கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

நெல் கொள்முதல் விலையில் மோடியின் மோசடி - சிறப்புக் கட்டுரை!




"நெல் கொள்முதல் விலையில்

மோடியின் மோசடி"

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


மோடி அரசின் மோசடி அறிவிப்புகளில் ஒன்றாக வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஆதரவு விலை அறிவிப்பும் வந்துள்ளது.

வேளாண் விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிப்பதற்கு முனைவர் எம்.எஸ். சாமிநாதன் குழு வரையறுத்த கோட்பாடு பின்பற்றபட்டதாக கடந்த 08.07.2018 அன்று வெளியான இந்திய அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்திய அரசு கடந்த 2004-இல் எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் அமைத்த வேளாண்மை ஆணையம், உற்பத்திச் செலவுக்கு மேல் 50 விழுக்காடு குறைந்த அளவு இலாபம் சேர்த்து எல்லா வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறியது.

எந்தத் தொழிற்சாலை உற்பத்திப் பொருளுக்கும் உற்பத்திச் செலவை விட மூன்று மடங்குக்கு (300 விழுக்காடு) குறைவாக விற்பனை விலை தீர்மானிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் எம்.எஸ். சாமிநாதன் குழு 50 விழுக்காடு சேர்த்து வழங்க வேண்டும் என்று வரையறுத்ததே மிகவும் பிற்போக்கானது!

இந்த கணக்கீட்டின்படி கூட நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி போன்றவற்றிற்கு மோடி அரசு அறிவித்துள்ள அடிப்படை விலை அமையவில்லை. ஆனால் மோடி அரசு எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரைப்படி ஆதார விலைகள் அறிவிக்கப்பட்டதாக கூறுவது கடைந்தெடுத்த மோசடியாகும். 

உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்கு சாமிநாதன் குழு ஒரு வரையறுப்பை கூறுகிறது. C2 + 50% என்பதே அது!

இங்கு C2 என்பது இந்தியா முழுவதற்குமான சராசரி உற்பத்திச் செலவைக் குறிக்கிறது. இதுவே அறிவியலுக்குப் புறம்பானது. ஏனெனில் உற்பத்திச் செலவு மாநிலத்திற்கு மாநிலம் பெருமளவு வேறுபடும். மாநிலத்திற்கு உள்ளேயே பாசன வாய்ப்புக்கு ஏற்ப உற்பத்திச் செலவு மாறுபடும். ஒரு கணக்கீட்டு வசதிக்காக வேண்டுமானால் ஒரு மாநிலச் சராசரியை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதற்கும் சராசரி என்பது பொறுத்தமில்லாதது. 

இவ்வாறு கணக்கிடப்படும் C2 என்ற சராசரி உற்பத்திச் செலவானது, A2 
+ FL + R என்ற வாய்ப்பாட்டின் மூலம் பெறப்படுகிறது.

இதில் A2 என்பது விதை, உரம், பூச்சிக்கொல்லி, நீர்ப் பாசனம், தொழிலாளர் ஊதியம் போன்ற இடுபொருள் செலவைக் குறிக்கிறது. FL என்பது உழவரின் குடும்பத்தினர் உழைப்புக்கான ஊதிய அளவைக் குறிக்கிறது. R என்பது குத்தகை நிலமாக இருந்தால் அதற்கான வாடகை கணக்கீடு, சொந்த நிலமாக இருந்தால் அதில் செலுத்தப்படும் நிலை மூலதனத்திற்கான வட்டி ஆகியவற்றைக் குறிக்கும். நிலத்தின் வளத்தேய்மானமும் இந்த கணக்கீட்டில் வரும்.

இவை அனைத்தின் கூட்டுத் தொகையே மொத்த உற்பத்திச் செலவு C2 ஆகும். இந்த செலவோடு இதில் 50 விழுக்காடு இலாபத் தொகைச் சேர்த்து கணக்கிடுவதே சாமிநாதன் குழு பரிந்துரைக்கும் அடிப்படை விலையாகும். 

மோடி அரசு மேலே குறிப்பிட்ட R ஐ நீக்கி விட்டு A2 + FL என்பதை மட்டும் உற்பத்தி செலவாகக் கருத்தில் கொண்டு அதற்கு மேல் 50 விழுக்காடு சேர்த்து அடிப்படை விலையை அறிவித்துள்ளதாகக் கூறுகிறது. அதே நேரம் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை அறிவித்துள்ளதாகவும் கூறிக் கொள்கிறது. இதுவே மோசடியானது; சுய முரண்பாடானது. 

சரி, உண்மையில் இந்த கணக்கீட்டின் படியாவது வேளாண் விளைப் பொருள்களுக்கு அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. 

எடுத்துக்காட்டாக நெல்லுக்கு 2018 – 2019 ஆம் ஆண்டுக்கு மோடி அரசு அறிவித்துள்ள அடிப்படை விலை குவிண்டாலுக்கு 1750 ரூபாய் ஆகும்.

நல்ல பாசன வசதியுள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்ய ஆகும் உற்பத்திச் செலவு (A2) மட்டும் ஏக்கருக்கு சராசரியாக 31,700 ரூபாய் ஆகும். எந்த இயற்கை பாதிப்பும் இல்லாது போனால் ஒரு ஏக்கருக்கு 18 குவிண்டால் நெல் அறுவடை கிடைக்கும். இந்த வகையில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ஆகும் இடுபொருள் செலவு (A2) மட்டும் 1760 ரூபாய்.

வெறும் A2 + 50 % என்றுக் கணக்கிட்டாலே 1760 + 880 = 2440 ரூபாய் ஆகும். ஆனால் (A2 + FL) + 50 % அளிப்பதாகக் கூறி 1750 ரூபாயை அடிப்படை விலையாக மோடி அரசு அறிவித்து இருக்கிறது. இது இன்னும் மிகப் பெரிய மோசடியாகும்!

இதையே மிகப்பெரும் சாதனையாக பெருமளவு பரப்புரை செய்ய மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் உள்ள மோசடித்தன்மையை – பொய்மையை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக உழவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு இலாப விலை கேட்டு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

0 கருத்துகள்: