கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

எகிப்தில் பெருந்திரள் மரண தண்டனை - த.தே.பொ.க. கண்டனம்

ஒரே தீர்ப்பில் 683 பேருக்கு மரண தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனித மனச் சான்றையே உலுக்கும் அதிர்ச்சியான தீர்ப்பாகும். இத் தீர்ப்பை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என எகிப்து அரசை வலியுறுத்துவதில் உலகெங்கும் உள்ள மனித உரிமை இயக்கங்களுடன் த.தே.பொ.க. தன்னை இணைத்துக் கொள்கிறது.

முஸ்லிம் சகோதரத்துவம் என்ற கட்சியின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சிக்கு எதிராக எகிப்து ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை ஆட்சிக் கவிழ்ப்பில் முடிந்தது.

எகிப்து சர்வாதிகாரி முபாரக் ஆட்சிக்கு எதிராக எகிப்திய மக்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க எழுச்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வெற்றி பெற்று முஹமது மோர்சி தலைமையில் ஆட்சி உருவானது.

மோர்சி ஆட்சி இசுலாமிய மதவாதத்துடன் கூடிய ஆட்சியாக இருந்ததுடன் மக்கள் கிளர்ச்சியில் உறுதியளிக்கப்பட்ட பல சனநாயக சீர்திருத்தங்களை அரைகுறை அளவோடு நிறுத்திக் கொண்டது.

மோர்சி ஆட்சியை எதிர்த்து கடந்த ஆண்டு மீண்டும் எகிப்தில் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. மோர்சி ஆட்சிக்கு எதிராக செயல்பட தருணம் பார்த்து காத்திருந்த எகிப்து இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்துகொண்டனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இக் கிளர்ச்சியை ஒடுக்குவதில் எகிப்தின் இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் பத்தா எல்சிசி மிகக் கொடிய அடக்குமுறையை ஏவினார். அதன் ஒரு பகுதியாக மோர்சி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இரவு பகலாக தங்கி கிளர்ச்சி செய்துகொண்டிருந்த ஒரு முகாமின் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏறத்தாழ ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக மோர்சி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013 ஆகஸ்டு 14 அன்று ஒரு காவல் நிலையத்தைத் தாக்கினர். அதில் சில காவலர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக எகிப்தின் மினியா நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நேற்று (28-04-2014) தீர்ப்பு வழங்கப்பட்டது.

மினியா நகர நீதிமன்றம் இத் தீர்ப்பில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முதன்மை ஆலோசகர் முகமது பத்தி உள்ளிட்ட 683 பேருக்கு மரணதண்டனை அளித்துள்ளது. இப்படி ஒரே கொத்தில் 683 பேருக்கு மரண தண்டனை விதிப்பது நாகரீக உலகத்தில் எந்த இடத்திலும், எந்த வழக்கிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நீதிமன்றப் படுகொலையாகும்.

எகிப்து நாட்டு சட்டப்படி இத் தீர்ப்பு அந் நாட்டின் உயர் மட்ட இசுலாமிய மதபீடமான கிராண்டு முக்தி ஒப்புதல் பெற்ற பிறகே செயலுக்கு வரும்.
எனவே எகிப்தின் தலைமை மத பீடம் இம் மரண தண்டனையை அங்கீகரிக்கக் கூடாது. முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி வலியுறுத்துகிறது.
காட்டுமிராண்டித் தனமான இவ்வாறான நீதிமன்ற முறையை உலகெங்கும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கண்டித்து எழ வேண்டும் என த.தே.பொ.க கேட்டுக்கொள்கிறது.
- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி

0 கருத்துகள்:

அரசியல் அழுத்தத்தில் நசுங்கும் நீதி! சதாசிவம் அமர்வின் தவறான தீர்ப்பு!

நீதித் துறையின் தற்சார்புத் தன்மையே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் அமைந்த உச்ச நீதிமன்ற அமர்வு 25.4.2014 அன்று அளித்துள்ள தீர்ப்பு இக் கேள்வியை மக்கள் மனதில் எழுப்புகிறது.
ஒரு வழக்கில் அரசமைப்புச் சட்டம் சார்ந்தோ, பல்வேறு சாதாரண சட்டப் பிரிவுகள் குறித்தோ அடிப்படையான கேள்வி எழுமானால் அவ்வழக்கை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி வைப்பது இயல்பாக நிகழக் கூடியது தான். ஆனால், ஏழுதமிழர் விடுதலை தொடர்பான வழக்கை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டதில் நிகழ்ந்த காலதாமதம் தான் தமிழர்களிடையே ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராசீவ்காந்தி கொலைவழக்கில் 22 ஆண்டுகளையும் தாண்டி சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக கடந்த 2014 பிப்ரவரி 19 அன்று தமிழக முதலமைச்சர் செயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழக அரசின் இம் முடிவை எதிர்த்து இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அவசர அவரசரமாக அணுகியது. உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஏழுதமிழர் விடுதலை ஆணைக்கு 20.2.2014 அன்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்திய அரசின் எதிர்ப்பு வழக்கில் இருதரப்பு விவாதங்களும் முடிந்து கடந்த மார்ச் 27,2014 அன்று நாள் குறிப்பிடப்படாமல் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏறத்தாழ ஒரு மாத காலம் ஆகிவிட்ட சூழலில் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 18.04.2014 அன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த தலைமை நீதிபதி சதாசிவம் செய்தியாளர்களிடம் கூறிய கருத்தும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோடி காட்டுவதாகவே இருந்தது.
அதனால்தான் தி.மு.க தலைவர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிவதற்கு முன்னால் ஏழுதமிழர் விடுதலைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால் எங்கே அது செயலலிதாவுக்கு கூடுதல் வாக்கு வாங்கித் தந்துவிடுமோ என்ற பதைப்பு அவருக்கு. யார் செத்தாலும் வாழ்ந்தாலும் கவலை இல்லை தமது பதவி அரசியலுக்கு எந்த இடையூறும் வந்து விடக் கூடாது என்று கருதியதால் நீதிபதி சதாசிவம் கருத்துக்கு கடும் கண்டனத்தை கருணாநிதி தெரிவித்தார்.
கருணாநிதியின் கண்டனம் உள்ளிட்ட அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகிவிட்டதோ என ஐயப்பட அடிப்படைகள் உள்ளன.
அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்புவதுதான் முடிவு என்றால் அதனை முன்னமேயே தெரிவித்திருக்க முடியும். இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.
தலைமை நீதிபதி சதாசிவம் 26.4.2014 அன்று ஓய்வுபெறுகிறார். அதற்கு முன்பே தீர்ப்பு வெளியாகும் என்று அவர் கூறியதே இறுதித் தீர்ப்பு வரும் என்ற பொருளில் தான் புரிந்துகொள்ளப்பட்டது.
இறுதித் தீர்ப்பு வழங்குவதாக இருந்து அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு பிரச்சினையை தன் கையிலிருந்து நீதிபதி சதாசிவம் அமர்வு தள்ளிவிட்டுவிட்டதோ என்ற ஐயம் இந்த காலதாமதத்தினால் எழுகிறது.
இது நீதிமன்றத்தின் தற்சார்புத் தன்மை குறித்த அவ நம்பிக்கையையே ஏற்படுத்தும்.
அரசமைப்புச் சட்ட ஆயத்தின் விசாரணைக்கு ஏழு சட்டக் கேள்விகளை இவ்வழக்கு தொடர்பாக பி.சதாசிவம், ரஞ்சன் கோகோஸ், ஏ.விரமணா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்வைத்துள்ளது.
  1. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43 -ன் கீழ் வாழ்நாள் தண்டனை என்பது சிறையாளியின் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதை குறிக்கிறதா? வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும் சிறையாளி அத் தண்டனையை ரத்து செய்யுமாறு கோர உரிமை உண்டா? சில குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க சிறப்புப் பிரிவை உருவாக்க முடியுமா? வாழ்நாள் தண்டனை என்பது 14 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதா? மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்த பிறகு அவர்களுடைய சிறைவாசத்தை இரத்து செய்ய முடியுமா?
  2. ‘தொடர்புடைய அரசாங்கம்’ என்ற வகையில் சிறையாளியின் விடுதலையை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா?
  3. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 432 (7) மாநில அரசின் அதிகாரத்தை விலக்கி வைத்து மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறதா?
  4. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் விடுதலையை தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா?
  5. ஒருவழக்கில் இரண்டு ‘தொடர்புடைய அரசாங்கங்கள்’ இருக்க முடியுமா?
  6. மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தானாகவே முன்வந்து விடுதலையை அறிவிக்க முடியுமா?
  7. குற்றவியல் சட்டத்தில் ’ஆலோசனை’ என்று கூறப்பட்டுள்ளதன் பொருள் ‘ ஒப்புதல்’ என்று எடுத்துக் கொள்ளமுடியுமா?
மேற்கண்ட ஏழு கேள்விகள் அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
இக் கேள்விகளை உற்று நோக்கினால் இவ்வழக்கில் இந்திய அரசும் இவ்வழக்கில் இணைந்துகொண்ட வாதிகளான அமெரிக்கை நாராயணன் போன்றவர்களும் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் அப்படியே ஏற்கப்பட்டு அரசமைப்புச் சட்ட ஆயத்தின் முன்னால் வைக்கப்படுகிறது என்பது தெளிவாகும். இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட எந்தக் கருத்தும் ஏற்கப்படவில்லை என்பதும் புரியும்.
இக்கேள்விகளில் ஏழாவது கேள்வியான ‘ஆலோசனை’ என்பது ‘ஒப்புதலை’ குறிக்குமா? என்ற கேள்வியைத் தவிர மற்றவையெல்லாம் ஒன்று இதற்கு முன்னர் இருந்த அரசமைப்பு ஆயத்தால் தெளிவுபடுத்தப்பட்டவை. அல்லது சட்டங்களிலேயே குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பவை ஆகும். தேவை இல்லாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிக்கல் பெரிதாக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 435 -ன் படி ஆலோசனை என்பது ஒப்புதலைக் குறிக்குமா இல்லையா என்பது குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருக்கிற பல தீர்ப்புரைகளை வைத்து சதாசிவம் அமர்வே முடிவு கூறியிருக்க முடியும். மாறாக மத்திய அரசுத் தரப்பு எழுப்பிய அத்துணை வினாக்களையும் அப்படியே ஏற்று அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பிவிட்டது.
முன் வைக்கப்பட்ட கேள்விகளில் 2,3,4,5,7 ஆகியவை ஒரே கேள்வியின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும். ஆனால் இவை வெவ்வேறு மனுதாரர்களால் வெவ்வேறு வடிவத்தில் முன்வைக்கப்பட்டதால் அப்படி அப்படியே ஏற்கப்பட்டு தனித் தனி கேள்விகள் போல் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவே இத் தீர்ப்பு அவரச அவசரமான இறுதி நேர முடிவு என்பதற்கு சான்றாக விளங்குகின்றது.
இப்பட்டியலில் 1 ஆம் எண்ணுள்ள கேள்வி தொகுப்புக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயங்கள் முடிவு சொல்லிவிட்டன. இவை புதிய கேள்விகள் அல்ல. விடையளிக்கப்பட்ட பழைய கேள்விகளே ஆகும்.
1961 ஆண்டிலேயே கோபால் கோட்சே – எதிர் - மகாராஷ்ட்டிரா மாநில அரசு (1961,3 SCR,440) வழக்கில் வாழ்நாள் சிறைபற்றிய வரையறுப்பும் தண்டனைக் குறைப்பு குறித்த அரசாங்கத்தின் அதிகாரம் பற்றியும், அந்த அதிகாரம் எத்தனை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு செயலுக்கு வரும் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
காந்தியார் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயின் வழக்கு இது. இத் தீர்ப்பு அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பாகும். இவ்வழக்கில் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தனது வாழ்நாள் தண்டனை முடிவுக்கு வந்துவிட்டதாக கோபால் கோட்சே வாதாடினார்.
இவ்வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43ன் கீழ் வாழ்நாள் சிறை என்பது அச்சிறையாளியின் மீதியுள்ள வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று வரையறுத்தது. அதே நேரம் தொடர்புடைய அரசாங்கத்தின் தண்டனை குறைப்பு அதிகாரம் தற்சார்பானது என்று விளக்கம் அளித்தது.
குற்றவியல் சட்டம் 432 ன் படி (அன்றைய 407 ன் படி) தொடர்புடைய அரசாங்கம் எந்த நேரத்திலும் அந்த வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறியது. அதன் அடிப்படையிலேயே காந்தி கொலை வழக்கின் வாழ்நாள் சிறையாளியான கோபால் கோட்சேயை மராட்டிய மாநில அரசு அவரது சிறைவாசம் 15 ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே 1964-ல் விடுதலை செய்தது.
கோபால் கோட்சே தானும் தனது சகோதரர் வினாயக் ராம் கோட்சேயும் இணைந்து காந்தியைக் கொன்றதை மறுக்கவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. அவரது வாக்குமூலத்தை “நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்றத் தலைப்பில் நூலாகவே வெளியிட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தொடரந்து மதவெறி நடவடிக்கைகளில் இறங்கினார். கலவரங்களைத் தூண்டினார்.
அதன் காரணமாக 1965 -லேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DIR) ஓராண்டு சிறையில் அடைக்கப்படார். இது வாழ்நாள் சிறையாளிகளை தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வது குறித்து பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது. இந்தப் பின்னணியில் இந்திய குற்றவியல் சட்டத்தில் 433 (A) என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று வாழ்நாள் தண்டனையாக தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் அல்லது மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் சிறைதண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகள் கழிக்கும் முன்பாக விடுதலை கேட்டு மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்பதே 434 (A) விதிக்கும் நிபந்தனை ஆகும்.
இச் சட்டத்திருத்தம் வந்ததற்குப் பிறகு பச்சன் சிங் வழக்கில் 433 (A) குறித்த விவாதம் எழுந்தது.
அதில் தண்டனை குறைப்பை எப்படி கணக்கிடுவது என்று விவாதிக்கப்பட்டது. ஏனெனில், கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கும் போது அவரது சிறை நடத்தைக்காக அவ்வப்போது வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பு காலம் மொத்தம் 6 ஆண்டுகள் வந்தது. வாழ்நாள் சிறை என்பதற்கு 20 ஆண்டுகள் என்ற வரையறுப்பை வைத்துக் கொண்டு 6 ஆண்டுகள் கழிவு வழங்கி மராட்டிய மாநில அரசு கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கியது.
இந்தக் கணக்கீடு பச்சன் சிங் வழக்கில் ஒரு சிக்கலாக விவாதிக்கப்பட்டது ஏனெனில் கோபால் கோட்சே - எதிர் - மராட்டிய மாநில அரசு வழக்கில் வாழ்நாள் சிறை என்பதற்கு சிறையாளியின் வாழ்நாள் முழுவதும் என்ற வரையறுப்பு வழங்கப்பட்டது. அதே நேரம் அரசின் தண்டனை குறைப்பு பற்றியும் பேசப்பட்டது.
பச்சன் சிங் தீர்ப்புக்கு பிறகு 433 (A) குறித்து வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு முடிவுகள் நீதிமன்றத் தீர்ப்புகளில் வந்தன.
இச் சூழலில் மாரூராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குறித்த அரசமைப்புச் சட்டத்தின் கூறு 72 குறித்தும் 161 குறித்தும் தண்டனை குறைப்பு குறித்த குற்றவியல் சட்டப் பிரிவு 432 குறித்தும் 433 (A) விதிக்கும் வரம்பு குறித்தும், வாழ்நாள் தண்டனை குறித்தும் மிக விரிவாக பல கோணங்களில் ஆய்வு செய்தது. பல வினாக்களுக்கு விடையளித்ததால் உச்ச நீதிமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த தீர்ப்புகளில் ஒன்றாக அது அமைந்தது.
இத் தீர்ப்பும் வாழ்நாள் சிறைத்தண்டனை என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43ன் கீழ் சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று கூறியது. அதே நேரம் 433 (A) -ன் வரம்புக்குட்பட்டு தொடர்புடைய அரசு 432ன் கீழ் தண்டனை குறைப்பு அளிப்பதை நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட்டதாகக் கொள்ள முடியாது எனக் கூறியது. பிரிவு 432 ன் படி ஒரு வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஓர் கணக்கீட்டுக்காக உச்ச பட்ச சிறைக்காலத்தை 20 ஆண்டுகள் என கொள்ளலாம் என்று கூறியது. அதாவது கோபால் கோட்சேக்கு மராட்டிய மாநில அரசு செய்த கணக்கீட்டு முறையை மாரூராம் தீர்ப்பு அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி 433(A) என்ற நிபந்தனையைத் தவிர வேறு எந்த வகையிலும் கட்டற்ற அதிகாரமே 432 மற்றும் 433 -ன் கீழ் அரசுக்கு வழங்குகிறது என்றும் தெளிவுபடுத்தியது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 பிரிவு 43 குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகள் 432, 433(A) ஆகியவை ஒன்றன் மீது இன்னொன்று எவ்வாறு ஊடாடிச் செயல்படும் என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்புரைத்த பிறகு மீண்டும் அதே பிரச்சினையை சதாசிவம் அமர்வு இன்னொரு அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பியிருப்பது முற்றிலும் தேவையற்றது.
பிரிவு 432க்கு விளக்கம் அளித்த மாரூராம் தீர்ப்பு இது ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு வழங்கப்பட்ட மேலான கூடுதல் கழிவுதான் (Additional remission) என்று கூறிவிட்டப் பிறகு மரண தண்டனை வாழ்நாள் சிறைத்தண்டனையாக உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட பிறகு 432-ன் படி விடுதலை வழங்கலாமா என்ற கேள்வி தேவை அற்றது.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432 (7) தண்டனை குறைப்பு வழங்க அதிகாரம் உள்ள தொடர்புடைய அரசாங்கம் (appropriate government) பற்றி வரையறுக்கிறது. இதில் 432 (7)(a) மற்றும் 432 (7)(b) ஆகிய இரண்டு உட் பிரிவுகள் உள்ளன. 432 (7)(a) ‘ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்திற்க்கு உட்பட்ட சட்டங்களின் படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்று கூறுகிறது பிற எல்லா வழக்குகளிலும் மாநில அரசுகளின் தண்டனை குறைப்பு அதிகாரமே செல்லுபடியாகும் என்று 432 (7)(a) வரையறுக்கிறது.
இதில் குழப்பமே இல்லை. இரண்டும் இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுபவை என்பதை இச் சட்டப் பிரிவுகளே தெளிவாகக் குறிக்கின்றன. இச்சட்டப் பிரிவுகளை படிக்கிற யாருக்கும் மாநில அரசின் அதிகாரத்தின் மீது மத்திய அரசாங்கத்தின் மேலாதிக்கம் எழ வாய்ப்புண்டு என்றக் கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
இராசீவ் காந்திக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தடா சட்டம் நீக்கப்பட்டபிறகு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன்படி மரண தண்டனையும் வாழ் நாள் தண்டனையும் வழங்கப்பட்ட பிறகு தொடர்புடைய அரசாங்கம் எது என்றக் கேள்வி எழும்புவதற்கு வாய்ப்பே இல்லை.
432 (7)(a) ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ குறித்து பேசவில்லை.
இராசீவ்காந்தி கொலைவழக்கில் தொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சட்டம் வெடிபொருள் சட்டம், தந்திச் சட்டம், ஆயுதச் சட்டம் ஆகியவற்றுக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனைக்கும் தொடர்பேதும் இல்லை. இச்சட்டங்கள் எதுவும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்குபவை அல்ல. இராசீவ் காந்தி வழக்கில் இச் சட்டங்களின் கீழ் அளிக்கப்பட்ட உச்ச அளவு தண்டனையே மூன்றாண்டு சிறை தண்டனைதான். இதையெல்லாம் கடந்து 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள். இப்போது வழக்கில் உள்ள வாழ் நாள் தண்டனைக்கும் 432 (7)(a) க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அப்படி ஒரு கேள்வியை நடுவண் அரசுத் தரப்பு எழுப்பியதால் அதனை அப்படியே அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு சதாசிவம் அமர்வு அனுப்பியிருக்கக் கூடாது.
சட்டவிதிகளில் சொற்குழப்பம் இல்லாமல் தெளிவாக இருப்பனவற்றையும் மீளாய்வு செய்துகொண்டே இருப்பது தேவையற்ற காலதாமதத்தை உண்டாக்கி சிறையாளிகளின் சிறை வாழ்நாளை நியாயத்திற்க்குப் புறம்பாக நீட்டிப்பதற்கே பயன்படும்.
ஒரு வழக்கில் இரண்டு ‘தொடர்புடைய அரசாங்கங்கள்’ இருக்க முடியுமா என்பதோ அரசமைப்புச் சட்டப்படி விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா மாநில அரசுக்கு இருக்கிறதா? என்றக் கேள்வியோ முற்றிலும் தேவை அற்றவை ஆகும்.
432 (7) -ஐ படித்தாலே அதில் எந்த இடத்திலும் மாநில அரசின் முடிவின் மீதி மத்திய அரசு ஆணை செலுத்த முடியும் என்றோ விடுதலை குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் கருத்தே மேலோங்கும் என்றோ சொல்லப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாகவே முன்வந்து விடுதலையை அறிவிக்க முடியுமா என்றக் கேள்வி அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது கேலிக்கூத்தானது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 ஐ பார்த்தாலே இது தெளிவாகும். இப் பிரிவில் 432 (1) மற்றும் 432 (2) ஆகிய உள் பிரிவுகள் இருக்கின்றன.
இவற்றில் 432 (2) தண்டனை பெற்ற சிறையாளி தண்டனை குறைப்புக் கோரி மாநில அரசுக்கு விண்ணப்பம் அளித்தால் மாநில அரசு அதன் மீது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது.
அதாவது தண்டனைக் குறைப்பு விண்ணப்பம் போடும் சிறையாளிகள் குறித்த விதி அது.
ஆனால், 432 (1) முற்றிலும் வேறானது. இப்பிரிவு ‘ மாநில அரசு எப்போது வேண்டுமானாலும் (at any time)நிபந்தனையின்றியோ அல்லது நிபந்தனை விதித்தோ (without condition or upon any conditions) தண்டனை குறைப்பு வழங்கலாம் என்று கூறுகிறது. தண்டனைக் குறைப்பில் மாநில அரசின் கட்டற்ற அதிகாரத்தை இது குறிக்கிறது.
மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தாமாகவே முன் வந்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், விடுதலை வழங்கலாம் எனக் கூறுவது தான் 432 (1).
சிறையாளியிடம் விண்ணப்பம் பெறுவதோ ஆய்வுக்குழு நியமித்து ஆய்வு செய்வதோ சட்டக் கட்டாயம் இல்லை என்பதையே 431 (1) குழப்பம் இல்லாமல் கூறுகிறது. இதையும் மேலாய்வுக்கு அனுப்பி வைத்திருப்பது கொடுமையானது.
எஞ்சி இருப்பது 435 –ல் ஆலோசனை என்று கூறப்பட்டிருப்பதை ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா? என்றக் கேள்வி மட்டுமே! நடுவண் அரசின் தரப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருப்பதும் இந்தக் கேள்விதான். இவ்வழக்கில் தெளிவுபடுத்த வேண்டிய கேள்வி ஒன்று உண்டென்றால் இது மட்டுமே ஆகும்.
435 (1) மற்றும் 435 (2) ஆகியவற்றை ஒப்பிட்டு விவாதித்து சதாசிவம் அமர்வே இது குறித்து தீர்ப்புரைத்திருக்க முடியும். இதற்கொரு அரசமைப்புச் சட்ட ஆயம் தேவை இல்லை.
நாம் முன்னமே எடுத்துக் காட்டியதுபோல் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபட் பயஸ், இந்த ஏழு தமிழர்களும் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படியான தண்டனையை குறைக்கக் கோரவில்லை.
இராசீவ் காந்திக் கொலை வழக்கில் மரண தண்டனையோ, வாழ்நாள் தண்டனையோ வழங்குவதற்கு தகுதியான ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டம் தடா சட்டம் தான்.
 இவ்வழக்கில் தடா சட்டம் செல்லாது என மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 –ன் படிதான் இவர்களில் சிலருக்கு மரண தண்டனையும் சிலருக்கு வாழ்நாள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறர் விடுதலை ஆனார்கள்.
435 (1) 435 (2) ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்கினால் இங்கு எழுப்பப்படும் சிக்கலுக்கு எளிதில் விடை கிடைக்கும்.
435 (2) மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறைப்புப் பற்றி பேசுகிறது.
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின்படி தண்டனை வழங்கப்பட்டு அத்தண்டனைக் காலங்களைக் குறைத்து விடுதலை செய்வதாக மாநில அரசு முடிவு செய்தால் அவாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவது (consent) கட்டாயம் என 435 (2) கூறுகிறது.
அதாவது மத்திய அரசு ஒப்புதல் வழங்காவிட்டால் மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று பொருள்.
ஆனால், 435 (2) இங்கு செயல்பட முடியாது. மரண தண்டனையோ வாழ்நாள் தண்டனையோ வழங்குவதற்குரிய சிறப்புச் சட்டமான தடாசட்டம் இராசீவ்காந்தி வழக்கில் தள்ளுபடியாகிவிட்டது.
இந்த தடா சட்டம் தான் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டமாகும்.
 இவ்வழக்கில் தடா நீக்கப்பட்டபிறகு, வாழ்நாள் சிறை தொடர்பாக மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வேறு எந்த சட்டமும் செயலில் இல்லை. எனவே 435 (2) -ன் படி இவர்கள் விடுதலைக்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் (consent) பெறத் தேவை எழவில்லை.
435 (1) மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு விசாரித்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுகிறது.
இங்குதான் ஆலோசனை (consultation) கோரப்படுகிறது. இராசீவ் காந்தி கொலை வழக்கை மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ) விசாரித்ததால் 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
435 1 –ல் “மத்திய அரசுடன் கலந்தாலோசனை”(consultation) என்றும் 435 (2) –ல் (consent) என்றும் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வெவ்வேறு சொற்களை பயன்படுத்துகிறது.
இச்சொற்கள் பொருள் வேறுபாடு அற்றவை அல்ல. தெளிவாக திட்டமிட்ட முறையில் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு ஆனால் அதன் விசாரணை மட்டும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பால் நடத்தப்பட்டிருந்தால் அங்கு கலந்தாலோசனை (consultation)யும் மத்திய அரசாங்கத்தின் சட்டத்திற்குட்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அங்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலும் (consent) வலியுறுத்தப்படுகிறன. இச் சூழலில் கலந்தாலோசனை என்றாலும் (consultation) என்றாலும் ஒப்புதல் தான், ஒப்புதல் (consent) என்றாலும்ஒப்புதல் தான் என்றக் குழப்பம் எழ வாய்ப்பே இல்லை.
இங்கு தண்டனை குறைப்பு குறித்து மத்திய அரசின் ஆலோசனை பெறுவது கருத்து கேட்கும் ஒரு செயல்முறையே தவிர அதற்கு கட்டுப்பட வேண்டிய சட்டக் கட்டாயம் எதுவும் இல்லை. ஆலோசனை கேட்பின் போது மத்திய அரசாங்கம் கூறும் கருத்து மாநில அரசை கட்டுப்படுத்தும் சட்டத்தகுதி உடையது அல்ல.
ஏழுதமிழர் விடுதலைக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்தாலும் அந்த மறுப்பு மாநில அரசின் முடிவை கட்டுப்படுத்த வலுவற்றது என்பதே 435 (1) படி பெற வேண்டிய செய்தியாகும்.
இந் நிலையில் நேரடியாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது ஏழுதமிழர் விடுதலை ஆணைக்கு சதாசிவம் அமர்வு இடைக்காலத்தடை விதித்ததே தேவையற்ற ஒன்று! இப்போது அத் தடையை நிரந்தரமாக நீடித்திருப்பதும் மிகத் தவறான ஒன்றாகும்.
மிக எளிமையாக விடை கண்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினையை அரசியல் அழுத்தம் காரணமாக பெரிதாக்கி அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பிவைத்தது சதாசிவம் அமர்வின் மிகத் தவறான தீர்ப்பாகும்.
உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் முதன்மை பங்காற்றிய கருணாநிதி இப்போதும் மாறவில்லை. அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு இவ்வழக்கை அனுப்பியது குறித்து பல தலைவர்களும் பதற்றத்தோடு கருத்துக் கூறியபோது முரசொலியில் வழக்கம் போல கேள்வி எழுப்பி பதில் அளிக்கும் பாணியில் இது குறித்து கூறிய கருணாநிதி “வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று கூறினார். அவரது துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது.
இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
மூன்று மாதத்திற்குள் அரசமைப்புச் சட்டம் ஆயம் நிறுவப்பட்டாலும் அதன் விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என்றோ அவ்விசாரணையின் முடிவு எப்படி அமையும் என்றோ உறுதியாகக் கூறமுடியாது.
இந்நிலையில் ஏழுதமிழர் விடுதலையில் உறுதியான அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும்.
இவ்வாறான சூழல் எழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அது வருமாறு:
“ஒருவேளை உச்ச நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஏழுதமிழர் விடுதலைக்கு ஆணையிட தாமதம் செய்தாலோ, தடுமாறினாலோ, தமிழக அரசு அதற்காக தயங்க வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 -ன் படி இவர்களின் விடுதலைக்கு உறுதியான ஆணையிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏழு தமிழர் விடுதலை முடிவிலிருந்து பின் வாங்கக் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தோம் (ஏழுதமிழர் விடுதலை சட்டப்படி சரியே – கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மார்ச் 1-16 இதழ்)
அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 –ன் கீழ் தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை அளிப்பது குறித்த செய்தியை மாரூ ராம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் விவாதிக்கிறது.
 நாம் ஏற்கனெவே குறிப்பிட்டது போல் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 (A) பிறப்பிக்கப்பட்ட பிறகு உருவான சூழலில் மாரூ ராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் அமைக்கப்பட்டது.
மாநில அரசின் விடுதலை வழங்கும் அதிகாரம் 432 (1) -ன் படி கட்டற்றது என்றாலும் 433 (A) விதிக்கும் நிபந்தனைக்கு அது உட்பட்டது என்று கூறும் இத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 இந்த 433 (A) க்கு கட்டுப்பட்டதல்ல என தெளிவுபட கூறுகிறது.
 அரசமைப்புச் சட்டப் பிரிவு 72 படி இந்திய குடியரசுத்தலைவரோ, பிரிவு 161 -ன் படி மாநில ஆளுனரோ எப்போது வேண்டுமானாலும் தண்டனை குறைப்பு அளித்து விடுதலை வழங்கலாம். 433 (A) இந்த அதிகாரத்திற்கு விலங்கிட முடியாது என்று அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பு கூறியது.
பிரிவு 161 -ன் படி மாநில ஆளுனர் என்றால் அது மாநில அமைச்சரவையை குறிக்கும் என்றும் மாரூராம் வழக்கு தெளிவுபடுத்தியது.
அதாவது 433 (A) படி 14 ஆண்டுகள் கழித்த பிறகுதான் ஆளுனர் தண்டனை குறைப்பு வழங்கலாம் என்று கூறிவிட முடியாது. அதற்கு முன்னரேயே மாநில அமைச்சரவை ஆளுனர் வழியாக வாழ்நாள் சிறையாளிக்கு விடுதலை வழங்கலாம் என்று கூறுகிறது. இதே தீர்ப்பு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஒரு கணக்கீட்டுக்காக வாழ்நாள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்றுக் கருதிக் கொண்டு தண்டனைக் கழிவு வழங்கலாம் என்றும் கூறியது,
ஏழு தமிழர்களை பொருத்த அளவில் 433 (A) படியான 14 ஆண்டுகள், மாரூராம் தீர்ப்பின் படியான 20 ஆண்டுகள் ஆகிய அனைத்தையும் கடந்தவர்கள். மாரூராம் தீர்ப்புக்குப் பிறகு வந்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இந்த அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமலேயே தீர்ப்பு வழங்கியுள்ளன. இப்போது அதிகமாக பேசப்படும் சுவாமி ஸ்ரதானந்தா -எதிர்- கர்நாடக மாநில அரசு என்ற வழக்கும் அதில் ஒன்று.
432 -ன் படி அரசுக்கு இருக்கிற தண்டனை குறைப்பு அதிகாரத்தில் தலையிடும் வகையில் 25 ஆண்டுகள், 35 ஆண்டுகள் என சிறை தண்டனை வழங்கி தீர்ப்புகள் வந்துள்ளன. அவை சட்ட அறியாமை (per incurium) என்று தள்ள வேண்டியவை ஆகும். அவற்றை பின்பற்றவேண்டிய அவசியம் எழவில்லை. அவற்றையெல்லாம் காரணமாக்க் காட்டி அரச்மைப்புச் சட்ட ஆயத்திற்கு சதாசிவம் அமர்வு அனுப்பி வைத்தது தவறானதாகும்.
விவாதத்திற்குரிய இத் தீர்ப்புகளில் கூட அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படியான தண்டனை குறைப்பு அதிகாரம் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. அரசமைப்புச் சட்ட ஆயமான வி. ஆர் கிருஷ்ணய்யர்ஆயம் வழங்கிய மாரூராம் தீர்ப்பே செயலில் உள்ளது.
எனவே 161-ன் படி ஏழுதமிழர்களை விடுதலை செய்வதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை.
எனவே தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுனருக்கு அனுப்பி அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிசந்திரன், இராபட்பயஸ் ஆகிய ஏழுதமிழர்களையும் தமிழக அரசு உடன்படியாக விடுதலை செய்ய வேண்டும்.
அதற்கு முன்பாக இந்த ஏழு தமிழர்களுக்கும் நீண்ட கால சிறை விடுப்பு வழங்கி (பரோல்) இடைக்கால விடுதலை அளிக்க வேண்டும்.
- கி.வெங்கட்ராமன் (பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி)

0 கருத்துகள்:

தூயமுதலாளியம் எனும் சைவப் பூனை - தோழர் கி.வெங்கட்ராமன்

ஊழல் ஒழிப்பு என்பது இந்த நாடாளு மன்ற பொதுத் தேர்தலில் ஓர் முக்கிய சிக்கலாக விவாதிக்கப்படுகிறது. இதனை முக்கிய விவாதப் பொருளாக மாற்றியதில் ஆம் ஆத்மி கட்சி முதன்மை பங்காற்றி இருக்கிறது. இதனால் மக்கள் உரிமைப் போராட்டங்களில் பங்குபெற்ற பலரும், ஊழல் ஒழிப்பில் கவனமுள்ள பலரும் இக் கட்சியை நட்போடு அணுகுவது பரவலாக உள்ளது.
ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி உருவானதும் வெளிப்படையான முறையில் நிதி திரட்டி தில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுத்ததும் அக்கட்சியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.
ஆயினும் இக் கட்சி கையூட்டுப் பெறும் அரசியல் தலைவர்களை , அதிகாரிகளை கண்டித்த அளவுக்கு இதில் முதன்மைப் பயன்பெறும் முதலாளிகளை கண்டித்தது இல்லை என்பதை முன்பே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
ஊழல் கூட்டணியில் முதல் வரிசையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவன முதலாளி அம்பானி மீது ஆம் ஆத்மி தலைவர் தில்லி மாநில முதலைமைச்சர் என்ற வகையில் வழக்கு தொடுத்தபோது இந்த ஊழல் ஊற்றுக்கண் மீது அவர் கவனம் செலுத்துகிறார் என்றக் கருத்து சில ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியில் முதலாளிகள் சங்கத்தின் ஆற்றிய உரை அவர் நிழலோடு மோதுகிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியது.
கடந்த பிப்ரவரி 17 2014 அன்று இந்திய தொழில் வணிகத் துறைக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கெஜ்ரிவால் முக்கிய உரையாற்றினார். அப்போது “ ஆம் ஆத்மி கட்சி உலகமயத்திற்கோ , திறந்த பொருளியலுக்கோ தாராளமயத்திற்கோ எதிரானதல்ல, நாங்கள் முதலாளியத்தை எதிர்க்கவில்லை, ஒட்டுண்ணி முதலாளியத்தைத் தான் (crony capitalism) எதிர்க்கிறோம். தூய முதலாளியத்தை (clean capitalism) ஆதரிக்கிறோம்.
எங்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களான யொகேந்தர் யாதவ், பிரசாந்த் பூசன் ஆகியோர் பொதுத்துறையின் மேலாதிக்கத்திற்கு ஆதரவாகவும் , நிகரமைப் பொருளியலை முன்வைத்து பேசுவது அவர்களது சொந்தக் கருத்தே தவிர கட்சியின் கருத்தல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
கெஜ்ரிவாலின் இந்தக் கருத்தை வழிமொழிந்து பல்வேறு ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. நிலவும் சந்தைப் பொருளியலுக்குள்ளேயே ஒட்டுண்ணி முதலாளியத்தை ஒழித்துவிடலாம் அல்லது மிகப் பெரும் அளவுக்கு கட்டுப்படுத்திவிடலாம் என்றக் கருத்து சரியா என்பது குறித்து  விவாதிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு அதிகம் இருப்பதால் தான் கையூட்டு ஊழல் அதிகரிக்கிறது என்றும் அதன் போக்கில் ஒட்டுண்ணி முதலாளியம் வளர்கிறது என்றும் உள்ளக் கருத்து நீண்ட காலமாக நிலவுவதுதான். நேரு ஆட்சிக் காலத்தில் அரசுத்துறை இந்தியப் பொருளியலில் முக்கியப் பங்காற்றியதையும் தனியார் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அரசின் சட்டதிட்டங்கள் முன்வைக்கப்பட்டதையும் எதிர்த்து கருத்து கூறியவர்களில் இராசாசி முதன்மையானவர்.
“எதற்கெடுத்தாலும் தொழில் முனைவோர் அரசாங்க அதிகாரிகளிடம் போய் நிற்க வேண்டியிருக்கிறது. இது உரிம ஆட்சி (பர்மிட் லைசன்ஸ் ராஜ்) ” என்று நகையாடினார். திறந்தப் பொருளியல் கொள்கையை அவர் முன்வைத்தார்.
தொழில் நடத்துவதோ, மருத்துவமனை நடத்துவதோ அரசாங்கத்தின் வேலையல்ல, நிர்வாகம் நடத்துவது மட்டுமே அரசின் பணி என்றக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர் இராசாசி. உரிமம் பெருவதற்கு அரசுத் துறைகளை தொழில் முனைவோர் அணுக வேண்டிய நிலை இருப்பதால் தான் கையூட்டு (இலஞ்சம்) பெருகுகிறது என்று அவர் கூறினார்.
 கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆட்சி நடத்திய சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவிலும் செங்கொடியின் கீழேயே முதலாளியம் திரும்பி, வலுப்பட்ட போது அதுவரை இராசாசி கருத்தை எதிர்த்து வந்தப் பலர் கூட அக்கருத்தை ஆதரிக்கத் தொடங்கினர்.
ஏனெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றக் கோட்பாட்டின் பின்னணியில் நிலை நிறுத்தப்பட்ட ஒரு கட்சி சர்வாதிகாரம் இந் நாட்டு ஆட்சியாளர்களுக்கும், ஆளும் பொதுவுடைமைக் கட்சி தலைவர்களுக்கும் கேள்வி முறையற்ற அதிகாரத்தை வழங்கியது. தலைமைக் குழுவிலிருந்து அடிப்படை கிளை அமைப்பு வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் பரவியது. தங்கள் அதிகாரத்தின் பயனாக இக் கட்சித்தலைவர்கள் பலர் செல்வச் சீமான்களாக மாறினார்கள்.
இதன் வளர்ச்சிப் போக்கில் ஒருக் கட்டத்தில் காரல் மார்க்ஸ் படத்தை வைத்துக் கொண்டே, அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியை பிடித்துக் கொண்டே முதலாளிய முறைக்கு திரும்புவது என்று அக் கட்சிகளின் தலைமைகள் முடிவுசெய்து அதனை ஆட்சி கொள்கையாக அறிவித்தபோது பெரிய கலகம் எதுவும் அங்கே வெடித்துவிடவில்லை.
இன்று சீன முதலாளிகளில் முக்கால் வாசிப் பேர் அந்நாட்டை ஆளும் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் ஆவர். இவ்வாறு தோல் இருக்க சுளை விழுங்கிய கதையாக பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியிலேயே அங்கு முதலாளியம் திரும்பியது.
இந்த முதலாளிகளில் கிட்டத்தட்ட அனைவருமே ஒட்டுண்ணி முதலாளிகள் ஆவர். ஆட்சி அதிகாரத்தின் துணையோடு போட்டி விதிகளுக்குப் புறம்பாக மூலதனம் குவிப்பதையே ஒட்டுண்ணி முதலாளியம் (crony capitalism) என்பர்.
பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சி நடத்திய, பொதுத்துறைகள் மேலோங்கியிருந்த நாடுகளில் இத்தகையோர் வளர்ந்ததை வைத்து அரசுத்துறையின் தலையீடு உள்ள இடத்திலேயே ஒட்டுண்ணி முதலாளியம் வளரும் என்றக் கருத்து பரவியது.
அரசின் தலையீடு ஏதுமின்றி பொருளியலை திறந்துவிட வேண்டும் என்ற தாராளமய சந்தைப் பொருளியலுக்கு 1990 களில் ஆதரவு பெருகியதும் இச் சூழலில் தான். 1991ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததும் இக்க்ருத்திற்கு வலுவூட்டியது.
”கண்ணுக்குத் தெரியாத சந்தை எனும் கை பொருளியலை போட்டி விதிகளின் கீழ் ஒழுங்குப்படுத்தும் ” என்ற ஆதம் ஸ்மித்தின் கருத்து மந்திரச் சொல் போல் மீண்டும் முழங்கியது.
இனி சந்தை விதிகளுக்குக் கட்டுப்பட்ட தூய முதலாளியம் (clean capitalism) வளரும் என்று கனவு கண்டனர். திறன், தரம் ஆகியவற்றில் தேர்ந்தவர்கள் இந்த சந்தைப் போட்டியில் முன்னே வருவார்கள் என்று நம்பினார்கள்.
கையூட்டு கொடுத்து கட்சிக்காரர்களையும் ஆட்சியாளர்களையும் வளைத்துப் போட்டு திறன் அற்றவர்களும், தரம் அற்றப் பொருள்களும் சந்தையில் கோலோச்சும் காலம் இனி இல்லை என்று இச் சிந்தனையாளர்கள் நம்பினார்கள். முதலாளிகளின் கைகளில் இருந்த சனநாயகம் மக்கள் கைக்கு மாறிவருகிறது என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தார்கள். இந்தவகையில் தங்குதடையற்ற சுதந்திர சந்தை மக்கள் உரிமைகளை, தனிமனித சுதந்திரத்தை மீட்பதற்கு துணை செய்யும் என்றும் கூறினார்கள்.
ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது கூறுவதும் இந்தவகை சிந்தனைதான். தாராளமய சந்தைப் பொருளியல் கொள்கை உண்மையில் கடைபிடிக்கப்படால் அரசியலை ஊழல் மயமாக்கும் ஒட்டுண்ணி முதலாளியத்திற்கு இடமிருக்காது என கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், உண்மை நடப்பு நேர்மாறானது. 
1980 களின் இறுதியில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் மற்றும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரெட் தாச்சர் அம்மையார் ஆகியோர் முன்வைத்த தங்கு தடையற்ற தாராளமயப் பொருளியல் கொள்கை உலக நாடுகள் பலவற்றாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1990 களில் தாராள மயம் , தனியார் மயம் , உலக மயம் என்பதாக வளர்ச்சி பெற்று நிலை கொண்டது.
“அரசுகளே ஒதுங்கிக் கொள்ளுங்கள், பரவி வரும் மூலதனத்திற்கு நாடு மொழி, இனம், நிறம் என்ற எந்த வேறுபாடும் இல்லை எந்தக் கட்டுப்பாடுமில்லை , திறன், தரம் என்பவற்றின் அடிப்படையிலான சந்தை விதிகளால் தன்னைத் தானே ஒழுங்கு செய்துகொள்ளும் தாராளமயப் பொருளியல் இனி தலைமைதாங்கும் “ என்ற முழக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒலித்தது.
இனி வெளிப்படையான ஆட்சி முறை எல்லா நாடுகளிலும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை பரப்பப்பட்டது.
ஆனால், திறந்த உலகமயப் பொருளியல் கோலோச்சியப் பிறகுதான் ஒட்டுண்ணி முதலாளியம் எந்த வேறுபாடும் இன்றி அனைத்து நாடுகளிலும் வலுப்பெற்றது. முதலாளிகள், அரசியலாளர்கள் அரசு நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் , ஆய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இணைந்த ஒட்டுண்ணிக் கூட்டணியானது நாடுகள் வேறுபாடின்றி வளர்ந்தது.
இரசியா, சீனா, அர்ஜண்டீனா, ஜிம்பாப்வே, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமின்றி தாராளமய முதலாளியத்தின் பிறப்பிடமான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும் ஒட்டுண்ணி முதலாளியம் கோலோச்சுகிறது.
கெஜ்ரிவால் நம்பச் சொல்வதுபோல் உலகில் எந்த நாட்டிலும் தூய முதலாளியம் (clean capitalism) நிலைபெறவில்லை.
இந்தியாவில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி அலைக்கற்றை ஊழல், இரண்டு இலட்சம் கோடி ரூபாய் இஸ்ரோ எஸ் அலைப்பட்டை ஊழல், 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரிச் சுரங்க ஊழல், 17 ஆயிரம் கோடி ரூபாய் பெல்லாரி சுரங்க ஊழல், 7 ஆயிரம் கோடி ரூபாய் காமென்வெல்த் விளையாட்டு ஊழல், 3500 கோடி ரூபாய் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், பல்லாயிரம் கோடி ரூபாய் ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்..........................
என்று கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ஐந்தரை இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது. மாநில அளவிலும் உள்ளூர் அளவிலும் நடைபெற்ற ஊழல்கள் பெரும்பாலும் இந்தக் கணக்கில் வரவில்லை.
தகுதிவாய்ந்த திறமையான அடுத்த பிரதமர் என்று ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் பா.ச.க வின் நரேந்திரமோடி இந்த ஊழல் ஒட்டுண்னி வலைப்பின்னலில் முதல் வரிசையில் இருப்பவர் எனபதை இந்த ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன. மோடியின் குசராத் முன் மாதிரி என்பது ஒட்டுண்ணி முதலாளிய வளர்ச்சிக்கு முன் மாதிரி ஆகும்.
ரிலையன்ஸ் அம்பானி குழுமம் இந்திராகாந்தி மற்றும் அவரது மகன் இராசீவ் காந்தி ஆகியோருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணி பெரு முதலாளி குழுமம் என்றால், கவுதம் அதானிக் குழுமம் மோடியின் ஆதரவோடு வளர்ந்த இன்னொரு ஒட்டுண்ணி குழுமம் ஆகும்.
கவுதம் அதானி குழுமம் 1988ல் ஒரு தொழில் குழுமமாக பதிவு செய்துகொண்ட ஒர் சிறிய குழுமம் ஆகும். ஆனால் மோடி குசராத்தில் ஆட்சிக்கு வந்த 2002 க்குப் பிறகு படுவேகமாக வளர்ச்சியடைந்து இன்று 52 ஆயிரத்து 800 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ள மிகப் பெரும் குழுமமாக வளர்ந்துள்ளது.
குசராத்தின் கட்ச் வளைகுடாவில் முந்திரா பகுதியில் 7350 ஹெக்ட்டேர் அரசு நிலத்தை முப்பதாண்டு குத்தகைக்கு மோடி அரசு அதானி குழுமத்திற்கு வழங்கியது.
ஒரு ஹெக்ட்டெர் நிலத்தை (2 1/2 ஏக்கர் ) வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு பெற்ற அதானிக் குழுமம் அங்கு மிகப் பெரும் துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் போன்றவற்றை அமைத்துக் கொண்டதோடு மட்டுமின்றி அரசுத்துறையான இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கும் வேறு சில தனியார் நிறுவனங்களுக்கும் ஒரு ஹெக்ட்டேர் 66 இலட்சம் ரூபாய் உள் குத்தகை பெற்றுக் கொண்டு வழங்கியது. ஏறத்தாழ 2000 ஹெக்ட்டேர் நிலம் இவ்வாறு உள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு ஆஸ்திரேலியாவிலும் இந்தோனோசியாவிலும் நிலக்கரி சுரங்கங்களை வாங்கியுள்ளதாக கவுதம் அதானி மார்தட்டிக் கொள்கிறார். அதானி குழுமத்திற்கு மட்டுமின்றி டாடா, ரிலையன்ஸ் குழுமங்களுக்கும் குசராத்தின் வளங்களும் நிலங்களும் மோடி அரசால் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.
இம் முதலாளிகளும் நரேந்திர மோடியும் பிரித்தறிய முடியாதபடி ஒருவரால் மற்றொருவர் பயன்பெற்றுக் கொள்ளும் ஒட்டுண்ணிக் கூட்டாளிகளாக மாறியுள்ளனர். அதனால் தான் தனி விமானம் , கூட்டங்களுக்கு பல கோடி ரூபாய் செலவு , மோடியின் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கு தனி தகவல் தொடர்பு நிறுவனங்கள் கருத்து வாக்கெடுப்பு நிறுவனங்கங்கள் என்று பல வகையிலும் மோடிக்கு ஆதரவான நடவடிக்கைகள் வலுவடைந்துள்ளன.
குசராத் முன்மாதிரி என்ற பெயரால் இவர்கள் முன் வைக்கும் ஒட்டுண்ணி முதலாளியம் ஏற்கனெவே இந்தியாவில் நிலைபெற்றுவிட்ட ஒன்றுதான்.
கட்சி வேறுபாடு இன்றி, மாநில வேறுபாடின்றி இந்த ஒட்டுண்ணி வலைப்பின்னல் படர்ந்து கிடக்கிறது. கட்சிகளும் கம்பெனிகளும் பிரித்தறிய முடியாதபடி இணைந்திருக்கின்றன. தொழில் முதலாளிகளும் நிதி மூலதன பேரரசர்களும் , மனை வணிக சூதாடிகளும் சுரங்கத்துறை கொள்ளையர்களும் கட்சிகளின் தலைவர்களாகி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகும் போக்கு கடந்த 20 ஆண்டுகளில் வேகம் பெற்றுள்ளது.
இப்போது பதவி துறக்கும் மொத்தமுள்ள 545 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 128 பேர் இவ்வகை முதலாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.
உள்ளாட்சி தேர்தல்களில் பல லட்சம் செலவிடப்படுகிறது என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் பல நூறு கோடி ரூபாய் இறக்கிவிடப்படுகிறது என்பது மட்டுமே வேறுபாடு. மற்றபடி ஒட்டுமொத்த தேர்தல் சனநாயகமும் பண நாயகமாக உருப் பெற்று உறுதிப்பட்டுவிட்டது.
பொது வளங்களும் அரசுப் பணமும் தனியாருக்கு கை மாறுவதும் அத் தனியார் குழுமங்களில் கட்சித் தலைவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும், கூட்டாளிகளாக இருப்பதும் என்ற இந்த ஒட்டுண்ணி வலைப்பின்னல் இந்தியாவில் மட்டுமின்றி மிகப் பெரும்பாலான நாடுகளில் நிலைபெற்றிருக்கிறது.
கெஜ்ரிவால் முன்னெடுத்துக் காட்டாக சொல்லும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தான்.
ஆய்வாளர் ஹண்ட்டர் லெவிஸ் எழுதி 2013ல் வெளியாகி உள்ள ”அமெரிக்காவில் ஒட்டுண்ணி முதலாளியம் 2008 முதல் 2012 வரை “ என்ற நூல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியரசுக் கட்சி, சனநாயகக் கட்சி என்ற வேறுபாடில்லாமல் ஜார்ஜ்புஷ், பாரக் ஒபாமா என்ற வேறுபாடில்லாமல் எல்லா ஆட்சியிலும் ஒட்டுண்ணி முதலாளியம் வலுவடைந்ததை எடுத்துக் காட்டி, ஒபாமா ஆட்சியில் அது எவ்வாறு புதிய வேகம் பெற்றுள்ளது என விளக்கிக் கூறுகிறது.
“தூய முதலாளியத்தின் தலைமையகமாக கருதப்படும் வால் ஸ்ட்ரீட் உண்மையில் ஒட்டுண்ணி முதலாளியத்தின் தலைமை நிலையமாகும்” எனக் கூறும் ஹண்ட்டர் லெவிஸ் அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை பட்டியலிடுகிறார்.
ஒரு குழுமத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவது, ஒரு குழுமத்தின் போட்டியாளர்களுக்கு எதிரான ஒழுங்கு முறை விதிகளை உருவாக்குவது, மிகக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்குவது, மிக பலவீனமான ஈட்டின் பெயரில் கடன் வழங்குவது, போட்டி ஏலம் இல்லாமல் ஒப்பந்தம் விடுவது, தாங்கள் விரும்பும் குழுமத்திற்கு ஆதரவான மானியங்களை அறிவிப்பது, வரி விடுமுறை வழங்குவது, கடன் தள்ளுபடி வழங்குவது போன்ற பல வழிகளில் ஆட்சியாளர்கள் பெருமுதலாளி குழுமங்களுக்கு சலுகை செய்வதும் அதற்கு மறு உதவியாக தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் தனது கட்சிக்கும் ஏராளமான நிதிப் பெருவது ஊடகங்களின் மூலமாக தங்களுக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பச் செய்வது என ஆட்சியாளர்கள் பயன் பெருவதும் என்ற வகையில் இந்த ஒட்டுண்ணிக் கூட்டணி அமெரிக்காவில் நிலவுகிறது என்கிறார் ஹண்டர் லெவெஸ்.
இது அமெரிக்காவுக்கு மட்டுலல்ல இந்தியாவுக்கும் பொருந்தும் , பிரிட்டனுக்கும் பொருந்தும் , வேறுபல நாடுகளுக்கும் பொருந்தும்.
எடுத்துக் காட்டாக டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்காக நரேந்திர மோடி அரசு 0.1 வட்டிக்கு 9,570 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அந் நிறுவனத்தின் மொத்த முதலீடே 10,000 கோடி ரூபாய்தான். இந்தக் குறைந்தவட்டிக் கடனையும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மாதத்தவணையில் கட்டினால் போதும் என்பது ஒப்பந்தம். இதற்கு பதிலுதவியாக டாடா நிறுவனம் மோடியையும், அவரது பா.ச கட்சியையும் கவனித்துக் கொள்கிறது.
பிரித்தனின் டேவிட் கேமரொன் ஆட்சியும் ஒட்டுண்ணி முதலாளிகளின் வலைப் பின்னலுக்குள்ளேயே நடக்கிறது. இதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தியே எடுத்துக் காட்டாகும்.
சின்ஜெண்ட்டா என்ற மிகப்பெரும் விதை நிறுவனத்திற்கு ஆதரவாக அறிவியல் உண்மைகளையே வளைத்து மரபீனீ மாற்ற மக்காச் சோளத்திற்கு கேமரோன் ஆட்சி இசைவு வழங்கியது. சின் ஜெண்ட்டாவின் மரபீனி மாற்ற மக்காச் சோளத்திற்கு பிரித்தனின் அறிவியலாளர்களிடையேயும் சூழலியல் ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு இருந்தது. கேமரோன் ஆட்சி இது குறித்து ஆய்வு செய்ய ஒர் வல்லுனர் குழுவை நியமித்தது.
அக் குழுவில் இடம்பெற்ற பெரும்பாலோர் சின்ஜெண்ட்டாவுக்கு ஆதரவான விஞ்ஞானிகளாக இருக்கும் படி கேமரோன் பார்த்துக் கொண்டார். அவர் விரும்பியபடி சின்ஜெண்டா நிறுவனத்திற்கு ஆதரவான அறிக்கையை அந்த வல்லுனர் குழு வழங்கியது. அந்த அறிக்கையைக் காரணம் காட்டி மரபீனீ மாற்ற மக்காச் சோளத்திற்கு கேமரோன் இசைவு வழங்கினார்.
இவ்வாறு ஒட்டுண்ணி முதலாளியம் உலகு தழுவி நிலை பெற்றிருப்பது தற்செயலானது அல்ல. கெஜ்ரிவாலும் அவர்கருத்துக்கு ஆட்பட்டவர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரலாற்றின் ஓட்டத்தில் மக்கள் போராட்டங்களின் விளைவாகத்தான் தேர்தல் சனநாயகம் பிறந்தது. மன்னர் ஆட்சியை ஒப்பிட , சர்வாதிகார ஆட்சியை ஒப்பிட தேர்தல் சனநாயகம் முற்போக்கானதுதான். ஆயினும் இத் தேர்தல் சன நாயகம் தொடங்கிய காலத்திலிருந்தே - கட்சிகள் என்ற அமைப்புகள் உருவான காலத்திலிருந்தே இத் தேர்தல் கட்சிகளுக்கும் முதலாளிய நிறுவனங்களுக்கும் இடையேயான உறவு தோன்றிவிட்டது.
 வாக்குரிமை சன நாயகம் மக்களுக்கு வழங்கப்பட்டாலும் சாரத்தில் முதலாளிகளின் நலன்களையே தேர்தல் அரசியலும், ஆட்சி முறையும் பிரதிபலித்தது. அதனால் தான் இதனை முதலாளிய சன நாயகம் என்று மார்க்சிய ஆசான்கள் வரையறுத்தனர்.
கையூட்டு கொடுத்து கட்சிக்காரர்களை வளைத்து கம்பெனிகள் காரியம் சாதித்துக் கொண்டது நீண்ட காலமாக நீடித்த ஒன்றுதான். ஆனால் 1990 க்குப் பிறகு தாராளமயம் – உலகமயம் என்றப் பொருளியல் போக்கு தீவிரம் பெற்ற பிறகு ஒட்டுண்ணி முதலாளியம் என்ற முதலாளியத்தியத்தின் ஓர் அழுகல் நிலை நிலைக்கொண்டது.
 தொடக்க கால முதலாளியம் போட்டி முதலாளியமாக இருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சி, மேலாண்மைத் திறன் ஆகியவற்றின் வழி முதலாளிகள் தங்கள் இலாபத்தை பெருக்கிக் கொள்வது என்பது போட்டி விதியாக செயல்பட்டது. உழைப்புச் சுரண்டல் அனைத்து முதலாளிகளுக்குமான பொது விதியாக இருந்த போதே மேற்கண்ட போட்டி விதி செயல்பட்டது.
இதன் வளச்சிப் போக்கில் முற்றுரிமை முதலாளியம் (monopoly capitalism) உருவானது. தொழிலுற்பத்தி மூலதனத்தை விட நிதி மூலதனம் மேல் நிலை பெற்றதை இந்த முற்றுரிமை முதலாளியக் கட்டம் குறித்தது.
இந்த நிதி மூலதனமும் ஓர் முற்றுரிமை கட்டத்தை அடைந்ததை உலகமயம் குறிக்கிறது. வங்கி மூலதனத்தின் மேலாதிக்கம் இதன் தனித்தன்மையாகும்.
உற்பத்தித் துறையின் மீது வங்கி மூலதனம் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்த மேலாதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் குறைந்த காலத்தில் அதிக இலாபம் ஈட்ட முடியாத தொழில் துறை நிறுவனங்களும் சிறிய நடுத்தரவங்கிகளும் சந்தையை விட்டு வெளியேற்றப்படுகின்றன.
இச்சூழலில் புதிய மூலதனம் என்பது புதிய தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதை விட இருக்கின்ற நிறுவனங்களை கைப்பற்றுவதிலேயே, அல்லது இருக்கின்ற நிறுவனங்களின் சந்தைகளிலேயே கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வதும் (mergers), எடுத்துக் கொள்வதும் (acquisitions) வேகம் பெருகின்றன. இந்தியாவில் கடந்த 2011,2012, 2013 ஆகிய மூன்றாண்டுகளில் மட்டும் இவ்வாறு கையகப்படுத்தலில் ஆறு இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் கைமாறி இருக்கிறது.
 அதாவது ஓரளவு சந்தை விரிவாக்கம் நடந்தாலும் இந்த சந்தை விரிவாக்கத்தின் வேகம் குறைந்துபோவதும், இருக்கிற சந்தையை கைப்பற்றிக் கொள்ளும் மூலதனத்தின் வேகம் அதிகரித்திருப்பதும் உலக மயக் கட்டத்தின் குணம் ஆகும்.
 சந்தை விரிவாக்கத்தின் வேகம் தேவையான அளவுக்கு இல்லாதபோது நிதி மூலதனம் தொழில் துறையைவிட வேறு துறைகளுக்குப் பாய்கிறது. பங்குச் சந்தை சூதாட்டம், வங்கி மூலதனம், மனை வணிகம், ஊக வணிகம் , காப்பீட்டுத் தொழில் போன்றத் துறைகளில் இந்த நிதி மூலதனம் பாய்கிறது. தொழில் துறை மூலதனம் என்று எடுத்துக் கொண்டால் இயற்கை கனிவளங்களை சூறையாடுவதில் இந்த மூலதனம் திருப்பிவிடப்படுகிறது.
இது தவிர இன்னொரு முக்கியமான துறையாக படைகருவிகள் உற்பத்தித் துறையும் இதற்கு துணையான படைக் கட்டுமானத்துறையும் வளர்ந்து வருகிறது.
மேற்கண்ட துறைகள் அனைத்திலும் முதலாளியத்தின் போட்டிவிதிகளுக்கு பெருமளவு வேலையில்லை. ஆட்சியாளர்களின் துணை கொண்டுதான் பங்குச் சந்தை சூதாட்டமானாலும் மனை வணிகமானாலும் படைத்துறை தொழில் என்றாலும் கட்டுமானத்துறை தொழில் என்றாலும் வளர முடியும்.
இவ்வாறான சூழலில்தான் பெருமுதலாளிகளும் அரசியலாளர்களூம் அரசு நிர்வாகத்தினரும் நீதித் துறையினரும், ஊடகத்துறையினரும் ஒரே அணியில் கை கோக்கும் ஒட்டுண்ணி முதலாளியம் (crony capitalism) நிலைபெருகிறது. முதலாளிய சூதாடிகள் கட்சிப் பொறுப்புகளிலும் கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும் இருக்கின்றனர். கட்சி அரசியல் முதலாளிய நிறுவனங்களால் வழங்கப்படும் (sponsored) ஒன்றாக மாறுகிறது.
”பொருளாதார அடியாட்கள்” அரசியல் கட்சிகளிலும் , ஆட்சி நிர்வாகத்திலும் நீக்கமற நிரம்புகிறார்கள்.
 உலக வங்கியும் , பன்னாட்டு நிதியமும் எவ்வாறு முதலாளிகளின் சூறையாடலுக்கு ஆதரவாக பொருளாதார அடியாட்களை உருவாக்கி பல்வேறு நாடுகளின் கொள்கை முடிவெடுக்கும் இடங்களில் வைக்கிறார்கள் என்பதை “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் “ என்ற தனது புகழ்பெற்ற நூலில் ஜான் பெர்க்கின்ஸ் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.
“ நடப்பது சன நாயகம் (democracy) அல்ல. குழும நாயகம் (corporatocracy) “ என்பதை பல நாடுகளின் நிலைமைகளை ஆதாரம் காட்டி பெர்க்கின்ஸ் நிறுவுகிறார். உயராய்வு நிறுவனங்களிலும், திட்ட மையங்களிலும் , ஆய்வுத்துறை ஊடகங்களிலும் பெருமுதலாளிய நிறுவனங்களின் பொருளாதார அடியாட்கள் நுழைக்கப்பட்டு கருத்து நிலை மேலாண்மை நிறுவப்படுவதை ஜான்பெர்க்கின்ஸ் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் எடுத்துக் காட்டுகிறார்.
உயராய்வு மையங்களிலும் அரசின் உயர் மட்டத்திலும் உள்ள அதிகாரிகள் அயல் பணி என்ற வகையிலும் கூட்டுச் செயல்பாடு என்ற முறையிலும் தனியார் பெரு நிறுவனங்களோடு உறவு கொள்வது திட்டமிட்ட முறையில் நடந்தேருகிறது.
எடுத்துக் காட்டாக அரசின் தொலைத் தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து உயர்மட்ட அதிகாரிகள் ஏர்டெல் , வோடோபோன் , ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு செல்வதும், இத் தனியார் நிறுவனங்களில் உள்ளோர் உயர்மட்ட ஆலோசனைக் குழுக்களில் தொலை தொடர்பு துறையில் இடம் பெருவதும் இந்த அரசுத்துறை அதிகாரிகள் பணி ஒய்வு காலத்தில் இத் தனியார் நிறுவனங்களில் பதவி பெருவதும் என்ற முறை அனைவரும் அறிந்த ஒன்று.
சுழல் கதவு முறை ( revolving door) என்று இதனை அழைக்கின்றனர்.
மன்சாண்டோ, சின்ஜெண்ட்டா, பாயர் போன்ற நிறுவனங்களின் நிதி உதவியோடே பல்வேறு வேளாண் உயராய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருவதை நாடறியும்.
இவ்வாறு பல வழிகளிலும் தனியார் நிறுவனங்களும் அரசு நிர்வாகக் கட்டமைப்பும் பின்னிப் பினைந்துள்ளன. உலக மயக் கட்டத்தில் இந்த ஒட்டுண்ணிப் பிணைப்பு இன்னும் வலுப்பெற்றுள்ளது.
இந்த ஒட்டுண்ணி வலைப் பின்னலுக்கு அப்பால் தூய முதலாளியத்தையோ தூய சனநாயகத்தையோ கெஜ்ரிவால் கற்பனையில் மட்டுமே கண்டுகளிக்க முடியும்.
 மக்கள் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக தகவல் அறியும் உரிமைச்சட்டம், லோக்பால் சட்டம், சூழல் பாதுகாப்புச்சட்டம் , வன உரிமைச்சட்டம் போன்றவை இந்த அரசாங்கங்களால் பிறப்பிக்கப்படுகின்றன என்பதும் வரம்புக்குட்பட்டு அவை மக்களுக்கு பயன் தருகின்றன என்பதும் உண்மையே. ஆனால் இவை ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னலை தகர்த்துவிடும் அளவுக்கு வலுவுள்ளவை அல்ல.
முதலாளிய சட்டத்தில் சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாலேயே எல்லாருடைய சொத்துரிமையும் பாதுகாக்கப்படும் என்று பொருளல்ல. பெரு முதலாளிகளின் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு முன்னால் சிறு உழவர்களின் நில உரிமை கிழித்தெறியப்படுகிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவை என்றால் பழங்குடி மக்களின் நிலச் சொத்துரிமை, சமூகத்தின் பொதுச் சொத்துரிமை ஆகிய அனைத்தும் கடலில் வீசப்படுகின்றன.
அதே போல் தாராள மயம் என்று சொல்வதாலேயே தங்கு தடையற்ற தாராளப் போட்டி அனுமதிக்கப்படும் என்று பொருளல்ல. ஆட்சியாளர்களோடும் அதிகார வர்க்கத்தோடும் கூட்டணி காண்கின்ற ஒட்டுண்ணி முதலாளிகளே கோலோச்ச முடியும்.
முதலாளியம் முகிழ்த்தபோது தேசியம் என்பதும் தேச இறையாண்மை என்பதும் மதிக்கப்படும் கோட்பாடுகளாக வளர்ந்தன. அதே முதலாளியம் முற்றுரிமைக் கட்டத்தை அடைந்து ஏகாதிபத்தியமாக வளர்ந்தபோது சந்தைப் போட்டிகள், படையெடுப்பில் முடிந்தன.
இன்று உலகமயக் கட்டத்தில் ஒட்டுண்ணி முதலாளிகளின் தேவைக்காக எந்தக் கேள்வி முறையும் இன்றி நாடுகளின் இன்றையாண்மை காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. பழையபடி கேள்வி முறையற்ற பேரரசுக் காலம் (empire epoch) தலையெடுத்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்துவதே ஊடகங்களின் பணியாக உருவெடுத்துள்ளது. கெஜ்ரிவால் கருதுவது போல் தாராளமயக் கட்டத்தில் குறைந்த அரசு (less government) என்பதோ மீ அரசு (super state) என்பதோ உருவாகிவிடுவதில்லை . நாட்டு அரசுகள் இருக்கும். அவை முன்னை விட வலுவாக இருக்கும்.
ஆனால் ஒரே வேறுபாடு; ஏற்கெனவே இருந்ததுபோல் மக்கள் நலத்திட்டங்களை பொறுப்பேற்றுச் செயல்படுத்தும் அரசாக இருக்காது. கல்வி, மருத்துவம், குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தனியாரிடம் இருக்கும் அதிகம் போனால் சில இலவசங்களை வழங்கி வெளிப்படையான அடக்குமுறைக் கருவியாக அரசு செயல்படும்.
ஒட்டுண்ணி முதலாளியத்தின் ஒட்டுமொத்த விளைவு இது. அதிகாரம் மையபடுதல், அரசியல் குற்றமயமாதல், கட்சிகள் ஊழல்மயமாதல் தேர்தல் சனநாயகம் பண நாயகமாதல் ஆகிய இவை இன்றைய உலகமய முதலாளியத்தோடு இணைந்தவை.
இவை அனைத்திலிருந்தும் ஒட்டுமொத்தமாக வெளியேறுவதற்கான முயற்சிதான் மக்களுக்குத் தேவை.
பூனை வேண்டும், ஆனால் அது சைவப்பூனையாக இருக்க வேண்டும் என்று கோருவதும், முதலாளியம் வேண்டும் ஆனால் அது ஒட்டுண்ணி முதலாளியமாக இல்லாமல் தூய முதலாளியமாக இருக்க வேண்டும் என்று கேட்பதும் ஒன்றுதான்.

0 கருத்துகள்:

கொல்லைப் புற வழியில் மான்சாண்டோ விதைக்கு அனுமதி - தோழர் கி.வெங்கட்ராமன்

ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு வழியில் செல்வது என்று முடி வெடுத்து மிகவேகமாக பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்கும் பணியில் இந்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.
பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குத் தங்குதடையில்லாமல் கதவைத் திறந்துவிடுவதற்காக இந்திய அரசு முன்வைத்த “உயிரித் தொழில் நுட்ப ஒழிங்காற்றுச் சட்டவரைவு’’ கடும் எதிர்ப்பின் காரணமாக சட்டமாக நிறைவேறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டுள்ளது. இந்தச் சூழலில் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி மரபீனி மாற்ற விதைகளுக்கு அனுமதியை வழங்கி ஆணையிட்டார்.
அவரது ஆணைக்கு இணங்க மரபீனி பொறியியல் ஏற்பிசைவு குழு, (Genetic Engineering Approval Committee) மரபீனி மாற்ற நெல், கோதுமை, சோளம் உள்ளிட்ட இரு பது மரபீனி மாற்றப் பயிர்களின் வெளிக்கள ஆய்வுக்கு இசைவு வழங்கி உள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் முடிகிற தருணத்தில் சனநாயக மரபுகள் எவை பற்றியும் கவலைப்படாமல் அவசர அவசரமாக இந்த ஏற்பிசைவுகள் வழங்கப் பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் காங்கிரசுக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் பகாசுர விதை நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாய் கையூட்டுப் பணம் பெறுவதற்காகவே இவ்வளவு அவசர கோலத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டுள்ன என்று ஐயுற இடமுண்டு!
இதற்கென்றே திட்டமிட்ட முறையில் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஊகங்கள் உலவுகின்றன.
அறிவியலாளர்களும், உழவர் அமைப்புகளும், சூழலியல் அறிஞர்களும் வலுவானக் காரணங்களை முன் வைத்து மரபீனி மாற்றப் பயிர்களை வெளிக்கள ஆய்வுக்கோ, வணிக வகை விற்பனைக்கோ அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
குறிப்பாக பிட்டி கத்தரிக்கு இசைவளிப்பது என இந்திய அரசு கடந்த 2010இல் முடிவெடுத்தபோது அம் முடிவுக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன.
இதற்கு முன்னர் மான்சாண்ட் டோவின் பி.ட்டி பருத்திக்கு கொல்லைப்புற வழியில் அனுமதியளிக்கப்பட்டதின் விளைவாக ஆந்திராவிலும், விதர்பாவிலும் வேளாண்மைக்கும் சுற்றுச் சூழலுக்கும் கால்நடைக்கும் ஏற்பட்ட பேரழிவு உண்டாக்கிய பட்டறிவில் இந்த எதிர்ப்புகிளம்பியது. பி.ட்டி பருத்தியின் இலைகளைத் தின்ற ஆடுகள் மற்றும் பிற கால் நடைகள் மடிந்து வீழ்ந்தன.
பருத்திச் செடிகளைக்கையாளும் பெண் தொழிலாளிகளுக்கு இனம் புரியாத ஒவ்வாமை நோய்கள், கருப்பைக் கோளாறுகள் போன்றவை ஏற் பட்டன.
மான்சாண்டோவின் முற்றுரிமை விலைக்கு விதை வாங்கி அந்த நிறுவனத்திடமே அதிக விலைக்கு பூச்சிக் கொல்லிகள் வாங்கி வளர்த்த பருத்தியோ நெட்டிழை பருத்தியாக இல்லாமல் தெளிவான வெண்மை நிறமும் இன்றி தரம் குறைந்த நிலையில் இருந்தன. இதனால் சந்தையில் குறைந்த விலைக்குவிற்கும் நிலைக்கு பருத்தி உழவர்கள் தள்ளப்பட்டார்கள்.
கடன்பட்ட உழவர்களில் பலர் விதர்பாவிலும் ஆந்திராவிலும் நஞ்சுண்டு மடிந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க மான்சாண்டோவின் பி.ட்டி கத்தரிக்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.
அதுமட்டுமின்றி பி.ட்டி கத்தரிக்கு அனுமதி வழங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதைடவுன் டு எர்த் ஏடு அம்பலப் படுத்தியது. பி.ட்டி கத்தரிக்கு ஏற்பிசைவு வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர்குழுவில் இருந்த கே.கே. திரிபாதி, மதுராராய், வசந்தா முத்துசாமி, சசிகரன், திலிப்குமார் ஆகிய அறிவியலாளர்கள் மான்சாண் டோவின் கையாட்கள் என்பது அம்பலமானது.
இந்தப் பின்னணியில் தான் இந்தியாவின் பல பகுதிகளில் பி.ட்டி கத்தரிக்கு அனுமதி அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை அன்றைய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டங்கள் அனைத்திலுமே அறிவியளாளர்களும் உழவர் அமைப்புகளும் பி.ட்டி கத்தரியின் தீமைகளை வலுவான ஆதாரங்களோடு எடுத்து வைத்தனர்.
உலகின் முன்னணி உயிரியல் வல்லுனர்கள் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக எழுதியுள்ள 400-க்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் முன்வைக்கப்பட்டன.
இவற்றின் விளைவாக பி.ட்டி கத்தரிக்கு அளித்த அனுமதியை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். இதையொட்டி ஒட்டு மொத்த மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து முழு அளவில் விவாதம் நடைபெற வேண்டும் என்றக் கோரிக்கை வலுபெற்றது.
உத்திரபிரதேசம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மரபீனி மாற்றப் பயிர்களின் கள ஆய்வுக்கும் விற்பனைக்கும் தடை விதித்தன. இந்த நிலையில் இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் நாடாளுமன்றக் குழுவை அமைத்தது. காங்கிரசு கட்சியின் ஏழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முப்பத்தோறு நாடாளு மன்ற உறுப்பினர்களும் பல துறைகளைச் சேர்ந்த ஐந்து வல்லுனர்களும் கொண்ட இக்குழு மிகவிரிவாக ஆய்வு செய்து கடந்த 2012 ஆகஸ்ட்டில் தனது அறிக்கையை இந்திய அரசுக்கு அளித்தது.
வெவ்வேறு பருவ நிலை மண்ட லங்களைச் சேர்ந்த பல நாடுகளில் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்த ஆய்வறிஞர்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் ஐ.நா.வின் சுற்றுச் சூழல் அமைப்பின்கள ஆய்வு அறிக்கையையும் இந்தியாவின் பல மாநிலங்களின்கள ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு பாசு தேவ் ஆச்சார்யா குழு அறிக்கை அளித்தது.
எக்காரணம் கொண்டும் மரபீனி மாற்றப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என தெளிவாக பரிந்துரை செய்த அக்குழு உயிரிப் பன்மயத்தைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
கிரீன் பீஸ் அமைப்பு சார்பில் மரபீனி மாற்ற விதைகளுக்கு எதி ராக தொடுக்கப்பட்ட வழக்கில் மரபீனிப் பயிர்களுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
நாடாளுமன்றக் குழு வின் அறிக்கையையோ,உச்சநீதி மன்றத்தின் தடை ஆணையையோ முற்றிலும் புறம்தள்ளி கடந்த 3.2.2014 அன்று ஜம்முவில் நடை பெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்தார்.
இதனடிப்படையில் கடந்த 2014 மார்ச் 1 அன்று சுற்றுச் சூழல் அமைச்சர் வீரப்பமொய்லி நெல் கோதுமை உள்ளிட்ட 20 மரபீனி மாற்றப் பயிர்களின் கள ஆய்வு களுக்கு அனுமதி வழங்குவதாக அறிவித்தார்.
கள ஆய்வுக்கு அனுமதிப்பதும் விற்பனைக்கு அனுமதிப்பதும் கிட்டத் தட்ட ஒரே விளைவையே உண்டாக்கும். ஒரு தடையை காரணம் காட்டி அறிவியல் ஆய்வுகளை முடக்கிப் போட முடியாது என்று தனது முடிவுக்கான காரணத்தை வீரப்ப மொய்லி கூறினார். ஆய்வகங்களில் நடக்கும் மரபீனீ மாற்றப் பயிர்கள் குறித்த ஆய்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென்று யாரும் கோரவில்லை. வெளிக்கள ஆய்வுகளுக்குதான் எதிர்ப்பு உள் ளது. ஏனெனில், பல வயல்களுக்கு இடையில் ஒரு நிலத்தில் வெளிக்கள ஆய்வுக்காக மரபீனி மாற்ற விதைகள் விதைக்கப்பட்டால் இதனால் மண்ணுக்கும் , நீருக்கும், காற்றுக்கும் ஏற்படும் சூழல் பாதிப் புகள் அணுக்கதிரியக்கத்தைப் போன்று தொடர் விளைவுகளை உண்டாக்கக் கூடியவை. மீளச் சரி செய்ய முடியாதவை.
எனவே தான் வெளிக்கள ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. பி.ட்டி பருத்தி வெளிக்கள ஆய்வுக்கு என்று அனுமதிக்கப் பட்டக் காலத்தில் தான் முறையான அனு மதி ஏதுமின்றி திருட்டுத் தனமாக சந்தைக்கு வந்தது. அதன் விளைவு களை மக்கள் சந்தித்து வருகிறார் கள். வெளிக்கள ஆய்வை எதிர்ப்ப தற்கு இந்தப் பட்டறிவும் ஒரு முக்கிய காரணமாகும். இவற்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி வெளிக்கள ஆய்வுக்கு இசைவு அளித்திருக்கிறார் வீரப்ப மொய்லி.
கடந்த ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் மரபீனி மாற்றப் பயிர்களின் வெளிக்கள ஆய்வை தடை செய்து அளித்த அறிக்கை வலுவானது. “அறிவியலாளர் சமூகம் மரபீனி மாற்றப் பயிர்கள் மற்றும் அவற்றின் வெளிக்கள ஆய்வை அனுமதிக்க லாமா வேண்டாமா என்பது குறித்த பிரச்சினையில் செம்பாதியாக பிரிந்து நிற்கிறது. இச் சூழலில் விரிவான ஆய்வுகள் இன்றி இவற்றை அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஓர் அரசு வரமுடியாது. “ என்று ஜெயந்தி நடராஜன் குறிப் பிட்டிருந்தார்.
அண்மையில் போலந்தில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டிலும் இக் கருத்தை அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய சூழலில் மான்சாண்டோ, சின்ஜெண்ட்டா, பாயர் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக திடீரென்று அப்பதவியி லிருந்து ஜெயந்தி நடராஜன் “கட்சிப் பணிகளுக்கு’’ என்று சொல்லி நீக்கப்பட்டார். கடந்த 2013 டிசம்பரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.
சுற்றுச் சூழலை கெடுப்பதில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் பெட்ரோலியத் துறைக்கு பொறுப்பான ஒருவரே சுற்றுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பதற்கான அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.
காங்கிரசுக் கூட்டணி அமைச் சரவையின் பதவிக் காலம் முடிகின்ற தருவாயில், அடுத்து காங்கிரசுக் கட்சி பதவிக்கு வருவதற்கான வாய்ப்ப்புகள் குறைந்துள்ள சூழ லில் அவசர அவசரமாக இந்த அமைச்சரவை மாற்றங்கள் திட்ட மிட்டமுறையில் நடந்தேறின. வீரப்ப மொய்லி கடந்த டிசம்பரில் பதவி ஏற்றவுடன் மூன்றே வாரங்களில் 70 நிறுவனங்களுக்கு சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மறுப் பின்மைசான்றிதழ் வழங்கி ஆணையிட்டார். அதற்கு அடுத்து மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இசைவு வழங்கினார்.
இவ்வாறு மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இசைவளித்திருப்பது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்து உழவர்களை பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் காலடியில் கட்டிப் போடுகிற இழிசெயல் இது.
மாநில அரசுக்கு உள்ள அதிகா ரத்தைப் பயன்படுத்தி வீரப்ப மொய்லியின் முடிவுக்கு எதிராக கேரள அரசு களம் இறங்கியுள்ளது. தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றப் பயிர்களுக்கான கள ஆய் வுக்கோ, அவ்விதைகளின் விற் பனைக்கோ அனுமதி இல்லை என்று கேரள அரசு திட்டவட்ட மாக அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில அரசும் இந்த முடிவுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு முதலைமைச்சர் செயலலிதா மரபீனி மாற்றப் பயிர்களை இந்திய அரசு அனுமதித்த தைக் கண்டித்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பேசிவருகிறார். இது வெறும் பேச்சாக இல்லாமல் தமிழக அரசு இதற்கு உறுதியான தடை விதிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், வேளாண் ஆய்வு மையங்கள், தனியார் நிலங்கள், ஆகிய எந்த வழியிலும் மரபீனி மாற்றப் பயிர்கள் கள ஆய்வுக்கோ விற்பனைக்கோ தமிழ் நாட்டிற்குள் வர அனுமதிக்கக் கூடாது .
உழவர்களும் இந்த மண்ணை நேசிக்கிற அனைவரும் இந்திய அரசின் சூதான இந்த முடிவை எதிர்த்து உறுதியாகக் களம் காண வேண்டும்.

0 கருத்துகள்: