிப்பு (Surplus Value) என வரையறுத்தார்.
இந்த உபரி மதிப்பு எப்படி வருகிறது என அவர் வரையறுப்பதில்தான் சிக்கல் எழுகிறது.
உற்பத்தி வழிமுறையை விளக்கும் போது “உழைப்பு என்பது முதலில் மனிதன், இயற்கை ஆகிய இருவரும் பங்கேற்கும் செயல்பாடாகும்” எனக் குறிப்பிடுகிறார். (Capital 1st Vol. P-173).
ஆனால் “பயன் மதிப்பு அல்லது பயன் பாட்டுப் பொருளானது மதிப்பு பெறுவதற்கான ஒரே காரணம் அதில் அருவமான மனித உழைப்பு பொதிந்திருப்பதுதான்.” என்கிறார். (Captial 1st Vol. P-46)
இந்த வகையில், அனைத்தையுமே மனித உழைப்புக்குள் அடக்குகிறார். அதாவது, உழைப்புச் சக்தி என்ற சரக்கு, ஊதியம் அல்லது சம்பளம் அல்லது கூலி என்ற பரிமாற்ற மதிப்பைக் கொடுத்து, வாங்கப்பட்டு உற்பத்தியில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் உழைப்பு சக்தி என்ற சரக்கின் பயன்பாட்டு மதிப்பு தனித் தன்மையானது என்று விளக்குகிறார். தன் பரிமாற்ற மதிப்பைவிட, கூடுதல் மதிப்பை விளைவிக்கும் தனித்த ஆற்றலே இந்த உழைப்பு சக்தி என்ற சரக்கின் பயன் மதிப்பு என்று கூறினார். ஒவ்வொரு சரக்கிற்கும், அதன் இயல்பில் பொதிந்துள்ள பயன்பாட்டுத் தன்மை அதன் பயன் மதிப்பாகிறது. உழைப்பு சக்தி என்ற இந்த சரக்கின் இயல்புத் தன்மை, அது தனது உள்மதிப்பை விட கூடுதலான மதிப்பை உற்பத்தி செய்வதே என்று மார்க்சு விளக்கினார்.
எனவே, அந்த உற்பத்திச் சக்தியின் முழு விலையை அல்லது முழுப் பரிமாற்ற மதிப்பைக் கொடுத்து வாங்கி, உற்பத்தி செய்துயே அந்த உற்பத்திச் சரக்கு சந்தைக்கு வருகிறது என்று கொள்வோம். அப்போது, சந்தையில் தேவைக்கும் - வழங்கலுக்கும் சமநிலை நிலவுவதாகக் கொள்வோம். அப்போதும் உபரி மதிப்பு உருவாகும். அவ்வாறு உருவாவதற்கான காரணம், உழைப்புச் சக்தி என்ற இந்த சரக்கின் தனித்தன்மை வாய்ந்த பயன்மதிப்புதான் என்று மார்க்சு விளக்கியது அதற்கு முன்னால் இருந்த அத்தனைப் பொருளியல் கொள்கைகளையும் மறுத்த புரட்சிகரமானக் கோட்பாடாக விளங்கியது.
பயன் மதிப்பு குறிப்பான உழைப்பால் (Concrete Labour) வருகிறது; பரிமாற்ற மதிப்பு அருவமான உழைப்பால் (Abstract Labour) வருகிறது என்று கூறும் மார்க்சு இந்தப் பரிமாற்ற மதிப்பை அதன் மதிப்பு (Value) என அழைக்கிறார். இவ்வாறு அனைத்தையுமே மனித உழைப்புச் சக்தியின் விளைவு என்பதாக வரையறுக்கிறார்.
இங்கு பயன் மதிப்பில் பொதிந்துள்ள இயற்கைப் பொருளுக்கு எந்தவித மதிப்பும் (Value) அவர் வழங்கவில்லை. எனவே, அடுத்து சந்தைப் பரிமாற்றத்தின் போது உருவாகும் மதிப்பில் இதற்கு இடமில்லாமல் போகிறது.
ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கரும்பில் பொதிந்துள்ள சாறு இனிக்கிறது. இக்கரும்பை விளைவிப்பதற்கும் அதிலிருந்து சாறை பிழிந்தெடுத்து சர்க்கரை ஆக்குவதற்கும் அதிலிருந்து பலவிதமான தின்பண்டங்கள் உருவாக்குவதற்கும் மனிதனின் உழைப்புச் சக்தியே பயன்படுகிறது. ஆனால் இனிப்பு என்ற அடிப்படைத் தன்மைதான் இது சரக்காவதற்கும் இந்த சரக்கின் மதிப்பு சந்தையில் கூடுவதற்கும் அடிப்படையாகிறது. சந்தையில் விளையும் எல்லா உபரிகளுக்கும் அடித்தளமாக, தூண்டுகோலாக இந்தப் பயன் மதிப்பே விளங்குகிறது.
ஆனால் ΔM என்ற உபரி மதிப்பு முழுவதுமே உழைப்பு சக்தியால் மட்டுமே விளைந்தது என்று வரையறுப்பது பொருத்தமாக இல்லை. அதாவது இயற்கையின் மதிப்பை M க்குள் அடக்குவதும், அது MI ஆக வளரும் போது கிடைக்கும் ΔM முழுவதுமே இயற்கைக்கு ஒரு பங்குமில்லாதது போல ஒதுக்குவதும் சரக்கு உருவாகும் உழைப்பு நடவடிக்கையை முழுமையாக விளக்குவதாக இல்லை. உபரி மதிப்பு உருவாவதன் பின்னணியை தெளிவுபடுத்துவதாகவும் இல்லை.
இது வெறும் பொருளியல் வாய்ப்பாட்டு சிக்கல் அல்ல.
உருவாகும் உபரி மதிப்பு முழுவதும் மனித உழைப்பாளிகளால் விளைவதாக அவர் கணக்கிடுவதால் அந்த உபரி தனி முதலாளிகளுக்கு உரியதல்ல. எனவே முதலாளிகளுக்கு இந்த உபரி செல்லக்கூடாது. அப்படி அவர்கள் எடுத்துச் செல்வதே சுரண்டல் என வரையறுத்தார். உபரி மதிப்பின் காரணமானவர்கள் மனித உழைப்பாளிகளே. அதாவது சமூக மயமான உழைப்பே என்பதால் அந்த உபரி முழுவதும் உழைப்பாளிகளுக்கே செல்ல வேண்டும் என வரையறுத்தார்.
இந்த கணக்கீட்டின்படி இயற்கைக்கு பகிர்ந்தளிக்க எதுவும் இல்லை. எல்லாம் உழைக்கும் மனித சமூகத்திற்குதான்.
இந்த பொருளியல் வாய்ப்பாடு இயற்கையை உறிஞ்சி கிடைக்கும் உபரியை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதாக சுருங்குவதற்கு வழிகோலுகிறது. விளையும் உபரி முழுவதும் உழைக்கும் மக்களுக்கே அன்றி தனிநபருக்கு அல்ல என்று விடை கூறுவதோடு நின்று விடுகிறது.
அதாவது இயற்கையை தனி முதலாளி உறிஞ்சிக் கொழுப்பதா அல்லது அந்த இயற்கையை உழைக்கும் மனிதர்கள் பங்குப் போட்டுக் கொள்வதா என்ற நிலையோடு நின்றுவிடுகிறது.
எந்த ஒரு சிறுபொருளின் உற்பத்தியும் தனிநபரின் முயற்சியாலோ உழைப்பாலோ அல்லது, ஒரு தனித் தொழிலகத்தின் தொழிலாளிகள் மட்டுமே உற்பத்தி செய்வதோ அல்ல. அது, அதன் அடிப்படைப் பொருள்கள் உற்பத்தி, இயந்திரங்கள் உருவாக்கம், அவை அமைந்த கட்டட உருவாக்கம், அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்து வகையிலும் சமூகமயமானது. எனவே, எந்த வகையில் பார்த்தாலும் உற்பத்தி நடவடிக்கை என்பது சமூக உற்பத்தி நடவடிக்கையே. எனவே, அதன் பயன்கள் சமூகம் முழுவதற்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறுவதோடு நின்றுவிடுகிறது.
உபரி மதிப்பு அனைத்தும் உழைப்பால் வந்தது என்று தீர்மானித்த பிறகு தேவையான உழைப்பு நேரம் (Necessary Labor Time), உபரி உழைப்பு நேரம் (Surplus Labor Time) என்று அடுத்தடுத்து தனது ஆய்வைத் தொடருகிறார்.
பொறுப்பான குடும்பத் தலைவன் போல் இயற்கையை மேம்பட்ட நிலையில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்று அவர் கூறுவது வெறும் விருப்பமாகவே நின்று விடுகிறது.
மாபெரும் விடுதலைக் கோட்பாடான மார்க்சியத்தில் உள்ள இந்தக் குறைபாட்டைப் போக்காமல் பசுமை மார்க்சியமாக அது நிறைவு பெறாது.
ஏனெனில், மார்க்சியத்தில் இந்த விடுபாடு இருப்பதற்குக் காரணம், காரல் மார்க்சு காலத்தில் இப்போது சந்திக்கிற அளவுக்கு சூழலியல் சிக்கல்கள் பெரிதாக எழுந்திருக்கவில்லை. மேலும், உழைப்புக்கான விலையாக ஊதியத்தைக் கொடுத்ததற்குப் பிறகு எல்லாம் முடிந்துவிட்டது, அதன் பிறகு கிடைக்கிற உபரி அல்லது இலாபம் முழுவதும் முதலாளிகளின் நிர்வாகத்திறன் காரணமாக அல்லது சந்தையில் கிடைக்கும் வாய்ப்பின் காரணமாக விளைகிறது என்று சாதித்த பொருளியலாளர்களின் வாதத்தை தகர்க்க வேண்டிய மிகப்பெரும் சிக்கல் மார்க்சு முன்னால் இருந்தது.
சந்தையை சுதந்திரமாக விடவேண்டுமா அல்லது அரசுத் தலையிட்டு ஒழுங்கு செய்ய வேண்டுமா என்ற அளவில் மட்டுமே, பொருளியல் அறிஞர்களிடையே விவாதங்கள் இருந்தன. இது, சந்தைச் சமநிலையை ஒரு கணக்கிற்குக் கூட கருத்தில் கொள்ளவில்லை. தேவைக்கும் வழங்கலுக்கும் சந்தைச் சமநிலை நிலவினாலும், அப்போதும் உபரி உருவாகும் என்று விளக்குவதே மார்க்சுக்கு வரலாறு விட்டிருந்த மாபெரும் பணியாக இருந்தது.
இதற்கிடையில், மெய்யியல் வகையிலும், அரசியல் வகையிலும், பண்பியல் வகையிலும் சந்தித்த பிற்போக்குக் கருத்தியல்களை எதிர்த்து சமராட வேண்டிய மாபெரும் பொறுப்பையும் மார்க்சு சுமந்து கொண்டிருந்தார். நடைமுறையில், பல்வேறு போராட்ட இயக்கங்களோடு இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்தார்.
இவ்வாறான சூழலில், இன்றைக்கு எழுந்துள்ள சூழலியல் பேராபத்தை முன் உணர்ந்து தீர்வு சொல்வதற்கான வாய்ப்பு மார்க்சுக்கு ஏற்படவில்லை.
ஆனால், இயங்கியல் என்ற வலுவான அடித்தளத்தில் இயங்கும் மார்க்சியம் எப்போதுமே உயிர்ப்பானது. அதனாலேயே, அது தன்னைத் தானே வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது.
இப்போது நிலவும் சூழலுக்குப் பொருத்தி மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு, பசுமை மார்க்சியர்களுக்கு உள்ளது.
ஆனால், இன்றுள்ள பசுமை மார்க்சியர்களில், முதல் வரிசையில் உள்ள ஜான் பெலாமி பாஸ்டர் உள்ளிட்ட பெரும்பாலோர் மார்க்சியத்திற்கு எதிரான அவதூறுகளை எதிர்கொள்வதிலேயே முழுக்கவனமும் செலுத்துகின்றனர். அதன் போக்கில், மார்க்சு, ஏங்கெல்சிடமிருந்து பல மேற்கோள்களைக் காட்டி ஏற்கெனவே மார்க்சு எழுதிய எழுத்துகளில் சூழலியல் பாதுகாப்பிற்கான எல்லா கருத்துகளும் இருக்கின்றன என வலியுறுத்துகின்றனர். அதனால், உபரி மதிப்பு குறித்த மார்க்சியக் கோட்பாட்டில் உள்ள இந்த முக்கியமான இடைவெளியை பார்க்கத் தவறுகிறார்கள்.
இதனை இட்டுநிரப்பி பசுமை மார்க்சியத்தை வளர்த்தெடுக்காமல், இச்சிக்கலில் இருந்து முழுமையாக விடுபடமுடியாது.
உபரி மதிப்பு என்பது உபரி உழைப்பு நேரமும், மிகையாக உறிஞ்சப்பட்ட இயற்கையும் சேர்ந்ததுதான். இங்கு மிகையாக உறிஞ்சுவது என்பது புதுப்பிக்க முடியாத அளவு உறிஞ்சுவது, மீட்க முடியாத அளவு மாசு படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கும். உபரி உழைப்பு நேரத்தை குறைப்பதற்கு போராடுவது போலவே மிகை இயற்கை உறிஞ்சலுக்கு எதிரானப் போராட்டமும் சேர்ந்து நடைபெற இந்தப் புரிதலே வழிவகுக்கும்.
பசுமை மார்க்சியர்கள் இரசியா, சீனா போன்றவை பின்பற்றிய இயற்கையோடு மோதும் உற்பத்தி வாதத்தை (Productivism) எதிர்க்கிறார்கள். அது சரியே. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் ஏங்கல்சும் சொன்ன ”சுதந்திரமான உற்பத்தியாளர்கள் இணைந்த சமூகம் அமைப்பதே இலட்சியம்'' என்பதாக அறிவித்திருக்கிறார்கள். பரிமாற்ற மதிப்பை விட பயன்மதிப்பே மேலான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஆனால், அவர்களது திணைம நிகரமை அறிக்கை (Eco Socialist Manifesto, 2007) அதனை எவ்வாறு அமைப்பது என்று விளக்க முடியாமல் திணறுகிறது. வெனிசுவேலா, பொலிவியா, கியூபா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் நீடித்த வேளாண் முறைகளை முன்னெடுத்துக்காட்டாக இவர்கள் முன்வைக்கிறார்கள் ஆனால் கோட்பாட்டளவில் இவர்கள் ஓர் உலகு தழுவிய உன்னதமான மாற்று சமூகத்தை கற்பிதம் செய்துக் கொள்கிறார்கள். சூழலியல் சிக்கல் உலகு தழுவியதாக இருப்பதால் அதற்கான தீர்வும் உலகு தழுவியதாகவே இருக்க முடியும் என்றும் குறிப்பாக வளி மண்டல மாசுபாடு உலகு தழுவியதாக பரவியிருப்பதால் தனித்த ஒரு நாட்டில் மாற்று அமைப்பு முறையை உருவாக்கி அதனை எதிர்கொள்ள முடியாது என்றும் கூறு கின்றனர்.
எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ஒரு மாற்று அரசு நிறுவப்பட வேண்டியது என்ற முன் நிபந்தனையை இவர்கள் ஏனோ மறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களது மாற்றுச் சமூகம் என்பது வெறும் விருப்ப வெளிப்பாடாக அமைந்து விடுகிறது. உலகுதழுவிய புரட்சி, உலகு தழுவிய உடனடி நிகரமைச் சமூகம் ஆகியவை குறித்து பேசிய ட்ராட்ஸ்க்கியவாதம் செல்லுபடியாகாதது என்பது முன்னெப்போதையும்விட இன்றைய காலகட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பதும் கூட உடனடி செயல்திட்டமாக வளர வாய்ப்பில்லை. அவரவர் தேசத்தை அவரவர் பார்த்துக் கொள்வது என்பதே இன்றுள்ள பெரும் போராட்டமாக இருக்கிறது.
காந்தியப் பொருளியல்
இயற்கை வேளாண்மை, சிறுதொழில், இயற்கையோடு இயைந்த சிக்கன வாழ்க்கை, கிராம ராஜ்ஜியம் ஆகியவற்றை முன்மொழிந்த காந்தியம் சூழலியலாளர்களிடையே பெரும் ஈர்ப்பை பெற்றுள்ள கோட்பாடாகும். பெரும் தொழில் நிறுவனங்கள், பெரும் பெரும் அணைகள், எந்திரமயமான உற்பத்தி, உயிர்பன்மையத்தை சிதைக்கும் உற்பத்திமுறை ஆகியவற்றை காந்தியடிகள் முற்றிலும் நிராகரித்தார்.
காந்தியத்தை பொருளியல் கோட்பாடாக வளர்த்தெடுத்து காந்தியப் பொருளியலை முன் வைத்த அறிஞர் ஜே.சி.குமரப்பா கவனம் கொள்ளத்தக்கவர்.
“கூட்டுறவின் அடிப்படையிலான ஓர் பொருளியலை நாம் விரும்புகிறோமேயன்றி போட்டியின் அடிப்படையிலான பொருளியலை அல்ல” என்று சுருக்கமாக தனது கோட்பாட்டை குமரப்பா முன்வைத்தார். (காண்க : Economy of Permanence)
முதலாளியமோ கம்யூனிசமோ செயல்படுத்தும் மையப்படுத்தப்பட்ட பொருளியல் சனநாயகத்தோடு இணைந்து செல்ல முடியாது. அது சர்வாதிகாரத்திலேயே முடியும் என்று குறிப்பிட்ட குமரப்பா, திட்டமிடல் என்பது மேலிருந்து அதிகார வர்க்கத்தின் திணிப்பாக இருக்கக் கூடாது. பயிரைப் பாதுகாப்பதற்கு தோட்டத்தை சுற்றிலும் வேலியமைப்பதைப் போல அரசாங்கத்தின் திட்டமிடல் இருக்க வேண்டும். தோட்டத்துக்குள்ளே தாவரங்கள் சுதந்திரமாக வளர்வதற்கு வாய்ப்பு இருப்பது போல அரசாங்க திட்ட வரம்புக்குள் மக்கள் முன்முயற்சிக்கு, சனநாயக விழைவுகளுக்கு இடமிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர் வண்டி, அஞ்சல் துறை, சுரங்கம் போன்ற ஒன்றிரண்டைத் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் சிறுதொழில்களாகவே இருக்க வேண்டும். அவை கிராமத்தை சுற்றிய தொழில்களாகவே இருக்க வேண்டும் என்று குமரப்பா கூறுகிறார்.
ஆனால் வருணாசிரம வேலைப் பிரிவினையை குமரப்பா சிறப்பானதாக கருதுகிறார். அதுமட்டுமின்றி இந்துமயம், இந்தியத் தேசியம் என்பதற்குள்ளாக தமது கிராமப் பொருளாதாரக் கனவை விதைக்கிறார்.
இந்தியத் தேசியம் என்ற களத்தில் ஜே.சி.குமரப்பா கூறும் மாற்றுப் பொருளியல் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. எந்தக் காலத்திலும் வெறும் வேலைப் பிரிவினையாக வர்ணசாதிப் பிரிவினையை தூய்மைப்படுத்தி விடவே முடியாது.
ஜே.சி.குமரப்பா வெறுக்கும் வன்முறை, வர்ணசாதி சமூகத்தின் பிரிக்க முடியாத தன்மையாகும்.
வர்ணசாதி கொள்கையை முன்வைக்கும் பார்ப்பனியம்தான், இந்தியத்தேசியம் என்ற அரசியல் கொள்கைக்கும் அடித்தளமாகும். இது ஆரிய இன மேலாதிக்கத்தையும் வர்ணசாதிப் பிளவுகளையும் கொண்டுதான் இயங்க முடியும். பிரித்தானிய சந்தைத் தேவைக்காக ஒரு நிர்வாக அலகாக உருவாக்கப்பட்ட இந்தியாவை அப்படியே வைத்துக் கொள்வது பெருமுதலாளிகளுக்கும், ஆரிய பார்ப்பனிய சக்திகளுக்கும் இசைவானது என்பதால் அதற்கு ஏற்ற இந்தியத் தேசியம் என்ற கருத்தியலை உருவாக்கிக் கொண்டனர். பிற மொழி தேசிய இனங்களையும், பழங்குடியின மக்களையும் ஒடுக்கித்தான் செயற்கையான இந்த இந்தியத் தேசியம் நிலைப்பெற முடியும். பெருமுதலாளிய நலன்களும், ஆரிய நலன்களும் மேலும் மேலும் உற்பத்தி மையப்படுவதையும், அதிகாரம் மையப்படுவதையும் சார்ந்திருக்கிறது.
அதனால் தான் மக்கள் நலனுக்கான எந்த வகை சமூக மாற்றமும், இந்தியா என்ற கட்டமைப்புக்குள் நிகழ முடியாது. ஏனெனில், பல்வேறு வரலாற்று மரபுகள், மொழிகள், தேசங்கள், அவற்றிற்கான தொழில்நுட்ப மற்றும் மெய்யியல் வளர்ச்சிகள் கொண்ட பல தேசிய இனங்களின் தேவைக்கு இந்தியா என்ற இந்தப் புனைவுக் கட்டமைப்பு பெரும் தடையாகவே இருக்கும்.
இந்தியத் தேசியம் குமரப்பா கூறும் கிராமப் பொருளியளோடு ஒத்துப்போகவே முடியாது அதனால்தான் நேரு - பட்டேல் தலைமையிலான இந்தியா சுதந்திர நாளில் இருந்தே காந்தியை தெய்வமாக வணங்கி ஒதுக்கி வைத்துவிட்டு பெரும் பெரும் தொழிற்சாலைகள், இயந்திரமயமான தொழிற்கூடங்கள், பெரிய பெரிய அணைகள் என்று அதிரடியாக இறங்கியது. காந்தியின் அடையாளத்தை சொல்வது போல் ஒரு மூலையில் கதர்க் கடைகள் நடத்தப்பட்டன.
இன்று அதன் வளர்ச்சிப் போக்கில் இந்தியத் தேசியமும் தாராளமய, உலகமயமும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. இந்திய சுதேசியம் என்று ஜே.சி.குமரப்பா கற்பனை செய்வதற்கு எதுவும் இல்லை.
சுருக்கமாகச் சொன்னால் வல்லரசு இந்தியாவும் குமரப்பாவின் தற்சார்பு கிராமமும் ஒரு ஆட்சியின்கீழ் இணைந்திருக்க முடியாது. மேலும் மேலும் அதிகாரக் குவிப்புதான் இந்தியத் தேசியத்தின் இயல்பு. இந்தியத் தேசியத்துக்குள் ஜே.சி.குமரப்பா தீர்வுகாண முனைந்ததுதான் வரலாற்று முரண்.
தமிழ்த் தேசியமே தீர்வு
அதேபோல் அணுஉலை எதிர்ப்பு, மீனவர் பாதுகாப்பு, மீத்தேன் எதிர்ப்பு போன்ற சூழலியல் மக்கள் இயக்கங்கள் இந்தியத் தேசியத்தை கேள்விக்குட்படுத்தாமல் இறுதி வெற்றி அடைய முடியாது.
அணுஉலைத் திட்டம், மீனவர்களை வெளியேற்றும் கடல் மேலாண்மைத் திட்டம் உழவர்களையும் நுகர்வோரையும் பலிவாங்கும் பசுமைப் புரட்சி, அதைத் தொடர்ந்த மரபீனிப் புரட்சி, தண்ணீர் தனியார்மயம் உள்ளிட்ட சூழல்பகை - மக்கள் பகைத் திட்டங்களும் இந்தியத் தேசியமும் பிரிக்க முடியாதவை. இவையெல்லாம் இல்லாத இந்தியக் கட்டமைப்பு என்பது வெறும் விருப்பம் சார்ந்த கற்பனையே தவிர வேறொன்றும் இல்லை.
மாற்று எரிசக்திக் கொள்கை, மாற்று வேளாண் கொள்கை, மாற்று கடல்சார் கொள்கை போன்றவையும், அதுசார்ந்த மாற்றுத் தொழில் நுட்பங்களும் பெரிதும் ஒவ்வொரு மொழிபேசும் தேசிய இனச்சமூகத்தின் மரபிலிருந்தே பெறப்படுகின்றன. இதைச் செயல்படுத்துவதற்கான மக்கள் அமைப்புகளும் பெரிதும் மரபு சார்ந்தே வளர்த்தெடுக்கப்படுகின்றன.
சில சூழலியலாளர்கள் முழக்கமிடுவது போல் “உலகுதழுவி சிந்தி, உள்ளூர் அளவில் செயல்படு” (Thinks Globally, Act Locally) என்பது பொருத்தப்படாதது. மக்களை உதிரிகளாக்கக் கூடியது. மாறாக “உலகுதழுவி சிந்தி, தேசிய வகையில் திட்டமிடு, உள்ளூர் அளவில் செயல்படு” (Think Globally, Plan Nationally, Act Locally) என்பதே சரியானதாக இருக்கும். இங்கு தேசம், தேசியவகைத் திட்டமிடுதல் என்று நாம் கூறுவது மொழிவழித் தேசிய இன சமூகத்தையே ஆகும். இந்தியத் தேசியத்தை அல்ல.
மாற்று அரசு அதிகாரத்துக்கு திட்டமில்லாமல் உலகமய இந்திய அரசின் மக்கள் பகைத் திட்டங்களுக்கு இறுதி முடிவு கட்டிவிட முடியாது. முன்பே சொன்னது போல் இந்தியா தழுவிய எந்த அரசுக் கட்டமைப்பும் உலகமய முதலாளிய அதிகாரக் குவிப்புக்கு எதிரானதாக அமையவே முடியாது. இந்தியா என்பதும் அனைத்துப் பகைத் திட்டங்களும் ஒன்றிணைந்தவை. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
எனவே மண்ணையும் கடலையும் காட்டையும் மலையையும் இன்னும் உள்ள இயற்கை வளங்களையும் அதுசார்ந்த மக்களையும் அவர்களது அமைதியான வாழ்முறையையும் பாதுகாக்க விரும்பும் எவரும் இந்திய அதிகாரக் கட்டமைப்பிலிருந்து வெளியேறாமல் முடியாது.
உலகமயத்திற்கு எதிர் தேசியமயம்தான். உலகமயப் பொருளியலுக்கு எதிர்நிலை தேசியப் பொருளியல்தான். உலகமயம் திணிக்கும் ஒற்றைத் தன்மைக்கு எதிர்தேசியங்களின் பன்மைதான். உலகமயத்தின் ஒற்றை ஆதிக்கமும் ஆரிய-இந்தியத்தின் ஒற்றைத் தன்மையும் ஒத்தத்தன்மையுடையன.
எனவே இந்திய அதிகாரக் கட்டமைப்பிலிருந்து வெளியேறி தேசியஇன இறையாண்மையை மீட்டுக் கொள்வதே மக்கள் சார்ந்த மாற்றுப் பொருளியல் செயல்படுவதற்கான களம் அமைக்கும். அரசுரிமை இல்லாத ஒரு மக்கள் சமூகம் அடிப்படையான மாற்றுத் திட்டங்களை செயல்படுத்தவே முடியாது.
தமிழ்த் தேசிய இனத்தைப் பொருத்த அளவில் இந்த மாற்றுகளுக்கான உரமான அடித்தளம் உள்ள இனமாகும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்பதே தமிழர் அறம். எல்லா மனிதர்களும் சமம் என்பதை உள்ளடக்கிய, எல்லா உயிர்களுக்கும் சமவாய்ப்பளிக்கிற உயிர்மநேய கோட்பாடு இது.
‘சுதந்திர உற்பத்தியாளர்கள் இணைந்த சமூகம்’ என்று மார்க்சு - ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை விழைவதும், பரிமாற்ற மதிப்பை விட பயன்மதிப்பு முதன்மைபெற வேண்டும் என்று திணைம நிகரமையாளர்கள் விரும்புவதும், கிராம ராஜ்ஜியம் - போட்டிகள் சாராத கூட்டுறவு சார்ந்த பொருளியல் என காந்தியம் விரும்புவதும், இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சிமுறை என்று சூழலியலாளர்கள் முயல்வதும் மேற்சொன்ன தமிழரின் “அறம்” என்ற மெய்யியலுக்கு (Philosophy) இசைவானது. உயிர்மநேய - சமத்துவ மெய்யியலான அறத்தின் அடித்தளத்தில் இருந்து கொண்டு மார்க்சியம் உள்ளிட்டு வரலாறு நெடுகிலும் வளர்ந்த சமத்துவக் கோட்பாடுகளை உள்வாங்கி மலர்ந்துள்ள கருத்தியலே (Ideology) தமிழ்த் தேசியம் ஆகும்.
தமிழ்த் தேசியம் படைக்க முயலும் தமிழ்த் தேசக் குடியரசு இன்னொரு குட்டி இந்தியாவோ, இன்னொரு குட்டி இரசியாவோ அல்ல. விரிந்த அளவில் அதிகாரப் பரவலும், மாசுபடுத்தாதத் தொழில் - வேளாண் கொள்கையும் இணைந்த ஒன்றாகும். இயற்கை வேளாண்மை சார்ந்த வளங்குன்றா வேளாண்மை, சிறு நடுத்தரத் தொழில்கள் ஆகியவற்றுக்கு முதன்மை தரும் மாற்றுப் பொருளியலோடு இணைந்ததுதான் தமிழ்த் தேசியம். அதுதான் அறம் சார்ந்த அரசியலாகவும் வாழ்வியலாகவும் அமையும்.
அதிகாரப்பரவல், சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை பிரிக்கமுடியாத கூறுகளாகக் கொண்டதே தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் என்கிற தெளிவு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு எப்போதும் உண்டு.
த.தே.பொ.க., தனது கொள்கை அறிக்கையில், தமிழ்த் தேசக் குடியரசின் நோக்கங்களாக இவற்றை தெளிவாக குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழ்த் தேசக் குடியரசின் நோக்கங்கள் என்ற பகுதியில் அதிகாரப்பரவல் குறித்து கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.
21. இறையாண்மையுள்ள தமிழ்த் தேசத்திற்குள் ஆட்சிமுறை மக்களுக்கு நெருக்கமானதாகவும் அனைத்து மக்களின் பங்கேற்பு உரியவாறு அமையும் வகையிலும் ஒரு கூட்டாட்சி முறைமையாக நிறுவப்படுதல். வரலாற்றுக் காரணங்களைக் கவனத்தில் கொண்டு தனிச்சிறப்பு மண்டலமாகப் புதுச்சேரியைத் தமிழ்த் தேசத்திற்குள் இருக்கச் செய்தல்.
சூழலியல் பாதுகாப்பு குறித்து, கீழ்வருமாறு கொள்கை அறிக்கை கூறுகிறது;
25. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுத்தல், அணுஉலைகளை மூடுதல், தமிழ் மண்ணின் மரபு வழிப்பட்ட மருத்துவம், வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்த்தல். மரபீனி மாற்று விதைகளைத் தடை செய்தல்.
எனவே சூழலியல் பேரழிப்புகளுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்துவரும் பல்வேறு போராட்டங்களும், இயக்கங்களும் தனிமாந்த முயற்சிகளும் தமிழ்த் தேசியம் என்ற தளத்தில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுதான் சூழ்ந்துள்ள பேராபத்திலிருந்து தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் நிரந்தரமாக பாதுக்காக்க உதவும் மாற்றுத் தொழில்நுட்பம் மற்றும் மாற்று வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாற்று அரசமைப்புக் கோட்பாடும் அதுவே. 
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2014இல் வெளியான இக்கட்டுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும், இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களால் எழுதப்பட்டது)

0 கருத்துகள்: