கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"சிந்துவெளி தமிழர் நாகரிகத்தை வேத நாகரிகம் என பொய்யுரைக்கும் இன்னுமொரு உயராய்வு மையம்!"---*தோழர்* கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


 சிந்துவெளி தமிழர் நாகரிகத்தை

வேத நாகரிகம் என பொய்யுரைக்கும்
இன்னுமொரு உயராய்வு மையம்!
======================================
தோழர். கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
======================================

மேற்குவங்காளத்தில் கரக்பூர் இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT - K) 2022ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை (காலண்டரை) வெளியிட்டுள்ளது. அது முழுக்க முழுக்க இட்டுக்கட்டிய ஆரியத்துவ பரப்புரையாக அமைந்துள்ளது.

“இந்திய அறிவு அமைப்பு மையம்” (Indian Knowledge Systems Centre) என்ற புலம் தயாரித்துள்ள இந்த நாட்காட்டி சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவின் வேத கால நாகரிகம் என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும் கூறுகிறது. அதற்கு ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு சான்று என 12 மாதங்களுக்கு சான்று என்ற பெயரால் பொய்யுரையை கட்டவிழித்து விட்டிருக்கிறது.

உலகத்தின் கவனத்தை ஈர்த்த சிந்துவெளி நாகரிகம் என்பது இதுவரை அறியப்பட்ட இந்தியத் துணைத் கண்டத்து மூத்த நாகரிகங்களில் ஒன்று என்பதாலும் இந்தியாவின் வடபகுதியில் அது அமைந்திருப்பதாலும் ஆரியத்துவவாதிகள் சிந்துவெளியில் கவனத்தைக் குவிக்கிறார்கள். சிந்துவெளி நாகரிகம் வேதப்பண்பாட்டு நாகரிகம் என்று அடித்து கூறிவிட்டால், ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் வந்தேறிகள் அல்லர் – இந்த மண்ணின் மக்கள் என்று சாதித்துவிடலாம் எனத் துடிக்கிறார்கள்.

இந்த நோக்கத்தில்தான் சிந்துவெளி நாகரிகத்தை சிந்து - சரசுவதி நாகரிகம் இன்று ஆரித்துவவாதிகள் பெயர் சூட்டுகிறார்கள்.

அதன் ஒரு முயற்சியாகவே கரக்பூர் ஐ.ஐடி. நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதே வேலையை மோடி அரசின் 2020 - தேசியக் கல்விக் கொள்கை விரிவாக செய்து வருகிறது. பள்ளிப்பாடப் புத்தகங்களிலிருந்து ஆய்வு மையங்கள் வரை இந்த திரிபு வேலை அரங்கேறி வருகிறது.

சிந்து சமவெளியானது, வேத கால நாகரிகத்தைச் சேர்ந்தது என்று நிலைநாட்டிவிட்டால், ஆரியர்கள் இந்த மண்ணின் மக்கள்தான் என்றும், வேத நாகரிகம் தான் இந்தியாவில் பழைய நாகரிகம் என்று நிலைநாட்டி விடலாம் என்று கருதுகிறார்கள்.

அவ்வாறு நிலைநாட்டி விட்டால், வேதமும் வேத மதமும் சமற்கிருதமும் தான் இந்தியத்தேசியத்தின் மையக் கூறுகள் என்றும் உறுதிப்படுத்திவிடலாம் என்பது அவர்களது திட்டம்!

ஆயினும் சிந்துவெளி குறித்த அடுத்தடுத்த ஆய்வுகள், ஆரியர்கள் வந்தேறிகள் என்பதையும் சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் மூலத்தமிழ் மொழிப் பேசிய பண்டைத் தமிழர்கள் என்பதையும் மெய்பித்து வருகின்றன.

கீழடி ஆய்வு, ஆதிச்சநல்லூர் ஆய்வு ஆகியவை சிந்துவெளிக்கும் முந்தையவை என்பதற்கும், சிந்துவெளிக்கும் கீழடிக்கும் பல ஒத்த தன்மை இருப்பதால் இத்துணைக்கண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்க புதிய புதிய சான்றுகளைத் தருகின்றன.

இது ஆரியத்துவவாதிகளை அச்சுறுத்துகிறது. எனவே தொடர்ந்து பல்வேறு பொய்யுரைகளை ஆய்வு முடிவுகள்போல் தோற்றம் காட்டி வெளிக்கொணர முயல்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கவாழ் பிராமணரான இராசாராம் என்ற கணினிப் பொறியாளர், “சிந்துவெளியில் இருந்தது காளை அல்ல குதிரைதான்!” என்று சாதித்தார். அதற்காக சிந்துவெளி ஒற்றைக் கொம்பு காளை இலட்சினையை எடுத்து, அதன் வாலை குதிரைவால் போன்று கணினியில் கிராபிக்ஸ் மூலம் திரிபாக சித்தரித்து, ஒற்றைக் கொம்பு காளையின் முகத்தை குதிரை முகம் போல் மாற்றி, சிந்துவெளியில் குதிரை இருந்தது – குதிரை என்பது ஆரியர்களின் வளர்ப்பு கால்நடை, எனவே சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியர்களே என கட்டுரை வெளியிட்டார். அதை உலகம் முழுவதும் இருக்கிற ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகள் வழியாக பரப்பினர். ஆயினும் “தி இந்து” குழுமத்தின் ஃப்ரண்ட்லைன் 30 செப்டம்பர் 2000 இதழ், இராசாராமின் இந்த தில்லுமுல்லுவை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. தமிழர் கண்ணோட்டம் இதழிலும் இது குறித்து எழுதினோம்.

அடுத்தடுத்த ஆய்வுகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் ஆய்வு முன்மொழிவைத்தான் மெய்ப்பித்து வருகின்றன. உலகின் மூத்த மொழி தமிழ், மூத்த இனம் தமிழர் என்று பாவாணர் கூறினார்.

அறிஞர் நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் முற்காலத்தில் இன்றைய எத்தியோப்பாவில் பேசப்பட்டு, இன்று அழிந்துவிட்ட ஒரு மொழியும், மூலத்தமிழ் மொழியும்தான் உலகின் முதல் மொழிகள் என்று தெளிவாக கூறிவிட்டார்கள்.

அதேபோல் சிந்துவெளி எழுத்துக்கள் மூலத்தமிழ் எழுத்துக்கள் என்பதை மிகப்பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆரியத்துவவாதிகள் அதை சமற்கிருதம் என்றும் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் என்றும் அது வேத நாகரிகம் என்றும் பொய்யுரை செய்ய பாடாய்ப் படுகிறார்கள்.

இறுதிக்கும் இறுதியாக - அண்மையில் வந்த மரபீனி (டி.என்.ஏ) ஆய்வு ஆரியர்களும் அவர்களது ரிக் வேதமும் இப்போதைய இரான் பகுதிகளிலிருந்து வந்தவை என்பதை தெளிவாக்கிவிட்டன.

வாகீச எம். நரசிம்மன், நிக். பேட்டர்சன் மற்றும் 95 ஆய்வாளர்கள் இணைந்து 2018ஆம் ஆண்டு வெளியிட்ட டி.என்.ஏ. ஆய்வறிக்கை “தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மரபியல் உருவாக்கம்” (Genomic Formation of South and Central Asia) என்பதாகும். இந்த ஆய்வுப் பணியின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் ரீச் என்ற புகழ் பெற்ற ஆய்வாளர் ஆவார்.

இரான், துர்க்மினிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் கி.மு. 5,600 முதல் கி.மு. 1,200 ஆம் ஆண்டு வரை உள்ள மிக பழமையான எலும்பு கூடுகளிலிருந்தும், சைபீரியக் காடுகள், யூரல் மலையின் ஸ்டெப்பி புல் வெளி ஆகியவற்றிலிருந்து கி.மு. 4,700 முதல் 1,000ஆம் ஆண்டு வரை உள்ள பழைய எலும்பு கூடுகளிலிருந்தும், பாகிசுதானின் சுவாத் பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து கி.மு. 1,200 முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை உள்ள எலும்பு கூடுகளிலிருந்தும் கிடைத்த மாதிரி டி.என்.ஏ.க்களை சேகரித்து இப்பகுதிகளிலும் இந்தியாவிலும் வாழும் தற்கால மனிதர்களின் டி.என்.ஏ.க்களை சேகரித்து இவற்றிற்கிடையே ஒப்பாய்வு செய்த மிகப்பெரிய ஆய்வாகும் இது.

இந்த டி.என்.ஏ. ஆய்வு யார் எங்கிருந்து புலப்பெயர்ந்து எந்த காலத்தில் எங்கு சென்றார்கள் யாருடன் கலந்தார்கள் என்பது குறித்த ஆய்வு முடிவுகளை கொடுத்தது.

சைபீரியாவின் ஸ்டெபி புல்வெளி பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு மனிதக் கூட்டம் துருக்மினிஸ்தான், உஸ்பிகிஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு அலை அலையாக கி.மு. 2,300 இல் இருந்து கி.மு. 1,500 ஆம் ஆண்டு வரை புலம் பெயர்ந்திருக்கிறார்கள்

அதன்பிறகு தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆசியா பகுதியில் கி.மு. 2,000 முதல் 1,000ஆம் ஆண்டுக்கிடையில் புலம் பெயர்ந்து பிறகு சிந்து சமவெளிக்கு வந்திருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த சிந்து சமவெளி மக்களோடு கலந்து இருக்கிறார்கள். இந்த கலப்பில் உருவான மக்களை வடஇந்திய மக்களின் மூதாதையர்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த டி.என்.ஏ ஆய்வை தொல்லியல் ஆய்வுகளோடும், மொழியியல் ஆய்வுகளோடும், மானுடவியல் ஆய்வுகளோடும் புவியியல் ஆய்வுகளோடும் ஒப்பிட்டு சலித்து இந்த ஆய்வு முடிவுகளை டேவிட்ரீச் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.

ஸ்டெபி புல்வெளி மனிதர்களின் டி.என்.ஏ., மற்றவர்களைவிட வடஇந்திய பிராமணர்களின் டி.என்.ஏ.வோடு கூடுதலாக ஒத்துப் போகின்றன என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பிராமணர்கள் வேறு சமூகத்தவரோடு மிகக் குறைவாக கலப்பதால், சிந்துவெளி மண்ணின் மக்களோடு இவர்கள் அதிகம் கலக்கவில்லை. இதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டெபி புல்வெளி மூதாதையர்களின் டி.என்.ஏ.வோடு இவர்களின் டி.என்.ஏ.விற்கு ஒத்த தன்மை அதிகம் இருக்கிறது.

இன்னொருபுறம் கி.மு. 2300 க்கும் கி.மு. 1200 க்கும் இடைப்பட்ட செம்பு காலத்தில் கசகசஸ்தானில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டிற்கும் இந்தியத் துணைக் கண்டத்து வேத கால பண்பாடுகளுக்கும் நெருக்கமான உறவு நிலவியது.

வேத கால சமற்கிருதத்திற்கும், பாரசீக மொழியின் ஜென் அவஸ்தா நூலுக்கும் இடையில் நெருக்கமான மொழி ஒற்றுமை இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், ஆரியர்கள் அந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று கூறுவதற்கு இது கூடுதல் சான்று எனக் கூறுகிறார்கள்.

வேத கால ஆரியர்கள் சிந்துவெளியில் நுழைந்த காலம் என்பது சிந்துவெளி நாகரிகம் வலுவிழக்க தொடங்கிய காலம் ஆகும்.

ஆரியர்களின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு சிந்துவெளித் தமிழர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். இதையும் டி.என்.ஏ. ஆய்வு உறுதி செய்கிறது.

அடுக்கடுக்கான அறிவியல் வழிபட்ட இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும்போது, அனைத்தையும் புறம்தள்ளிவிட்டு, தமது கைச்சரக்குகளை ஆய்வு முடிவுகள் போல் உயராய்வு மையங்கள் வழியாக ஆரியத்துவவாதிகள் திணிக்கிறார்கள்.

கீழடி ஆய்வு ஆரியத்துவவாதிகளின் கயிறு திரிப்புகளுக்கு மரண அடி கொடுத்துவிட்டது. கீழடி சிந்துவெளிக்கு தொடர்பில்லாமல் தனித்துத் திகழ்ந்த நாகரிகப் பகுதி என்பதை கிட்டத்தட்ட அனைத்து ஆய்வாளர்களுமே ஏற்கிறார்கள். இங்கு கிடைத்த மக்களின் குடியிருப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்ட செவ்வக செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், இங்கு அமைந்த கழிவுநீர் கால்வாய்களும் பானை ஓடுகளும் பிற அணிகலன்களும் பெரிதும் சிந்துவெளியோடு ஒத்து போகின்றன. இரண்டு பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள் ஒரே மொழி இனத்தைச் சேர்ந்தவர்கள் – அதாவது தமிழர்கள் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெரிகிறது.

சமற்கிருத வேதங்களில் கூறப்படும் ஊர் அமைப்புகளுக்கும் கட்டிட அமைப்புகளுக்கும் சிந்துவெளியில் நிலவியவற்றிற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஏனெனில் இவை வேத நாகரித்திற்கு தொடர்பில்லாதவை – அதற்கு முந்தியவை.

அண்மையில் அரியானாவில் இராகிக்கரில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. ஆய்வு சிந்துவெளியின் அரப்பா மனிதர்கள் ஆரியக் கலப்பற்றவர்கள் வேத காலத்திற்கும் முந்தியவர்கள் என்பதற்கு கூடுதல் சான்று கூறுகிறது.

இவ்வளவு ஆய்வு முடிவுகள் இருந்தாலும் மோடி அரசு தனது அதிகார பலத்தை பயன்படுத்தி கரக்பூர் ஐ.ஐ.டி. போன்ற ஆய்வு மையங்கள் வழியாகவும் பாடப் புத்தகங்கள் வழியாவும் பொய்யைத் திணிக்க முயல்கிறது.

ஆரியத்துவத்திற்கு எதிரான முக்கியமான போர்க்களமாக ஆய்வு உலகம் விளங்குகிறது. இதனை புரிந்து கொண்டு உண்மையை நிலைநாட்ட தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் களம் இறங்க வேண்டிய காலம் இது!

====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
====================================

0 கருத்துகள்: