கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் பணியாற்றும் பழங்குடியின தொகுப்பூதிய ஆசிரியர்களை நீக்கக் கூடாது! அவர்களை நிரந்தரமாக்க வேண்டும்!"------ தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில்

பணியாற்றும் பழங்குடியின தொகுப்பூதிய ஆசிரியர்களை நீக்கக் கூடாது!
அவர்களை நிரந்தரமாக்க வேண்டும்!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
======================================


தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 212 தொடக்கப் பள்ளிகளும், 49 நடுநிலைப் பள்ளிகளும், 31 உயர்நிலைப் பள்ளிகளும் 28 மேல்நிலைப் பள்ளிகளும் என 320 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சற்றொப்ப 28,500க்கும் மேற்பட்ட பழங்குடியின வகுப்பு மாணவர்கள் கல்வி பெற்று வருகின்றனர். இவற்றுள் அரசே நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளும் உண்டு. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினக் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டப் பள்ளிகள் இவை.

பழங்குடியின மாணவர்களுக்கான இப்பள்ளிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து தேர்வு பெற்று வரும் இதர சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வெகுதொலைவு வந்து பயணப்பட்டு, குறைவான ஊதியத்தில் பணி செய்ய ஆர்வம் காட்டாத நிலையில், இப்பள்ளிகளின் ஆசிரியப் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளன. தற்போதைய 2024 – 2025ஆம் கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாத காலம் நிறைவு பெறும் நிலையில், இப்போது வரை பழங்குடியினர் நலத்துறையில் மட்டும் சற்றொப்ப 450க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவேதான், இப்பள்ளிகளில் பழங்குடியின ஆசிரியர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களைத் தற்காலிகமாக பணியமர்த்திக் கொள்ள தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

இதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு, இப்பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்களே இல்லாமலும், பல பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகவும் செயல்படுவதை கருத்தில் கொண்டு, சிறப்பு அரசாணையின் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை நிலை எண்: 9, நாள்: 25.01.2017) மூலம் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்தியது. தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பழங்குடியினர் பள்ளிகளில், பழங்குடியின நலத்துறையின் கீழ் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுத் தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்ட இவ்வாசிரியர்கள், கடந்த எட்டாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் பழங்குடியின வகுப்பினர் ஆவர்.

தற்போது, ஏற்கெனவே சேர்க்கப்பட்ட பழங்குடியின தற்காலிக ஆசிரியர்களை நீக்கிவிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவது ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இதற்குக் காரணமாகச் சொல்லும் தமிழ்நாடு அரசு, அத்தீர்ப்பில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைக் குறிப்பிடவில்லை என்பதை வசதியாக மறைத்துக் கொள்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பழங்குடியின ஆசிரியர்கள், தாங்கள் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவோம் என எதிர்பார்த்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கை ஆசிரியர்களிடம் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பழங்குடியின ஆசிரியர்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது. இவ்வாசிரியர்கள் உடனடியாக நீக்கப்படுவதால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின பள்ளி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கெனவே, அரசின் நடவடிக்கை ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்துள்ளது.

கடந்த எட்டாண்டுகளாக ஆசிரியப் பணியாற்றி வரும் பழங்குடியின ஆசிரியர்களை நீக்குவது சரியானதும், நீதியானதும் அல்ல! “திராவிட” மாடல் என சமூகநீதியின் பெயரால் ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் ஆட்சியாளர்கள், பழங்குடியின ஆசிரியர்களை நீக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.

எனவே பழங்குடியின வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, எட்டாண்டுகளாகப் பணியாற்றி வரும் பழங்குடியின தற்காலிக ஆசிரியர்களை தொடர்ந்து பணியில் நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும், அவர்களை நிரந்தர ஆசிரியர்களாக தகுதி உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக ஆசிரியர்களைப் பணியமர்த்திடவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

0 கருத்துகள்: