கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி: தீர்ப்பாக அரங்கேறிய சதி..!



ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி:

தீர்ப்பாக அரங்கேறிய சதி..!
தோழர் கி. வெங்கட்ராமன்,

பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையை நீக்கி, அந்த ஆலை தொடர்ந்து இயங்கலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு வியப்பு அளிக்கவில்லை. மாறாக சீற்றத்தை விளைவிக்கிறது. நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 15.12.2018 அன்று வழங்கிய இத்தீர்ப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு , திட்டமிட்ட முறையில் அரங்கேறிய அநீதிதான்!

நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த ஆய்வறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு மூன்று வாரத்திற்குள் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய ஆணையை வழங்க வேண்டுமென்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டுமென்றும் பசுமைக் தீர்ப்பாயம் ஆணையிட்டது.

இந்த வழக்கு முகாமையாக 28.5.2018 அன்று தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பிறப்பித்த ஆணை மீதான வழக்கு தான். மாநில அரசு பிறப்பித்த ஆணையின் மீது வழக்கு நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று எதிர்த் தரப்பினர் முன்வைத்த முதல் நிலை வழக்கு குறித்து எதுவும் கூறாமலேயே தீர்ப்பாய நீதிபதி கோயல் தீர்ப்பு வழங்கியிருப்பது நீதி முறைமைக்கே எதிரானது! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் தீர்ப்பாயம் மறுக்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம் அடுக்கடுக்கான விதி மீறல்கள் செய்து சுற்றுச்சூழலை நாசப்படுத்தி இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித வலுவான மறுப்பையும் இத்தீர்ப்பு கூறிவிடவில்லை. மாறாக, சூழலை நாசப்படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம் இரண்டரை கோடி ரூபாய் தண்டத்தொகை (அபாரதம்) கட்டவேண்டும் என "ஆகப்பெரிய" தண்டனையையும் வழங்கியிருக்கிறது.

மக்களுக்கு கையூட்டு கொடுப்பது போல், தூத்துக்குடியில் நலத்திட்டங்கள் நிறைவேற்ற 100 கோடி ரூபாய் அளிக்க முன்வருவதாக வேதாந்தா குழுமம் கூறியதை கண்டிப்பதற்கு மாறாக அதையே தீர்ப்பாக கோயல் தீர்ப்பாயம் அறிவித்திருப்பது அருவருப்பானது.

இந்த நீதிபதி கோயல் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற அன்றே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக அமர்த்தப்பட்டது தற்செயலானது அல்ல. முன்கூட்டியே திட்டமிட்டு மோடி அரசு நிறைவேற்றிய சதித்திட்ட நகர்வு தான். சூழலுக்கும், மக்கள் வாழ்வுரிமைக்கும் எதிராக இயங்கும் நச்சுத் தொழில் நிறுவனங்களுக்கும், பேரழிவுத் திட்டங்களுக்கும் இனி தொடர்ந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்பதற்கான முதல் அறிவிப்பு தான் இந்த கோயல் தீர்ப்பு.

ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்ட நாளிலிருந்தே அடுத்தடுத்து விதிமீறலில் ஈடுபடுவதும், அரசின் வலுவற்ற தடையாணைகளை தனது பண வலிமையால், அதிகார மையத்தின் நெருக்கத்தால் அடுத்தடுத்து முறியடித்து தனது பேரழிவுக் கொள்ளையை தொடர்ந்ததுதான் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் வரலாறாகும்.

1994இல் மன்னார் வளைகுடாவிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் அப்பால் தான் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டுமென்று நிபந்தனை விதித்து தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாலையை நிறுவிக் கொள்ள தடையில்லாச் சான்று அளித்தது. இந்த நிபந்தனையை மீறித்தான் இந்த ஆலையே நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விதிமீறல்களை இவ்வாலை மேற்கொள்ளும் போதெல்லாம் மக்களின் எதிர்ப்பும், அதன் மீதான ஆய்வும், மேம்போக்கான தடையாணைகளும் அதன் மீதான வழக்குகளும், இவ்வழக்குகளில் குறுக்கு வழியில் வேதாந்தா குழுமம் வெற்றி பெறுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல் வரலாற்றை உற்று நோக்கினால் 1994, 1998, 2004, 2008, 2010, 2013 என ஒவ்வொரு ஆண்டும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதும், அவை மீறப்பட்டதும், அவை குறித்த வழக்குகளில் அவ்வப்போது தண்டத்தொகை கட்டிவிட்டு தொடர்ந்து பேரழிவைத் தொடர்வதும் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். 

இப்போதைய தீர்ப்பிலும் அதுதான் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசின் வலுவற்ற தடையாணைகள் நீதிமன்றத்தால் நீக்கப்படுவது நிகழ்ந்து வருகிறது. இறுதியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் முடிவு 28.5.2018 அன்று வெறும் அரசாணையாக அறிவிக்கப்பட்டதானது தீர்ப்பாயத்தின் அநீதியான தீர்ப்பிற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. 

இப்போதாவது தமிழ்நாடு அரசு உயர் வெப்பத்தில் செம்புத்தாதுகளை உருக்கும் தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் தாமிர ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வகையில் சிறப்பு அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும்!

அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் தொழில்நுட்பத்தையும் அபாயகரமானவை எனப் பட்டியலிட்டுத் தடை செய்ய வேண்டும். இந்திய அரசு உயர் வெப்பத்தில் உருக்கும் தாமிர ஆலைகளைத் தடை செய்து தனிச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டமும் தூத்துக்குடி மாவட்டத்தோடு நிற்காமல், தமிழ்நாடு முழுவதும் மக்கள் பங்கு பெறும் போராட்டமாக விரிவடைய வேண்டும். எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது!

0 கருத்துகள்: