“கட்டலோனியா, குர்திஸ் தான்_-அடுத்து ஈழம்?’’ என்ற தலைப்பில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில்,
25.11.2017 காலை, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில்
கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, “விசை’’ இணைய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் அ.மு. செய்யது தலைமை
தாங்கினார்.

தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது உரையின் எழுத்து வடிவம் :
“கட்டலோனியா, குர்திஸ்தான் -
அடுத்து ஈழம்?’’ என்ற தலைப்பில், முகாமையான பொருளில், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு முதலில் எனது நன்றியையும்,
பாராட்டுகளையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கங்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டலோனியா, குர்திஸ்தான்
தேசிய இனப்போராட்டங்கள் குறித்து நாம் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள
வேண்டும். அதற்கு, இதுபோன்ற
கருத்தரங்குகள் பயன்படவேண்டும்.
பொதுவாக நாம், “கருத்து
வாக்கெடுப்பு’’ என்றும்,
“பொது வாக்கெடுப்பு’’
என்றும் மாறிமாறிப் பயன்படுத்துகிறோம்.
இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு! பொது மக்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்புதான்
என்றாலும், ஒரு குறிப்பிட்ட
அரசியல் நிலைப்பாட்டின் மீது நடக்கும் வாக்கெடுப்பு என்பதால், குறிப்பாக தேசிய இறையாண்மை குறித்தது என்பதால்
நாம் இதனை “கருத்து
வாக்கெடுப்பு’’ (Plebiscite) என்றே கூற வேண்டும். “பொது வாக்கெடுப்பு’’ எனக் கூறக்கூடாது என்பது எனது கருத்து!
அவ்வகையில், குர்திஸ்தான் -
கட்டலோனியாவில் தங்கள் விடுதலையை முன்னிறுத்தி நடத்திய கருத்து வாக்கெடுப்புகளை
நாம் ஆதரிக்கிறோம். கட்டலோனியா, குர்திஸ்தான்
தேசிய இன விடுதலைப் போராட்டங்களை, தமிழ்ச்சூழலுக்கு
எப்படிப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.
நம் எல்லோருக்கும், தமிழீழ விடுதலை என்ற நோக்கத்தில் பொதுக்
கருத்தும், அக்கறையும் இருக்கிறது.
தமிழீழத்தில் ஒரு மாபெரும் இன அழிப்பு நடந்த நிலையில், அந்த அக்கறை நம்மிடத்தில் கூடுதலாகவும் உள்ளது.
ஆனால், அதனை
சாத்தியப்படுத்துவதற்கான அணுகுமுறையில் நம்மிடையே வேறுபாடுகள் உள்ளன.
ஐ.நா.வின் சட்டங்கள் - பிரகடனங்கள்
போன்றவற்றில், தேசிய இனங்களின்
சுய நிர்ணய உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக் கொண்டு என்றைக்குமே வல்லரசு
நாடுகள் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்திற்கு தானே முன்வந்து ஆதரவு தெரிவித்த வரலாறு கிடையாது! வரலாற்று நிர்
பந்தங்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் அவர்களது
நாட்டு நலன்களை அல்லது அவர்களது ஆதிக்கத் தேவைகளுக்கு இசைவாக இருக்கும் போதுதான்
ஆதரிக்கிறார்கள்.
பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்வைத்து ஆட்சி செய்த சோவியத் - சீனா போன்ற நாடுகள், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு துணையாக
நின்றது உண்மை தான்! ஆனால், அவர்கள் தங்கள்
சொந்த நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதையும்
பார்க்கிறோம்.
மாபெரும் தலைவர் மாசேதுங் உயிரோடு இருந்த காலத்தில்தான், சீனா - திபெத் தேசிய இனத்தாயகத்தை ஆக்கிரமித்தது.
தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை அளித்து - உலகிற்கே
முன்னெடுத்துக்காட்டாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை, சோவியத் ஒன்றியம் வைத்திருந்தது. அந்த உரிமையைக்
கொண்டு பின்லாந்து நாடு பிரிந்து போவதை தலைவர் லெனின் ஏற்றுக் கொண்டு, தனி நாடு அமைத்துக்கொள்ள வழிவிட்டார்.
இங்குதான் நாம் “சோவியத் ரசியா”
என்று பொதுவாகச்
சொல்கிறோம். ஆனால், அவர்கள்
சட்டப்படி “சோவியத் ஒன்றியம்”
என்றுதான் சொன்னார்களே
ஒழிய, நாட்டின் பெயரில் “இரசிய” அடையாளம் வெளிப்படையாகவராமல் தான் பார்த்துக்கொண்டார்கள்.
ஆனால், ஏட்டளவில்
உரிமைகள் இருந்தாலும், நடைமுறையில்
சோவியத் நாட்டில், இரசிய மொழி -
இரசிய இன ஆதிக்கம்
மேலோங்கியது. லெனின் காலந்தொட்டு, அங்கு இரசிய
மேலாதிக்கத்திற்காக நடந்த அத்துமீறல்கள் குறித்து உக்ரேனியக் கம்யூனிஸ்ட்டுகள்
இப்போது எழுதுகிறார்கள். லாட்வியக் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படுத்துகிறார்கள்.
சோவியத் ஒன்றியம் சிதறிப் போனதில், இரசிய
மேலாதிக்கத்திற்கு முகாமையான பங்குண்டு!
லெனின் பிரிந்து போகும் உரிமையை ஆதரித்தாலும், தேச அரசு அமைத்துக் கொள்வதை நிபந்தனையற்று
ஏற்கவில்லை. தேசியத் தன்னுரிமையை மணமுறிவு (விவாகரத்து உரிமைக்கு) இணையானதாகக்
கூறினார். அதாவது பல தேசங்கள் சேர்ந்து இருப்பது குடும்பமாக வாழ்வது போல்
இயல்பானது; பிரிந்து சென்று
தேச அரசு அமைப்பது விவாகரத்து போல விதிவிலக்கானது என்பதுதான் லெனின் கோட்பாடு!
ஐ.நா.வின் உரிமைப் பிரகடனத்தின் உறுப்பு 1 (2) இல், எல்லா தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால்,
அதற்கு முரணாக அடுத்த
பகுதியிலேயே, உறுப்பு
நாடுகளின் இறை யாண்மையை -பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்றும்
கூறுகிறார்கள். இவ்விரண்டு பிரிவுகளையும் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது
தங்களுக்கு சாதகமாக வல்லரசு நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
எப்போதுமே தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது, எதிர்நிலையான இந்த சர்வதேச சூழலில்
எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் முன்னேறுகிறது! வரலாற்றுத் தேவைகளைக் கருதி,
வல்லரசுகள்கூட தேசிய இன
விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சூழல் வரலாம். ஒரு ஏகாதிபத்திய வல்லரசு நாடு
ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் இருக்கக்
கூடாது என்று லெனின் சொன்னார்.
அதுபோல், வட அமெரிக்கா
ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை, “அமெரிக்கக்கையாட்களின் போராட்டம்” என்று முத்திரை குத்திவிட முடியாது.
குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் அதுதான்!
ஈராக், துருக்கி போன்ற
பல நாடுகளிடையே குர்து இன மக்கள் சிதறிக் கிடக்கின்றனர். துருக்கியில் ஒசலான்
தலைமையில் பி.கே.கே. என்ற கம்யூனிஸ்ட்டு தொழிலாளர் கட்சி தேசிய இன விடுதலைப்
போராட்டத்தை பல்லாண்டுகளாக - பல ஒடுக்குமுறைகளை
எதிர்த்து முன்னேறிக் கொண்டுச் சென்றுள்ளது. ஒசலான் வாழ்நாள் சிறையாளியாக
துருக்கியில் அடைக்கப்பட் டுள்ளார்.
1988இல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு, குர்து மக்களை இனப் படுகொலை செய்து, தொகை தொகையாகக் கொன்ற போது குர்து மக்களின்
விடுதலைத் தாகம் பெருமளவில் பேசப்பட்டது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது,
குர்திஸ்தான் விடுதலை
இயக்கத்தினர் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு மாகாண அரசு ஏற்படுத்திக்
கொள்வதற்கான சூழலாக அதை அமைத்துக் கொண்டார்கள்.
அதன் தலைவர் பர்சானி அப்போதே சொன்னார். “எங்களுக்குச் சாதகமான சூழல் வரும்போது எங்கள்
விடுதலைப் போராட்டத்திற்கு இந்த மாகாண அரசைப் பயன்படுத்திக் கொள்வோம்’’ என்றார். அதைத்தான் இப்போது 25.09.2017இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தி - தங்கள் விடுதலைக் கோரிக்கையை உலகறியச்
செய்துள்ளனர்.
விடுதலைக் கோரிக்கைக்காக ஆயுதம் தூக்கினால் அதை பயங்கரவாதம் என்கிறாயே,
இதோ அங்கீகரிக்கப்பட்ட
அரசைக் கொண்டு - சனநாயக வடிவி லேயே எங்கள் விடுதலைக் கோரிக்கையை - மக்கள் கருத்தாக நாங்கள் முன்வைக்கிறோம் என்று
குர்து மக்களும், கட்டலோனிய மக்களும்
தெரிவித்துள்ளார்கள்.
செர்மனி மேலாதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், கொசோவா விடுதலையை ஆதரிக்கிறது, ஆனால், கட்டலோனியா
விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதுபோல்தான் பல வல்லரசுகளும்!
இதே சூழலில்தான், கனடாவில்
கியூபெக் மாகாணத்திலும், ஐக்கிய முடியரசான
பிரிட்டனில் ஸ்காட்லாந்திலும் கருத்து
வாக்கெடுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த வல்லரசும் அதை
முன்வைக்கவில்லை. அங்கிருக்கும் சனநாயக வளர்ச்சிக் கேற்ப, அதை அங்குள்ள பிரிட்டன் அரசும், கனடா அரசும்தான் நடத்தியது.
பல தேசிய இனங்கள் வாழக்கூடிய நாட்டில் “கூட்டாட்சி” (Federation Ü™ô¶ Confederation) என்பது
தோற்றுப்போன ஒரு கோட்பாடு! கூடுதல் உரிமைகள் பெற்றெல்லாம் ஒரு தேசிய இனம்
கூட்டாட்சியில் நிலைத்துவிட முடியாது! கூடுதல் அதிகாரத்தை நோக்கிப் போவதே இயல்பாக
நடப்பதில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் வலுவாகும் இடங்களில் அவற்றின்
அழுத்தத்தில் அவற்றை எதிர்கொள்ள சில இடங்களில் நடக்கலாம்.
சோவியத் ஒன்றியத்தைவிட, தேசிய இனங்களுக்கு
உரிமை வழங்கிய ஒரு அரசமைப்புச் சட்டம் உலகில் எங்காவது உண்டா? ஆனால், நடைமுறையில் இரசிய மொழி இன மேலாதிக்கம்தான் அங்கு நடந்தது. ஒரே கட்சி, ஒரே சித்தாந்தம் என்ற வழியில் அது நடந்தது. வட
அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆங்கிலோ சாக்சன்
மொழியினரின் கூட்டாட்சியாக அது இருந்தாலும் கூட, அங்கும் முரண்பாடுகள் வெடிக்கின்றன.
கலிபோர்னியாவில் தனி நாட்டுக் குரல் கேட்கிறது.
பல தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசில், ஏதாவதொரு தேசிய இனம் மேலாதிக்கம் செலுத்துவது
இயல்பாக உள்ளது.
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியாகத்தான்
நடந்தது. குர்திஸ் தானில், சன்னி இசுலாமியப்
பிரிவினரே பெரும் பான்மையாக உள்ளனர். கட்டலோனியாவில் ரோமன் கிருத்தவர்களே
பெரும்பான்மையாக உள்ளனர். ஸ்பெயினிலும் அவ்வாறே! இருப்பினும், அங்கெல்லாம் மதத்தைத் தாண்டி மொழி வழி தேசிய
இனப் போராட்டம் நடக்கிறது. பண்பாட்டுக் கூறாக மதம் இருக்கலாமே தவிர, மொழி - தாயகம் தான் தேசிய இனத்தின் அடித்தளமாக
இருக்கின்றன. இவையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாக உள்ளன. சில அரிதான
சூழல்களில், நாகாலாந்து போன்ற
இடங்களில் பல மொழி பேசுபவர்கள் வரலாற்றுத் தாயகம் என்ற அடிப்படையில், ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைந்து கொண்டு, தங்களுக்கான தேச அரசை அமைத்துக் கொள்ளப்
போராடுவதும் நடக்கிறது. இது சராசரிப் போக்கல்ல!
தமிழீழத்தில் இன்றைக்குள்ள நிலையில், விடுதலைக் கோரிக்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் அங்கு அமைப்புரீதியான
சில குழப்பங்கள் உண்டு!
தமிழீழத்தில், தமிழீழ
விடுதலைப்புலிகள் ஒரு தேச அரசை நிறுவி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த
அரசையும், தமிழீழ
மக்களையும் சிங்கள பௌத்த இனவெறி அரசு பல நாடுகளின் பங்களிப்போடு போர் நடத்தி -
இரத்தக்களரியில் அழித்தொழித்தது.
எனவே, பன்னாட்டுச்
சமூகம்தான் ஐ.நா. வழியே அந்த அரசை மீட்டெடுத்துத் தர வேண்டும்! அதற்கான கருத்து
வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதற்குமுன்,
நமக்கு சில புரிதல்கள்
வேண்டும்.
இந்தியாவின் அனுசரணையோடு - இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தமிழீழ
விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தவே முடியாது என்ற அடிப்படைப் புரிதல் நமக்கு
வேண்டும். எந்தவொரு அரசுக்கும் வர்க்கத்தன்மை இருப்பதைப் போல், அவற்றுக்கு ஒரு இனத்தன்மையும் இருக்கிறது.
அவ்வாறு, இந்தியாவுக்கு ஒரு ஆரிய இனத்தன்மை இருக்கிறது.
ஆரியக் கட்டமைப்பாக அது செயல்படுகிறது.
ஆண்டாண்டு காலமாக ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழினத்தை பகையாக நிறுத்தியே,
இந்தியா பிறந்து வளர்ந்து
நம்முன் நிற்கிறது என்ற புரிதல் நமக்கு அவசியமானது!
உலகின் புவிசார் அரசியல் நிலைமைகள் அவ்வப் போது மாறலாம். சோவியத் - அமெரிக்கா என்ற இருமுனை உலகம் இருந்தபோது,
உலக நிலைமைகள் வேறு!
இன்றைக்கு, வட அமெரிக்கா
தலைமையில் ஒருமுனை உலகம் வலிந்து திணிக்கப்படும் சூழலில், அதற்கு எதிராகப் பலமுனை உலகம் உருவாகி வரும்
சூழல் வேறு! எனவே, புவிசார் அரசியல்
நலன் என்பது தற்காலிகமானது!
இன்னொருபக்கம், சீன
எதிர்ப்புக்காக இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டுமென்று சொல்லும் கருத்தாளர்கள் இருக்கின்றனர். இந்தியா ஒருபோதும் அவ்வாறு
செய்யாது! தமிழினப் பகையோடுதான், இந்திய அரசு சீன
எதிர்ப்பை முன்வைக்கும். அவ்வாறுதான் செயல் படுகிறது. தனது பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பிலும்,
சாகர் மாலா திட்டத்திலும்
சீனாவோடு கைகோக்கிறது. பன்னாட்டு உறவு வெறும் கருப்பு வெள்ளையாக இல்லை!
எனவே, இந்தியா -
தமிழினப் பகை அரசு என்ற
புரிதலோடுதான் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசியல்
அணி வகுப்பை நாம் முன்வைக்க வேண்டும்.
தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த
வழக்கம்போல் சிங்கள அரசு எதிர்க்கும்! எனவே, அதற்கு ஆதரவாக வெளியில்தான் சூழல்களை உருவாக்க
வேண்டும். அப்பணியில் நாம் ஈடுபட வேண்டும்.
இன்றைக்கு, பல தடைகளைக்
கடந்து தமிழீழத்தில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில்,
மாவீரர் நாள் என்பது
துக்கம் கொண்டாடும் நிகழ்வல்ல! “நாங்கள் ஒரு
தேசம்! இது எங்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எதிரியால் கொல்லப்பட்டவர்களின்
நினைவு நாள்’’ என்று உலகிற்குத்
தங்கள் விடுதலைக் கோரிக்கையை பறைசாற்றும் நிகழ்வு!
இவ்வாறான சூழலில், தமிழீழத்தில்
கருத்து வாக்கெடுப்பு நடத்த விரும்பினால், அதற்கு மிகப்பெரிய தடையாக இந்தியாதான் முன் நிற்கிறது!
நாமெல்லாம் நேசித்த கியூபா, வெனிசுவேலா போன்ற
பல இடதுசாரி நாடுகள், இந்தியாவின் உதவி
வேண்டும் என்பதற்காகத்தான், கேள்வி இல்லாமல்
இந்தியா ஆதரித்த இலங்கையின் தமிழின அழிப்புப் போரை ஆதரித்தார்கள். இதில் முதலாளிய
நாடு - பொதுவுடைமை நாடு என்ற
சித்தாந்த வேறுபாடுகள் கிடையாது!
இன்றைக்குள்ள உலகச் சூழலில், தேசிய விடுதலைப்
போராட்டம் என்பது, வல்லரசுப்
போட்டிகளுக்கு உள்ளே நுழைந்து நடத்தும் ஒரு காய் நகர்த்தல் ஆகும்! வெறும் கொள்கை
உறவோடு, ஞாயங்களின் அடிப்
படையில் அது நடக்காது! மனித உரிமை ஆர்வலர்கள் இருப்பார்கள், மக்கள் இருப்பார்கள். ஆனால், அரசு என்பது ஒரு போதும் ஞாயத்தின் பக்கம்
நிற்காது. தங்கள் அரசுக்கு அல்லது தங்கள் மண்டலத்திற்கு ஒரு நலன் இருக்கிறதென்றால்,
ஒரு தேச விடுதலைப் போரை
ஆதரிக்கும் நிலை ஏற்படலாம்!
இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். கட்டலோனியா மற்றும் குர்திஸ்தானில், மாகாண அரசுதான்
கருத்து வாக்கெடுப்பை நடத்தியது. எனவே, இங்கேயும் தமிழ்நாட்டில் முதலமைச்சர்
பதவியைப் பிடித்த பிறகு அவ்வாறு கருத்து வாக்கெடுப்பு நடத்து வோம் என்று சிலர்
கூறுகின்றனர். அதற்கு வாய்ப் பில்லை!
ஒரு சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கூட “இந்திய ஒருமைப் பாட்டை - இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்
கொள்கிறோம்” என்று ஒருவர்
வாக்குறுதி அளித்தால் தான், இங்கு
தேர்தலிலேயே நிற்கமுடியும்! இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் முறை ஆகியவை அத்தகையவை! கருத்து
வாக்கெடுப்பு என்று அறிவித்தால் அடுத்த நொடி தமிழ்நாட்டு ஆட்சியை இந்திய அரசு
கலைத்துவிடும்!
“அடைந்தால் திராவிட நாடு” என
முழங்கியவர்கள் கூட, ஏதோவொரு
வடிவத்தில் விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தபோது, தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
தி.மு.க.வுக்கு அப்போது கூடுதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்தனர். ஆனால்,
இந்திய அரசு ஒரு
தடைச்சட்டம் போட்டு அதை கைவிடச் செய்தது.
தனிநாடு கேட்டவர்கள் ஆயிற்றே என தமிழ் நாட்டுக்குக் கூடுதல் உரிமைகள் எல்லாம்
கொடுக்கப் படவில்லை. கூடுதலாக அதிகாரங்கள்தான் பறிக்கப் பட்டன. மாநில உரிமைகள் பல
பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவ்வாறுதான், தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் பறிக்கப்பட்டு
இந்திய அரசால் “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டது.
இந்திய நாடாளுமன்றம்தான் தேசிய இன ஒடுக்குமுறையின் முதன்மைக் கருவியாக
இருக்கிறது. சனநாயகம் என்ற போர்வையில் ஆரியமய இந்தி இனத்தின் ஆதிக்கம், ஆரிய வளையத்தில் வீழ்ந்துபோன பிற இனங்களின்
துணையோடு நடக்கிறது. நாடாளுமன்றப் பெரும்பான்மை என்பது அதுதான்!
எல்லா வகையிலும் அதிகாரத்தைமையப்படுத்துவதென்பது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல!
சமற்கிருத இந்தி மொழித் திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும் ஆரிய இன மேலாதிக்கத்திற்காக நடக்கின்றன. மோடி இதில்
வேகமாக உள்ளார் என்றால், காங்கிரசு அதில்
கொஞ்சம் பதமாக நடக்கிறது. அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை!
சிலர், பாட்டாளி வர்க்க
சர்வதேசியம் என்று கூறுகின்றனர். அது உயர்ந்த இலட்சியம்தான் என்றாலும், அதற்கு உடனடி வாய்ப்பில்லை!
எனவே, முதல் கட்டமாக
ஒத்த தேசிய இனங்கள் என்ற வகையில் தமிழர்கள் தங்கள் இறையாண்மை இலட்சிய அடிப்படையில்
ஒன்று சேர வேண்டும். தமிழர்களின் தேசியத் தாயகங்களான தமிழீழமும் தமிழ்நாடும் “தமிழர் சர்வதேசியம்” என்ற வகையில், பொதுப் புரிதலோடு
ஒத்திசைய வேண்டும்.
அதன் வழியிலேயே, தமிழீழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு நோக்கி
நாம் நகர முடியும்! தமிழீழம் இன்றைக்கு எலும்புக்கூடாக இருக்கலாம்! சாம்பல் மேடாக
இருக்கலாம். ஆனால், நாளை எழும்!
சாம்பலிலிருந்து மீண்டும் எழும்! மாவீரர்களின் ஈகம் வீண் போகாது! தமிழீழம்
உறுதியாய் வெல்லும்!”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
.
(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 திசம்பர்1-15 இதழில் வெளியானது)
0 கருத்துகள்:
Post a Comment