கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

அட்டப்பாடி பழங்குடியினாரின் நில உரிமைக் காப்போம் - தோழர் கி.வெங்கட்ராமன்

கோவை மாவட்டம் அருகிலுள்ள அட்டப்பாடியில் பழங்குடியினர் நிலமீட்பு என்ற பெயரில் கேரள அரசு தமிழர்களை வெளியேற்றுகிறது என்ற அச்சம் வெளியிடப்பட்டது. இது குறித்து உண்மை நிலையை அறிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், கோவை மாவட்ட சிறுதொழில் அமைப்பான “கோப்மா’’ அமைப்பின் தலைவர் திரு.கருப்பசாமி, சூழலியலாளர் திரு. இராசபாண்டியன் உள்ளிட்ட குழுவினர் 17.12.2013 அன்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இச்சிக்கலின் அடிப்படை உண்மைகள் தெளிவானது.
சிலர் கருதுவது போல் இது கேரள மலையாள அரசு வழக்கமாக தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றல்ல.இச்சிக்கலானது அடிப்படையில் அட்டப்பாடியின் மண்ணின் மக்களான இருளர் பழங்குடியினரின் நில உரிமைச் சிக்கலாகும். இருளர் பழங்குடியினர் அட்டப்பாடியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் பழங்குடிமக்கள் ஆவர்.

இன்றுள்ள கோவை மாநகர் காடும் விளை நிலமுமாக இருந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கை யில் வாழ்ந்தவர்கள் இருளர் ஆவர். விஜயநகரப் பேரரசு படையெடுப்பின் போதும், அதன் பின்னாளில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போதும் தோற்கடிக்கப் பட்டு பெருந்தொகையில் புலம் பெயர்ந்து, அட்டப் பாடி வனங்களில் குவிந்த மக்கள் ஆவர். இன்றும் கோவை கோணியம்மன் கோவில் திருவிழாவில் முதல்மரியாதை இருளர்களுக்கே இருப்பதிலிருந்தே அவர்களது இந்த வரலாற்றுத் தடம் தெளிவாகும்.
இம்மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த அட்டப்பாடியில் பொள்ளாச்சியிலிருந்தும், கோவையிலிருந்தும் சென்ற தமிழர்களும் பாலக் காடுக்கு அப்பால் உள்ள மலையாளிகளும் இருளர் மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பெருமளவு நிலங்களை சிறு தொகைக் கொடுத்துக் கையகப் படுத்தினர்.
1970 களில் இம்மக்களை அமைப்பாக்கிய உள்ளூர் அமைப்பினரும் தொண்டு நிறுவனத்தின ரும், தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் வாயிலாக, 1976 ஆம் ஆண்டு கேரள அரசு பழங்குடி மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நில மீட்பு தொடர் பான சட்டம் ஒன்றை இயற்றியது.
அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்தே 1986 இல் இதற்கான விதிமுறைகள் வரையப்பட்டு செயலுக்கு வந்தன. இதனைக் கேரள அரசு சரி வர அமல்படுத்த வில்லை என்ற வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று அதன டிப்படையில் இதை செயல்படுத்துமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இதற்கு இணங்க கேரள அரசு நிலமீட்பு ஆணைப் பிறப்பித்தது. இதன்படி பழங்குடி யினரிடம் நிலம் வாங்கிய புதிய உரிமையாளர்களின் 5ஏக்கருக்கு மேற்பட்ட நிலமே கையகப்படுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்வரம்பின் படி ஏற்கெனவே பலர் மிகுதியுள்ள தங்கள் நிலத்தை ஒப்படைத் துவிட்டனர். மீதமுள்ள 77 பேருக்கு கேரள அரசு அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பி யுள்ளது. இவர்களில் 19 பேர் மட்டுமே தமிழர்கள். மீதமுள்ள 58 பேர் மலையாளிகள் ஆவர்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கியுள்ள சிலருக்கு மாற்று இடம் தருவதற்கும் கேரள அரசு இணங்கியுள்ளது.
இச்சிக்கலில் பெருமளவு நிலமிழந்த இருளர்கள் தமிழ் பழங்குடியினர் (ஆதிவாசிகள்) ஆவர். அவர்களது நில உரிமையை மீட்பது நல்லெண்ணம் கொண்டோர் அனைவரது கடமையுமாகும். ஒரு வேளை இச்சட்டத்தின் கீழ் மீண்டும் நிலம் பெருவோர் மலையாள மொழி பேசும் பழங்குடி மக்களாக இருந்தாலும் அவர்களது நில உரிமையை சமவெளித் தமிழர்களின் பெயரால் மறுப்பதை ஏற்க முடியாது.
பஞ்சமி நில உரிமைப் போலவே, பழங்குடியின ரின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.
இருளர் உள்ளிட்ட அட்டப்பாடி பழங்குடி மக்களின் நில மீட்பு உரிமையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி ஆதரிக்கிறது.
இருளர்களிடமிருந்தும், சமவெளி மக்கள் உள்ளிட்டு வேறு மக்களிடமிருந்தும் சுஸ்லான் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு வடநாட்டு நிறுவனங் கள், அரசியல் பெரும் புள்ளிகள் ஆகியோர் பல நூறு ஏக்கர் நிலங்களை அட்டப்பாடி பகுதியில் வளைத்துப் போட்டுள்ளனர். அவர்களையும் வெளி யேற்றி உரிய மக்களுக்கு நிலம் மீட்டுத்தர கேரள அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் .

0 கருத்துகள்: