இந்திய அரசின் விளக்கம் ஏற்கக்கூடியதல்ல!
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான
கேரளத்தின் புதிய அணைத் திட்டத்திற்கு
இந்திய அரசு துணை போகக் கூடாது!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
முல்லைப் பெரியாறு அணையை செயலற்றதாக்கி, பிறகு இடித்துவிட்டு புதிய அணை கட்டிக் கொள்வது என்ற கேரள அரசின் படுமோசமான திட்டத்தின் மீது சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள இந்திய அரசு இசைவு அளித்திருப்பது சட்டத்தின் ஆட்சியை கவிழ்க்கும் செயலாகும்!
கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மிகை மழை, வெள்ளச்சேதம் ஆகியவற்றுக்கு முல்லைப் பெரியாறு அணை எந்த வகையிலும் காரணமில்லை என்பதை நடுநிலை ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதிலும், மலைகளைக் குடைந்து சுரங்கங்கள், சாலைகள், சுற்றுலா விடுதிகள், கேளிக்கைப் பூங்காக்கள் போன்றவையும், சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக நீர் மின் நிலையங்கள் அமைத்ததும்தான் வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்பதை இந்திய அரசு அமர்த்திய காட்கில் குழுவும், கஸ்தூரி ரங்கன் குழுவும் தெளிவுபட கூறியிருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாறு தண்ணீர் செல்லக்கூடாது என்ற இனப்பகைக் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கேரள அரசு கூறி வந்தது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் 2014 மே 7 அன்று அளித்த இறுதித் தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை எல்லா வகையிலும் வலுவாக இருப்பதை உறுதி செய்து, 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ள ஆணையிட்டது.
இத்தீர்ப்பை முறியடிக்கும் தீய உள்நோக்கத்தோடு கேரள அரசு பீர்மேடு வட்டம் மஞ்சுமலை கிராமத்தில், முல்லைப் பெரியாறு அணைக்கு 1,200 அடிக்குக் கீழே 1,214 அடி நீளம் – 174.6 அடி உயரமுள்ள ஒரு முதன்மை அணையையும், அதற்குத் துணையாக 82 அடி உயரத்தில் இன்னொரு அணையும் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்குத் திட்ட மதிப்பு 663 கோடி ரூபாய் என இதற்கென அமர்த்தப்பட்ட “பிரகதி லேப்ஸ் அன்ட் டெக்னாலஜி” நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.
இதன் அடிப்படையில், கேரள அரசு இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை அணுகி சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி கேட்டபோதே, அதனை இந்திய அரசு மறுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 27.09.2018 ஆம் நாளன்று கூடிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆற்றுச்சமவெளி புனல் மின்சார திட்ட ஆய்வுக் குழு, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்திக் கொள்ள கேரள அரசுக்கு அனுமதி அளித்துவிட்டது.
இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது! 2014ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு, புதிய அணை கட்டிக் கொள்வது குறித்து கேரளமும், தமிழ்நாடும் ஒத்த முடிவுக்கு வந்து, அதன் அடிப்படையில் மனு அளித்தால்தான் பரிசீலிக்க முடியும் என்று தெளிவுபடக் கூறியிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கடிதத்தை இணைக்காமல் கேரள அரசு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அளித்த மனுவை பார்த்த மாத்திரத்திலேயே சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்திருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்துவிட்டு, இப்போது அந்த அமைச்சகத்தின் வல்லுநர் குழு அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை! “சுற்றுச்சூழல் ஆய்வுக்கு இசைவு அளித்துவிட்டதாலேயே புதிய அணை கட்டும் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு தகுதி பெற்றதாக பொருளல்ல. சுற்றுச்சூழல் ஆய்வுக்கு இசைவு அளித்த விசாரணை வரம்பிலேயே தமிழ்நாடு அரசின் முன் இசைவு பெற வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறோம். திட்டமிடப்பட்டுள்ள புதிய அணையால், நீர் தேங்கக்கூடிய பகுதிகள் தமிழ்நாடு அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாகும் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம்” என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருப்பது வெற்றுச் சமாதானம் ஆகும்!
சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்துவிட்டு, இவ்வாறு கூறுவது தமிழ்நாட்டின் மீது இந்திய அரசும் சேர்ந்து அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையாகும்!
சட்டத்தின் ஆட்சியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பயன்களும் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடையாது என இந்திய அரசு உணர்த்த வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
எனவே, இந்திய அரசு கேரள அரசின் சட்ட விரோதமான புதிய அணை கட்டும் முயற்சிக்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தலைமையமைச்சர் நரேந்திர மோடி உடனடியாக இச்சிக்கலில் தலையிட்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இசைவை திரும்பப் பெற ஆணையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பாதுகாக்க அரசியல் வழியிலும், சட்ட வழியிலும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment