கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"தமிழ் மாணவர்களுக்கு எதிரான ஆளுநரின் அலட்சியம்!" ----- தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


 =========================================================
தமிழ் மாணவர்களுக்கு எதிரான ஆளுநரின் அலட்சியம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின்
பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=========================================================


ஆளுநர் ஆர். என். இரவியின் அலட்சியப் போக்கால் கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டின் 9 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பட்டப்படிப்புத் தேறிய மாணவர்கள் பல இலட்சம் பேர் பட்டதாரிச் சான்றிதழ் கிடைக்காமல் தத்தளிக்கிறார்கள் என்ற செய்தி பேரதிர்ச்சி தருகிறது.

30-3-2023 திருச்சி பதிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் இச் செய்தி வந்துள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பட்டச் சான்றிதழ் கிடைக்காமல் மேற்படிப்பைத் தொடர முடியாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும் தவிக்கிறார்கள். பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் தேதிதராமல் இருப்பதே இதற்குக் காரணம் என பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். இச் செய்தியை ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆளுநர் கடுமையான பணி நெருக்கடியில் இருப்பதால் தேதி தரமுடியவில்லை என காரணம் கூறுகிறார்கள். கோயில் விழாக்களுக்கும் இசை விழாக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் ஆளுநர், இலட்சக்கணக்கான தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கருதிப் பார்க்கவில்லையா?

டைம் ஆஃப் இந்தியாவின் இச் செய்தியில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி மாணவர் ஒருவர் சிங்கப்பூரில் வேலை கிடைத்தும் பட்டச் சான்றிதழ் கொடுக்க முடியாததால் வாய்ப்பை இழந்த செய்தியும் இடம் பெற்றுள்ளது. வேலை வழங்கும் நிறுவனங்கள் இடைக்காலப் பட்டச் சான்றிதழ்களை (provisional degree certificate) நேர்காணல் வரையிலும் ஏற்றுக் கொள்வார்களே தவிர, பணி ஆணை வழங்கும்போது இறுதியான பட்டமளிப்புச் சான்றிதழைக் கேட்பார்கள். பல்வேறு உயர் கல்விக்கும் இதுதான் நிபந்தனை.

தமிழ்நாடு அமைச்சரவையும் சட்ட மன்றமும் நிறைவேற்றி அனுப்பிய பல முக்கியமான சட்டக் கோப்புகள்தான் ஆளுநர் கையெழுத்து போடாமல் அவரது மாளிகையில் காத்திருக்கிறது என்றால், பல இலட்சம் தமிழ் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறிஇருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பட்டச் சான்றிதழில் ஆளுநரின் கையொப்பம் அவசியமானது. இந்த நிலையில், அவசரமாக பட்டச் சான்றிதழ் பெற விரும்புவோர், ரூபாய் 3800 முதல் 5000 வரை பல்கலைக் கழகத்தில் சிறப்புக் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக் கழகங்கள் அறிவித்திருக்கின்றன. அவ்வாறு விண்ணப்பிப்பவர்களின் பட்டச் சான்றிதழ் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு கையொப்பம் பெறப்படுகிறது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் படித்த காரணத்திற்காகவே பல இலட்சம் மாணவர்கள் இவ்வாறு தண்டிக்கப்படுவது கொடுமையானது.

ஆளுநரின் இந்த அலட்சியப் போக்கு தமிழ்நாட்டு இளையோர் மீதான இன வன்மமா என்ற கேள்வியும் எழுகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை இதில் சிறப்புக் கவனம் செலுத்தி ஆளுநருக்காகக் காத்திராமல் பட்டமளிப்பு விழா நடத்தவும் பட்டச் சான்றிதழ் வழங்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

0 கருத்துகள்: