இந்திய அரசு முன்வைத்துள்ள “தேசிய உணவு
பாதுகாப்புச் சட்டம்- 2013 ” உணவு பாதுகாப்பு என்ற நல்லப் பெயரில் தமிழ்
நாட்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள இன்னொரு தாக்குதலாகும் .
வறுமைக்
கோட்டுக்கு மேல் உள்ளோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் என மக்களை
இரண்டாகப் பிரித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பிரிவினரை “முன்னுரிமைக்
குடும்பங்கள்” என பெயரிட்டு அழைக்கிறது இச்சட்டம்.
திட்டக்குழு வறுமைக் கோடு என்றால் என்ன என வரையறுத்துள்ள அளவை ஒட்டியே முன்னுரிமைக் குடும்பங்கள் என்பதும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்திய
மருத்துவ ஆய்வு நிறுவனம் மனிதர்கள் உயிரோடும் குறைந்த அளவு உடல்
ஆற்றலோடும் வாழ இந்திய நிலைமையில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு 2100 கலோரி
வெப்ப ஆற்றல் தேவை என வரையறுத்துள்ளது. உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு
குறைந்தது 3800 கலோரி வெப்பம் தேவை என குறிப்பிடுகிறது. ஆனால், இந்திய
திட்டக்குழுவோ மனம் போன போக்கில் எந்த அறிவியல் அளவீட்டுக்கும் ஒத்துவராத
வகையில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1800 கலோரி வெப்ப ஆற்றல் போதுமானது என
வரையறுக்கிறது.
இந்த அளவுக்கு ஏற்ப
உணவு வழங்கப்பட்டால் அதுவே இந்நாட்டு மனிதர்களின் வாழ்வுக்கு
உறுதியளிக்கும் உணவு பாதுகாப்பு ஏற்பாடு என தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட
முன் வடிவு கூறுகிறது.
இந்தக் கணக்கின்
அடிப்படையிலேயே நியாய விலைக் கடைகளின் வழியாக மக்களுக்கு வழங்கவேண்டிய
அரிசி மற்றும் கோதுமை அளவை இச் சட்டம் தீர்மானிக்கிறது.
அனைத்திந்திய
அளவில் கிராமப்புற மக்களில் 75 விழுக்காட்டினரும் நகர்ப்புற மக்களில் 50
விழுக்காட்டினரும் இச் சட்டத்தின்படி சலுகை விலையில் அரிசி அல்லது கோதுமை
பெறத் தகுதி உடையோர் ஆவர் என இச் சட்டத்தின் பிரிவு 3(2) வரையறுக்கிறது.
இது
அனைத்திந்திய சராசரியே தவிர இதன் குறிப்பான அளவு மாநிலத்திற்கு மாநிலம்
வேறுபடும். அந்த வகையில் தமிழ் நாட்டு கிராமப்புற மக்களில் சுமார் 68
விழுக்காட்டினரும் நகர்ப்புற மக்களில் 32 விழுக்காட்டினரும் முன்னுரிமை
குடும்பத்தினர் என குறிக்கப்படுகின்றனர்.
இந்த
முன்னுரிமைக் குடும்பத்தினருக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ
அரிசி கிலோ 3 ரூபாய் விலைக்கு நியாய விலைக் கடைகள் (ரேசன் கடைகள்) மூலம்
வழங்கப்படும் என இச் சட்டத்தின் விதி 3 (1) கூறுகிறது.
இது
தமிழ் நாட்டின் மீது – தமிழக மக்களின் உணவு உறுதிப்பாட்டின் மீது
தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெறும் தாக்குதலாகும். ஏனெனில் தமிழ் நாட்டில்
குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி பெற உரிமை
உண்டு. இங்கு முன்னுரிமைக் குடும்பங்கள் பிறக் குடும்பங்கள் என்ற வேறுபாடு
கிடையாது. அரிசி வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் குடும்ப அட்டை
தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக ஒருகிலோ சர்க்கரை மலிவு விலையில் கூடுதலாக
வழங்கப்படும். வெறும் அடையாள அட்டையாக குடும்ப அட்டை பயன்படுவது உயர்
வருமானம் உள்ள சில ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆகும்.
சந்தை
விலை ஒருகிலோ அரிசிக்கு 20 ரூபாய் எனக் கணக்கிட்டு அதில் ரூபாய் 12 ரூபாய்
50 காசை இந்திய அரசு மானியமாக வழங்குகிறது. தமிழக அரசு அதற்கு மேலும் 5
ரூபாய் 50 காசு சேர்த்து மானியம் வழங்கி மக்களுக்கு மாதம் 20 கிலோ
விலையில்லா அரிசி கொடுக்கிறது.
இந்த
அரிசி முழுவதும் நடுவண் தொகுப்பிலிருந்து பெறப்படுகிறது. தமிழ் நாட்டில்
கொள்முதல் செய்யப்படுகிற நெல்லும் நடுவண் தொகுப்புக்காகவே வாங்கப்படுகிறன.
தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்திய உணவுக் கழகத்தின் முகவாண்மை
அமைப்பாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.
இப்போது
முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரையறையின் படி நடுவண் தொகுப்பிலிருந்து மானிய
விலை அரிசி தற்போது வழங்கப்பட்டுவரும் அளவில் ஏறத்தாழ மூன்றில் ஒருபங்கு
வெட்டபடும். தமிழ் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ 2 லட்சத்து 90
ஆயிரம் டன் அரிசியை மானிய விலையில் இந்திய அரசு வழங்கிவருகிறது. தேசிய
உணவுப் பாதுகப்புச் சட்டம் செயலுக்கு வந்தால் 3(2)ன் படி இந்த ஒதுக்கீடு
ஏறத்தாழ மாதம் 1 இலட்சம் டன் அளவுக்கு வெட்டப்படும். இந்தக் கூடுதலான ஒரு
லட்சம் டன் அரிசியை தமிழக அரசு இந்திய உணவுக் கழகத்தின் சந்தை விலையான கிலோ
20 ரூபாய் கொடுத்து வாங்கினால்தான் இப்போதுள்ளபடி விலையில்லா
அரிசித்திட்டத்தை தொடர முடியும். இதனால் தமிழக அரசின் உணவு மானியச் செலவு
ஆண்டுக்கு சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 இந்த “ 3 ருபாய் அரிசித்திட்டம் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தொடரும் “ என்றும், அதற்குப் பிறகு “அரிசிக் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மிகாமல் இருக்கும் வகையில் விலை உயர்த்தப்படும்” என்றும் அறிவிக்கிறது.
அதுமட்டுமல்ல தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 இந்த “ 3 ருபாய் அரிசித்திட்டம் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தொடரும் “ என்றும், அதற்குப் பிறகு “அரிசிக் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மிகாமல் இருக்கும் வகையில் விலை உயர்த்தப்படும்” என்றும் அறிவிக்கிறது.
அப்படியானால்
தமிழக அரசு விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை தொடர விரும்பினால்
இன்னும் கூடுதலாக உணவு மானியச் செலவை அதிகரிக்கவேண்டும். என்று பொருள்.
“அரிசியோ
கோதுமையோ இதில் சொல்லப்பட்ட மானிய விலையில் வழங்குவதற்கு ஏற்ப வழங்க
முடியாத சூழல் ஏற்பட்டால் இதற்கானத் தொகையை பணமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ
இந்திய அரசு மாநிலத்திற்கு வழங்கும். அதனை மக்களுக்கு மாநில அரசு வழங்க
வேண்டும்” என்று இச் சட்டத்தின் விதி 13 கூறுகிறது.
இதுகுறித்த
கூடுதல் விளக்கத்தை இச்சட்டத்தின் விதி 18(2) (h) கூறுகிறது. இதன்படி
இந்திய அரசு கொண்டுவரும் “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற மோசடியான பண
மாற்றத்திட்டம் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. உங்கள் பணம் உங்கள்
கையில் என்ற நேரடி பண மாற்றத் திட்டத்தை தமிழக அரசும் தமிழகத்தின்
அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இந்த மக்கள் பகைத்திட்டம் தேசிய
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வழியாக முதுகுக்குப் பின்னால் இருந்து
திணிக்கப்படுகிறது.
இவ்வாறு நேரடி பணம்
வழங்க இயலாத சூழலில் உணவுச் சீட்டுகள் (உணவு கூப்பன்கள்)
வழங்கப்படுமென்றும் அதைக் கொண்டு வெளிச்சந்தையில் அரிசியை வாங்கிக்கொள்ள
வேண்டுமென்றும் இவ்விதி கூறுகிறது.
இது
மிகக் கொடுமையானது. இக் குப்பனைக் கொடுத்து வெளிச்சந்தையில் அரிசியை
வாங்கிக் கொள்ளலாம் என்றால் என்ன பொருள்?. இச்சீட்டின் மதிப்பு கிலோவுக்கு 3
ரூபாய். அவ்வாறெனில் வெளிச்சந்தையில் 1 கிலோ அரிசி 20 ரூபாய் என்றால்
அதற்கு மேல் 17 ரூபாயையையும் கொடுத்தால் தான் அரிசி வாங்கிக் கொள்ள
முடியும். ஒரு வேளை இக் கூப்பனின் மதிப்பு ரூபாய் 17 என்று அரசு
அறிவிக்குமேயானால் அப்போதுதான் 3 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கிக்கொள்ள
முடியும். வெளிச்சந்தை அரிசியின் விலை 30 ரூபாய் என்றால் கையிலிருந்து
கூடுதலாக 10 ரூபாய் கொடுத்துதான் அதாவது 13 ரூபாய்க்குதான் அரிசி வாங்க
முடியும்.
சிக்கல் இத்தோடு
நிற்கவில்லை. இச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அளவுக்கு அரிசியோ கோதுமையோ
வழங்க முடியாத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அந்தப்பற்றாக்குறை அளவுக்கு
நிகரான தொகையை பணமாக இந்தியச் அரசு மாநிலங்களுக்கு வழங்கும் என தேசிய
உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி 31 கூறுகிறது.
இந்தத்
தொகையை வைத்துக்கொண்டு தமிழக அரசு தமிழ் நாட்டு உழவர்களிடம் பற்றாக்குறையை
நிறைவு செய்ய நெல்கொள்முதல் செய்ய முடியுமா என்றால் அதற்கும் வாய்ப்பு
மிகக் குறைவு. ஏனெனில் இந்த பற்றாக்குறை குறித்த அறிவிப்பு ஆண்டுத்
தொடக்கத்திலோ அல்லது அறுவடை காலத் தொடக்கத்திலோ நடைமுறையில்
அறிவிக்கப்படாது. அவ்வப்போதுதான் அறிவிக்கப்படும். இவ்வாறான சூழலில்
வெளிச்சந்தையிலிருந்து தான் அரிசி கொள்முதல் செய்துகொள்ள வேண்டிய நிலை
தமிழக அரசுக்கு ஏற்படும்.
நெல்
கொள்முதலை பொருத்த அளவில் இந்திய உணவுக்கழகத்தின் முகவாண்மை நிறுவனமாக
தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாற்றப்பட்டு விட்டதுபோல் தமிழக
அரசின் நியாய விலைக் கடைகள் இந்திய அரசின் முகவாண்மை நிறுவனங்களாக
மாற்றப்படும் நிலைக்கே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
நெட்டித்தள்ளுகிறது. ஏனெனில் இச் சட்டத்தில் இந்திய அரசு வரையறுத்திருக்கிற
அளவைத் தாண்டியோ விலைக்கு குறைவாகவோ ஒரு மாநில அரசு வழங்க விரும்பினால்
அத்திட்டத்தை அம்மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்துதான் செய்துகொள்ள
வேண்டும் என இச் சட்டத்தின் விதி 40(2) உறுதிபடக் கூறுகிறது.
மொத்தத்தில்
உணவு வழங்கல் குறித்த மாநில உரிமையைப் பறிக்கிற - தமிழ் நாட்டு மக்களின்
குறைந்தபட்ச உணவுத் தானிய உறுதிப்பாட்டையும் சீர்குலைக்கிற சட்டமாகவே தேசிய
உணவுப் பாதுகாப்புச் சட்டம் விளங்குகிறது.
இதில் திருத்தங்கள் செய்து செப்பனிட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
இதில் திருத்தங்கள் செய்து செப்பனிட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே
இந்திய அரசு முன் வைத்துள்ள “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 “-ஐ
தமிழக அரசும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டு
மக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment