வெனிசுவேலா மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புக்குதமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்!
=====================================================
பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அறிக்கை
=====================================================
வெனிசுவேலா மீது அமெரிக்க வல்லரசு இன்று (3.1.2026) அப்பட்டமான ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்தி அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை கடத்திச் சென்றிருக்கிறது. இது அந்நாட்டின் இறையாண்மையின் மீது பன்னாட்டு சட்டங்கள் எதையும் மதிக்காமல் டிரம்ப் அரசு நடத்தி இருக்கிற கொடுமையான ஆக்கிரமிப்புப் போராகும். இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த ஒரு மாத காலமாகவே வெனிசுவேலா மீது டிரம்ப் அரசு மிகக் கடுமையான பொருளியல் முற்றுகையை விதித்திருக்கிறது. அந்நாட்டோடு வணிக உறவு வைத்திருக்கிற எந்த நாட்டின் மீதும் வணிகத் தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இன்று அந்நாட்டின் தலைநகர் கேரகாஸில் உள்ள மக்கள் குடியிருப்புகளின் மீது வான் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்து மதுரோ வெனிசுவேலாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதோ, அந்த நாட்டில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதோ அந்த நாட்டின் உள்நாட்டு சிக்கல் ஆகும். அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது அந்நாட்டு மக்களின் உரிமை, கடமை. அதில் வல்லாதிக்க அரசான அமெரிக்கா தலையிடுவதற்கு எந்த சர்வதேச நியதியின்படியும் உரிமை கிடையாது. ஆனாலும் “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பது போல தன்னுடைய ஆதிக்க வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆயுத வலுவை பயன்படுத்திக்கொண்டு வெனிசுவேலாவை அமெரிக்க வல்லரசு ஆக்கிரமித்து இருப்பதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். இந்திய அரசு இந்த ஆக்கிரமிப்பைக் கண்டிக்க வேண்டும்.
உடனடியாக அமெரிக்கா தன்னுடைய தாக்குதலை நிறுத்தி, அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும். மதுரோவையும் அவரது மனைவியையும் அவருடைய நாட்டிலேயே கொண்டு விட வேண்டும். அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கிற பொருளியல் முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

