கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label அடக்குமுறை எதிர்ப்பு. Show all posts

செல்லாத சட்டத்தில் பொல்லாத வழக்கு! த.தே.பே தலைவர் மணியரசன் மீது பொய் வழக்கு!


செல்லாத சட்டத்தில் பொல்லாத வழக்கு!
த.தே.பே தலைவர் மணியரசன் மீது பொய் வழக்கு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!

தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திறனாய்வு செய்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் 2019 நவம்பரில் அந்த தீர்ப்பு வந்த ஓரிரு நாட்களில் கவிதை ஒன்றை எழுதி முகநூலில் வெளியிட்டு இருந்தார்.

அதற்கு இப்போது தமிழ்நாடே மதக்கலவரத்தில், மக்கள் மோதலில் தத்தளித்து கொண்டிருப்பது போலவும், தீர்ப்புரைத்த நீதிபதிகள் அவமானத்தால் மனம் பாதிக்கப்பட்டது போலவும், இப்போது தமிழ்நாடு காவல் துறை வழக்கு புனைந்திருக்கிறது.
இதேபோல் இத்தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க. குணசேகரன் ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை கீழவாசல் காவல் நிலையத்தில் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்திய அரசின் உள்துறைதான் இவ்வழக்கை புனைவதற்கான அழுத்தத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்திருக்கிறது என்று கருத அடிப்படை இருக்கிறது.
தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட மூவர் மீதும் ஒரே விதமான குற்றச்சாட்டில் இவ்வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தொழில் நுட்பசட்டத்தில் பிரிவு 66(A), (மின்னனு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல்), 72 (இரகசிய தன்மையையும், தனி நபர் உரிமையையும் மீறியது), பிரிவு 72(A) (சட்ட வழிப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனிநபர் குறித்தத் தகவல்களை வெளியிடுவது) ஆகியவற்றின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 228 (நீதிபதிகளின் மீது வேண்டுமென்றே அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டு நீதி முறைமையில் குறுக்கிடுதல்), 504 (பொது அமைதியை சீர்குலைக்க பொய்யான தகவல்களைப் பரப்புவது), 505(2) (பல்வேறு மத, இன சமூகங்களுளிடையேப் பகைமையை, வெறுப்பை அல்லது தவறானக் கருத்துகளை உருவாக்குவது), பிரிவு 12 (நீதிமன்ற அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழும் இந்த வழக்குத் தொடுக்கப்படுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீதான வழக்கிற்கு காரணமாக சொல்லப்படும் கவிதை இதுதான்.
மண்டபத் தீர்ப்பு
--------------------------
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும் என்றார் இளங்கோவடிகள்
அரசு நடத்துவோர் நடுநிலை தவறினால்
அறம் தண்டிக்கும் என்றார்!
அன்று

அரசனும் நீதிபதியும் ஒருவரே!
சரியாய் விசாரிக்காமல்
தவறாய்த் தீர்ப்புரைத்து
கோவலனைக் கொன்ற குற்றத்திற்காக
தன்னையே மாய்த்துக் கொண்டான்
பாண்டியன்
தமிழர் நீதி இப்படி தழைத்தது!

இன்றோ
மன்னன் வேறு நீதிபதி வேறு!
என்றாலும்
ஒன்றாய் உட்கார்ந்து எழுதியது போல்
தீர்ப்புரைக்கிறார்களே அது எப்படி?

வழிபடும் மண்டபம் - எந்த
வகைறாவுக்கு என்று வழக்கு வந்தது
வல்லடி வழக்கு பேசி – எதிரியின்
வழிபாட்டு மண்டபத்தைத் தகர்த்தவரை
மன்னராகத் தேர்வு செய்தனர் மக்கள்
மன்னர் நீதிபதியைத் தேர்வு செய்தார்

கூடம் கட்டி கோபுரம் எழுப்பி
கும்பிட்டு வந்த வரலாறு
மாற்றுத் தரப்புக்கு மட்டுமே
உண்டு எனினும்
இடித்தவருக்கே மண்டபம் சொந்தம்
என்றார் நீதிபதி
………

என்று தொடர்கிறது அக்கவிதை! இதைத்தான் ஆகப்பெரிய "குற்றம்" என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
இப்போது மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்ட சட்டப்பிரிவுகளை பாருங்கள். எந்த சட்டநெறியுமின்றி பழி வாங்கும் ஆரிய வன்மத்தில், அதன் அடிப்பொடி அரசால் தொடுக்கப்பட்ட வழக்கு என்பது தெளிவாகும்.
இதில் சொல்லப்படும் முதன்மைப் பிரிவு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66(A) என்பதாகும். இப்பிரிவு குறித்து வேறொரு வழக்கு தொடர்பாக நான் ஏற்கெனவே விரிவாகத் திறனாய்வு செய்திருக்கிறேன். ("சட்டத்தின் தாக்குதல்", கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).
கணிப்பொறியில் கைவைத்தாலே குற்றம் என்று கூறும் அளவிற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையுமே குற்றமாக வரையறுக்கும் பிரிவு 66(A)!
“பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத்தக் கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக் கூடிய, மனதைக் காயப்படுத்தக் கூடிய, தொந்தரவு தரக்கூடிய, பகையை வளர்க்கக் கூடிய, வெறுப்பைப் பரப்பக் கூடிய, இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழி இனங்களுக்கிடையே பகைமையை மூட்டக் கூடிய அல்லது தீமை பயக்கக் கூடிய அல்லது சட்டவிரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய மின்னணு தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்” என்கிறது இந்த பிரிவு 66(A).
இப்பிரிவின் கீழ் இச்சட்டம் உருவாக்கப்பட்ட 2012இல் தொடங்கி பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்த வழக்குகளில் ஸ்ரேயா சிங்கால் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் நீதிபதிகள் செல்லமேசுவர், நாரிமன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு, இந்த பிரிவு 66(A) முற்றிலும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வரையறுத்து, இப்பிரவு 66(A) இனிச் செல்லாது எனக்கூறி இப்பிரிவையே ரத்து செய்தது.
உச்ச நீதிமன்றம் இவ்வாறு ஒரு சட்டப்பிரிவை சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்துவிட்டால், பிரிவு சட்டப்புத்தகத்தில் இல்லை என்று பொருள்! அப்பிரிவு செத்துவிட்டது என்று பொருள்.
சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட இந்தப் பிரிவு 66(A) கீழ்தான் இப்போது தோழர் பெ. மணியரசன் மீதும் மற்ற இருவர் மீதும் கொடிய வழக்குத் தொடுக்கப்படுள்ளது.

இந்த பிரிவு 66(A)ஐ இரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின் வருமாறு கூறுகிறது:
”இது போன்றதொரு பிரிவு நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இருக்க முடியாது. எது பேசினாலும் குற்றம் என்று வரையறுக்கும் இந்தப் பிரிவு 66(A) சனநாயகத்தையே அழித்துவிடும். சனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்கான அரணாக விளங்குவது, மக்களின் கருத்து கூறும் உரிமையாகும்.
கருத்துரிமையை பிரிவு 66(A) தகர்த்து விடுகிறது. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 19, 21, 14 ஆகிய உறுப்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது. எனவே இப்பிரிவு 66(A) ஐ சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்கிறோம்”.
சட்டப் புத்தகத்திலிருந்தே தூக்கி எறியப்பட்ட – இல்லாத சட்டப்பிரிவின் கீழ்தான் இவ்வழக்கு புனையப்பட்டுள்ளது. இந்திய உள்துறையின் இச்செயல் புதிதல்ல. இச்சட்டப்பிரிவு 66(A) நீக்கப்பட்ட 2015 மார்ச்சுக்குப் பிறகும் 2018 வரையில் 42 வழக்குகள் இப்பிரிவின் கீழ் பல மாநிலங்களில் வழக்கு புனையப்பட்டது.
இவை குறித்த சில வழக்குகள் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றன. அவற்றுள் ஜாகிர் அலி தியாகி வழக்கு குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கிற அத்தியானந்து என்ற பா.ச.க. தலைவர் மீது 27 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என விமர்சனம் செய்து ஜாகிர் அலி தியாகி என்ற 20 வயது இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது தகவல் தொழில் நுட்பச் சட்டம் 66(A)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின் உயர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்தார். இறுதி மேல் முறையிடு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. இவ்வழக்கைக் கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்ட – செல்லாத சட்டத்தின் கீழ் எவ்வாறு வழக்கு தொடுக்கப்படுகிறது என்று வினா எழுப்பினர்.
"66(A) பிரிவு உயிரோடு இல்லை என்ற நிலையிலும் அப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது என்றால் தொடர்புடைய காவல் துறை உயர்அதிகாரிகள் ஒன்று - சட்ட அறியாமையில் இருக்கிறார்கள் அல்லது ஆணவத்தில் செயல்படுகிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் ஆணவமும் அறியாமையும் இணைந்துதான் இவ்வாறான பொய் வழக்குகளைப் புனைய வைக்கிறது" என்று கூறி கண்டித்தார்கள்.
ஸ்ரேயா சிங்கல் வழக்கில் 66(A) நீக்கப்பட்ட பிறகு ஜாகிர் அலி தியாகி வழக்கில் இச்சட்டப்பிரிவைப் பயன்படுத்துவது ஆணவமும் அறியாமையும் கலந்த நடவடிக்கை என்று கண்டித்த பிறகும் இப்போது மீண்டும் அதே பிரிவில் வழக்கு தொடுக்கப்படுகிறது.
மோடி அரசும் அதன் ஆணையைச் செயல்படுத்தும் எடப்பாடி அரசும் எவ்வளவு தூரம் சட்டத்தை சீர்குலைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அதேபோல் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 72 கூறும் ரகசியத்தன்மையை, தனிநபர் உரிமையை அச்சுறுத்துவது என்ற குற்றம் இங்கு எழவே இல்லை. ஏனெனில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு பொது ஆவணமாக உள்ள பாபர் மசூதி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இரகசியமானது அல்ல! இது எந்த நீதிபதியின் தனிநபர் உரிமையும் அல்ல! உச்ச நீதிமன்றம் என்ற நீதி நிறுவனத்தின் தீர்ப்பு அது. மனம் போன போக்கில் பிரிவு 72ஐ சேர்த்திருக்கிறார்கள்.
அதே போல் பிரிவு 72(A) இப்பிரிவு கூறும் தனிநபர் தகவல் எதையும் கவிதையின் வழியாக பெ. மணியரசன் வெளியிடவில்லை.
இவ்வழக்கில் கூறப்படும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 228 பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் காவல் துறை கவனமாக இருக்க வேண்டும் என இந்திய அரசின் சட்ட ஆணையத்தாலேயே எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இப்பிரிவின் கீழும் பெ. மணியரசன் வழக்கில் வரும் இன்னெரு பிரிவான 12 கீழும், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971ன் கீழும் தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் சென்று இருக்கின்றன.
அவற்றுள் பால் தாக்கரே வழக்கு மற்றும் பதேகர் நடுவண் சிறைக் கண்கானிப்பாளர் எதிர் ராம் மனோகர் லோகியா ஆகிய வழக்குகள் முக்கியமானவை.
நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அத்தீர்ப்பை எழுதிய நீதிபதிகளைக் குற்றம் கூறியது ஆகாது. மிக வெளிப்படையாக ஒரு நீதிபதியின் நீதித்துறைச் செயல்பாட்டின்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் கூறி கருத்துரைத்தால் தான் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட வேண்டும். எவ்வளவு தான் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தாலும் அது உண்மையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல ஆயுதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர நீதிபதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டாகவோ, நீதிபதியின் நீதித்துறைச் செயல்பாட்டில் செய்யப்படும் குறுக்கீடாகவோ கருதக்கூடாது என்று இத்தீர்ப்புகள் தெளிவுபடுத்தின.
இத்தனைக்கும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஒரு தீரப்பு குறித்துக் கட்டுரை எழுதும் போது, அதில் மும்பை நீதிமன்ற அமர்வில் நீதிபதிகளில் ஒருவர் 32 இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றிருக்கிறார் எனத் தகவல் வந்திருப்பதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். அவ்வாறான சூழலில் கூட இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது, நீதிமன்ற செயல்பாட்டில் குறுகீட்டதாகவும் கருதக்கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றம் தீரப்பளித்தது.
இந்த வழக்கில் கூறப்படும் 505(2) என்ற தண்டனைச்சட்ட பிரிவுகளில் தோழர் பெ. மணியரசனின் கவிதைக்கோ மற்ற இருவரின் கருத்துக்கோ தொடர்பற்றது என்பதை இப்பிரிவை உற்றுநோக்கினால் தெரியும்.
”யாரொருவர் மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு அடிப்படையில் பல்வேறு மத, மொழி அல்லது பிரதேச குழுகளிடையேப் பகைமையை அல்லது வெறுப்பை அல்லது கசப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அறிக்கைகள் அல்லது சுற்றிக்கைகள் உருவாக்கி வெளியிட்டால் அல்லது வதந்தியைப் பரப்பினால் அல்லது அச்சுறுத்தும் செய்தியைப் பரப்பினால் அவர் 3 ஆண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாகப் பெறத்தக்கவர் ஆவார்" என்று கூறும் 505(2) அதற்குக் கீழ் விதிவிலக்கையும் அடுத்தப் பத்தியிலேயே கூறுகிறது.
“மேற்படிக் குற்றசெயலில் ஈடுபடும் நோக்கமின்றி நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கி வெளியிடப்படும் அறிக்கைகள் அல்லது உரைகள் அல்லது வதந்திகள் இப்பிரிவின் படி வரையறுக்கப்படும் குற்றச் செயல் ஆகாது” என்று அந்த விதிவிலக்குப் பற்றி கூறுகிறது.505(2)ஐ ஒழுங்காக படிக்காததலோ அல்லது தங்கள் ஆணவத்தின் காரணமாகவோ அப்பிரிவை இவ்வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்.
கருத்துரிமைக்கு ஞாயமான வரம்பு என்ன என்பது குறித்து மேற்சொன்ன ராம் மனோகர் லோகியா வழக்கில் (1960 (2) SCR 821) உச்ச நீதிமன்றம் கூறுவது கவனிக்கத்தக்கது.
“ஒரு செயல் குறித்தோ தீர்ப்பு குறித்தோ கடுமையாகத் திறனாய்வு செய்வதோ விவாதிப்பதோ அல்லது அக்கருத்திற்கு எதிரான தனது கருத்து நிலையைத் தீவிரமாக முன்வைப்பதோ பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி விடக்கூடாது”
“ஒரு கொள்கை நிலையில் இருந்து ஒருவர் வெளியிடும் கருத்து சிலருக்கு அல்லது சமூகத்தின் சில பிரிவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடும் அல்லது ஒரு கருத்து பரிமாற்றத்தால் ஒரு குழுவினர் கடுமையான மனபாதிப்பு அடையக்கூடும், அதை வைத்துக் கூறப்படும் கருத்து பொது அமைதிக்கு எதிரானது என்றோ சமூக குழுக்களிடையேப் பகைமையைத் தூண்டக்கூடியது என்றோ முடிவுக்கு வந்துவிடமுடியாது.

எடுத்துகாட்டாக, ஒடுக்குமுறையில் இருந்து பெண்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருவர் வெளியிடும் கருத்தோ, சாதி முறையினை நீக்கிவிட வேண்டும் என்று ஒருவர் வெளியிடும் கருத்தோ இக்கருத்தின் மறுதரப்புக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். அதற்காக அக்கருத்துரிமைக்கு வரம்பு கட்ட முடியாது அக்கருத்துகளைப் பொது அமைதிக்கு இடையூறானது என்று கருதக்கூடாது.”
“பொது அமைதிக்கு அல்லது சமூக ஒழுங்கிற்கு உடனடி ஆபத்து விளைவிக்காத எந்த கருத்தையும் ஞாயமான வரம்பு என்ற பெயரால் தடைவிதித்துவிடக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
இத்தீர்ப்பின் வெளிச்சத்தில் தோழர் பெ. மணியரசன் மீதான வழக்கில் இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகள் 505(2), 504 ஆகியவை சற்றும் பொருந்தாதவை என்பது விளங்கும்.
மொத்ததில் தோழர் பெ. மணியரசன் மீதும் மற்ற இருவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது, ஆரிய வன்மத்தின் விளைவாக தொடுக்கப்பட்ட பழிவாங்கும் வழக்கு என்பது தெளிவாகும்.
பாபர் மசூதித் தீரப்பு குறித்து பல்வேறு திறனாய்வுகள் எல்லா ஏடுகளிலும் வந்துவிட்டன; வந்துகொண்டும் இருக்கின்றன. உண்மையில் இந்த கவிதைக்காக தோழர் பெ. மணியரசன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாக கருதமுடியாது!
ஆரியத்துவத்திற்கு எதிராக அவர் தொடர்ந்து சமராடி வருவதால் காழ்ப்புணர்ச்சியோடு சினம் கொண்ட மோடி அரசின் உள்துறை தான், கை நீட்டிய இடத்தில் பாயும் தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பயன்படுத்தி இருக்கிறது என்று தெரிகிறது.
சட்டப்புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்ட பிரிவின் கீழும் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டப் பிரிவுகளின் கீழும் தொடர்பே இல்லாதப் பிரிவுகளின் கீழும் கவிதை எழுதி நான்கு மாதங்களுக்குப் பிறகு வழக்குப் புனைந்திருப்பது இந்த ஆரிய வன்மத்தையேக் காட்டுகிறது.

சட்டதின் ஆட்சி குறித்து சற்றேனும் அக்கறை இருந்தால் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மீது போட்டுள்ள இந்த பொய் வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!




பாபர் மசூதித் தீர்ப்பைத் திறனாய்வு செய்த தோழர் பெ. மணியரசன் மீது வழக்கு! கருத்துரிமையைப் பறித்துப் பழிவாங்குவதற்குக் கண்டனம்!


பாபர் மசூதித் தீர்ப்பைத் திறனாய்வு செய்த

தோழர் பெ. மணியரசன் மீது வழக்கு!

கருத்துரிமையைப் பறித்துப்
பழிவாங்குவதற்குக் கண்டனம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திறனாய்வு செய்து கவிதை ஒன்றை முகநூலில் வெளியிட்டதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மீதும், அத்தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்ததற்காக தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் அரங்க. குணசேகரன் ஆகியோர் மீதும் தமிழ்நாடு அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் மட்டுமின்றி, ஆரிய மேலாண்மைக்கு ஆதரவான கருத்துகளுக்கு மட்டும்தான் சட்ட வாய்ப்பு உண்டு என்ற அச்சுறுத்தலும் ஆகும்!


ஆர்.எஸ்.எஸ். கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்த பல்வேறு மத மோதல்களும் வன்முறைகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பதற்ற சூழ்நிலையை நிரந்தரமாக்கியது. மனித உரிமையிலும், சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை உள்ளவர்கள் இது தொடர்பான பல மட்ட வழக்குகளிலும் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள்; கருத்துக் கூறி வந்திருக்கிறார்கள்.



அதன் உச்சகட்டமாக, இச்சிக்கல் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பல முனைகளிலும், பல மொழிகளிலும் திறனாய்வு செய்யப்பட்டிருக்கிறது. அத்தீர்ப்பை எதிர்த்து கருத்து வெளியிடப் படாத ஏடுகளே இல்லை என்ற அளவுக்கு - தொலைக்காட்சிகளே இல்லை என்ற அளவுக்கு – அத்தீர்ப்பு அலசப்பட்டிருக்கிறது.



பாபர் மசூதி இடிப்பு குறித்தும், அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற இந்திய அரசின் சட்டம் குறித்தும், வழிபாட்டுரிமையின் ஆழ அகலங்கள் குறித்தும், விவாதிக்கப்பட்ட வழக்குகளின் உச்சமாக இந்த வழக்கு கவனிக்கப்பட்டது.



உச்ச நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்பு குறித்தும் எதிர்க் கருத்து கூறுவதோ, விவாதிப்பதோ, நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்பதே சட்ட நெறிமுறை ஆகும். நீதிமன்றத் தீர்ப்புகள் பொது வெளியில் விவாதிக்கப்படுவதுதான், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க உதவும் என்பது ஏற்கப்பட்ட சனநாயகக் கொள்கை!



நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்ய குடிமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உரிமை இல்லாதுபோனால், ஆட்சியாளர்களின் கையடக்க நிறுவனமாக நீதிமன்றம் தாழ்ந்துவிடும்.
இந்த நிலையில், பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் திறனாய்வு செய்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களும், திரு. பழ. நெடுமாறன், திரு. அரங்க. குணசேகரன் ஆகியோரும் முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 66 (ஏ) - மின்னணு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல், பிரிவு 72 - இரகசியத் தன்மையையும் தனிநபர் உரிமையையும் மீறியது, பிரிவு 72 (ஏ) – சட்ட வழிப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனிநபர் குறித்த தகவல்களை வெளியிடுவது ஆகியவற்றின் கீழும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 228 – நீதிபதிகளின் மீது வேண்டுமென்றே அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டு நீதிமுறைமையில் குறுக்கிடுதல், 504 – பொது அமைதியை சீர்குலைக்கப் பொய்யான தகவல்களைப் பரப்புவது, 505 (2) – பல்வேறு மத, இன சமூகங்களிடையே பகைமையை, வெறுப்பை அல்லது தவறான கருத்துகளை உருவாக்குவது, 12 – நீதிமன்ற அவமதிப்பு ஆகிய கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்று நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் திறனாய்வுக் கவிதையோ, திரு. பழ. நெடுமாறன், தோழர் அரங்க. குணசேகரன் ஆகியோரின் அறிக்கைகளோ மேற்சொன்ன எந்தச் சட்டத்திற்கும் முரணானது அல்ல என்பதை அவற்றைப் படித்துப் பார்க்கிற யாரும் புரிந்து கொள்ள முடியும்.



ஆயினும், இந்துத்துவா என்ற பெயரிலான தங்களது ஆரிய மேலாதிக்கக் கருத்துகளைத் தவிர வேறு எந்த கருத்துகளுக்கும் சட்ட வழிப்பட்ட உரிமை இல்லை என்பதை, வன்முறை உள்ளிட்ட எல்லா வழிகளிலும் தெரிவித்து வரும் பா.ச.க. அரசு - தம் சொல் படி நடக்கும் தமிழ்நாடு அரசின் வழியாக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.



கடந்த ஆண்டு (2019) நவம்பரில், இக்கருத்துகள் வெளியிடப்பட்டு கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் பாபர் மசூதி தீர்ப்பின் மீது எந்தவித மத மோதல்களோ, வன்முறைகளோ நிகழவில்லை என்பதே இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்ட பழிவாங்கும் வழக்கு என்பதை தெளிவுபடுத்தும்.



கருத்துரிமைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரான இந்த வழக்கைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறு! கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


நில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறு!

மிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


அதிகாரக் குவிப்பு, கருத்துரிமைப் பறிப்பு ஆகிய நோக்கில் மிகக் கடுமையான சட்ட வரைவு ஒன்றை “அச்சு ஊடகம் மற்றும் வெளியீடுகள் பதிவுச் சட்ட வரைவு – 2019” (Registration of Press and Periodicals Bill – 2019) என்ற பெயரில், மோடி அரசு முன்வைத்திருக்கிறது.

வெள்ளையராட்சியில் 1867இல் பிறப்பிக்கப்பட்டு பெரிதும் வெறுத்து ஒதுக்கப்படும் நடப்பிலுள்ள “புத்தகங்கள் பதிவு சட்டம் – 1867”-ஐவிட மிக மோசமான சட்டமாக இச்சட்ட வரைவு அமைந்திருக்கிறது.

ஏடுகள், இதழ்கள், வெளியீடுகள் போன்றவற்றை பதிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்வதற்கு மாறாக, முற்றிலும் இந்திய அரசின் கைகளில் கருத்துரிமைப் பறிப்பு அதிகாரத்தை நிரந்தரமாக வழங்கும் நோக்கோடு இப்புதிய சட்ட வரைவு அமைந்திருக்கிறது.

இது தொடர்பாக இந்திய அரசு அமர்த்தும் அச்சு ஊடகத் தலைமைப் பதிவாளர் (Press Registrar General) அச்சு ஊடகம் மட்டுமின்றி, காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் வல்லாதிக்கம் செய்பவராக மாற்றப்படுகிறார். (இச்சட்ட வரைவு 5(3)).

ஒரு ஊடகத்தின் உரிமையாளர், ஆசிரியர், ஆசிரியர் குழு, அச்சகத்தார், மின்னணு ஊடகத்தில் பதிவேற்றிப் பரப்புவோர் ஆகிய அனைவரும் தலைமைப் பதிவாளரின் சர்வாதிகாரத்தின் கீழ் ஆட்டிவைக்கப்படும் வகையில் விரிந்த அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. ஒரு ஊடகம் தொடர்பான எந்தவித தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் ஆணையிட்டுப் பெறலாம், எந்த ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து ஆய்வு செய்யலாம், பொருத்தமானது என்று தான் கருதும் எந்த ஆவணத்தையும் கொண்டு வரச் சொல்லி வலியுறுத்தலாம், இவற்றில் அவருக்கு மனநிறைவு ஏற்படாவிட்டால் பதிவு செய்ய மறுக்கலாம் என்ற கட்டற்ற அதிகாரம் தலைமைப் பதிவாளருக்கு வழங்கப்படுகிறது (பிரிவு 5 மற்றும் 6).

தலைமைப் பதிவாளருக்குக் கீழே மாநிலங்களில் பதிவு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் மீது மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது!

இவ்வாறு அனைத்து அதிகாரமும் உள்ள தலைமைப் பதிவாளர் தற்சார்பான அதிகாரம் கொண்டவரும் அல்லர். இறுதிக்கும் இறுதியாக, இந்தத் தலைமைப் பதிவாளர் இந்திய அரசு அவ்வப்போது மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் கேள்வி முறையின்றி கட்டுப்பட்டவர் என்றும், இம்முடிவுகள் குறித்து முரண்பாடு வந்தால், இந்திய அரசின் முடிவே இறுதியானது என்றும் முற்றதிகாரமும் இந்திய அரசுக்கு வழங்கப்படுகிறது (பிரிவு 19).

இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலைக் காலத்தில் கிடைத்த சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊடகங்களுக்கு முன் தணிக்கை முறை வந்தது. ஆனால், இப்போது முன்வைக்கப்படும் சட்டத்தின் மூலம் மோடி ஆட்சியில் முன் தணிக்கை அதிகாரம் நிரந்தரமாக வழங்கப்படுகிறது. இவ்வாறான முன் தணிக்கைக்கு அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி, அனைத்து வகை மின்னணு ஊடகங்களும் உட்படுத்தப்படும் என சர்வாதிகாரம் விரிவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து, எந்த முணுமுணுப்பும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக அனைத்து வகை தகவல் தொடர்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடக்கும் இடங்களிலெல்லாம் இணையச் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதைப் போல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வேட்டை நடந்தபோது தூத்துக்குடி – நெல்லை – கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையத் தகவல்கள் முடக்கப்பட்டதைப் போல இனி தாங்கள் விரும்பாத தகவல்கள் பரவுவதை தடுத்து நிறுத்தவும் தங்களது ஒரு தரப்புத் தகவல் மட்டுமே பரப்பப்படவும் அரசுக்கு வாய்ப்பளிக்க இச்சட்டத்தின் மூலம் நிரந்தர ஏற்பாடு செய்யப்படுகிறது.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி (UAPA) தண்டிக்கப்பட்டவர்களும், அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது என இச்சட்டம் தடை போடுகிறது (பிரிவு 4 மற்றும் 11).

ஏற்கெனவே, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பயங்கரவாத அல்லது பிரிவினைவாத கருத்துகள் என்று கருதப்படுபவை அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ, பேச்சிலோ, கலை வடிவிலோ, பிற எந்த வடிவிலோ பரப்புவது தண்டனைக்குரிய குற்றச் செயல் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டப்படி தண்டனை அனுபவித்துவிட்டு, வெளியில் வந்த பின்னும் அவர்களது கருத்துரிமைக்கு தடை போடப்படுகிறது. இரட்டைத் தாழ்ப்பாள் போல இந்தச் சட்டம் மயான அமைதிக்கு வலுசேர்க்கும் சட்டமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதைவிட, “அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள்” என்று மிக தொளதொளப்பானப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது அரசு விரும்பாத எந்தத் தகவலும் பரவுவதை குற்றச் செயலாக வரையறுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அரசின் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள் என்னென்ன என்ற எந்த வரையறுப்பும் இல்லாமல், எந்த எதிர்ப்பையும் அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றமாக வரையறுத்து ஊடக உரிமையை மறுக்கும் ஆபத்து இதில் உள்ளது.

அவசரநிலைக் காலத்தில், தனக்கு எதிராக கருத்துக் கூறிய அனைவருமே நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என வரையறுத்து, இந்திரா காந்தி ஆட்சி சிறையில் தள்ளியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற வலுவான ஊடகங்களே முடக்கப்பட்டன. இப்போது மோடி ஆட்சியில் எல்லா வகை எதிர்க் கருத்துகளும் “இந்திய எதிர்ப்பு” (Anti Indian) என தூற்றப்படுவதும், கொடும் அடக்குமுறைகளை சந்திப்பதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இச்சட்ட வரைவு நிறைவேறிவிட்டால், இந்த அச்சுறுத்தல்கள் நிரந்தரமாக்கப்படும்.

வெள்ளையர் ஆட்சி தொடங்கி இப்போது செயலில் உள்ள ஏடுகள் பதிவு சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலம் நீடிக்கும் கோரிக்கையாகும். ஆனால், அதைச் செய்வதாக இப்போது பிறப்பிக்கப்படும் சட்டம் அதைவிட பன்மடங்கு மோசமானது.

இப்புதிய சட்டத்தை கருத்துரிமையில் அக்கறையுள்ள எந்தவொருவரும் ஏற்க முடியாது!

எனவே, மாநில உரிமையைப் பறித்து, கருத்துரிமையை முற்றிலும் முடக்கும் “அச்சு ஊடகம் மற்றும் வெளியீடுகள் பதிவுச் சட்ட வரைவு – 2019”-ஐ முழுவதுமாக இந்திய அரசு கைவிட வேண்டும் என்றும், ஊடகப் பதிவு அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.




கணினித் தகவல்களுக்குத் தண்டனையா? இந்திய அரசின் ஆணையைக் கண்டிக்கிறேன்!



கணினித் தகவல்களுக்குத் தண்டனையா?

இந்திய அரசின் ஆணையைக் கண்டிக்கிறேன்! 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று (20.12.2018) இரவு பிறப்பித்த அரசாணை, ஒட்டுமொத்த இந்திய மக்களையும், அவர்களது கணினி வழித் தொடர்புகள் அனைத்தையும் குற்றச்செயல் போல் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வந்து விட்டது.

இந்திய அரசின் உளவு ஆணையம் (ஐ.பி. – IB), நடுவண் புலனாய்வுக் குழு, தேசியப் புலனாய்வு அமைப்பு, ரா (RAW), தில்லி காவல்துறை ஆணையம் உள்ளிட்ட பத்து புலனாய்வு நிறுவனங்களுக்கு இந்த பணிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

முகநூல் செயலி, ட்விட்டர், மின்னஞ்சல் உள்ளிட்ட கணினிவழித் தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்திய அரசின் உளவு நிறுவனங்களின் கண்காணிப்புக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படுவதாக இந்த உள்துறை ஆணை அறிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 (1)-இன் கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதாக இந்திய அரசு கூறுகிறது. 

சமூக வலைத்தளம் உள்ளிட்டு கணினி வழியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவர்கள், தகவல் தளங்கள் உள்ளிட்ட அனைவரும் மேற்சொன்ன உளவு அமைப்பினர் கேட்கும்போதெல்லாம் தங்களது கணினித் தகவல்களை திறந்து காட்டவேண்டும். தொழில்நுட்ப வகையில் இந்நிறுவனங்கள் கேட்கும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தவறுபவர்கள் ஏழாண்டு வரை சிறைத் தண்டனை பெறுவார்கள் என்று இந்த ஆணை கூறுகிறது. 

சமூக செயல்பாட்டாளர்களும், தேர்தல்அரசியலுக்கு வெளியே உள்ள மக்கள் இயக்கங்களும் மோடி அரசுக்கு எதிராக செய்து கொள்ளும் தகவல் பரிமாற்றங்களை - கருத்து உரையாடல்களை “இந்திய பாதுகாப்பிற்கு எதிரானது” அல்லது “பொது அமைதிக்கு இடையுறு செய்வது” அல்லது “பிற குற்றச்செயல்களை தூண்டக்கூடியது” என்று இந்திய உளவு அமைப்பினர் ஐயப்பட்டால் யாரையும் கைது செய்யலாம் என்ற வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவோ, நியூட்ரினோ ஆய்வகம், எட்டு வழிச் சாலை போன்றவற்றிலோ, மோடி அரசின் மக்கள் பகை கொள்கைகளை எதிர்த்தோ கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோர் அனைவரும் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தண்டனைக்குரிய குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர்.

அவசர நிலையை அறிவிக்காமலேயே ஒட்டுமொத்த கருத்துரிமையைப் பறிக்கும் இந்திய உள்துறை அமைச்சக ஆணையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அரசமைப்புச் சட்டத்திற்கும், தனியுரிமை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறேன். 

ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்!



தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று (16.10.2014) லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது. 

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என முத்திரைக் குத்தினர். 

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.  இந்நிலையில் தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர். 

இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு“ அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். 

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ்நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது. 

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  - கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்