இந்திய ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டின் மீது
தனது பொருளியல் தாக்குதலை வேகப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து வரி
வருவாயை கொள்ளையடித்துச் செல்லும் தில்லி ஏகாதிபத்தியம், தமிழகத்தின் மீது
புதுப்புது நிதிச்சுமைகளை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில்
இந்திய அரசு மானிய விலை எரிவளி உருளைகளுக்கு வரம்பு கட்டி அறிவித்தது. ஒரு
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6உருளைகள் தான் மானிய விலையில் வழங்கப்படும் என
அறிவித்தது. இதைப் பல்வேறு கட்சிகளும், மாநில அரசுகளும் எதிர்த்தன. தமிழக
அரசும் எதிர்த்தது. 6 உருளைகளுக்கு மேல் மக்களுக்கு மானிய விலையில்
எரிவளியை தர விரும்பும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்கள் சொந்த
பொறுப்பில் கூடுதல் மானியம் வழங்கி இதற்கு மேல் எண்ணிக்கையில் எரிவளி
உருளைகளை வழங்கிக் கொள்ளட்டும் என இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திமிர்
வாதம் பேசினார்.
இப்போது நியாய
விலைக்கடைகளில் வழங்குவதற்காக இதுவரை தில்லி அரசு அளித்து வந்த துவரம்
பருப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. ஏற்கெனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த
மானிய விலை துவரம் பருப்பின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு மாதத்திற்கு 2
ஆயிரம் டன் என்ற அளவில் குறுக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும்
நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல் வேறு பருப்பு வகைகள் மானிய விலையில்
வழங்கப்பட்டதும் நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு இந்திய அரசு வழங்கி
வரும் சர்க்கரையின் மானியமும் கிட்டத்தட்ட முழுவதுமாக நீக்கப்பட இருப்பதாக
செய்திகள் வெளிவருகின்றன. இது உண்மையென்றால் தமிழ்நாட்டில் நியாய விலைக்
கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ரூபாய் 23 என்ற அளவிற்கு உயரும்
ஆபத்து உள்ளது. இது இப்போதைய நியாய விலைக்கடை விலையை விட 80 விழுக்காடு
அதிகம் ஆகும்.
இந்த
விலையேற்றங்களையெல்லாம் மக்கள் மீது சுமத்தாமல் தமிழக அரசே ஏற்பதென்றால்
ஆண்டுக்கு ஏறத்தாழ் 700 கோடி ரூபாய் நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்க வேண்டி
வரும்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பே
தமிழக நியாய விலைக் கடைகளுக்கு இந்திய அரசு அளித்து வந்த மானிய விலை
மண்ணெண்ணெய் ஆண்டுக்கு 59,780 கிலோ லிட்டரிலிருந்து 44,580 கிலோ லிட்டராகக்
கடுமையாக வெட்டப்பட்டது. அதேபோல் தமிழகத்திற்கு இந்திய அரசு அளித்து வந்த
வரிப்பங்கீடும் குறுக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டிலிருந்து
இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி (Central Excise Duty) கடந்த ஆண்டு
9376 கோடி ரூபாயாக இருந்தது. சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில்
இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி,
செல்வ வரி, ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தில்லி அரசு தமிழ்நாட்டில்
திரட்டிய சேவை வரி கடந்த ஆண்டில் 5594 கோடி ரூபாய்.
ஆக
மொத்தம் கடந்த நிதியாண்டில் இந்திய ஏகாதிபத்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து
அள்ளிச் சென்ற வரி வருமானம் 79,631 கோடி ரூபாய் ஆகும். ஆனால் தமிழகத்திற்கு
அளித்த வரி வருவாய்ப் பங்கீடோ வெறும் 13,100 கோடி ரூபாய் மட்டுமே. நிலவும்
பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் உண்மையளவில் (Real Terms) தமிழகத்தின்
வரிப் பங்கீடு கடந்த நிதியாண்டை விட 7 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்கும்
மேல் தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைத்துக் கொண்டு தன் சொந்த
பொறுப்பில் தமிழ்நாட்டில் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், தன்
சொந்த நிதியிலிருந்து மானியத்தை அதிகரித்து எரிவளி உருளைகளை மக்களுக்கு
வழங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தில்லி அரசு நிர்ப்பந்திக்கிறது.
இது
தவிர மின் வாரியங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை இந்த ஆண்டோடு
நிறுத்தி விடப் போவதாகவும், இனிமேல் ஆண்டுதோறும் மின்சாரக் கட்டணத்தை
உயர்த்தி கொள்ள வேண்டும் என்றும் தில்லி அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே
வகைத்தொகையின்றி தமிழகத்தின் கனி வளங்களையும் கடல் வளங்களையும், எண்ணெய்
வளங்களையும் அள்ளிச்செல்லும் தில்லி ஏகாதிபத்தியம் தமிழகத்தின் மீது
தொடுத்துள்ள நிதித் தாக்குதல் கொடும் உயர் அளவை இப்போது எட்டியுள்ளது.
இந்தியாவின் காலனியாக தமிழ்நாடு நீடிப்பதால் இக்கொடுமை தொடர்கிறது.
ஆயினும்
இன்றைய இந்தியக் கட்டமைப்புக்குள்ளேயே தமிழக அரசு பதிலடி நடவடிக்கையில்
இறங்கினால் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இந்த
நிதித்தாக்குதலை ஓரளவாவது தடுத்து நிறுத்த முடியும்.
”தமிழக
அரசு நிறுவனங்களான போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், டாமின்,
ஆவின், உள்ளிட்டவை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிறுவன வருமான வரியை
செலுத்த மாட்டோம்” எனத் தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தலாம். அரசு
ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி
உள்ளிட்ட பிற நிதி இனங்களை பிடித்தம் செய்து தர மறுக்கலாம்.
இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட முடியாமல் தற்காலிகமாக முடக்கி வைக்கலாம்.
இதைவிடுத்து
முதலமைச்சர் செயலலிதா விடுக்கும் வெற்று ஆரவார கண்டனக் கடிதங்களால் பயன்
ஏதும் விளையப் போவதில்லை. கடைசியில் இந்திய அரசு வஞ்சித்துவிட்டது, தி.மு.க
காட்டி கொடுத்துவிட்டது என கண்டன அறிக்கைகள் கொடுத்துவிட்டு அத்தனை
நிதிச்சுமையையும் தமிழக மக்கள் மீது சுமத்துவதில் முடியும்.
0 கருத்துகள்:
Post a Comment