கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"கல்வியாளர் வசந்திதேவி மறைவுக்கு இரங்கல்!" ---- தமிழ்த்தேசியப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கல்வியாளர் வசந்திதேவி மறைவுக்கு இரங்கல்!

=============================
தமிழ்த்தேசியப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
============================

துடிப்புமிக்க கல்வியாளர் பேராசிரியர் வே. வசந்திதேவி, நேற்று (1.8.2025) மதியம் காலமானார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டு முன்னோடி தொழிற்சங்க வாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான திரு. சக்கரைச் செட்டியார் அவர்களின் மகள் வழி பெயர்த்தியான வசந்திதேவி திண்டுக்கல்லில் 1938-இல் பிறந்தவர். இவரது தந்தையார் பி.வி. தாஸ் அவர்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவர், திண்டுக்கல் நகராட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். திண்டுக்கல் நகரத்தில் இருந்த தூய்மைப் பணியாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறையோடு பாடாற்றியவர். காங்கிரசுக் கட்சியில் சித்ரஞ்சன் தாஸ் அவர்களைத் தனது வழிகாட்டி தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த அவர், சித்ரஞ்சன் தாஸ் துணைவியார் வசந்திதேவி அவர்களின் பெயரையே தனது மகளுக்கும் சூட்டினார்.

சென்னைக்குப் புலம் பெயரந்த காரணத்தினால், வசந்திதேவியின் படிப்பு சென்னையிலேயே தொடர்ந்தன. இராணிமேரி கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் வரலாற்றுத் துறையில் படித்த வசந்திதேவி, 1970 களில் பிலிப்பைன்ஸ் சென்று தனது முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த வீரஞ்செறிந்த வியட்நாம் விடுதலைப் போராட்டமும், சேகுவாரா எழுச்சியும் வசந்திதேவியை பொதுவுடைமை இயக்கத்தின் பால் ஈர்த்தன.

இராணிமேரி கல்லூரி, மீனாட்சி கல்லூரி போன்ற கல்லூரிகளில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த வசந்திதேவி, ஆசிய வளர்ச்சிவங்கி அதிகாரியான தனது கணவரின் பணிகாரணமாக, பிலிப்பைன்ஸ்சுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. நீண்டகால் விடுப்பில் சென்றிருந்த வசந்திதேவி, விடுப்பு முடிந்து திரும்பியபோது, கும்பகோணம் மகளிர் அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராகப் பணியமர்ந்தார்.

அப்போது, திருவாரூரில் இருந்த மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சைமாவட்ட அலுவலகத்திற்கு வந்து, குடந்தையில் அவருக்கு வீடுபார்ப்பதற்கும், வந்தவுடன் முதல் பயணமாக கீழவெண்மணி ஈகியர் இடத்தைப் பார்க்க வேண்டும் எனக் கோரியும், இந்து என். ராம் அவர்களின் அறிமுகக் கடிதத்தோடு என்னை அணுகியது நினைவுக்கு வருகிறது.

சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், உழவுத் தொழிலாளர்களான தங்களது கோரிக்கைகளுக்காகவும் செங்கொடி சங்கத்தில் அணிதிரண்ட ஒரே காரணத்திற்காக, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர், 1968 டிசம்பர் 25 நள்ளிரவில் ஒரே குடிசையில் வைத்து கொளுத்திக் கொல்லப்பட்ட இடம் கீழவெண்மணி! அந்த ஈகியரின் நினைவு மண்டபத்திற்கு வசந்திதேவி அவர்களை நான் அழைத்துச் சென்று காட்டியபோது, அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்பு இன்றும் என் கண்முன்னே நிற்கிறது.

கல்வியாளராக, மனிதஉரிமைச் செயல்பாட்டாளராக தொழிற்சங்க வாதியாக பல தளங்களில் பணியாற்றியவர் பேராசிரியர் வசந்திதேவி. இராணிமேரி கல்லூரியிலும், பிறகு குடந்தை மகளிர் கல்லூரியிலும் முதல்வராகப் பணிபுரிந்த அவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக அமர்த்தப்பட்டபோது, அப்பல்கலைக் கழகத்தைக் கட்டமைப்பதிலும், அதன் பாடத் திட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த பிரிவுகளை இணைப்பதிலும் மிக முக்கியமான பங்காற்றினார்.

பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் ஆணைய தலைவராக அமர்த்தப்பட்டு, சென்னை மாநகரத்தில் சாலையோர குடும்பப் பெண்கள், புறக்கணிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் நலனுக்காகத் தன்னால் இயன்ற பணிகளைச் செய்தார்.

வயது முதுமை காலத்திலும், கல்வி உரிமைக்கான போராட்டக் களங்களில் தொடர்ந்து செயல்பட்டார். குறிப்பாக மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து, அதன் வரைவுக் கட்டத்திலிருந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் இடைவிடாமல் பங்கேற்றார்.

பேராசிரியர் வே. வசந்திதேவி அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்து தனது 87-ஆவது வயதில் மறைவுற்றாலும், அவரது இழப்பு எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பேராசிரியர் வே. வசந்திதேவி அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

0 கருத்துகள்: