கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

தொழிலதிபர்களின் காட்டாட்சிக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுக!



தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு பொது எண்ணை வெளியிட்டு, 16.10.2014 அன்று பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலாளர் நலச் சட்டங்களில் பிற்போக்கானப் பலத் திருத்தங்களை அறிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்களே தொழிற்சாலை சட்டங்கள் கடைபிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்று மோடி அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அதிகாரிகளிடம் நிலவும் கையூட்டு ஊழல் காரணமாக தொழிற்சாலை சட்ட விதிகள் முறையாக செயல்படுவதில்லை என்பதே மெய்நிலை.

8 மணி நேர வேலை என்ற விதியினை, 10 மணி நேரம் – 12 மணி நேரம் வேலை வாங்கும் தொழிலகங்கள் அதிகரித்துவிட்டன. மிகை நேர இரட்டை ஊதியத்தை தவிர்ப்பதற்காக, “நீடித்த வேலை நேரம்” (Extension working time) என்ற பெயரால், வாரத்திற்கு 48 மணி நேரத்தையும் தாண்டி வேலை வாங்கும் தொழிலகங்கள் ஏராளம். தொழிற்சாலை ஆய்வாளர்கள் இந்த முறைகேட்டை கண்டுகொள்வதில்லை.

பல்வேறு முதன்மைத் தொழிற்சாலைகளில் கூட தொழிற்சாலை சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாததால், விபத்துகளில் தொழிலாளர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆய்வு முறையைக் கூட “ஆய்வாளர் ஆட்சி (Inspector raj)” என்று கேலி செய்து, தொழிற்சாலை ஆய்வாளர் ஆய்வே இல்லாததாக்குவது, நற்சான்றிதழே போதும் என அறிவிப்பது, சட்ட விதிகள் ஏதுமற்ற, வல்லாண் வகுத்ததே வாய்க்கால் என்ற கட்டாட்சியை தொழிற்சாலைகளில் கட்டவழித்து விடுவதாக அமையும்.

இதே கூட்டத்தில், பயிற்சியாளர் சட்டத்தில் (Apprentice act) கொண்டுவரப்போவதாக, சில திருத்தங்களையும் மோடி அறிவித்திருக்கிறார். தொழிலகங்கள் தங்கள் நிறுவனங்களில் அமர்த்திக் கொள்ளும் பயிற்சியாளர்கள் (அப்ரண்டிஸ்) அனைவரையும் தொழிலாளிகளாக நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை என இத்திருத்தத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பயிற்சியாளர் சட்டத்தின் நிபந்தனைகளில் இருந்து தப்பிப்பதற்காக “தற்காலிகப் பயிற்சியாளர்” (காசுவல் அப்ரண்டிஸ்), ஒப்பந்தப் பயிற்சியாளர் (கான்ட்ராக்ட் அப்ரண்டிஸ்) என்ற சட்ட விரோத வழிமுறைகளை பெருந்தொழிலதிபர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் கூட, இந்த சட்ட மீறல் நடைமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்கள் நிலையைவிட, தற்காலிகத் தொழிலாளர் நிலைமை மோசமானது. தற்காலிகத் தொழிலாளர் நிலையைவிட, ஒப்பந்தத் தொழிலாளர் நிலைமை படுமோசமானது. ஒப்பந்தத் தொழிலாளர்களைவிட, பயிற்சியாளர் நிலைமை மிகவும் மோசமானது. இப்போது, பிரதமர் மோடி அறிவித்திருப்பது, மிகப் படுமோசமான உழைப்புச் சுரண்டலுக்கு வழி திறந்து விடும்.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make in India)” என்ற மோடி முழக்கத்தின் திரைக்குப் பின்னால், இவ்வளவு படுமோசமான தொழிலாளர் குருதி குடிக்கும் அறிவிப்புகள் வந்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புகள் அப்பட்டமான உழைப்பாளர் பகை அறிவிப்புகளாகும்.

எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழிற்சாலை சட்டத்திலும், பயிற்சியாளர் சட்டத்திலும் அறிவித்திருக்கிற இத்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு எதிரான இத்திருத்தங்களை எதிர்த்து, உழைக்கும் மக்களும் மனித நேயர்களும் களம் காணுமாறு அழைக்கிறேன்.

- கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

0 கருத்துகள்:

ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்!



தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று (16.10.2014) லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது. 

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என முத்திரைக் குத்தினர். 

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.  இந்நிலையில் தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர். 

இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு“ அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். 

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ்நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது. 

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  - கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

0 கருத்துகள்:

நெய்வேலிப் போராட்டம் : வெளியார் வந்தால் மறிப்போம்!




நெய்வேலிப் போராட்டத்தை உடைக்க வெளி மாநிலத் தொழிலாளர்களை  பணியமர்த்துவது இன ஒதுக்கலே! வெளியார் வந்தால் மறிப்போம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


கடந்த 42 நாட்களுக்கும் மேலாக, தீர்வேதும் இல்லாமல் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகத்திற்கும் போராடும் தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று (14.10.2014) நடைபெற்ற பதின்மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதன் போது, போராட்டத்தை உடைக்கும் பொருட்டு, வெளி மாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவோம் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

நெய்வேலி அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்காக நிலம் கொடுத்த குடும்பங்களில் இருந்தவர்களே, தற்போது நிரந்தரப் பணிக்கோரி போராடி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் ஆவர். இந்த மண்ணின் மக்களை முறியடிப்பதற்காக, வெளி மாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்துவோம் என நிர்வாகத் தரப்பில் அறிவித்திருப்பது, தமிழர்களைப் புறக்கணிக்கும் இனஒதுக்கல் ஆகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நிர்வாகத்தின் இந்த முடிவை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும், தொழிற்சங்கத்தோடு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அவரவர் பணியிடங்களில் ஈர்த்து நிரந்தரப்படுத்தி, மீதமுள்ள தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 25,000 ரூபாய் வழங்கி, நெய்வேலிப் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். 

0 கருத்துகள்:

நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்!


நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு
இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

நோக்கியா நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் நவம்பர் 1, 2014 உடன் முடிவடைவதால் திருபெரும்புத்தூரில் உள்ள அந்த ஆலை முற்றிலும் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் வீசப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.


பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருப்பெரும்புத்தூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் கைப்பேசித் தொழிற்சாலையை நடத்திவந்தது.

இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.

620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய் இலாபத்தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்தினை தாண்டி மாத ஊதியம் கிடையாது. இந்த மண்ணைச் சுரண்டி இந்த மண்ணின் உழைப்பாளர்களைச் சுரண்டி கொழுத்தது போதாதென்று 25,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வரி ஏய்ப்பு வழக்கு காரணமாகவே திருப்பெரும்பந்தூர் தொழிலகத்தை கையகப்படுத்தாமல் விட்டு விட்டது. ஒப்பந்தத்திற்கு கைபேசி தயாரிக்கும் தொழிலகமாக நோக்கியாவை வைத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் நவம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைவதால். நோக்கியா ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே 5,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மீதி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவென்பது மிகப்பெரியக் கேள்விக்குறியாக மாறிவிட்டது.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make In India)” என்று கூவிக்கூவி அழைக்கும் நரேந்திர மோடி அரசு கண்முன்னால் நடக்கும் இந்த ஆலை மூடலை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழக அரசும் கவலைக் கொள்ளாமல் இருக்கிறது.

இந்த அலட்சியப் போக்கு இனியும் தொடரக்கூடாது. நோக்கியா ஆலையில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு இந்திய, தமிழக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

நவம்பர் 1, 2014இலிருந்து குறைந்தது ஓராண்டிற்கு அத்தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கி மாற்று வேலைக்கு அவர்களை அமர்த்தும் பொறுப்பை இந்திய அரசு ஏற்கவேண்டும். அதற்கான தொகை முழுவதையும் நோக்கியா நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான ஆணையை இந்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நோக்கியா நிறுவனம் பொறுப்பேற்று நிதி தர தவறினால் நோக்கியா நிறுவனத்தின் முதன்மை உரிமையாளர்களை தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்து இந்திய அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: