இந்தித் திணிப்பு தமிழ் அழிப்பே! மும்மொழித்
திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
நரேந்திர மோடி இரண்டாம் முறை பதவியேற்றவுடன் வெளி வந்திருக்கிற “புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2019”இல் தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் நடுநிலைக் கல்வியிலிருந்து இந்தி மொழிக் கட்டாயப் பாடமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை” என்ற மோசடியான பெயரால் இந்தித் திணிப்பு நடக்கிறது. 1965 மொழிப் போராட்ட காலத்திலிருந்தே மும்மொழிக் கொள்கை என்பது இந்தியா முழுவதற்குமான கொள்கை என அறிவிக்கப்பட்டு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்பட்டபோது, இந்தி மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளில் ஏதாவதொன்று கற்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், நடைமுறையில் தென்னிந்திய மொழி எதுவும் இந்தி மாநிலங்களில் கற்பிக்கப்படவில்லை. இப்போதும் அதுதான் நடக்கும்!
இந்தி படித்தால் வடஇந்திய மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தி மாநிலங்களில் போய் வேலை பார்ப்பதைவிட இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் வேலை பெறுவதுதான் அதிகமாக இருக்கிறது.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டிலிருந்து இந்தி மாநிலங்களுக்கு வேலை – தொழில் காரணமாகக் குடிபெயர்ந்திருப்போர் எண்ணிக்கை 8 இலட்சம் பேர். மாறாக, இந்தி மாநிலங்களான பீகார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீசுகட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்து தங்கியிருப்போர் ஏறத்தாழ 1 கோடி பேர்! அன்றாடம் சென்னை நடுவண் (சென்ட்ரல்), கோவை, திருப்பூர் தொடர்வண்டி நிலையங்களில் வந்து குவியும் இந்திக்காரர்களே இதற்கு கண்கண்ட சான்று!
உண்மை நிலை இவ்வாறிருக்க, இந்தி படித்தால்தான் வடஇந்தியாவில் வேலை கிடைக்கும் என்று சொல்லி, இந்தித் திணிப்பது தீய உள்நோக்கம் கொண்டதாகும்.
வேலை கிடைப்பதற்காக என்று சொன்னால், இந்தி மாநிலங்களில்தான் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்க வேண்டும். இந்திய அரசின் நோக்கம் தமிழை மூன்றாம் நிலை மொழியாக மாற்றுவது – தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பது என்பதுதான்!
இதே கல்விக் கொள்கையில் சமற்கிருதம் தொடக்கக் கல்வியிலிருந்தே பரப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமற்கிருதத்தையும், சமற்கிருதமயமான இந்தியையும் திணிக்கும் ஆரிய இன ஆதிக்க நோக்கம்தான் இந்தக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடன் இது “வரைவு அறிக்கை”தான் என இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் விளக்கம் கூறுகிறார்.
இதற்கு முன்னால், நேரு காலத்திலிருந்து எப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் இந்தித் திணிக்கப்பட்டாலும் அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டே வருகிறது. இந்நிலையில், இந்த வரைவு அறிக்கை அணியப்படுத்தும்போதே இந்தித் திணிப்பையும், சமற்கிருதத் திணிப்பையும் தவிர்த்திருக்க வேண்டும். தொடர்ந்து வலியுறுத்தி வந்தால், ஒரு கட்டத்தில் ஏற்க வைத்து விடலாம் என்ற ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சித் திட்டமாகத்தான் இந்தக் கல்விக் கொள்கையும் அமைந்திருக்கிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தி, உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மண்ணின் மக்களின் இயற்கையான மொழிகளான மைதிலி, போஜ்புரி, அவத்தி போன்ற மொழிகளை அழித்தது வரலாற்றுச் சான்றாக உள்ளது.
தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிரான இந்த மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன். இது வெறும் மொழித் திணிப்பு அல்ல – இன அழிப்பு முயற்சி என்பதை தமிழ்நாட்டு இளையோர் புரிந்து கொண்டு வருகிறார்கள்.
மோடி அரசு இந்தித் திணிப்பு மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெறாவிட்டால், தமிழர்கள் இனவழிப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
Post a Comment