கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

“ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும், வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” என, சென்னையில் இன்று(17.08.2013), மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம்மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ச்சியாக மசூதிகள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர் சிக்கலுக்கான இறுதித் தீர்வு என வலியுறுத்தியும், இன்று (17.08.2013) மாலை, மே பதினேழு இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான் கண்டன முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.
.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம்.சேரீப், எஸ்.டி.பி.ஐ(SDPI) மாநிலப் பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அன்பு தனசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர் பாசறைச் செயலாளர் திரு. சைதை கு.சிவராமன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் சிபி, தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவரது பேச்சு:
தமிழீழ விடுதலைக் கோரிக்கைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக் கட்டைகள் போடும் வேலையை இந்தியாத் தொடர்ந்து செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தம் 1987-இல் ஏற்படுத்தப்பட்டது. நம்மில் பலர், அந்த இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில், வடக்கு – கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகமாக ஏற்கப்பட்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல.
இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் தமிழர்களும், அவர்களோடு வேறுபல சமூகத்தினரும் இருக்கின்றனர். அவர்களது தாயகமே அது என்றே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் நிலவும் இனச்சமநிலை என்பது இலங்கை முழுவதுமுள்ள இனச்சமநிலையை ஒத்திருப்பதைப் போல் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில், 90 விழுக்காடு சிங்களர்கள் இருக்கின்றனர் எனில், இதே இனவிகிதத்தில் வடகிழக்குப் பகுதிகளில் இனச்சமநிலையை ஏற்படுத்த வேண்டுமென அது குறிப்பிடுகிறது. இன்றைக்கு வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிங்களமயமாக்கல் அதனடிப்படையில் செய்யப்படுவது தான்.
இவ்வாறான இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, இந்திய அமைதிப்படையின் இராணுவ உதவியோடு 1987இல் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் வெறும் 20 ஓட்டுகளே பதியப்பட்டன, அதில் 2 ஓட்டுகள் செல்லாதவை. அதில், 10 ஓட்டு பெற்று ‘வெற்றி’ பெற்றவர், இந்தியாவின் கையாளாக நிறுத்தப்பட்ட வரதராஜபெருமாள் இதைச் சொன்னார்.
“நான் முதலமைச்சராக இருந்தாலும்கூட, என்னுடைய அலுவலகத்திற்காக ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்காகக்கூட, நான் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு போட வேண்டியிருக்கிறது. இந்தப் பதவிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என இந்தியாவால் நியமிக்கப்பட்ட கையாளான வரதராஜபெருமாளே சொன்னார். சொல்லிவிட்டு, இந்திய இராணுவத்தின் உதவியுடன் தப்பி பெங்களுரில் தஞ்சம் புகுந்தார்.
இதைத்தாண்டி, இந்த சட்டத்திருத்தம் மோசடியானது என்பதற்கு என்ன சான்று வேண்டும்?
இங்குள்ள காங்கிரசுக் கட்சியினரும், ‘இந்து’ ராம் போன்றவர்களும், இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரபாகரன் நிராகரித்தது தவறு என்றும், அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திருக்கத் தேவையில்லை என்றும் பேசுகிறார்கள். காசுமீரின் சிங்கமெனப் போற்றப்பட்ட சேக் அப்துல்லா, மிசோரம் விடுதலைப் போராளி லால் டெங்கா ஆகியோரைப் போல், பிரபாகரன் தவறு செய்யவில்லை. பெங்களுரில் எம்.ஜி.ஆரை வைத்துக் கொண்டு பிரபாகரனிடம் பேசிப் பார்த்தார்கள். பிரபாகரன் முதலமைச்சர் பதவி எனது இலக்கில்லை என்றார். லால் டெங்கா இலண்டனில், “என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் பிரபாகரன் அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார்” எனப் பாராட்டிப் பேசினார். ஏனெனில், சேக் அப்துல்லா, லால் டெங்கா போன்ற மிகப்பெரும் போராளிகள் இடறி விழுந்த இடம் அது.
அண்மையில், ஐ.நா. மனித உரிமை அவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரித்து இங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், இங்கு சிலர் பேசினார்கள். அமெரிக்கத் தீாமானத்தை நிராகரித்துவிட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நிராகரிப்பு தான் வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த வெற்றிடம்தான் சரியான கோரிக்கையை வைப்பதற்கான இடமாகும். எனவே, இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தைத் தமிழர்கள் நிராகரித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையையே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
இலங்கை அரசின் இந்தச் சதிகளின் பின்னணியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்தி, இந்தியா தமிழினப் பகை நாடு. இந்தியாவிடம் வாதாடிப் புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் போராடிப் பணிய வைக்கத்தான் முடியும். ஏனென்றால், உலகத் தமிழர்களின் முதன்மைப்பகை இந்திய அரசுதான்.
ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கை என்னவோ, அதன் நீட்சிதான் அதன் வெளியுறவுக் கொள்கை. உலகமயமாக்கலை, உள்நாட்டுக் கொள்கையாக ஏற்றுக் கொண்டதால்தான், தனது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வடிவமைக்கிறது. அதே போல, உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக, பல்வேறு சிக்கல்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ள இந்தியா தான், தனது வெளியுறவுக் கொள்கை மட்டுமோ, அல்லது சோனியாகாந்தி மட்டுமோ தான் தமிழர் சிக்கலுக்குக் காரணம் என்பதல்ல. ஒட்டுமொத்த இந்தியக் கட்டமைப்பே, தமிழர்களுக்கு எதிரானப் பகைக் கட்டமைப்புதான் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்”.
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்ற இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் கோவேந்தன், செயலாளர் தோழர் வினோத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

உணவு பாதுகாப்புச் சட்டம் - தமிழினத்தின் மீது இன்னொரு தாக்குதல் - தோழர் கி.வெங்கட்ராமன்

இந்திய அரசு முன்வைத்துள்ள “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்- 2013 ” உணவு பாதுகாப்பு என்ற நல்லப் பெயரில் தமிழ் நாட்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள இன்னொரு தாக்குதலாகும் .
வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் என மக்களை இரண்டாகப் பிரித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பிரிவினரை “முன்னுரிமைக் குடும்பங்கள்” என பெயரிட்டு அழைக்கிறது இச்சட்டம்.
திட்டக்குழு வறுமைக் கோடு என்றால் என்ன என வரையறுத்துள்ள அளவை ஒட்டியே முன்னுரிமைக் குடும்பங்கள் என்பதும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் மனிதர்கள் உயிரோடும் குறைந்த அளவு உடல் ஆற்றலோடும் வாழ இந்திய நிலைமையில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு 2100 கலோரி வெப்ப ஆற்றல் தேவை என வரையறுத்துள்ளது. உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு குறைந்தது 3800 கலோரி வெப்பம் தேவை என குறிப்பிடுகிறது. ஆனால், இந்திய திட்டக்குழுவோ மனம் போன போக்கில் எந்த அறிவியல் அளவீட்டுக்கும் ஒத்துவராத வகையில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1800 கலோரி வெப்ப ஆற்றல் போதுமானது என வரையறுக்கிறது.
இந்த அளவுக்கு ஏற்ப உணவு வழங்கப்பட்டால் அதுவே இந்நாட்டு மனிதர்களின் வாழ்வுக்கு உறுதியளிக்கும் உணவு பாதுகாப்பு ஏற்பாடு என தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன் வடிவு கூறுகிறது.
இந்தக் கணக்கின் அடிப்படையிலேயே நியாய விலைக் கடைகளின் வழியாக மக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி மற்றும் கோதுமை அளவை இச் சட்டம் தீர்மானிக்கிறது.
அனைத்திந்திய அளவில் கிராமப்புற மக்களில் 75 விழுக்காட்டினரும் நகர்ப்புற மக்களில் 50 விழுக்காட்டினரும் இச் சட்டத்தின்படி சலுகை விலையில் அரிசி அல்லது கோதுமை பெறத் தகுதி உடையோர் ஆவர் என இச் சட்டத்தின் பிரிவு 3(2) வரையறுக்கிறது.
இது அனைத்திந்திய சராசரியே தவிர இதன் குறிப்பான அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அந்த வகையில் தமிழ் நாட்டு கிராமப்புற மக்களில் சுமார் 68 விழுக்காட்டினரும் நகர்ப்புற மக்களில் 32 விழுக்காட்டினரும் முன்னுரிமை குடும்பத்தினர் என குறிக்கப்படுகின்றனர்.
இந்த முன்னுரிமைக் குடும்பத்தினருக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ அரிசி கிலோ 3 ரூபாய் விலைக்கு நியாய விலைக் கடைகள் (ரேசன் கடைகள்) மூலம் வழங்கப்படும் என இச் சட்டத்தின் விதி 3 (1) கூறுகிறது.
இது தமிழ் நாட்டின் மீது – தமிழக மக்களின் உணவு உறுதிப்பாட்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெறும் தாக்குதலாகும். ஏனெனில் தமிழ் நாட்டில் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி பெற உரிமை உண்டு. இங்கு முன்னுரிமைக் குடும்பங்கள் பிறக் குடும்பங்கள் என்ற வேறுபாடு கிடையாது. அரிசி வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக ஒருகிலோ சர்க்கரை மலிவு விலையில் கூடுதலாக வழங்கப்படும். வெறும் அடையாள அட்டையாக குடும்ப அட்டை பயன்படுவது உயர் வருமானம் உள்ள சில ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆகும்.
சந்தை விலை ஒருகிலோ அரிசிக்கு 20 ரூபாய் எனக் கணக்கிட்டு அதில் ரூபாய் 12 ரூபாய் 50 காசை இந்திய அரசு மானியமாக வழங்குகிறது. தமிழக அரசு அதற்கு மேலும் 5 ரூபாய் 50 காசு சேர்த்து மானியம் வழங்கி மக்களுக்கு மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி கொடுக்கிறது.
இந்த அரிசி முழுவதும் நடுவண் தொகுப்பிலிருந்து பெறப்படுகிறது. தமிழ் நாட்டில் கொள்முதல் செய்யப்படுகிற நெல்லும் நடுவண் தொகுப்புக்காகவே வாங்கப்படுகிறன. தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்திய உணவுக் கழகத்தின் முகவாண்மை அமைப்பாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரையறையின் படி நடுவண் தொகுப்பிலிருந்து மானிய விலை அரிசி தற்போது வழங்கப்பட்டுவரும் அளவில் ஏறத்தாழ மூன்றில் ஒருபங்கு வெட்டபடும். தமிழ் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ 2 லட்சத்து 90 ஆயிரம் டன் அரிசியை மானிய விலையில் இந்திய அரசு வழங்கிவருகிறது. தேசிய உணவுப் பாதுகப்புச் சட்டம் செயலுக்கு வந்தால் 3(2)ன் படி இந்த ஒதுக்கீடு ஏறத்தாழ மாதம் 1 இலட்சம் டன் அளவுக்கு வெட்டப்படும். இந்தக் கூடுதலான ஒரு லட்சம் டன் அரிசியை தமிழக அரசு இந்திய உணவுக் கழகத்தின் சந்தை விலையான கிலோ 20 ரூபாய் கொடுத்து வாங்கினால்தான் இப்போதுள்ளபடி விலையில்லா அரிசித்திட்டத்தை தொடர முடியும். இதனால் தமிழக அரசின் உணவு மானியச் செலவு ஆண்டுக்கு சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும்.

அதுமட்டுமல்ல தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 இந்த “ 3 ருபாய் அரிசித்திட்டம் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தொடரும் “ என்றும், அதற்குப் பிறகு “அரிசிக் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மிகாமல் இருக்கும் வகையில் விலை உயர்த்தப்படும்” என்றும் அறிவிக்கிறது.
அப்படியானால் தமிழக அரசு விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை தொடர விரும்பினால் இன்னும் கூடுதலாக உணவு மானியச் செலவை அதிகரிக்கவேண்டும். என்று பொருள்.
“அரிசியோ கோதுமையோ இதில் சொல்லப்பட்ட மானிய விலையில் வழங்குவதற்கு ஏற்ப வழங்க முடியாத சூழல் ஏற்பட்டால் இதற்கானத் தொகையை பணமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ இந்திய அரசு மாநிலத்திற்கு வழங்கும். அதனை மக்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும்” என்று இச் சட்டத்தின் விதி 13 கூறுகிறது.
இதுகுறித்த கூடுதல் விளக்கத்தை இச்சட்டத்தின் விதி 18(2) (h) கூறுகிறது. இதன்படி இந்திய அரசு கொண்டுவரும் “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற மோசடியான பண மாற்றத்திட்டம் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற நேரடி பண மாற்றத் திட்டத்தை தமிழக அரசும் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இந்த மக்கள் பகைத்திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வழியாக முதுகுக்குப் பின்னால் இருந்து திணிக்கப்படுகிறது.
இவ்வாறு நேரடி பணம் வழங்க இயலாத சூழலில் உணவுச் சீட்டுகள் (உணவு கூப்பன்கள்) வழங்கப்படுமென்றும் அதைக் கொண்டு வெளிச்சந்தையில் அரிசியை வாங்கிக்கொள்ள வேண்டுமென்றும் இவ்விதி கூறுகிறது.
இது மிகக் கொடுமையானது. இக் குப்பனைக் கொடுத்து வெளிச்சந்தையில் அரிசியை வாங்கிக் கொள்ளலாம் என்றால் என்ன பொருள்?. இச்சீட்டின் மதிப்பு கிலோவுக்கு 3 ரூபாய். அவ்வாறெனில் வெளிச்சந்தையில் 1 கிலோ அரிசி 20 ரூபாய் என்றால் அதற்கு மேல் 17 ரூபாயையையும் கொடுத்தால் தான் அரிசி வாங்கிக் கொள்ள முடியும். ஒரு வேளை இக் கூப்பனின் மதிப்பு ரூபாய் 17 என்று அரசு அறிவிக்குமேயானால் அப்போதுதான் 3 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கிக்கொள்ள முடியும். வெளிச்சந்தை அரிசியின் விலை 30 ரூபாய் என்றால் கையிலிருந்து கூடுதலாக 10 ரூபாய் கொடுத்துதான் அதாவது 13 ரூபாய்க்குதான் அரிசி வாங்க முடியும்.
சிக்கல் இத்தோடு நிற்கவில்லை. இச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அளவுக்கு அரிசியோ கோதுமையோ வழங்க முடியாத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அந்தப்பற்றாக்குறை அளவுக்கு நிகரான தொகையை பணமாக இந்தியச் அரசு மாநிலங்களுக்கு வழங்கும் என தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி 31 கூறுகிறது.
இந்தத் தொகையை வைத்துக்கொண்டு தமிழக அரசு தமிழ் நாட்டு உழவர்களிடம் பற்றாக்குறையை நிறைவு செய்ய நெல்கொள்முதல் செய்ய முடியுமா என்றால் அதற்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஏனெனில் இந்த பற்றாக்குறை குறித்த அறிவிப்பு ஆண்டுத் தொடக்கத்திலோ அல்லது அறுவடை காலத் தொடக்கத்திலோ நடைமுறையில் அறிவிக்கப்படாது. அவ்வப்போதுதான் அறிவிக்கப்படும். இவ்வாறான சூழலில் வெளிச்சந்தையிலிருந்து தான் அரிசி கொள்முதல் செய்துகொள்ள வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்படும்.
நெல் கொள்முதலை பொருத்த அளவில் இந்திய உணவுக்கழகத்தின் முகவாண்மை நிறுவனமாக தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாற்றப்பட்டு விட்டதுபோல் தமிழக அரசின் நியாய விலைக் கடைகள் இந்திய அரசின் முகவாண்மை நிறுவனங்களாக மாற்றப்படும் நிலைக்கே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நெட்டித்தள்ளுகிறது. ஏனெனில் இச் சட்டத்தில் இந்திய அரசு வரையறுத்திருக்கிற அளவைத் தாண்டியோ விலைக்கு குறைவாகவோ ஒரு மாநில அரசு வழங்க விரும்பினால் அத்திட்டத்தை அம்மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்துதான் செய்துகொள்ள வேண்டும் என இச் சட்டத்தின் விதி 40(2) உறுதிபடக் கூறுகிறது.
மொத்தத்தில் உணவு வழங்கல் குறித்த மாநில உரிமையைப் பறிக்கிற - தமிழ் நாட்டு மக்களின் குறைந்தபட்ச உணவுத் தானிய உறுதிப்பாட்டையும் சீர்குலைக்கிற சட்டமாகவே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் விளங்குகிறது.

இதில் திருத்தங்கள் செய்து செப்பனிட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே இந்திய அரசு முன் வைத்துள்ள “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 “-ஐ தமிழக அரசும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

13 ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும் - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்’ என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான ‘அறப்போர்’ ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார்.
2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் வித மாக, ‘அறப்போர்’ ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப் படமான ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், ‘அறப்போர்’ படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு விழா 28.07.2013அன்று மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னதாக, ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன் தலைமையேற்றார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங் கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் ம.செந்தமிழன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இயக்குநர் அமீர் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சென்னை செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
தலைமையுரையாற்றிய, தோழர் கி.வெங்கட்ராமன் பேசியதாவது:
அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்துக்களம் கண்ட தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆவணப் படுத்தும் விதமாக ‘அறப்போர்’ ஆவணப்படம் உருவாக் கப்பட்டிருக்கிறது. 1965இல் தமிழகத்தையே புரட்டிப் போட்ட, இந்தி எதிர்ப்புப் போராட்டம் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அது போன்ற குறை களை இல்லாமல் செய்வதற்காக, நமது கண் முன்னே நிகழ்ந்த மாணவர் போராட்டத்தை இங்கு ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். அதற்கு, முதலில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகமாணவர்களின் போராட்டம், எவ்வளவு வீரியமான தாக இருந்தாலும் அது இன்னும் தனது இலக்கை அடையவில்லை. நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, அமைதி நிலவும் இந்த இடைப் பட்ட காலத்தை மாணவர்கள் அடுத்தக் கட்டப் போராட்டங்களுக்கான தயாரிப்புக் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது கொள்கைகளில் முழுமையானத் தெளிவு பெற வேண்டும்.
அதில் முதலாவதாக இருக்க வேண்டியது, இந்திய அரசு தமிழி னப் பகை அரசு என்ற புரிதல்தான். தமிழர்களுக்கென ஒரு நாடு அமைவதை இந்திய அரசு ஒருகாலத்திலும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது, உள்நாட்டில் என்ன கொள்கை நிலவுகிறதோ அதன் நீட்சியாகவே இருக்க முடியும். உள்நாட்டில், தமிழ்நாட்டிற்கு எதிராக அனைத்து சிக்கல்களிலும் எதிராக நிற்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாகத் தான் தமிழீழ விடுதலைக்கு எதிராக நிற்கிறது என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். தமிழர்களுக்கு எதிரான அனைத்து சிக்கல்களிலும், இந்திய அரசு முதன்மை எதிரியாக வந்து நிற்க, அதன் ஆரிய இனவெறித் தமிழினப் பகையே முக்கியக் காரண மாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத் தில், இந்தியாவை பாரத் (BHARAT) எனக் குறிப்பிடுகிறார்களே? இது எங்கிருந்து வந்தது? ஆரியப் பார்ப் பனர்களின் வரலாற்றிலிருந்து எடுத் தாண்ட பெயர் அது. ஆரியத்தின் அடையாளம் இந்திய அரசின் அசோகச் சக்கர சின்னமாக, ஆரிய பட்டாவாக, பத்மபூசனாக, பத்ம சிறீயாக வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் இதைக் காணத் தவறுகிறோம். இவையெல்லாம் தற்செயல் நிகழ் வல்ல. தமிழர்களுக்கு எதிரான ஆரியத்தின் பகைவெறி, இன்றும் இந்திய அரசு மூலமாகத் தொடர் கிறது. இது தான் நாம் பெற்றாக வேண்டிய முதல் கொள்கைத் தெளிவு.
இரண்டாவதாக, வல்லரசுகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ் வொரு உத்தியைக் கொண்டு நமது போராட்டங்களை நசுக்குவதற்கான முயற்சிகளில் இருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் இன் றைக்கு ஒரே புள்ளியில் நின்று செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரமளிக்காத மோசடியான 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறை வேற்ற வேண்டுமெனக் கூறும் விவாதங்களுக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது. அதே போல, அமெரிக்கா வேறொரு முயற்சியில் இருக்கிறது.
அண்மையில் 2013 சூலை 23 அன்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன் னாள் வெளியுறவுத் தனித்தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்குஅளித்துள்ளனர். “அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பாதுகாக் கும் பொறுப்பு குறித்த சிக்கலும்” என்ற தலைப்பிலான அறிக்கை இது.
இந்த அறிக்கை இலங்கை பற்றியும் பேசுகிறது. அதில் 2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட்- வில்லியம்சன் அறிக்கை இனி “இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்து கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலை பாடும் அமெரிக்க வல்லரசின் “நல்லிணக் கத்திற்குத் துணை புரிவது” என்ற நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13ஆவது சட்டத் திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட் டுச் சதிவலை விரிக்கப்படுகிறது.
13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற போதும், அதைக் கூட ஏற்கமறுக்கிறது சிங்களம். போருக்குப் பின்னால், தமிழீழப் பகுதிகளில் மிகப் பெரும் பிரச்சினையாக இருப்பது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேள்வி கேட்பாரற்ற, மிகத்தீவிரமான சிங்களக் குடியேற்றமாகும். இதற்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஏற்கெனவே அங்கீகாரம் வழங்கியி ருப்பது இங்கு பலரும் அறியாத செய்தி.
13ஆவது சட்டத்திருத்தத்தில், தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, கவனமாக தமிழர்களும் பிற இனத்தவர்களும் வாழும் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, அங்கு பிற இனத்தவர்களும் வாழ்கிறார்கள் எனக் காட்டுவது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அப்பகுதிகளில் தீவிரப்படுத்துவதே இதன் நோக்கம். அரசாங்கம், வடக்குகிழக்குப் பகுதிகளில் ஏழைகளுக்கு நிலத் தைப் பகிர்ந்தளிக்கும் போது இலங்கை முழுவதுமுள்ள இனத்த வர்களின் விகிதாச் சாரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறது. அதன்படி, சிங்களர்களுக்கு நிலங்கள் வழங்க வழிவகை செய்யப் பட்டது. இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது.
இதை நாம் மட்டும் சொல்ல வில்லை, 13ஆவது சட்டத் திருத்தத்தை அமலாக்குகிறோம் எனச் சொல்லிக் கொண்டு, வரதராஜ பெருமாள் என்ப வரை இந்திய இராணுவ வண்டியில் கொண்டு வந்து தமிழர் மாகாணத்தின் முதல் வராகப் பதவியேற்க வைத்தார் களே, அவர் சொன்னார். இந்திய அமைதிப்படை திரும்பச் செல்லும் போது, அவரும் இந்திய இராணு வத்துடன் இணைந்து இந்தியா விற்கு ஓடினார். அவர் சொன்னார், எனது அலுவலகத்தில் ஒரு நாற் காலி வாங்குவதற்கக் கூட, ஜனாதி பதி மாளிகைக்கு விண்ணப் பித்துக் காத்திருக்க வேண்டும், எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனச் சொன் னார்.
இன்றைக்கு டெசொ சார்பில் பேசும் தி.மு.க.வினர் என்ன சொல் கிறார்கள்? எங்களது இலக்கு என்பது தமிழீழம் தான் என்றா லும், இடைக் காலத்தில் தமிழீழத் தமிழர்கள் மூச்சு விடுவதற்காக 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றக் கோருகிறோம் என் கின்றனர். முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஒரு முதல்படிதான் என்றும் சொல்கின்றனர். சட்டப் பேரவையில், தமிழீழம் அமையப் பொதுவாக் கெடுப்பு வேண்டு மெனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் செயலலிதாவும் இதையேதான் கருத்தாகக் கொண் டுள்ளார். செயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் எழுதியதை, அ.தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் காண்பிக்கிறார்கள்.
இந்தப் பெரியக் கட்சிகள், 13ஆவது சட்டத் திருத்தம் அதிகா ரப் பகிர்வுக்கான முதல் படி என் கின்றன. இதை யார் சொன்னது? இலங்கை அரசு சொன்னதா? இந்திய அரசு சொன்னதா? இலங்கை - இந்திய அரசுகளைப் பொறுத்தவரை, 13ஆ வது சட்டத் திருத்தம்தான் இறுதித் தீர்வு என்கின்றனர். ஆனால், பெரியக் கட்சிகள்தான் இவ்வாறு கூறி ஏமாற்றுகின்றனர்.
எப்படி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் மோசடியா னது என தமிழக மாணவர்கள் போராடினார்களோ, அதைப் போல 13ஆவது சட்டத் திருத்தம் மோசடி யானது, அதை ஏற்க மாட் டோம் எனப் போராட வேண்டும். அமரிக்கத் தீர்மானத்தை எரித்துப் போராடியதைப் போல, 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்.
இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்புக் கால எல்லையாக, இலங் கையில் காமன் வெல்த் மாநாடு நடக்க விருப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். காமன் வெல்த் மாநாட்டை, ஒரு நாட்டில் நடத்து வதை நாம் சாதாரணமாக, பொதுப் பார்வையுடன் பார்த்து விட முடியாது. எங்கு காமன் வெல்த் மாநாட்டு நடக்கிறதோ, அதன்பின், 2 ஆண்டு களுக்கு அந்த நாட்டு அதிபர்தான் காமன் வெல்த் கூட் டமைப்புக்குத் தலைவராக இருப் பார். அதனால் தான், இந்திய அரசு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தி, இராசபக் சேவுக்கு முடிசூட்டி அழகுப் பார்க்க விரும்புகிறது.
இன்றைக்கு ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் இராசபக் சேவையே, தமிழினப் படுகொலைக் காக நாம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடிய வில்லையெனில், நாளை அவர் காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவரானால் என்ன செய்வது? அவரை ஒன்றும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், இந்திய அரசு திட்டமிட்டு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துகிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்!
தமிழீழ விடுதலைக்கு எதிரான இந்தியாவின் செயல் பாடுகள் வெறும் பொருளியல் ஆதிக்க நலன் களுக்காக மட்டுமே இல்லை. இந்தி யாவின் தமிழினப் பகையே அதைத் தீர்மானிக்கிறது. இந்தியாவின் பொருளியல் நலன்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழீழ விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்பக் கூறினார்கள். சுதுமலை யில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய வரலாற் றுச் சிறப்பு மிக்க உரையில், தெற் காசியாவில் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை ஏற்போம் எனத் தெரிவித்தார்.
புலிகளின் கடற்பிரிவான, கடற் புலிகள் வலுவாக இருந்தக் காலத் தில், அவர்கள் கட்டுப் பாட்டில் இருந்த கடற்பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் என எந்த நாடும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் மதியுரைஞ ரான அண்டன் பாலசிங்கம் ஒருபடி மேலே போய், மேற்காசி யாவில் எப்படி அமெரிக்காவிற்கு இசுரேல் பாதுகாவலனாக இருக்கி றதோ, அதே போல் தெற்காசி யாவில் இந்தியாவின் பாதுகாவல னாக தமிழீழம் இருக்கும் என்றார். இதில் எங்களுக்கு பல கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பொருளியல் நல னுக்கு எதிராக நிற்கமாட்டோம் எனப் புலிகள் அறிவித்திருப்பதை எடுத்துக் காட்டவே இதைச் சொல் கிறேன்.
இப்படி இந்தியாவின் நலன் களுக்கு ஆதரவாக இருந்த புலி களை, இந்திய அரசு அடியோடு ஒழித்தது. தமிழர்களை இனப்படு கொலை செய்தது. ஏன்? காரணம், இந்திய அரசின் முதன்மையான தமிழினப் பகை. அமெரிக்காவிற்கு வேண்டுமானால் புவிசார் நலன்கள் இருக்கலாமேத் தவிர, இந்திய அரசு தமிழீழ இனப்படுகொலையை நடத்த உதவியது அதன் தமிழினப் பகை யையே காட்டுகிறது. இதைப் புரிந்து கொண்டு தான் நாம் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிட வேண்டும்!”.
இவ்வாறு தோழர் கி.வெங்கட் ராமன் பேசினார்.
திரளான உணர்வாளர்களும், மாணவர்களும், பத்திரிக் கையாளர் களும் திரண்டிருந்த இந்நிகழ்வின் முடிவில், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘அறப் போர்’ ஆவணப்படம் மீண்டும் திரையிடப் பட்டது.

0 கருத்துகள்:

13 ஆவது சட்டத்திருத்தமும் எதிர்கால செயல்திட்டமும் - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழீழச் சிக்கலை அதன் விடுதலை இலக்கிலிருந்து திசைமாற்றி சிதறடிக்க ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வரிசையில் இப்போது இலங்கையின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை மையமாக வைத்து திசை திருப்பும் அரசியல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன.
இராசீவ்காந்தி செயவர்த்தனா கையொப்பமிட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியதாக இந்திய ஏகாதிபத்திய அரசு சொல்லி வந்த பொய் முழக்கத்திற்கு ஈழத் தமிழர்களையும், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களையும் அணி திரட்டும் முயற்சியாக கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
13ஆவது சட்டத்திருத்ததிற்கு எந்த குலைவும் வந்து விடாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என கலைஞர் அறிக்கைமேல் அறிக்கைவிடுகிறார்.
13ஆவது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க இந்தியப் பிரதமர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தனி ஈழம் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் செயலலிதா கடிதம் எழுதுகிறார். அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணக்கமான பதில் கடிதம் அனுப்பியவுடன் தனது கோரிக்கையின்படி இந்திய அரசு செயல்படுவதாக தமிழக முதலமைச்சர் விளம்பரப் படுத்துகிறார். பிரதமரின் கடிதம் மனநிறைவு அளிப்பதாக கலைஞரும் அறிக்கை விடுகிறார்.
இந்த 13 ஆவது திருத்தததை ஏற்றுக்கொள்ளாமல் தமிழீழத் தனி அரசு கோரிக்கை யில் பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது, இனியாவது ஈழத்தமிழர்கள் இதனை ஏற்று தமிழர் சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரசாரும் ஆரிய பார்ப்பனிய ஊடகங்களும் முழு வீச்சோடு கருத்துப்பரப்பி வருகின்றன.
13 ஆவது திருத்தத்தில் ஈழத்தமிழர் இனசிக்கலுக்கு தீர்வு இல்லை, தீர்வு நோக்கிய முதல்படியாகவும் அது அமையவில்லை என்பதை இதற்கு முன்னும் விளக்கியி ருக்கிறோம். இப்போது மீண்டும் அதனை வலியுறுத்துவதுடன் இப்போது இத்தீர்வு வலியுறுத்தபடுவதற்கான பின்னணியை விளக்குவதற்காகவே இக்கட்டுரை எழுதப்படு கிறது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய - சிங்கள ஆரியக் கூட்டணி நேரடியாக படை வகையில் கைகோத்து களம் இறங்கிய இராசீவ்காந்தி - செய வர்த்தனா ஒப்பந்தத்தில் தொடங்கியது.
இந்த ஒப்பந்தத்திற்கு இசைய இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஒன்று செய்யப்பட்டது. அதுவே 13 ஆவது சட்டத்திருத்தம் எனப்படும் 1987 ஆகஸ்ட்டில் செய்யப்பட்ட இந்த 13 ஆவது திருத்தமும் அதனடிப்படையிலான மாகாண சபை சட்டமும்தான் இப்போது தீர்வாகப் பேசப்படுகிறது.
13 ஆவது திருத்தமும் மாகாண அவைச் சட்டமும் இலங்கையின் ஒற்றை ஆட்சித் தன்மையை மாற்றி அங்கே ஓர் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கிவிடவில்லை. இலங்கையின் அரசமைப்பு சட்ட விதி-2 “ஸ்ரீலங்கா குடியரசு ஓர் ஒற்றையாட்சி அரசாக இருக்கும்” என்று உறுதிபடக் கூறுகிறது. இதில் எந்த மாற்றமும் திருத்தமும் செய்யப்படவில்லை. அல்லது பிரான்சு, ஸ்பெயின் போன்ற ஒற்றை ஆட்சி நிலவும் நாடுகளில் உள்ளது போல அதிகாரப் பரவல் கூட நடந்துவிடவில்லை. வடக்கு – கிழக்கு மாகாணம் ஈழத்தமிழர்களின் வரலாற்று தாயகம் என்பது கூட ஏற்கப்பட வில்லை.
இலங்கை நாடாளுமன்றம் என்பது ஒரே அவைதான் மக்களவை, மாநிலங்களவை என்ற இரண்டு அவைகளைக் கொண்டதாக திருத்தி அமைக்கப்படவும் இல்லை.
சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை அதிகாரங்கள் மாகாண அரசுக்குக் கிடையாது. இத்திருத்தத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட 9 ஆவது அட்டவணை மாகாண அவையின் அதிகாரத்திற்குட்பட்ட இனங்களை வரிசைப்படுத்தி பட்டியல்-1 (list-1) என்று அறிவித்திருக்கிறது அதன் படி இலங்கை முழுவதற்கும் காவல் துறை ஆய்வாளர் நாயகம் IGP ஒருவரே. அவருக்கு கீழ்தான் இலங்கையின் ஒட்டுமொத்த காவல் துறையும் இயங்கும் அவருக்குக் கட்டுப்பட்டு மாகாணத்திற்கு துணை ஆய்வாளர் நாயகம் (DIG) இருப்பார். இவரை நியமிப்பதும் இலங்கை நடுவண் அரசே.
இலங்கை அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணையில் இணைப்பு -2 ன்படி “மாகாணத்தின் நிலம் இலங்கை குடியரசு ஆட்சிக்கு உரிமை உடையதாகவே இருக்கும். அங்கு ஏற்படுத்திக்கொள்ளும் நிலபறிமாற்றங்களும் இலங்கைக் குடியரசு ஆட்சி அதிகாரத்திற்குட்டபட்டதே” என்று கூறுகிறது.
இந்தியாவில் நிலம், மற்றும், நில விற்பனை, நில பரிவர்த்தனை ஆகியவை மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த நிலை கூட 13 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படவில்லை.
ஈழத்தமிழர்களின் வாழ்வை பொருத்தளவில் காவல்துறை அதிகாரமும், காணி(நிலம்) தொடர்பான அதிகாரமும் உயிரானவ. இவை இரண்டும் மாகாண அரசுக்கு கொடுக்கப்படவில்லை. அங்கு உள்ள சிக்கலே சிங்களக் காவல் துறை இனவெறி காடையர்களாக செயல்படுகிறது என்பதாகும். அதே போல் இலங்கை அரசு தமிழீழ தாயகத்தில் அதாவது வடக்கு கிழக்கில் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி அங்குள்ள நிலங்களை சிங்களர்களுக்கு வழங்குவது என்பது இன்னொரு முக்கியச் சிக்கல் இவை இரண்டுமே சிங்கள அரசிடம் தொடர்ந்து இருப்பது தீர்வை நகர்த்திச் செல்கிற படி நிலையாகக்கூட அமைய முடியாது.
அதுமட்டுமின்றி 13 ஆவது திருத்தப்படி உருவாக்கப்பட்ட மாகாண அவைக்கும் மாகாண முதலமைச்சருக்கும் வடக்கு கிழக்கு மாகாணம் தொடர்பாக வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) போடும் அதிகாரம் கிடையாது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தின் மீது ஒரு சிறிய வரி, உள்ளூரில் பயணிக்கும் வாகனங்கள் மீது வரி,வீட்டுவரி என மிக அற்பமான வரி விதிக்கும் அதிகாரம் மட்டுமே மாகாண அரசுக்கு வழங்கப்பட்டது. மாகாண செலவுக்கென்று இலங்கையின் நடுவண் அரசு நிதி அளிக்கிறது. அதுதான் மாகாணத்திற்கான மிகப் பெரும்பான்மையான நிதி.
இந்த நிதியைக் கூட மாகாண முதலமைச்சர் அல்லது அவரது அமைச்சரவை கையாள முடியாது. எந்த செலவு செய்வதாக இருந்தாலும் குடியரசுத் தலைவரின் இசைவு பெற வேண்டும் என இலங்கையின் அரசமைப்பு சட்ட விதி 19(14) வரம்பு விதிக்கிறது.
சரி. மாகாண அரசு விதித்து வசூலிக்கிற திரையரங்க வரி போன்றவற்றையாவது மாகாண முதலமைச்சர் கையாள முடியுமா என்றால் அதற்கும் அனுமதி கிடையாது. இலங்கை அரசமைப்புச் சட்ட விதி 24(1) ‘மாகாண விதியை ஆளுநர் அனுமதி பெற்று முதலமைச்சர் கையாள வேண்டும்’ எனக்கூறுகிறது. நம் ஊர் ஊராட்சி மன்றத் தலைவரை விடவும் கீழான அதிகார நிலையில் அங்கு மாகாண முதலமைச்சர் வைக்கப்பட்டார்.
குருதி சிந்தி உயிரீகம் செய்து விடுதலை வேண்டி நின்ற தமிழீழ மக்கள் மீது இதைத்தான் தீர்வு என்று 13 ஆவது சட்டத் திருத்தம் திணித்தது. வீர சுதந்திரம் வேண்டி நின்ற விடுதலைப்புலிகள் இதை ஏற்க மறுத்ததில் வியப்பில்லை.
இந்த மாகாணச் சட்டத்தின் படி வடக்கு கிழக்கு மாகாணத்தில் மாகாண அவைக்கான தேர்தலையும் நடத்தினார்கள். அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்ததை ஏற்று கிட்டத்தட்ட தமிழீழ மக்கள் அனைவருமே வாக்களிக்க மறுத்தனர். ஆயினும் எட்டப்பன் வரதாஜ பெருமாள் விரல் விட்டு எண்ணக்கூடிய வாக்குகளைப் பெற்று வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக திணிக்கப்பட்டார். இந்தியப் படையின் நிழலில் முதலமைச்சராக உலாவந்த அந்த வரதராஜ பெருமாள் இந்திய அமைதிப்படை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் தோற்று 1.3.1990 அன்று திரும்பிய போது அதன் கடைசி விமானத்தில் அவரும் ஏறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அவ்வாறு இந்தியாவிற்கு ஓடிவருவதற்கு முன்னால் அந்த பொம்மை முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கூறியது கவனம் கொள்ளத் தக்கது.
அவர் சொன்னார் “நான் இந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஆனால் என் அலுவலகத் திற்கு ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்குக் கூட இலங்கைக் குடியரசுத் தலைவரின் இசைவும் நிதியும் பெற வேண்டியிருக்கிறது” என்றார். அதனால் இந்தியாவிற்கு வருவதற்கு முன் ஒரு தலைபட்சமாக தமிழீழ விடுதலையை அறிவிப்பதாக வரதராஜ பெருமாள் கூறினார்.
இதனால் அன்றைய இலங்கை பிரதமர் பிரேமதாசா வடக்கு கிழக்கு மாகாணங்களை கலைப்பதாக அறிவித்தார்.
இந்திய அரசு வலியுறுத்தும் 13 ஆவது சட்டத்திருத்ததின் நிலையும் அதன் வழியாக உருவாக்கப்பட்ட மாகாண அரசின் அதிகார நிலையும் இதுதான்.
அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லற்கரிய மாபெரும் ஆற்றலாக ஓங்கி இருந்ததால் அவர்களை அழிப்பதற்கு இந்தியாவை இணைத்துக் கொள்வதற்கு ஓர் உத்தியாக 13 ஆவது திருத்தத்தை சிங்கள பெரும்பான்மை நாடாளுமன்றம் அன்றைக்கு ஏற்றுக்கொண்டது.
இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாததால் இன்றைய சிங்கள பெரும்பான்மை நாடாளுமன்றம் படுசொத்தையான 13 ஆவது திருத்தத்தைக் கூட ஏற்க முடியாது என்று கூறுகிறது.
சிங்களம் எந்த ஒரு சிறு உரிமையையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்காது, ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களோடு ஓர் அரசமைப்பின் கீழ் சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் இதில் பெற வேண்டிய படிப்பினையே தவிர 13 ஆவது திருத்தம் சிறப்பானது என்று வாதிடுவது அல்ல.
இது இப்போது 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்துகிற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருமுகப்பட்ட ஓர் விடுதலை இயக்கம் தமிழீழத் தாயகத்தில் இல்லாத சூழலை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் அடிமை நிலையை நிரந்தரமாக்குவதற்கு 13 ஆவது சட்டத்திருத்தத்தை தீர்வாக திணிக்க முயல்கிறார்கள்.
“ஈழத்தமிழர்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் டெசோவின் அடிப்படை நிலைபாடு என்றாலும் இடைக்கால தீர்வாக 13 ஆவது சட்டத்திருத்ததை செயல்படுத்துமாறு வலியுறுத்துகிறோம்” என டெசோ தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார்.
“தமிழீழத்திற்கான கருத்துவாக்கெடுப்பு வேண்டும் என்ற சட்ட மன்றத் தீர்மானத்தை நினைவுபடுத்தும் அதே வேளை 13 ஆவது திருத்தத்தை செயல்படுத்த இந்திய அரசு ஆவனம் செய்ய வேண்டும்” என செயலலிதா தனது பங்கிற்கு நாடகமாடுகிறார்.
உண்மையில் கருணாநிதிக்கு இந்திய அரசின் நிலைபாட்டைத் தவிர வேறு நிலை பாடு கிடையாது என்பதை வேறொரு சிக்கலில் அவர் அளித்த அறிக்கையே ஒப்புதல் வாக்கு மூலமாக விளக்கும். குசராத் முதலமைச்சர் மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பட்ட கடிதத்தில் தி.மு.க. எம்பிக்கள் கையெழுத்திட வில்லை என விளக்கி 25.7.2013 அன்று அறிக்கை வெளியிட்ட கருணாநிதி “தி.மு.க. வை பொருத்தவரை மத்திய அரசின் எந்த ஒரு வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன் உள் விவகாரங்களில் குறிக்கிடுவதில்லை என்பதை நான் பல முறை குறிப்பிட்டுருக்கிறேன்” என்று கூறுகிறார். எப்போதுமே தி.மு.க.வின் நிலைபாடு இதுதான். இலங்கை அரசு குறித்த இந்திய அரசின் நிலைபாட்டை பொருத்தும் இதே நிலைதான்.
இது இந்திய அரசின் நிலைபாடு மட்டுமல்ல. அமெரிக்க வல்லரசின் நிலைபாடும் இதுதான்.
அண்மையில் 2013 சூலை 23 அன்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித் தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அளித்துள்ளனர். “அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பாதுகாக்கும் பொறுப்பு குறித்த சிக்கலும்” என்ற தலைப்பிலான அறிக்கை இது.
ஐ.நா.மன்றம் 2005 ஆம் ஆண்டு “பாதுகாக்கும் பொறுப்பு” (Responsibility To Protect- R2P) என்ற சட்டத் தீர்மானத்தை இயற்றியது.
“ஒவ்வொரு உறுப்புநாடும் இனக்கொலையிலிருந்தும் போர்க்குற்றங்களிலிருந்தும் இனத்தூய்மையாக்கலிலிருந்தும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களிலிருந்தும் தங்கள் குடிமக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன” என்று இத்தீர்மானம் வலியுறுத் துகிறது.
இவ்வாறு செய்யத் தவறும் நாடுகளை அறிவுறுத்துவது அது இயலாத போது அந்நாடுகள் இத்தீர்மானத்தின்படி நடந்துகொள்வதற்கு நெருக்கமாக துணை செய்வது அதுவும் இயலாத சூழலில் ஐ.நா.வின் ஒப்புதலோடு படை நடவடிக்கை உள்ளிட்ட நேரடி தலையீட்டில் இறங்குவது என இதன் செயலாக்கத்திற்கான படி நிலை வழி காட்டலையும் ஐ.நா.வின் இத்தீர்மானம் வழங்குகிறது. இத்தீர்மானத்தின் படி எந்தந்த நாடுகள் தொடர்பாக அமெரிக்கா செயல்படவேண்டும் என எடுத்துரைப்பதே ஆல் பிரைட் வில்லியம்சன் அறிக்கையாகும்.
இந்த அறிக்கை இலங்கை பற்றியும் பேசுகிறது. அதில் 2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட் வில்லியம்சன் அறிக்கை இனி “ இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்துகிறது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலைபாடும் அமெரிக்க வல்லரசின் நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13 ஆவது சட்டத்திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட்டுச் சதி வலை விரிக்கப்பட்டிருக்கிறது.
2009 க்குள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது 2011 க்குள் தமிழீழ விடுதலை கோரிக்கையை கொன்று புதைப்பது என்ற பீக்கான் திட்டம் (beacon project) சற்று தாமதமாக செயலாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சப்பான், இந்தியா, நார்வே, உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைக்கு எதிராக தீட்டிய திட்டமே பீக்கான் திட்டம் என்பதை இதற்கு முன் பல முறை விளக்கியிருக்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத அமைப்பு என வரையறுத்து தடை செய்த முதல் மேற்குலக நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கை பிளவுப்படக் கூடாது அதை எப்பாடு பட்டேனும் தடுக்க வேண்டும் என்பது அமெரிக்க- இந்திய வல்லரசுகளின் உறுதியான திட்டமாகும்.
வீதிதோறும் அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து தொண்டை கிழிய முழக்க மிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவின் விருப்பத்தைதான் தமிழீழச் சிக்கலுக்கான தீர்வாக முன் வைக்கிறது.
அமெரிக்க - இந்திய அச்சும் அவர்களது தமிழ்நாட்டு கங்காணிகளான டெசோவும், செயலலிதாவும், இந்த அச்சின் இடதுசாரி தளபதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியும் ஒரே குரலில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13 ஆவது திருத்தம் என்று வலியுறுத்துவதற்கான காரணம் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்களிடமும் தமிழீழ கருத்துவாக்கெடுப்புக் கோரிக்கை வலுவடையாமல் சிதைப்பதற்குதான்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுநலவாய நாடுகளின் (காமன்வெல்த்) உச்சிமாநாடு நடக்ககூடாது என்றும், அவ்வாறு நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் கோரிக்கை தமிழர்களிடம் வலுப்பெற்று வரும் காலமிது. இனக்கொலைக் குற்றவாளி இராசபட்சே கும்பல் பன்னாட்டு குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் வளர்ந்து வருகிறது. இச்சூழலில் கொழும்புவில் காமன் வெல்த் மாநாடு நடந்து அதன் விளைவாக வரும் இரண்டு ஆண்டுகளுக்கு காமன் வெல்த் அமைப்பின் தலைவராக இராசபட்சே அமர்த்தப்பட்டால் பன்னாட்டு விசாரணையிலிருந்து அவரை பாதுகாத்துவிடலாம் என இந்தியா கணக்குப் போடுகிறது.
கடந்த மார்ச்சு ஏப்ரலில் நடந்த மாபெரும் தமிழ் மாணவர் எழுச்சி மீண்டும் தலை தூக்கி தமிழீழ கருத்துவாக்கெடுப்பு, இராசபட்சே மீது பன்னாட்டு விசாரணை என்பது வலு பெற்றுவிடக் கூடாது என்பதில் தமிழீழ எதிரிகள் அனைவரும் ஒரே அணியில் நிற்கிறார்கள்.
தமிழீழம் தொடர்பான கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் போன்றவற்றிற்கு, செயலலிதா அரசு தடைபோடுவதன் பின்னணி இதுதான்.
13 ஆவது திருத்தத்தை அப்படியே ஏற்க முடியாது என பசில் இராசபட்சே கொக்கரிப் பதை வைத்து 13 ஆவது திருத்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஏதோ ஆகப்பெரிய தீர்வு இருக்கிறது என்று படம் காட்ட இந்திய அரசும் அதன் கங்காணிகளும் முயல் கிறார்கள். தமிழீழத்திற்கான கருத்துவாக்கெடுப்பு என்பதை அரசியல் விவாத அரங்கத்திலிருந்து வெளியே தள்ளுவதற்கான சதியே இது.
இதற்னை சம்பந்தம் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்க வைப்ப தற்கு இந்திய அரசு அழுத்தங்கள் கொடுத்து வருகிறது. இக்கூட்டணியின் சார்பில் வடக்கு மாகாணத் தேர்தலில் வேட்பாளாராக நிறுத்தப்பட்டுள்ள நீதிபதி விக்னேசுவரன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூடுமான வரை அதிகாரம் பெறுவது தான் தீர்வு என பேசத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் ஈழத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழீழ மக்களிடம் ஓர் சிதைவை ஏற்படுத்த இந்த சதிகாரர்கள் முயல்கிறார்கள்.
இந்தச் சதியை முறியடித்து தமிழீழத்திற்கான கருத்துவாக்கெடுப்பு, பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேயை நிறுத்துவது என்ற முழக்கங்களை அரசியல் அரங்கத்தில் இது தொடர்பான மையபொருளாக நிலை நிறுத்த ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர் களும் விழிப்போடு இருந்து விரைவாகச் செயலாற்ற வேண்டும்.
காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக்கூடாது என்பதை உடனடிச் செயல் முழக்கமாக முன் வைத்து நமது இலக்கு நோக்கிய அரசியல் நகர்வுகள் முன்னெடுக் கப்பட வேண்டும்.

0 கருத்துகள்: