"நீலகிரியில் சுற்றுச்சூழலை நாசமாக்கிய தார் ஆலை மக்கள் எழுச்சியால் மூடப்பட்டது!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
நீலகிரியில் சுற்றுச்சூழலை நாசமாக்கியதார் ஆலை மக்கள் எழுச்சியால் மூடப்பட்டது!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
===================================
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள தேவாலா பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தி.மு.க. பிரமுகர் இராயன் என்பவருக்குச் சொந்தமான PRCC - தார் கலவை ஆலை, இன்று (04.08.2025) மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. இது மக்கள் முன்னெடுத்த ஒன்றுபட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்!
தொடர்ந்து நச்சுப் புகையால் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதுடன், அக்காற்றை சுவாசித்து வாழ்ந்து வரும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த இந்த தனியார் ஆலையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. பெரியோர் முதல் சிறு குழந்தைகள் வரை ஆஸ்துமா - நுரையீரல் தொற்று - புற்றுநோய் எனப் பல்வேறு விதமான கொடிய தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராடினர். பல்வேறு கட்சி - இயக்கங்களுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் அப்போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று, வழக்குகள் பெற்றது. தார் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, காழ்ப்புணர்வின் காரணமாக, அப்பகுதியின் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 28.07.2025 அன்று, PRCC - தார் கலவை ஆலையில் - பல ஆயிரம் டன் கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் பாரம் தாங்காமல் - PRCCக்கு சொந்தமான தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அருகில் உள்ள வீடுகளின் மேல் விழுந்ததில் பல வீடுகள் சேதம் அடைந்தது. நல் வாய்ப்பாக, வீட்டிலிருந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.
மேலும் அபாயகரமான நிலையில் விரிசலடைந்து காணப்படும் தடுப்புச்சுவர் மீண்டும் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் சூழல் காணப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் அருகில் உள்ள பல வீடுகள் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகள் ஏதேனும் நடந்து விடுமோ என இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனையடுத்து, 30.07.2025 அன்று PRCC - தார் கலவைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 01.08.2025 அன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று (04.08.2025) மாவட்ட நிர்வாகம் PRCC தார் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. இந்த முடிவு, அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல், நீண்ட காலமாகப் போராடிவரும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டுமெனில், இத்தடையை நிரந்தரமான தடை என மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றும், தார் ஆலைக்கு எதிராகப் போராடியோர் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

தமிழ்த்தேசியப் பேரியக்கம்
இணையப் பராமரிப்பு - தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9443918095, 9841949462 | முகநூல் : https://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : https://www.kannottam.com இணையம் : https://www.tamizhdesiyam.com
சுட்டுரை : https://www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : https://www.youtube.com/tamizhdesiyam
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment