கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

தமிழர்களைப் புறக்கணித்து வடநாட்டவர்களை சேர்க்கும் ஜிப்மரின் இன ஒதுக்கலைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை முற்றுகைப் போராட்டம்!




தமிழர்களைப் புறக்கணித்து வடநாட்டவர்களை 

சேர்க்கும் ஜிப்மரின் இன ஒதுக்கலைக் கண்டித்து 
புதுச்சேரியில் நாளை முற்றுகைப் போராட்டம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


புதுச்சேரியில் இயங்கிவரும் நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமான சிப்மர் (JIPMER), மண்ணின் மக்களான தமிழர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது. 

புதுச்சேரி சிப்மரில் 150 இடங்கள், காரைக்கால் சிப்மரில் 50 இடங்கள் என மொத்தம் 200 மருத்துவ மாணவர்கள் ஆண்டுதோறும் இதில் சேர்க்கப்படுகின்றனர். புதுச்சேரி – காரைக்கால் ஆகிய தமிழர் தாயகங்களின் நிலங்களை அளித்துதான் சிப்மர் நிறுவனம் உருவாக்கப்பட்டது. எனவே, இதில் புதுச்சேரி – காரைக்கால் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காட்டு இடங்களையும், பிறருக்கு 10 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், இப்போது மண்ணின் மக்களுக்கு என 40 இடங்கள் – அதாவது 20 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது, அந்த 20 விழுக்காட்டிற்கும் ஆபத்து நேர்ந்துள்ளது! 

சிப்மரில், 2018 – 2019ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 2018 மார்ச்சு 7 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான எழுத்துத் தேர்வு சூன் 3 அன்று நடைபெற்றது. அதில், 290 மையங்களில் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் சூன் 8 அன்று வெளியிடப்பட்டது. அதில், மண்ணின் மக்களுக்கான 20 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டில், அதுவும் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கானப் பட்டியலில் வடநாட்டவர்கள் பலர் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்பு, இதேபோன்று அண்மையில் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் 91 பேரும், LDC எனப்படும் கீழ்நிலை எழுத்தர் பணிக்கானத் தேர்விலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதிலும் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் வட மாநிலத்தவர்கள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள். 

சிப்மர் நிர்வாகம், இந்தத் தமிழின ஒதுக்கல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். மாணவர் சேர்க்கையிலும், பணியமர்த்தத்திலும் தமிழர்களுக்கு 90 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதுவரை, சிப்மர் கலந்தாய்வை நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும்! 

சிப்மர் நிர்வாகத்தின் தமிழின ஒதுக்கலைக் கண்டித்தும், கலந்தாய்வை நிறுத்தி வைக்கக் கோரியும், நாளை (27.06.2018) காலை 10 மணிக்கு, புதுச்சேரியிலுள்ள சமூக – சனநாயக இயக்கங்கள் சார்பில், சிப்மர் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கேற்கிறது. 

தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையைப் பறிப்பதோடு, தமிழர் தாயக உரிமையை சிதைக்கவும் முயலும் சிப்மரைக் கண்டித்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் – கட்சிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

0 கருத்துகள்: