கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு!

பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள்
தமிழ்நாட்டு அரசியலில் 
ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு!


தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களில் கணிசமானவர்கள் இங்கேயே வாக்காளர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த “வெளியார் வாக்காளர்கள்” தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய குறுக்கீடாக அமைவார்கள் என்று நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
இப்போது வெளியாகியுள்ள புதிய வாக்காளர் பட்டியல் நாம் எச்சரித்ததைவிட மிக வேகமாக இந்த அபாயம் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு, நேற்று (31.01.2019) வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு!
நம்முன் உள்ள இந்த வாக்காளர் பட்டியலையும், தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டங்களாக சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி திருவள்ளுர் மாவட்ட மக்கள் தொகை 2001 கணக்கெடுப்பை ஒப்பிட 35.24 விழுக்காடும், காஞ்சிபுர மாவட்ட எண்ணிக்கை 38.9 விழுக்காடும், வேலூரின் எண்ணிக்கை 10.04 விழுக்காடும் உயர்ந்தது.
இன்னொருபுறம், இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிற மொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.
வெளி மாநிலத்தவர் தொகை உயர்வு திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீமிகை எண்ணிக்கையில் இருப்பதையும், இம்மாவட்டத் தொழில் நிறுவனங்களில் இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்கும்போதும், புதிய வாக்காளர் எண்ணிக்கையில் காஞ்சிபுரமும், திருவள்ளூரும் முதல் வரிசையில் வருவதும், அதுபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வெளி மாநில வாக்காளர்கள் வீக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான “வெளியார் வாக்காளர்” எண்ணிக்கை திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களிலும் உயர்ந்திருக்கிறது.
அதிக வாக்காளர் உள்ளத் தொகுதியாக சோழிங்கநல்லுர் தொகுதி குறிப்பிடப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகை எண்ணிக்கையில் வெளியார் இருப்பதையும், இதனையும் இணைத்துப் பார்த்தாலும் இந்த “வெளியார் வாக்காளர்” ஆபத்தை உணர முடியும்.
இந்த வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று தலையால் அடித்துக் கொண்டு, நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் மாநில ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை!
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த “வெளியார் வாக்காளர்களின்” முதல் தேர்வாக பாரதிய சனதாவும், அடுத்தத் தேர்வாக காங்கிரசுக் கட்சியும்தான் இருக்கும்!
எவ்வளவுதான் தில்லிக்குக் காட்டிக் கொடுத்தாலும், அண்ணா தி.மு.க. - தி.மு.க. கட்சிகளைக்கூட இவர்கள் கருதிப் பார்க்க மாட்டார்கள்.
இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்! எனவே, இப்போதாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ள வேண்டும்!
இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்ந்து, அதில் சேர்ந்துள்ள வெளி மாநில வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டும்! புதிய வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் யாரையும் சேர்க்கக் கூடாது!

0 கருத்துகள்: