கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"தொழிலாளர் பகைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்


 ================================================

தொழிலாளர் பகைச் சட்டத்தை
தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்
================================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்
================================================


இந்திய பா.ச.க. அரசோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாடு அரசு தொழிலாளர் பகைப் போக்கில் பாய்ந்து செயல்படுகிறது.

அண்மையில் கடந்த 12.4.2023 அன்று தொழிற்சாலை சட்டத்தில் தொழிலாளர் நலனுக்கு எதிரான கடும் திருத்தம் ஒன்றை அவசர அடியாக நிறைவேற்றியிருக்கிறது. 1948ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய தொழிற்சாலை சட்டத்தின் அடிப்படையையே மாற்றி அமைக்கும் வகையில் 6A என்ற புதிய பிரிவை சேர்த்திருக்கிறார்கள். தொழிற்சாலை சட்டத்தின் 51, 52, 54, 55, 56, 59 ஆகிய பிரிவுகளை ஒரு தொழிற்சாலைக்கோ, ஒரு வகையான தொழிற்சாலைகளுக்கோ பொருந்தாது என தமிழ்நாடு அரசு அறிவிக்கலாம் என இந்தச் சட்டத் திருத்தம் கூறுகிறது.

எட்டு மணி நேர வேலை, விடுமுறை நாளில் பணியாற்றினால் ஈடுகட்டும் மாற்று விடுமுறை, மிகை நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம், வேலை நேரத்திற்கு இடையில் உணவு, இயற்கைத் தேவைகள் ஆகியவற்றுக்கான இடைநேரம் போன்றவை குறித்து வரையறுப்பவைதான் மேற்சொன்ன விதிகள்.

அரசு நினைத்தால், இந்த ஒழுங்குமுறை எதுவுமே குறிப்பிட்ட தொழிலகங்களுக்கு செயல்படாது என விதிவிலக்கு அளிக்கலாம். அதன்பிறகு, அத்தொழிற்சாலை முதலாளிகள் எந்த வரைமுறையும் அற்று 11, 12 மணிநேரம் வேலை வாங்கலாம். ஒரு வாரத்திற்கு 6 நாள் வேலை 7-வது நாள் சம்பளத்தோடு விடுமுறை, ஒரு வாரத்திற்கு அதிக அளவு வேலை நேரம் 48 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது என்ற ஒழுங்குமுறை இனி இருக்காது. வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கு மேல் மிகை நேரம் (ஓவர்டைம்) பணியாற்றினால் அந்த மிகை நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் என்பதோ, விடுமுறை நாளில் தேவை கருதி பணிக்கு வர நேர்ந்தால் அதற்கு மாற்றாக ஈடுகட்டும் விடுமுறை (Compensatory Off) என்பதோ இனி இருக்காது.

இவ்வளவு அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரும் சட்ட திருத்தத்தை தொழிற் சங்கங்கள் – தொழில் முதலாளிகள் – அரசு அதிகாரிகள் – சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட தொழிலாளர் ஆலோசனை குழுவில் (Labour Advisory Committee) விவாதிக்க வில்லை. அதைவிட சட்டமன்றத்திலும் விவாதிக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அன்றாட விவாதப்பட்டியலில் (அஜென்டா) கூட இப்படி ஒரு திருத்தச் சட்டம் விவாதத்திற்கு வரப்போகிறது என்ற அறிவிப்பு இல்லை. ஏப்ரல் 12 அன்று தொழிலாளர் அமைச்சர் திரு. சி.வி. கணேசன் இச்சட்டத் திருத்தத்தை முன்வைக்கிறார். அவர் முன்வைத்து அமர்வதற்குள்ளாகவே சட்ட மன்ற அவைத்தலைவர் திரு. அப்பாவு “ஏற்போர் ஆம் என்க மறுப்போர் இல்லை என்க” என குரல் வாக்கெடுப்புக்கு விடுகிறார். வெறும் 40 விநாடிகளில் இந்த முக்கியமான சட்ட திருத்தம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது.

தொழிற்சாலை சட்டம், நிலையாணைச் சட்டம், உள்ளிட்ட 13 சட்டங்களை ஒருங்கிணைப்பது என்ற பெயரால் இந்திய பாசக அரசு “பணிப்பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலைநிலைமை விதிகள் 2020” என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், தொழிற்சங்கங்கள், எதிர்க் கட்சிகள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பின் காரணமாக அச்சட்டத்தை செயலுக்குக் கொண்டுவரும் சட்ட விதிகளைப் பிறப்பிக்கவோ, அறிவிக்கைகளை வெளியிடவோ தயங்கி நிற்கிறது.

ஆனால், ஆரியத்துவமாடல் மோடி அரசைத் தாண்டி திராவிட மாடல் ஸ்டாலின் அரசு எந்த விவாதமுமின்றி, படுவேகமாக இந்த தொழிலாளர் பகைச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

தொழில் நடத்துவதை எளிதாக்குவது (Ease of doing business) என்ற பெயரால் மோடி அரசு செய்வதைத் தாண்டி தொழில் முதலீட்டை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பது என்ற சாக்கில் இந்த படுமோசமான சட்ட திருத்தத்தை திமுக அரசு பிறப்பித்திருக்கிறது. “தொழிற்சாலை சட்டத்தை திருத்துவதற்கான இந்த முடிவு பல தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர் சங்கங்கள் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்படுகிறது” என இதன் நோக்க உரை குறிப்பிடுகிறது. இவ்வாறு நெளிவு சுழிவான சட்டம் இருந்தால்தான் அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்று இதற்கு ஞாயம் சொல்லப்படுகிறது.

ஆனால், உண்மை நிலை வேறு. இந்திய அரசு வெளியிடும் அமைப்பு சார்ந்த தொழிற்சாலை ஆய்வறிக்கை (Annual Survey of Industries) தொழிலகங்களின் உற்பத்தி 34% உயர்ந்தால் வேலைவாய்ப்பு 0.1% தான் உருவாகிறது என்பதைத் தெளிவாக்குகிறது. வேலைவாய்ப்பு வழங்காத வளர்ச்சி (Jobless growth) என்பதுதான் நடக்கிறது. ஒரு தொழிலாளியின் உற்பத்தித் திறன் என்பதை ஒப்பிட்டாலும், விலை உயர்வை ஒப்பிட்டாலும் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் தேய்ந்து வருவதை இதே அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

உருவாகிற குறை - வேலைவாய்ப்பும் இந்த மண்ணின் மக்களுக்கு இல்லாமல் வெளி மாநிலத்தவர்க்கே வழங்கப்படுகிறது.

வரைமுறையற்ற வேலைநேரம், குறைவான ஊதியம் ஆகியவற்றைக் காரணம் காட்டிதான் தொழில் நிறுவனங்கள் இந்திக்காரர்களையும், வெளிமாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கின்றன; தமிழர்களைப் புறக்கணிக்கின்றன. இந்த உழைப்புச் சுரண்டல் இப்போதைய சட்டத் திருத்தத்தின் வழியாக சட்ட அங்கீகாரம் பெறுகின்றது. இதன் வழியாக உழைப்பு வெளியார் மயமும் சட்ட வரவேற்பைப் பெறுகிறது.

நெளிவு - சுளிவான வேலைநேரம் தொழிலாளர்களுக்குப் பயன்படும் என்பது உண்மைக்கு மாறானது. இரண்டுநாள் – 22 மணி நேரம் தொடர்ந்து வேலைபார்த்துவிட்டு, அடுத்த 24 மணிநேரம் தொடர்ந்து தூங்குவது – ஓய்வெடுப்பது என்பது உடல் இயற்கைக்கு முரணானது. தொழில்சார்ந்த நோய்களுக்கும், தொடர் உழைப்புக்குத் தகுதியற்ற உடல்நிலைக்கும் இது இட்டுச் செல்லும். தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் ஊதியத்திற்கு ஆசைப்பட்டு 12 மணிநேரம் உழைப்பில் ஈடுபடுவோர் 35 வயதைத் தாண்டுவதற்குள் உழைப்பைவிட்டு வெளியேற்றப்படுவதைப் பார்க்கிறோம். இதே நிலை அனைத்து தொழிலகங்களுக்கும் ஏற்படும்.

6 மணி நேர வேலை – ஐந்து நாள் வாரம் என்பது உழைப்புத் திறனை மேம்படுத்துகிறது என்பதை உணர்ந்திருப்பதால்தான், ஒருவாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு மிகாத வேலை நேரத்தை வளர்ந்த மேற்குலக நாடுகள் கடைபிடிக்கின்றன. மிகை நேர வேலை என்பது உழைப்புச் சுரண்டல் மட்டுமின்றி தொழிற்சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.

எனவே, எந்த வகையில் பார்த்தாலும், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத் திருத்தம் தொழிலாளர் பகைச் சட்டமாகும். இதனை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

==========================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==========================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==========================================

0 கருத்துகள்: