கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் - தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

இந்திய அரசின் துணையோடு அடாவடியாகக் கர்னாடகம் காவிரி நீர் மறுப்பதாலும்,முல்லைப்பெரியாறு சிக்கலில் கேரளத்தின் இனவெறி காரணமாக அணையில் 142 அடி தண்ணீர்தேக்க முடியாததாலும் ஏற்பட்டுள்ள சிக்கல் ஒரு புறம், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாகமழைகுறைந்து வருவது மறுபுறம் என்று மிகப்பெரும் தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடுதத்தளிக்கிறது.

நெல், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள் மட்டுமின்றி மரப்பயிர்களும்வறட்சிக்காரணமாக பொய்த்து விட்டன.

காவிரி பாசனப்பகுதிகளில் கூட நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போகத் தொடங்கிவிட்டது.நிச்சயமற்ற மின் வழங்கலும் சேர்ந்து சிக்கலை ஆழப்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம், குளித்தலை பகுதிகளில் கூட தென்னை மரத்திற்கே தண்ணீர் இன்றி அவைவாடுகின்றன. வறட்சியை தாங்கி நிற்கும் பனைமரம் கூட சேலம் மாவட்டம், எடப்பாடியில் கருகிவருவதாகவும் ஏறத்தாழ 7000 மரங்கள் கருகி உதிர்ந்து விட்டதாகவும், ஏடுகளில் வந்த செய்திஅதிர்ச்சி அளிக்கிறது.

சேலம், தர்மபுரி, கிரு~;ணகிரி மாவட்டங்களில் மா, எலுமிச்சை, பப்பாளி சாகுபடிச் செய்யும்உழவர்கள் நிலத்தடி நீர் இன்மையால் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். இம்மாவட்டங்களில்கறவை மாடுகளுக்கு வைக்கோல் இன்றி உழவர்கள் தவிக்கிறார்கள். அறுவடை காலத்தில்வைக்கோலை வாங்கி சேமித்து வைத்துள்ள இடைமட்ட வணிகர்கள் ஒரு டிராக்டர் வைக்கோலை14000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை கொள்ளை விலைக்கு விற்கிறார்கள். ஆலைகளிலிருந்துவரும் தீவனங்களும் தாறுமாறாக விலை ஏறி விட்டன.

இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளைக் கேரளாவிற்கு ஓட்டிச்செல்லும் போக்கு தீவிரம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தேசிய ஆறான காவிரியைச் சார்ந்து குடிதண்ணீர் பெற்றுவரும் 85 ஒன்றியங்களில்பெரும்பான்மையானவை  குடிதண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன். பல நகராட்சிகளில் வாரம்ஒரு முறை குடிதண்ணீர் விடுவது என்ற போக்கு இயல்பாகிவிட்டது. இந்தக் குடிதண்ணீர்தட்டுப்பாடு தனியார் குடிநீர் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

தமிழக அரசு இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள ஒதுக்கி உள்ள 680 கோடி ரூபாய் என்பதுயானைப் பசிக்கு சோளப் பொறி போன்றதாகும்.

இந்நிலையில் 2012-ல் அறிவித்தது போல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாகஅறிவித்து இந்திய அரசை வலியுறுத்தி இயற்கைப் பேரிடர் சிறப்பு நிதியைப் பெற்று இடர் நீக்கப்பணிகளில் தமிழக அரசு விரைந்து ஈடுபட வேண்டும்.

தமிழர்கள் நீர் ஆதாரங்களைப் பெருக்க உருவாக்கிய பழைய நீர்நிலை கட்டுமானங்களைஉயிர்ப்பிப்பது, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஊக்கப்படுத்துவது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக்கொடுங்குற்றமாக அறிவித்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நீண்டகாலத்திட்டங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


இல்லையேல் வறட்சிக்காரணமாகப் பெரும் எண்ணிக்கையி தமிழர்கள் புலம்பெயரும் ஆபத்துஉள்ளது.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை

இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்

பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஈழத்தமிழர்கள் இன அழிப்பைத் தொடர்ந்து, இப்போது தமிழ் முஸ்லீம்களை குறிவைத்து இனவெறித் தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது சிங்கள – பவுத்தப் பேரினவாதம். 

அண்மைக்காலமாக இலங்கைத் தீவில் தெற்கில் வாழும் கிருத்துவர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள புத்த வெறியர்கள் திட்டமிட்ட வகையில் தாக்கி வருகின்றனர். இச் சிறுபான்மை மக்களுடைய வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை தொடர்த் தாக்குதலுக்கும், சூறையாடலுக்கும் உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக சூன் 15 தொடங்கி அலுத்துகமா, பெருவலா, தர்காடவுன் போன்ற இடங்களில் இசுலாமியருக்கு எதிரான தாக்குதல்கள் ஓர் இனத் துடைப்பு நடவடிக்கையாக உச்சம் பெற்றுள்ளது “பொத்து பல சேனா” என்ற சிங்கள – புத்த வெறி அமைப்பு காவல்துறையின் துணையோடே இத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சிங்கள புத்த பிக்குகள் தலைமையில் செயல்படும் இந்த காடையர் அமைப்புக்கு மகிந்த இராசபட்சேயும், கோத்தபய இராசபட்சேயும் வெளிப்படையாக ஆதரவு அளித்ததைத் தொடந்தே இவர்களது இன வெறியாட்டம் தீவிரம் பெற்றுள்ளது. 
இலங்கையில் அரசு வழிப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் சிங்கள – பவுத்த பாசிசத்தின் உடன்பிறந்த விளைவு இது. 
தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள இந்த இன வெறித் தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சிங்கள – பவுத்த பாசிச இராசபட்சே கும்பலை இனப் படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தாமல் சர்வ தேச சமூகம் காலம் கடத்துவதால் ஊக்கம் பெற்றுள்ள இன வெறி கும்பல் அடுத்தடுத்து இன அழிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் இறங்குகிறது.
சிங்கள – பவுத்த பேரினவாத அடாவடிகள் அனைத்துக்கும் இந்திய அரசு பக்க பலமாக திகழ்வதால் எந்த கேள்விமுறையும் அற்று இந்த அநீதி தொடர்கிறது.
இலங்கை அரசின் துணையோடு சிங்கள் புத்த வெறியர்கள் தமிழ் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தும் இன வெறித் தாக்குதல்களை இப்போதாவது இந்திய அரசு வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், இந்த வெறியாட்டம் மேலும் தொடராமல் தடுத்து நிறுத்த முன் வரவேண்டும் என த.தே.பொ.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

அயோத்திதாசர், சகஜானந்தா ஆகியோர் நினைவில் புதிய மனிதர்களை உருவாக்குவோம் - 2 - தோழர் கி.வெங்கட்ராமன்

சென்ற இதழ் தொடர்ச்சி...
எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் எதிரி களை ஏற்கச் செய்வதற்கான முறையில் வாதங்களை முன்வைப்பதே சகஜானந்தாவின் தனிப் பாணி ஆகும்.
சைவத்தில் திருநீலகண்டர், மதங்கசூளாமணியார், ஏனாதி நாயனார், பெத்தான் சாம்பான் ஆகியோரும் சேந்தனாரும் உயர்நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், வைணவத்தில் மாறநேரி நம்பி, திருவிளா சோலைப்பிள்ளை, திருப்பாணாழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் போற்றப்படுவதையும் எடுத்துக் கூறி சைவத்திலும் வைண வத்திலும் சாதி தீண்டாமைக்கு இடமில்லை. அத்தீமை ஆரியத்தால் வந்தது என்பதை பல அரங்குகளிலும் சுவாமி சகஜானந்தா முன்வைத்தார்.
திருப்பதி உள்ளிட்டு அனைத்து தேவஸ்தான கமிட்டிகளிலும் அரிசனங்களை நியமிக்க வேண்டும் என்று வலுவாக வாதிட்டார்.
1947, பிப்ரவரியில் சிதம்பரம் தீட்சிதர்கள் சுவாமி சகஜானந்தா சாக வேண்டும் என வேண்டியாகம் செய்தனர். தில்லை நடராசர் ஆலயம் அரசு நிர்வாகத்தில் வர வேண்டும் எனக் கோருவோர் சாக வேண்டும் என இப்போது தீட்சிதர்கள் யாகம் வளர்த்ததை நாம் அறிவோம்.
தலைமுறை மாறினாலும் தீட்சிதர்கள் திருந்த வில்லை என்பதையே இது காட்டுகிறது.
ஆயினும் அவர்கள் தோற்றார்கள். சகஜானந்தா வென்றார். 1947 சூன் மாதம் 22 ஆம் நாள் அனைத்து சாதியினரும் ஆலயத்திற்குள் செல்லலாம் என்ற அரசு ஆணை பிறந்தது. சுவாமி சகஜானந்தா பல்லாயிரம் தாழ்த்தப்பட்ட மக்களோடு சிதம்பரம் கோயிலுக்குள் சென்று வழிபட்டார்.
‘நாட்டின் ஜனாதிபதியாகக் கூட ஓர் அரிசனன் வந்துவிடலாம். ஆனால் கிராமத்தில் மணியக்காரராக அவர் வரமுடியாது’ என்ற நிலையைச் சுட்டிக் காட்டிய சகஜானந்தா அரசின் அனைத்து நிர்வாகப் பதவிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்று தாழ்த்தப்பட்டோருக்கான அரசு சேவைகள் லேபர் ஆபீசர் என்ற தொழிலாளர் அதி காரியின் வழியாகவே நடைபெற்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்களை கவனிக்க தனியே “அரிசன நலத்துறை’’ ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சகஜானந்தா வலியுறுத்தினார். இன்று ஆதி திராவிடர் நலத்துறை இயங்குகிறது என்றால் அதற்கு முதன்மைக் காரணம் சுவாமி சகஜானந்தா அவர்கள் தான் என்பதை உணர வேண்டும்.
இன்றைக்கு ஒடுக்கப்பட் டோருக்கான தனி வரவு செலவுத் திட்டம் ((Depressed Class Budget),), பாலின வரவு - செலவுத் திட்டம் ((Gender Budget), ), வேளாண்மைக்கான தனி வரவு செலவுத் திட்டம் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இன்றைக்கு 60-70 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரிசனங்களுக்கு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 20 விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என்றும், அரிசனங்கள் முன்னேற்றத்திற்காக தனிபட்ஜெட் வேண்டும் என்றும் முழங்கியவர் சகஜானந்தா.
மின்சார உற்பத்தியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவைக்கக் கூடாது அதனை அரசே நடத்த வேண்டும் என்றும், மின்சாரக் கட்டணத்தில் எளிய மக்களுக்கு குறைவானக் கட்டணம் தீர்மானித்து வேறுபட்ட கட்டண முறையை செயல்படுத்த வேண்டும் என்றும்முன்னோடியாக கோரிக்கை வைத்தவர் சகஜானந்தா.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கோரியும், நிலம் வழங்கக் கோரியும் சுவாமி சகஜானந்தா விடாப்பிடியாகப் போராடினார்.
தமிழே கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து சட்ட மேலவையிலும், சட்டமன்றத்திலும் வலியுறுத்தி வந்தார். மருத்துவமனைகளில் தமிழர்களின் சித்த மருத்துவம் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவப் படிப்பில் சித்த மருத்துவம் கட்டாயம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், சித்த மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றும் வலியுறுத்தி அது செயலுக்கு வருவதை உறுதி செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள். பள்ளி பாடத் திட்டத்திலேயே சித்த மருத்துவம் இடம் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதே நேரம், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இந்தியையும், ஆங்கிலத்தையும், ஓர் மொழிப் பாடமாக கட்டாயம் கற்க வேண்டும்; என்பதும் அவரது கருத்தாக இருந்தது. நந்தனார் பள்ளியில் சமஸ்கிருதத்தைக் கூட அவர் கற்பித்தார்.
இரண்டு தலைவர்களின் தனித்தன்மை தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக, உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்ற தலைவர்களுக்கும் அயோத்திதாசப் பண்டிதர், சுவாமி சகஜானந்தா ஆகியோருக்கும் ஓர் அடிப்படையான வேறுபாடு உண்டு.
அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன். எம்.சி. ராஜா போன்றவர்கள் சமூகத்திலும், அரசியலிலும், நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒதுக்கப்படுவதை எதிர்த்து, ஒடுக்கப்படுவதை எதிர்த்து போராடினார்கள். அனைத்து நிலைகளிலும் இடஒதுக்கீடு பெற்றுத் தருவது அவர்களது முதன்மையான வழி முறையாக இருந்தது.
இதே நிலைகளில் அயோத்திதாசரும், சுவாமி சகஜானந்தாவும் போராடினார்கள். ஆனால் அதே நேரத்தில் ஓர் புதிய மனிதனை, உருவாக்க வேண்டும் என்பது அவர்களது அக்கறையாக இருந்தது.
மார்க்சிய முகாமில் இத்தாலிய பொதுவுடைமையாளர் அந்தோனியோ கிராம்சியும், புரட்சியின் மனித வடிவம் எனப் புகழப்பட்ட சே குவேராவும் புரட்சியின் வெற்றி நிலைத்து நீடிப்பதற்கு சமூகப் பொறுப்புள்ள புதிய மனிதர்கள் உருவாக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தினர். வெறும் உடைமைகளைப் பிரித்து மக்களுக்குத் தரும் நடவடிக்கையாக மார்க்சிய அமைப்புகளின் செயல் குறுகிவிடக் கூடாது. அது வெறும் தொழிற்சங்க வாதமாக அமைந்துவிடும். சக மனிதனின் துன்பத்தை தனது துன்பமாக உணரும் புதிய மனிதனை உருவாக்குவதுதான் மார்க்சியத்தின் உண்மையான இலட்சியமாக இருக்க முடியும் என சே குவேரா மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதோடு நின்று போனால் அது வெறும் பயனாளிக் கூட்டத்தையே உருவாக்கும். இட ஒதுக்கீட்டின் பயனாக உயர்கல்வியோ உயர் வேலை வாய்ப்போ பெற்றுக் கொண்டபின் தம்மைப்போல ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள சக மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத பயனாளிகளை இன்று ஏராளம் காண்கிறோம்.
இது போன்ற மனிதர்களை அயோத்திதாசர் “சுயப் பிரயோ சனவாதிகள்’’ என்று சாடினார். ஒரு சமூக இயக்கத்தின் பயனைப் பெற்றுக் கொண்டு அதன் பிறகு தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒதுங்கிப் போகிறவர்களை, தன்னலவாதிகளை இவ்வாறு சாடினார்.
இன்று ஆதிக்கவாதிகளால் இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டை நேரடியாக எதிர்க்க முடியாது. அது நின்று நிலைத்துவிட்டது. எனவே அவர்கள் வேறு வழியைக் கையாள்கிறார்கள். தனியார்மயமும், ஆங்கிலமயமும் அவற்றுள் முதன்மையானவை ஆகும். தனியார்மயத்தையும், ஆங்கிலமயத்தையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பிறந்த உத்தியோக வர்க்கத்தினர் கணிசமானோர் ஆதரிப்பதைப் பார்க்கிறோம்.
தனியார்மயம், இடஒதுக் கீட்டை இல்லாததாக்கும் என்றளவில் கூடபுரிதல் இல்லாமல் இவர்கள் இவ்வாறு செய்கின்றனர். தங்களிடம் பணம் இருக்கிறகாரணத்தினாலேயே காசு பறிக்கும் ஆங்கில வழி தன்நிதிப் பள்ளிகளை இவர்கள் விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். ஏற்கெனவே சமற்கிருதமயமும், பார்ப்பன மேலாண்மையும் எதைச் செய்ததோ அதையேதான் இன்று ஆங்கில ஆதிக்கமானது செய்கிறது. ஆங்கிலத் திணிப்பால் மிகப் பெரும் பின்னடைவை சந்திப்பவர்கள் பெரிதும் ஒடுக்குண்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே ஆவர். அதிலும் முதல் தலைமுறை படிப்பாளிகள் படும் இன்னல் கொடுமையானது.
இன்றைக்கு உத்தியோக வர்க் கமாக கையில் ஓரளவு காசு பணத் தோடு இருக்கிற இவர்கள் தம்மைப் போன்றே ஒடுக்குண்ட நிலையில் உள்ள சக மனிதர்களைப் பற்றி கவலைப்படாத சுயப்பிரயோசன வாதிகளாக மாறிவிட்டனர். இவர்கள் சமூக மனிதர்களாக இல்லை. தனித் தனி உதிரிகளாக தேய்ந்து விட்டனர்.
இப்போது அரசுத் துறையிலேயே சில மருத்துவப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று அரசு கூறும் போது அதை எதிர்கொள்ளும் சமூக சக்தியாக இல்லாமல் பெற்ற உரிமையையும் பறிகொடுத்து வருகிறோம். தொழிற்சங்க வாதத்தின் இறுதி விளைவு இதுதான். கூட்டுச் சுயநலமாக பயனாளிக் கூட்டத்தை வளர்க்கும் தொழிற்சங்க வாதம் தொழிற்சங்க போராட்டத்தின் மூலம் பெற்ற உரிமைகளையும் இழப்பதில் கொண்டு போய் முடியும்.

புதிய மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும்
அயோத்திதாசப் பண்டிதர் புதிய பௌத்தம் என்ற தனது கோட்பாட்டை அற விழுமியங்களுடன் கூடிய புதிய மனிதர்களை உருவாக்குவதற்கு பயன்படுத்த முனைந்தார். இவ்வாறு புதிய மனிதர்கள் உருவாக்கப்படாது போனால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நிலைபெறாது என்ற தெளிவு அவருக்கு இருந்தது.
அயோத்திதாசரும், சுவாமி சகஜானந்தவும் மது விலக்கை வலியுறுத்தினர். அதிலும் சகஜானந்தா மது விலக்கு குறித்து சட்ட மன்றத்தில் ஆற்றிய உரைகள் மிக உருக்க மானவை. “எங்களுக்கு கல்விக் கூடங்கள் வேண்டாம், மருத்துவ மனைகள் வேண்டாம், சுகாதர உதவிகள் வேண்டாம். இவற்றில் செலவாகவும் பணத்தை எல்லாம் அரசாங்கம் நடத்தவே செலவு செய்து கொள்ளுங்கள். ஆனால் மதுக்கடைகளை மட்டும் மூடி விடுங்கள்’’ என்றார்.
மதுப்பழக்கம் ஒப்பீட்டளவில் ஒடுக்குண்ட சாதி மக்களையே அதிகம் பாதிக்கிறது என்ற தெளிவு சகஜானந்தா அவர்களுக்கு இருந்தது. மதுப்பழக்கம் மனிதர்களை சமூக மனிதர்களாக ஒருங்கிணைய விடாமல் தன்னிலை மறந்த உதிரிகளாக மாற்றிவிடும் என்று சகஜானந்தா உறுதியாக நம்பினார். இம்மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பலன்களை பெற்றுத் தருவது மட்டுமே தனது பணி மற்றதெல்லாம் அவர்களது தனிப் பட்ட விவகாரம் (பர்சனல் மேட் டர்) என்று சகஜானந்தா ஒதுங்க வில்லை. பொறுப்புள்ள தலை முறையை உருவாக்கும் பொறுப் பானத் தலைவராக அவர் நடந்து கொண்டார்.
தாம் நடத்திய கல்விப் பணிகளுக்கும் இறைப் பணிகளுக்கும் ஆதிக்க சாதியினரிடமும் நிதிபெற்றார். ஆனால் அதற்காக ஒரு இம் மியும் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பில் அவர் பின்தங்கிய தில்லை. காங்கிரசுக் கட்சியில் இருந்து கொண்டு அதன் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். ஆனால் ஒரு காலத்திலும் தன் மனச்சான் றுக்கு எதிராக அக்கட்சியின் முடிவு களுக்குத் தலையாட்டியதில்லை.
பிற தலைவர்களிடமிருந்து அயோத்திதாசரையும், சகஜானந் தாவையும் வேறுபடுத்திக்காட்டிய கொள்கை அணுகுமுறைகள் இவை. எனவே, அயோத்திதாசப் பண்டிதரையும், சுவாமி சகஜானந்தா அவர்களையும் புகழ்வதோடு நின்றுவிட்டால் அது அவர்களை வெறும் வணிக முத்திரையாக பயன்படுத்திக் கொள்வதாக அமைந்து விடும். இம் மாபெரும் சாதனையாளர்களின் பெயர்களை உச்சரிக்க நம்மை நாம் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இவர்களின் சாரமான இந்த மக்கள் நேய அரசியலை முன்னெடுப்பது தான் உண்மையான பொருளில் அவர்கள் நினைவைப் போற்றுவதாக அமையும்.

0 கருத்துகள்: