"*கனிவான சொற்களில் கல்வி மறுப்புக் கொள்கையே மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள கல்விக்கொள்கை!*" ---- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச்செயலாளர் ஐயா *கி.வெங்கட்ராமன்* அறிக்கை!
*கனிவான சொற்களில் கல்வி மறுப்புக் கொள்கையே மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள கல்விக்கொள்கை!*======================================================
_தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச்செயலாளர் ஐயா_ *கி.வெங்கட்ராமன்* _அறிக்கை!
இதற்குத்தான் இந்த ஆரவாரமா என்று நொந்துபோகும் வகையில்தான் இன்று ( 8-8-2025) தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 அமைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்டது, பள்ளிக் கல்வி குறித்த தி.மு.க. அரசின் கல்விக் கொள்கையாகும். உயர்கல்விக் கொள்கை அடுத்து வெளியிடப்படுமாம்.
அடிப்படையில், மோடி தலைமையிலான பா.ச.க. அரசின் “தேசியக் கல்விக் கொள்கை 2020” இன் தமிழ்நாட்டுப் பதிப்பாகத்தான் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள பள்ளிக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. “பிஎம்சிறீ” என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட “தலைமை அமைச்சர் - எழுச்சியுறும் இந்தியாவின் பள்ளிகள்” (Pradhan Manthri Schools for rising India - PMSHRI) திட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று வாள் சுழற்றிய திராவிட மாடல் அரசு பிஎம்சிறீ திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதை அறிவிப்பதுதான் இன்று அறிவிக்கப்பட்ட கல்விக் கொள்கை.
பிஎம்சிறீ திட்டம் ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி, மற்றும் ஒரு உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி, “அருமைப்பள்ளி” (School of Excellence) என தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்துவதற்கான முன்மாதிரிப் பள்ளி என்று பா.ச.க. அரசு அறிவித்தது.
அதையேதான் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள மாநில பள்ளிக் கல்விக் கொள்கை “வெற்றிப் பள்ளிகள்” என்ற பெயரால் அறிவித்திருக்கிறது. (தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கை - இயல் 1 - பத்தி 1.7.2)
மோடி அரசின் பிஎம்சிறீ திட்டம் கூறுவது என்ன? ஏற்கெனவே இயங்கிவரும் அரசுப் பள்ளிகளில் கட்டடங்கள், கரும்பலகை, கல்விக் கருவிகள் உள்ளிட்ட நல்ல உள்கட்டமைப்பும், கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களும் சிறப்பாக உள்ள பள்ளிகளை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளை “அருமைப்பள்ளிகள்” என அறிவிக்கும் திட்டமாகும். அவ்வாறு அறிவிக்கப்படும் அருமைப் பள்ளிகளுக்கு, கூடுதல் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தனிக்கவனம் செலுத்தப்படும் என்று பிஎம்சிறீ திட்டம் கூறுகிறது.
தமிழ்நாடு கல்விக் கொள்கை சொல்லது என்ன? “வெற்றிப் பள்ளிகள் என்பது ஒரு வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்று அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக தொடங்கப்படும் முன்னெடுப்பாகும். இதன் மூலம் மாணவர்கள் உயர்தர வரிசையில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற முடியும். அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு வெற்றிப் பள்ளிகளாக மேம்படுத்தப்படும். இந்தப் பள்ளிகளைக் கண்காணிக்கவும் உதவிசெய்யவும் ஒவ்வொரு மாவட்டமும் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. ஒப்பார் குழுக் கற்றல் மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கும் இவ்வெற்றிப் பள்ளிகள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் மையங்களாகவும் செயல்படும்” என்று அறிவிக்கிறது இந்தக் கொள்கை.
பிஎம்சிறீ பள்ளியின் திராவிடப் பதிப்பான வெற்றிப்பள்ளி என்பது, பள்ளிக்கல்வியிலிருந்தே அரசு படிப்படியாக விலகிக்கொண்டு மாணவர்களைக் கைகழுவும் ஏற்பாடாகும்.
அரசுப் பள்ளிகளே எளிய மக்களுக்கான பள்ளிகள்தான். அதற்குள்ளேயே, பாகுபாடு காட்டவும், பின்தங்கிய மாணவர்களை கைதூக்கிவிடுவதற்கு மாறாக கல்வியிலிருந்து வெளியேற்றவும்தான் இத் திட்டம் வழிவகுக்கும். ஏனெனில், பிஎம்சிறீ திட்டத்தின்படி இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அளவில் அரசுப் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் தரச்சோதனைகளின் வழியாகத்தான் தேர்வு செய்யப்படும். “ஒரு வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப்பள்ளியை தேர்ந்தெடுப்பது” என்பது அதைத்தான் குறிக்கிறது. ஏற்கெனவே தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள பள்ளிகள்தான் வெற்றிப் பள்ளிகள் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படும்.
அத் தரச்சோதனைத் தேர்வில் தங்கள் பள்ளி இடம் பெற வேண்டுமென்றால், உயர் தேர்ச்சி பெறமுடியாத மாணவர்களைத் தங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுவதுதான் ஒரே வழி என்ற நிலைக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தள்ளப்படுவார்கள்.
நிதி நெருக்கடி என்ற பெயரால், பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் குறைவான நிதியில் கணிசமான பகுதி இந்த வெற்றிப் பள்ளிகளுக்குச் செலவிடப்பட்டு, ஏற்கெனவே புறக்கணிப்பில் உள்ள மற்ற அரசுப் பள்ளிகள் மேலும் புறக்கணிக்கப்படும்.
அதைவிடப் பயங்கரமானது, பிஎம்சிறீ திட்டப்படி இந்த அருமைப் பள்ளிகளோடு அக்கம் பக்கத்தில் உள்ள பள்ளிகள் துணைப்பள்ளிகளாக இணைத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பாகும்.
பிஎம்சிறீ - யின் இந்தப் படுமோசமான பள்ளி புறக்கணிப்புத் திட்டத்தைத்தான் வெற்றிப்பள்ளி என்ற பெயரால் “இவ்வெற்றிப்பள்ளிகள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் மையங்களாகவும் செயல்படும்” என்று கூறும் தமிழ்நாட்டுத் திட்டமாகும்.
மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை அத்தியாயம் 7, ஒப்பீட்டளவில் சிறப்பாக இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளோடு அக்கம் பக்கத்தில் 15 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள இடைநிலை உயர்நிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை பள்ளி வளாக இணைப்பு என்ற பெயரால் (Merger of School Complex) அறிவித்தது.
உலகம் முழுவதும் முன்னேறிய நாடுகளில் கூட கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அருகமைப் பள்ளிகள் (Neighbourhood schools) அமைத்து வருகிறார்கள். மாறாக மோடி அரசு தேர்ச்சி குறைவான பின்தங்கிய பள்ளிகளையும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்புக் கவனம் செலுத்தி வலுப்படுத்தாமல், அவற்றை மூடிவிட வேண்டும் என்பதற்காக அறிவித்துள்ள திட்டம்தான் பள்ளி வளாக இணைப்பு என்ற சூதான திட்டம். இது உண்மையில் கல்வி மறுப்புக் கொள்கையாகும்.
இதைத்தான் 2019-இல் எடப்பாடி பழனிசாமி அரசு அரசாணை எண் 145-இன்படி அறிவித்தது. அடிப்படையில் இதே கல்வி மறுப்புத் திட்டத்தைத்தான் வெற்றிப் பள்ளிகள் திட்டம் என்று தி.மு.க. அரசு இப்போது அறிவிக்கிறது. இது மிகவும் அபாயகரமானது!
ஏற்னெவே பள்ளிகள் சார்ந்த முறைசார் கல்வியை நீர்த்துப் போக வைத்து, கல்வித் தொண்டர்கள் என்ற பெயரால், மோடி அரசு அறிவித்த போது, தமிழ்நாடு அரசு அதையே இல்லம் தேடிக் கல்வி என்று அறிவித்தது. அதே போல், தமிழ்நாடு அரசு அறிவித்த “எண்ணும்- எழுத்தும் திட்ட”மும் சராசரியாக உள்ள எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பாடத்திட்ட அடைவுகளை மறுக்கும் திட்டம்தான். இவை மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகள்தான்.
அதையே, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மாநில அரசின் கல்விக் கொள்கையும் பலபடப் பாராட்டி உறுதி செய்கிறது.
உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளிலும், பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளிலும் 11, 12-ஆம் வகுப்பு ஆகிய இரு வகுப்பு பாடங்களிலிருந்து கேள்விகள் இடம்பெறும் நிலையில், மிகப் பெரும்பாலான கல்வியாளர்கள் 11-ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு இருக்க வேண்டும்; அதில் பெறப்படும் மதிப்பெண்ணும் மேற்கல்வி்க்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இப்போது, 11-ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு இருக்காது என மாநில பள்ளிக் கல்விக்கொள்கை அறிவிக்கிறது. (இயல் 6 )
பள்ளிக் கல்விக் கொள்கையில், இந்திய அரசின் கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு வரையிலான பொதுத் தேர்வு, இந்தி - சமற்கிருதத்தைத் திணிப்பு ஆகியவை இருக்காது ஆகியவை மட்டும்தான் அடிப்படை வேறுபாடு. மற்றபடி மோடி அரசின் பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் தமிழ்நாட்டுப் பதிப்புதான் இன்று தி.மு.க. அரசு அறிவித்துள்ள மாநிலக் கல்விக்கொள்கை -2025 ஆகும்.
அனைவருக்கும் கல்வி, சமத்துவக் கல்வி, என்றெல்லாம் அலங்காரமாக அறிவித்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாக கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டு எளிய மக்களைக் கைகழுவிவிடும் பிற்போக்கான கொள்கைதான் இன்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை ஆகும்.
சாரத்தில் இது கல்விக் கொள்கை அல்ல, கல்வி மறுப்புக் கொள்கை!
எனவே, இந்த “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025” ஐ தி.மு.க. அரசு திரும்பப் பெற்று, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான சமநீதி கல்விக் கொள்கையை உருவாக்கி அறிவிக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
பளபளப்பான சொல் அலங்காரத்தோடு தி.மு.க. அரசு அறிவித்துள்ள இந்தக் கல்வி மறுப்புக் கொள்கையை எதிர்த்து கல்வியாளர்களும் மாணவர் இயக்கங்களும், தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல் இயக்கங்களும் களம்காண முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
============================================

தமிழ்த்தேசியப் பேரியக்கம்
இணையப் பராமரிப்பு - தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9443918095, 9841949462 | முகநூல் : https://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : https://www.kannottam.com இணையம் : https://www.tamizhdesiyam.com
சுட்டுரை : https://www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : https://www.youtube.com/tamizhdesiyam
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment