கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"மோடி அரசின் சட்டக் கவிழ்ப்பு முயற்சி!" ----- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


மோடி அரசின் சட்டக் கவிழ்ப்பு முயற்சி!

===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
===================================


ஆளுநரின் அதிகார அத்துமீறலுக்குக் கடிவாளம் போடும் வகையில், கடந்த ஏப்ரல் 8ஆம் நாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பை, குறுக்கு வழியில் முறியடிக்கும் உள்நோக்கத்தோடு இந்திய அரசு காய் நகர்த்தத் தொடங்கி இருக்கிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 143 படி 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திற்கு முன்னால் வைத்து விளக்கம் கேட்டிருக்கிறது மோடி அரசு!

கடந்த ஏப்ரல் 8 அன்று உச்ச நீதிமன்றம் மாநில அரசின் சட்ட வரைவுகள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநில ஆளுநர்கள் அனுப்பும் சட்ட வரைவுகள் குறித்து மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான சிறப்புக் காரணத்தைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது

இந்தத் தீர்ப்பு குறைந்தபட்ச கூட்டாட்சி உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்கிறது என்று பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் அத் தீர்ப்பை முறியடிப்பதற்காக, கொல்லைப் புற வழியாக, அரசமைப்பு உறுப்பு 143இன் படி உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது இந்திய அரசு!

அரசமைப்பு உறுப்பு 200 படி மாநில ஆளுநரிடம் ஒரு சட்ட வரைவு முன்வைக்கப்படும் போது, அவருக்குள்ள சட்ட வழியிலான வாய்ப்புகள் என்னென்ன, ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா, அரசமைப்பு வழங்கி உள்ள விருப்பதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமாகாதா, அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநர் செயல்பாடுகளுக்கு எவ்விதக் காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்ற நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம், ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா, அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவு மூலம் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா, அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 இன் மூலம் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றி அமைக்க முடியுமா, அவ்வாறான அதிகாரம் அதற்கு உள்ளதா, என்பவை போன்ற 14 கேள்விகளை எழுப்பி அரசமைப்புச் சட்ட உறுப்பு 143இன்படி உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது இந்திய அரசு!

அரசமைப்புச் சட்ட உறுப்புகளுக்கு தெளிவுபெற விளக்கம் கேட்டோ அல்லது ஒரு சட்டம் குறித்து எழுகிற அரசமைப்புச் சட்ட பொருத்தப்பாடு குறித்து வினா எழுப்பியோ 143 ஐ இந்திய அரசு பயன்படுத்தலாம். ஆனால் இந்த வழக்கில் மிக மோசமான முறையில் இத்தீர்ப்பை முறியடிப்பதற்கான தீய உள்நோக்கத்தோடு, ஒரு கொல்லைப் புற வழியாக, உறுப்பு 143 ஐ மோடி அரசு பயன்படுத்துகிறது.

ஏனெனில் உறுப்பு 200 என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. எந்தெந்த இடத்தில் ஆளுநருடைய விருப்பதிகாரம் இருக்கிறது என்பது பற்றிய குழப்பம் உள்ள ஒரே இடம் அமைச்சரவை முடிவெடுத்து ஒரு சட்ட வரைவை அனுப்பியதற்குப் பிறகு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் (as soon as possible) ஆளுநர் கையெழுத்திட வேண்டும், முடிவெடுக்க வேண்டும் என்ற பகுதி. இது தவறாகப் பயன்படுத்தப் படுகிறபோது இதற்கான விளக்கம் அளித்து பல்வேறு தீர்ப்புகள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றை அடியோற்றித்தான் பர்திவாலா - மகாதேவன் அமர்வு ஆளுநர் ரவி பற்றிய தீர்ப்பையும் வழங்கி இருக்கிறது.

குறிப்பாக ஆளுநரின் விருப்பதிகாரம் என்று வரையறுக்கப்பட்டு இருக்கிற சில பிரிவுகளைப் பற்றி ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை ஒன்றுக்கு பலமுறை கொடுத்து விட்டது.

உறுப்பு 161இன் படி ஆளுநருக்கான தனி விருப்பதிகாரம் கிடையாது. தண்டனைக் குறைப்பு குறித்த உறுப்பு 161இன் படி அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவம் தான் ஆளுநரே தவிர, தனித்த விருப்பதிகாரம் என்ற எந்த அதிகாரமும் ஆளுநருக்குக் கிடையாது என்று, கேகர்சிங் வழக்கிலும் மாரூராம் வழக்கிலும், அதற்கடுத்து ஏழு தமிழர் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது.

எனவே அதற்கு மீண்டும் விளக்கம் பெறுவதற்கான தேவை எழவில்லை.

அதேபோல பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு அந்த அதிகாரம் கிடையாது. பெரும்பான்மை எந்தக் கூட்டணிக் கட்சிக்கு இருக்கிறது என்பதை சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் வாயிலாகத் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகை கணக்கிட முடியாது என்ற தீர்ப்பை என்.டி. இராமராவ் வழக்கில் - அதை தொடர்ந்து எஸ்.ஆர். பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. எனவே அது குறித்து புதிதாக விளக்கம் பெற வேண்டிய அவசியமும் கிடையாது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உறுப்புகள் குறித்தோ அல்லது சட்டமன்றங்கள் நாடாளு மன்றங்கள் இயற்றுகிற சட்டங்களின் பொருத்தப்பாடு குறித்தோ உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவதற்கான முழு அதிகாரம் உள்ளது என்பதைத் தான் அரசமைப்புச் சட்டம் பல வடிவங்களில் தெளிவாக வரையறுக்கிறது.

புகழ் வாய்ந்த கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முழு ஆயம் நீதிமன்றத்தின் தற்சார்புத் தன்மை, எல்லா சட்டங்களையும் ஆய்வு செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் என்பவை இந்திய அரசமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று தெளிவாக வரையறுத்து விட்டது.
இந்த நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்து, ஆளுநரின் அதிகாரம் குறித்து கால நிர்ணயம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு இடமில்லை. ஏனென்றால் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுப்பு 200 மற்றும் 201க்கு என்ன பொருள் என்பதைத் தீர்ப்புகளின் வழியாக உச்ச நீதிமன்றம் சொல்ல முடியும், சொல்லி இருக்கிறது. எனவே திரும்பவும் அதற்கு அவ்வாறான அதிகாரம் இருக்கிறதா என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது, அல்லது வேண்டுமென்றே குழப்புவது!

அடுத்து உறுப்பு 142 இன் படியான உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் எந்தச் சூழலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அந்தப் பிரிவே சொல்கிறது. பல்வேறு தீர்ப்புகளிலும் சொல்லப்பட்டு விட்டது. நீண்ட காலமாக முழு நீதி வழங்கப்படாமல், (complete justice) ஒரு சிக்கலில் இழுபறி இருக்குமானால், அவ்வாறான சூழலில் சிறப்பு அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது என்பதைத்தான் உறுப்பு 142 கூறுகிறது. இந்த 142 ஐ உச்ச நீதிமன்றம் பயன்படுத்தலாம். அதற்கான நியாயங்களைத் தன்னுடைய தீர்ப்பிலே வரையறுத்துச் சொல்ல வேண்டும் என்பதை விளக்கியது.

கோலக்நாத் வழக்கு (1967), யூனியன் கார்பைடு வழக்கு (1968), உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் வழக்கு (1998), ஷில்பா ஷேக் வழக்கு (2023), பேரறிவாளன் வழக்கு (2023) ஆகிய பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. முழு நீதி வழங்க வேண்டிய தேவை இருந்தால் அவ்வாறான சூழலில் 142-இன்படி செயல்படலாம் என்று நீதிமன்றங்கள் வரையறுத்துவிட்டன. இவை பெரும்பாலும் அரசமைப்பு ஆயங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஆகும். இப்போது அதைப் பற்றி கேள்வி எழுப்புவதும் குழப்பும் முயற்சியே தவிர விளக்கம் பெறுகிற நீதியான முயற்சி கிடையாது.

அரசமைப்பு உறுப்பு 143-ஐ இதற்கு முன்னால் இந்திய அரசு தவறாகப் பயன்படுத்த முயன்ற போதெல்லாம் உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடி இருக்கிறது.

குறிப்பாக காவிரி வழக்கில் காவிரி தீர்ப்பாயத்திற்கு இடைக்கால ஆணை பிறப்பிப்பதற்கு அதிகாரம் இருக்கிறதா, அதுபோல் அன்றைக்கு அந்தத் தீர்ப்பை முறியடிப்பதற்காக கர்நாடகா அரசு பிறப்பித்த அவசர சட்டம் சரியானதா என்பதை எல்லாம் கேட்டு விளக்கம் பெறுவதற்கு அன்றைய குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் வழியாக காங்கிரஸ் ஆட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக உறுப்பு 143ஐ அரசு தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. எந்தச் சட்டச் சிக்கல் குறித்தும் 143 ஐ பயன்படுத்துவதற்கு முன்னால் அரசு தன்னுடைய பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்த ஒரு சிக்கலில் அதன் மீது மீளாய்வு மனுவோ மேல்முறையோடு செய்வதை தவிர்ப்பதற்காக 143 ஐ பயன்படுத்துவது தவறானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அதன் மீது மீளாய்வு மனு போடுகிற வாய்ப்பு 137 –இல் இருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அந்தத் தீர்ப்பைக் குறுக்கு வழியில் முடக்குவதற்காக 143-ஐ அரசு பயன்படுத்தக் கூடாது என்று காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது.

அதுபோல 2012இல் 2ஜி வழக்கிலும் உச்ச நிதிமன்றம் அரசு எழுப்பிய நான்கைந்து கேள்விகளில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை அளித்துவிட்டு, மற்ற கேள்விகளுக்கு நாங்கள் விடையளிக்க மாட்டோம் என்று திருப்பி அனுப்பியது. பாபர் மசூதி தொடர்பான வழக்கில் இந்திய அரசு 143 கீழ் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, உச்ச நீதிமன்றம் இப்ராஹிம் பருகி என்ற அந்த வழக்கில், இந்த மனுவை நாங்கள் பரிசீலிக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லித் திருப்பி அனுப்பியது.

அதேபோல் உச்ச நீதிமன்றம் மோடி அரசின் இந்த மனுவையும் பதில் அளிக்காமல் பதிலளிக்க தகுதி இல்லை என்பதை விளக்கி திருப்பி அனுப்ப வேண்டும். அதுதான் சரியான நீதியாக இருக்க முடியும்.

இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மட்டுமன்றி எல்லா மாநில அரசுகளும் இந்த வழக்கில் இணைந்து கொண்டு, தங்களுடைய வாதங்களை முன்வைத்தால்தான் தெளிவான தீர்ப்பு கிடைக்கும்.

அதற்கான முனைப்பில் தமிழ்நாடு அரசு சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

0 கருத்துகள்: