கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மோடியின் கலைப்புகள்


பொருளியல் - வெளியுறவு என அனைத்துத் துறைகளிலும் மோடி அரசு தோற்று வருகிறது. பொருளியல் துறையிலும், அரசியல் துறையிலும் மோடிக்கு மாற்றான எந்தக் கொள்கையும் காங்கிரசிடம் இல்லாததால், மக்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்!

இருக்கும் மோடி அரசையும் ஏற்க முடியவில்லை; எதிர்க்கட்சியான காங்கிரசிடமும் மாற்றுக் கொள்கை எதுவுமில்லை! வேறு கட்சியோ, கட்சிகளின் கூட்ட மைப்போ சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்ற குழப்பம் நிலவுகிறது.

ஆயினும், தங்கள் வாழ்வுரிமையை இழந்து கொண்டிருக்கும் மக்கள் செயலற்றும் இல்லை!

அங்கங்கே மக்கள் இயக்கங்கள் வீரியமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. வழமையான தேர்தல் கட்சிகள், மக்களுக்குத் தலைமை தாங்கும் நிலையிலும் இல்லை! அதே நேரம், தனித்தனி சிக்கல்களில் தனித்தனிப் போராட்டங்களாகவும் இவை நடக்கின்றன.

இவை எதையும் தீர்க்க முடியாமல் திணறும் மோடி அரசு, தனது தோல்வியை மூடி மறைக்கவும் மக்கள் எதிர்ப்பை திசைதிருப்பவும் இரண்டு முக்கிய உத்திகளைக் கையாள்கிறது.

ஒன்று, மதவெறியை - சாதி வெறியைக் கிளப்பி விட்டு, மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துவது! இரண்டு, எந்தவகை எதிர்க்கருத்துகளும் தலைதூக்காமல் அடக்குமுறையை ஏவுவது!

இந்த சூழலில்தான் மோடி ஆட்சி, சட்டம் - சனநாயகம் - சமூக நெறி என்ற எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் பகை செயல்பாட்டில் உச்சத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது.

எல்லா நிறுவனங்களும் முடக்கப்பட்டுவிட்டன. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காக அமைக்கப்பட்ட அத்துணை நிறுவனங்களின் சுயேச்சைத் தன்மையும் சீர்குலைக்கப்பட்டு மோடிக்குக் கட்டுப்பட்டவையாக மாற்றப்படுகின்றன.

தற்சார்பாக இருந்த திட்டக்குழுக் கலைக்கப்பட்டு, நிதி அமைச்சகத்திற்குக் கட்டுப்பட்ட நிதி ஆயோக்உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் இந்தியப் பெருமுதலாளிகளின் பேராளர்களும், இந்திய அரசின் ஆட்களும் கொண்ட இன்னொரு அதிகாரக் குவிப்பு மையமாகநிதி ஆயோக்நிறுவப்பட்டுள்ளது.

இந்திய சேம வங்கி ஆளுநர் அரசியல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்ட தனி அதிகாரம் படைத்தவராக இருந்தது குலைக்கப்பட்டது. மோடிக்கும், அம்பானிக்கும் தலையாட்டியாக விளங்கும் உர்சித் பட்டேல் சேம வங்கி ஆளுநராக நியமிக்கப் பட்டார். இவரைப் பயன்படுத்தி, சேம வங்கியின் இயக்குநர் குழுவுக்கே தெரியாமல் மோடி அறிவித்ததுதான் பணத்தாள் செல்லாது என்ற அறிவிப்பு!

தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தின் தனி உரிமைப் பெற்ற நிறுவனம் என்பதும், மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்டது! அதுவும் தனது தற்சார்புத் தன்மையை இழந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அறிவிப்பை மோடி வெளியிடும் வரையிலும், குசராத் தேர்தல் நாளை அறிவிக்காமல் காலம் கடத்தியது இதற்கொரு சான்று!

இந்திய சேம வங்கி, காப்பீட்டுத்துறை ஒழுங்குமுறை ஆணையம், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் போன்ற தற்சார்பான நிறுவனங்களின் அதிகாரங்கள் பறிக்கப் பட்டு, அந்த இடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப் பட்ட, ஆனால் மோடியின் அமைச்சரவைக்கு மட்டும் கட்டுப்பட்ட தீர்வுக் கழகம்என்ற நிறுவனத் தின் கீழ் வங்கித்துறை கொண்டு வரப்படுகிறது.

இந்திய மருத்துவக் கழகம் கலைக்கப்பட்டு, முற்றிலும் இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்திய மருத்துவ ஆணையம்என்ற புதிய அமைப்பை உருவாக்க நாடாளுமன்றப் பெரும்பான் மையை எந்த சனநாயக நெறிகளுக்கும் அப்பால் மோடி பயன்படுத்துகிறார்.

பல்கலைக்கழக நல்கைக்குழு, அனைத்திந்தியத் தொழில்நுட்பக்கல்விக் கழகம், மருத்துவக் கல்விக் குழு - அனைத்தையும் இணைத்து தேசியக் கல்வி வாரியம்அமைக்கும் திட்டத்திலும் மோடி அரசு உள்ளது.

சரக்கு - சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி. கவுன்சில்), தேசியக் கல்வி வாரியம், நிதி ஆயோக் போன்றவற்றை இணைத்து நோக்கினால், “மாநிலம்என்ற ஒன்றே நடைமுறையில் இல்லாமல் ஆக்கப்படுகிறது என்பது புரியும்! முற்றிலும் அதிகாரமற்றதாக, உள்ளாட்சி நிறுவனங்கள் நிலைக்கு மாநிலங்கள் தாழ்த்தப்படுகின்றன.

இவை அனைத்தும், எல்லா மாநிலங்களையும் அதிகாரம் அற்றதாக மாற்றினாலும் தமிழ்நாடு மிக அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியாக உள்ளது. நிதி திரட்டுவதில் மேம்பட்ட திறன், மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் எண்ணிக்கையிலும் தரத்திலும் முதல் வரிசை, மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதில் முன்னணி நிலை, வன்முறை வெறியாட்டம் குறைவான மாநிலம் ஆகிய முற் போக்கான நிலை அடைந்ததைக் காரணம் காட்டியே தமிழ்நாடு குறி வைத்துத் தாக்கப்படுகிறது!

தமிழ்நாடு - புவிப்பந்தின் மூத்த மண் என்பதோடு, மூத்தக் குடியாகவும் தமிழினம் இருக்கிறது. மூத்த மொழியோடு, வளர்ச்சியடைந்த மூத்த நாகரிகத்தோடு விளங்குகிறது! ஆரியத்தின் அனைத்து வகை ஆதிக்க நெறிகளுக்கும் எதிரான சமத்துவ அறம் கொண்ட தமிழினத்தை, தனது வரலாற்றுப் பகையாக ஆரியம் கருதுகிறது. ஆரியத்தின் நவீன வடிவமான இந்தியமும், இந்தியத்தின் தீவிரப்பிரிவான இந்துத்துவ பா.ச.க.வும் பகை இலக்காக தமிழினத்தை நடத்துகின்றன.

மூத்த மண்ணாக தமிழ்நாடு இருப்பதால், அதன்கீழ் அனைத்துக் கனி வளங்களும் குவிந்திருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேற்பட்ட நீண்ட கடற்கரை குறையாத கடல் வளத்தைப் பெற்றிருக்கிறது. இது இந்திய - பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கும், ஆரிய இந்திய அரசுக்கும் கண்ணை உறுத்துகின்றன.

காங்கிரசு அரசால் தொடங்கப்பட்டு, மோடி ஆட்சியில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் சாகர் மாலா திட்டம், ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்தின் கடல் எல்லைப் பரப்பில் விரிந்திருந்தாலும், அது தமிழ் நாட்டையும் தமிழீழத்தையும் முற்றிலும் விழுங்கிடும் இறுதி இலக்கை நோக்கியே தீட்டப்பட்டிருக்கிறது.

சாகர் மாலா பெருந்திட்டத்தின் உள் கூறுகளாக மீத்தேன் எடுப்பு, ஐட்ரோகார்பன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், ஆயிரம் கிலோ மீட்டர் கடற்கரை நெடுகிலும் சென்னை தொடங்கி இராமேசுவரம் வரை அடுக்கடுக்கான அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், இராணுவ மண்டலங்கள், விமானப் படைத்தளங்கள், கடற்படைத் தளங்கள், கன்னியா குமரியில் சரக்குப் பெட்டகத் துறைமுக விரிவாக்கம், நியூட்ரினோ திட்டம், குலசேகரப்பட்டினம் இராக்கெட் ஏவுதளம் என்று அடுக்கடுக்கான அழிப்புத் திட்டங்கள் அணிவகுத்து வருகின்றன.

இதற்கு இசைவாக, ஆற்று வளங்களையும் அது சார்ந்த வரலாற்றுச் சின்னங்களையும் நிலைத்த வாழ்க்கை யையும், புரட்டிப் போடுவதற்கு காவிரி - முல்லைப் பெரியாறு மறுப்பு முயற்சிகள், பாலாற்றை பறிக்கும் சதித்திட்டம் போன்ற அனைத்தும் நிறைவேறுகின்றன.

அதிகம் பாதிக்கப்பட்டதால், அதிகம் போராட்டம் நடைபெறும் மண்ணாக தமிழ் மண் விளங்குகிறது! அதேநேரம், பாதிக்கப்படும் பல்வேறு பகுதிகளில் இந்தியாவெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்திலும் அறிவாற்றல் உள்ள இளையோர் கூர் முனை ஆற்றல்களாக விளங்குகிறார்கள்.

இந்திய அரசின் அழிவுத் திட்டங்களுக்கு எதிரான ஆக்க அறிவு பரவுவதை தில்லி அரசு விரும்புவதில்லை. பா.ச.க.வின் மோடி ஆட்சி, அதில் ஒரு உச்சத்தை எட்டி நிற்கிறது!

இதுவரை இல்லாத அளவுக்கு, துறைதோறும் கருத்துரிமை பறிப்பு, கருத்துப் பரவல் தடுப்பு தீவிரமாக நடைபெறுகிறது.

இதில் மோடி அரசு புதிய உத்தியோடு களமிறங்கி யிருக்கிறது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்து ஊடகங்களில் வராமல் மிரட்டுவது, தேவையா னால் அடக்குவது என்பது ஒன்று! தனக்கு ஆதரவான ஊடகங்களைக் களமிறக்கி, எதிர் கருத்துகளை சிதைத்து வெளியிடுவது, ஊடகங்களை வைத்தே எதிர்க்கருத்து உடையோரைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பது இன்னொன்று!

இது இந்திரா காந்தி காலத்து அவசரநிலையைவிட, கொடிய புதிய வடிவமாகும்!

அரசு நிறுவனங்களை வைத்து, அதிகாரிகளைக் கொண்டு அவசரநிலை என்ற சட்ட வாய்ப்பைப் பயன் படுத்தி, அதன் வழியான தணிக்கையைப் பயன்படுத்தி, கருத்துரிமைப் பறித்ததே இந்திரா காந்தியின் முதன்மை வழியாக இருந்தது.

பா.ச.க. மோடி ஆட்சியின் பாசிசம் வேறு வகைப்பட்டது! அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தனது ஆரியத்துவ குண்டர் படையையும் இறக்கி விடுவது என்ற வகையில் மோடி ஆட்சி, விரிந்த தளத்தில் தனது சர்வாதிகாரத்தைப் பரப்பி நிற்கிறது.

பா.ச.க.வுக்கு எதிரான கருத்துநிலை கொண்டிருந் ததாலேயே என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்துடன் தொடர்புடையோர் மீது இந்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) ஏவிவிடப்பட்டது. அரசு விளம்பரங்கள் என்பது அச்சு ஊடகங்களுக்கு முக்கியமான வருவாய் வழி என்பதால், அதைவைத்து செய்தி ஏடுகளை மடக்கு வதை ஒரு இயல்பான திட்டமிட்ட செயலாகவே மோடி அரசு பயன்படுத்துகிறது.

மோடியின் அமைச்சர்கள் பகிரி (வாட்ஸ்அப்) வழியாக அறிக்கைகள் தருவதை முதன்மை வழியாகக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு எதிராக கருத்துப் பரப்பும் ஊடகங்களை பகிரிக் குழுவிலிருந்து (வாட்ஸ்அப் குழு) விலக்கி விடுவதை தொடர் பழக்கமாகவே மோடியின் அமைச்சர்கள் கைக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தி அளிக்கும் போட்டியில் நிற்கும் ஊடகங் களில், எதிர் கருத்துள்ள ஊடகங்களுக்கு அமைச்சர்களின் அறிக்கைகள் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டால், வேறு வழியின்றி செய்திகளைப் பெற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி, “வழிக்குவருவார்கள் என்பதே மோடி அமைச்சர்களின் திட்டம்!

ஆர்.எஸ்.எஸ். நிறுவியுள்ள இந்துஸ்தான் சமாச்சர் என்ற செய்தி நிறுவனம், மோடி ஆட்சிக்குப் பிறகு முதன்மைப் பெற்று வருகிறது. அரசு விளம்பரங்கள் தருவதில், இந்துஸ்தான் சமாச்சர் வழியாக செய்திகள் பெறும் நிறுவனங்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வழிமுறையை மோடி அரசு பின்பற்றுகிறது.

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ.) செய்தி நிறுவனத்தை, மோடி அரசின் செய்தித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளிப்படையாக மிரட்டுகிறார் என்று ஊடகங்கள் அவலக்குரல் எழுப்புகின்றன. (காண்க : பிரண்ட்லைன், 02.02.2018).

ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையினர் ஊடகத்துறை யினரையும், எழுத்தாளர்களையும் அலைபேசியிலும், இணையத்திலும் ஆபாசமாகப் பேசுவது, தாக்குவது, கொல்வது மோடி ஆட்சியில் திட்டமிட்ட போக்காகவே வளர்ந்துள்ளது.

சென்னையில் புதிய தலைமுறைஅலுவலகம் தாக்கப்பட்டது, திரிபுரா ஊடகவியலாளர் சந்தான பவுமிக் (21.09.2017), சுதிப் தத்தா பவுமிக் (21.11.2017), பெங்களுருவில் கவுரி லங்கேஷ் (05.09.2017) உள்ளிட் டோர் கொல்லப்பட்டது, கர்நாடக எழுத்தாளர் யோகேஷ் மாஸ்டர் தாக்கப்பட்டது என்று பட்டியல் நீள்கிறது.

நீதித்துறையில் மிரட்டலும், காவிமயமாக்கலும் புதிய வேகமெடுத்துள்ளன.

சொராபுதின் ஷேக் போலி மோதல் கொலை வழக்கிலிருந்து பா.ச.க. தலைவர் அமித்சாவுக்கு விடுதலை வழங்கிய நீதிபதி சதாசிவம், “ஆளுநர்பதவி பெற்றதும், மும்பை மாவட்ட நீதிபதி லோயா இதே வழக்கில் அமித் சாவை நேர் நிற்க வலியுறுத்தியபோது இறந்ததும் பரவலாக ஐயங்களை எழுப்புகின்றன. இதே அமித்சா தொடர்புடைய இர்சாத் ஜகான் போலி மோதல் கொலை வழக்கில், நடுவண் புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட்ட குசராத் உயர் நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதி ஜெயந்த் பட்டேல் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கும், அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கும் மாறி மாறித் தூக்கியடிக்கப்பட்டு, தலைமை நீதிபதி பதவி கிடைக்காமல் மறுக்கப்பட்டதும் நீதித்துறை அச்சுறுத்தப் படுவதற்கு சான்று கூறும்!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சிறீவத் சவா, பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று கூறியதும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பாகவத புராணத்தில் சொல்லப்பட்டிருப் பதால் ஆண் மயிலின் கண்ணீர்தான் பெண் மயிலை கருத்தரிக்க வைக்கிறது என்று கூறியதும், அம்பேத்கர் சிலை அடியில் நின்று கொண்டு மாட்டுக்கறி விருந்து சாப்பிட்டதால் அந்த வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியதும் நீதித் துறை காவியேறி நிற்பதை எடுத்துக் கூறும்!

ஊழல் மயமாகிப் போனதோடு, மோடி அரசின் விருப்பத்திற்கேற்ப உச்சநீதிமன்றமே செயல்படுவதால் வந்த வெடிப்பே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கெதிராக சலமேசுவர், ரஞ்சன் கோகாய், ஜோசப் குரியன். மதன் பி. லோக்கூர் ஆகிய நான்கு மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டாகும்!

மூத்த நீதிபதிகளின் இந்தக் கலகக் குரலுக்குப் பிறகு எங்கே நீதிமன்றத்தில் தலையீட்டிற்கு வாய்ப்பில்லாமல் போகுமோ என்று கருதிய மோடி அரசு, 15 ஆண்டுகளுக்கு முன் நிராகரிக்கப்பட்ட மாலிமாத் குழு பரிந்துரையை மீண்டும் ஆய்வு செய்யப் போவதாக கூறி அதனை தூசி தட்டி எடுத்திருக்கிறது.

நீதித்துறையை காவல்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதும், காவல்துறையை அரசியல் தலையீட் டிற்கு உட்படுத்துவதும்தான் மாலிமாத் குழு பரிந்துரை யின் சாரமாகும்!

வாஜ்பாய் ஆட்சியில் 2003 மே மாதத்தில் மாலிமாத் குழு அளித்த அறிக்கை, அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியின் விருப்பத்தை அறிந்து அளிக்கப் பட்டதாக இருந்தது.

பொடா சட்டம் நாடாளுமன்றத்தாலேயே கைவிடப் பட்ட நிலையில், அதன் பெரும்பாலான கூறுகளை இந்தியத் தண்டனைச் சட்டத்திலும், குற்றவியல் நடை முறைச் சட்டத்திலும், சாட்சிகள் சட்டத்திலும் சேர்க்க வேண்டும் எனக் கூறியதுதான் மாலிமாத் அறிக்கையின் சாதனை!

காவல் நிலையத்தில் பெறப்படும் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்கக் கூடாது என்பதுதான் இன்றைய சட்டநிலை! தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்கள் இதனை ஏற்குமாறு கூறின. இந்த வாக்குமூலங்கள் எவ்வாறு பதியப்படும் என்பதற்கு இராசீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் பற்றி இருபதாண்டுகள் கழித்து காவல்துறை அதிகாரி தியாகராசன் கூறுவதே சான்றாகும்!

இந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்க வேண்டு மென்றால், அப்பாவியான பேரறிவாளனுக்கு நிகழ்ந்த நிலைதான் பெரும்பாலான குற்றம்சாட்டப்பட்டவர் களுக்கு நேரும்.

சில குற்றங்களுக்கு தண்டனைக் குறைப்பே இல்லாத வாழ்நாள் தண்டனையோ, அரசின் மன்னிப்பு அதிகாரம் தலையிட முடியாதவாறு 40 ஆண்டு, 50 ஆண்டு சிறை தண்டனையோ வழங்கலாம் என மாலிமாத் பரிந்துரை கூறுகிறது.

இப்போதுள்ள சட்டத்தில் நீதிமன்றக் காவல் 15 நாள் என்றிருப்பதை, 30 நாள் என்று பரிந்துரைத்தும், 90 நாட் களுக்குள் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட வில்லை என்றால்,  தானாக பிணை வழங்கப்பட வேண்டும் என்றிருப்பதை, 180 நாட்கள் என்று நீட்டித்தும் மாலிமாத் குழு அறிவித்ததை சனநாயக ஆற்றல்கள் அனைவரும் அன்றைக்கு எதிர்த்தார்கள்.

அதைவிட, மாலிமாத் குழுவின் மிக மோசமான முடிவு நீதித்துறையை காவல்துறைக்குக் கட்டுப்பட்டதாக மாற்றியது!

உலகமெங்கும், இந்தியாவிலும் புலனாய்வு செய்வது காவல்துறையின் பணி (Investigation)! குற்ற விசாரணை செய்வது, நீதித்துறையின் பணி (Prosecution)! இவ்வாறு பிரிக்கப்பட்டிருப்பதால்தான், சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மாலிமாத் பரிந்துரை, ஒரு மாவட்டக் காவல் துறை அதிகாரியை ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திற்கும் விசாரணை இயக்குநராக (Director of Prosecution) நியமிக்குமாறு கூறியது. நீதித்துறையின் சுதந்திரத்தை காவல்துறையின் காலடியில் வைக்கும் மோசமான முடிவு இது என்பதால், அன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்கள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

விசாரணை இயக்குநரின் முடிவை நீதிமன்றம் ஏற்க வேண்டுமென்றால், நீதிமன்றம் வெறும் பொம்மை நிறுவனமாக மாறுகிறது. காவல்துறையில் அரசியல் தலையீடு நீக்கமற நிறைந்திருக்கிற ஒன்று! இந்த வழியில், நீதிமன்றம் ஆளுங்கட்சிகளின் கைப்பாவை அமைப்பாக மாற்றப்படும் ஆபத்து உண்டு!

இதனால்தான், தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் போராட்டம் நடத்தினர். அவர்களது போராட்டம் மாலிமாத் குழு பரிந்துரையை பின் வாங்க வைத்ததில், முக்கியப் பங்காற்றியது. இப்போது, மோடி அரசு அதை செயல்படுத்த விரைகிறது!

சேம வங்கி, தேர்தல் ஆணையம், பங்குச் சந்தை ஆணையம், ஊடகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, நீதித்துறையும் தற்சார்பை இழந்தால், பாசிசம் முழுமை பெறுகிறது என்று பொருள்!

இது ஒட்டுமொத்த இந்திய சனநாயகத்திற்கு ஆபத்து என்ற போதிலும், அதன் கூர் முனைத் தாக்குதலை சந்திக்க வேண்டிய ஒரு களமாக தமிழ்நாடு இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை!

நாம் பலமுறை எடுத்துக்காட்டியிருப்பதுபோல், காங்கிரசோ, பிற இந்தியத்தேசியக் கட்சிகளோ, அவற்றின் கங்காணிகளோ பா.ச.க.வின் பாசிசத்தை எதிர் கொண்டு சனநாயகத்தை மீட்டெடுக்க தகுதியுள்ளவையாக இல்லை!

ஆரியத்துவ பா.ச.க.வின் எதிர்முனை போல காங்கிரசும், அதைச் சார்ந்தவர்களும் முன் வைப்பது இந்தியா என்ற கருத்தியல் (The Idea of India) எனும் முழக்கமாகும்! இது பா.ச.க.வோடு போட்டியிடும் இந்தியம் ஆகும்! இதன் மெய்யியல் வேர் - ஆரியத்துவமே ஆகும்!

குசராத் தேர்தலில், வெற்றிகரமாக காங்கிரசை முன்னெடுத்துச் சென்ற ராகுல்காந்தி, தான் மதசார்பற்ற கொள்கையுடையவர் அல்லர் என்பதைக் காட்டுவதிலேயே முனைப்பாக இருந்தார். மறந்தும் 2002 குசராத் மதப்படுகொலையை முன்வைக்கவில்லை! கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.-ஐ, களத்தில் எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி, கிருஷ்ண ஜெயந்தியை தங்கள் அமைப்புகளின் வழியாகக் கொண்டாடுவதையும், சேகுவேரா படத்திற்குப் பக்கத்தில் கிருஷ்ணர் படத்தை வரைவதும் இந்தியத் தேசியமானது ஆரியத்துவத்திற்கு மாற்றல்ல என்பதை புரிய வைக்கும்!

ஒற்றை இந்தியாவை மோடி முன்வைக்கும் போது, மத சகிப்புத்தன்மையுள்ள இரட்டை இந்தியாவை அல்லது இருமுனை இந்தியாவை காங்கிரசும், பிற அனைத்திந்தியக் கட்சிகளும் முன்வைக்கின்றன. இந்தி, காசுமீர், தமிழீழம், காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற பல அடிப்படை சிக்கல்களில், இவர்கள் ஒரே நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும்!

எனவே, மோடியின் பாசிசம் கட்ட முயலும் ஒற்றை இந்தியாவிற்கு மாற்றாக பன்மை மலர வேண்டும்! ஒற்றை முனையிலிருந்தோ, ஒற்றைத் தலைமையிலிருந்தோ, ஒரே நேரத்திலோ, ஒரே தளத்திலோ இந்தப் பன்மை உருவாகப்போவதில்லை! அதனதன்தனித் தன்மையில்தான், இந்தப் பன்மைகள் வெளிப்படும்.

அந்த வகையில், பா.ச.க.வின் ஆரியத்துவப் பாசிசத்தை இந்த மண்ணில் இதன் தனித்தன்மைக்கும் தனித் தேவைக்கும் ஏற்ப எதிர்கொள்வதே வெற்றிகரமாக அமையும்! இதனால்தான், ஆரியத்துவ பா.ச.க. பாசிசத்திற்கு எதிரான தற்காப்பு சனநாயகக் கொள்கை  தமிழ்த்தேசியமே என்கிறோம்!

தமிழ்த்தேசத்தின் இறையாண்மை மீட்பு இலக்கு நோக்கிய போராட்டத்தின் ஊடாக, ஆரியத்துவ பாசிசத்தை முறியடிக்கும் போராட்டமும் நடக்க வேண்டும்! அதை மையப்படுத்தி, தமிழ்நாட்டில் விரிந்த மக்கள் திரள் பாசறை உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்த்தேசியம், தனக்குள் ஒரு பன்மைத் தன்மையோடு சனநாயக வடிவத்தில், மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கத் தகுதி வாய்ந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில், பா.ச.க. பாசிசத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்குத் தமிழ்த்தேசியம் என்ற நிலையிலிருந்து, தமிழர்கள் ஆதரவுக்கை நீட்டலாம்! செயற்களத்திலும் ஒன்றுபடலாம்!

முட்டுச்சந்தில் நிற்கும் பாசிச பா.ச.க.வை முறியடிக்க வாய்ப்பான தருணமும் இதுவே ஆகும்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழர்கள் தமிழ்த்தேசியக் களத்தை விரிவாக்கினால், பாசிசத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்!

பாசிசம் என்பது பலம் போல் தெரியும் பலவீனம் ஆகும்! இதைப் புரிந்து கொண்டு, களத்தை விரிவாக்குவோம்!

(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2018 பிப்ரவரி 1-15 இதழில் வெளியானது).



0 கருத்துகள்: