உழவர் தலைவர் சி. ஆறுமுகம் மறைவு!======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!
======================================
தமிழக உழவர் முன்னணியின் தலைவர் தோழர் சி. ஆறுமுகம், இன்று (04.06.2026) காலை மறைவெய்திய செய்தி, அதிர்ச்சியளிக்கிறது.
சி.பி.எம். கட்சியின் சிதம்பரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே, நம்மோடு தொடர்பு ஏற்பட்டு, சிதம்பரம் பகுதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அன்று எம்.சி.பி.ஐ.) தொடங்குவதற்கு அடித்தளமாக இருந்த தோழர்களில், ஒருவர் தோழர் சி. ஆறுமுகம். தமிழ்நாடு மின்சார வாரிய கணக்காயர் - களத்தொழிலாளர் சங்கத்தில் மாவட்ட அளவில் தொடர்ந்து பொறுப்பேற்று செயல்பட்டவர்.
தமிழக உழவர் முன்னணி தொடங்குவதற்கு தூண்டுகோலாக இருந்து, தொடர்ந்து களப்பணி ஆற்றியவர். தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழக உழவர் முன்னணி, காவிரி உரிமை மீட்புக் குழு என்று எந்தக் களத்தின் போராட்டங்களிலும் முதல் வரிசையில் நின்றவர். நமது தமிழர் கண்ணோட்டம் இதழின், தொடர் வாசகர் மட்டுமின்றி, கிராமப்புற இளையோர் நமது இதழை படிக்க வேண்டுமென்பதில் பேரார்வத்தோடு செயல்பட்டவர்.
பேரியக்கத்தின் இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டியவர். நமது பன்மைவெளி வெளியீட்டகத்தின் நூல்களை ஒன்றுவிடாமல் வாங்கி, படித்து, பரப்பிக் கொண்டே இருந்தவர்.
அண்மையில் சில ஆண்டுகளாக, அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி தொடர் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தபோதும், பேரியக்கம் நடத்தும் போராட்டங்கள் – கூட்டங்கள் அனைத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்ற செயல்பாட்டாளர்.
தோழர் சி. ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும் உழவர் இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். தோழர் சி. ஆறுமுகம் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் தமிழக உழவர் முன்னணி சார்பிலும் எனது அக வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


0 கருத்துகள்:
Post a Comment