"தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை தாக்கியக் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
தூய்மைப் பணியாளர்கள் மற்றும்செயல்பாட்டாளர்களை தாக்கியக்
காவல்துறையினர் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
====================================
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், நேற்றிரவு (13.08.2025), தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதலைக் கண்டு, சனநாயக உணர்வுள்ள அனைவரது மனமும் கொந்தளித்துக் கிடக்கிறது. சனநாயக நாட்டில், தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் குரல்வளையை நெரிப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம்!
கொரோனா பெருந்தொற்று காலத்திலும், சென்னையின் பெருவெள்ளம் – புயல் காலங்களிலும், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, முன்நின்று களப்பணியாற்றியவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள்! ஆனால், இவர்களின் உழைப்பிற்கு உரிய மதிப்பை தி.மு.க. – அ.தி.மு.க. அரசுகள் வழங்கியதே இல்லை! சென்னை மாநகராட்சியின் கீழ் அரசுப் பணியாளர்களாக இருக்க வேண்டிய இவர்களை, பகுதி பகுதியாகத் தனியார்மயப்படுத்தி, இன்றைக்கு நிரந்தரமில்லாத குறைந்த ஊதியப் பணியில் சிக்கித் தவிப்பவர்களாக ஆட்சியாளர்கள் தவிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இராம்கி என்ற ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு, 2700 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழியே, தாரை வார்க்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சற்றொப்ப 2000 பேர், உழைப்போர் உரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் கடந்த 01.08.2025 அன்று முதல், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைதியான வழியில், நிரந்தர வேலை கேட்டும், தங்கள் பழைய ஊதியமே தொடர வேண்டுமெனக் கோரியும் காத்திருப்பு அறப்போராட்டம் நடத்தினர். கடந்த 12.08.2025 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்று, போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தனர்.
எதிர்க்கட்சியாக இருந்த போது தி.மு.க. அளித்த வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற முன்வராதம “திராவிட” மாடல் தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி போராடும் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று (13.08.2025) சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் காரணம் காட்டிக் கொண்டு, உடனடியாக நேற்று நள்ளிரவே பெரும் காவல்படையைக் குவித்து, வன்முறையை ஏவி, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த பெண்களையும், முதியவர்களையும் கைது செய்திருப்பதும், போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த வழக்கறிஞர், மாணவர்கள், இளைஞர்கள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடுமையாகத் தாக்கி, சிறைப்படுத்தி வைத்திருப்பதும் அதிகாரத் திமிரில் ஆட்சியாளர்கள் நடத்தும் உட்சபட்ச வெறியாட்டமாகும்!
போராட்டக் குழுத் தலைவர் வழக்கறிஞர் பாரதி, புளியந்தோப்பு மோகன், சமூக செயல்பாட்டாளர்கள் வளர்மதி, நிலவுமொழி செந்தாமரை போன்றோரெல்லாம் குறிவைத்துக் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். வளர்மதி, நிலவுமொழி உள்ளிட்டோரை வேண்டுமென்றே பல காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், இரவு முழுக்கக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும், அரசின் நிதிநிலையைச் சீர்குலைக்கும் அளவுக்குப் பெரியவை அல்ல. இவர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கான கோரிக்கைகள் இவை. ஆனால், திராவிட ஆட்சியாளர்களின் சீரழிந்த சாதிய மனநிலையும், அதிகாரத் திமிரும் இந்த வன்ம வெறியாட்டத்தை நடத்த ஊக்கமளித்திருக்கிறது.
பாசிச பா.ச.க.வின் தனியார்மயமாக்கலை எதிர்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அதே தனியார்மயத்தையே தனது அரசுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. எனவேதான், தூய்மைப் பணியாளர்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல தரப்பினரும், தனியார்மயமாக்கல் மற்றும் தற்காலிக ஒப்பந்த வேலைவாய்ப்புகளை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்த நிலையில்தான், கைது செய்யப்பட்டோர் ஆங்காங்க விடுதலை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு அரசு, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித வழக்குமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், செயல்பாட்டாளர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த நேரத்திலாவது துயரங்களை சூழ்ந்து நிற்கும் அத்தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் உடனே நிறைவேற்றிட வேண்டுமென்றும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 98419 49462, 94439 18095
நூல்கள் பெற்றிட: 98408 48594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

தமிழ்த்தேசியப் பேரியக்கம்
இணையப் பராமரிப்பு - தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9443918095, 9841949462 | முகநூல் : https://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : https://www.kannottam.com இணையம் : https://www.tamizhdesiyam.com
சுட்டுரை : https://www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : https://www.youtube.com/tamizhdesiyam
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment