கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

தமிழ் வழிக் கல்வியைப் பாதிக்கும் தீர்ப்பு - தோழர் கி.வெங்கட்ராமன்

நேரடியாக தமிழ்நாடு தொடர்பான வழக்கில்லை என்றாலும் கர்நாடக மாநில அரசு - எதிர் - ஆங்கில வழி தொடக்க பள்ளியினர் சங்கம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ் வழி கல்விக்கு எதிரான பேரிடியாக வந்துள்ளது.
தலைமை நீதிபதி ஆர்.எம். லோடா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. பட்நாய்க், எஸ்.ஜே. முக்கோபாத் தியாயா, தீபக் மிஸ்ரா எஃப் எம் இப்ராகிம் கலிபுல்லா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் கடந்த 2014 மே 6 அன்று இத்தீர்ப்பை வழங்கியது. (சிவில் அப்பீல் 5166 - 5190 / 2013)
கர்நாடக மாநில அரசு கடந்த 29/4/1994 அன்று கர்நாடக மாநிலத்தில் இயங்கும் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுமொழியாக எது இருக்க வேண்டும் என்பது குறித்து ஆணை வெளியிட்டது. 1994--95 கல்வியாண்டிலிருந்து கர்நாடகாவில் இயங்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் அனைத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை தாய்மொழியோ அல்லது கன்னடமோ பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் தாய் மொழியாகக் கொண்டோர் மட்டுமே விதிவிலக்காக ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக் கொள்ளலாம் என இந்த அரசாணை வலியுறுத்தியது.
கர்நாடகத்தில் இயங்கும் தன்நிதிப் பள்ளி முதலாளிகள் இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கில் 2/7/2008 அன்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதி மன்றம், கர்நாடக அரசின் இந்த ஆணை அரசமைப்புச் சட்ட விதி 21, 19 (1) (g), 29(1), 30 (1) ஆகியவற்றிற்கு எதிரானது என்று கூறி கர்நாடக அரசின் தாய் மொழிக் கல்வி ஆணையை ரத்துசெய்தது.
இதன் மீது பல்வேறு இழு பறிகள் நடந்ததற்குப் பிறகு உச்சநீதி மன்றத்தை கர்நாடக அரசு அணுகியது மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இச்சிக்கலை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி 5/7/2013 அன்று ஆணையிட்டது.
அரசமைப்பு ஆயம் ஆய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய சிக்கல்களாக கீழ்வரும் ஐந்து கேள்விகளை அது முன்வைத்தது.
1. தாய்மொழி என்றால் என்ன? ஒரு குழந்தை கருத்துப் பறிமாற்றத்தின் போது எந்த மொழியை எளிமையாகக் கொள்கிறதோ அதையே அதன் தாய் மொழி என்று கொள்ளலாமா? அப்படியானால் அதை தீர்மானிப்பது யார்?
2. தாய்மொழி திணிப்பு என்பது அரசமைப்புச் சட்ட கூறுகள் 14, 19, 29 மற்றும் 30 ஆகியவை வழங்கும் அடிப்படை உரிமைகளை எந்த வகையிலாவது பாதிக்கிறதா?
3. தொடக்கப் பள்ளி நிலையிலேயே ஒரு மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ அல்லது ஒரு குடிமகனோ பயிற்று மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை உண்டா?
4. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்றால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மட்டுமின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளையும் குறிக்குமா?
5. அரசமைப்புச் சட்டக்கூறு 350A படி ஓர் மாநில அரசு மாநிலத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரை அவர்களது தாய்மொழியில் மட்டும் தான் தொடக்கப் பள்ளியில் பயில வேண்டும் என வற்புறுத்த முடியுமா?
இதன் மீது விசாரணை நடத்தி 6. 5. 2014 அன்று அளித்த தீர்ப்பில் அரசமைப்புச் சட்ட ஆயம் கீழ் வருமாறு தீர்ப்புரைத்தது.
“கல்வித்துறை வல்லுநர்கள் ஒரே ஒத்தக் கருத்தாக 1 முதல் 4 முடிய தொடக்கப் பள்ளி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழி வழியில் கற்பிக்கப்பட்டால்தான் அவர்கள் கற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கூறலாம் ஆனால் அரசமைப்புக் கூறுகள் 29 (1) மற்றும் 30 (1) ஆகியவற்றின் பாதுகாப்புப் பெற்றுள்ள பள்ளிகளிலும் அரசமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g) வழங்கும் தொழில் செய்யும் உரிமையின் அடிப்படையில் அரசு உதவி பெறாமல் நடைபெறும் தனியார் பள்ளிகளிலும் தாய் மொழிவழி கல்வி வழங்கப்பட்டால் தான் அப்பள்ளிகளை மாநில அரசு அங்கீகரிக்கும் என நிபந்தனை விதிப்பது சட்ட விரோதமானது என்ற முடிவுக்கு இந்நீதிமன்றம் வருகிறது. இவ்வாறான தாய்மொழித் திணிப்பு அரசமைப்புச் சட்ட கூறு 19, 29, 30 ஆகியவற்றிற்கு எதிரானது என இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் முடிவு செய்கிறது.’’
அரசமைப்புச் சட்ட ஆயத்தின் முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளிலிருந்தே தாய்மொழி கல்விக்கு எதிரான மனநிலையில்தான் உச்ச நீதிமன்றம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தில் இயங்கும் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் பெற வேண்டு மென்றால் அவற்றில் 1 முதல் 4ஆம் வகுப்பு வரை தாய்மொழியோ அல்லது கன்னடமோதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அவ்வரசு கூறியதை “தாய் மொழித் திணிப்பு’’ என உச்சநீதிமன்றம் கேள்வி நிலையிலேயே வரையறுக்கிறது. “தாய்மொழி’’ என்பதும், “திணிப்பு’’ என்பதும் ஒரே சொற்றொடரில் இணைக்கப் படுவதே இயல்புக்கு முரணானது என்பதைக் கூட உச்சநீதிமன்றம் புறக்கணிக்கிறது. தாயைத் திணிப்பதோ, தாய்மொழியை திணிப்பதோ நடவாத ஒன்று. தாய் என்றாலும் தாய்மொழி என்றாலும் அவை திணிக்கப்படக் கூடியவை அல்ல. தாய்மொழில் கருத்துப் பரிமாறிக் கொள்வது சமூகமாக வாழும் மனிதனின் இயற்கையான இயல்பு. இந்த அடிப்படை அறிவியல் உண்மையைக்கூட உச்சநீதிமன்றம் குப்பையில் வீசுகிறது.
குழந்தை உளவியலாளர்கள் உலகம் முழுவதும் ஆய்ந்து கூறும் ஒரே கருத்து கல்வியில் பயிற்று மொழியாக, குறிப்பாக தொடக்கக் கல்வியில் பயிற்று மொழியாக தாய் மொழியே இருத்தல் வேண்டும் என்பதாகும். இந்த அடிப்படை அறிவியலை எந்த அறிவார்ந்த விவாதமுமின்றி போகிற போக்கில் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் தூக்கி எறிகிறது.
ஆங்கிலத்தை பயிற்று மொழியாக திணிப்பதையே உண்மையில் உச்சநீதிமன்றம் விரும்புகிறது. ஆனால் அதை வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறது. குழந்தையோ அல்லது அதன் சார்பில் அதன் பெற்றோரோ கேட்கும் மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது. நாளைக்கு ஒருவர் ஸ்பானிய மொழியிலோ, சீனமொழியிலோ அல்லது எத்தியோப்பிய மொழியிலோ பயில விரும்பினால் அந்த மொழி வழியில்தான் கல்வி வழங் கப்படவேண்டும் என்று பொருளா? அது சாத்தியப்படுமா? ஆங்கிலத்தைத்தான் பயிற்று மொழியாக்க விரும்பினால் அதையாவது வெளிப் படையாக அறிவிக்கும் அறத் துணிவு அற்ற மன்றமாக அரசமைப்புச் சட்ட ஆயம் தாழ்ந்து போய் உள்ளது.
உண்மையில் இத்தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தையே குடைகவிழ்த்து விட்டுள்ளது. இச்சிக்கலில் அரசமைப்புச் சட்ட ஆயம் அறிவித்துள்ள ஒவ்வொரு முடிவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வெறும் சட்டப் பார்வையில் பார்க்கிறவர்களுக்குக் கூட இந்த உண்மை தெளிவாகப் புலப்படும்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நடப்பது 2009 க்குப் பிறகு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் தனது தீர்ப்புக்கு டி.எம்.ஏ.பாய் அறக்கட்டளை - எதிர்-கர்நாடக மாநில அரசு என்ற தீர்ப்பையும் (2002, 8 SCC, , 481), பி.எ இனாம்தார் எதிர்-- மகாராட்டிரா மாநில அரசு என்ற வழக்கின் தீர்ப்பையும் (2005, 6 SCC,, 537) பெரிதும் சார்ந்திருக்கிறது. டி.எம்.ஏ பாய் அறக்கட்டளை வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் படுபிற் போக்கான தீர்ப்பை வழங்கியது. (இத்தீர்ப்பு குறித்து விரிவான திறனாய்வுக்கு காண்க : 2003-பிப்ரவரி, தமிழர்கண்ணோட்டம்)
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று “குழந்தைகளுக்கான கட்டணமில்லாத கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009’’ என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச் சட்டம் இந்திய குடிமக்களாக உள்ள 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லா கட்டாயக் கல்வி பெறுவதை உறுதி செய்து அதனை அரசின் கடமையாக வலியுறுத்தியது. முழுவதும் கட்டணமில்லாக் கல்வியை இது கொண்டுவந்துவிட வில்லை என்ற போதிலும் அரசிடம் உதவி பெறாததன் நிதிப் பள்ளிகளும் தங்கள் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியில் நலிந்த பிரிவு மாணவர்களை குறைந்தது 25 விழுக்காடு அளவுக்காவது கட்டணமில்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனக் கூறியது. இந்த இழப்பை அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் கூறியது.
இச்சட்டம் செயலுக்கு வர வேண்டுமென்றால் மேற்சொன்ன டி.எம்.ஏ.பாய் அறக்கட்டளை வழக்குத் தீர்ப்பை கடந்தாக வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத் தால் இச்சட்டம் தள்ளுபடி ஆகிவிடும் என கல்வியாளர்களும் சட்ட வல்லுநர்களும் எடுத்துக் கூறினர். இந்த அடிப்படையிலேயே 1. 4. 2010 அன்று ஒரு திருத்த சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 21கி என்ற புதிய கூறு சேர்க்கப்பட்டது.
“6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லாத இலவசக் கல்வியை அரசு வழங்கும். இதற்கான வழிமுறைகளை சட்டத்தின் மூலமாக அரசு தீர்மானிக்கும்’’ என்று 21A கூறியது. 2009 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட கட்டாய இலவசக் கல்விச் சட்டத்திற்கு அரண் சேர்ப்பதற்கே இக்கூறு சேர்க்கப் பட்டது.
21A வந்ததற்குப் பிறகு சட்டத்தில் புதிய நிலைமை ஏற்பட்டு விட்டது. டி.எம்.ஏ பாய் தீர்ப்பு கடக்கப்பட்டு விட்டது. சட்டத்தின் பார்வையில் புதிதாக எழுந்துள்ள இந்த நிலைமையை கணக்கில் கொள்ளாமலேயே தலைமை நீதிபதி லோடா தலைமையிலான இந்த உச்சநீதிமன்ற ஆயம் தீர்ப்புரைத்துள்ளது. இதற்குப் பிறகும் டி.எம்.ஏ பாய் தீர்ப்பை தனது தீர்ப்புக்கு பெரிதும் அடிப்படையாகக் கொள்வது சட்டத்திற்கும் நீதிமுறைமைக்குமே எதிரானது.
ஏற்கெனவே அரசமைப்புச் சட்டக் கூறு 21 வழங்கும் “உயிர் வாழும் உரிமை’’ என்பதற்கு கண்ணியத்தோடு வாழும் உரிமை என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் விளக்கமளித்துவிட்டது. இந் நிலையில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னிகிருஷ்ணன் வழக்குத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் “ கண்ணியமாக வாழ்வதற்கு கல்வி உரிமை மிக அடிப்படைத் தேவை என்பதால் கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்’’ எனத் தீர்ப்புரைத்தது. இது குறித்தும், அதன் பிறகு 2009 இல் பிறப்பிக்கப்பட்ட கட்டாய கட்டணமில்லா கல்விச் சட்டம் குறித்தும் நடைபெற்ற நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 21A சேர்க்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டக் கூறு 19(1) கூறும் பிற அடிப்படை உரிமைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகவும் தனித்த வகை அடிப்படை உரிமையாகவும் இருப்பதால் 19(1) இல் திருத்தம் செய்து சேர்க்காமல் தனித்த ஒன்றாக 21கி சேர்க்கப் பட்டது. இதற்குப் பிறகும் 19(1) வழங்கும் பிற அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வி குறித்த உரிமையை சேர்த்துப் பேசுவது இன்னும் உச்ச நீதிமன்றம் மனத் தளவில் 2009 ஆம் ஆண்டை கடக்கவில்லை என்று காட்டுகிறது. 21கி வந்த பிறகு பழைய படி 19 (1) (g) உள்ளிட்ட உரிமைகளின் கீழ் இதனை விவாதிப்பது பொருந்தாது.
அரசமைப்புச் சட்டக் கூறு 21A யின் வலுவில் நிற்பதே 2009 ஆம் ஆண்டு கட்டாய கட்டணமில்லா சட்டமாகும். எனவே கல்வி குறித்த எந்த பிரச்சினையையும் முதன்மையாக 21A மற்றும் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் விவாதிப்பதே பொருத்தமானதாகும். ஆனால் இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் 21A குறித்து கண்மூடிக் கொண்டதாகவே தெரிகிறது.
21A யின்படி நிலைநிறுத்தப் பட்டுள்ள கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின் பிரிவு 29 (2) (g) “குழந்தைகளின் தாய்மொழியே எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு பயிற்று மொழியாக இருக்க வேண்டும்’’ என்று கூறுகிறது. இதனை செயல்படுத்தும் அதிகாரம் அரசமைப்புச் சட்டக் கூறு 162ன்படி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப் படையிலேயே இந்தப் பயிற்றுமொழி ஆணைகர் நாடக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை கடக்காமல் உச்சநீதிமன்றம் புதிய முடிவுக்கு போவதற்கு சட்ட வழிமுறையே இல்லை. ஆனால் சட்ட நெறிகள், அவை குறித்த வாதங்கள் எதிலும் இறங்காமல் கண்ணை மூடிக் கொண்டு பயிற்று மொழியைத் தீர்மானிப்பது 19(1) (g) ன்படி அவரவர் தனி உரிமை என்று கூறுகிறது.
இவர்கள் பெரிதும் சார்ந்திருக் கும் டி.எம்.ஏ பாய் தீர்ப்பே கூட அரசமைப்புச் சட்டக்கூறு 162ன்படி மாநில அரசுக்கு உள்ள கல்வி ஒழுங்குமுறை அதிகாரத்தை தள்ளு படி செய்யவில்லை. அத்தீர்ப்பின் பத்தி 54 ‘19(1) (g) மற்றும் (26) (a) வழங்கும் உரிமைப்படி நடத்தப் படும் கல்வி நிறுவனங்கள் மாநில அரசின் ஒழுங்கு முறைக்கு உட்பட்டவை’ என்றுதான் கூறுகிறது.
அத்தீர்ப்பின் பத்தி 115ம் இதே செய்தியை வேறு சொற்களில் கூறுகிறது.
நீதிபதிகள் இதை எடுத்துக் காட்டினாலும் ஒரே வார்த்தையில் “அதுவேறு’’ என்று முகத்தை திருப்பிக்கொள்கின்றனர்.
குழந்தை உளவியலாளர்கள் சொல்லும் அறிவியல் ஆய்வையும் வாத வழிப்பட்டு எதிர்கொள்ளாமல், அரசமைப்புச் சட்ட விவரங்களையும் சிந்திக்காமல், இவர்கள் சார்ந்திருக்கும் தீர்ப்பில் உள்ளதையும் கூட கருதிபார்க்காமல் தான டித்த மூப்பாக தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டிய தில்லை என தள்ளுபடி செய்கிறார்கள். எந்தத் தீர்ப்பாக இருந்தாலும் அது சட்டநெறி முறைபடிதான் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற நீதி முறைமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
அரசமைப்புக் கூறு 29(1), 30(1) ஆகியவை இத்தீர்ப்பில் அடுத்து விவாதிக்கப்படும் முக்கியக் கூறுகளாகும்.
29(1) தனித்த மொழி, எழுத்து வடிவம், பண்பாடு உள்ளவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தங்களது மொழி, எழுத்து பண்பாடு ஆகியவற்றை காத்துக் கொள்ள உரிமைப் படைத்தவர் ஆவர் என்று கூறுகிறது.
அதாவது ஒரு மாநிலத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையிருக்கு அவர்களது மொழியில் கல்வி வழங்க வேண்டும் என்று பொருள்.
கர்நாடக அரசின் ஆணையோ, தாய்மொழி அல்லது கன்னடம் பயிற்று மொழியாக இருக்கும் என்று கூறுகிறது. 29 (1) முரணாக மொழிச் சிறுபான்மையினர் மீது கன்னடம் பயிற்று மொழியாகத் திணிக்கப்படவில்லை.
29 (1) மீறப்பட்டுள்ளதாக நிலை நாட்ட முடியாத சூழலில் 30(1)க்குள் இத்தீர்ப்பு பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது.
30 (1) கூறுவதாவது: “மத அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ சிறுபான்மையினராக உள்ள அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் நிறுவி நிர்வாகம் செய்ய உரிமை படைத்தவர்கள் ஆவர்’’ என்பதாகும்.
இதற்கு முன்னும், டி.எம்.ஏ பாய் தீர்ப்பிலும் இப்போதும் 30(1) கூறப்பட்டுள்ள ”தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’’ (of their choice) என்றால் என்ன? என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. மத, மொழிச் சிறுபான்மையினர் தங்கள் மொழி சார்ந்த அல்லது மதம், சார்ந்த கல்வி நிறுவனங்களை, அறக்கட்டளைகளை நடத்துவது குறித்து 29(1) கூறுகிறது. ஆனால் 30(1) மத, மொழி சிறுபான்மையினர் மதசார் பற்ற பொதுக் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமையையே “தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’’ என்ற தொடரின் மூலம் பெறுகின்றனர்.
பயிற்று மொழி குறித்தோ, பாடத்திட்டம் குறித்தோ, அவரவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்ற ஒழுங்கு முறைக்கு அப்பாற்பட்ட எந்த உரிமையையும் “தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’’ என்ற தொடரின் மூலம் இந்நிறுவனங்கள் பெற்று விடாது. டி.எம்.ஏ.பாய் தீர்ப்பும் கூட அதை குறிப்பிடுகிறது.
‘ஆனால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப’ என்பதன் மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்கள் தாய் மொழியோ அல்லது மாநில பொது மொழியோ அல்லாத வேறு ஒன்றை பயிற்று மொழியாக வைத்துக்கொள்ள தங்கு தடையற்ற அதிகாரம் பெற்று விட்டதாக 30(1)க்கு லோடா ஆயம் பொருள் கூறுகிறது. ஆனால் அது குறித்த எந்த வகை சட்ட விளக்கமும் அளிக்கும் பொறுப்பை அது ஏற்க வில்லை.
அடுத்து அரசமைப்புக் கூறு 350A குறித்து இந்த அரசமைப்பு ஆயம் மனம்போன போக்கில் கூறிச் செல்கிறது. 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அந்தந்த மாநிலங்களில் பலகாலமாக வாழும் மொழி, மதச் சிறுபான்மையினர் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.
மாநில சீரமைப்பு ஆணையம் 1955லேயே இச்சிக்கல் குறித்து விவாதித்தது. அதன் பரிந்துரையில் “புதிதாக நிறுவப்படும் மொழிவழி மாநிலங்களில் வாழும் மொழிச் சிறுபான்மையினர் அவர்களது தாய்மொழியில் கல்வி பெற உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்’’ என்று கூறியது. அதற்கு ஏற்ப மொழிவழி மாநிலங்கள் உருவனாதற்கு பிறகு 350A என்ற புதிய கூறு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப் பட்டது.
இக்கூறு ஒரு மாநிலத்திலுள்ள மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழி உரிமையை உறுதி செய்கிறதே அன்றி, அம்மாநிலச் சிறுபான்மையினர் அரசின் வரம்பீடுகளுக்கு அப்பாற்பட்டு எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்கு தலைவிரிகோலாமான உரிமையை வழங்கிவிட வில்லை. 350Aஐ எழுத்துக் கூட்டிப் படித்தாலும், அத்திருத்தச் சட்டம் முன் வைக்கப்பட்டபோது கூறப்பட்ட நோக்க உரையைப் பார்த்தாலும் இது தெளிவாகத் தெரியும். ஆனால் 350Aக்கு இந்த அரசமைப்புச் சட்ட ஆயம் மனம்போன போக்கில் விளக்கம் கூறுவது எந்த சட்ட மாணவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.
மொத்தத்தில் இத்தீர்ப்பு ஒரு நீதிமன்றம் கடைபிடிக்க வேண்டிய சட்ட நெறிமுறைகள் எதுவும் பின்பற்றபடாமல் மனம்போன போக்கில் எழுதப்பட்டுள்ள - சட்டவியலுக்கு சற்றும் பொருந்தாத தீர்ப்புரையாகும்.
2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுந்துள்ள புதிய சட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இச்சிக்கல் குறித்து மறு ஆய்வு செய்ய 9 அல்லது 11 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசமைப்பு ஆயத்திற்கு அனுப்புவதே இப்போதுள்ள சட்ட வாய்ப்பில் செய்யக்கூடிய ஒன்றாகும்.
கர்நாடக அரசாணை குறித்த வழக்காக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறபிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழ் வழிக் கல்வி ஆணையையும் இத் தீர்ப்பு பாதிக்கும். எனவே மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இத்தீர்ப்பை கண்டு அயர்ந்து நிற்காமல் முன்னிலும் வலுவோடு தமிழ்வழிக் கல்விக்கான இயக்கத்தை நாம் முன்னெடுத்தால் நடைமுறையிலும், சட்ட வழியிலும் தமிழ்வழிக் கல்வி உரிமையை நிலைநாட்டும் வாய்ப்பு ஏற்படும். அத்திசையில் தமிழின உணர்வாளர்கள் வலுவாக செயல்பட வேண்டும்.

0 கருத்துகள்:

அயோத்திதாசர், சகஜானந்தா நினைவில் புதிய மனிதர்களை உருவாக்குவோம் - தோழர் கி.வெங்கட்ராமன்

சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநூற்றாண்டு விழா கருத்தரங்கம் 04.05.2014 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் ஓமகுளத்தில் உள்ள நந்தனார் கல்வி கழக அறக்கட்டளை மட வளாகத்தில் நடைபெற்றது.
அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜாநந்தர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி.எஸ்.ட்டி ஆசிரியர், அலுவலர் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்கு திரு..ஜி. னோகர் தலைமை தாங்கினார்.
திரு .செ.ஜெயப்பிரகாஷ் வரவேற்றுப் பேசினார். மூத்த வழக்கறிஞர் திரு.பி.கோபாலகிருஷ்ணன், நந்தனார் கல்விக் கழக செயலாளர் திரு.டி.இராமமூர்த்தி, லயன்ஸ் கிளப் தலைவர். பேரா கே.வி.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திரு.வி.பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக உழவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, சகஜாநந்தா நற்பணி மன்றம், நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், தமிழக மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும், திரளான உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கத்தில் ”தமிழக வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜானந்தர் ஆகியோரின் சாதனைகள்” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் தோழர். கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
 “தன்னுடைய வரலாற்றை, தம்மிடையே தோன்றிய முன்னோடிப் போராளிகளின் வரலாற்றை அறிந்திடாத சமூகம் புதிய வரலாற்றை படைக்க முடியாது. அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தில் உரியவாறு கவனிக்கப்படாத சிந்தனையாளர்களான அயோத்திதாசப் பண்டிதர், சுவாமி சகஜானந்தா, ஆகிய இருவரின் வரலாற்றை, அவர்களது சாதனைகளை சிந்திப்பதற்கான இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் அயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி., எஸ்.டி.ஆசிரியர், அலுவலர், மாணவர், கூட்டமைப்பு தோழர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி வரும் முனைவர்.அ. அன்பாநந்தன் மற்றும் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் தோழர். ஏ.ஜி. மனோகரன் ஆகியோருக்கும், குழுமியுள்ள உள்ள சான்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வணக்கம்.
இந்த 2014- மே- 5 என்பது அயோத்திதாசப் பண்டிதரின் மறைவு நூற்றாண்டு தொடங்கும் நாளாகும். அயோத்தி தாசப் பண்டிதர் 1945-மே-20-ல் காத்தவராயன் என்ற இயற்பெயரோடு தோன்றி மாபெரும் தொண்டாற்றி 1914. மே. 5-ம் நாள் மறைந்தார்.
                இவருக்கு 45 ஆண்டுகளுக்கு பின்னால் 1890 ஜனவரி 27-ல் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுபாக்கம் கிராமத்தில் முனுசாமி என்ற இயற்பெயரோடு தோன்றிய சுவாமி சகஜானந்தா சிதம்பரத்தில் தங்கி மிகச் சிறந்த மக்கள் தொண்டாற்றி 1959 மே 1-ஆம் நாள் மறைந்தார்.
                இவர்களது சிந்தனையும், செயல்பாடும், அவற்றின் இன்றைய பொருத்தபாடும் இன்னும் தமிழ்ச் சமூகத்தில் சரிவர உணரப்படவில்லை.
                நடுவண் அமைச்சராக இருந்த தோழர். தலித் எழில்மலை அவர்களது முயற்சியால் தலித் சாகித்ய அகாடமி சார்பில் அயோத்திதாச எழுத்துகள் தொகுப்பாக வெளிவந்தன. அயோத்தி தாசரின் சிந்தனைகளை, எழுத்துக்களை தொகுத்ததில் திரு. ஞானஅலோசியஸ் அவர்களின் பங்கு மகத்தானது.
                இவை வெளியான பின்பே இவற்றை அறிந்துக் கொண்டு முன்னெடுக்கும் முயற்சிகள் அண்மைக் காலமாக வேகம் பெற்றுள்ளன.
                வரலாறு நெடுகிலும் ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் இனத்தின் போராட்டம் அனைத்து தளங்களிலும் நடந்துக் கொண்டுதான் வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 20-ஆம் நூற்றாண்டில் தமிழர்களிடையே மறுமலர்ச்சி சிந்தனையும், அவற்றை செயல்படுத்துவதற்கு மக்களைத் திரட்டும் இயக்கங்களும் நவீன வடிவத்தில் எழுச்சிப் பெற்றன.
20-ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கு தமிழ்த்தேசிய முயற்சிக்கும் 19-ம் நூற்றாண்டிலேயேஅடித்தளம் இடப்பட்டுவிட்டது. சமூக அடித்தளத்தில் கொந்தளிப்புகளும், புதிய சிந்தனைகளும், புதிய வகை முன்னெடுப்புகளும் தொடங்கிய காலம் அது.
தொடக்க முயற்சிகள் சமயத்துறை சார்ந்தே நடைபெற்றன. ஆரியத்திற்கும், ஐரோப்பியர்களின் கிறித்துவத்திற்கும் மாற்றான அடையாளங்கள் அப்போது முன் வைக்கப்பட்டன.
                இவற்றின் தொடக்கப் புள்ளியாக ஆறுமுக நாவலரை குறிப்பிடலாம். தமிழீழத்தில் தோன்றிய ஆறுமுகநாவலர் (1822-1879) சைவம் சார்ந்து தமிழ் அடையாளத்தை முன் வைத்தார். வேத மதம், சமஸ்கிருதம், பார்ப்பன மேலாண்மை, கிறித்துவ மத மாற்றம் ஆகிய அனைத்திற்கும் எதிராக சைவம் - தமிழ் - தமிழர் என்ற அடையாளத்தை நாவலர் முன்வைத்தார். ஆயினும் அவர் முன்வைத்த தமிழர் என்ற அடையாளம் பெரிதும் சைவ சமயத்தின் மேல் சாதி அடையாளமாகவே இருந்தது. தீண்டாமையை ஆறுமுக நாவலர் ஒரு பொருட்டாகவே கருதிப்பார்த்ததாக தெரியவில்லை.
                ஆயினும் இவர் காலத்திலேயே வாழ்ந்த வள்ளலார் இராமலிங்க அடிகள் (1823 -1874) தமிழர் அறம் சார்ந்து சமயத் துறைக்குளேயே ‘சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற மகத்தான மறுமலர்ச்சி சிந்தனையை முன் வைத்தார். சமத்துவத்தை வலியுறுத்தும் மாற்றுச் சிந்தனையாகவும், மாற்றுச் செயல்பாடாகவும், புதிதாக வரலாற்றில் அது தடம் பதித்தது. பசி தீர்க்கும் செயல்பாட்டோடு, வேத மத எதிர்ப்பும் இணைந்து சாதி வேறுபாடின்றி, ஆண், பெண் வேறுபாடின்றி சேர்ந்து உண்ணுதல் சேர்ந்து வழிபடுதல், சுடர் வழிவாடு, ஆகிய சமத்துவ மாற்றாக அது அமைந்தது.
                வள்ளலாரின் சன்மார்க்கம், மதசார்பற்ற தளத்தில் அதே நேரத்தில் உருவமற்ற வழிப்பாட்டோடு இணைந்து அடித்தட்டு மக்களின் உயர்வை வலியுறுத்திய மாற்று அடையாளமாக தமிழ், தமிழர் என்பதை முன்வைத்தது.
                இதன் பிறகு 1856-ல் இராபர்ட் கால்டுவெல் எழுதி வெளிட்ட திராவிட மொழிகள், அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் மொழியியல் சிந்தனைகளில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் அதிர்வை ஏற்படுத்திய நூலாகும். அதுவரை இந்திய மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று கருதப்பட்டு வந்த நிலையை இந்நூல் தகர்த்தது. தமிழும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்திய மொழிகளும் தனி வகையின என்ற உண்மையை அது எடுத்துக் கூறியது. அதே நேரம் திராவிடர் என்ற முகமூடி தமிழர்கள் மீது பூட்டப்படுவதற்கும், அது வழிவகுத்தது. கால்டுவெல்லுக்கு பிறகு வந்த பல சிந்தனையாளர்கள் தமிழர் என்பதை குறிக்க ஓர் மாற்றுச் சொல்லாக “திராவிடர்’’ என்பதை பயன்படுத்தி வந்ததைக் காணமுடியும்.
அச்சு ஊடகம் பரவலான காலமும் அதுதான். ஓலைச்சுவடியில் ஒருசிலரிடம் மட்டும் இருந்த பழைய தமிழ் இலக்கியங்கள் அச்சு வடிவில் நூல்களாக வெளிவரத் தொடங்கிய காலம் அது. தமிழரின் வளமான அறச்சிந்தனைகள் மக்களிடம் அப்போது பரவலாகத் தொடங்கியது இன்னொரு புறம் ஆங்கிலேயர்களின் நவீனக் கல்வி முறை பரவலாகத் தொடங்கியது.
இந்த பின்னணியில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான பல முயற்சிகள் நடந்தன. அவற்றுள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் சமத்துவ உரிமைகோரியபோராட்டங்களே முகாமையாக வெளிப்பட்டன.
பாவலர் வைரக்கண்ணு, வேலாயுதம். வெங்கடசாமி பண்டிதர். அரங்கையார்தாசப் பண்டிதர், மயிலைச்சின்னதம்பி, சங்குசித்தர். சிவலிங்கநயனார் போன்ற தலைவர்கள் அந்தந்தப் பகுதியில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்தச் சூழலில் அயோத்தி தாசப் பண்டிதரின் வருகை தமிழ்ச் சமூக வரலாற்றில் மிகப் பெரும் பாய்ச்சலைக் குறித்தது.
                சமயம் சார்ந்தும், நவீன் அரசியல் சார்ந்தும், ஓர் மாற்றுச் சிந்தனையை, மாற்று செயல்பாட்டை அயோத்தி தாசர் முன்வைத்தார். பின்னாளில் வந்த பல முற்போக்கு முயற்சிகளுக்கும் முன்னோடியாக அவர் திகழ்ந்தார்.
                பௌத்த சமயத்தை தழுவுவதுதான் சாதியிலிருந்து விடுதலைப் பெற ஒரே வழி என்று கூறியதிலும், அயோத்திதாசப் பண்டிதர் என்ற தனது ஆசிரியரின் பெயரையே அவர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக தனக்கு சூட்டிக்கொண்டதிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் ஓர் அரசியல் சக்தியாக ஒன்றுபட வேண்டும் என்று கருதியதிலும், அயோத்தி தாசர், அம்பேத்கருக்கு முன்னோடி ஆவார்.
                பூர்வ தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்று அறிவித்துக் கொண்டதிலும், தமிழ் எழுத்து சீர்திருத்தம் கோரியதிலும் அயோத்தி தாசர் பெரியாருக்கு முன்னோடி.
தமிழர்களின் மரபான அறம் சார்ந்து சிந்தித்து நவீன காலத்தின் தேவைக்கு ஏற்ப அதை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழர் என்றால் சாதி அற்றவர்கள் என்று அறிவித்ததில் தமிழ்த் தேசியர்களுக்கு அயோத்தி தாசர் முன்னோடி.
பார்ப்பனியத்தையும், ஆரியத்தையும். வர்ணசாதி ஒடுக்கு முறைகளையும், அதன் நவீன வடிவமாக இந்தியம் என்ற பெயரில் வரும் சுதேசியத்தையும் அயோத்தி தாசர் சாடினார். அதே நேரம் நமது வரலாற்றையும், பண்பாட்டையும், மறுக்கும் மேற்கத்திய வாதத்தில் மூழ்கிவிடவில்லை. தமிழர்களின் வளமான மரபை மறுத்து ஒதுக்காமல் அதன் அறம் சார்ந்த தன்மையை முன்னெடுத்தார். அதற்கு ‘தமிழ் பௌத்தம்” என்ற புது விளக்கம் அளித்தார். ஆரிய பார்ப்பனர்களை ‘வேஷப்பார்பனர்கள்” என்று வரையறுத்தார். வரலாற்றில் அதுவரையில் நடந்திராத ஓர் வித்தியாசமான முயற்சி அது.
சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழர்களின் அறச்சிந்தனைகள் அனைத்தையும் தமிழ் பௌத்தம் என்ற நெறிக்குள் அவர் அடக்கினார். தீபாவளி, கார்த்திகை, உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை தமிழ் பௌத்தம் என்ற வகையில் வேத மதத்திற்கு எதிரான முறையில், ஆரியத்தை விளக்கிய வகையில் விளக்கம் அளித்தார். திருக்குறள். திருவாசகம், ஆகியவற்றை திரிக்குறள், திரிவாசகம், என அழைத்து அவற்றை தமிழ் பௌத்த நூல்களாக வரையறுத்து விளக்கம் அளித்தார்.
இவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்க முடியாது என்ற போதிலும் தமிழர்களின் அறம் சார்ந்து சமத்துவ நெறியையும், தனிமனித ஒழுக்கங்களையும்முன்வைத்ததில் அயோத்தி தாசரின் முயற்சி ஓர் முன்னோடியான முயற்சியாகும்.
அயோத்தி தாசப் பண்டிதரும் சரி, சுவாமி சகஜானந்தா அவர்களும் சரி, தீண்டாமை தமிழ்ச் சமூகத்தில் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ஓட்டத்தில் ஆரியத்தின் ஊடுருவலால் இடையில் வந்த தீங்கு என்பதையும் தெளிவாக எடுத்து வைத்தனர்.
ஆப்பிரிக்க விடுதலைச் சிந்தனையில் ‘கடந்த காலமே எங்கள் எதிர்காலம்” (past is our future) என்ற முழக்கம் புகழ் வாய்ந்தது. கடந்த கால சமத்துவ சிந்தனையை நவீன காலத்திற்கு பொருத்தி மீட்டெடுக்கும் விடுதலைச் சிந்தனை மரபு அது.அயோத்தி தாசரும், சுவாமி சகஜானந்தாவும்,இந்த விடுதலைச் சிந்தனையை தமிழர்களின் எதிர்காலம் நோக்கி முன்வைத்தனர். ஆனால் அயோத்தி தாசர் தமிழ் பௌத்தம் என்ற வகையில் முன்வைத்தார். சகஜானந்தா வைணவம், சைவம் என்ற வழியில் முன்வைத்தார்.
அரசியல் தளத்தில் அயோத்தி தாசர் சுதேசியத்தையும், காங்கிரசுக் கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். சுவாமி சகஜானந்தா காங்கிரசுக் கட்சியிலேயே இருந்து சட்டமன்றத்தில் செயலாற்றினார்.
அயோத்தி தாசரின் ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், புத்தர் எனும் இரவு பகலற ஒளி ஆகிய நூல்கள் இந்தியாவின் வரலாற்றை பௌத்த நோக்கில் விளக்கியவை ஆகும்.
1907 ஜீன் 19 தொடங்கி, 1914 மே மாதத்தில் அவர் இறக்கும் வரையிலும் ”தமிழன்” என்ற வாரஏட்டை அயோத்தி தாசர் நடத்தினார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் தமிழன் ஏடு பெரும் சிந்தனைப் புயலை கிளப்பியது. சமயம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும், பல புதிய முன்னெடுப்புகளை ”தமிழன்’’ ஏடு முன்வைத்தது.
சுதேசி யார்? என்ற கேள்விக்கு அயோத்திதாசரின் விளக்கம் தெளிவானது, தமிழ்த் தேசியத்திற்கு முன்னோட்டமானது.
‘இத்தேசப் பூர்வ குடிகளும், இத்தேசத்தை சீர்பெறச் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே சுய தேசியவாதிகள் என்று கூறத் தகும். அவர்கள் யாரென்னில் தமிழ் பாஷையில் பிறந்து, தமிழ் பாஷையில் வளர்ந்து தமிழ் பாஷைக்கு உரியவர்களாக விளங்கும் பூர்வ திராவிட குடிகளே ஆகும்.” என்கிறார் அயோத்தி தாசர். (தமிழன் -30.10.1912)
தொடக்கத்தில் ‘ஒரு பைசா தமிழன்“ என்ற பெயரில் இந்த இதழை அயோத்தி தாசர் தொடங்கினார். இதில் ஒரு பைசா என்பது விலையை மட்டுமின்றி அவ்விதழ் எளிய மக்களுக்காக நடத்தப்படுகிறது என்பதையும் குறித்து நின்றது. பிறகு அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழன் என்ற பெயரிலேயே அந்த இதழ் வெளிவந்தது.
தேசியம் என்பது சமத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே நிலவ முடியும் என்பது அயோத்தி தாசரின் கருத்து. அதனால் தான்,
‘ஒற்றுமெய் பேதமும், சாதி பேதமும், சமயபேதமும் வேண்டும். நேஷ்னல் காங்கிரஸ் என்னும் பெயரும் வேண்டும் என்றால் பொருத்தமோ? ஒருகாலும் பொருந்தாவாம்”
என்று சாடுகிறார். (தமிழன், 14.09.1910)
இந்தியா அதே வடிவில் சுதந்திரம் பெற்றால் யாரிடம் சுயராஜ்யம் வழங்கப்படும் என்ற கேள்வியை முன்வைத்து அவர் அளிக்கும் விடை முக்கியமானது.
சுதந்திர இந்தியாவில் வெள்ளையர்கள் யாரிடம் ஆட்சியை ஒப்படைப்பார்கள்? மராட்டியரிடமா? கன்னடரிடமா? திராவிடரிடமா?என்று கேள்வி எழுப்பினார் அயோத்தி தாசர். அன்றைக்கு மராட்டிய பார்ப்பனரான திலகர் தலைமையில் வங்காள பார்ப்பனர்கள் அதிகம் பேர் தலைமை குழுவில் இருந்த கட்சியாக காங்கிரசு கட்சி இருந்தது என்பது கவனம்கொள்ளத்தக்கது. எந்த மொழி இனத்தாரிடம் ஆட்சி ஒப்படைக்கப்படுகிறதோ, அவர்களது மொழி - இன ஆதிக்கம் மேலோங்கும்: தமிழர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அயோத்திதாசரிடம் இருந்தது. அன்று ஒரு மாற்று அமைப்பாக வலுவான நிலையில் தமிழின அமைப்பு ஏதும் இல்லை. இச்சூழலில் இந்திய சுதந்திரம் வேண்டாம், வெள்ளைக்காரர்களே இருந்துவிட்டுப் போகட்டும் என்ற முடிவை அயோத்திதாசர் முன்வைத்தார்.
இது ஏற்கத்தக்கதல்ல என்ற போதிலும் இந்த முடிவுக்கு அவர் வந்த சூழலை நாம் புரிந்துகொள்ள முடியும்.
திராவிட மகாஜன சபை வழியாக ‘தீண்டப்படாத சாதியினர் இந்துக்கள் அல்லர். அவர்களை பூர்வ தமிழர் என்றே மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வெள்ளை அரசுக்கு அயோத்தி தாசர் முன்வைத்தார்.
இரட்டை மலை சீனிவாசன் அவர்களும், அயோத்தி தாசப் பண்டிதரும் இணைந்து 1891 டிசம்பரில் நீலகிரியில் நடத்திய மாநாட்டு தீர்மானம் வரலாற்றில் குறிக்கத்தகுந்த ஒன்றாகும். உள்ளாட்சிகளிலும், சிறைகளிலும் மனித மலம் அல்லும் பணியை தீண்டப்படாத சாதியார் செய்வதை தடைச் செய்ய வேண்டும் என்றும், கிராம அதிகாரிகள் உள்ளிட்டு அனைத்து மட்டத்திலும் தகுதியானதீண்டப்படாத சாதியினருக்கு முன்னுரிமை வழங்கி நியமிக்க வேண்டும் என்றும், உணவு கூடங்களில் கடைபிடிக்கும் தீண்டாமை நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் இன்னும் பல கோரிக்கைகளையம் அத்தீர்மானம் முன்வைத்தது. மாநாட்டின் சார்பில் அரசுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது.
அயோத்தி தாசர் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் விடுதலையோடு இணைந்த ஒன்றாக மதுவிலக்கையும் முன் வைத்தார். மதுவால் அதிகம் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட சமூகத்தவரே எனக் கண்டறிந்து கூறினார்.
சாதி அடையாளத்தை மறுத்து சமத்துவத்தின் அடையாளமாக பூர்வ தமிழர் என்ற மாற்று அடையாளத்தை முன் வைத்த அயோத்தி தாசரின் சிந்தனை வரலாற்றில் மிகப் பெரிய பாய்ச்சலை குறிக்கிறது. சாதி அடையாள மறுப்பு ஓர் மனிதனை அடையாளம் அற்றவராக மாற்றுவதில் போய் முடியக்கூடாது என்ற தெளிவு அவரிடம் இருந்தது. அடையாள மறுப்பானது மனிதர்களை உதிரிகளாக மாற்றிவிடும் என்ற சமூகவியல் தெளிவும் அயோத்தி தாசரிடம் இருந்தது.
மேற்கத்திய பகுத்தறிவு வாதத்தில் மூழ்கிப் போவது தமிழர்களை உதிரிகளாக மாற்றிவிடும் என்ற எச்சரிக்கை நாம் இன்றும் பெறவேண்டிய ஒன்றாகும்.
சுவாமி சகஜானந்தா
தமிழர்களின் மரபான அறச்சிந்தனைகளிருந்து தொடங்கினாலும் சுவாமி சகஜானந்தரின் வழி வேறுப்பட்ட ஒன்று. 17 வயதிலேயே துறவு வாழ்க்கை மேற்கொண்டு இல்லத்தை விட்டு வெளியேறி பல்வேறு சிந்தனையாளர்களிடம் உரையாடி தன்னுடைய சிந்தனையை வளர்த்துக் கொண்ட அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த கரபாத்திர சுவாமிகளை சந்தித்தது ஓர் திருப்பு முனையாக அமைந்தது. கரபாத்திர சுவாமிகள் முனுசாமி என்ற இவரது பெயரை சகஜானந்தா என மாற்றம் செய்து ஆன்மீகப் பணியில் ஈடுபடும் போதே சமூகப் பணியையும் செய்யுமாறு பணித்து, சிதம்பரம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். 1910-ல் அ. முருகேசன் பிள்ளை என்பார் சகஜானந்தரை சிதம்பரத்திற்கு அழைத்து வந்தார் என்று சொல்லுவோரும் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அவர்கள் கல்வி பெறுவது முதன்மைத் தேவை என்று உணர்ந்த சகஜானந்தா 1916-ல் நந்தனார் கல்விக் கழகம் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் சார்பில் 1917 நந்தனார் ஆண்கள் பள்ளியையும், 1920-இல் பெண்கள் பள்ளியையும் நிறுவினார். அது நிலைப்பெற்ற பிறகு அதனை இன்னும் விரிவாக்குவதற்கு 1938-ல் தாமே முன்வந்து அரசிடம் ஒப்படைத்தார். அறக்கட்டளையின் தலைவராகவும், கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளராகவும், அவரே தொடரவேண்டும் என்று அரசுக் கேட்டுக் கொண்டது.
1926 முதல் 1932 வரையிலும், 1936 முதல் 1947 வரையிலும் சென்னை மகாண மேலவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில் 1952 தேர்தலிலும், 1957 தேர்தலிலும் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக சிதம்பரம் தொகுதியிலிருந்து காங்கிரசு சார்பில் சுவாமி சகஜானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959-ல் அவர் மறையும் வரையிலும் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.
ஆலயம் என்பது அரிசனங்களுக்கே, தீண்டாமை ஒழிப்பு, சிதம்பர இரகசியம், தீண்டாமை என்பது சாஸ்திரம் அல்ல, நமது தொன்மை ஆகியவை அவர் எழுதிய நூல்களில் சில ஆகும்.
ஆலயம் என்பது அரிசனங்களுக்கே, என்பதற்கு சட்டமேலவையில் சகஜானந்தா முன்வைத்த வாதம் சிறப்பானது.
சைவத்திலும், வைணவத்திலும் சுவார்த்தம், பரார்த்தம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் உள்ளதை எடுத்துக்காட்டி சகஜானந்தா வாதாடினார்.
தங்கள் இல்லத்திலேயே இறை உருவங்களை வைத்து வழிபடுவது சுவார்த்தம் எனப்படும். அவ்வாறான வாய்ப்பற்ற சிறிய குடில்களில் வாழும் எளிய மக்கள் பொது இடத்தில் அமைக்கப்படும் வழிபாட்டு இடங்களில் வழிபாடு செய்வது பரார்த்தம் எனப்படும். வாய்ப்பற்ற எளிய மக்கள் வழிப்படுவதற்கான இடங்கள் தான் பொது ஆலயங்கள்.
எனவே ஆலயத்தில் வழிபடுவதற்கு அரிசனங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சகஜானந்தா எடுத்து வைத்த வாதம் ஆதிக்க சாதிகளில் உள்ள நேர்மையாளர்களையும் சிந்திக்க வைத்தது.
......இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் நிறைவு பெறும்......

0 கருத்துகள்:

மேற்பார்வைக் குழு அமைப்பது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க முன் நிபந்தனை அல்ல

மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியும், தமிழக அரசு தன்னிச்சையாக தண்ணீர் தேக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் செயலலிதா கூறியிருப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. தமிழக அரசு 142 அடி தண்ணீர் தேக்க எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செயலலிதாவின் இந்த அறிவிப்பு முல்லைப் பெரியாறு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை வெற்றுக் காகிதமாக மாற்றி விடும் ஆபத்து உள்ளது.
செயலலிதாவின் இந்த அறிவிப்பை தமிழக உழவர் முன்னணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக பொதுப் பணித்துறையினருக்கு ஆணையிட்டு மதகுகளை இறக்கி 142 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
தலைமை நீதிபதி லோடா தலைமையிலான உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் 2014 மே 7 அன்று அளித்துள்ள தீர்ப்பில் எந்த இடத்திலும் மூன்று நபர் மேற்பார்வைக் குழு அமைத்த பிறகுதான், அவர்கள் முன்னிலையில் தான் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படவில்லை.
இத்தீர்ப்பின் 221 ஆம் பத்தி “தமிழ்நாடு மாநிலம் அணையில் 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளவோ அணையின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவோ கேரள மாநில அரசு 2006ல் தான் பிறப்பித்த – இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று இத்தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள- சட்டத்தை பயன்படுத்தியோ அல்லது வேறு வகையிலோ குறுக்கிடவோ தடை ஏற்படுத்தவோ கூடாது என நிரந்தரத் தடை ஆணை பிறப்பிக்க படுகிறது” என்று தெளிவுபடக் கூறுகிறது. தமிழக அரசின் அதிகாரத்தையும், 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ள தமிழக அரசுக்கு உள்ள உரிமையையும் தங்கு தடை அற்றது என அறிவிக்கிறது. இதில் எந்த ஐயப்பாட்டுக்கும் இடம் இல்லை.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கினால் அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து எனக் கூறிய கேரள அரசின் வாதத்தை இத்தீர்ப்பு முற்றிலும் நிராகரித்தது. இது குறித்து 222ஆம் பத்தி கூறுவது கவனம் கொள்ளத் தக்கது. அது கூறுவதாவது.
“முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை மீண்டும் தேக்கினால் அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பது இல்லாத ஒன்றாகும். ஆயினும் கேரளாவின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக மூன்று நபர் மேற்பார்வைக் குழு ஒன்று அமைக்கப்படட்டும் ” என்பதாகும்.
அணையின் பாதுகாப்பு குறித்த கேரளாவின் கற்பனையான அச்சத்தை போக்குவதற்காவே மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப் படுகிறது என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு எந்த ஐயத்திற்கும் இடமின்றி தெளிவாகவே கூறுகிறது. 142 அடி தண்ணீர் தேக்க மூன்று நபர் குழு அமைக்கப்படுவதை முன் நிபந்தனையாக கூறவே இல்லை.
தீர்ப்பின் பத்தி 223 மேற்பார்வைக் குழுவின் அதிகாரம் மற்றும் பணிகள் குறித்து கீழ்வருமாறுக் கூறுகிறது.
i. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தேக்கிக் கொள்வதை இக்குழு மேற்பார்வையிடும் .
ii. குறிப்பாக பருவமழை தொடங்குவதற்கு முன்பும், பருவமழை காலத்திலும் இக்குழு அவ்வபோது அணையைப் பார்வையிட்டு அதன் பாதுகாப்புத் தன்மையை கவனித்து வரும். அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். அப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு செயல் படுத்த வேண்டும்.
மேற்கண்ட இரு பத்திகளையும், மேற் சொன்ன பத்தி 222ஐயும் இணைத்து படித்தால் தீர்ப்பின் முழுப் பொருளும் தெளிவாக விளங்கும்.
142 அடி தண்ணீர் தேக்குவதை மேற்பார்வைக்குழு மேற்பார்வையிடும் என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் தான் மதகுகளை இறக்கி 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற வாசகமோ அல்லது அந்த பொருள் வரும்படியான வாசகமோ இத்தீர்ப்பில் எந்த இடத்திலும் இல்லை.
142 அடி தண்ணீரை அணையில் தேக்கிய பிறகு அணையின் நிலையை பார்வையிடுவதற்குதான் இக்குழு அமைக்கப்படுகிறதே தவிர 142 அடி தண்ணீர் தேக்கும் செயலை பார்வையிடும் அமைப்பு அல்ல இது.
தீர்ப்பு இவ்வளவு தெளிவாக இருக்கும்போது நடுவண் அரசும், கேரள அரசும் அதிகாரியை நியமித்தப் பின், மூன்று நபர் மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்ட பிறகு, அதன் முன்னிலையில் தான் அணையின் மதகுகளை இறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுவதாக முதலமைச்சர் செயலலிதா எதை வைத்துக் கூறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது.
தீர்ப்பில் சொல்லப்படாத நிபந்தனையை இருப்பதாக கருதிக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கும் பணியை இனியும் தள்ளிப் போடுவது மீட்க முடியாத பேரிழப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்திவிடும். எனவே இனி ஒரு நிமிடமும் காலதாமதம் செய்யாமல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க ஆணையிடுமாறும், அணையின் பாதுகாப்புப் பணியை மீண்டும் தமிழக காவல்துறையிடம் மீட்டுக் கொள்ளுமாறும் தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்களை தமிழக உழவர் முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- கி.வெங்கட்ராமன், ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி

0 கருத்துகள்:

ஓரினச் சேர்க்கை குற்றச் செயலா ? - தோழர் கி.வெங்கட்ராமன்

ஓரினச்சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.சுரேஷ் குமார் கவுசல் - எதிர்- நாஸ் அறக்கட்டளை என்ற வழக்கில் 2013 டிசம்பர் 11 அன்று எஸ்.ஜெ. முகோ பாத்தியாயா, ஜி. எஸ்.சிங்க்வி ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற ஆயம் அளித்த தீர்ப்பையொட்டியே இந்த விவாதம் எழுந்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 குறித்த தீர்ப்பு இது.
இந்தியத் தண்டனைச் சட்டம் 377 “இயற்கைக்கு விரோதமானக் குற்றங்கள்’’ குறித்து பேசுகிறது. “இயற் கையின் ஒழுங்கிற்கு எதிராக எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ தன் விருப்பப்படி உடலுறவுக் கொள்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் தண் டத்தொகையும் கட்டுவது ஆகிய தண்டனைக்கு உட்பட வேண்டும்.’’
இங்கு “உடலுறவு’’ என்பதற்கு உறுப்பு உள் நுழைப்பு என்று இச் சட்டம் விளக்கம் அளிக்கிறது.ஆணும் ஆணும் கொள்ளும் உடலுறவு ஆகிய ஓரினச்சேர்க்கையும் திருநங்கைகளுடன் கொள்ளும் உடலுறவும் இயற்கையின் ஒழுங்குக்கு விரோதமானது என வகைப்படுத்தப்பட்டு 377இன் கீழ் தண்டனைக் குரிய குற்றமாக அறிவிக்கப்படுகின்றன.
இச்சட்டவிதி வெள்ளையர் ஆட்சி நடந்த 1860 இல் தொடங்கி நீண்ட நாள் செயலில் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இது குறித்த விவாதங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
‘ஓரினச் சேர்க்கை என்பது சமூக ஒழுங்கை கெடுக்கக் கூடிய தீய பழக்கம், பிறரைப் பார்த்து இளையோரும் இப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டால் சமூக ஒழுங்கீனம் பரவும்’ என்ற கருத்தும் ‘இறைவனின் படைப்புக்கு எதிரான கூடா ஒழுக்கம்’ என்ற கருத்தும் ‘மத ஒழுக்கத்திற்கு எதிரானது’ என்ற கருத்தும் மிகப் பெரும்பாலான மக்களிடையே நிலவுகிறது. அதன் சட்ட வெளிப்பாடே 377.
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அருவறுப்பாக பார்க்கப்படுவதும் நவீனகால உலகெங்கும் நிலவுகிற சூழல் தான்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் கூட ஓரினச்சேர்க்கை 1980கள் வரை தண்டனைக்குரிய குற்றமாக பரவலாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தியா விலும், தமிழகத்திலும் இம்மாதிரியான கருத்து நிலவுவதும், அது குறித்து கேள்வி எழுப்பப் படும்போதுபெரும் விவாதம் எழுவதும் இயல்பானதே!
1990 களின் பிற்பகுதிகளில் விதி 377 குறித்து விவாதங்கள் எழுந்தன. மும்பை தில்லி. சென்னை போன்ற இடங்களில் ஓரினச் சேர்க்கையா ளர்களும் திருநங்கைகளும் காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து சில மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் இது குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டன.
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரப்பலிலும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொண்டாற்றுவதிலும் ஈடு பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்கள் செயல்பாட்டுக்கு இந்த விதி 377 பெரும் தடையாக இருப்பதாக குரல் எழுப்பின. இயல்பான ஆண் - பெண் உறவில் இருப்பவர்களை விட ஓரினச் சேர்க்கையாளர்களிடம் 8 மடங்கு எயிட்ஸ் நோய் பரவியிருக்கிறது என்று இந்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு கணக்கீடு வெளியிட்டது.
ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதால் அவர்கள் தங்களது இந்த பாலுறவு பழக்கத்தை வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள் எனவே அவர்களிடையே எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது என்று தேசிய எய்ட்ஸ் கட்பாட்டு அமைப்பும் கூறியது.
இந்நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் எச்.ஐவி. கிருமி தொற்றுக்கு அதிகம் வாய்ப்புள்ள ஓரினச் சேர்க் கையாளரிடையே விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வந்த தில்லியைச் சேர்ந்த நாஸ் அறக்கட்டளை என்ற அமைப்பு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 யை நீக்க வேண்டும் என வலியுறுத்தி 2001 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதி மன் றத்தில் வழக்குத் தொடுத்தது. (வழக்கு எண்: 7455/2001)
இந்திய அரசமைப்புச் சட்டத் தின் உறுப்பு 21 வழங்கும் கண்ணி யமான உயிர் வாழும் உரிமையை யும், உறுப்பு 19 வழங்கும் அடிப்படை உரிமையையும் உறுப்பு 14 கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையையும் இந்தியத் தண்டனைச் சட்டம் 377 மீறுகிறது. என்பதே நாஸ் அறக்கட்டளையின் முதன்மையான வாதம்.
குறிப்பாக ஆண் - ஆண் உறவு கொள்ளும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே கூடுதல் காவல்துறை வேட்டைக்கு ஆளாகிறார்கள். எனக் குறிப்பிட்டு அதற்கான நாடு தழுவிய புள்ளி விவரங்களையும் நாஸ் அறக்கட்டளை எடுத்து வைத்தது.
இது குறித்து விவாதித்த தில்லி பிரதேச உயர்நீதிமன்றத்தில் 377 குறித்து இதற்கு முன்னால் வழங்கப் பட்ட பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வைக்கப்பட்டன. இத் தீர்ப்புகளை நோக்கினால் கணவன் மனைவி இடையே கூட ஆண் - பெண் உறுப்புகளுக்கிடையே நடைபெறும் உறவுகளைதவிர பிற வகை உறவுகள் கூட குற்றச் செயலாக அறிவிக் கப் பட்டிருப்பது தெரிய வரும்.
“இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’’ என்ற வரையறைப் பற்றிய உடலியல், உளவியல், அறிவுக் குழப் பங்களே 377 குறித்து நீதிமன்றங் களின் தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்திருப்பது தெரியும்.
ஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற தீயப் பழக்கம், பண்பாட்டுச் சீரழிவு என்ற புரிதலே இதற்கு அடிப்படை யாக அமைகிறது.
எனவே இச்சிக்கல் குறித்து முடிவு செய்ய உடல் கூறு தொடர் பான மற்றும் உளவியல் தொடர்பான மருத்துவ அறிவு தேவைப் படுகிறது.
ஓரினச்சேர்க்கை பழக்கம் என்பது ஒரு வகை உளவியல் கோளாறு என்பதே மருத்துவ உலகில் மிக நீண்ட காலமாக இருந்த வந்த நம்பிக்கை எனவே அவர்களுக்கு உளவியல் மருத்துவம் செய்வது என்ற முயற்சியே இருந்தது.
இது தொடர்ந்து தோல்வியையே சந்தித்ததால் இது குறித்து ஆய்வுகள் பல முனைகளிலும் பரவியது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயலாக வரையறுக்கப் பட்டதால் இது குறித்த வழக்குகள் நீதி மன்றங்களுக்கு வரும் போதெல்லாம் இச்சிக்கல் குறித்த மருத்துவ அறிவு நீதி மன்றங்களுக்கும் தேவைப்பட்டது. இது தொடர் பான ஆய்வை விரிவுப் படுத்தியதில் இவ்வாறான வழக்குகளும் பங்களிப்பு செய்தன.
தொடர்ந்த ஆய்வுகளின் விளை வாக ஓரினச் சேர்க்கை என்பது ஒரு சிறிதளவே உளவியல் சார்ந்த சிக்கல் என்பதும் அது பெரிதும் உடலியல் சார்ந்த பிரச்சினையே என்பதும் கண்டறியப்பட்டது.
குறிப்பாக புரூஸ் பேக்மில் (Bruce Bagemihl) என்ற அமெரிக்க மருத்துவர் மிருகங்களிடம் உள்ள பாலுறவு பழக்கங்களை ஆய்வு செய்து “உயிரியல் எழுச்சி; மிருகங் களின் ஓரின உறவும் இயற்கையின் பன்மையும்’’ (Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity) என்ற தலைப்பிலான நூல் ஓரினச் சேர்க்கை குறித்த மருத்துவ அறிவில் ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
காட்டு விலங்குகளிடமும் பறவைகள் மற்றும் புழு இனங்களிடமும், வீட்டு விலங்களிடமும் பாலியல் உறவு முறை குறித்து விரிவாக ஆய்வு செய்த புரூஸ் பேக்மில் ஏறத்தாழ 1500 விலங்கு மற்றும் பறவைஇனங்களிடம் சிறு பான்மை அளவில் ஓரின பாலுறவு நிகழ்வ தாகக் கண்டறிந்தார். பட விளக்கங் களுடன் கொணர்ந்த தனது ஆய்வு நூலில் ஓரினச் சேர்க்கை என்பது எல்லா உயிரினங்களிடமும் சிறு பான்மை எண்ணிக்கையினரி டையே நிகழக்கூடிய ஒரு விலகல் (Deviation) என உறுதிபடக் கூறினார்.
இந்த ஆய்வை அடுத்து மனிதர் களிடையே ஓரினைச் சேர்க்கைப் பழக்கம் இருப்பது குறித்த உடலியல் ஆய்வுகள் விரிந்த அளவில் மேற் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு வரிசையில் முஸ்டான்கி மற்றும் பிறர் (Mustanki et al) 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை முகாமையானது.
மரபு வழியாக குரோமோசோம் கள் மூலம் ஒரு தலைமுறையி லிருந்து அடுத்தத் தலைமுறைக்கு உடலியல் வழியில் ஓரின ஈர்ப்பு என்ற பாலியல் பண்பு கடத்தப்படு கிறது என்று இந்த ஆய்வு உரை வலியுறுத்தியது. தாய் வழியாக சேய்க்கு வரும் குரோமோசோம்களில் Xq28 என்ற குரோமோ சோமில் ஏற்படும் பிறழ்ச்சியே ஓரின ஈர்ப்பை உடலியல் வழியில் உருவாக்குகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறியது. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உள்ள இளைஞர்களின் தாய் மாமன்களிடம் இப் பழக்கம் இருந்ததை இதற்குச் சான் றாக எடுத்துக் கூறியது.
மனித மரபியல் குறித்த அமெரிக்கக் கழகம் (American Society of Human Genetics) பல அறிவியலாளர் களை களமிறக்கி இன்னும் விரிவாக பல முனை ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு முஸ்டான்கி ஆய்வு முடிவை உறுதி செய்ததோடு ஓரின ஈர்ப்புக்கான வேறு காரணங்களையும் எடுத்துக் கூறியது. ஆண்களிடம் சுரக்கும் பாலியல் நொதியான ஆன்ட்ரோஜன், பெண்களிடம் சுரக்கும் பாலியல் நொதி யான எஸ்ட்ரோஜன் ஆகியவற்றில் ஏற்படும் அளவு மாறுபாடு காரண மாகவும், இவ்வகை பாலியல் விலகல் ஏற்படுவதாக இந்த ஆய்வு எடுத்துக் கூறியது.
சூழலியல் காரணங்களும் மேற்கண்ட பாலியல் நொதி சுரத்தலில் தலையிட்டு ஓரின ஈர்ப்புக்கு காரணமாக அமைக்கிறது. என்றும் இந்த ஆய்வு கூறியது. மீத்தைல் மெர்குரி என்ற வேதிப்பொருளின் அளவு சுற்றுச்சூழலில் அதிகமானால் அது ஆன்ட் ரோஜன் மற்றும் எஸ்ட் ரோஜன் சுரத்தலின் மாறுபாட்டை ஏற்படுத்தி ஓரின ஈர்ப்பை விளைவிக்கிறது. என்பதை ஒருவகை அமெரிக்க செங்கால் நாரை பறவையை இவ்வாய்வுக்கு உட்படுத்தி தங்களது ஆய்வு முடிவை மெய்ப்பித் தனர்.
ஒருபால் மிருகங்களை நீண்ட நாள் ஒரிடத்தில் அடைத்து வைத் தால் அவற்றிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறுவதையும், நீண்டகால சிறையாளிகளிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறு வதையும், “தற்காலிக பாலுறவு விலகல்’’ என்பதாக அமெரிக்க ஆய்வுக் கழகத்தினர் வகைப்படுத்தினர்.
உளவியல் காரணங்கள் பாலியல் உறவில் ஏற்படும் விலகல் பண் பிற்கு மிகச் சிறிய அளவிலேயே பங்காற்றுகின்றன. என்பதையும் இந்த ஆய்வறிக்கை உறுதிபடக் கூறியது.
மேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஓரினச் சேர்க்கை என்பது பெரிதும் மனித உடலியலில் ஏற்படும் மாற்றங்களால் பாலுறவில் விளையும் ஒரு விலகல் பண்பு என்பதைத் தெளிவுப்படுத்தும்.
மேற்கண்ட ஆய்வுகளில் சிலவற்றை எடுத்துக்காட்டி ஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற அல்லது வேண்டுமென்ற செய்கிற தீயப் பழக்கம் அல்ல. என்று நாஸ் அறக்கட்டளை தில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டது. தொடர்புடைய மனிதர்களின் மன விருப்பங்களைச் சாராமல் உடலியல் காரணங்களால் ஏற்படும் பால் உறவு வில கலை குற்றமாகக் கருதி தண்டிப் பதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையாளர்களை பரிவோடு பார்த்து அவர்களது அடிப்படை மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்டது. இந்திய சட்ட ஆணையத்தின் 172 ஆவது அறிக்கை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து இந்த விதி 377 ஐ நீக்க வேண்டுமென்று பரிந்துரைத் திருப்பதையும் நாஸ் அறக் கட்டளை எடுத்துக் கூறியது.
இவற்றை ஆய்வு செய்த தில்லி உயர்நீதிமன்றம் 2009 ஜூலை 2அன்று அளித்தத் தீர்ப்பில் “வயது வந்தவர்கள் தனிமையில் தங்கள் இரு தரப்பு விருப்பத்தின் அடிப் படையில் மேற்கொள்ளும் பாலு றவை குற்றச் செயல் என்று வரை யறுக்கும் இந்திய தண்டனைச் சட்டவிதி 377இன் பகுதியை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உயிர்வாழும் உரிமை, சம உரிமைஆகியவற்றிற்கு எதிரானது என அறிவிக்கிறோம்’’ என்று கூறியது    .
அதே நேரம் இன்னொரு வரின் விருப்பமின்றி செய்யப்படும் பாலியல் செயலையும், 18 வயதிற்கு கீழ் உள்ளோரிடம் மேற்கொள்ளும் உடலுறவையும் குற்றச்செயல் என வரையறுக்கும் விதி 377 பகுதி தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அத்தீர்ப்புக் கூறியது.
இதற்கு எதிராக தமிழகத்திலிருந்து தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டு இந்தியா முழுவ திலுமிருந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மேல் முறையீடு செய்தனர்.
இவ்வழக்கில் 11.12.2013 இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதல்ல. இது தொடர்பாக தில்லி உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி நிற்கக் கூடியதல்ல” என்று கூறியது.
ஆயினும் பிரிவு 377 ஐ முழுவ துமாக நீக்குவதற்கோ, திருத்துவ தற்கோ நாடாளு மன்றத்திற்கு முழு உரிமை உண்டு என்பதை உறுதி பட தெரிவிப்பதாகவும் உச்சநீதி மன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பு வந்த உடனேயே இராகுல் காந்தி இத்தீர்ப்பை எதிர்த்து தமது அரசு மீளாய்வு மனு அளிக்கும் என அறிவித்தார். அதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக வரையறுக்கும் விதி 377 ஐ இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
ஓரினச் சேர்க்கை என்பது தீயப் பழக்கமல்ல என்பதும், ஒருவரைப் பார்த்து மற்றவர் கெட்டுப்போகும் உளவியல் சிக்கல் அல்ல என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கை என்பது பாலுறவுப் பண்பில் உடலியல் காரணமாக ஏற்படும் ஒரு விலகல் ஆகும். இது பெரிதும் உளவியல் பிரச்சினை அல்ல. உளவியல் ஒழுகலாறும் அல்ல. எனவே இதை ஒரு பண்பாட்டுச் சிதைவு என்று வகைப் படுத்தி விட முடியாது.
இவ்வாறான மனிதர்களை மற்றவர்களைப் போல இயல்பான மனிதர்களாகவே சமூகம் ஏற்க வேண்டும் அனைத்து கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சொத்து உரிமையிலும் பாகுபாடு காட்டாமல் அவர்களை நடத்த வேண்டும். ஒருபால் உறவில் ஈடுபட்டு குடும்பமாக வாழ விரும்புபவர்களை சட்டப்படி பதிவு திருமணத்தில் அனுமதித்து சம வாழ்வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 
(தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)

0 கருத்துகள்:

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை
இது குறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணையில்  142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும் கேரள அரசு  முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றி இடிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது எனவும், உச்ச நீதிமன்றம் இன்று (7.05.2014) அளித்துள்ள தீர்ப்பை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.
உடனடியாக முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை 142 அடி நீர் தேக்கும் வகையில் இறக்குமாறு தமிழக பொதுப்பணித்துறைக்கு ஆணையிடுமாறு தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி  வலியுறுத்துகிறது, இல்லையேல் 2006 ல் தீர்ப்பு வந்தபோது செயல்படாததால் ஏற்பட்ட இழப்பை மீண்டும் சந்திக்க நேரிடும்.
ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அணையின் மதகுகளை இறக்கி 142 அடி நீர் தேக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

அரசியல் அழுத்தத்தில் நசுங்கும் நீதி! சதாசிவம் அமர்வின் தவறான தீர்ப்பு! - தோழர் கி.வெங்கட்ராமன்

நீதித் துறையின் தற்சார்புத் தன்மையே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் அமைந்த உச்ச நீதிமன்ற அமர்வு 25.4.2014 அன்று அளித்துள்ள தீர்ப்பு இக் கேள்வியை மக்கள் மனதில் எழுப்புகிறது.
ஒரு வழக்கில் அரசமைப்புச் சட்டம் சார்ந்தோ, பல்வேறு சாதாரண சட்டப் பிரிவுகள் குறித்தோ அடிப்படையான கேள்வி எழுமானால் அவ்வழக்கை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி வைப்பது இயல்பாக நிகழக் கூடியது தான். ஆனால், ஏழுதமிழர் விடுதலை தொடர்பான வழக்கை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டதில் நிகழ்ந்த காலதாமதம் தான் தமிழர்களிடையே ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராசீவ்காந்தி கொலைவழக்கில் 22 ஆண்டுகளையும் தாண்டி சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக கடந்த 2014 பிப்ரவரி 19 அன்று தமிழக முதலமைச்சர் செயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழக அரசின் இம் முடிவை எதிர்த்து இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அவசர அவரசரமாக அணுகியது. உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஏழுதமிழர் விடுதலை ஆணைக்கு 20.2.2014 அன்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்திய அரசின் எதிர்ப்பு வழக்கில் இருதரப்பு விவாதங்களும் முடிந்து கடந்த மார்ச் 27,2014 அன்று நாள் குறிப்பிடப்படாமல் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏறத்தாழ ஒருமாதக் காலம் ஆகிவிட்ட சூழலில் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 18.04.2014 அன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த தலைமை நீதிபதி சதாசிவம் செய்தியாளர்களிடம் கூறிய கருத்தும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோடி காட்டுவதாகவே இருந்தது.
அதனால்தான் தி.மு.க தலைவர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிவதற்கு முன்னால் ஏழுதமிழர் விடுதலைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால் எங்கே அது செயலலிதாவுக்கு கூடுதல் வாக்கு வாங்கித் தந்துவிடுமோ என்ற பதைப்பு அவருக்கு. யார் செத்தாலும் வாழ்ந்தாலும் கவலை இல்லை தமது பதவி அரசியலுக்கு எந்த இடையூறும் வந்து விடக் கூடாது என்று கருதியதால் நீதிபதி சதாசிவம் கருத்துக்கு கடும் கண்டனத்தை கருணாநிதி தெரிவித்தார்.
கருணாநிதியின் கண்டனம் உள்ளிட்ட அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகிவிட்டதோ என ஐயப்பட அடிப்படைகள் உள்ளன.
அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்புவதுதான் முடிவு என்றால் அதனை முன்னமேயே தெரிவித்திருக்க முடியும். இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. தலைமை நீதிபதி சதாசிவம் 26.4.2014 அன்று ஓய்வுபெறுகிறார். அதற்கு முன்பே தீர்ப்பு வெளியாகும் என்று அவர் கூறியதே இறுதித் தீர்ப்பு வரும் என்ற பொருளில் தான் புரிந்துகொள்ளப்பட்டது.
இறுதித் தீர்ப்பு வழங்குவதாக இருந்து அரசியல் அழுத்தங்கள் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு பிரச்சினையை தன் கையிலிருந்து நீதிபதி சதாசிவம் அமர்வு தள்ளிவிட்டுவிட்டதோ என்ற ஐயம் இந்த காலதாமதத்தினால் எழுகிறது. இது நீதிமன்றத்தின் தற்சார்புத் தன்மை குறித்த அவ நம்பிக்கையையே ஏற்படுத்தும்.
அரசமைப்புச் சட்ட ஆயத்தின் விசாரணைக்கு ஏழு சட்டக் கேள்விகளை இவ்வழக்கு தொடர்பாக பி.சதாசிவம், ரஞ்சன் கோகோஸ், ஏ.விரமணா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்வைத்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43 -ன் கீழ் வாழ்நாள் தண்டனை என்பது சிறையாளியின் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதை குறிக்கிறதா? வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும் சிறையாளி அத் தண்டனையை ரத்து செய்யுமாறு கோர உரிமை உண்டா? சில குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க சிறப்புப் பிரிவை உருவாக்க முடியுமா? வாழ்நாள் தண்டனை என்பது 14 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதா? மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்த பிறகு அவர்களுடைய சிறைவாசத்தை இரத்து செய்ய முடியுமா?
‘தொடர்புடைய அரசாங்கம்’ என்ற வகையில் சிறையாளியின் விடுதலையை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா?
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 432 (7) மாநில அரசின் அதிகாரத்தை விலக்கி வைத்து மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறதா?
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் விடுதலையை தீர்மானிக்க வேண்டியது மத்திய அரசா? மாநில அரசா?
ஒருவழக்கில் இரண்டு ‘தொடர்புடைய அரசாங்கங்கள்’ இருக்க முடியுமா?
மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாகவே முன்வந்து விடுதலையை அறிவிக்க முடியுமா?
குற்றவியல் சட்டத்தில் ’ஆலோசனை’ என்று கூறப்பட்டுள்ளதன் பொருள் ‘ ஒப்புதல்’ என்று எடுத்துக் கொள்ளமுடியுமா?
மேற்கண்ட ஏழு கேள்விகள் அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
இக் கேள்விகளை உற்று நோக்கினால் இவ்வழக்கில் இந்திய அரசும் இவ்வழக்கில் இணைந்துகொண்ட வாதிகளான அமெரிக்கை நாராயணன் போன்றவர்களும் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் அப்படியே ஏற்கப்பட்டு அரசமைப்புச் சட்ட ஆயத்தின் முன்னால் வைக்கப்படுகிறது என்பது தெளிவாகும். இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட எந்தக் கருத்தும் ஏற்கப்படவில்லை என்பதும் புரியும்.
இக்கேள்விகளில் ஏழாவது கேள்வியான ‘ஆலோசனை’ என்பது ‘ஒப்புதலை’ குறிக்குமா? என்ற கேள்வியைத் தவிர மற்றவையெல்லாம் ஒன்று இதற்கு முன்னர் இருந்த அரசமைப்பு ஆயத்தால் தெளிவுபடுத்தப்பட்டவை. அல்லது சட்டங்களிலேயே குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பவை ஆகும். தேவை இல்லாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிக்கல் பெரிதாக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 435 -ன் படி ஆலோசனை என்பது ஒப்புதலை குறிக்குமா இல்லையா என்பது குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருக்கிற பல தீர்ப்புரைகளை வைத்து சதாசிவம் அமர்வே முடிவு கூறியிருக்க முடியும். மாறாக மத்திய அரசுத் தரப்பு எழுப்பிய அத்துணை வினாக்களையும் அப்படியே ஏற்று அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பிவிட்டது.
முன் வைக்கப்பட்ட கேள்விகளில் 2,3,4,5,7 ஆகியவை ஒரே கேள்வியின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும். ஆனால் இவை வெவ்வேறு மனுதாரர்களால் வெவ்வேறு வடிவத்தில் முன்வைக்கப்பட்டதால் அப்படி அப்படியே ஏற்கப்பட்டு தனித் தனி கேள்விகள் போல் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவே இத் தீர்ப்பு அவரச அவசரமான இறுதி நேர முடிவு என்பதற்கு சான்றாக விளங்குகின்றது.
இப்பட்டியலில் 1 ஆம் எண்ணுள்ள கேள்வி தொகுப்புக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயங்கள் முடிவு சொல்லிவிட்டன. இவை புதிய கேள்விகள் அல்ல. விடையளிக்கப்பட்ட பழைய கேள்விகளே ஆகும்.
1961 ஆண்டிலேயே கோபால் கோட்சே – எதிர் - மகாராஷ்ட்டிரா மாநில அரசு (1961 ,3 SCR,440)வழக்கில் வாழ்நாள் சிறைபற்றிய வரையறுப்பும் தண்டனை குறைப்பு குறித்த அரசாங்கத்தின் அதிகாரம் பற்றியும், அந்த அதிகாரம் எத்தனை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு செயலுக்கு வரும் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுவிட்டன. காந்தியார் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயின் வழக்கு இது. இத் தீர்ப்பு அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பாகும். இவ்வழக்கில் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தனது வாழ்நாள் தண்டனை முடிவுக்கு வந்துவிட்டதாக கோபால் கோட்சே வாதாடினார்.
இவ்வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43ன் கீழ் வாழ்நாள் சிறை என்பது அச்சிறையாளியின் மீதியுளள் வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று வரையறுத்தது. அதே நேரம் தொடர்புடைய அரசாங்கத்தின் தண்டனை குறைப்பு அதிகாரம் தற்சார்பானது என்று விளக்கம் அளித்தது.
குற்றவியல் சட்டம் 432 ன் படி (அன்றைய 407 ன் படி) தொடர்புடைய அரசாங்கம் எந்த நேரத்திலும் அந்த வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறியது. அதன் அடிப்படையிலேயே காந்தி கொலை வழக்கின் வாழ்நாள் சிறையாளியான கோபால் கோட்சேயை மராட்டிய மாநில அரசு அவரது சிறைவாசம் 15 ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே 1964-ல் விடுதலை செய்தது. கோபால் கோட்சே தானும் தனது சகோதரர் வினாயக் ராம் கோட்சேயும் இணைந்து காந்தியை கொன்றதை மறுக்கவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. அவரது வாக்குமூலத்தை “ நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்றத் தலைப்பில் நூலாகவே வெளியிட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தொடரந்து மதவெறி நடவடிக்கைகளில் இறங்கினார். கலவரங்களைத் தூண்டினார்.
அதன் காரணமாக 1965 -லேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DIR) ஓராண்டு சிறையில் அடைக்கப்படார். இது வாழ்நாள் சிறையாளிகளை தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்வது குறித்து பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது. இந்தப் பின்னணியில் இந்திய குற்றவியல் சட்டத்தில் 433 (A) என்றப் பிரிவு சேர்க்கப்பட்டது.
ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று வாழ்நாள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்றவர்கள் அல்லது மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் சிறைதண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகள் கழிக்கும் முன்பாக விடுதலை கேட்டு மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்பதே 434 (A) விதிக்கும் நிபந்தனை ஆகும்.
இச் சட்டத்திருத்தம் வந்ததற்குப் பிறகு பச்சன் சிங் வழக்கில் 433 (A) குறித்த விவாதம் எழுந்தது.
அதில் தண்டனை குறைப்பை எப்படி கணக்கிடுவது என்று விவாதிக்கப்பட்டது. ஏனெனில், கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கும் போது அவரது சிறை நடத்தைக்காக அவ்வப்போது வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பு காலம் மொத்தம் 6 ஆண்டுகள் வந்தது. வாழ்நாள் சிறை என்பதற்கு 20 ஆண்டுகள் என்ற வரையறுப்பை வைத்துக் கொண்டு 6 ஆண்டுகள் கழிவு வழங்கி மராட்டிய மாநில அரசு கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கியது.
இந்தக் கணக்கீடு பச்சன் சிங் வழக்கில் ஒரு சிக்கலாக விவாதிக்கப்பட்டது ஏனெனில் கோபால் கோட்சே - எதிர் - மராட்டிய மாநில அரசு வழக்கில் வாழ்நாள் சிறை என்பதற்கு சிறையாளியின் வாழ்நாள் முழுவதும் என்ற வரையறுப்பு வழங்கப்பட்டது. அதே நேரம் அரசின் தண்டனை குறைப்பு பற்றியும் பேசப்பட்டது.
பச்சன் சிங் தீர்ப்புக்கு பிறகு 433 (A) குறித்து வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு முடிவுகள் நீதிமன்றத் தீர்ப்புகளில் வந்தன.
இச் சூழலில் மாரூராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குறித்த அரசமைப்புச் சட்டத்தின் கூறு 72 குறித்தும் 161 குறித்தும் தண்டனை குறைப்பு குறித்த குற்றவியல் சட்டப் பிரிவு 432 குறித்தும் 433 (A) விதிக்கும் வரம்பு குறித்தும், வாழ்நாள் தண்டனை குறித்தும் மிக விரிவாக பல கோணங்களில் ஆய்வு செய்தது. பல வினாக்களுக்கு விடையளித்ததால் உச்ச நீதிமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த தீர்ப்புகளில் ஒன்றாக அது அமைந்தது.
இத் தீர்ப்பும் வாழ்நாள் சிறைத்தண்டனை என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 53 -வுடன் இணைந்த பிரிவு 43ன் கீழ் சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் என்று கூறியது. அதே நேரம் 433 (A) -ன் வரம்புக்குட்பட்டு தொடர்புடைய அரசு 432ன் கீழ் தண்டனை குறைப்பு அளிப்பதை நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட்டதாகக் கொள்ள முடியாது எனக் கூறியது. பிரிவு 432 ன் படி ஒரு வாழ்நாள் சிறையாளிக்கு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஓர் கணக்கீட்டுக்காக உச்ச பட்ச சிறைக்காலத்தை 20 ஆண்டுகள் என கொள்ளலாம் என்று கூறியது. அதாவது கோபால் கோட்சேக்கு மராட்டிய மாநில அரசு செய்த கணக்கீட்டு முறையை மாரூராம் தீர்ப்பு அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி 433(A) என்ற நிபந்தனையைத் தவிர வேறு எந்த வகையிலும் கட்டற்ற அதிகாரமே 432 மற்றும் 433 -ன் கீழ் அரசுக்கு வழங்குகிறது என்றும் தெளிவுபடுத்தியது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53 பிரிவு 43 குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகள் 432, 433(A) ஆகியவை ஒன்றன் மீது இன்னொன்று எவ்வாறு ஊடாடிச் செயல்படும் என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்புரைத்த பிறகு மீண்டும் அதே பிரச்சினையை சதாசிவம் அமர்வு இன்னொரு அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பியிருப்பது முற்றிலும் தேவையற்றது.
பிரிவு 432க்கு விளக்கம் அளித்த மாரூராம் தீர்ப்பு இது ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு வழங்கப்பட்ட மேலான கூடுதல் கழிவுதான் (Additional remission) என்று கூறிவிட்டப் பிறகு மரண தண்டனை வாழ் நாள் சிறைத்தண்டனையாக உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட பிறகு 432-ன் படி விடுதலை வழங்கலாமா என்ற கேள்வி தேவை அற்றது.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432 (7) தண்டனை குறைப்பு வழங்க அதிகாரம் உள்ள தொடர்புடைய அரசாங்கம் (appropriate government) பற்றி வரையறுக்கிறது. இதில் 432 (7)(a) மற்றும் 432 (7)(b) ஆகிய இரண்டு உட் பிரிவுகள் உள்ளன. 432 (7)(a) ‘ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்திற்க்கு உட்பட்ட சட்டங்களின் படி தண்டிக்ப்பட்டவர்களின் தண்டனை குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்று கூறுகிறது பிற எல்லா வழக்குகளிலும் மாநில அரசுகளின் தண்டனை குறைப்பு அதிகாரமே செல்லுபடியாகும் என்று 432 (7)(a) வரையறுக்கிறது.
இதில் குழப்பமே இல்லை. இரண்டும் இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுபவை என்பதை இச் சட்டப் பிரிவுகளே தெளிவாகக் குறிக்கின்றன. இச்சட்டப் பிரிவுகளை படிக்கிற யாருக்கும் மாநில அரசின் அதிகாரத்தின் மீது மத்திய அரசாங்கத்தின் மேலாதிக்கம் எழ வாய்ப்புண்டு என்றக் கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
இராசீவ் காந்திக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தடா சட்டம் நீக்கப்பட்டபிறகு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 ன்படி மரண தண்டனையும் வாழ் நாள் தண்டனையும் வழங்கப்பட்ட பிறகு தொடர்புடைய அரசாங்கம் எது என்றக் கேள்வி எழும்புவதற்கு வாய்ப்பே இல்லை.
432 (7)(a) ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ குறித்து பேசவில்லை. இராசீவ்காந்தி கொலைவழக்கில் தொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சட்டம் வெடிபொருள் சட்டம், தந்திச் சட்டம், ஆயுதச் சட்டம் ஆகியவற்றுக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனைக்கும் தொடர்பேதும் இல்லை. இச்சட்டங்கள் எதுவும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்குபவை அல்ல. இராசீவ் காந்தி வழக்கில் இச் சட்டங்களின் கீழ் அளிக்கப்பட்ட உச்ச அளவு தண்டனையே மூன்றாண்டு சிறை தண்டனைதான். இதையெல்லாம் கடந்து 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள். இப்போது வழக்கில் உள்ள வாழ் நாள் தண்டனைக்கும் 432 (7)(a) க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அப்படி ஒரு கேள்வியை நடுவண் அரசுத் தரப்பு எழுப்பியதால் அதனை அப்படியே அரசமைப்புச் சட்ட ஆயத்தின் ஆய்வுக்கு சதாசிவம் அமர்வு அனுப்பியிருக்கக் கூடாது.
சட்டவிதிகளில் சொற்குழப்பம் இல்லாமல் தெளிவாக இருப்பனவற்றையும் மீளாய்வு செய்துகொண்டே இருப்பது தேவையற்ற காலதாமதத்தை உண்டாக்கி சிறையாளிகளின் சிறை வாழ்நாளை நியாயத்திற்க்குப் புறம்பாக நீட்டிப்பதற்கே பயன்படும்.
ஒரு வழக்கில் இரண்டு ‘தொடர்புடைய அரசாங்கங்கள்’ இருக்க முடியுமா என்பதோ அரசமைப்புச் சட்டப்படி விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா மாநில அரசுக்கு இருக்கிறதா? என்றக் கேள்வியோ முற்றிலும் தேவை அற்றவை ஆகும்.
432 (7) -ஐ படித்தாலே அதில் எந்த இடத்திலும் மாநில அரசின் முடிவின் மீதி மத்திய அரசு ஆணை செலுத்த முடியும் என்றோ விடுதலை குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் கருத்தே மேலோங்கும் என்றோ சொல்லப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாகவே முன்வந்து விடுதலையை அறிவிக்க முடியுமா என்றக் கேள்வி அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது கேலிக்கூத்தானது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 ஐ பார்த்தாலே இது தெளிவாகும். இப் பிரிவில் 432 (1) மற்றும் 432 (2) ஆகிய உள் பிரிவுகள் இருக்கின்றன.
இவற்றில் 432 (2) தண்டனை பெற்ற சிறையாளி தண்டனை குறைப்புக் கோரி மாநில அரசுக்கு விண்ணப்பம் அளித்தால் மாநில அரசு அதன் மீது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது.
அதாவது தண்டனைக் குறைப்பு விண்ணப்பம் போடும் சிறையாளிகள் குறித்த விதி அது. ஆனால், 432 (1) முற்றிலும் வேறானது. இப்பிரிவு ‘ மாநில அரசு எப்போது வேண்டுமானாலும் (at any time) நிபந்தனையின்றியோ அல்லது நிபந்தனை விதித்தோ (without condition or upon any conditions) தண்டனை குறைப்பு வழங்கலாம் என்று கூறுகிறது. தண்டனைக் குறைப்பில் மாநில அரசின் கட்டற்ற அதிகாரத்தை இது குறிக்கிறது.
மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன் படுத்தி தாமாகவே முன் வந்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், விடுதலை வழங்கலாம் எனக் கூறுவது தான் 432 (1). சிறையாளியிடம் விண்ணப்பம் பெறுவதோ ஆய்வுக்குழு நியமித்து ஆய்வு செய்வதோ சட்டக் கட்டாயம் இல்லை என்பதையே 431 (1) குழப்பம் இல்லாமல் கூறுகிறது. இதையும் மேலாய்வுக்கு அனுப்பி வைத்திருப்பது கொடுமையானது.
எஞ்சி இருப்பது 435 –ல் ஆலோசனை என்று கூறப்பட்டிருப்பதை ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா? என்றக் கேள்வி மட்டுமே ! நடுவண் அரசின் தரப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருப்பதும் இந்தக் கேள்விதான். இவ்வழக்கில் தெளிவு படுத்த வேண்டிய கேள்வி ஒன்று உண்டென்றால் இது மட்டுமே ஆகும்.
435 (1) மற்றும் 435 (2) ஆகியவற்றை ஒப்பிட்டு விவாதித்து சதாசிவம் அமர்வே இது குறித்து தீர்ப்புரைத்திருக்க முடியும். இதற்கொரு அரசமைப்புச் சட்ட ஆயம் தேவை இல்லை.
நாம் முன்னமே எடுத்துக் காட்டியதுபோல் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபட் பயஸ், இந்த ஏழு தமிழர்களும் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படியான தண்டனையை குறைக்கக் கோரவில்லை.
இராசீவ் காந்திக் கொலை வழக்கில் மரண தண்டனையோ , வாழ்நாள் தண்டனையோ வழங்குவதற்கு தகுதியான ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டம் தடா சட்டம் தான்.
இவ்வழக்கில் தடா சட்டம் செல்லாது என மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 –ன் படிதான் இவர்களில் சிலருக்கு மரண தண்டனையும் சிலருக்கு வாழ் நாள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறர் விடுதலை ஆனார்கள்.
435 (1) 435 (2) ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்கினால் இங்கு எழுப்பப்படும் சிக்கலுக்கு எளிதில் விடை கிடைக்கும்.
435 (2) மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறைப்புப் பற்றி பேசுகிறது.
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின்படி தண்டனை வழங்கப்பட்டு அத்தண்டனைக் காலங்களைக் குறைத்து விடுதலை செய்வதாக மாநில அரசு முடிவு செய்தால் அவாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவது (consent) கட்டாயம் என 435 (2) கூறுகிறது.
அதாவது மத்திய அரசு ஒப்புதல் வழங்காவிட்டால் மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று பொருள்.
ஆனால், 435 (2) இங்கு செயல்பட முடியாது. மரண தண்டனையோ வாழ்நாள் தண்டனையோ வழங்குவதற்குரிய சிறப்புச் சட்டமான தடாசட்டம் இராசீவ்காந்தி வழக்கில் தள்ளுபடியாகிவிட்டது.
இந்த தடா சட்டம் தான் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டமாகும்.
இவ்வழக்கில் தடா நீக்கப்பட்டபிறகு, வாழ்நாள் சிறை தொடர்பாக மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வேறு எந்த சட்டமும் செயலில் இல்லை. எனவே 435 (2) -ன் படி இவர்கள் விடுதலைக்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் (consent) பெறத் தேவை எழவில்லை.
435 (1) மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு விசாரித்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுகிறது.
இங்குதான் ஆலோசனை (consultation) கோரப்படுகிறது. இராசீவ் காந்தி கொலை வழக்கை மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ) விசாரித்ததால் 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
435 1 –ல் “ மத்திய அரசுடன் கலந்தாலோசனை ” (consultation) என்றும் 435 (2) –ல் (consent) என்றும் இரண்டு வெவேறு இடங்களில் இரண்டு வெவ்வேறு சொற்களை பயன்படுத்துகிறது.
இச்சொற்கள் பொருள் வேறுபாடு அற்றவை அல்ல. தெளிவாக திட்டமிட்ட முறையில் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு ஆனால் அதன் விசாரணை மட்டும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பால் நடத்தப்பட்டிருந்தால் அங்கு கலந்தாலோசனை (consultation)யும் மத்திய அரசாங்கத்தின் சட்டத்திற்குட்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அங்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலும் (consent) வலியுறுத்தப்படுகிறன. இச் சூழலில் கலந்தாலோசனை என்றாலும் (consultation) என்றாலும் ஒப்புதல் தான் , ஒப்புதல் (consent) என்றாலும் ஒப்புதல் தான் என்றக் குழப்பம் எழ வாய்ப்பே இல்லை .
இங்கு தண்டனை குறைப்பு குறித்து மத்திய அரசின் ஆலோசனை பெறுவது கருத்து கேட்கும் ஒரு செயல்முறையே தவிர அதற்கு கட்டுப்பட வேண்டிய சட்டக் கட்டாயம் எதுவும் இல்லை. ஆலோசனை கேட்பின் போது மத்திய அரசாங்கம் கூறும் கருத்து மாநில அரசை கட்டுப்படுத்தும் சட்டத்தகுதி உடையது அல்ல.
ஏழுதமிழர் விடுதலைக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்தாலும் அந்த மறுப்பு மாநில அரசின் முடிவை கட்டுப்படுத்த வலுவற்றது என்பதே 435 (1) படி பெற வேண்டிய செய்தியாகும்.
இந் நிலையில் நேரடியாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது ஏழுதமிழர் விடுதலை ஆணைக்கு சதாசிவம் அமர்வு இடைக்காலத்தடை விதித்ததே தேவையற்ற ஒன்று! இப்போது அத் தடையை நிரந்தரமாக நீடித்திருப்பதும் மிகத் தவறான ஒன்றாகும்.
மிக எளிமையாக விடை கண்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினையை அரசியல் அழுத்தம் காரணமாக பெரிதாக்கி அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பிவைத்தது சதாசிவம் அமர்வின் மிகத் தவறான தீர்ப்பாகும்.
உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் முதன்மை பங்காற்றிய கருணாநிதி இப்போதும் மாறவில்லை. அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு இவ்வழக்கை அனுப்பியது குறித்து பல தலைவர்களும் பதற்றத்தோடு கருத்துக் கூறியபோது முரசொலியில் வழக்கம் போல கேள்வி எழுப்பி பதில் அளிக்கும் பாணியில் இது குறித்து கூறிய கருணாநிதி “ வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று கூறினார். அவரது துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது.
இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்றக் கேள்வி எழுகிறது.
மூன்று மாதத்திற்குள் அரசமைப்புச் சட்டம் ஆயம் நிறுவப்பட்டாலும் அதன் விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என்றோ அவ்விசாரணையின் முடிவு எப்படி அமையும் என்றோ உறுதியாகக் கூறமுடியாது.
இந்நிலையில் ஏழுதமிழர் விடுதலையில் உறுதியான அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும்.
இவ்வாறான சூழல் எழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அது வருமாறு:
“ ஒருவேளை உச்ச நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஏழுதமிழர் விடுதலைக்கு ஆணையிட தாமதம் செய்தாலோ, தடுமாறினாலோ, தமிழக அரசு அதற்காக தயங்க வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 -ன் படி இவர்களின் விடுதலைக்கு உறுதியான ஆணையிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏழு தமிழர் விடுதலை முடிவிலிருந்து பின் வாங்க்க் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தோம் (ஏழுதமிழர் விடுதலை சட்டப்படி சரியே – கி.வெங்கட்ராமன் , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் , மார்ச் 1-16 இதழ்)
அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 –ன் கீழ் தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை அளிப்பது குறித்த செய்தியை மாரூ ராம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் விவாதிக்கிறது.
நாம் ஏற்கனெவே குறிப்பிட்டது போல் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 (A) பிறப்பிக்கப்பட்ட பிறகு உருவான சூழலில் மாரூ ராம் வழக்கில் அரசமைப்புச் சட்ட ஆயம் அமைக்கப்பட்டது.
மாநில அரசின் விடுதலை வழங்கும் அதிகாரம் 432 (1) -ன் படி கட்டற்றது என்றாலும் 433 (A) விதிக்கும் நிபந்தனைக்கு அது உட்பட்டது என்று கூறும் இத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 இந்த 433 (A) க்கு கட்டுப்பட்டதல்ல என தெளிவுபட கூறுகிறது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 72 படி இந்திய குடியரசுத்தலைவரோ, பிரிவு 161 -ன் படி மாநில ஆளுனரோ எப்போது வேண்டுமானாலும் தண்டனை குறைப்பு அளித்து விடுதலை வழங்கலாம். 433(A) இந்த அதிகாரத்திற்கு விலங்கிட முடியாது என்று அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பு கூறியது.
பிரிவு 161 -ன் படி மாநில ஆளுனர் என்றால் அது மாநில அமைச்சரவையை குறிக்கும் என்றும் மாரூராம் வாழக்கு தெளிவுபடுத்தியது.
அதாவது 433 (A) படி 14 ஆண்டுகள் கழித்த பிறகுதான் ஆளுனர் தண்டனை குறைப்பு வழங்கலாம் என்று கூறிவிட முடியாது. அதற்கு முன்னரேயே மாநில அமைச்சரவை ஆளுனர் வழியாக வாழ்நாள் சிறையாளிக்கு விடுதலை வழங்கலாம் என்று கூறுகிறது. இதே தீர்ப்பு தண்டனை குறைப்பு வழங்கும் போது ஒரு கணக்கீட்டுக்காக வாழ்நாள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்றுக் கருதிக் கொண்டு தண்டனைக் கழிவு வழங்கலாம் என்றும் கூறியது,
ஏழுதமிழர்களை பொருத்த அளவில் 433 (A) படியான 14 ஆண்டுகள், மாரூராம் தீர்ப்பின் படியான 20 ஆண்டுகள் ஆகிய அனைத்தையும் கடந்தவர்கள் . மாரூராம் தீர்ப்புக்குப் பிறகு வந்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இந்த அரசமைப்புச் சட்ட ஆயத்தின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமலேயே தீர்ப்பு வழங்கியுள்ளன. இப்போது அதிகமாக பேசப்படும் சுவாமி ஸ்ரதானந்தா -எதிர்- கர்நாடக மாநில அரசு என்ற வழக்கும் அதில் ஒன்று 432 -ன் படி அரசுக்கு இருக்கிற தண்டனை குறைப்பு அதிகாரத்தில் தலையிடும் வகையில் 25 ஆண்டுகள் , 35 ஆண்டுகள் என சிறை தண்டனை வழங்கி தீர்ப்புகள் வந்துள்ளன. அவை சட்ட அறியாமை (per incurium) என்று தள்ள வேண்டியவை ஆகும். அவற்றை பின்பற்றவேண்டிய அவசியம் எழவில்லை. அவற்றையெல்லாம் காரணமாக்க் காட்டி அரச்மைப்புச் சட்ட ஆயத்திற்கு சதாசிவம் அமர்வு அனுப்பி வைத்தது தவறானதாகும்.
விவாதத்திற்குரிய இத் தீர்ப்புகளில் கூட அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படியான தண்டனை குறைப்பு அதிகாரம் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. அரசமைப்புச் சட்ட ஆயமான வி. ஆர் கிருஷ்ணய்யர் ஆயம் வழங்கிய மாரூராம் தீர்ப்பே செயலில் உள்ளது. எனவே 161-ன் படி ஏழுதமிழர்களை விடுதலை செய்வதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை.
எனவே தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுனருக்கு அனுப்பி அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிசந்திரன், இராபட்பயஸ் ஆகிய ஏழுதமிழர்களையும் தமிழக அரசு உடன்படியாக விடுதலை செய்ய வேண்டும்.
அதற்கு முன்பாக இந்த ஏழு தமிழர்களுக்கும் நீண்ட கால சிறை விடுப்பு வழங்கி (பரோல்) இடைக்கால விடுதலை அளிக்க வேண்டும்.

0 கருத்துகள்: