Showing posts with label அறிவியல். Show all posts
" மரபீனி மாற்றக் கடுகு : “பாரத மாதா”வின் பெயரால் அடிமையாக்கும் வியாபாரம்!"----- தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
மரபீனி மாற்றக் கடுகு :“பாரத மாதா”வின் பெயரால்
அடிமையாக்கும் வியாபாரம்!
========================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
========================
மரபீனி மாற்றக் கடுகிற்கு இந்திய அரசின் உயர்மட்ட ஆய்வுக்குழு இசைவு அளித்திருப்பதன் வாயிலாக இந்தியாவில் அடுத்தடுத்து மரபீனி மாற்ற உணவுப் பயிர்களுக்கு இந்தியச் சந்தையில் வழி திறந்துவிடப் பட்டிருக்கிறது.
தாரா கலப்பினக் கடுகு (Dhara Mustard Hybrid - DMH 11) என்ற பெயரிலான மரபீனி மாற்றக் கடுகை தில்லி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் தீபக் பெண்டால் (Deepak Pental) முன்வைத்திருக்கிறார்.
கடந்த 2017 மே மாதத்திலேயே இந்திய அரசின் மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு (Genetic Engineering Approval Committee) இந்த தாரா கலப்பினக் கடுகுக்கு ஏற்பு வழங்கினாலும் உச்ச நீதிமன்றத்தில் இச்சிக்கல் குறித்து நடந்துவரும் வழக்கை ஒட்டி இந்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் இதற்கு ஏற்பு வழங்காமல் நிறுத்தி வைத்தது.
இதே டிஎம்எச் - 11 என்ற மரபீனி மாற்றக் கடுகிற்கு 2002 ஆம் ஆண்டு செர்மனி நாட்டின் பன்னாட்டு வேளாண் வேதிப்பொருள் நிறுவனமான பாயர் (Bayer) அனுமதி கேட்டபோது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council for Agriculture Research) அனுமதி மறுத்தது.
சந்தையில் புழக்கத்தில் உள்ள கடுகு விதைகளைவிட பாயரின் டிஎம்எச் 11 கடுகு விதை அதிக விளைச்சல் தரும் என்பதற்கோ, இதை உண்ணும் மனிதர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாது என்பதற்கோ பாயர் நிறுவனம் எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை என்பதுதான் இந்த டிஎம்எச் 11 கடுகை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நிராகரித்ததற்கான காரணம் ஆகும்.
ஆனால் இதே தாரா கலப்பினக் கடுகை தீபக் பெண்டால் தன்னுடைய சொந்தக் கண்டுபிடிப்பு போல பஞ்சாப் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் வழியாக முன்வைத்தபோதே இந்த ஆய்வின் நம்பகத்தன்மை குறித்தும், இந்தக் கலப்பினக் கடுகு குறித்தும் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதற்கு முன்பாகவே பி.ட்டி. பருத்தி குறித்து தீவிரமாக எழுந்த விவாதங்களை ஒட்டி பல்வேறு வல்லுநர்கள் மரபீனி மாற்றத் தொழில்நுட்பம் குறித்தும், மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்தும் வலுவான அறிவியல் வழிப்பட்ட வினாக்களை முன்வைத்து இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குகளில் சுற்றுச் சூழல் அறிவியலாளர் அருணா ரோட்ரிக் அம்மையார் (Aruna Rodrigue) முன்வைத்த வழக்கு வலுவானது.
உச்சநீதிமன்றம் மரபீனி மாற்றத் தொழில்நுட்பம் குறித்தும், மரபீனி மாற்றப் பயிர்களின் தன்மைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழு ஒன்றை அமர்த்தியது.
அக்குழு 2013 இல் தனது ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் “மரபீனி மாற்ற விதைகளை இந்தியச் சந்தையிலோ, ஆய்வு வயல்களிலோ அனுமதிக்கக் கூடாது” என் இடைக் காலத் தடை விதித்தது.
இந்தப் பின்னணியில் டிஎம்எச் - 11 கலப்பினக் கடுகை சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை யோடு தீபக் பெண்டால் முன்வைத்தபோது மரபீனிப் பெறியியல் குழு அனுமதி அளித்தாலும் இந்திய அரசு அதனை ஏற்காமல் நிறுத்தி வைத்தது.
இப்போது இதே தாரா கலப்பினக் கடுகுக்கு கடந்த 26.10.2022 அன்று மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு அனுமதி அளிப்பதென்று முடிவெடுத்து விட்டது. ஆயினும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்பு வழங்கினால் தான் சந்தையில் அனுமதிக்கப்படும்.
ஆனால், தாரா கலப்பினக் கடுகு இந்த இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் பல்வேறு ஆய்வுத் துணைக்குழுக்களை கடந்து வந்திருப்பதே மோடி அரசின் அரசியல் இசைவோடுதான் என்ற ஐயம் எழுகிறது.
இந்தத் தாரா கலப்பினக் கடுகு களைக்கொல்லி தாங்கும் வகையினம் (Herbiside tolerent variety) ஆகும். அதாவது, இந்தக் கலப்பினக் கடுகைச் சுற்றி வளரும் களைகள் வழமையான களைக் கொல்லிகளால் சாகாது. பாயர் கம்பெனியின் குளுஃபோசினேட் (Glufosinate) என்ற உயர் நச்சுக் களைக் கொல்லியைப் பயன் படுத்தினால்தான் இந்தக் கலப்பினக் கடுகைச் சுற்றி வளரும் களைகள் சாகும்.
மற்ற மரபான கடுகுகளைவிட இந்தத் தாரா கலப்பினக் கடுகு 25 விழுக்காடு கூடுதல் விளைச்சல் தரும் என்று தீபக் பெண்டால் மார்தட்டுவது முற்றிலும் பொய்யானது என பல்வேறு கள ஆய்வுகளை ஆதாரம் காட்டி அருணா ரோட்ரிக் உறுதியான மறுப்பை மரபீனி பொறியியல் குழுவிடம் 2017லேயே அளித்தார்.
தீபக் பெண்டாலிடமிருந்து இப்போதும்கூட அதற்கு தெளிவான மறுப்பதும் இல்லை.
இதன் நம்பகத்தன்மையைத் தற்சார்பாக ஆய்வு செய்திருக்க வேண்டிய மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு தீபக் பெண்டாலிடமே இது குறித்து ஆயுவுக்குழுவை அமர்த்தி அறிக்கை தருமாறு கேட்டது. இதுவே இதன் மோசடித்தன்மைக்கு சான்று கூறும்.
இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை (Department of Bio-technology)யின் தலைவர் சஞ்சய்குமார் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக்குழுவை அமர்த்திக் கொண்டார் தீபக் பெண்டால். இதுவே மோசடியான உள்நோக்கம் கொண்டதாகும். ஏனெனில், இந்த உயிரித் தொழில்நுட்பத் துறையே மரபீனி மாற்றத் தொழில் நுட்பத்தையும், மரபீனி மாற்றப் பயிர்களையும் விரிவாக்கும் நோக்கமுள்ள துறையாகும்.
இந்த மிஸ்ரா குழுவும்கூட 2013, 2017இல் எழுப்பப்பட்ட எந்த வினாவிற்கும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. பாயர் கம்பெனியின் விளம்பரத் துண்டறிக்கைகள் தங்கள் களைக் கொல்லியைப் பயன்படுத்தினால் உச்ச அளவு விளைச்சல் கிடைக்கும் என்று ஒரு உயர் அளவைக் குறிப்பிடுவதுபோல் தீபக் பெண்டால் முன்வைத்தார். மிஸ்ரா குழுவும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டது.
எப்போதுமே இவ்வாறான அறிவியல் சோதனைகளில் உச்ச அளவையோ, அல்லது கீழ் அளவையோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சராசரி விளைச்சல் அளவைத்தான் (Mean Seed Yield) கணக்கில் கொள்வார்கள். ஆனால் தீபக் பெண்டாலும், சஞ்சய்குமார் மிஸ்ராவும் பல்வேறு சோதனைகளில் எது உச்ச அளவு விதை விளைச்சலோ அதையே கணக்கில் கொண்டு முடிவுகளை வெளியிட்டார்கள். இது ஆய்வு முறைக்குப் புறம்பான தெரிந்தே செய்யும் மோசடியாகும்.
இந்தக் கலப்பினக் கடுகு மட்டுமின்றி, மரபீனி மாற்றப் பயிர்கள் அனைத்துமே கூடுதல் உரம், கூடுதல் பூச்சிக் கொல்லி, கூடுதல் களைக் கொல்லி ஆகியவற்றைச் சார்ந்திருப்பவை. அதுவும் குறிப்பிட்ட நிறுவனத்தின் குறிப்பிட்ட இடுபொருட்களை மட்டுமே சார்ந் திருப்பவை. அது மட்டுமின்றி, ஒருமுறை போட்டதை விட அடுத்த போகத்திற்கு கூடுதல் உரம், கூடுதல் நச்சுக் கொல்லி என உயர்ந்து கொண்டே இருக்கும்.
ஏனெனில், மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இடப்படும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி ஆகியவற்றை உண்டு அடுத்தடுத்த தலைமுறை பூச்சிகளும் களைகளும் கூடுதல் தாங்குதிறனோடு வளர்ந்துவிடுகின்றன என்பதை பல நூற்றுக்கணக்கான ஆய்வுகள் உறுதி செய்துவிட்டன.
இவ்வாறு மேலும் மேலும் கூடுதலாக இரசாயனத்தைக் கொட்டுவதால் நிலமும், நீரும், காற்றும், பயிர்களும் நஞ்சாகிப் போகின்றன.
இதுமட்டுமின்றி டிஎம்எச் - 11 கடுகு விளைந்துள்ள வயலில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள வயல்களிலும் தேனீக்களும் பட்டாம் பூச்சிகளும் வருவதில்லை. எனவே, இயல்பான வேறு பயிர்கள் சாகுபடி செய்திருக்கிற உழவர்களுக்கும் விளைச்சல் குறைகிறது.
தாரா கலப்பினக் கடுகு கொடுத்து சோதனை செய்த எலிகளுக்கும் முயல்களுக்கும் கொடிய நரம்பியல் நோய்கள் தாக்குவதை ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. இந்த ஆய்வு முடிவுகளை மறுப்பதற்கு எந்த ஆதாரத்தையும் தீபக் பெண்டால் முன்வைக்காதபோது மரபீனிப் பொறியியல் குழு எவ்வாறு ஏற்பிசைவு வழங்கியது என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுகிறது.
பசுமைப் புரட்சி என்ற பெயரால் வேதியியல் வேளாண்மையையும், நீடித்த பசுமைப் புரட்சி என்ற பெயரால் மரபீனி மாற்றப் பயிர்களையும் முன்வைத்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வுக்குழுவே பொதுவாக மரபீனி மாற்றத் தொழில்நுட்பம் குறித்தும் - குறிப்பாக தாரா கலப்பினக் கடுகு குறித்து - முன்வைத்துள்ள திறனாய்வுகள் கவனம் கொள்ளத் தக்கவை.
டிஎம்எச் - 11 மற்ற கடுகு வகையினங்களைவிடக் கூடுதல் விளைச்சல் தரக்கூடியது எனக் கூறிக் கொள்வதற்கு சொல்லப்பட்ட ஒப்பீடுகளே மோசடி யானது என்பதை எம்.எஸ். சுவாமிநாதன் குழு கூறுகிறது.
”வயல்வெளிச் சோதனையில் டிஎம்எச் - 11 கடுகும் அதற்கு இணையான மரபீனி மாற்றம் செய்யப்படாத பிற கடுகு இனங்களும் ஒப்பீட்டு ஆய்வுக்கு உட் படுத்தப்படவில்லை. ஏனென்றால், மரபீனி மாற்றம் செய்யப்படாத வகையினமான டிஎம்எச் - 1 கடுகை மரபீனி மாற்றம் செய்யப்பட்ட வகையினமான டிஎம்எச் - 11 என்ற தாரா கலப்பினக் கடுகோடு ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, தீபக் பெண்டலின் டிஎம்எச் - 11ஐ விட மரபான டிஎம்எச் - 1 கடுகு இனம் கூடுதல் விளைச்சல் தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக அடுத்தடுத்த ஒப்பீட்டாய்வில் டிஎம்எச் - 1 என்ற மரபான கடுகினம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அது மட்டுமின்றி, கிராந்தி (Kranthi), டிஎம்எச் - 4 போன்ற பிற கடுகினங்கள் கூட ஒப்பீட்டாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி, மரபான கடுகினங்களின் விளைச்சலை கணக்கில் கொள்ளும்போது, ஐம்பது வெவ்வேறு சோதனை வயல்களில் ஐந்தாண்டுகளுக்கான விளைச்சல் கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால் அதே நேரம் டிஎம்எச் - 11 மரபீனி மாற்றக் கடுகுக்கு மட்டும் ஆறு சோதனை வயல்களில் மூன்றாண்டுகளுக்கான விளைச்சல் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. அதாவது, ஆய்வுக் குழு வேண்டுமென்றே மரபீனி மாற்றக் கடுகுக்கு கடுமையான சோதனைகளிலிருந்து விலக்களித்துவிட்டது.
ஏற்கெனவே களைக்கொல்லி தாங்கும் (Herbiside Tolerent) மரபீனி மாற்ற சோளம், சோயா, பருத்தி ஆகியவை அவற்றை உட்கொண்ட பாலூட்டிகளுக்கு புற்றுநோய், குறை உறுப்புப் பிறப்பு, மலட்டுத்தன்மை ஆகியவற்றை உருவாக்குவது ஐயத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வகை மரபீனி மாற்றப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் கிளைஃபோசேட் (Glyphosate) களைக்கொல்லி இவ்வாறான நோய்களை தீவிரப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபீனி மாற்றக் கடுகிற்கு பயன்படுத்தப்படும் குளுஃபோசினேட் (Gluphosinate) “இன்னும் கூடுதல் நச்சுத் தன்மையுடையது” என்று இந்த மரபீனி மாற்றக் கடுகின் கொடிய தீமையை அடுக்கிக் கொண்டே செல்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. எம்.எஸ். சுவாமி நாதன் (விரிவிற்கு காண்க : PC Kesavan & M.S. Swaminathan - “Modern Technologies for Sustainable Food and Nutrition Security” - Current Science - 25 November, 2018).
திரும்பிய பக்கமெல்லாம் அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களோடு மரபீனி மாற்றக் கடுகுக்கு எதிரான ஆய்வு முடிவுகள் குவிந்திருக்கும்போது அவை அனைத்தையும் புறந்தள்ளி பாயர் - மான்சாட்டோ நிறுவனங்களின் காலடியில் இந்திய உழவர்களை வைப்பதற்கு மோடி அரசு துடியாய்த் துடிக்கிறது.
ஏகாதிபத்திய நிறுவனச் சார்பையே தற்சார்பு என்ற பெயரால் தேசபக்த வியாபாரம் செய்வதுதான் மோடி மாடலின் தனித்தன்மையாகும்.
இந்தியா தனது உணவு எண்ணெய்த் தேவைக்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்கும் நிலையிலிருந்து தற்சார்பாகத் தலைநிமிர்ந்து நிற்பதற்காகவே கூடுதல் விளைச்சல் தரும் மரபீனி மாற்றக் கடுகை விரும்புவதாக மோடியின் ஆட்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
உண்மையில் உணவு எண்ணெய்த் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைச் சார்ந்திருப்பதே செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைதான்.
தாராளமயப் பொருளியல் கொள்கை நிலை பெறுவதற்கு முன்பு 1994 வரை இந்தியாவின் உணவு எண்ணெய்த் தேவையில் 97 விழுக்காடு உள்நாட்டு விளைச்சலையே சார்ந்திருந்தது.
ஆனால், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதன் நிபந்தனைப்படி தாராள உணவு எண்ணெய் இறக்குமதியை அனுமதித்த பிறகுதான் இந்தத் தற்சார்பு தலைகீழாக மாறிப்போனது. உணவு எண்ணெய் இறக்குமதிக்கான வரி வெகுவாகக் குறைக்கப் பட்டது. இந்தோனேசியா, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவை குறைந்த விலையில் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தன.
இதனால், மரபான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காயெண்ணெய், கடுகு எண்ணெய் பயன்பாடுகள் வெகுவாகக் குறையத் தொடங்கின. அந்த இடத்தை இறக்குமதியான எண்ணெய்கள் பிடித்துக் கொண்டன. இன்று ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் உணவு எண்ணெய் இறக்குமதி ஆகிறது.
இது செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலையே தவிர மக்களின் உணவு எண்ணெய்த் தேவையை உள்நாட்டு உற்பத்தியால் நிறைவு செய்ய முடியாததால் ஏற்பட்ட சிக்கலல்ல!
தற்சார்பு என்ற பெயரால் மரபீனி மாற்றக் கடுகும் அதைத் தொடர்ந்து பிற உணவுப் பயிர்களும் திணிக்கப்பட்டால் அது மேற்குலக நாடுகளின் பொருளியல் அடிமையாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கையாகும்.
காது கிழிக்கும் பாரதமாதா பஜனை சத்தத்திற்குப் பின்னால் நடக்கும் மோடி மாடல் சூழ்ச்சி இது!
ஏற்கெனவே இந்த மண்ணிற்கும், மரபிற்கும், மக்களுக்கும் தொடர்பில்லாத எண்ணெய்களை இறக்குமதி செய்து மக்களை நோயாளிகளாக்கியது போதாதென்று மரபீனி மாற்ற உணவுப் பயிர்களைத் திணித்து தீராத நோயாளிகளாக மக்களைச் சீரழிக்கும் அடுத்த திட்டத்தில் மோடி அரசு இறங்கியிருக்கிறது.
எனவே, உழவர்களையும், உணவு உண்ணும் பெருந்திரள் மக்களையும், சுற்றுச் சூழலையும் நாச மாக்கும் மோடி அரசின் திட்டத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்.
“மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே” என்ற ஒற்றைக் குரலில் அனைத்துப் பகுதி மக்களும் எழுச்சி கொள்ள வேண்டும்!
(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2022 நவம்பர் இதழில் வெளியானதாகும்).
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
தமிழினம் அறிவியல் அறிவற்ற இனமாம் இனப்பகை நஞ்சுக் கக்கும் தி இந்து - கி.வெட்கட்ராமன்
அறிவியல் பார்வை அறவே இல்லாமல், தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும்
வன்மம் மட்டுமே மேலிட எழுதும் கட்டுரையாளர்களின் களமாக தி இந்து தமிழ்
நாளிதழ் திட்டமிட்டே செயல்படுகிறது. ஏற்கெனவே எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ்
வரி வடிவத்திற்கு எதிரான கருத்து இவ்விதழில் வெளிப்பட்டது. இப்போது பி.ஏ.
கிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘அறிவியலும் தொழில் நுட்பமும் ஒன்றா” என்ற
தலைப்பிலான கட்டுரை 28.11.2013 ஏட்டில் வந்துள்ளது.
தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் வந்துள்ள ‘தமிழ்
மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்ற பாடமே பி.ஏ.கிருஷ்ணனின் வன்மப்
பாய்ச்சலுக்குக் காரணமாகும்.
‘தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல், அணுவியல்,
நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று
கூறப்படுகிறது………….. அறிவியலும், தொழில்நுட்பமும் ஒன்றல்ல………… தமிழர்கள்
அணைகள் கட்டியிருக்கிறார்கள். கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். சிற்பங்கள்
செதுக்கியிருக்கிறார்கள். உலகம் வியக்கும் செப்பு சிலைகள்
செய்திருக்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் செய்வதற்கு அறிவியல் ஞானம்
தேவையில்லை. தொழில் நுட்பம் போதுமானது” என்று தனது மோதாவித்தனத்தை
காட்டுவதாகக் கருதிக்கொண்டு அறியாமையையும், இனப்பகைக் கருத்தையும்
வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் வேறுபாடு இருப்பதை இப்பாடம்
மறைத்துக் குழப்பி விட்டதாக கிருஷ்ணன் மிகவும் கவலைப்படுகிறார்.
இப்பாடத்தின் தலைப்பே ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்பது தான்.
அடிப்படை அறிவியலாக (Basic Science) இருந்தாலும், தொழில் நுட்பமாக
(Technology) இருந்தாலும் இவ்விரண்டு துறை அறிவிற்கும் அறிவியல் பார்வை –
அறிவியல் சிந்தனை அடிப்படையானது.
ஏதோ அடிப்படை அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையில் மிக உயர்ந்த
சீனச் சுவர் இருப்பதுப் போல் கிருஷ்ணன் பேசுகிறார். செயல்படும் அறிவியலே
(Applied Science) தொழில் நுட்பம் எனப்படும். இந்த அரிச்சுவடிக் கூட
அறியாதவர் போல் கிருஷ்ணன் எழுதுகிறார்.
தொழில் நுட்ப அறிவு என்பது முயன்று, தவறி, கற்றல் என்ற வழியில் (ட்டிரையல்
அண்டு எர்ரர்) வளர்வதாகவும் அடிப்படை அறிவியல் அறிவானது கோட்பாடு (தியரி)
சோதனை (எக்ஸ்பெரிமண்ட்) கண்டறியதல் (ஃபைண்டிங்ஸ்) என்ற வழியில்
நிலைப்பெறுவதாகவும், கிருஷ்ணன் கூறுகிறார். அறிவியல் அறிவிற்கும் முயன்று –
தவறி- கற்றல் என்ற வழிமுறையே செயல்படுகிறது. தான் காணுகிற அல்லது உணருகிற
செய்திகளை தொகுத்தும், வகுத்தும் ஆய்ந்து ஓர் அறிவியலாளர் (விஞ்ஞானி)
முதலில் ஒர் கருதுகோளைத்தான் (Hypothesis) வைக்கிறார். இது ஆய்வில்
மெய்ப்பிக்கப்படலாம்; அல்லது தோற்றுப் போகலாம்.
இது அடிப்படையில் சரியானதாக இருந்து செழுமைப்படவும்ச் செய்யலாம். அதன்
பிறகே அது கோட்பாடு (Thesis அல்லது Therory) ஆகிறது. இது ஒருவகை முயன்று –
தவறி – கற்றல் வழிமுறைதான். இந்த அறிவு வளர்முறை குறித்த அரிச்சுவடி
தெரியாதவராக கிருஷ்ணன் இருக்க முடியாது. ஆனால் தனது வாதத்தை
நிலைநாட்டுவதற்காக ஒரு குழப்பமான வரையறையை முன்வைத்து அதன் அடிப்படையில்
தமிழர்களுக்கு ‘அறிவியல் ஞானம் இல்லை” என்று நிலைநாட்ட முயல்கிறார்.
ஆனால் இவரே இக்கட்டுரையில் ‘அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்று
இருக்கும் பிணைப்பு பிரிக்கமுடியாதது. அறிவியல் இல்லையென்றால் தொழில்
நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் இல்லையென்றால் அறிவியலின் பல
கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறுகிறார்.
அதாவது அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்றைய காலத்தில் தான்
பிரிக்க முடியாத பிணைப்பு வந்துவிட்டதாக வலியுறுத்துகிறார். எப்போதுமே
அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பிரிக்க முடியாத பின்னிப்பிணைந்த
உறவு இருந்து வருவதை தன் வசதிக்காக வேண்டுமென்றே மறைக்கிறார்.
ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வானுயர்ந்த தஞ்சை பெரியக்கோயில்
கோபுரம் கூட இதுபோல் பல கோபுரங்கள் கட்ட முனைந்து அவை இடிந்து போன பிறகே
அறிவுப்பெற்று ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக நிலைக்கவைக்க முடிந்தது என்று
கூறவருகிறார். இதற்கு வரலாற்கு வழிப்பட்ட ஆதாரம் ஒன்றையாவது காட்ட வேண்டும்
என்ற பொறுப்புணர்ச்சிக் கூட அவரிடம் இல்லை. வன்மம் கண்ணை மறைக்க நெஞ்சாரப்
பொய் வாதம் செய்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, அவர் எடுத்துக்காட்டிய பத்தாம் வகுப்புப் பாடத்திலேயே
கூட தமிழர்களின் அடிப்படை அறிவியல் அறிவு (Basic Science Knowlege)
நிறையவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வசதியாக மறைத்து
விட்டு வானூர்தி குறித்த தொழில்நுட்பச் செய்தியை அறிவியல் வகைப்பட்டதுப்
போல கூறிவிட்டார்கள் என ஏளனம் செய்கிறார்.
உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில்
தான். அதற்கும் மத நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க
வேண்டியிருந்தது. ஆனால் இதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பத்தாம்
நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் வழியாக ‘உலகம் உருண்டை”
என்ற உண்மையை பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு திருவாசகம்
சான்று கூறுகிறது.
‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”
என்ற திருவாசக வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது.
கடவுளை வாழ்த்திப் பாடுகிற ஒரு பாடலில் போகிறப் போக்கில் மிக அரிய அறிவியல்
செய்திகள் சொல்லிச் செல்லப்படுகின்றன. ஒன்று, உலகம் அல்லது இந்த பூமி
உருண்டை வடிவமானது, தட்டையானது அல்ல என்ற அறிவியல் செய்தி. இரண்டாவது,
‘நூற்றொருக் கோடி’ வான் பொருள்கள் இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில்
உள்ளன என்ற அறிவியல் செய்தி. மூன்றாவது, இவை இருக்கும் வெளி
விரிந்துக்கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் செய்தி.
இதற்கென்று தனித்த ஓர் அறிவியல் நூல் எழுதி அதன் வழியாகச் இச்செய்தியை
சொல்வதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து பாடுகிறப் போது போகிறப் போக்கில்
மாணிக்கவாசகர் இப்பேருண்மையை சொல்லிச் செல்கிறார் என்றால் இந்த அறிவியல்
செய்தி மிகப்பரவலாக அக்காலத் தமிழர்களிடையே புழங்கி வந்த பரவலான அறிவு
இருந்திருக்கிறது என்று பொருள்.
மணிவாசகருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே 3000 ஆண்டுகளுக்கு முன்பே
தொல்காப்பியம் இந்த அறிவியல் செய்திகளை ஏராளமாக கூறுகிறது என்ற உண்மையை
ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர். (எ.கா: ‘தமிழ் இலக்கியத்தில்
உலகாய்தம்’ முனைவர் க. நெடுஞ்செழியன் – மனிதம் பதிப்பகம் வெளியீடு
-திருச்சி, 1990)
இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம்
இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது
இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான
ஆரியர்கள் கூட ‘சதுர்பூதம்’ என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர்.
காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற
தெளிவு தமிழர்களிடம் இருந்தது.
‘ மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”
என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.
புற இயற்கைக்கு மட்டுமின்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை
என்பதை ‘ அண்டமே பிண்டம்” என்ற சொற்களால் தமிழர்கள் வரையறுத்தனர்.
இது கிருஷ்ணன் கூறுவதுப் போல் தொழில் நுட்ப அறிவு அல்ல, அடிப்படை அறிவியல் அறிவு.
டாப்ளர் விளைவை வைத்து 20-ஆம் நூற்றாண்டில் தான் இந்த விசும்பு – அண்டவெளி
விரிவடைந்து வருகிறது என்ற உண்மையை கிருஷ்ணன் தலையில் தூக்கிக்கொண்டாடும்
மேற்குலக அறிவியல் உணர்ந்தது. ஆனால் இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
‘அகலிரு விசும்பு” என்று தொல்காப்பியம் கூறுகிறது. ‘வளிதிரி தரு மண்டலம்”
என்று காற்றே இல்லாத வெட்டவெளி விசும்பு இருக்கிறது என்ற உண்மையையும்
பண்டைத் தமிழர்கள் கூறிச்செல்கிறார்கள். இதெல்லாம் மேற்குலக அறிவாளிகளுக்கு
தெரிய 2000 ஆண்டுகள் ஆனது.
தமிழர்களின் கணிதவியல் அறிவை கிருஷ்ணன்கள் புரிந்துக்கொள்ளாததாலேயே அவை
பொய் என்று ஆகி விடாது. ‘அறிவியல் ஞானம்” அற்றவர்களாக கிருஷ்ணன்கள்
ஒதுக்குவதாலேயே தமிழினம் அறிவியல் அறிவற்ற கூட்டமாக ஆகிவிடாது.
இன்று மில்லியன் என்று மேற்குலகம் அழைக்கிற எண்ணை (106) பண்டைத் தமிழர்கள்
மெய்யிரம் என்று குறித்தனர். இன்று மேற்குலகம் பில்லியன் (109) என்று
கூறும் எண்ணை தமிழர்கள் தொள்ளுண் என்று குறித்தனர். இன்று டிரில்லியன்
(1012) என்று குறிக்கும் எண்ணை தமிழர்கள் ஈகியம் என்றனர். இதனையும் தாண்டி
நெளை (1015), இளஞ்சி (1018), வெள்ளம் (1020), ஆம்பல் (1021) என்ற எண்
அளவுகளையும் தமிழர்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர்.
இதுமட்டுமின்றி 1-க்கு கீழ் உள்ள பின்ன கீழ் அளவுகளையும் இன்று மேற்குலகம்
கற்பனைச் செய்ய முடியாத அளவுகளில் அன்றாடம் பயன்படுத்தி வந்தனர். இந்த
அளவுகளைக் கொண்டு பலப் புதிய நுட்பங்களை வளர்த்தெடுத்தனர்.
எடுத்துக்காட்டாக 1/16 வீசம் அல்லது மாகாணி எனப்பட்டது. 1/32 அரை வீசம்
ஆகும். இது போல் கீழ் அளவுகள் நுணுகி நுணுகி பகுக்கப்பட்டுள்ளன. ஒரு
இலட்சத்திது இரண்டாயிரத்து நானூறில் ஒரு பாகம் (1/102400) என்பதை கீழ்
முந்திரி என்றனர். 21, இலட்சத்து 50 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு என்பதை
(1/2150400) இம்மி என்றனர்.
இன்று பில்லியனில் ஒரு பங்கு அதாவது 100 கோடியில் ஒரு பங்கு என்பதை நானோ
(Nano) என்று மேற்குலக நவீன அறிவியல் குறிக்கிறது. இதுதான் ஆகச்சிறிய
பகுப்பு என்பதாக குதிக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இதைவிடக் கூடுதலாக 149 கோடியே 2 இலட்சத்து 27 ஆயிரத்து 200-ல் ஒரு பங்கு
(1/1490227200) என்பதை ‘குணம்’ என்று குறித்தனர்.
இதையும் தாண்டி 3 இலட்சம் கோடி கோடியில் ஒரு பங்கு என்பதையும் தாண்டிய
(1/35751146618880000000) என்ற நுண் அளவை நுண் மணல் எனக்குறித்தனர்.
இவ்வாறு பகுப்பதும் அதற்கு தனிப்பெயர் குறிப்பதும் விளையாட்டுக் கற்பனை
அல்ல கணித அறிவின் உச்சம். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக
பூனைக் கருதுவதாலேயே உலகம் இருண்டு விடுவது இல்லை. இதனை கிருஷ்ணன்
அறியாவிட்டால் அது அவரது அறியாமையே தவிர தமிழர்கள் அறிவியல் அறிவு
அற்றவர்களாக மாறிவிடமாட்டார்கள்.
இந்த அளவீடுகளை நடைமுறை வாழ்க்கையில் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்
என்பதற்கான சான்றுகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் உலோக பற்பம் (பஸ்பம்),
செந்தூரம் போன்ற மருந்துகள் தயாரிக்க மேற்சொன்ன கீழ் முந்திரி இம்மி,
அடிசாரம், போன்ற நுண் அளவுகளைத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதனை சித்த மருத்துவம் ‘இம்மிப் பகுப்பு’ என்று வரையறுக்கிறது.
இந்த அளவீடுகளை நில அளவையிலும் தமிழர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள்
உண்டு. சோழர்கள் காலத்தில் நிலங்கள் அளவெடுக்கப்பட்டு துல்லியமாக
பகுக்கப்பட்டன. இது குறித்து தஞ்சை பெரியக்கோயிலில் இராச ராச சோழனின்
கல்வெட்டு ஒன்று கீழ் வருமாறு கூறுகிறது. இது திருவாரூர் மாவட்டம் பாலையூர்
என்ற கிராமத்தின் பரப்பளவை அளந்து கூறுகிறது.
‘தெக்கடு வாயான அருமொழித் தேவ வளநாட்டு
இங்ஙணாட்டு பாலையூர் பள்ளியுங் கணி
முற்றூட்டும் உட்பட அளந்தப்படி நிலம் நூற்று
முப்பத்து நான்கேய் எட்டு மாவின் கீழ் முக்காலே
மும்மா வரையறைக் காணி முந்திரிகைக் கீழ் நான்குமா”
என்பது அக்கல்வெட்டுக் கூறும் செய்தி.
இது ஏறத்தாழ 130 வேலி நிலம் ஆகும். (1வேலி = சுமார் 6.75 ஏக்கர்) தமிழர்
அளவீடுகளின் படி கீழ்க் காணி (1/25600), கீழ் முந்திரி (1/102400) ஆகிய
மிகச் சிறிய அளவுகளில் கூட நிலம் அளக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கணித
அறிவு மக்களின் அன்றாட வாழ்வில் இயல்பாக புழங்கி வந்திருக்கிறது.
(விரிவிற்கு காண்க: நிலம் அளந்த இராசராசன் – முனைவர் குடவாயில்
பாலசுப்பிரமணியன்- தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2010, செப்டம்பர்
இதழ்)
தமிழர்களின் இந்த அறிவியல் அறிவு அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு ஆகியவை
மிகப் பரவலாக மக்களிடம் புழங்கியதால் அது தமிழ் மக்களின் பன்பாட்டு
நடவடிக்கைகளோடும், சடங்குகளோடும் இரண்டறக் கலந்து அவர்கள் வாழ்வியலின்
பிரிக்க முடியாத கூறாக மாறிவிட்டது. இதனைக் கவனிக்காமல் அவற்றை வெறும்
சடங்கு அல்லது மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவது கிருஷ்ணன்
போன்றவர்களின் அறியாமையாக இருக்கலாமே தவிர அதற்காக தமிழர்களை அறிவியல்
அறிவு அற்ற சமூகமாக கீழ்ப்படுத்திவிட முடியாது.
‘ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற மக்கள் வழக்கில் இருந்த பழமொழி தலைமுறை
தலைமுறையான முயற்சியில் தமிழர்கள் வளர்த்தெடுத்த அறிவியல் அறிவின் ஓர்
பிழிவு.
இன்று நவீன அறிவியல் உலகம் மக்களிடம் புழக்கத்தில் உள்ள அறிவியல் அறிவை
அடையாளம் காணப் பெரிதும் முயன்று வருகிறது. மக்கள் குடி உயிரியல் (Ethno
Biology), மக்கள் குடி மருந்தியல் (Ethno medicine), மக்கள் குடி மரபியல்
(Ethno Genetics) போன்று பல அறிவியல் துறைகள் வளர்ந்து வருகின்றன. இந்த
புதிய அறிவியல் போக்கை பி.ஏ. கிருஷ்ணன் அறியாமல் இருக்கலாம் அல்லது
அறிந்தும் மறைக்கலாம். ஆனால் உண்மை மறைந்து விடாது.
பசுமைப் புரட்சியை திணித்து, இரசாயன வேளாண்மையைப் புகுத்திய வேளாண்
அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் நிறுவனமான ‘எம்.எஸ் சுவாமிநாதன்’
ஆராய்ச்சி அறக்கட்டளை அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி
கிராமத்தில் அங்குள்ள தமிழ் மக்களிடம் நிலவிய வேளாண் அறிவியல் சிந்தனைகளை
ஆய்வு செய்து அதன் அடித்தளத்தில் நின்றுக்கொண்டு நவீன் வேளாண் அறிவியலை
வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஆய்வாளர் ரெங்கலட்சமி ராஜ் Hormonizing Traditional and Sceintific
knowlege systems in Rainfall Predictions and Utilization என்ற தலைப்பில்
வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை அம்மக்களிடம் இருந்த விண்ணியல், மண்ணியல்,
பருவவியல், நீரியல் அறிவை வியந்துப் பாராட்டுகிறது. அதை ஒரு முறை பி.ஏ.
கிருஷ்ணன் படிக்கட்டும். (www.unep.org)
கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காற்று வீசும் திசை, காற்றின்
ஈரப்பதம், நிலவைச் சுற்றிய வட்டத்தின் தன்மை, பறவை, பூச்சி ஆகியவற்றின்
இயக்கம் மின்னலின் தன்மை போன்ற 12 காரணிகளை ஆய்வுச் செய்து மழை வருவது
குறித்து முன்னறிந்து கூறுகின்றனர்.
கிழக்கில் புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல் பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில்
மழைப் பெய்யும். தென்மேற்கு மற்றும் வடமேற்கில் மின்னல் மின்னினால் இரவு
நேரத்தில் மழைப் பெய்யும். நிலவைச் சுற்றி வளையமிருந்தால் சிறு தூரல்
மட்டுமே விழும் சிட்டுக்குருவி கூட்டமாக தாழப்பறந்தால் அன்றைக்கே மழை
வரும், கிணற்றுத் தவளை வழக்கத்தை விட அதிகமாக ஒலி எழுப்பினால் அல்லது நண்டு
வளையை பெரிதாக குடைந்தால் இரண்டு நாளில் மழைவரும் என்பன போன்ற இவர்களது
பருவ நிலை அறிவு இன்றைய நவீன கருவிகள் கண்டுப்பிடித்து அறிவிக்கும்
அறிவிப்புகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதை ரெங்கலட்சுமி ராஜ்
குறிப்பிடுகிறார்.
‘ஆடிமாதம் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்” என்பது மக்கள் மொழி. ஜுலை,
ஆகஸ்ட்-ல் காற்று வலுவாக வீசினால் அட்டோபர், நவம்பரில் பருவ மழை சரியான
அளவு பொழியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருவிகள் கொண்டு கண்டறிந்து
கூறியதைத் தான் மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள்
கண்காணிக்கும் மேக மண்டல மாற்றங்களைத் தான் மக்களும் அடிப்படையாக
கொண்டுள்ளனர் என்று ரெங்கலட்சுமி வியப்புடன் கூறுகிறார்.
பொன்னேறு பூட்டும் விழா என்ற பெயரில் முதல் உழவு நடத்துகிற காலத்தில்
அச்சமூகத்தின் மூப்பர்கள் இளையோர்களிடம் கதையாகவும், பாட்டாகவும்,
பழமொழியாகவும் இதை கற்றுத்தருகிறார்கள் என்று ரெங்கலட்சமி கண்டு
கூறுகிறார்.
தமிழர்களின் வேளாண் அறிவியல் மட்டும் அல்ல அவர்களின் பலவகை மரபுசார்
மருத்துவமும் இன்று அறிவியல்; உலகத்தால் திரும்பிப் பார்க்கப்படுகின்றன.
டெங்கு காய்ச்சலுக்கும், சிக்கன் குனியா காய்ச்சலுக்கும் பி.ஏ. கிருஷ்ணன்
கொண்டாடும் மேற்கத்திய அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை என்று மருத்துவ
மனைகள் கைவிரித்ததையும், இந்நோய்க்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து
இந்நோய்களை குணப்படுத்த முடிந்ததையும்; தமிழகம்; பார்த்தது.
இன்று மாடுகளை தாக்கியுள்ள கொள்ளை நோயான கோமாரிக்கு மேற்கத்திய மருத்துவம்
எதுவும் செய்யமுடியவில்லை என்று கால்நடைத்துறையே கைவிரித்து விட்டது. ஆனால்
அதே கால்நடைத்துறை குப்பைமேனி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட
அளவில் அரைத்து தயாரிக்கும் மூலிகை மருத்துவத்தையே பரிந்துரைக்கிறது.
இவற்றை எல்லாம் பி.ஏ. கிருஷ்ணன் கண்டும் காணாதது போல் எழுதுகிறார்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் தமிழர்களின் மரபு அறிவியலைப் பற்றி மிக
அரிதாக ஒரு மூலையில் இடம்பெற்றுள்ள பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தை எடுத்து
வைத்துக்கொண்டு அறிவியல் பார்வை மறந்து தமிழ் மீதும், தமிழர் மீதும் நஞ்சு
கக்கும் பி.ஏ. கிருஷ்ணன் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள
வேதகணிதம் (வேதிக் மேதமேடிக்ஸ்), வேத விஞ்ஞானம் (வேதிக் சயின்ஸ்) ஆகியவை
குறித்து வாய்திறக்கக் காணோம்.
கிருஷ்ணன்களுக்கு ‘பசித்துப் புசி” என்ற தமிழ் முன்னோர் வாக்கு அறிவியல்
அற்றது. அதையே சமஸ்கிருதத்தில் ‘லங்கணம் பரம ஒளஷதம்” என்று சொன்னால் அதுவே
‘அறிவியல் ஞானம்”.
கிருஷ்ணன் சொல்வதுப் போல் தமிழர்கள் தங்களைப் பற்றி ‘எங்களிடம் எல்லாம்
இருந்தது என்று” தம்மைத் தாமே பாராட்டிக் கொள்பவர்கள் அல்லர். ‘கற்றது
கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்ற ஒளவையின் வரிகள் தான் தமிழர்களின்
வழிகாட்டி.
இருந்த அறிவெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது என்ற உண்மையை பி.ஏ. கிருஷ்ணன் ஏற்க மறுக்கிறார்.
ஒரு நாட்டில் பழைய வர்க்கத்தை ஒடுக்கி ஓர் புதிய வர்க்கம் ஆதிக்கத்திற்கு
வரும் போது பெரும்பாலும் ஏற்கெனவே இருந்த மக்களின் அறிவை முற்றிலும்
அழித்து விடுவது இல்லை. பெரிதும் அதனை தனதாக்கிக் கொண்டு தொடரவேச்
செய்யும். ஆனால் ஓர் இனத்தின் மீது அயல் இனத்தின் ஆதிக்கம் நிகழ்கிற போது
அதன் அறிவுச் சின்னங்களும், நூல்களும், வரலாற்றுச் சின்னங்களும்
அழிக்கப்படுவதே வரலாறு நெடுகிலும் நடக்கிறது.
தமிழினம் ஆரியர், ஆதிக்கத்திற்கு ஆட்பட்டது. அவர்களது அறிவு ஏற்கப்படாமல்
அறிவு என்ற வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. இந்த அறிவை தமது பண்பியல்
வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த பெரும்பாலான தமிழர்கள் கீழ்நிலை சாதிகளாக
அழுத்தப்பட்டு அவர்கள் அறிவாளர் வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
பிறகு விஜயநகரப் பேரரசை தொடர்ந்து வந்த நாயக்கர் ஆட்சிக்கு கீழ்ப்பட்டதாக
தமிழகம் மாறியபோதும், அதைத் தொடர்ந்து மொகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட போதும்,
வெள்ளையர் ஆட்சிக்கு அடிமைப்பட்டபோதும் தமிழ் மொழி ஆட்சி அதிகாரத்தை
இழந்ததோடு அறிவியல் மொழி என்ற அந்தஸ்தையும் இழந்தது. பல நூல் நிலையங்களும்,
நூல்களும் அழிக்கப்பட்டன. கீழ்நிலை சாதிகளாக வைக்கப்பட்ட அறிவாளர்கள் பலர்
கொல்லப்பட்டனர்.
இவ்வாறு தமிழர்களின் மரபான அறிவியல் அறிவு புதைக்கப்பட்டதை,
புறந்தள்ளப்பட்டதை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக் கொள்ள
வேண்டுமே அல்லாது ‘ எல்லாம் அழிந்து விட்டது என்று கூறுவது நம்பும் படியாக
இல்லை’ என போகிற போக்கில் தள்ளிச் செல்வது தமிழ் இனத்தின் மீது உள்ள
காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.
இந்த புறக்கணிப்பையும், மறைப்புகளையும் உடைத்துக் கொண்டு செம்மாந்த
தமிழினம் தனது அறிவியில் அறிவை நவீன உலகத்தில் நிலை நிறுத்தும் காலம் வெகு
தொலைவில் இல்லை. அப்போது கிருஷ்ணன்களும், தி இந்து ராம்களும் இருந்த இடம்
தெரியாமல் போவார்கள்.
கட்டுரையாளர் தோழர் கி.வெட்கட்ராமன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்.
“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்” - தோழர் கி.வெங்கட்ராமன் புகழாரம்!
“தனிநாயகம் அடிகளார்
மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்”
தனிநாயகம் அடிகளார்
நூற்றாண்டு விழாவில்
தோழர்
கி.வெங்கட்ராமன் புகழாரம்!
திருச்சியில், தனிநாயகம்
அடிகளாரின் நூற்றாண்டு விழா நவம்பர் 28, 29 ஆகிய இரு நாட்களில்
தூய பவுல் இறையியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது.
பல்வேறு அமர்வுகளாக
இரு நாட்கள் நடைபெற்று வந்த ஆய்வரங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள்
கருத்துரையாற்றினர்.
28.11.2013 அன்று நடைபெற்ற இரண்டாம்
அமர்வில், மதியம் 3.00 மணிக்கு தமிழ்த் தேசிய
தமிழர் கண்ணோட்டத்தின் இணை ஆசிரியரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்
செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், “தனிநாயகம் அடிகளாரது படைப்புப் பின்புலத்தில்
தமிழகச் சூழல் அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினர். அவரது உரையின் எழுத்து வடிவம்:
தலைச் சிறந்த ஆய்வறிஞர்கள் நிறுவனர்களாக அமைவது அரிது. கடந்த
02.08.1913-ல் தோன்றி 04.09.1980-ல் மறைந்த ஆய்வறிஞர் முனைவர் சேவியர் தனிநாயகம்
அடிகள் மிகச்சிறந்த ஆய்வறிஞராகவும், அவரே ஒரு
நிறுவனமாகவும், ஆய்வு நிறுவனங்களின்
அமைப்பாளராகவும் பன்முக ஆற்றல்களோடு விளங்கியவர் ஆவார்.
வீரமாமுனிவர், ஜி.யு.போப்,
கால்டுவெல் போன்றோர் போலவே கிறித்துவ மதப் பரப்புனராக வந்து வரலாற்றில் நின்று
நிலைக்கத்தக்க தமிழ்ப்பணி ஆற்றியவர் தனிநாயகம் அடிகளார் அவர்கள்.
ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி, ரஷ்யன், சிங்களம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 14 மொழிகளில்; தேர்ச்சி பெற்றிருந்த அடிகளார் ரோமாபுரியில்
கிருத்துவக் கல்வி பயிலுங்கால் தமிழின் பெருமையை உணர்ந்தார்.
‘அயல்நாடு செல்லும்
தமிழ் மாணவர் தமிழ்ப்பயிற்சி மிக்குளரேல் எத்துணை உயரியத் தமிழ்த்தொண்டு இயற்றுதல்
கூடும் என்பது இனிது உணர்ந்தேன்” என்று கூறும்
தனிநாயகம் அடிகளார் தமது வாழ்க்கை முழுவதும் இதே உணர்வோடு தமிழ்த் தொண்டாற்றி
தமிழின் பெருமையை, தமிழ் இனத்தின்
அகன்று ஆழ்ந்த அறிவை உலகறியச்செய்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
அவர் தமிழ் பயின்றது பெருவீச்சோடு ஆய்வுலகில் பறந்து விரிந்து செல்ல அடித்தளம் இட்டது.
முனைவர் அ.சிதம்பரநாதன் அவர்கள் வழிகாட்டுதலில் அண்ணாமலைப் பல்கலைக் கழத்தில்
அடிகளார் அளித்த ‘பழந்தமிழ்
இலக்கியத்தில் இயற்கை” (Nature in ancient
tamil poetry) என்ற ஆய்வுத்தாள் உலகின் பிற
இலக்கியங்களோடு தமிழ் இலக்கியத்தை ஒப்புமைப்படுத்தி முன்வைத்துள்ள மிகச்சிறந்த ஆய்வுரை ஆகும். பல
தளங்களில் இத்துறையில் ஆய்வுகள் விரிவடைய இது வழிசமைத்தது எனலாம்.
பின்னாளில் தமிழ்
ஆய்வில் அடிகளார் வீறுகொண்டு விரிந்த போது அவரது ஆய்வு சமூகவியல், பண்பாட்டியல்,
மானுடவியல், நிலவியல், மொழியியல், ஒப்பியல், உளவியல், வரலாறு என பல
துறைகளின் பின்புலத்தோடு தமிழ் ஆய்வை நிகழ்த்துவதற்கு வலுவான முன்னோடியாக
அமைந்தது. அடிகளார் நடத்திய Tamil Culture என்ற காலாண்டிதழ்
இத்திசையில் பெரும் பணியாற்றியது. தனிநாயகம் அடிகளார் தனி ஆய்வாளராக மட்டும் இன்றி
அவரே ஒரு நிறுவனமாக செயல்பட்டதை இவ்விதழ் பறைசாற்றியது.
ரோமில் ‘வீரமாமுனிவர் கழகம்’ நிறுவிய அடிகளார் பின்னாளில் 1964-ல் உலகத்தமிழ்
ஆராய்ச்சிக் கழகம் அதனை ஒட்டி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவை மூலம் நிலைக்கத்தக்க
பணிகளை மேற்கொண்டார். இதற்காக பொதுவாக ஆய்வுலகமும், குறிப்பாக தமிழினமும் தனிநாயகம் அடிகளார் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.
திருச்சி, தூய பவுல் இறையியல் கல்லூரி நண்பர்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் தமிழின உணர்வாளர்களும்; நடத்தும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா
ஆய்வரங்கங்கள் இவ்வகையில் சிறப்பான பணிகளாகும்.
மொழி, இனம் குறித்த ஆய்வுகள் சில குறிப்பிட்ட அரசியல்
பின்புலத்திலேயே நிகழ்கின்றன. ஏனெனில் வரலாறு நெடுகிலும் அரசு என்பதும் அது
சார்ந்த அரசியல் என்பதும் ஒருவர்க்கப் பின்னணியோடு மட்டும் இன்றி ஒரு மொழி, இனப் பின்னணியோடும் இணைந்து தான் நடக்கின்றன.
தனிநாயகம் அடிகளார்
தமிழ் ஆய்வில் இறங்கிய போது நிலவிய இந்திய,
தமிழக அரசியல் பின்னணி கவனம் கொள்ளத்தக்கது.
அது ஆங்கிலேய
ஆட்சியின் இறுதிக்காலமும், சுதந்திர
இந்தியாவின் தொடக்கக் காலமும் ஆகும்.
இந்தியாவை ஆண்ட
ஆங்கிலேயர்கள் தாங்கள் நிலைத்து ஆட்சிபுரிய இந்திய சமூகத்தைப் புரிந்துக் கொள்ள
முயன்றனர். அம்முயற்சியில் அவர்களுக்கு கண்களும், செவிகளுமாக இருந்தவர்கள் பெரிதும் வடபுலத்து பார்ப்பன அறிஞர்களே ஆவர்.
குறிப்பாக
ஆங்கிலேயர்களின், பொதுவாக
ஐரோப்பியர்களின் இம்முயற்சியில் தோன்றியது தான் கீழைத்தேயவியல் (Orientalism) என்ற துறையாகும்.
சர்வில்லியம் ஜோன்ஸ்
(1746-1794) கல்கத்தாவில் 1784-ல் நிறுவிய ஆசியவியல் கழகம் இத்துறையில் முக்கிய
பங்காற்றியது.
பெரும்பாலும்
கீழைத்தேயவியல் பன்னாட்டு மாநாடுகள் இந்தியாவிற்கு வெளியிலேயே நடைபெற்றன. முதல்
மாநாடு பாரிசில் 1873-ல் நடைபெற்றது.
பன்னாட்டு மாநாடுகளுக்கு தொடர்பில்லாமல் இந்தியாவிலும் கீழைத்தேயவியல் மாநாடுகள்
பின்னாளில் நடைபெற்றன.
இம்மாநாடுகள்
அனைத்திலும் சமஸ்கிருதமே முதன்மை பெற்றது. சமஸ்கிருத இலக்கியங்களே இந்திய
இலக்கியங்கள் எனக் கொள்ளப்பட்டன. மொழியியல் என்றால் சமஸ்கிருதம் குறித்த மொழியியல், பண்பாடு என்றால் வடஇந்திய- ஆரியப்பண்பாடு, இந்தியா என்றாலே கங்கைச்சமவெளி என்ற புரிதலோடுதான்
இம்மாநாடுகள் நடைபெற்றன.
1946-ல் பேராசிரியர்
வையாபுரி பிள்ளை தலைமையில் கீழைத்தேயவியல் மாநாடு புனேயில் நடைபெற்றபோதுதான்
திராவிட மொழிகளுக்கான ஒர் அமர்வு உருவாக்கப்பட்டு தமிழும் சிறிய இடத்தைப் பிடிக்க
முடிந்தது.
இதற்கும் ஒரு
பின்னணி உண்டு. வில்லியம் ஜோன்ஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தோ-ஆரிய
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என வகைப்படுத்திய போது அதனை எதிர்த்து ஆங்கிலேய
அதிகாரி எல்லீஸ் (1777-1819) கருத்து வெளியிட்டார்.
தென்னிந்திய மொழிக்குடும்பம் இந்தோ-ஆரிய வகையிலிருந்து வேறுபட்ட தனி
மொழிக்குடும்பம் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய டாக்டர். கால்டுவெல்
இத்தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்தவை அல்ல என்று உறுதிபட
நிறுவினார். ஆயினும் திராவிடம் என்ற
குழப்பமான கருத்தியலுக்கு கால்டுவெல்லின் இந்நூல் உரமிட்டது. இது குறித்து பின்னர்
பார்ப்போம்.
தமிழ் உள்ளிட்ட
தென்னிந்திய மொழிகள் தனித்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கால்டுவெல்லின்
கருத்து ஆய்வுலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தமிழின் பக்கமும்
கீழைத்தேயவியல் அறிஞர்களைப் பார்க்க
வைத்தது.
ஆயினும் வடமொழி
மேலாண்மையே கீழைத்தேயவியலில் தொடர்ந்து நீடித்தது. மேற்குலக ஆய்வாளர்களுக்கிடையே
நிலவிய இப்பிழையான கருத்தை நீக்க வேண்டியது தமது தலையாய கடமை என அடிகளார்
கருதினார்.
‘இன்று நம் தமிழ்
நாட்டுக்கு வேண்டுபவர் யாரெனில் ஆன்றமைந்து அடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர்
பலரே. நான் உலகின் பல்வேறு நாடுகளுக்குச்
சென்றதின் பயனாகவும், பிற மொழிகளையும்
அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றதின் பயனாகவும், தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பு, தமிழர்கள், தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப்
பரப்ப வேண்டும் என்று ஒரு சிறுது உணர்ந்துள்ளேன். ஹோமரின் ஒடிசியையும், இலியத்தையும் போற்றுவதைப்போல் இளங்கோவடிகளின்
சிலப்பதிகாரத்தை- ஒப்புயர்வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைத் செய்யுளை- உலகம்
போற்றுமாறு நாம் செய்தல் வேண்டும். கன்பூசியஸ்,
செனகா முதலாய நீதிநூல் ஆசிரியர்களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ
அங்ஙனமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு நாம் செய்தல் வேண்டும்.
சாபோ, எலிசபெத், பிரௌனிங், சேக்ஸ்பியர்
முதலானோரின் காதல் பாக்களை மக்கள் காதலித்து படித்து இன்புறுவதைப் போல் நம்
அகத்துறை இலக்கிய நூல்களையும் அன்னார் படித்து இன்புறும் புதிய நாள் உதிக்க
வேண்டும். உலக இலக்கியத்திரட்டு என்னும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய
நூல்களும் இடம் பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும். மேற்றிசைக் கண்ணும், கீழ்த்திசைக் கண்ணும் உள்ள பல்கலைக்கழகங்கள்
தமிழ்க்கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும்.” (தமிழ்த்தூது- ஐந்தாம் பதிப்பு-1998-பக்கம் 29-30)
இதனை பிறர்க்குக்
கூறும் அறிவுரையாக மட்டும் இன்றி தனக்குத்தானே இட்டுக்கொண்ட கட்டளையாகவும் கருதிச்
செயல்பட்டார். அந்த நோக்கோடு மேற்குலக அறிஞர்கள் தமிழின், தமிழரின் பெருமையை அறிந்துக்கொள்ளும் வகையில் ‘Aspects of Tamil humanism”, “The Ideal of the
expanding Self”, The humanistic concept of nature“ என்ற புகழ் வாய்ந்த கட்டுரைகளை எழுதினார்.
வடமொழி
இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தை ஒப்பிட்டு தமிழின் விரிந்த பார்வையை, மனிதநேயக் கொள்கையை அடிகளார் எடுத்துரைத்தார்.
‘அக்காலத்து
எழுதப்பெற்ற சமஸ்கிருத, பாலி
இலக்கியங்களெல்லாம் சமயச் சார்புடையவையாய்,
புரோகிதர்களால் எழுதப்பெற்றவையாய் இருக்க,
பழந்தமிழ் இலக்கியம் ஒன்றே பெரும்பாலும் சமயச்சார்பு அற்றதாய் விளங்குகிறது.
இப்பழைய இலக்கியத்தின் பாடுபொருள்களும், நிகழ்வுகளும் சாதி
பாகுப்பாட்டை ஏற்றிராத, கல்வியையும், மேம்பாட்டையும் ஆணுக்கும், பெண்ணுக்கும்,
எல்லா தொழிலினர்க்கும் வழங்கி வந்த ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவை.” என்பது தனிநாயகம் அடிகளாரின் உறுதியான கருத்து.
வடமொழி வாணர்களை
மட்டும் இன்றி கிரேக்க அறிஞர்களையும், பண்டைத்தமிழ்
இலக்கியவாதிகளோடு ஒப்பிட்டு தமிழின் உலக மேன்மையை அடிகளார் நிலைநாட்டுகிறார்.
பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலிலும்
புகழ்ந்து பேசும் ஏதன்ஸ் நகரில் குடியுரிமைப்பெற்ற பத்தாயிரம் மக்களுக்கு
குற்றேவல் செய்ய இரண்டு இலட்சம் அடிமைகள் இருந்தனர். குருடர்களும், கூனர்களும்,
உறுப்புகளில் குறையுடையோரும் இவ்வறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால்
அடிமை வாழ்க்கையை வள்ளுவர் ஒருபோதும் ஏற்றதில்லை. உறுப்புகுறையுடையோரை பழிப்பதை
இழிவாக கருதியது வள்ளுவம். ‘பொறியின்மை
யார்க்கும் பழியன்று” என்றது திருக்குறள்.
இதனை தனிநாயகம் அடிகள் தனது திருக்குறள் திறனாய்வில் எடுத்துக்காட்டுகிறார்.
சான்றாண்மையை
வலியுறுத்தும் ரோமானிய ஸ்டாயிக் நெறியை மதித்தாலும் தனிநாயகம் அடிகளார் வள்ளுவம்
கூறும் அறம் அதனையும் தாண்டி உயர்ந்து நிற்பதை எடுத்துரைக்கிறார். ரோமானிய ஞானி
துறவியாக தனித்து ஒதுங்கி நிற்க, வள்ளுவர் கூறும்
தமிழ்ச்சான்றோன் இல்லற வாழ்வு நடத்தும் பண்புடையோனாக மக்கள் நடுவில்
காட்சியளிக்கிறான் என்று தெளிவுப்படுத்துகிறார்.
மேற்கத்திய
மெய்யியல் இன்ப நுகர்ச்சியை இலட்சியமாக முன்வைக்கும் போது திருவள்ளுவர் ‘அறத்தினான் வருவதே இன்பம்” என வரையறுப்பதை அடிகளார் எடுத்துக்காட்டி தமிழர்
மெய்யியலின் மேன்மையை நிலைநாட்டுவார்.
இந்திய சுதந்திர
இயக்கம் மேலெழுந்தபோது அது தனக்கான பண்பாடாக ஆரிய பண்பாட்டையும், தனக்கான ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் பெரிதும் கலந்த
இந்தி மொழியையும், தனக்கான அறவியல்
இலக்கியமாக பகவத் கீதையையும் முன் வைத்தது.
இந்த அரசியலை
அறிவுத்தளத்தில் வலியுறுத்த ஒரு பெரும் அறிஞர் பட்டாளமே செயல்பட்டது. அது இன்று
வரையிலும் நீடிக்கிறது. மொழியியல், வரலாற்று வரைவியல், தொல்லியல், மரபு அறிவியல்
உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் ஆரிய மேலாண்மையையும், வடமொழி ஆதிக்கத்தையும் நிறுவ தொடர்ந்து இந்த
அணியினர் அனைத்து உயராய்வு மையங்களிலும் பணி செய்கின்றனர்.
இன்று இந்தியத்தேசிய
வெறியும், இந்துத்துவமும்
போட்டி போட்டுக்கொண்டு இந்த மேலாண்மையை மக்கள் வாழ்வின் அனைத்து தளங்களிலும்
நிறுவி தமிழை, தமிழினத்தை
தொடர்ந்து தாழ்த்தி வைக்க மூர்க்கமாக முயன்று வருகின்றன. மார்க்சிய ஆய்வு நெறியின்
பெயராலும் இதே வேலை ஆய்வுத் தளங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றது.
இச்சூழலில்
தனிநாயகம் அடிகளார் அவர்களின் ஆய்வு நெறியை இளம் ஆய்வாளர்கள் முன்னெடுத்துச் செல்ல
வேண்டிய கட்டாயத்தேவை எழுந்துள்ளது.
தனிநாயகம்
அடிகளாரின் ஆய்வுப்பணி விரிந்த அளவில் எடுத்துச்செல்லபட வேண்டிய தேவை இன்னொரு
சூழல் காரணமாகவும் முகாமை பெருகிறது.
இந்தியத்
தேசியத்தின் அடிப்படைக் கூறுகளாக ஆரியம், சமஸ்கிருதம், சமஸ்கிருத மயமான இந்தி, ஆகியவை
முன்னிறுத்தப் பட்டபோது அதற்கு எதிராகத் தமிழகத்தில் திராவிடக் கருத்தியல்
முன்வைக்கப்பட்டது.
வரலாறு நெடுகிலும்
ஆரிய ஆதிக்கத்திற்கும், வடமொழி
மேலாண்மைக்கும், ஆரியத்தின் வர்ணசாதி
பிளவுகளுக்கும் எதிராக தமிழினம் தொடர்ந்து போராடியே வந்திருக்கிறது.
தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், திருக்குறளும், மேற்கண்ட
ஆதிக்கங்களுக்கு எதிராக சமராடி வந்ததையும்,
தமிழரின் அறக்கோட்பாடு மனித சமத்துவத்தை வலியுறுத்தியதையும், துறைதோறும்,
துறைதோறும், தனிநாயகம் அடிகளார்
நுணுக்கமாக எடுத்துரைத்தார்.
இப்போராட்டத்தின்
கொதிநிலைக் காலமாக 19-ஆம் நூற்றாண்டும், 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியும் திகழ்ந்தன.
ஆன்மீகத்துறையில்
வேத மதத்தையும் அதன் சாதி பிளவுகளையும், சாடி பேரெழுச்சியை
வள்ளலார் இராமலிங்க அடிகள் ஏற்படுத்தினார். பெருந்திரள் செல்வாக்கு பெற்ற கருத்தாக
கடவுள் மறுப்பு கருத்து விளங்கத்தொடங்கியதும்,
19-ஆம் நூற்றாண்டில் தான். சென்னை இலௌகீக சங்கமும், அது நடத்திய தத்துவ விவேசினி மற்றும் வுhந வுhiமெநச ஆகிய இதழ்களும் பெருமெடுப்பில் கடவுள் மறுப்பு
கொள்கைகளை பரப்பின. வருணசாதி கொடுமைகளையும் எதிர்த்தன.
பெரியார் (ஈ.வெ
இராமசாமி) பிறப்பதற்கு முன்பாகவே கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு கருத்துக்களை பா வடிவில் மக்களிடம் அத்திபாக்கம் அ.
வெங்கடாசலனார் பரப்பினார்.
திராவிட இயக்கம்
வடவர் மற்றும் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும், வருணசாதி பிளவுகளுக்கு எதிராகவும் மக்களிடையே கருத்துகளை பரப்பி தமிழகத்தை
சனநாயகப் போராட்டக் களமாக மாற்றியது. இது
ஆய்வுக்களத்தில் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய அறிஞர்களுக்கு
வாய்ப்பான சூழலை உருவாக்கித் தந்தது.
ஆயினும் இதுவே
ஆங்கிலம் என்ற புதிய ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தவும் செய்தது.
திராவிட இயக்கத்தில்
இரண்டு போக்குகள் எழுந்தன. ஒன்று பெரியார் தலைமையில் ஆனது. இன்னொன்று அண்ணா
(சி.என். அண்ணாதுரை) அவர்களால் வழிநடத்தப்பட்டது.
திருக்குறள் மாநாடு, எழுத்து சீர்திருத்தம் என்று சில நடவடிக்கைகள்
மேற்கொண்டாலும் பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தியல் தமிழைக் காட்டுமிராண்டி
மொழி என்று ஏசியது. தமிழிலக்கியம் அனைத்தும் பக்தி நெறி சார்ந்து மூடநம்பிக்கைகளை
பரப்பியதாகவும், சாதி
ஏற்றதாழ்வுகளுக்கு இடம் கொடுப்பதாகவும் இருப்பதாக பெரியார் சாடினார்.
மேலும் இவரது
கருத்தியல் திராவிட இனம், திராவிட தேசியம்
என்று கூறி தமிழை, தமிழினத்தை, தமிழ்த் தேசியத்தை பின்னுக்குத் தள்ளியது.
தமிழாய்வு அறிஞர்களையே மூடர்களாக பகடிச்செய்யும் போக்கு பகுத்தறிவின் பேரால்
முன்வைக்கப்பட்டது.
மேற்கத்தியவாதத்தை
நகல் எடுத்து பகுத்தறிவு வாதம் என்ற பெயரால் இவ்வியக்கம் பரப்பியது. ஆங்கிலமே உயர்ந்தது தமிழால் முடியாது, தமிழரால் முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு
படித்த இளையோர் இடஒதுக்கீட்டின் மூலம் தங்களுக்குரிய பணி வாய்ப்புகளையும், பதவிகளையும்,
பெறும் பயனாளிகளாக மாற்றப்பட்டனர்.
இதிலிருந்து அண்ணா
அவர்கள் தலைமையில் கிளைத்த இன்னொறு திராவிட இயக்கம் இதற்கு மாறாக சங்ககால
பெருமைகளையும், தமிழின்
தொன்மையையும், தமிழின் இனிமையையும், பாமரரும் அறியுமாறு வீச்சோடு பரப்பியது. ஆரியத்தை
எதிர்க்க வடவர் ஆதிக்கத்தை முறியடிக்க
தமிழ் இலக்கியங்களை மிகத் திறமையாக அண்ணா கையாண்டார். இந்தியத் தேசியம்
முன்வைத்த பகவத் கீதைக்கு எதிராக திருக்குறளை நிறுத்தி அதனை பட்டிதொட்டி எங்கும் பரப்பியதில்
அண்ணாவுக்கும், அவரது தொண்டர்களுக்கும்
பெரும் பங்குண்டு. தமிழ் என்பது ஒரு பெரும் அரசியல் ஆற்றலாக இவர்களால் களமிறக்கப்பட்டது.
ஆயினும் இணை
ஆட்சிமொழி தொடர்பு மொழி என்ற பெயரால் ஆங்கிலத்தை இவர்களும் மேல்நிலையில் வைத்தனர்.
தமிழர்களின் செம்மாந்த வாழ்க்கையை எடுத்துக்கூறியபோதும் தமிழர்களின் மிகச் சிறந்த
அறிவியல் மற்றும் அறவியல் வாழ்க்கையை இவர்கள் முன்னிறுத்தவில்லை.
ஆங்கிலமே அறிவின்
சாளரம், அதுவே அறிவின்
அறிகுறி என்ற கருத்தியலை பெருமெடுப்பில் தமிழர்களிடம் விதைத்ததில் இவர்களது
பங்கும் முகாமையானது.
நீரின் வடிவம்
மாறினாலும் அதன் ஒட்டுமொத்த அளவு மாறாதது. நிலத்தடி நீர், நிலத்தின் மேல் பாயும் நீர், மலைஉச்சியில் உறையும் நீர், அதனை கடந்து மேகத்தில் தங்கியிருக்கும் நீர்
ஆகியவற்றின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான். இதனை மேற்கத்திய அறிவியல் உலகம் 19-ஆம் நூற்றாண்டில் அறிந்து கூறியது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே ‘மாறாநீர் வையம்” என்று திருக்குறள் சொல்கிறது.
பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்று மேற்கத்திய அறிவியல் உலகம்
18, 19 நூற்றாண்டுகளில்
எடுத்துக்கூறியது. ஆனால் இதனை ‘இல்லது தோன்றாது, உள்ளது மறையாது”
என்று சைவசித்தாந்தத்தில் குறிப்பிடப்படுகிறது.
குறிஞ்சிப் பாட்டு, 99 வகை மலர்களையும் அவற்றின் தாவரங்களையும் நிரல்
படுத்தி கூறுவதை தனிநாயகம் அடிகளாரும் தனது பழந்தழிழர் இலக்கியத்தில் இயற்கை என்ற
நூலில் எடுத்துக்காட்டுகிறார்.
தமிழரின் அளவீடுகள்
இன்று குறிப்பிடப்படும் ‘நானோ’ அளவுக்கு நெருக்கமானவையாக உள்ளன. தமிழரின் மரபான
மருத்துவம், வேளாண்மை, மற்றும் உலோகவியல் நுட்பங்களை நோக்கி இன்றி உலகம்
திரும்பிப் பார்க்கிறது.
தமிழியல் ஆய்வுலகம்
இந்த உண்மைகளை முன்வைத்து தமிழை நிலைநிறுத்த வேண்டியக் கடப்பாடு உள்ளது.
இன்றைய உலகமயச்
சூழலில், வல்லாதிக்கத்திற்கு
துணையாக அறம் மறந்து அறிவியல் உலகம் இயங்கக்கூடிய நிலையில் இவ்வாதிக்கத்திலிருந்து
மக்களுக்கான மாற்றுகளை உருவாக்க மனிதநேயம் உள்ள அறிவாளர்கள் முயன்று வருகிறார்கள்.
இந்த மாற்று என்பது
அரசியல் தளத்திலும், அறிவியல் தளத்திலும், சமூகவியல்
தளத்திலும், அறவியல் தளத்திலும்
உலகு தழுவியதாக இருக்கமுடியாது. வல்லாதிக்க வாதிகள் கட்டி எழுப்ப முயலும் ஒன்றை
தன்மைக்கும், ஒருமுனை உலகிற்கும்
மாற்றாக பன்மைத் தன்மையும், பலமுனை உலகமும், மட்டுமே இருக்க முடியும்.
அப்படிப்பட்ட பலமுனை
உலகத்தில் தமிழ்த்தேசம் ஒரு முனையாக திகழவேண்டிய தற்காப்புத் தேவை உள்ளது. அதற்கு
தமிழ் ஓர் பேராயுதமாக அமைய வேண்டிய அவசியம் உள்ளது.
ஆரிய இந்தியத்தையும், மேற்கத்திய மயத்திற்கு துணையான திராவிடத்தையும், ஒரு சேர எதிர்கொண்டு தமிழின் மேன்மையை, தமிழரின் பெருமையை, இளையோருக்கு உணர்த்தி தமிழால் முடியும்,
தமிழரால் முடியும் என்ற தற்சார்பையும்,
தன்னப்பிக்கையையும், நிலைநிறுத்த
வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சமஸ்கிருதம், ஆங்கிலம், கிரேக்கம், ஆகிய அனைத்தோடும் ஒப்பிட்டு தமிழின் மேன்மையை தமிழினத்தின் பெருமையை
நிலைநாட்டிய சேவியர் தனிநாயகம் அடிகளாரின் அடியொற்றி ஆய்வுகள் பலதளங்களிலும்
விரைந்து, விரிந்து செல்வது
முகாமையான தேவையாகும். அதுதான் தற்சார்பான,
தகைமை சான்ற எதிர்காலத் தமிழகத்தை படைக்க உதவும்.
இந்த நோக்கில்
தனிநாயகம் அடிகளாரின் ஆய்வு நெறி பரவுவதும்,
அவர் நிறுவிய உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அவர் தொடங்கி வைத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஆகியவை வாண வேடிக்கைகளிலும், சில்லறை அரசியல் சண்டைகளிலும் சிதைந்து விடாமல்
பாதுகாக்கப்படுவதும் மிகமிகத் தேவையாகும்.
தனிநாயகம் அடிகளார்
நூற்றாண்டு விழாக்கள் இத்திசையில் செயல்பாட்டிற்கு தமிழ்நாட்டு இளையோரை
உந்திச்செல்லட்டும்.
தனிநாயகம் அடிகளார்
நினைவைப்போற்றுவோம்.
அடிகளாரின் ஆய்வு
நெறிகளை வளர்த்தெடுப்போம்!
Subscribe to:
Posts (Atom)


