கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"சூழலை - தமிழர் பண்பாட்டுத் தடங்களை அழிக்க வேதாந்தா அகர்வாலுக்கு அனுமதி!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


சூழலை - தமிழர் பண்பாட்டுத் தடங்களை அழிக்க

வேதாந்தா அகர்வாலுக்கு அனுமதி!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
========================================


மதுரை மாவட்டம் - மேலூரில், தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றுவதோடு, பல்லுயிர்ப் பெருக்க சூழலியல் முகாமைத்துவம் வாய்ந்த அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை அழித்து, டங்ஸ்டன் கனிம வளத்தைத் தோண்டி எடுக்க, வேதாந்தாவின் அகர்வாலுக்கு இந்திய அரசு இசைவு வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

“நாயக்கர்ப்பட்டி டங்ஸ்டன் மண்டலம்” எனப் பெயரிடப்பட்ட பகுதியில், சற்றொப்ப 5,000 ஏக்கர் நிலத்தில் (2,015 ஹெக்டேர்), முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி, மாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களை அழித்து, டங்ஸ்டன் (Tungsten) எனும் அரிய கனிம வளத்தை அள்ளிச் செல்ல, ஸ்டெர்லைட் அழிவு வேதாந்தாவின் இந்துசுதான் சிங்க் எனும் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது இந்திய அரசு!

தூத்துக்குடியில், தாமிர ஏற்றுமதிக்காக நூற்றுக்கணக்கான மக்களின் உயிரையும், உடல் நலத்தையும் நாசப்படுத்திய வேதாந்தாவின் “ஸ்டெர்லைட்” நச்சு ஆலை விரட்டியடிக்கப்பட்டது. இன்று அதே வேதாந்தாவின் “இந்துசுதான் சிங்க்” எனும் நிறுவனம், மதுரை மேலூரைக் குதறியெடுக்க அனுமதி பெற்றுள்ளது. இந்திய அரசின் சுரங்கத்துறை, 2024 நவம்பர் 7ஆம் நாள், வெளியிட்ட அறிவிப்பில் இதை உறுதி செய்திருக்கிறது.

இச்சுரங்கம் அமையவுள்ள பகுதிகள் மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும், தமிழர்களின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் தொல் பொருள் சின்னங்கள் நிறைந்துள்ள பகுதி என்பதும் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்திய ஆரிய அரசின் தமிழினத்திற்கெதிரான வன்மத்திற்கு இது இன்னொரு சான்று!

அரிட்டாப்பட்டியின் ஏழு பெரும் கடினப்பாறை மலைகள் 72 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்கும் 200 இயற்கை நீருற்றுகளையும், 3 தடுப்பணைகளையும் கொண்டிருக்கிறது. இவற்றுள், 16ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் வெட்டிய ஆனைகொண்டான் ஏரியும் அடக்கம்! வெள்ளை வல்லூறு (Laggar Falcon), இராசாளி (Shaheen falcon), இராசாளிப் பருந்து (Bonelli's Eagle) போன்ற 250க்கும் மேற்பட்ட அரியவகைப் பறவையினங்கள், இந்திய அலங்கு (Indian Pangolin), மலைப்பாம்புகள் (Python molurus), தேவாங்கு (Slender Loris) போன்ற அரியவகை வனவிலங்குகள் ஆகியவை இப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுபோல, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பெருமாள் மலையில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன.

அதுமட்மின்றி, அரிட்டாப்பட்டி, அழகர் மலை, பெருமாள் மலை ஆகியவற்றில் பெருங்கற்கால வரலாற்றுச் சின்னங்களும், தொல்பொருள் சின்னங்களும் ஏராளமாக உள்ளன. மீனாட்சிபுரத்தில் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாங்குளம் மூலத்தமிழ் (தமிழி) கல்வெட்டு, தமிழின் செம்மொழித் தகுதியை அறிவிப்பதற்கு முக்கியச் சான்றுகளுள் ஒன்றாக நின்றது. அரிட்டாப்பட்டி - கஞ்சமலை பகுதிகளில், ஆசீவக சமணப் படுக்கைகளும், மகாவீரர் சிற்பங்களும் உள்ளன. அவற்றில் பலவற்றை மக்கள் இன்றைக்கும் வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. காமன்குளம் கண்மாய் அருகே பெருங்கற்காலச் சின்னம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனவேதான், கிரானைட் சுரங்கக் கொள்ளையிலிருந்து இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில், பொது மக்கள் மற்றும் சூழலியலாளர்கள் அரிட்டாப்பட்டியைப் பாதுகாக்க தொடர் கோரிக்கைகளை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு, உயிரியற் பல்வகைமைச் சட்டம் – 2002இன்படி (Biological Diversity Act of 2002), கடந்த 2022ஆம் ஆண்டு (22.11.2022), மதுரை – மேலூர் வட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டியின் 139.63 ஹெக்டர் மற்றும் கிழக்கு வட்டத்திலுள்ள மீனாட்சிபுரத்தின் 53.8 ஹெக்டர் ஆகிய பகுதிகளை இணைத்து, மொத்தம் 193 ஹெக்டேர் நிலப்பகுதியை “அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தளம்” (Arittapatti Biodiversity Heritage site) எனப் பெயரிட்டு, தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அதனை அங்கீகரித்தது. (காண்க: 21.11.2022 நாளிட்ட தமிழ்நாடு அரசாணை எண் 201, அறிவிப்பு எண் II(2)/ECCF/878(c)/2022).

இவ்வாறான சூழலியல் முக்கியத்துவமும், பண்பாட்டு முக்கியத்துவமும் வாய்ந்த பகுதிகளை அழித்து, டங்ஸ்டன் கனிமம் எடுக்கப் போவதாக இந்திய அரசும், வேதாந்தா நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது வெறும் இலாப வேட்டைக்கான சூழல் அழிப்புத் திட்டம் மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாட்டு அழிப்பு – அடையாள அழிப்புத் திட்டமும் ஆகும்! கீழடி உள்ளிட்ட தமிழர் தொன்மங்களை வெளி வராமல் தடை போட முயன்ற இந்திய அரசின் தமிழின விரோதப் பகை இப்போது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி கோரப்படவில்லை என அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே தவிர, அதற்குத் தடை விதிப்போம் என்ற உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. இது இன்னும் நமது கவலையைக் கூட்டுகிறது. இந்த இன அழிப்புத் திட்டத்தை, தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! இந்த நாசகார டங்ஸ்டன் எடுப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அரசு இந்த ஏல முடிவை திரும்பப் பெற வேண்டும்.

கொலைகார வேதாந்தாவின் நிழல்கூட, தமிழ் மண்ணில் படாதவாறு, விழிப்புணர்வோடு போராடி இத்திட்டத்தை முறியடிக்க தமிழர்கள் உறுதியேற்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

0 கருத்துகள்: