மிகநீண்ட இழுபறிக்குப் பிறகு,காவிரிதீர்ப் பாயத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு 20.2.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டது.
அரசிதழில்
வெளியானவுடன் காவிரிச் சிக்கலே தீர்ந்துவிட்டது போலவும், காவிரி நீர்
வந்து விட்டது போலவும் அ.தி.மு.க.வினர் குதியாட்டம் போட்டனர். ஊருக்கு ஊர்
இனிப்பு வழங்கி, செயலலிதாவை வானளாவப் புகழ்ந்து சுவரொட்டிகள், பதாகைகள்
வைத்தனர். இது தனது வாழ்நாள் சாதனை என முதலமைச்சர் செயலலிதா துள்ளிக்
குதித்தார்.
அரசிதழில் காவிரி தீர்ப்பு
வெளியானதற்குத் தாங்கள் தான் காரணமென தி.மு.க தலைவர் கருணாநிதியும்
காங்கிரசுக் கட்சியினரும் போட்டிப் போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடினர்.
காவிரிச்
சிக்கல் தீர்ந்துவிட்டது போன்ற குழப்பத்தை பெரும் பகுதி உழவர்களிடமும்,
பொதுமக்களிடமும் இது ஏற்படுத்தி இருக்கிறது.இதேபோல் இடைக்கால தீர்ப்பு
1991-ல் வெளியிடப்பட்டு நேற்று வரை கடந்த 21ஆண்டுகளாக அது வெறும் ஏட்டளவில்
இருந்ததை பலரும் நினைவுகூரத் தவறிவிட்டனர்.
இறுதித் தீர்ப்பை செயல்படுத்த உறுதியான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்யாது போனால் இதுவும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து விடும்.
“தீர்ப்பாயத்தின்
தீர்ப்பு வழங்கப் பட்டவுடன் அதனை நடுவண் அரசு தனது அரசிதழில்
வெளியிட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம்
1956 இதற்கு கால வரம்பு எதுவும் கூறவில்லை என்றாலும்,ஐந்தாண்டுகளுக்கும்
மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பது நீண்ட காலதாமதம் ஆகும். இனியாவது
20.02.2013 ஆம் நாளைத் தாண்டாமல் விரைவில் அரசிதழில்
வெளியிடவேண்டும்”எனஉச்ச நீதிமன்றம் இடித்துரைத்து கெடுவிதித்த
பிறகே,அக்கெடுவின் கடைசி நாளான 20.02.2013 அன்று இந்திய அரசு காவிரித்
தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
இத்
தீர்ப்பின்படி கர்நாடகம் சூன் மாதம் 10, சூலையில் 34, ஆகஸ்டில் 50,
செப்டம்பரில் 40, அக்டோபரில் 22, நவம்பரில் 15, டிசம்பரில் 8, சனவரியில் 3,
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாதத்திற்கு 2.5ஆ.மி.க
மொத்தம் ஆண்டுக்கு 192ஆ.மி.க காவிரி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிட
வேண்டும். (1 ஆ.மி.க = 100 கோடிகன அடி) இதில் 10 ஆ.மி.க சுற்றுச் சூழல்
பயன் பாட்டிற்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள 182 ஆ.மி.க. தான். இதில்
புதுவைக்கு 7ஆ.மி.க.தமிழகம் தரவேண்டும்.தமிழகத்துப் பாசனத்திற்கு மிஞ்சுவது
175 ஆ.மி.க. தான். இந்தப் பங்கீடு மிகவும் பாதக மானது என்றாலும் இதையாவது
உறுதி செய்து கொள்ள வேண் டும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.
தனது
இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மிகக் குறைவான நீரை ஒதுக்கீடு
செய்தாலும் இத் தீர்ப்பை செயல்படுத்த உறுதியான சட்ட ஏற்பாடுகளைக் காவிரித்
தீர்ப்பாயம் வலியுறுத்திக் கூறுகிறது.
‘இத்தீர்ப்பை
செயல்படுத்த நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management
Board) அமைக்க வேண்டும். அதன் கட்டுப் பாட்டில் கர்நாடகத்தின் கிருஷ்ண
ராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளையும் தமிழ்நாட்டின்
மேட்டூர், பவானிசாகர்,அமராவதி ஆகிய மூன்று அணைகளையும் கேரளத்தின்
பாணாசுரசாகர் அணையையும் வைத்து தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடுவதைக்
கண்காணிக்க வேண்டும்.பத்து நாட்களுக்கு ஒருமுறை இதனை ஆய்வு செய்ய
வேண்டும்.இந்த மேலாண்மை வாரியம் தனது பணிகளை நிறைவேற்ற காவிரி
ஒழுங்குமுறைக் குழுவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்துகிறது.
காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கான காரணங்களையும்,
அதற்கான முன் எடுத்துக்காட்டுகளையும் விரிவாக எடுத்துக் கூறுவதோடு,
மேலாண்மைவாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றின் கட்டமைப்பு பற்றியும்
காவிரித் தீர்ப்பாயம் விவரமாகக் கூறுகிறது.
“1991-ல்
தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புப்படி தண்ணீர் பெற ஒவ்வொரு
ஆண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டியிருந்தது என்பதை
ஆவணங் களிலிருந்து அறியமுடிகிறது.ஒவ்வொரு முறையும் பற்றாக் குறை என்று
காரணம் சொல்லி கர்நாடகம் தட்டிக்கழித்தது என்பதையும் அறியமுடிகிறது.எனவே
இப்போது அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த உருப்படியான பொறியமைவுகள்
உருவாக்காமல் போனால் இத்தீர்ப்பும் வெற்றுக் காகிதமாகவே இருக்கும்.”என
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தனது பரிந்துரைக்கான காரணத்தை
தீர்ப்பாயம் கூறுகிறது. (காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அறிக்கை,
தொகுதி 5, பக்கம் 216)
இறுதித்
தீர்ப்பு குறித்த உச்ச நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை இந்த இறுதித்
தீர்ப்பை செயல்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என கர்நாடகம்
கூறுவது அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானது.மாநிலங்களுக்கிடையிலான
தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கும் எதிரானது.
ஆனால்,
இந்த சட்ட விரோத நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு ஒத்துழைக்க முனைந்துள்ளது.
“உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவ தற்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க மாட்டோம்’என இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அரீஷ் ராவத்
கூறுவது சட்டவிரோத - இனப்பகைக் கொக்கரிப்பு ஆகும்.
தீர்ப்பாயத்தின்
இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்டு விட்டால் அது உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு இணையானது என மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டவிதி
6 (2) கூறுகிறது. கிருஷ்ணா ஆற்று நீர்ப் பகிர்வு குறித்து எழுந்த சட்டச்
சிக்கலின் பட்டறிவு விளைவாக 2002-ஆம் ஆண்டு தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6ல்
இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி உருவாக்கப் பட்டதே 6 (2)
என்ற உட் பிரிவு ஆகும். திருத்தப்பட்ட இப்பிரிவு 06.08.2002 முதல்
செயலுக்கு வந்தது.
விதி 6 (2) கூறுவதாவது:
“6
(1) ன் படி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசால் அதன் அதிகாரப்பூர்வ
அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு அத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பு அல்லது ஆணையின் வலு வைப் பெறுகிறது’.’
எனவே,அரசிதழில்
வெளியிடப்பட்ட பிறகு தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது,தொடர்புடைய அனைத்து
மாநிலங்களையும் இந்திய அரசையும் கட்டுப் படுத்தும்.
ஆயினும்
இந்திய அரசு தனது சட்டக் கடமையிலிருந்து வழுவி விடும் என்ற ஐயம்
தீர்ப்பாயத்திற்கு இருந்தது போலும்.எனவே தான் காவிரி மேலாண்மை வாரியம்
அமைப்பது குறித்து விரி வாக எடுத்துரைக்கிறது.
உச்ச
நீதிமன்றத்தில் காவிரி வழக்குகள் முடியும் வரை மேலாண்மை வாரியம் அமைப்பதை
நிறுத்தி வைக்கக் கூடாது. அரசிதழில் வெளியிட ஆணை யிட்ட தீர்ப்பிலேயே உச்ச
நீதி மன்றம் அதனைத் தெளிவு படுத்துகிறது.“தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசி
தழில் வெளியிட்டு செயல்படுத்துவது இது தொடர் பாக நிலுவையில் உள்ள உச்ச
நீதிமன்ற வழக்கு களை எவ்விதத் திலும் பாதிக்காது என்பது சொல்லாமலே
விளங்கும்” என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத் திய பிறகும் இந்திய அரசு
‘மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை’ எனக் கூறு வது அடாவடியானது.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது முடிவுக்கான முன் எடுத் துக்காட்டுகளை தீர்ப்பாயம் காட்டுகிறது.
“தீர்ப்பாயமானது
தனது தீர்ப்பை செயல்படுத்தத் தேவை யான பொறியமைவு குறித்தும், அப்பொறியமைவு
செயல்பாட் டிற்கான வழிமுறை குறித்தும் ஆணை பிறப்பிக்கலாம், அது
தீர்ப்பாயத் தீர்ப்பின் ஒருங்கி ணைந்த பகுதியாக அமையும்” என கிருஷ்ணா ஆற்று
நீர் தீர்ப் பாயம் கூறுகிறது. (கிருஷ்ணா தீர்ப்பாய அறிக்கை - தொகுதி 2,
பக்கம் 164 )
”ஆற்று நீர்ப் பகிர்வு
சிக்கல் குறித்து விசாரணை செய்வதற்கும், கட்டுப்படுத்தும் ஆணைப்
பிறப்பிப்பதற்கும் தீர்ப்பாயத்திற்கு நாடாளுமன்றம் அதிகாரம் வழங்குகிறது.
கட்டுப்படுத்தும் ஆணைப் பிறப்பிக்க அதிகாரம் உண்டு என்றால்,அந்த ஆணை யைச்
செயல்படுத்த இன்றிய மையாத் தேவையான அனைத் தையும் செய்வதற்குத் தீர்ப்பாயத்
திற்கு அதிகாரம் உண்டு என்று பொருள்”. (நர்மதா தீர்ப்பாய அறிக்கை - தொகுதி
2, பக்கம் 130).
நர்மதை தீர்ப்பு
1979-ல் வெளியானதற்குப் பிறகே மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர் தகராறு
சட்டத்தில் 6கி என்ற பிரிவு சேர்க் கப்பட்டது. தீர்ப்பு அரசிதழில்
வெளியிடப் பட்ட பிறகு அதனைச் செயல் படுத்தத் தேவையான பொறியமைவு அல்லது
பொறியமைவுகளை இந்திய அரசு நிறுவவேண்டும் என இப்பிரிவு கூறுகிறது.
இப்பொறியமைவு
குறித்த அறிவிக்கைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்
என்றும்,நாடாளுமன்றம் விரும் பினால் இப்பொறிய மைவை மாற்றி அமைக்கலாம்
என்றும் 6கி (7) கூறுகிறது.
மாநிலங்களுக்கிடையிலான
தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6 (2) -ன் வெளிச்சத்தில் இந்த 6கி (7) ஐ
நோக்கினால் இது தொடர் பான நாடாளு மன்றத் தின் அதிகாரம் மிகவும்
வரம்புக்குட் பட்டது என்பது புலனாகும்.ஏனெனில் 6(2)-ன் படி தீர்ப்
பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபிறகு அது உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு இணையா கிறது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றம் திருத்தவோ
மாற்றியமைக்கவோ முடியாது.வேண்டுமானால் வேறொரு புதிய சட்டத்தின் மூலம்தான்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர் கொள் ளலாம்.
6
(2) இப்போது செயலில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என
தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு அனைத்துத் தரப்பையும் கட்டுப் படுத்தும் உச்ச
நீதிமன்றத் தீர்ப் புக்கு இணையான ஆணையாகும்.
எனவே,
இந்திய அரசு ஒரு நிர்வாக ஆணை மூலம் (Executive order) தீர்ப்பாயம்
கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.இதற்கு 6கி(7)ன் படி
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதென்பது ஒரு சட்ட சடங்கே தவிர வேறொன்று
மில்லை.நிர்வாக ஆணையின் மூலம் காவிரி மேலாண்மை வாரி யம் அமைத்து அதனை உடனே
செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம். நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக்
காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
உண்மையில்
கிருஷ்ணா ஆற்று நீர்ச் சிக்கலில் கர்நாடகத் தின் நிலைப்பாடும் இதுதான்.
கிருஷ்ணா வழக்கில் கர்நாடகம் சார்பில் வழக்காடிய மூத்த வழக்குரைஞர் நாரிமன்
செயலாக் கப் பொறியமைவுக்கு நிர்வாக ஆணை போதும் என்றே வழக் காடினார்.
கிருஷ்ணா வழக்கில் கர்நாடகம் கோரியதைத் தான் காவிரி சிக்கலில் நாம் கோருகி
றோம்.
கிருஷ்ணா உச்ச நீதிமன்ற வழக்கு
2000 -ல் நடந்தது. அப் போதே இந்த வாதத்தை கர் நாடகம் வைத்தது.அதன்பிறகு
2002-ல் மாநிலங்களுக் கிடையி லான தண்ணீர் தகராறு சட்டத் தில் 6(2)சேர்க்கப்
பட்டது.இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு இணையான கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட
ஆணையே தீர்ப்பாயத்தின் முடிவு எனக் கூறுகிறது.
சட்ட
நிலைமைகள் இவ் வாறு இருக்க,உச்ச நீதிமன்ற காவிரி வழக்குகளின் முடிவு
தெரியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என இந்திய அரசு
கூறுவது அப்பட்டமான சட்ட மீறலாகும்.
எனவே,
இந்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து
அதன் கட்டுப் பாட்டில் மூன்று மாநிலங் களிலும் உள்ள காவிரி அணை களின்
நீர்ப்பகிர்வு மேலாண்மையைக் கொண்டு வந்து காவிரித் தீர்ப்பை முழுமை யாக
செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசும்,
தமிழகக் கட்சிகளும்,தமிழ்நாட்டு உழவர்களும் இத்திசையில் இந்திய அரசுக்கு
வலுவான அரசியல் அழுத் தங்கள் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் இடக்காலத் தீர்ப்பைப் போலவே இறுதித் தீர்ப்பும் ஏட்டுச் சுரைக்காயா கத்தான் இருக்கும். அது கரிக்கு உதவாது.
0 கருத்துகள்:
Post a Comment