"நிலத்தடி நீருக்கு வரியா....?" ----- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
நிலத்தடி நீருக்கு வரியா?=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================
இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.எம். பாட்டீல், நிலத்தடி நீர் பயன்படுத்தும் உழவர்கள் மீது நீர்ப்பயன்பாட்டு வரி விதிக்கப்படும் என அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாட்டு உரிமை நீரைப் பிடித்து வைத்துக் கொள்வதால் நீர் முற்றுகையில் நீண்டநாளாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், காவிரிப் பாசனப் பகுதியில் கூட உழவர்கள் பெரிதும் நிலத்தடிநீரைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
உழவர்கள் பொறுப்பற்ற முறையில் நீரை வீணடிக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தேவையற்று பம்புசெட் மோட்டார் ஓடிக் கொண்டிருந்தால் அது அடிக்கடி பழுதடையும் என்ற செய்திகூடத் தெரியாதவர்கள் அல்ல உழவர்கள்.
பொதுவாக, நிலத்தடிநீர் உறிஞ்சுவது அதிகரித்து வருவதும், அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று கொண்டிருப்பதும், நீர் உப்பாவதும் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு பொது சிக்கலாகும்.
தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலந்து பயன்படுத்த பொருத்தமற்றதாக மாறிவருவது கண்மூடித்தனமான தொழில் வீக்கத்தோடு இணைந்து வரும் பேராபத்து ஆகும்.
எனவே, இந்திய அரசு நிலத்தடிநீர் பெருக்கத்தை உறுதி செய்வதற்கு அறிவியல் வழிப்பட்ட மனிதநேயம் உள்ள மாற்றுத் திட்டங்களைக் கருதிப் பார்க்காமல், ஏற்கெனவே கடன்வலையில் சிக்கியுள்ள உழவர்கள் மீது நீர் வரி என்ற பெயரால் மேலும் ஒரு தாக்குதல் தொடுப்பது மனிதப்பகை நடவடிக்கை மட்டுமல்ல, பொருளியல் வழியிலும் பிற்போக்கான திட்டமாகும்.
பசுமைப் புரட்சி என்ற பெயரால் திணிக்கப்பட்ட ஒட்டுரக - இரசாயன வேணாண்மைதான் கிராமப்புற நிலத்தடிநீர் உறிஞ்சல் அதிகரித்திருப்பதற்கு முதன்மைக் காரணமாகும்.
எனவே, இரசாயன வேளாண்மைக்கு மாற்றாக, குறைவான நீர்ப்பயன்பாடு உள்ள இயற்கை சார்ந்த மரபு வேளாண்மைக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் செயல்படுத்தி, உழவர்களை இரசாயன வேளாண்மை என்ற விலங்கிலிருந்து விடுவிக்க வேண்டும். உடனடித் தேவையாக ஒட்டுவகை வேளாண்மையிலும், சொட்டுநீர்ப்பாசனத்தை விரிவுபடுத்த வேண்டும். நீர் சிக்கனத்தில் முன்வரிசையில் உள்ள உழவர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்களும் விருதுகளும் வழங்க வேண்டும்.
பெருவளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள் செய்வதையும், கழிவுநீர் சுழற்சி ஏற்பாடுகள் நிறுவுவதையும் சட்டக் கட்டாயமாக்க வேண்டும்.
கிராமங்களிலும் நகரங்களிலும் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களுக்கு மானியமும் ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.
இவ்வாறான மாற்றுத் திட்டங்களைச் சிந்திப்பதற்கு மாறாக, ஏற்கெனவே தள்ளாடிவரும் உழவர்கள் மீது வரித்தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசின் இந்த உழவர்பகைத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என மு.க. ஸ்டாலின் அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

தமிழ்த்தேசியப் பேரியக்கம்
இணையப் பராமரிப்பு - தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9443918095, 9841949462 | முகநூல் : https://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : https://www.kannottam.com இணையம் : https://www.tamizhdesiyam.com
சுட்டுரை : https://www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : https://www.youtube.com/tamizhdesiyam
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment