‘உலக மீன் வள நாள்’ இன்று (21.11.2014) கடைபிடிக்கப்படுவதையொட்டி, இராமநாதபுரத்தில், இராமநாதபுர மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்கம்(RFTU) மற்றும் இந்திய சமூக செயற்பாட்டு பேரவை (INSAF) ஆகிய அமைப்புகளின் சார்பில், இன்றைய நாள் ‘மீனவர் நாளாக’கடைபிடிக்கப்பட்டு, கருத்தரங்கம் நடைபெற்றது.
இராமநாதபுரம்
வலம்புரி மகாலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு,
சங்கத்தின் தலைவர் திரு. பாலுச்சாமி தலைமையேற்றார். செயலாளர் திரு. ஜோசப்
வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர். திருவாட்டி அன்னம்மாள்,தேசிய மீனவர்
சம்மேளனத் தலைவர் திரு.இளங்கோவன், இந்திய தேசிய சமூக செயல்பாட்டு
மன்றஒருங்கிணைப்பாளர் திரு. மத்தியாஸ் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:
‘இன்று
‘உலக மீன் வள நாள்’ இங்கு ‘மீனவர்’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதே
நாளில் தான், இலங்கையில் தூக்குத் தண்டனைப் பெற்று விடுதலையாகியுள்ள
இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தோழர்கள் விடுதலையாகி,
தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்களை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!
இந்த ஐந்து மீனவர் விடுதலை எப்படி நடைபெற்றது என்பதை நாம் இந்த தருணத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வெறும் அரசின் தயவோடு இந்த மீனவர் விடுதலை என்பது சாத்தியமாகவில்லை.
அக்டோபர்
30ஆம் நாள், இராமேசுவர மீனவர்களக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை
விதித்த செய்தி வந்தவுடன், உடனடியாகக் கொந்தளிப்பு ஏற்பட்டு,
இராமேசுவரத்தில் போராட்டம் வெடித்தது. போர்க்குணமிக்க அந்தப் போராட்டத்தின்
போது, இந்திய அரசின் தொடர்வண்டி இருப்புப் பாதைகள் பெயர்க்கப்பட்டன. பல
கிலோ மீட்டர் மனிதத் தலைகளே தெரியுமளவிற்கு மிகப்பெரும் சாலை மறியல்கள்
இராமேசுவரத்தில் நடைபெற்றன.
தண்டனை
விதிக்கப்பட்ட மீனவர்களின் முகங்கள் – ஊர் பேர் என எதுவும் தெரியாத
நிலையிலும் கூட, அவர்கள் தமிழர்கள் என்பதை உறவாகஉணர்ந்து கொண்டு,
தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழர் என்ற இணைப்பின் கீழ்தான் இது சாத்தியமானது.
இதே
போல் நாம் ஒருங்கிணைந்து போராடியதன் விளைவாகவே, அரசுக்கு ஐந்து மீனவர்களை
மீட்க வேண்டுமென்ற அழுத்தம் ஏற்பட்டது என்பது,மிகையானக் கூற்று அல்ல!
ஒவ்வொரு சிக்கலிலும், இவ்வாறான ஒருங்கிணைந்த போராட்ட வழிமுறைத் தேவை! அதுவே
நம்மை பாதுகாக்கும்!
2013ஆம்
ஆண்டு, கடற்கரை மேலாண்மைச் சட்டம் - புதிய சட்ட விதிகளைக் கொண்டு
திருத்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் வேளாண்மையிலிருந்து எப்படி உழவர்களை
வெளியேற்றுகிறார்களோ, அது போல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளுக்காக
கடலோரத்திலிருந்து – கடலிலிருந்து மீனவர்களை வெளியேற்றும்
திட்டத்திற்குத்தான் அச்சட்டம் பயன்படப் போகிறது.
இச்சட்டம்
நடைமுறைக்கு வந்தால், 200 மீட்டர் முதல் 500 மீட்டர்வரை ஆழம் உள்ள கடல்
பகுதிகளில், மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையில்லை என அறிவிக்கப்படும். அந்த
பகுதிகளில் பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்கள் மீன் பிடித்துக் கொள்ள
அனுமதிக்கப்படும். அது போல,மீனவர் கடலிலிருந்து 500மீட்டருக்குள்
குடியிருக்கக் கூடாது என்றும் சொல்வார்கள். இச்சட்டத்தை நாம் அனைவரும்
ஒருங்கிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.
மன்னார்
வளைகுடாவை ஒட்டியுள்ள 25 தீவுகளிலும், அதைச்சுற்றியுள்ள 560 சதுர கிலோ
மீட்டர் பகுதிகளிலும், நம்மீனவப் பெண்கள் காலங்காலமாக கடல் பாசி எடுத்து
வரும் தொழிலைச் செய்து வந்தனர். ‘இந்திய விடுதலை’க்குப் பிறகு, அந்த உரிமை
நம் மீனவப் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. வனத்துறையினர், நம் மீனவர்களை
தடுக்கின்றனர். எனவே, இந்த உரிமையை மீட்க நாம் போராட வேண்டியத்
தேவையுள்ளது.
அதே
போல, நம் மீனவர்கள் காலங்காலமாகப் புழங்கி வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு
இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதை மீட்பதற்கும் நாம் போராட
வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பரப்பை, இருதரப்பினரும்
மீன்பிடிக்கும் வகையிலானபொதுவான கடற்பரப்பாக அறிவித்து, இச்சிக்கலைத்
தீர்க்க முடியும்.
இது
போன்ற பல உரிமைகளை மீட்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியத்
தேவையுள்ளது. மீனவர்கள் மட்டுமே ஒன்றுகூட, தொழிற்சங்கங்கள் அமைத்து, இந்த
உரிமைகளை மீட்டுவிட முடியாது. நாம் அனைவரும், இணைய வேண்டிய புள்ளியில்
இணைந்து, இந்த உரிமைகளை மீட்கலாம். அந்த ஒருங்கிணைப்பு, தமிழர் என்ற
புள்ளியில்தான் இருக்கிறது. எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம், அதனை அமைப்பு
வழியில் செய்து வருகின்றது“
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
0 கருத்துகள்:
Post a Comment