Showing posts with label இரங்கல். Show all posts
"பேரியக்கத்தின் மீது எப்போதும் அன்பும் மதிப்பும் கொண்ட சிதம்பரம் வி.சி.க. செயல்பாட்டாளர் தோழர் தியாகு மறைந்தார்! "-- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!
பேரியக்கத்தின் மீது எப்போதும் அன்பும் மதிப்பும்கொண்ட சிதம்பரம் வி.சி.க. செயல்பாட்டாளர்
தோழர் தியாகு மறைந்தார்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் இரங்கல்!
=======================================
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தித் தொடர்பாளரும், சிதம்பரம் நகரமன்றத்தின் 1ஆவது வார்டு உறுப்பினருமான தோழர் தியாகு (எ) பெருதிருவரசு, இன்று (10.02.2022) காலை 11 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தி பேரதிர்ச்சியாக அமைந்தது. அவருக்கு வயது 44.
கடந்த 25 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தாலும், கட்சி கடந்து அனைவரின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர். குறிப்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் பல்வேறு நிகழ்வுகளில் துணையாக நின்றவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையைப் போலவே கடலூர் மாவட்டமும் பெருவெள்ள பாதிப்பில் சிக்கியது. சிதம்பரம் நகரத்திலும், பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புக்குள்ளாயின. அவற்றுள் 1ஆவது வார்டு பகுதி என்பது, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் வாழக்கூடிய பகுதி. அப்பகுதியில் வெள்ள இடர்நீக்கப் பணிகளில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்முயற்சியில் ஓசூர் அசோக் லேலண்ட் தொழிலாளத் தோழர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது, அதை அனைவருக்கும் சரியாகக் கொண்டுபோய் சேர்ப்பதில் கவனமாக இருந்து, நம்மோடு பணியாற்றியவர் தோழர் தியாகு ஆவார். அவரளவிலும் இடர் நீக்கப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்.
சிதம்பரம் திருவள்ளுவர் தெருவில் வைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கமும், மகளிர் ஆயமும் போராட்டத்தை முன்னெடுத்த போது, கட்சி வரம்பைத் தாண்டி மக்களோடு நின்றார். அப்பகுதி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களின் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் துணையாக நின்றார்.
கடுமையான மின்வெட்டை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டத்திலும், செங்கொடி உயிரீகம் செய்த அன்று நாம் நடத்திய உணர்ச்சிமிக்கக் கண்டனப் போராட்டத்திலும் மக்களைத் திரட்டிக் கொண்டு, தன்னை இணைத்துக் கொண்டார்.
எப்போதும் என் மீதும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மீதும் மதிப்பும் அன்பும் செலுத்தியவர் தியாகு! பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் எப்போது சிதம்பரத்திற்கு வந்தாலும், அவரை சந்தித்து அன்பு தெரிவிப்பதை தொடர் பழக்கமாகவே கொண்டிருந்தார் தியாகு.
தோழர் தியாகுவை இழந்துவாடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
காசுமீர் மனித உரிமைப் போராளி பேராசிரியர் கிலானிக்கு வீரவணக்கம்!
காசுமீர் மனித உரிமைப் போராளி
பேராசிரியர் கிலானிக்கு வீரவணக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
சில வாரங்களுக்கு முன்பு, தில்லி மாநகர வீதிகளில் காசுமீரி தேசிய இன உரிமை முழக்கமெழுப்பி என்னோடு கைகோத்து நடந்த பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்கள், நேற்று (24.10.2019) இரவு மாரடைப்பால் திடீரென்று காலமானார் என்ற பேரிடியான செய்தி வந்து அதிர்ச்சியூட்டியது.
தில்லி பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில், அரபி மொழி பேராசிரியராக பணியாற்றி வந்த எஸ்.ஏ.ஆர். கிலானி அநீதியான முறையில் 2006 - நாடாளமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். ஒவ்வொரு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறி தத்தளித்த அவரது குடும்பம், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் அவர் விடுதலை ஆனவுடன்தான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.
ஐயத்திற்கு இடமின்றி அவர் மீதான குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், சட்ட நெறிக்கு மாறாக கிலானியின் மீது “சந்தேகத்தின் நிழல் படர்ந்தே இருக்கிறது” என்று கருத்துரை கூறியதால், அவர் மீண்டும் பணி வாய்ப்புப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
காசுமீரி மனித உரிமைக்காக மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இன மக்கள், தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் ஆகியோரின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கியவர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி.
அவரது திடீர் மறைவு, காசுமீரி மக்களுக்கு மட்டுமின்றி மனித உரிமை விழையும் அனைவருக்கும் பேரிழப்பாகும்!
மனித உரிமைப் போராளி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய கோணத்தில் மார்க்சியத்தை ஆய்வு செய்த சமிர் அமின் அவர்கள் மறைவு!
புதிய கோணத்தில் மார்க்சியத்தை ஆய்வு
செய்த சமிர் அமின் அவர்கள் மறைவு !
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல் !
புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் – மக்கள் இயக்கச் செயல்பாட்டாளர் சமிர் அமின், நேற்று (12.08.2018) பாரீசில் காலமானார்.
தனது 86 ஆவது அகவையில் மறைந்த சமிர் அமின், எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1931 செப்டம்பர் 3ஆம் நாள் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எகிப்து பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
எகிப்தில் நாசர் ஆட்சிக்காலத்தில், அந்நாட்டுத் திட்டக்குழுவில் குறுகிய காலம் செயலாற்றினாலும், விரைவில் நாசர் ஆட்சி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியபோது சமிர் அமின் பாரீசுக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
ஆயினும், மார்க்சியமும், பிற பொருளியல் அரசியல் கோட்பாடுகளும் ஐரோப்பாவை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்திற்கு வந்த சமிர் அமின் 1988இல், “ஐரோப்பிய மையவாதம்” (Euro Centrisim) என்ற ஆய்வு நூல் எழுதினார்.
சமிர் அமின் அறிமுகப்படுத்திய “ஐரோப்பிய மையவாதம்” என்ற சொல்லாடல், மார்க்சியம் உள்ளிட்ட ஆய்வுலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பொருளியல் – அரசியல் ஆய்வில் புதிய போக்கின் தொடக்கமாகவும் அது அமைந்தது.
சமிர் அமின் மார்க்சியத்தின் மதிப்புக் கோட்பாட்டை வெறும் பொருளியல் வாய்ப்பாடாக முன்வைப்பதை எதிர்த்தார். அவரது “உலகு தழுவிய மதிப்பின் விதி” (The Law of Worldwide Value) என்ற நூல் மேற்குலகம் முன்வைக்கும் “வளர்ச்சி” வாதத்தை கேள்விக்கு உட்படுத்தியது.
ஒவ்வொரு தேசமும் தத்தமக்குரிய பொருளியல் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்று வலியுறுத்திய அவரது “வர்க்கமும் தேசமும்” (The Class and Nation) என்ற நூல், புதிய புரிதல்களுக்கு இட்டுச்சென்றது.
கடந்த 2016ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து எழுதியும் மக்கள் இயக்கங்களில் பங்கேற்றும் வந்த சமிர் அமின், மூளைப் புற்றுநோய் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக நினைவு மறதி நோய்க்கு ஆட்பட்டார்.
பாரிசீல் கடந்த ஒரு மாத காலமாக உயர் சிகிச்சையில் இருந்தாலும், பயனின்றி 12.08.2018 அன்று மறைவுற்றார்.
சமிர் அமின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
Subscribe to:
Posts (Atom)


