கல்லூரிக் கல்வியைக் கைகழுவும்திராவிட மாடல்!
=====================================
கி.வெங்கட்ராமன் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
திராவிட மாடல் என்பது மோடி மாடலின் தமிழ்நாட்டுப் பதிப்புதான் என்பதை மீண்டும் மீண்டும் மு க ஸ்டாலின் ஆட்சி மெய்ப்பித்து வருகிறது.
இப்போது மிகக் கொடுமையான - கல்லூரிக் கல்வியைத் தனியார் மயமாக்கக்கூடிய சட்ட திருத்தத்தை, சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மு க ஸ்டாலின் அரசு முன்மொழிந்திருக்கிறது.
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டம் 2019 இல் திருத்தம் என்ற பெயரால் முன்வைக்கப்பட்டிருக்கிற இந்த சட்ட முன்வடிவு, அப்பட்டமாக, எழுத்துக்கு எழுத்து, மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துகிற மக்கள் பகைச் சட்டமாகும்.
இத் திருத்தச் சட்டத்தின் படி, இப்போது இயங்கி வருகிற அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளைப் பழுப்பு பல்கலைக்கழகங்கள் (Brown Field University) என்ற பெயரால் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய படு மோசமான திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே அரசு கல்லூரிகள், வரலாற்றுப் புகழ்வாய்ந்த அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நிதி நெருக்கடி திணிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்டு வருகின்றன. இந்தச் சித்திரவதைக் கொலையின் அடுத்த கட்டம்தான், மொத்தமாக உயர் கல்வியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கி எல்லாவற்றையும் தனியாருக்கு வழங்கி விடுவது என்ற திட்டமாகும்.
இதை விரைவுபடுத்தும் வகையிலும், விரிவாக்கும் வகையிலும் இந்தச் சட்டத் திருத்தத்தில், ஏற்கெனவே, தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தில் குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருக்கிற நிறுவனங்கள் தான் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, மாநகராட்சி பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி பகுதிகளில் 35 ஏக்கர், ஊரகப் பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்று மாற்றப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் மோடி அரசின் பிற்கோக்கு கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக பாசாங்கு செய்து கொண்டு, பள்ளிக்கல்வியில் ஒரு எழுத்து விடாமல் மோடி அரசின் கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இப்போது அடுத்த கட்டமாக உயர்கல்வியில் தனியார் மயமாக்கலை மொத்தமாக நிகழ்த்துவதற்குத்தான் இந்த சட்ட திருத்தம்! தனியார் மயம் ஆகிவிட்டால் - தனியார் பல்கலைக்கழகமாக இந்த கல்லூரிகள் மாற்றப்பட்டுவிட்டால் - அங்கே சமூக நீதிக்கு இடமே கிடையாது. இட ஒதுக்கீட்டிற்கு இடமே கிடையாது. அவர்கள் வைத்தது தான் கல்வி கட்டணம். எளிய மாணவர்கள் தத்தளிக்க வேண்டும்.
ஏற்கெனவே அரசு கையில் இருக்கிறபோதே அங்கே பணியாற்றக்கூடிய பேராசிரியர்களில் பாதி பேருக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரால் அத்தக்கூலிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது தனியார் பல்கலைக்கழகம் என்று மாற்றி விட்டால் யாருக்கும் சட்ட உரிமைப் படியான ஊதியம் இல்லாமல், எல்லோருமே தினக்கூலிகள் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கல்விச்சூழலே கெட்டுப் போகும்.
வெறும் வாய்ச்சவடாலாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பேசிக்கொண்டு மொத்தமாக தமிழ்நாட்டுக் கல்வியை சீரழிக்கிற மாடலாகத் தான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.
இதனைக் கல்வியாளர்கள் சிக்கல் என்று கடந்து விடாமல், மாணவர்கள் பிரச்சினை என்று புறக்கணித்து விடாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் - குறிப்பாக இளையோரும் களம்காண வேண்டும். எதிர்த்து முறியடிக்க வேண்டும். சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதைச் சட்ட முன்வடிவு என்ற நிலையிலேயே முறியடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


0 கருத்துகள்:
Post a Comment