கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"தொழிலாளி வர்க்கத்தின் நீதிமன்றப் போராளி வழக்குரைஞர் அஜய் கோஷ் மறைவு பேரதிர்ச்சி!" ----- 'தோழர்' கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்


தொழிலாளி வர்க்கத்தின் நீதிமன்றப் போராளி

வழக்குரைஞர் அஜய் கோஷ் மறைவு பேரதிர்ச்சி!
=======================================================
தோழர்  கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=======================================================

சென்னை உயர்நீதிமன்ற முன்னணி வழக்குரைஞர் தோழர் வீ. அஜய் கோஷ் அவர்களின் திடீர் மரணம் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது. நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நீதித்துறை போராளியாக அஜய் கோஷ் அவர்கள் திகழ்ந்தார்கள்.

இவருடைய தந்தையார் பொதுவுடைமை இயக்கத்தில் செயலாற்றியவர் என்பதால், இவருக்கு பொதுவுடைமை இயக்கத் தலைவர் அஜய் கோஷ் பெயரைச் சூட்டியிருக்கிறார்.

நீதிபதி து. அரபரந்தாமன் வழக்குரைஞராக இருந்த போது அவரிடம் இளம் வழக்குரைஞராக இணைந்து பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக வழக்குரைஞர் தோழர் அஜய் கோஷ் அவர்களை நான் அறிவேன்.

நாங்கள் தொழிலாளர்கள் சார்பாக வழக்குகளைக் கொடுக்கிற போது, கட்டணம் பற்றிப் பொருட்படுத்தாமல், தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டியது தன்னுடைய பிறவிக் கடமை என்ற உணர்வோடு, ஆதாரங்களைத் திரட்டி, வாதங்களை முன்வைத்து தொழிலாளர்களுக்கான நீதியைப் பெற்றுத்தந்த ஒரு நீதித்துறை போராளி அஜய் கோஷ்.

திவாலாகி மூடப்பட்ட திருச்சி துவாக்குடி ஜி.பி. என்ஜினியரிங் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கு இனி வாய்ப்பேதும் இல்லை என கைவிடப்பட்ட நேரத்தில், அவர்களின் தோன்றாத் துணையாக முன்வந்து கடுமையாக முயன்று, தேசிய கம்பெனி தீர்ப்பாயத்தில் வழக்கு நடத்தி, தொழிலாளர்களின் உரிமைத் தொகையைப் பெற்றுத் தந்தார்.

இப்போது சட்டமாகி இருக்கிற தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள் வரைவு நிலையில் இருந்த போது 2019 திலேயே, ஓசூரில் நாம் நடத்திய கருத்தரங்கத்தில் பங்கேற்று தொழிலாளர்களுக்கு விழிப்புணரவூட்டினார்.

உயர் பென்சன் தொடர்பாக ஆலைத் தொழிலாளர்கள் பலபேருக்கும் இருந்த ஐயங்களைப் போக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு வகுப்பு நடத்தினார்.

கண்ணதாசன் எதிர் அஜய் கோஷ் என்ற புகழ்மிக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது அது நீதித்துறையில் நீதிபதிகளைப் பணியமர்த்தும் போது என்னென்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று பின்னாலே பேசப்படுவதற்கு அது முன்னோட்டமான ஒரு வழக்காகத் திகழ்ந்தது.

வழக்குரைஞர் அஜய் கோஷ் அவர்கள் கம்பம் பகுதியில் பிறந்து சென்னையில் நீண்ட காலமாக இருந்து வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.

அவருக்குக் கடந்த ஆண்டு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னும் கூட விடாமல் மதுரை நீதிமன்றத்திற்கும், சென்னை நீதிமன்றத்திற்கும், பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கும், தொழிலாளர்கள் உரிமையின் மீது அக்கறையோடு அலைந்தலைந்து உடல் நலத்தையும் பார்க்காமல் பணியாற்றியவர். இவருடைய திடீர் மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு!

தொழிலாளர் வழக்குகளை மட்டுமே நடத்துவது என்று இருந்த பல வழக்கறிஞர் அலுவலகங்கள் எல்லாம் நெருக்கடியின் காரணமாக மாறிவிட்ட நேரத்தில் கூட, இந்த நிமிடம் வரையிலும் தொழிலாளர் தரப்புக்கு மட்டுமே தான் வாதிடுவேன் என்ற உறுதியோடு களத்தில் நிற்கிற அஜய் கோஷ் போல இன்னொரு வழக்குரைஞரைப் பார்ப்பது அரிது.

தமிழ் தேசியப் பேரியக்கத்தோடும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழோடும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்.

அஜய் கோஷ் அவர்களுடைய மறைவு மிகப்பெரிய இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!

தொழிலாளர் வர்க்கத்தின் நீதித்துறைப் போராளி வீ. அஜய் கோஷ் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் என் அக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

0 கருத்துகள்: