கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

இந்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்!



நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.

சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் தொடர்பேதும் இன்றி தனித்து இயங்குவது என்றும், தனித்த தோற்றமும் வளர்ச்சியும் கொண்டது என்றும் 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கால்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர்.

தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி, அலெக்ஸ் கோலியா உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.

வரலாறு நெடுகிலும் சமஸ்கிருத மொழியும், இன ஆதிக்கமும், வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தோடு ஆரிய இன மேலாதிக்கமும் பிராமண வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன.

ஆரிய இனக்கலப்பும், சஸ்கிருத மொழிக் கலப்பும் ஏற்பட்டதால் தமிழிலிருந்து திரிந்து பிரிந்து உருவானவையே தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய மொழிகளும், அம் மொழிகள் சார்ந்த தேசிய இனங்களும் ஆகும்.

வர்ண சாதிக் கோட்பாடு தமிழ் மரபில் இல்லாத ஒன்றாகும். பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ண சாதி முறைமை தமிழினத்தின் மீது ஆரிய இனத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதாலேயே நிலைகொண்டது. சமஸ்கிருத மொழித் திணிப்பு அதற்கு ஏற்ற சமூக ஊடகமாக அமைந்தது.

தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய அயல் இனத்து அரசர்களின் துணையோடு ஆரிய மேலாண்மை நிறுவப்பட்ட போது தமிழ் மொழியில் சமஸ்கிருத மொழிக் கலப்பு திட்டமிட்ட முறையில் ஏற்படுத்தப்பட்டது.தமிழ் மண்ணின் கடவுளர்களும், கோயில்களும், கோயில் அமைந்த ஊர்களும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. கடவுளர்களின் பெயர் சம்ஸ்கிருத மயமானதால் அக்கடவுளர்களின் பெயர் சூட்டிக் கொள்ளும் தமிழர்களின் பெயர்களும் சமஸ்கிருத மயமானது. இது ஒரு சமூக அமைப்பு முறையாகவே நிலைபெற்ற போது அடுத்த்தடுத்த தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளுக்கு வடமொழி மயமான பெயர்கள் சூட்டுவதே நிலைத்துப் போனது. இன அடையாளம் சிதைந்துப் போனது.

ஆரிய – பிராமண மேலாதிக்கம் அரசியலில் மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்தின் அக வாழ்க்கை முழுவதும் நிறுவப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு வரை கோயில் குடமுழுக்கிலிருந்து அன்றாட வழிபாடுவரை அனைத்தும் சமஸ்கிருத மயமாவதன் வழியாக இந்த மேலாண்மை நிலைகொண்டது.

அறிவியல் சார்ந்த அற வழிப்பட்ட தமிழர் சடங்குகள் மறைக்கப்பட்டன. சைவமும், வைணவமும் இவைக் கடந்த வழிபாட்டு முறைகளும் வேதமத மேலாண்மைக்கு உள்ளாயின. தேவாரம் திருவாசகம் , போன்ற திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும், தமிழிசையும் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ள உயிர்க் காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால்தான் , தமிழ் மொழிக் காப்பு போராட்டமும், இனக்காப்பு போராட்டமும், சமூக சமத்துவப் போராட்டமும் இணைந்தே வரலாறு நெடுகிலும் நடந்துவருகின்றன.

ஆரிய இனவாதத்தின் இன்றைய நவீன வடிவம் இந்தியத் தேசியம் ஆகும். இந்த இந்தியத் தேசியத்தின் தீவிர வடிவமே இந்துத்துவம் ஆகும். எனவே, இந்துத்துவ வெறிக்கட்சியான பாரதிய சனதாவின் ஆட்சி கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி ஆரிய மேலாதிக்கத்தை ஐயத்திற்கு இடமின்றி நிலை நாட்டவும், வருண சாதிக் கொடுமையை நிலைப்படுத்தவும் துறைதோறும் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

இந்த வரிசையில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன் மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது என முடிவு செய்துள்ளது. தமிழர்கள் மீது சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தையும், ஆரிய இன மேலாண்மையையும் திணிக்கும் இச் செயல் தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும் கேடான நோக்கமும் கொண்டது.

உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை ஆகும்.
சமஸ்கிருத வாரம் என பா.ச.க அரசு அறிவித்துள்ள 2014 ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய உள்ள நாட்களில் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் நடத்துவது என த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

இதனையொட்டி ஆகஸ்ட்டு 7 முதல் 13 வரை உள்ள வாரத்தில் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கருத்தரங்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், துண்டறிக்கைப் பரப்புரைகள் என பலவடிவங்களில் சமஸ்கிருத எதிர்ப்பு வார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்:

காசா எரிகிறது! இசுரேலே பாலத்தீனத்திலிருந்து வெளியேறு!


 காசா எரிகிறது! இசுரேலே 
பாலத்தீனத்திலிருந்து வெளியேறு! 



உலகத்தின் கண் முன்னே பாலத்தீனம் மீண்டும் பிணக்காடாக மாறி வருகிறது. காசா பிரதேசத்தில் தெருக்கள் எங்கும் கொப்பளிக்கும் குருதி ஆறு ஓடுகிறது.

கடந்த சூலை 8-ஆம் நாள் தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக சுமார் 360 சதுர கிலோ மீட்டர் சிறிய பரப்புக்குள் யூத வெறி இசுரேலின் இடைவிடாத குண்டு மழைத் தாக்குதலில் பாலத்தீனம் எரிகிறது. வழக்கம் போல் ஐநா மன்றமும் அனைத்துலக சமூகமும் போர் நிறுத்தம் வலியுறுத்தி வெற்றுப் புலம்பல் புலம்புகின்றன.

ஹமாஸ் அமைப்பினர் 3 இசுரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்றதற்கு பதில் தாக்குதல் இது என்று இசுரேல் அரசு கூறினாலும் உண்மையில் அவ்வரசின் தாக்குதல் இலக்காக மசூதிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் ஆகியவையே உள்ளன.

இரமலான் மாதத்தின் இப்தார் நோன்பு உணவை உண்டுக்கொண்டிருந்த 54 வயது பெண்மணி ஒருவர் கையில் கரண்டியோடு குருதி வெள்ளத்தில் பிணமாகச் சார்ய்ந்தார். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையும், மருத்துவமனையில் கொல்லப்படுகிறது. இனக்கொலையாளிகள் வழக்கமாகச் சொல்லும் பொய்க்காரணத்தையே இந்தக் கண்மூடித் தாக்குதலுக்குக் காரணமாக இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறுகிறார். “ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதி பாலத்தீன மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திகிறார்கள்” என்பதே அது.

“மசூதி, குடியிருப்பு, மருத்துவமனை ஆகியவற்றில் பதுங்கிக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் இசுரேல் மீது இராக்கெட் தாக்குதல் நடத்துவதாலேயே நாங்கள் அவற்றின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறோம்” என்று கூறும் இசுரேல் அரசு இவ்விடங்களின் மீது வீசுவது தடைச் செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளாகும்.

கடந்த 2006 இறுதியில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலத்தீன் மக்களின் பெருபான்மை வாக்குகள் பெற்று பாலத்தீன நிர்வாக மன்றம் என்ற இடைக்கால ஆட்சிப் பகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஹமாஸ் அமைப்பினர். இவர்களைத் தான் பயங்கரவாதி என இசுரேல் அரசு கூறுகிறது.

இத்தேர்தல் முடிவு வந்த நாளிலிருந்தே காசா பகுதியின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உணவும். மருந்தும். சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களும் கிடைக்காமல் அப்பகுதி பாலத்தீனர்கள் கடும் நெருக்கடியில தத்தளித்து வருகின்றனர். உலகின் மிக மிக வறுமைப்பட்டப் பிரதேசமாக காசா அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியின் மீது தான் கடந்த ஒரு வாரத்திற்குள் 1000க்கும் மேற்பட்ட முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி வான் தாக்குதல் நடத்தியுள்ளது இசுரேல் யூத வெறி அரசு.

இடிக்கப்பட்ட ஒரு வீட்டுக் கூரையின் மீது வெள்ளைக் கொடியை அசைத்தவாறு நின்றிருந்த ஒரு பாலத்தீன குடும்பத்தினர் மீது கடந்த 12.07.2014 அன்று இசுரேல் நடத்திய வான் படைத் தாக்குதலில் அக்குடும்பத்தினர் 17 பேரும் மாண்டனர். உண்மையில் இப்போதைய இந்தத் தாக்குதலுக்குக் காரணம் இசுரேல் இளைஞர்கள் கடத்தப்பட்டது அல்ல.

கடந்த 7 ஆண்டுகளாக பிளவுபட்டிருந்த ஹமாஸ் அமைப்பினரும் பாலஸ்தீன விடுதலை அமைப்பினரும் (பி.எல்.ஓ) ஒன்றிணைவது என முடிவெடுத்து கடந்த 2014 ஏப்ரல் 23 அன்று ஒர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரும், மேற்குக் கரைப் பகுதியில் பி.எல்.ஓ அமைப்பினரும் பிரிந்து நிர்வாகம் நடத்தி வந்த நிலையை மாற்றி ஒட்டுமொத்தப் பாலத்தீனர்களுக்கும் ஒன்றுப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை ஹமாசும் பி.எல்.ஓ-வும் உருவாக்க இவ்வொப்பந்தத்தில் ஒத்துக்கொண்டனர். 6 மாதத்திற்குள் பாலத்தீன நிர்வாக மன்றத்திற்குப் புதிதாக தோ;தல் நடத்தவும் ஏற்றுக்கொண்டனர்.

இசுரேல் - வட அமெரிக்க வல்லரசு கையடக்க ஆளாக இருந்த பி.எல்.ஓ தலைவர் அப்பாஸ் ஹமாஸ் போராளி அமைப்போடு இவ்வாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டது ஆக்கிரமப்பாளர்களின் ஆதிக்க வெறித் திட்டத்தில் மண்ணைப் போட்டது.

இதில் ஆத்திரமுற்ற ஜியோனிய இசுரேல் அரசு அன்று இரவே (ஏப்ரல் 24) காசா மீது வான் தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த இனக்கொலைத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதுவரை 160 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது, இசுரேல் அரசு. பல்லாயிரக்கணக்கானோர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத வகையில் கொடுங்காயம் அடைந்துள்ளனர். தொகைதொகையாக வடக்கு காசா பகுதியை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனா;.

ஐநா மன்றத்தில் உறுப்பு வகிக்கும் நாடுகளில் 115 நாடுகளுக்கும் மேற்பட்டு பாலத்தீனப் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என அங்கீகரித்துள்ளன. முழு உறுப்பு நாடு என்ற நிலை இல்லா விட்டாலும் வாக்களிக்கும் உரிமையில்லாத உறுப்பு நாடாக பாலத்தீனம் ஐநா மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காசா, மேற்குக் கரை, கோலன் குன்று ஆகிய பாலத்தீன தாயகப்பகுதிகளை இசுரேலிய அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்று ஐநா மன்றம் வரையறுக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலத்தீனத்திற்கு துணைத் தூதரகங்கள் உண்டு. அப்படியிருந்தும் மீண்டும், மீண்டும் சியோனிய இசுரேல் ஆண்டு தவறாமல் பாலத்தீனத்தின் மீது இனக்கொலைத் தாக்குதல் நடத்துவது இசுரேலின் தனி வலுவினால் அல்ல.

இசுரேல் எவ்வளவு முறை பன்னாட்டுச் சட்டங்களை மீறினாலும் அவை அனைத்திற்கும் முட்டுக் கொடுத்து வரும் பின்னணி பலம் வட அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். வட அமெரிக்க வல்லரசின் துணிச்சலில் தான் இசுரேல் தனது ஆக்கிரமிப்புப் போரை எந்த கேள்வியுமின்றி தொடர்கிறது. உண்மையில் இசுரேல் – வட அமெரிக்க அச்சு இணைந்து நடத்தும் ஆக்கிரமிப்பு தான் இந்த பாலத்தீன ஆக்கிரமிப்பு.

மத்தியக் கிழக்கில் உள்ள எண்ணெய் வளத்தை ஆதிக்கம் செய்ய மேற்குலக ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது இசுரேல் நாடு. ஆயினும் யூத இனத்திற்கு உரிய நாடாக இசுரேல் அமைந்திருப்பதில் யாருக்கும் எதிர்ப்பில்லை. பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் யாசர் அராபத் அவர்களே “இசுரேல் என்பது ஓர் வரலாற்று உண்மையாகி விட்டது. இசுரேலும், பாலத்தீனமும் அண்டை நாடுகளாக இருக்கலாம்” என்று ஏற்றுக்கொண்டார்.

இசுரேல் செய்யும் அனைத்து இனக்கொலை நடவடிக்கைக்கும் அரணாக வட அமெரிக்க வல்லரசு நிற்பதற்கு அரபு உலகத்தின் எண்ணெய் வளம் மட்டும் காரணமல்ல, வட அமெரிக்காவில் யூத இனம் வலுவான செல்வாக்குப் பெற்ற இனமாக இருப்பதே முக்கிய காரணமாகும்.

குடியரசுக் கட்சி, சனநாயக கட்சி, என எந்தக் கட்சி வட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சி யூத இன செல்வாக்கில் நடப்பது தான் வட அமெரிக்காவின் வழமை. ஒபாமாவும், அதற்கு விதிவிலக்கானவா; அல்ல. பொருளியல், கருத்தியல், அதிகாரவர்க்கத் தளங்களில் யூத இனத்தின் பிடி வட அமெரிக்காவில் மிக வலுவானது.

யூத முதலாளிகள் படைக்கருவி உற்பத்தியிலும், வங்கித் துறையிலும் வலுவானவர்கள் ஆவர். டைம்ஸ் வார்னர், வால்ட்டிஸ்னி, பாக்ஸ் நியூஸ், ஏபிசி, என்பிசி, அசோசியேட்டட் பிரஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், நியூஸ் வீக் உள்ளிட்ட வலுவான ஊடகங்கள் அனைத்தும் யூதர்களுடையவை. அங்கு பணியாற்றும் முதன்மைச் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர் பெரும்பாலானோர் யூதர்களே. ஹாலிவுட் திரைத்துறை யூத ஆதிக்கத்திற்கு உட்பட்டது.

சியோனிய அதிகார மையம் (Zionist Power Configuration - ZPC) என்ற அமைப்பு திட்டமிட்ட முறையில் வட அமெரிக்க அதிகார வர்க்கத்தை யூத மயமாக உருவாக்கி வருகிறது. வட அமெரிக்க இசுரேல் பொதுமக்கள் துறைக் குழு (American Israel Public Affairs Committee -AIPSC) என்ற அமைப்பு வட அமெரிக்க அரசியலாளர்களுக்கு பணம் அள்ளித்தரும் முதன்மையான நிறுவனமாகும். ஒபாமாவும், அவரது சனநாயகக் கட்சியும் இதில் அடங்கும்.

இவ்வாறு வட அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க ஆளும் சக்தி யூத இனத்தினர் ஆவர். இந்த யூத இணைப்புத் தான் இசுரேல் - வட அமெரிக்க அச்சின் அடிப்படையாகும்.

சனநாயகம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி என வாய் உபதேசம் செய்தாலும் எந்த மனித மாண்புகளையும் மதிக்காத அரசு வட அமெரிக்க வல்லரசு ஆகும். தேச அரசு, சனநாயக ஆட்சி முறை போன்ற எதுவும் இல்லாத பழைய மன்னர் ஆட்சிக் காலத்தை விட மிக மோசமான, நெறியற்றப் பேரரசாக (Empire) வட அமெரிக்கா செயல்படுகிறது.

அதனால் தான் சட்டப்படி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் ஆட்சியை வட அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. அதாவது தேர்தல் நடத்தி மக்கள் வாக்கு போடலாம், ஆனால் அது வட அமெரிக்க அரசு விரும்புவர்களுக்கு அளிக்கும் வாக்காக இருக்க வேண்டும் என்பது தான் வட அமெரிக்க முத்திரை சனநாயகம்.

ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டு உலகெங்கும் உள்ள தேச அரசுகளை ஆக்கிரமிக்கும் பேரரசாக விளங்கும் வட அமெரிக்க வல்லரசு தான் கடந்த 60 ஆண்டுகளாக பாலத்தீனத்தில் குருதிக் கொட்டுவதற்கு வலுவானக் காரணமாகும். இயற்கை வளத்தை சூறையாடும் பொருளியல் நோக்கமும், யூத இன இணைப்பும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மனித பேரழிவு இது.

அவ்வப்போது கோருவது போல் போர் நிறுத்தம் கோருவதால் மட்டும் சிக்கல் தீர்ந்துவிடாது. இது தீர்வதற்கு உடனடித்தேவை போர் நிறுத்தம். இறுதித் தீர்வு பாலத்தீன விடுதலை.

இந்த நிரந்தர தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பதே உலெங்கும் உள்ள மனித நேயர்களின் கடமை. ஏனெனில் மனித சுதந்திரம் என்பது அதன் குறிப்பான வடிவத்தில் தேசிய இன சுதந்திரமே ஆகும்.

இந்திய அரசு ஆக்கிரமிப்பாளன் இசுரேலையும், ஆக்கிரமிக்கப்பட்டப் பாலத்தீனத்தையும் சமத் தொலைவில் வைத்துப் பார்ப்பதும், இச்சிக்கல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே மறுப்பதும் அதன் வெளிப்படையான, வட அமெரிக்கச் சார்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்திய அரசு, இசுரேலின் ஆக்கிரமிப்பை உறுதியாகக் கண்டிப்பதுடன் காசா மீதான வான்தாக்குதல்களையும், தரைவழி ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த பன்னாட்டு அரங்கத்தில் குரல் எழுப்ப வேண்டும். இசுரேலுடனான பொருளியல் உறவை நிறுத்தி வைக்க வேண்டும். பாலஸ்தீன விடுதலைக்கு உரிய பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

0 கருத்துகள்:

இந்திய வரவு - செலவுத் திட்டம் பாசாங்கு சொற்களுக்குள் பதுங்கியுள்ள கொலைவாள் - தோழர் கி.வெங்கட்ராமன்

இனிவருங்காலத்தில் திட்டமிட்டப் பொருளியல், ஆண்டு வரவு - செலவுத் திட்டம் ஆகியவை பொருள் இழந்து போகும் வகையில் நலிந்து, மெலிந்து தேயும் திசை வழியை இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டம் உறுதியாக எடுத்துக்காட்டுகிறது.
நரேந்திரமோடி அரசின் முதல் வரவு - செலவுத் திட்டம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் பெருங்குழுமங்களின் ஊடகங்கள் உருவாக்கி வைத்திருந்தன. ஆனால் 2014 -- 2015-க்கான இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் முந்தைய ஆட்சியின் பொருளியல் திசையிலேயே முன்பை விட வேகமாகப் பயணிக்கிறது.
கடந்த 10.07.2014 அன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி முன்வைத்த வரவு - செலவுத் திட்டம் அதிக பேச்சு, குறைந்த செயல் பாடு என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படு வதற்கு சில நாட்களுக்கு முன்னால் இந்திய அரசு அறிவித்த சில பொருளியல் நடவடிக்கைகளை இணைத்து ஆய்வு செய்தால் தான் மோடி அரசின் முதல் வரவு-செலவுத் திட்டத்தின் உண்மையான முகம் தெரியும்.
இந்தியப் பொருளியலிலிருந்து அரசை மிக வேகமாக விலக்கிக் கொள்ளும் தனியார் மய அறிவிப்புகள் நரேந்திரமோடி பதவி ஏற்றதிலிருந்து அடுத்தடுத்து வருகின்றன.
பா.ச.க அரசின் தொடர் வண்டித் துறை வரவு-செலவுத் திட்டம் கடந்த சூலை 8 ஆ-ம் நாள் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு முன்பாகவே பயணிகள் கட்டண மும், சரக்குக் கட்டணமும், கடுமை யாக ஏற்றப்பட்டுவிட்டன. சதானந் தகவுடா முன்வைத்த தொடர் வண்டித்துறை வரவு-செலவுத் திட்டம் கட்டண உயர்வு இல்லாத வரவு--செலவு அறிக்கை போல் பாசாங்கு செய்தது.
ஆனால் தொடர்வண்டியையும், அது ஓடும் தண்டவாளத்தையும் தவிர பிற அனைத்தும் தனியார் மயமாகும் அறிவிப்புகள் வெளியி டப்பட்டுள்ளன. அதே நேரம் 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம், அனைத்தையும் தன்னிச்சையாக உயர்த்துவதற்கு நிலையான ஏற் பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.
தென்னக தொடர்வண்டித்துறையில் தமிழ்நாட்டுக்குள் மேற் கொள்ள வேண்டிய விரிவாக்கப் பணிகளோ, இரட்டைப்பாதை அமைக்கும் பணிகளோ, புதிய வண்டிகள் விடும் திட்டமோ, அறிவிக்கப்படாமல் வடநாட்டிலிருந்து சென்னைக்கு வரும் வகையில் 6 புதிய இரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. வடமாநிலங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வேலை தேடி தமிழ்நாட்டுக்குள் வந்து குவிவதை இத் திட்டங்கள் தீவிரப்படுத்துமே தவிர தமிழகத்துக்கு பெருமளவு பயன்தரப் போவதில்லை.
இந்திய அரசின் பொது வரவு-செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தனது நீண்ட 2லு மணி நேர உரையில் சொன்னதை விட சொல்லாததே அதிகம். அவை 2014--2015 வரவு--செலவுத் திட்ட அறிக்கையின்பின் இணைப்புகளிலும், அதற்கு முதல் நாள் முன் வைக்கப்பட்ட பொருளியல் ஆய்வறிக்கையிலும் காணப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த “குறைவான அரசாங்கம்’’ (less Government) என்பது சிறிய அமைச்சரவையை மட்டும் குறிக்கவில்லை அதை விட பொருளியலில் அரசு என்ற ஒன்றே இருப்பதை உணரமுடியா வண்ணம் மெலியச் செய்வதே ஆகும்.
நிதி அமைச்சகம் 09.07.2014 அன்று முன்வைத்த 2013 -- 2014க் கான பொருளியல் ஆய்வறிக்கை முன் மொழிந்துள்ள மாற்று நட வடிக்கைகள் இத்திசை வழியை சுட்டிக் காட்டுகின்றன. பொருளியல் செயல்பாடுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து விடுவது, இத் தனியார் பெருங்குழுமங்களிடையே மோதல் வருமானால் அவற்றைச் சரிசெய்வதும், அரசின் செயல் பாட்டோடு இக்குழுமங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைப்பதும் மட்டுமே அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டும் என்று இந்தப் பொருளியல் ஆய்வறிக்கை வரையறுக்கிறது.
இதற்கு ஏற்ப வரும் நிதியாண்டுக்கான பா.ச.க அரசு வரவு-செலவுத் திட்டத்தில் அயல்நாட்டு நேரடி முதலீட்டுக்கான வரம்புகள் துறை தோறும் தளர்த்தப்பட்டுள்ளன. கூரை மீது ஏறி தேசப் பக்த கூச்சல் போடும் பா.ச.க அரசு பாதுகாப்புத் துறையில் அயல்நாட்டு மூலதனங்களின் வரம்பை 26 விழுக்காட்டிலிருந்து 49 விழுக்காடாக உயர்த்தியிருக்கிறது.
காப்பீட்டுத் துறையிலும், மனை வணிகத் தொழிலிலும் அயல் முதலீட்டுக்கு இருந்த வரம்புகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு விட்டன. பெயருக்கு ஒரு இந்திய நாட்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு வெளிநாட்டு பெருங்குழுமங்கள் மனை வணிகத்தில் முற்று முழுதாகக் கோலோச்ச முடியும்.
காப்பீட்டுத் துறையில் தனியார் குழுமங்கள் அனுமதிக்கப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் கடும் பாதகங்களையே ஏற்படுத்தும் என்பதை ஏற்கெனவே மக்கள் உணர்ந்து வருகின்றார்கள்.
எடுத்துக்காட்டாக மாற்றப் பட்ட வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தில் உழவர்கள் செலுத்த வேண்டிய பருவக்கட்டணம் (பிரிமியம்) மிகப்பெரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை பெருவதற்கான வழிமுறைகளும் கெடுபிடியாக்கப்பட்டுவிட்டன. இக்காப்பீட்டுத் திட்டத்தில் ரிலையன்ஸ், பஜாஜ், டொயாட்டோ, ஸ்டார் போன்ற பெருங்குழுமங்கள் அனுமதிக்கப்பட்டதால் வந்த விளைவு இது. இப்போக்கு இனி தீவிரப்படவே செய்யும்.
அரசிடமும், இந்திய நாட்டு தொழில் நிறுவனங்களிடமும் போதுமான மூலதனம் இல்லாததாலேயே வெளிநாட்டு மூலதனங்கள் வரவேற்கப்படுகின்றன என நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி இதற்கு நியாயம் கற்பிக்கிறார். இதற்கு ஏற்ப நிலம் கையெடுப்பு சட்டங்கள், சுற்றுச்சூழல் விதிகள், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவை வளைக்கப்படுகின்றன. (இதுபற்றி சென்ற இதழில் குறிப்பிட்டோம்)
ஆனால் விப்ரோ, இன்போசிஸ், சன்பார்மா, டாடாவின் டிசிஎஸ், நால்கோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும், பி.எச்.இ.எல், கோல் இந்நியா போன்ற அரசுத் துறை நிறுவனங்களும், பல்லாயிரம் கோடி உபரி நிதியோடு உப்பியிருக்கின்றன. கடந்த சூன் 11, 2014 நாளிட்ட எகனாமிக் டைம்ஸ் நாளேடு இந்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. தனியார் மற்றும் இந்திய அரசின் தொழில் நிறுவனங்களில் முதல் வரிசையில் உள்ள 126 நிறுவனங்கள் கடந்த நிதியாண்டு இறுதியில் குவித்துவைத்துள்ள உபரி நிதி சுமார் 9.3 இலட்சம் கோடி ரூபாய் என அந் நாளேடு புள்ளிவிபரங்களை வெளியிட்டது.
இந்த உபரி நிதியில் பெரும்பாலான தொகை வெளிநாடுகளில் கருப்பு மூலதனங்களாக குவிக்கப் பட்டுள்ளன.

ஆனால் மூலதனப்பற்றாக்குறை எனக் காரணம் கூறி அயல்நாட்டு நேரடி முதலீட்டுக்கு இந்திய அரசு சலுகைகளை வாரி வழங்கிவரவேற்கிறது.
பொதுத்துறை - தனியார்த்துறை கூட்டாண்மை என்ற பெயரில் அனைத்து கட்டமைப்புத் திட்டங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப் படுகின்றன. இந்த வரவு - செலவுத் திட்டத்தில் இந்த வழிமுறை முதன்மையான ஒன்றாக முன்வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் சாலைகள், துறை முகங்கள், பிற நீர் வழிகள், தொடர்வண்டி பயணங்கள் ஆகிய அனைத்துக்கும் தனியாரிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பொதுத்துறை- தனியார்த் துறை கூட்டாண்மை என்பது தண்ணீர், மின்சாரம். எரிபொருள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான மென்மையான சொல்லாட்சி ஆகும்.
பொதுச் செலவினங்களை குறைப்பதன் வழியாக நிதிப்பற்றா குறையை சரிசெய்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்வைக்கப் பட்டுள்ளனவே தவிர வசதிபடைத் தவரிடம் வரி வசூல் செய்து நிதி ஆதாரங்களை பெருக்கிக்கொள்ளும் வழிமுறை பின்பற்றப்படுவ தில்லை.
தனிநபர் வருமானவரி மட்டு மின்றி பிற நேரடி வரி விதிப்புகளும் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளன. மறுபுறம் 7525 கோடி ரூபாய் மறைமுக வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை விட குறைவான அளவிலேயே வரி வசூல் நடப்பது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்கிறது. இது தெரிந்தே திட்டமிட்ட மோசடியாக நடக்கிறது.
இந்த ஆண்டும் அதுவே தொடர்வது உறுதி. எனவே எதிர் பார்க்கப்பட்ட அளவு வரவு கிடைக்கவில்லை என்று சொல்லி மக்களுக்கான பொதுச் செலவுகளை வெட்டிச் சுருக்குவது இந்த ஆண்டு நெடுகிலும் நடக்கும். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடே இவ்வகையில் பெருமளவில் சேதாரத்தைச் சந்திக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றும் பணம் திரட்டுவதையே முதன்மை நிதி ஆதாரமாக கடந்த அரசு செய்து வந்தது. இதே போக்கு மோடி அரசில் தீவிரப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 17 ஆயிரம் கோடி கூடுதலாக திரட்டும் வகையில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொதுத்துறை நிறுவனப் பங்கு களைத் தனியாருக்கு விற்க இந்த வரவு - செலவுத் திட்டம் முன்மொ ழிந்துள்ளது.
பெட்ரோலியப் பொருள்கள் மீதான மானியம் 22054 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது. இதற்கு இசைய மாதந்தோறும் டீசல் விலையை 50 பைசாவும், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த் திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுவிட்டன.
தமிழ்நாட்டு நியாய விலை கடைகளுக்காக ஒதுக்கீடு செய்யப் படும் மண்ணென்ணெய் அளவு மேலும் வெட்டப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளைப் போலவே அனைத்து வரிகள் மீதும் கல்வி மேல்வரியாக (சர்சார்ஜ்) 10 விழுக்காடும், உயர்கல்வி வரியாக 3 விழுக்காடும் திரட்டப்படுவது இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் தொடர்கிறது. இவ்வாறு திரட்டப் படும் நிதி கல்வி வளர்ச்சிக்கு செலவு செய்யப்படவில்லை. அரசின் பற்றாக்குறையை ஈடுசெய்துக் கொள்ளவே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி உண்மை அளவில் குறைக்கப்பட்டு விட்டது.
சென்ற அரசின் இடைக்கால வரவு -- செலவுத் திட்டத்தில் எழுப்பப் பட்டது போலவே இந்த வரவு-செலவுத்திட்டத்திலும் வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக ஆரவாரம் எழுப்பப்படுகிறது. 5 இலட்சம் கோடி ரூபாய் வேளாண்மைக்கு ஒதுக்கப் பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்துக்கொண்டார் அருண் ஜெட்லி.
கடந்த மன்மோகன்சிங் ஆட்சியிலேயே வேளாண்மை என்ற தலைப்பில் வேளாண்மை சார்ந்த விதை நிறுவனங்கள் உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள் தனியார் சேமிப்புகிடங்குகள் போன்ற பலவும் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசுத்துறை வங்கிகள் வழங்கும் வேளாண்மைக் கடனில் உண்மையில் உழவர்கள் மிகச்சிறிதளவே பயனடைகிறார்கள் என்பதை இதற்கு முன் பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
இதேபோக்கு இப்போதும் தொடர்கிறது. வரவு-- செலவுத் திட்டத்தில் வேளாண் கடனுக்கு இன்று அறிவித்துள்ள தொகையில் ஒரு ரூபாய் கூட உண்மையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அவை எல்லாம் அரசுத் துறை வங்கி களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுநெறிகள் மட்டுமே.
கடந்த நிதியாண்டு அரசுத் துறை வங்கிகள் வழங்கிய வேளாண்கடனில் 10 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள உழவர்கள் பெற்றுள்ள கடன் வெறும் 5 விழுக்காடு தான். மீதமுள்ள 95 விழுக்காடு வேளாண்கடனும், வேளாண்மையின் பெயரால் விதை நிறுவனங்கள், பூச்சுக்கொல்லி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், உணவுப் பதப்படுத்தும் தொழிலகங்கள், தனியார் கிட்டங்கிகள், போன்றவை பெற்ற வையே ஆகும்.
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள வேளாண் கடன் நிதியிலும் பெருந்தொழிலதிபர்களே குறைந்த வட்டிக்கடன் பெறுவார்கள்.
இரண்டாவது பசுமைப் புரட்சி ஊக்குவிக்கப்படும் என்று இந்த வரவு - -செலவுத்திட்ட அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் மரபீனி மாற்றப்பட்ட விதைகள் எந்தவித உருப்படியான அறிவியல் சோதனையும் இன்றி சந்தையில் இறக்கப் பட உள்ளன என்பதே ஆகும்.
இதற்கேற்ப கீரின் பீஸ் அமைப்பு, வந்தனா சிவாவின் நவ தானியா அமைப்பு உள்ளிட்ட தொண்டு அமைப்புகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் மரபீனி மாற்று விதைகளுக்கு எதிராக மக்களையும் அறிவாளர்களையும் ஒருங்கு திரட்டும் பணியில் முன்னணியில் உள்ளன.
மதன்மோகன் மாளவியா, தீன தயாள் உபாத்தியாயா, சியாமா, பிரசாத் முகர்ஜி போன்ற இந்துத்துவா அமைப்பு தலைவர்களின் பெயர் அரசுத் திட்டங்களுக்கு சூட்டப் பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றில் சிறு மாறுதல்கள் செய்து இந்தப் பெயர்சூட்டல்கள் நிகழ்ந்துள்ளன.
குசராத் முதலமைச்சராக மோடி இருந்த போது அறிவித்த மாபெரும் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவும் பணிக்கு இந்திய அரசின் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கை நெசவுத் தொழில் மேம்பாட்டிற்கு வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் முன்னுரிமை எப்படி அமையும் என்பதற்கான சான்று இது.
சூழலுக்கு இசைவான மின்சார உற்பத்திக்கு கவனம் செலுத்தப்படும் என்ற அறிவிப்போடு சூரிய ஒளி மின்சாரத்துக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடும் வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் வடிவமைக்கபட்டள்ளது.
சூரிய ஒளி பரவலானது. அதிலிருந்து செய்யப்படும் மின்சார உற்பத் தியும் பரவலானதாகவே இருக்க வேண்டும். 0.5 மெகாவாட், 1 மெகாவாட் என்ற அளவில் சிறு சிறு சூரிய ஒளி மின்உற்பத்தி ஏற்பாடுகள் செய்து அங்கங்கே உற்பத்தியாகும். இடத்திலேயே வழங்குவது தான் செலவு குறை வானதும் சுற்றுச்சூழலுக்கு இசை வானதும் ஆகும். இதற்கு மாறாக மொத்தம் 16 ஆயிரம் மெகாவாட் உற்பத்திக்கு பெரிய பெரிய சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கே இந்த வரவு--செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டச் செலவு ஒதுக்கீட்டை மாநிலங்களில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என முடிவுசெய்வதில் மாநிலங்களுக் குள்ள அதிகாரம் பெருமளவு குறைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ((Central Assistance) பெருமளவு குறைக்கப் படுகிறது.
இந்த வரவு-செலவுத்திட்ட அறிக்கையிலும், அதற்கு முதல் நாள் வைக்கப்பட்ட பொருளியல் ஆய்வ றிக்கையிலும் திட்டக்குழு, திட்ட மிட்ட பொருளியல் கொள்கை ஆகியவை கைவிடப்படுவதற்கான கொள்கை அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில் பா.ச.க அரசு முன்வைத்துள்ள 2014--2015 வரவு-செலவுத்திட்டம் உலகமயம், தாராள மயம், இந்துத்துவமயம், ஆகியவற்றின் கலவையாகும்.

0 கருத்துகள்:

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கச்சத்தீவு சிக்கல் - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழினப் பகை போக்கில் காங்கிரசு ஆட்சிக்கும், பா.ச.க ஆட்சிக்கும் இம்மி அளவும் வேறுபாடில்லை என்பதை இன்னொரு முறை மோடி ஆட்சி மெய்ப்பித்துள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிரான பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விவாதத்திற்கு வந்த போது இந்திய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட உறுதி உரை (பிரமாணப்பத்திரம்) “கச்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய கடற்பரப்பு இந்தியாவின் ஆட்சி எல்லையில் இருந்ததே இல்லை. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் எல்லை வரையறுப்புச் செய்ய வழி வகுத்தன.
இவ்வொப்பந்தங்கள் இறுதியானவை. இக்கடற்பரப்பில் இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி உரிமை கோரமுடியாது’’ என்று கூறியது. கச்சத்தீவும், அதைத் தொடர்ந்த கடற்பரப்பும் பன்னெடுங்காலமாக தமிழர்களின் தாயகப்பரப்பாக இருந்ததை அப்பட்டமாக மறுக்கும் பொய்யுரையை நரேந்திர மோடி அரசும் முன்வைத்துள்ளது. (இச்சிக்கல் குறித்து விரிவான விவரங்களுக்கு காண்க: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம், 2013 செப் 16-30 இதழ்)
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆண்டு தவறாமல் இராமேசுவரம் வந்து மீனவர்களைக் கட்டித் தழுவி ‘கச்சத்தீவை மீட்டுத் தருவோம், மீன்பிடி உரிமையைப் பாதுகாப்போம்’ என பா.ச.க உயர்மட்டத் தலைவர்கள் சுஷ்மா சுவராஜும், வெங்கையா நாயுடுவும் அளித்த உறுதிமொழியெல்லாம் வெறும் நடிப்புத்தான் என்பது உறுதியாகி விட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் என்று பொது வழக்கில் நாம் பேசுகிற 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி - செரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம் பாக் நீரிணை கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது என்பதை ஏற்கெனவே விளக்கி இருக்கிறோம்.
தெளிவான சிறப்புக் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் 1958, கடல் பரப்புக் குறித்த ஐ.நா ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளன. இவ்விதிகளில் கூறப்பட்டுள்ள சம தொலைவு கோட்பாடு (Equidis tance Principle) வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது. கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து விட வேண்டும். அதன் மூலம் அந் நாட்டை இந்திய அரசியல் செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூதான நோக்கம் தவிர வேறெதுவும் இதில் இல்லை.
இது குறித்தெல்லாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்து விட்டோம்.
எப்படி இருப்பினும் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மாற்றப் பட முடியாதவை என்றும் இவ் ஒப்பந்தங்கள் மூலம் எட்டப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறுப்பு மாற்ற எண்ணாத இறுதி நிலைப்பாடு என்று கூறுவது சட்டப்படி சரியானது தானா எனப் பார்க்க வேண்டும்.
பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக இரண்டு நாடுகளோ, அதற்கு மேற்பட்ட நாடுகளோ தங்களுக்கு இடையிலான கடல் எல்லைகளை வரையறுத்துக் கொண்டால் அது செல்லத்தக்கதல்ல என்பதே கடல் எல்லைக் குறித்த பன்னாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புரையாகும். ஏனெனில் தரை எல்லையில் இரண்டு நாடுகள் ஒப்பந்தம் மூலம் வரையறுப்பு செய்துக் கொள்வதற்கும், கடல் எல்லையில் வரையறுப்பு ஒப்பந்தம் காண்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
பன்னாட்டுக் கடற்பரப்பு என்பது பொருளியல் வகையிலும், பாதுகாப்பு நிலையிலும், கடல் வணிகப்பாதை என்ற வகையிலும் பல நாடுகளைப் பாதிக்கும் ஒன்றாகும். இதில் இரண்டு அண்டை நாடுகள் தங்கள் விருப்பப்படி செய்துக் கொள்ளும் எல்லை வரையறுப்பு ஒப்பந்தம் பன்னாட்டு விளைவுகளை உலக அரங்கில் ஏற்படுத்தக் கூடியது.
எனவே தான் இரு நாடுகளுக்கு இடையில் செய்துக்கொள்ளப்படும் கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தம் எந்த பிறழ்ச்சியும் இல்லாமல் பன்னாட்டு சட்டங்களுக்கு இசையவே அமைய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக வங்காளத் தேசத்திற்கும், மியான்மர் (பர்மா) நாட்டிற்கும் இடையில் செயிண்ட் மார்ட்டின் தீவு குறித்து செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக கடல் சட்டங்கள் குறித்த பன்னாட்டுத் தீர்ப்பாயம் அளித்தத் தீர்ப்பு இச்சிக்கல் குறித்து விளக்குகிறது.
வங்காளத் தேசமும், மியான்மாரும் 1984-இல் தங்களுக்கு இடையில் செய்துக்கொண்ட கடல் எல்லை வரையறுப்பு ஒப்பந்தம் ஐ.நா. கடல் சட்டங்களுக்கு இசைய சம தொலைவுக் கோட்பாட்டின் படி உருவாக்கப்பட்டதா என்ற வினா சர்வதேச அரங்கில் எழுப்பப்பட்டது. இதுக்குறித்து இரு நாட்டு பேராளர்களுக்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்த குறிப்புரை (Minutes of Agreement) செல்லத்தக்கதா என்ற சிக்கலும் எழுந்தது.
இது குறித்து பன்னாட்டுத் தீர்பாயம் 2012 மார்ச் 14 அன்று தீர்ப்புரை வழங்கியது. இத்தீர்ப்புரையின் முக்கிய பகுதிகளான பத்தி 164 முதல் பத்தி 169 வரை இவ் ஒப்பந்தத்தில் சம தொலைவுக் கோட்பாடு உரிய சிறப்பு காரணங்கள் முன் வைக்கப்படாமல் மீறப்பட்டுள்ளது. எனவே அது செல்லத்தக்கதல்ல எனக் கூறியது. இதன் அடிப்படையில் செயிண்ட் மார்டின் தீவு பங்களா தேசுக்கே சொந்தமானது என ஆணையிட்டது.
இதேபோல் நிகராகுவா - எதிர் - ஹாண்டுராஸ் வழக்கில் 2007 அக்டோபர் 8-இல் தீர்ப்பளித்த பன்னாட்டு நீதிமன்றம் சமதொலைவுக் கோட்பாட்டின் படி பாபல் தீவு, சபானா தீவு, போர்ட் ராயல் தீவு, தென் தீவு, ஆகிய நான்கு தீவுகளும் ஹாண்டுராஸ் நாட்டுக்கே சொந்த மானது என தீர்ப்புரைத்தது. நிகராகுவா தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.
சமதொலைவுக் கோட்பாடு பின்பற்றப்படாமல் தவறான ஒப்பந்தங்களே செய்யப் பட்டிருந்தாலும் அதனை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு ஒரு தலையாக இரத்து செய்ய (Unilateral Termination) முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அவ்வாறு ஒரு தரப்பாக இந்தியா 1974 மற்றும் 1976 ஒப்பந் தங்களை இரத்து செய்ய முடியும் என்பதே நமது விடை.
ஒப்பந்தங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த வியன்னா மாநாடு ஏற்படுத்திய வரையறுப்பு இதற்கு வழிவகுக்கிறது. ஐநா சார்பில் பன்னாட்டு ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தும் சட்டவிதிகள் குறித்து நடைபெற்ற மாநாடு அது. வியன்னா மாநாடு 1969 மார்ச் 23 அன்று இயற்றிய தீர்மானம் இதற்கான சட்ட விதிகளை வரையறுத்தது.
இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் ஒரு தரப்பு நாட்டின் உள்நாட்டு சட்டங்களுக்கு எதிராக அமையுமானால் அந்த ஒப்பந்தம் செல்லத்தக்க தல்ல என வியன்னா சட்டத்தின் விதி 46(1) வலியுறுத்துகிறது.
பெருபாரி யூனியன் தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் ஆயம் இச்சிக்கல் தொடர்பான இந்தியா- பாகிஸ்தான் ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கியது. இந்திய எல்லையில் வரையறுப்போ மறு வரையறுப்போ செய்ய வேண்டுமானால் அதனை அரசமைப்பு சட்டக் கூறு 1-இல் திருத்தம் செய்வதின் மூலமே நிலைநாட்ட முடியும் என அத் தீர்ப்புக் கூறியது.
கச்சத்தீவு ஒப்பந்தம் இத்தீர்ப்பின் படி சட்ட ஏற்பு பெறவில்லை. அரசமைப்புச் சட்ட கூறு 1-இல் இது தொடர்பான திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை. கச்சத்தீவும் அதை ஒட்டிய கடற்பரப்பும் இந்தியாவின் எல்லைக்குற்பட்ட பகுதியாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என இந்திய அரசு கூறுவது அப்பட்டமான பொய்யுரை என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து ஏற்கெனவே எடுத்துக் காட்டியிருக்கிறோம். எனவே வியன்னா சட்ட விதி 46(1)-ன் படி கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டப்படி செல்லாத ஒப்பந்தம் ; (Invalid Treaty) ஆகும்.
மேலும் செல்லதக்க ஒப்பந்தமே ஆனாலும் மாறியுள்ள சூழ்நிலையில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பும் ஒரு தரப்பு அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றினால் அவ் ஒப்பந்தத்தை திரும்பப் பெறலாம். வியன்னாச் சட்டம் இதற்கு வழி வழங்குகிறது.
வியன்னா சட்ட விதி 62(2) ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு ஒரு தலையாக பின்வாங்குவதற்கு உரிமை வழங்குகிறது. அவ்வாறு ஒப்பந்தத்தை இரத்து செய்ய விரும்பும் ஒரு தரப்பானது மறு தரப்பிற்கு குறைந்தது 3 மாதம் அவகாசம் அளித்து முன்னறிவிப்பு அளிக்க வேண்டும் என வியன்னா சட்ட விதி 65(2) கூறுகிறது.
இதன் படி இலங்கைக்கு 3 மாத முன்னறிவிப்பு கொடுப்பதன் மூலம் கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு இந்திய அரசு சட்ட நடைமுறைகளை தொடங்கி விடலாம். எனவே இந்திய- இலங்கை கடல் எல்லை தொடர்பான 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மாற்றமுடியா தவை என இந்திய அரசு கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
ஆயினும் ஆட்சி மாறினாலும் இந்திய அரசு தொடர்ந்து இவ்வாறு கூறுவது அதுவும் வரலாற்று ஆவணங்களையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்சநீதி மன்றத் தீர்ப்பையும், பன்னாட்டுச் சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டு கூறுவது தமிழினப்பகை காரணமாகவே ஆகும்.

0 கருத்துகள்:

மன்மோகன் அடிச்சுவட்டில் நரேந்திர மோடி - தோழர் கி.வெங்கட்ராமன்

முதல் நிலை ஆதாரங்களின் படி பார்த்தால் நரேந்திர மோடி அரசு மன்மோகன் சிங் அரசுக்கு சற்றும் வேறுபடாமல் அதே பொருளியல் திசையில் நடைபோடுவது தெரிகிறது.
ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ‘கசப்பு மருந்து’ குறித்து மோடி பேசத் தொடங்கிவிட்டார். 2014, சூன் 13 அன்று பிரதமர் அலுவலக டுவிட்டர் மூலம் விடுத்த செய்தியில் “நாட்டின் நீண்டகால தேவையை மனத்தில் கொண்டு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது கசப்பு மருந்து” என்று தெரிவித்தார்.
இவர் சொல்லும் ‘கடும் நடவடிக்கை’ மக்களுக்கு எதிராகத்தானே தவிர பெருமுதலாளி நிறுவனங்களுக்கும், வணிக சூதாட்டகாரர்களுக்கும் எதிராக அல்ல.
மோடியின் வெற்றிக்காக பணத்தையும், பரப்புரையையும் வாரி வழங்கிய வெளிநாட்டு, வடநாட்டு பெருமுதலாளிகள் அதற்கு ஈடாக விரைவான பயன்களை எதிர்பார்க் கிறார்கள். “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்ற கீதை உபதேச மெல்லாம் மக்களுக்குதானே தவிர முதலாளிகளுக்கு அல்ல. இது மோடிக்கும் தெரியும். எனவே இப்பெருமுதலாளிகள் முன் வைக்கும் நிபந்தனைகளை விரைந்து செயலாற்றும் ‘செயல்துடிப்புள்ள’ பிரதமாராக மோடி விளங்குகிறார்.
மோடி பிரதமானவுடன் அவரைச் சந்தித்து தாங்கள் விரும்பும் 15 கடும் நடவடிக்கைகளை முதலாளி சங்கத்தினர் பட்டியளிட்டு வழங்கியிக்கிறார்கள்.
அவற்றுள் சில வருமாறு:
டீசல் விலையை மாதம்தோறும் உயர்த்தும் வகையில் டீசல் மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும். சமையல், எரிவளி விலையையும் மண்ணென்ணெய் விலையையும் மாதந்தோறும் உயர்த்த வேண்டும், உர மானியத்தை விரைவில் விலக்கிக் கொள்ள வேண்டும், நிலம் கையகப்படுத்தல் விதிமுறைகளில் தளர்வு வேண்டும், அமர்த்து – துரத்து என்பதை எளிதாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும், உணவு தானிய கையிருப்பு அதிகமாக இருப்பதால் வேளாண் விளைப்பொருள்களுக்கான அடிப்படை ஆதார விலையை முடிந்த வரை குறைந்த அளவிற்கே உயர்த்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை விரைவுப்படுத்துவதோடு நாடாளுமன்ற ஒப்புதலை எதிர்பார்க்காமலேயே அரசாணைகளின் மூலமாக இலாபமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வகையில் சட்ட ஏற்பாடுக்கள் செய்ய வேண்டும் இதற்கு மாநிலங்களவையில் பா.ச.க கூட்டணிக்கு போதிய எண்ணிக்கையின்மை தடையாக வருமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் மூலம் இதனை நிறைவேற்ற வேண்டும், ஆகியவை முதலாளிகள் முன் வைத்துள்ள பரிந்துரையாகும்.
இவற்றை ஒவ்வொன்றாக மோடி நிறைவேற்றி வருவதைப் பார்க்க முடியும்.
மன்மோகன் சிங் அரசு முன் வைத்த கடந்த ஆண்டு வரவு - செலவு அறிக்கை யிலேயே 5.73 இலட்சம் கோடி ரூபாய்க்கு பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதற்கு மேல் நேரடி வரிவிதிப்பில் வசூலிக்க முடியாத தொகை 5 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது என அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.
மோடி அரசு தன் பங்கிற்கு பட்ஜெட்டுக்கு முன்னாலேயே முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளையும், மக்கள் ம{து வரிச்சுமையையும் வழங்கி வருகிறது.
மகிழுந்து (கார்) தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சலுகைகள், இன்னும் ஆறு மாத்திற்கு தொடரும் என நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருக்கிறார். சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ரூபாய் 4400 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
இது போன்று முதலாளிகளுக்கு வாரி வழங்க நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனையின் மூலம் திரட்டும் தொகையை மன்மோகன்சிங் அரசு அறிவித்த 52 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் கோடியாக உயர்த்தலாம் என அரசு வட்டாரங்களில் விவாதம் நடந்து வருகிறது.

மக்களுக்கு வழங்கும் அனைத்து மானியங்களையும் பெருமளவு வெட்டுவதற்கு நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 50 பைசா வீதம் உயர்த்திக் கொள்ளவும் அதற்கு நிகரான அரசு மானியத்தை குறைத்துக் கொள்ளவும் முடிவெடுக்;கப்பட்டுள்ளது. அதேப் போல் சமையல் எரிவளி விலையை மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்த முடிவுசெய்யப்பட்டு, மக்கள் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக 3 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் இந்த அறிவிப்பு செயலுக்கு வரலாம்.
எரிஎண்ணெய் தொழிலில் கோலோச்சும் ரிலையன்ஸ் அம்பானியும், அதானியும், டாடாவும் மோடியின் வெற்றிக்கு நெருக்கமாகப் பணியாற்றியவர்கள் என்பதை இணைத்துப் பார்த்தால் பெருங்குழுமங்களும் அரசு நிர்வாகமும் இரண்டறக் கலந்து இருக்கும் நிலைமை தெளிவாகும்.
கெடுபிடியான சட்டத்திட்டங்கள் உள்ள நாடு இந்தியா என்ற களங்கத்தை விரைவில் போக்க வேண்டும் என சட்ட அமைச்சர் இரவிசங்கர்பிரசாத் கூறுவது கவனிக் கத்தக்கது.
முதலாளிகள் சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொழிலாளர் நலச் சட்டங்கள் தளர்ந்து போக இருக்கின்றன என்பதற்கான முன் அறிவிப்பு இது. அதே போல் பழங்குடி மக்கள் போராட்டம், மாதக்கணக்கில் தில்லியை முற்றுகையிட்டு குறிப்பாக தில்லியின் புறநகரை நிலைகுலைய வைத்த உத்திரபிரதேச உழவர் போராட்டம் போன்றவை காரணமாக கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட முற்போக்கான சட்டத்திருத்தங்கள் நீக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் வலுவிழக்கச் செய்யப்பட உள்ளது. வரும் கூட்டத் தொடரிலேயே இது முடிவாகலாம் என்பதற்கான முன் அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
தொடர்வண்டித்துறை வரவு - செலவு அறிக்கை வரும் சூலை 8-ம் நாள் முன்வைக்கப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே தொடர்வண்டிக் கட்டணம் சராசரியாக 14.2 விழுக்காடு என்ற அளவிலும், சரக்குக் கட்டணம் 6.8 விழுக்காடு என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்ற ஆட்சியைப் போலவே நெல் கொள்முதல் விலையைக் குவின்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தி வேளாண்மையை இழப்பு சந்திக்கும் தொழிலாக அழுத்துவது மோடி ஆட்சியிலும் தொடர்கிறது.
சென்ற காங்கிரசு அரசைப் போலவே மோடியின் பா.ச.க அரசும் இந்தித் திணிப்பு, இனக்கொலையாளி இராசபட்சேக்கு வரவேற்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு என தமிழினப் பகைப் போக்கிலேயே தொடர்கிறது.
எல்லா வகையிலும் பா.ச.க வின் மோடி ஆட்சி காங்கிரசின் மன்மோகன்சிங் ஆட்சியைப் போலவே செயல்படுகிறது. இவர்களுக்குள் அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை.
ஒரே வேறுபாடு மன்மோகன்சிங் பேசாத பிரதமர், நரேந்த மோடி வாயாடிப் பிரதமர்.

0 கருத்துகள்:

அணி வகுத்து வரும் தொழிலாளர் பகை சட்டத்திருத்தங்கள் - தோழர் கி.வெங்கட்ராமன்

ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி அரசு தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக பெருமளவு வளைத்து விட்டது. இப்போது நரேந்திர மோடி அரசு நடைமுறையில் தொழிலாளர் சட்டங்கள் என்ற ஒரு வகையே இல்லை என்றாக்கத் துடிக்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த நிலையை மீண்டும் கொண்டுவர மோடி அரசு முனைந்து வருகிறது.
1926 தொழிற்சங்க சட்டம், 1947 தொழிற் தகராறு சட்டம். 1950 தொழிச்சாலை சட்டம், 1970 ஒப்பந்த தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களுக்கும் பெருமளவு திருத்தங்களை பா.ச.க அரசு முன்வைத்துள்ளது.
மின்சாரத்தை பயன்படுத்தி 20 தொழிலாளர்களுக்கு மேல் பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தும் என்றிருந்த நிலையில் முந்தைய காங்கிரசு அரசு 40 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் தான் பொருந்தும் என மாற்றியது.
இப்போது பா.ச.க அரசு கொண்டு வர முயலும் திட்டத்தில் 50 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிலகங்களுக்குதான் தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தும் எனக் கூறுகிறது. பல இலட்சம் தொழிலாளர்கள் இத்திருத்தத்தின் மூலம் சட்டப்பாதுகாப்பு அற்றவர்களாக மாற்றபடுவார்கள்.
8 மணி நேர வேலை என்பதை 10 மணி நேரம் என்பதாக மாற்றுவதற்கு தொழிற்சாலை சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒற்றைச் சம்பளத்திற்கே மிகை நேரப்பணி என்பது கூடுதல் நேரத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளையும், குடியிருப்புகளுக்கு வாகனங்கள் அனுப்புவதையும் கட்டாயப்படுத்தாமலேயே பெண் தொழிலாளர்கள் இரவு பணிக்கு அமர்த்தப்படும் வகையில் தொழிற்சாலைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
100 தொழிலாளர்களும் அதற்கு மேலும் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆள் குறைப்பு செய்வதாய் இருந்தால் மாநில தொழிலாளர் ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றுள்ள நிபந்தனையை மாற்றி 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழில் நிறுவனங்களுக்கே இவ்விதி பொருந்தும் என திருத்தம் செய்யப்பட உள்ளது. மிகப்பெரும்பாலான நிறுவனங்கள் இந்த எண்ணிக்கைக்குள் வந்து விடும். முதலாளிகளின் விருப்பப்படி அமர்த்து–துரத்து (Hire and Fire) என்பதை பரவலாக்க இத்திருத்தம் பயன்படும்.
தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் முன்பு 3 மாத முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என்ற சட்டக்கட்டாயம் நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக இழப்பீடு தொகைமட்டும் ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் என்பதிலிருந்து 20 நாள் ஊதியம் என்பதாக மாற்றப்படுகிறது.
ஏற்கெனவே ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அத்தொழிலில் அல்லது அத்தொழிலகத்தில் உள்ள ஏழு தொழிலாளர்கள் சேர்ந்து விண்ணப்பித்தால் போது என்ற நிலை இருந்தது. காங்கிரசு ஆட்சியில் அது 10 விடுக்காடு தொழிலாளர்கள் அல்லது 7 பேர் என்று மாற்றப்பட்டது. இப்போது 10 விழுக்காடு தொழிலாளர்கள் அல்லது 100 பேர் என்பதாக திருத்தம் செய்யப்பட உள்ளது.
தொழிற்சங்கங்கள் ஒரே தொழிலகத்தில் பலவாக பெருகுவதை தடுப்பதற்கே இத்திருத்தம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் தொழிற்சங்கம் என்ற ஒன்றே உருவாக முடியாது என்ற நிலையே இத்திருத்ததால் உண்டாகும்.
இப்போதே ஹுண்டாய், டி.வி.எஸ், ஹோண்டா போன்ற நிறுவனங்களில் பெருமளவு தொழிலாளர்கள் சேர்ந்தாலும் சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் முன்னணி தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும், தொழிற்சங்க பதிவே நடைபெற விடாமல் செய்வதும் பொது போக்காக தலையெடுத்துள்ளது. இந்நிலையில் தொழிற்சங்க சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இத்திருத்தம் திரு.வி.க காலத்திற்கு முந்தைய நிலைக்கு தொழிலாளர்களை இட்டுச்செல்லும்.
இப்போதுள்ள நிலையிலேயே ஒப்பந்த முறை, வெளி உற்பத்தி முறை போன்றவற்றால் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி வலுவாக போராட முடியாத நிலை உள்ளது. இத்திருத்தம் நிறைவேறினால் நடைமுறையில தொழிற்சங்கம் என்ற ஒன்றே இல்லாத பழைய நிலைக்கு இட்டுச்செல்லும். முதலாளிகள் விருப்பம் போல தொழிலாளர்களை பந்தாடும் நிலை ஏற்படும்.
வாங்கிய காசுக்கு மோடி அரசு பெருமுதலாளிகளுக்காக பணிவிடை செய்ய புறப்பட்டுவிட்டது.
இது வெறும் தொழிலாளர் சிக்கல் மட்டுமல்ல, மிகப்பெரும் சனநாயக உரிமைப் பறிப்பு நடவடிக்கையாகும்.
எனவே இது தொழிற்சங்க பிரச்சினை என்று ஒதுங்காமல் அனைத்து சனநாயக சக்திகளும் மோடி அரசின் கொலைகாரத்தனமான இச்சட்டத்திருத்தங்களுக்கு எதிராக போராட அணித்திரள வேண்டும்.

0 கருத்துகள்:

மீண்டும் குருதிக் காடாக ஈராக் - தோழர் கி.வெங்கட்ராமன்

அமெரிக்க வல்லாதிக்க வெறியாட்டத்தின் கொடுங்காயங்கள் ஆறுவதற்கு முன்னாலேயே ஈராக் மீண்டும் குருதி வெள்ளத்தில் சிக்கி விட்டது. சன்னி, ஷியா முஸ்லீம் மதப் பிரிவினர்களிடையே உள்ள பகைமையைப் பயன்படுத்தி ஈராக்கில் காலுன்றுவதற்கு அமெரிக்கா செய்த சூழ்ச்சியின் பின் விளைவுகளை ஈராக் இப்போது சந்தித்துக் கொண்டுள்ளது.

முகமது நபிகள் நாயகம் இறப்பை ஒட்டி பிறந்த ஷியா சன்னி பிரிவும், அவற்றிகிடையேயான இரத்தக் களரியும் வரலாறு நெடுகிலும் தொடர்கிறது. நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தின் தலைமை நபிகளின் குருதி உறவினர்களுக்கே வர வேண்டும் என வலியுறுத்தியர்கள் ஷியா பிரிவாகவும், நபிகள் நாயகத்தின் மெய்யியல் வாரிசுகளே அடுத்து தலைமைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியவர்கள் சன்னி பிரிவாகவும், மாறி மோதிக் கொண்டார்கள்.

வரலாற்று ஓட்டத்தில் சன்னி பிரிவினர் உலகெங்கும் உள்ள முஸ்லீம்களுக்கு இடையே பெரும்பான்மையினராக இருந்தாலும் மத வழிப்பாட்டு முறையில் சில சமரசங்கள் ஏற்கப்பட்டதால் உலகின் ;பெரும்பாண இடங்களில் சன்னி - ஷியா மோதம் நடைபெறவில்லை.

ஆனால் முதலாளியம் முற்றி வளர்ந்த காலத்தில் குறிப்பாக அரபு மண்ணில் பெட்ரோலியம் உள்ளதை அறிந்த பின்பு, ஏகாதிபத்தியங்கள் இந்த சன்னி - ஷியா பிரிவினையை ஊதிப் பெருக்க வைத்து ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கு ஆதரவாக நின்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டன.

இந்த வகையில் ஷியா முஸ்லீம்களில் ஆட்சிப் பகுதியாக ஈரானும், சன்னி சிறுபான்மையினரின் பிடியில் ஈராக் இருக்குமாறும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி எல்லைகளை வகுத்தது. அதே போல் எண்ணெய் வளத்தில் முதல் நிலை நாடாக உள்ள சவுதி அரேபியா சன்னி பிரிவு குறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் உள்ளது.

அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு பயன்பட்ட இந்த பிளவை இன்று அமெரிக்கா தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காக எவ்வளவு உயிர்களையும் பலியிட அமெரிக்க வல்லாதிக்கம் தயங்குவதில்லை.

ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் மேலாதிக்கம் நிறுவப்படுவதை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடியப்போது அந்த போராட்டத்தின் ஊடாக பின்லேடனின் அல்; கொய்தா வலுபெறுவதற்கு அமெரிக்க வல்லரசு மறைமுகமாகத் துணை செய்தது. ஆனால் அதே அல்கொய்தா உலகுதழுவிய இஸ்லாமிய பேரரசு உருவாக்கும் கனவில் களம் இறங்கிய போது அமெரிக்க வல்லாத்திக்க நலன்களோடு மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவே அஞ்சி நடுங்கும் அமைப்பாக அல்கொய்தா வளர்ச்சி பெற்றது. அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப்பு இயக்கமாக வரலாற்று ஓட்டத்தில் அது உருக்கொண்டது. இஸ்லாமிய மதவாதமும் குறிப்பாக சன்னி பிரிவு முஸ்லீம் மக்களின் பேராதரவும் அதற்குப் பயன்பட்டன.
1970-களின் பிற்பகுதியில் ஈரானில் அமெரிக்க கைப்பாவை அரசான மன்னர் ஷாவுக்கு எதிராக அயத்துல்லா கொமேனி தலைமயில் எழுந்த இஸ்லாமிய புரட்சி சாரத்தில் ஷியா முஸ்லீம்களின் எழுச்சியாகவே அமைந்தது. அச்சூழலில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஈராக் ஆட்சியாளர் சதாம் உசேனை தனது துணைச் சக்தியாக அமெரிக்கா வைத்துக் கொண்டது. ஷியா பிரிவுத் தலைவராக இருந்தாலும் அயத்துல்லா கொமேனி சன்னி பிரிவினர்களுடன் சமரசம் காண கடும் முயற்சிகள் மேற் கொண்டார். ஆனால் அவை எதுவும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்க வல்லரசு கவனமாக இருந்தது.
ஈராக் நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஷியா பிரிவு முஸ்லீம்கள், ஆனால் ஆட்சியாளர்களோ சன்னி பிரிவினர் சதாம் உசேனின் பாத்திஸ்ட் கட்சி கொள்கையளவில் மதசார்பற்ற கட்சிதான் என்றாலும் நடைமுறையில் சதாமின் ஆட்சி சன்னிகளின் ஆட்சியாகவே இருந்தது. இந்த முரண்பாடும், பொருமலும் தொடர்ந்துக் கொண்டே இருந்தன. சர்வாதிகாரியாக தன்னை வலுப்படுத்திக் கொண்டதின் மூலம் சதாம் உசேன் தனது ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
சமயம் பார்த்து இந்த முரண்பாட்டை தனது கொடிய வல்லாதிக்க நோக்கத்திற்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. சதாம் உசேனுக்கு எதிரான ஈராக்கியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்;த முடியாத சூழலில் சதாம் உசேன் கொடிய ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக பொய்யைப் புனைந்து ஈராக் மீது படையெடுத்தது அமெரிக்கா.
பல்லாயிரக்கணக்கில் ஈராக் தேசத்து மக்களை கொன்று குவித்து அந்நாட்டையே பிணக்காடாக்கி உருத்தெரியாமல் அழித்தது அமெரிக்கா. இக்கொடுங்செயலுக்கு அந்நாட்டில் நிலவிய சன்னி - ஷியா முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டது. சதாம் உசேனுக்கு மரணதண்டனை அளித்து தனது இராணுவ பிடியில் ஈராக்கை தொடர்ந்து வைத்திருக்க முடியாத சூழலில் தனது கைப்பாவை அரசாக ஷியா பிரிவினர் பெரும்பான்மைக் கொண்ட ஓர் ஆட்சியை உருவாக்கியது. நூரி அல் மாலிக்கி என்ற கடைந்தெடுத்த கை ஆள் ஒருவரை துப்பாக்கி முனை தேர்தல் வழியில் பிரதமராக ஆக்கியது.
ஆனால் வரலாறு அமெரிக்காவின் வல்லாதிக்க கனவு அனைத்திற்கும் துணைச் செய்வதாய் இல்லை. ஈராக்கில் ஷியா முஸ்லீம்களின் ஆட்சி அம்மண்டலத்தில் ஈரானின் செல்வாக்கு வளர்வதற்கு துணைச் செய்தது. ஈரானின் துணை இருக்கிற துணிச்சலில் ஈராக்கின் மாலிக்கி ஆட்சி சன்னி முஸ்லீம்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒதுக்கலை செயல்படுத்தியது. சன்னி முஸ்லீம்களின் வழிபாட்டு இடங்கள் ஒன்றுக்கூட இல்லாமல் அழிக்கப்பட்டது. படையிலோ, அரசு நிர்வாகத்திலோ பெயருக்கு கூட சன்னி முஸ்லீம்கள் இடம் பெறமுடியாத வகையில் முற்றிலும் வெளியே நிறுத்தப்பட்டனர்.
இன்னொரு புறம் சிரியாவில் நடைபெற்ற அல்சதாத் அரசு நடைமுறையில் ஷியாக்களின் ஆட்சியாகவே இருந்தது. எகிப்தின் முபாரக் போல சிரியாவின் அல்சதாத் கொடும் சர்வாதிகாரியாக இருந்தார்.
அல்சதாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி சனநாயக கிளர்ச்சியாக தொடங்கினாலும் விரைவில் சன்னி முஸ்லீம்களின் போராட்டமாக உருக்கொண்டது.
ஈரான், ஈராக், சிரியா ஆகிய பரந்த ஆராபிய மண்ணில் வலுப்பெற்ற ஷியாக்கள் தனது வல்லாதிக்கத்திற்கு எதிராக திரும்பி விடுவார்களோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் சன்னி பிரிவிலிருந்து “ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு” (Islamic State in Iraq and Syria - ISIS) என்ற கிளர்ச்சி அமைப்பு 2006- ம் ஆண்டு இறுதியில் சிரியாவில் தொடங்கப்பட்டது.
தொடக்க காலத்தில் ஷியா மேலாதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு அமெரிக்கா மறைமுகமாகத் துணை செய்தது.
இன்னொரு புறம் சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் சன்னி மயமாக இருந்த ஈராக் படையிலிருந்து சுமார் 7 இலட்சம் சன்னிக்கள் முற்றிலுமாக படைபணிகளிருந்து நீக்கி வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் கனிசமானோர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் போராளிகளாக இணைந்தனர்.
சிரியாவிலும், ஈராக்கிலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் பிரிவினர்களாக சன்னி முஸ்லீம்கள் வழங்கியதால் வேகம் கொண்ட சன்னி இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைவது இயல்பாக தீவிரம் பெற்றது.
2011 தொடங்கி ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ஈராக்கின் மாலிக்கி அரசு படைவகையில் பலவீனப்பட்ட அரசாக விளங்கியது.
சிரியா உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். சிரியாவிலும் கனிசமான பகுதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இவ்வியத்தினர் நேர்த்தியான அரசு நிர்வாகத்தை வழங்கினர். இவ்வியக்கத்தின் தலைவர் 48 வயதான அபுபாக்கீர் அல்பாக்தாதி ஒரே நேரத்தில் ஈவு இரக்கமற்ற பயங்கரவாதி என்றும் சிறந்த நிர்வாகி, உணர்ச்சியூட்டும் பேச்சாளர் உளவியல் தெரிந்த பரப்புரையாளர் எனவும் அமெரிக்க ஊடகங்களால் வர்ணிக்கப் படுகிறார்.
தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்டு உலகில் பலப் பகுதிகளிலிருந்தும் உணர்ச்சி பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இவ்வியக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
அமெரிக்க வல்லரசின் மறைமுக ஆதரவு, ஒடுக்குண்ட சன்னி இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு போராளி அமைப்புகளின் ஒருகிணைப்பு ஆகியவற்றைக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர்.
சிரியாவின் கனிசமான பகுதிகளில் தங்கள் நிர்வாகத்தை நிறுவிக் கொண்ட பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் ஈராக் மீது படையெடுத்தனர். ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் சன்னி முஸ்லீம்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்று அங்குள்ள உள்ளுர் போராளிகளையும் இணைத்துக் கொண்டு விரைந்து முன்னேறினர். சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை கைப்பற்றிய போது அங்கு வாழும் சன்னி முஸ்லீம்கள் சதாம் உசேனின் படத்தை கையில் ஏந்தியவாறு உணர்ச்சிப் பெருக்கோடு வரவேற்பு முழக்கமிட்டனர். பெரும் எண்ணிக்கையிலான சன்னி இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் படையினரோடு இணைந்துக் கொண்டனர்.
முன்னேறும் இடங்களிலெல்லாம் ~pயா இஸ்லாமியர்களை சுட்டுக்கொல்வதும், வெட்டி வீழ்த்துவதும் என்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் இலட்சக் கணக்கான ஷியா முஸ்லீம்கள் பாதுகாப்புத் தேடி தெற்கு ஈராக் நோக்கி ஓடு கின்றனர்.
மறுபுறம் சதாம் உசேன் ஆட்சியில் தொகைக் தொகையாகக் கொல்லப்பட்ட குர்தி~; இனமக்கள் அமெரிக்க படையெடுப்பில் ஈராக் சிக்கியதை பயன்படுத்திக் கொண்டு தங்களது குர்திஸ்தான் விடுதலை போராட்டத்தை விரைவுப் படுத்தினர். போர் நகர்வு உத்தி என்ற வகையில் குர்திஸ்தான் வான் பரப்பில் ஈராக் விமானங்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. விரிவான தன்னாட்சியோடு தனிப்படையோடு குர்திஸ்தான் பிரதேச அரசாங்கம் நிறுவிக் கொள்ள அமெரிக்கா துணை நின்றது. ஆயினும் குர்திஸ்தான் தேசத்தின் சில பகுதிகள் ஈராக்கிற்குள்ளேயே தொடர்ந்து சிக்கியிருந்தன.
இப்போது ஈராக்கிற்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் நுழைந்து மாலிக்கியின் ஈராக் அரசு பலவீனப்படுவதை பயன்படுத்திக் கொண்டு குர்திஸ்தான் தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
குர்திஷ் பிரதேச அரசின் தலைவர் மசூத் பர்ஜானி ஈராக்கின் புதிய நிலைமை குர்திஸ்தானத்திற்கு வரலாறு வழங்கியிருக்கிற வாய்ப்பு என அறிவித்தார். ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தனி அரசாக சுதந்திர அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் கூடியுள்ளன.
இன்றுள்ள நிலையில் தனது கட்டுப்பாட்டையும் மீறி ஐ.எஸ்.ஐ.எஸ் வளர்ச்சி அடைவது அமெரிக்காவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிக்கலை பயன்படுத்திக் கொண்டு ஈரான் பக்கம் பெரிதும் சாய்ந்தும் வரும் நூரி அல் மாலிக்கையும் வரம்புக்குட்படுத்தி வைக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ் வலுப்பெறுவதை தடுக்கவும் ஒரு சேர திட்டமிடுகிறது அமெரிக்கா.
ஷியா, சன்னி, குருதுகள் ஆகிய முத்தரப்பினரும் இணைந்த ஈராக் தேசிய அரசை ஏற்படுத்துவது, அது முடியாது போனால் ஈராக்கை மூன்றாக பிரித்து சன்னி ஈராக், ஷியா ஈராக், குர்திஷ்தான் என்ற மூன்றாக பிரிப்பது எனும் திட்டத்தில் அமெரிக்க வல்லரசு களம் இறங்கியுள்ளது.
அதற்கேற்ப வரம்புக்குட்பட்ட வான் தாக்குதலிலும் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன.
மொத்தத்தில் மீண்டும் ஈராக் கொந்தளிப்பில் உள்ளது. குருதிக்காடாக மாறியுள்ளது.
ஈராக் நெருக்கடி மத்தியக் கிழக்கில்; மட்டுமின்றி உலகெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.
குர்திஷ்தான் விடுதலையை ஏற்றுக்கொண்டு மீதமுள்ள ஈராக்கை ஷியா, சன்னி ஆகிய இருபிரிவு இஸ்லாமியர்களும் இணைந்து ஆட்சி நடத்தும் சனநாயக நாடாக மாற்றுவதே இன்று எழுந்துள்ள சிக்கலுக்கு தீர்வாக அமையும்.
சுமேரிய நாகரிகத்தின் வழித்தோன்றல்களான ஈராக் மக்கள் வல்லரசு ஆதிக்கப் பிடியின் காரணமாக சிதிலம் அடைந்து குருதி கொட்டுவது வரலாற்றில் திணிக்கப்பட்டுள்ள சோகம்.

0 கருத்துகள்: