கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

சட்ட நெறிகளை மீறி தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் தீராத இனப்பகையோடு திணிக்கிறது இந்திய அரசு!




சட்ட நெறிகளை மீறி தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம்
தீராத இனப்பகையோடு திணிக்கிறது இந்திய அரசு

தோழர் கி. வெங்கட்ராமன், 



தமிழ்நாட்டை அழித்தே தீருவது என்ற முடிவோடு இந்திய அரசு, களம் இறங்கிவிட்டது! அதில் ஒன்றுதான், நியூட்ரினோ திட்டத்திற்கு அளித்துள்ள அனுமதி!
2017 நவம்பரில், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டுமென அமைச்சரவை செயலாளருக்கு ஆணையிட்டார். அதற்கிணங்க எல்லா சட்டங்களையும் வளைத்து, நீதி நெறியை மிதித்து, நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் ஆரியத்துவ இந்திய அரசு செயல்பாட்டைத் தீவிரப்படுத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் பொட்டி புரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை “தேச முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தால் சிறப்புத் திட்டமாகக் கருதி, இசைவு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறி, இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 27.03.2018 நாளிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்த அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு கடந்த 2018 மார்ச் 5 அன்று நடத்திய கூட்டத்தில், நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு சிறப்பு அனுமதி வழங்க அமைச்ச கத்திற்குப் பரிந்துரை செய்தது.
“இந்த முன்மொழிவு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது. இருப் பினும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதனை சிறப்புத் திட்டமாகக் கருதி, கட்டட பரப்பு, கட்டடங்கள் அமையவுள்ள இடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, 2006 (Environmental Impact Assessment (EIA) Notification, 2006) பிரிவு 8(a) - இன் கீழ், கட்டடங்கள் மற்றும் கட்டுமானத் திட்டம் என வகைப்படுத்தி அனுமதி வழங்கக் கோரியதால், இந்த சிறப்பு அனுமதிக்குப் பரிந்துரைக்கப்படுகிறது” என்று கூறுகிறது.
இதுவே சட்டம் வளைக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்று கூறும்! இந்தக் கூட்டத்தில், இந்திய படைத்துறை ஆய்வு - மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் (Defence Research and Development Organization) கலந்து கொண்டிருப் பதிலிருந்தே இது படைவகை நோக்கத்தில் சிறப்புத் திட்டமாகக் கருதப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதை விளக்கும்!
மோடி அரசு, “தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்று அறிவித்து சிறப்பு அனுமதி கோரியிருப்பதன் பின்னணி இதுதான்!
பேரழிவை உண்டாக்கும் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை எப்படியாவது தமிழ்நாட்டின் மீது திணித்து விட வேண்டும் என்ற வெறியில், எல்லா நீதி நெறிகளையும் இந்திய அரசு காலில் போட்டு மிதித்து வருவதை இத்திட்டம் கடந்து வந்த பாதையை சற்று நோக்கினால் புரிந்து கொள்ள முடியும்.
தொடக்கத்திலிருந்தே தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் குறி வைத்தே, இத்திட்ட அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் மக்கள் நலன் சார்ந்த ஆய்வாளர்கள், இதிலுள்ள ஆபத்தை சுட்டிக்காட்டியதால் இடங்களை மாற்றிய போதிலும், தமிழ்நாட்டைச் சுற்றியே தான் இந்திய அரசின் குறி இருந்தது.
கடைசியில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், சுமார் 1,600 கோடி ரூபாய் செலவில், இந்த “இந்தியாவில் அமையும் நியூட்ரினோ ஆய்வகம்” (India based Neutrino Observatory - INO) நிறுவுவதற்கு 2011 சூன் 15 அன்று இசைவு வழங்கியது. அந்த இசைவு அறிவிக்கையிலேயே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நிபந்தனையும் விதித்திருந்தது.
இந்த நிபந்தனையைப் பொருட்படுத்தாமலேயே ஆய்வகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கபபட்டன. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இத்திட்டத்தை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் தொடங்கின. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் மக்கள் போராட்டங்கள் விரிவடைந்தன.
இச்சூழலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இத்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். 2015 பிப்ரவரியில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடையாணை பிறப்பித்தது. “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவு பெறாமல், இந்தியாவில் அமையவுளள் நியூட்ரினோ ஆய்வகம் எந்த வகையான திட்டப் பணிகளையும் தொடரக் கூடாது” என்று அந்த இடைக்காலத் தடை கூறியது.
இதற்கிடையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு நியூட்ரினோ திட்டம் தொடர்பாக “சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை” வழங்கிய சலீம் அலி ஆய்வு நிறுவனம், இவ்வகையான சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அணியப் படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்ல என்ற உண்மையை “பூவுலகின் நண்பர்கள்” அமைப்புத் தோழர்கள் கண்டறிந்தனர்.
தகுதிச் சான்று பெறாத ஒரு நிறுவனத்தை வைத்து, தகுதிச் சான்று அறிக்கையை ஏற்படுத்தி - குறுக்கு வழியில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டத்தை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தென் மண்டல “தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை” அணுகினர்.
“பூவுலகின் நண்பர்கள்” சார்பில் பொறியாளர் கோ. சுந்தர்ராசன் தொடுத்த இந்த வழக்கில், சலீம் அலி நிறுவனம் தொடர்பாக எடுத்து வைக்கப்பட்ட உண்மைச் சான்றுகளை ஏற்றுக் கொண்ட பசுமைத் தீர்ப்பாயம் 2017 மார்ச்சில், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து ஆணையிட்டது. இந்தியாவில் இயங்கும் நியூட்ரினோ ஆய்வகம், புதிய சுற்றுச்சூழல் இசைவு மனுவை அளிக்குமாறும் தேசிய வன விலங்கு வாரியத்திடம் அனுமதி பெறுமாறும், கூடுதல் நிபந்தனையை விதித்து ஆணையிட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவு பெறாமலேயே சட்டப்புறம்பாக நியூட்ரினோ திட்டப் பணிகள் நடைபெறுவதை வைகோ தொடுத்த வழக்கு அம்பலப் படுத்தியது.
உரிய தகுதியற்ற நிறுவனத்தை இந்திய அரசு தன் வசதிக்கேற்ப பயன்படுத்தியதையும் வனத்துறை சட்டத்தை மீறியதையும் “பூவுலகின் நண்பர்கள்” சுந்தர்ராசன் தொடுத்த வழக்கு அம்பலப்படுத்தியது.
இதுமட்டுமின்றி, முதலில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு போட்டது இந்தியக் கணித ஆய்வு நிறுவனம் (Indian Institute of Mathematics). இதற்குத் தடையும் தள்ளுபடியும் வந்த பிறகு, தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு “டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம்” (Tata Institute of Fundamental Research) சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பல துறை நிபுணர்களைக் கொண்ட குழுவை அமர்த்தி, இத்திட்டம் குறித்த சுற்றுச்சூழல் ஆய்வை விரிவாக நடத்தியது. அதன் அடிப்படையில், மாநில சுற்றுச்சூழல் ஆய்வுக் குழு 27.11.2017இல் நடத்திய தனது 98ஆவது கூட்டத்தில், இத்திட்டத்தின் பல்வேறு ஆபத்துகளை சுட்டிக்காட்டி விரிவான அறிக்கையை வெளியிட்டது.
நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை, 8(a) பிரிவின்கீழ், கட்டடம் மற்றும் கட்டுமானத் திட்டம் (Building and Construction Project) என்று வகைப்படுத்தி அனுமதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியது. தனது இந்த முடிவுக்கு, கீழ்வரும் காரணங்களை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டது.
1. நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்காக மலையைக் குடைந்து, சுரங்கப்பாதை அமைப்பதற்கு கெட்டியான மற்றும் தொகுப்பு நிலை கற்களைக் கொண்ட மலையைப் பிளக்க வேண்டும். இதற்கு மிக வலுவான வெடிப்பொருட்களை மிக அதிக அளவில் பயன்படுத்தி வெடிக்கச் செய்ய வேண்டிய தேவை எழும். “சார்னோகைட்” (Charnockite) என்ற உறுதிமிக்க பாறைகள் நிரம்பிய இந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், வெடிவைத்து ஆறு இலட்சம் கன மீட்டர் அளவுக்கு, பாறைகளைக் குடைந்தெடுக்க வேண்டும்.
2. அம்பரப்பர் மலையின் உச்சியிலிருந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில், சுரங்கக் குடைவு நடத்தப்பட வேண்டும். இந்த ஆயிரம் மீட்டர் ஆழத்தில் மலைப் பாறை மிக மிக பெரும் அழுத்தத்தில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் 270 கிலோ கிராம் என்ற அளவுக்கு செங்குத்து நிலையில் உயர் அழுத்தம் இருக்கும்.
இவ்வளவு இறுக்கமான உறுதிமிக்கப் பாறையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, சுற்றிலும் உள்ள பல மலைக் குன்றுகளில் வெடிப்பும் மேல் தள தகர்வும் ஏற்பட வாய்ப்புண்டு! இத்திட்ட அறிக்கை மேற்கொள் வதாக உறுதியளிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புவித் தொழில்நுட்ப ஆய்வு செய்தால்தான் கண்காணித்து உறுதி கூற முடியும்!
3. மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உலகின் பல்லுயிர்ப் பெருக்கக் களஞ்சியம் (Biodiversity Treasure) ஆகும். அதுமட்டுமின்றி, பாதுகாக்கப்பட வேண்டிய ஆபத்திலுள்ள பல்லுயிர்ப் பெருக்க மண்டலமும் (Biodiversity Hotspot) ஆகும். உலகில், அழிந்துவரும் தாவரங்கள், மீன் இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள், ஊர்வன இனங்கள், பறவைகள், பாலூட்டிகள் மற்றும் முதுகு எலும்பிலிகள் ஆகிய பல்வகை உயிரினங்களின் வாழிடம் ஆகும்.
மேலும், இந்த மலைத்தொடர் பொருளியல் வகையில் முகாமை வாய்ந்த செடி, கொடி இனங்களின் வாழிடமும் ஆகும்.
4. நியூட்ரினோத் திட்டம் அமையவுள்ள இப் பகுதியில், வைகை ஆற்றுக்கான பல்வேறு சுனைகளும், சிற்றாறுகளும் உருவெடுக்கின்றன. இந்த நீர் நிலை கூட்டமைப்பு தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், வேளாண்மைத் தேவையை நிறைவு செய்வதாகவும் விளங்குகிறது.
எனவே, தமிழ்நாடு மாநில சூழல் தாக்கீட்டுக் குழு நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை 8(a) பிரிவின்கீழ் வகைப்படுத்தி ஆய்வு செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
வெறும் கட்டுமானப் பணிகளைத் தாண்டி, பல்வேறு தொழில்நுட்பக் கூறுகள் இதில் இருப்பதால், இந்திய அரசு இதனை உரியவாறு ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சூழல் மதிப்பீட்டுக் குழு கருதுகிறது என தமிழ்நாடு அரசின் அறிக்கை தெளிவுபடக் கூறியது.
வெறும் கட்டுமானத் திட்டமாக நியூட்ரினோ திட்டத்தை வகைப்படுத்த முடியாது, இதனை சுற்றுச்சூழல் வகையில் “B” வகையினதாகக் (Category B) கூற முடியாது என்பதை அடுக்கடுக்கான ஆதாரத் தோடு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறிவிட்டது.
இந்நிலையில் எப்படியாவது இத்திட்டத்தைத் திணித்துவிட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் அடுத்தடுத்து சட்டத்தை வளைக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கிவிட்டது.
ஏனெனில், சுற்றுச்சூழல் சட்டத்தின்படி “பி (B) வகையினதாகக் கருதப்படும் கட்டுமானத் திட்டங்கள் கூட வனப்பகுதியில் அமைந்தாலோ, இரண்டு மாநிலங் களுக்கு இடையில் 10 கிலோ மீட்டருக்குள் இருந்தாலோ அவை “ஏ” (A) வகையினதாகக் கருதப்பட வேண்டும் என்பது சட்டநிலை!
“ஏ” வகையினதாக ஒரு திட்டம் அமையுமானால், விரிவான சூழல் தாக்க மதிப்பீடு - தகுதியுள்ள நிறுவ னத்தின் வழியாகச் செய்யப்பட வேண்டும். தேசிய வனத் துறை வாரியத்தில் இசைவு பெற வேண்டும். தொடர் புடைய மாநிலங்களின் இசைவு பெற வேண்டும். இவை அனைத்திற்கும் மேல், விரிவான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஏற்பைப் பெற வேண்டும்.
இவற்றைத் தவிர்ப்பதற்காகவே, “தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற வகையில் சிறப்பு அனுமதி” வழங்குவதாக இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கிறது. சுற்றுச்சூழல் சட்டத்தில் “தேச முக்கியத் துவம் வாய்ந்தது” என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது! அதேபோல், எந்தத் திட்டத்தை “சிறப்புத் திட்டமாக” (Special cases) கருதலாம் என்பதற்கும் சட்ட வரையறுப்பு ஏதுமில்லை!
அதுமட்டுமின்றி நியூட்ரினோ ஆய்வினால் அப்பகுதி யில் கதிரியக்க ஆபத்து ஏற்படாது என்று “இந்தியாவில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகம்” கூறியதை சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்படியே அறிவிக்கிறது.
வட அமெரிக்காவின் பெர்மி லேப் (Fermilab), சுவிட்சர்லாந்தின் சேர்ன் (CERN), டோக்கியாவின் நியூட்ரினோ ஆய்வகம் (Super-Kamioka Neutrino Detection Experiment - Neutrino Observatory) ஆகிய ஆய்வகங்களிலிருந்து தயாரித்து அனுப்பப்படும் ஆற்றல் வாய்ந்த நியூட்ரினோ கற்றைகள் பொட்டிபுரம் ஆய்வகப் பகுதியில், கதிரியக்க ஆபத்தை விளைவிக்காது என்பதற்கு எந்த தற்சார்பான ஆய்வையும் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சூழல் மதிப்பீட்டுக் குழு மேற்கொள்ளவில்லை.
அதேபோல், இக்கட்டுமானத்தின்போது பயன்படுத்தப்படும் வேதிக் கரைசல்களால் நீருக்கும், நிலத்திற்கும் ஏற்படவாய்ப்புள்ள ஆபத்துகள் குறித்து, தற்சார்பான ஆய்வு எதையும் சுற்றுச்சூழல் அமைச்சகக் குழு மேற்கொள்ளவே இல்லை!
இவ்வாறான ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முடிவு செய்ததாகவும், சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறவில்லை.
தனது அதிகாரத்தை மீறி, சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தனது சட்டவரம்பையும் மீறி இசைவு வழங்கப்படுவதாக சூழல் மதிப்பீட்டுக் குழு கூறிய பின்னும், கதிரியக்க பாதிப்பு குறித்த ஆய்வோ, வேதிக் கரைசல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வோ மேற்கொள்ளாமல் தடித்தனமாக இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள பகுதிக்கு அருகில், 4.9 கிலோ மீட்டருக்குள் கேரளாவின் மதி கெட்டான் சோலை தேசியப் பூங்கா என்ற பாதுகாக்கப் பட்ட வன உயிர்ப் பாதுகாப்பகம் அமைந்துள்ளது. எனவே, தேசிய வன விலங்கு வாரியத்தின் இசைவு பெற வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்திய அரசு தனது கட்டுப்பாட்டிலுள்ள தேசிய வன விலங்கு வாரியத்தின் வழியாக இதேபோன்ற சட்ட மீறலான அனுமதியைப் பெற்றுவிடும் ஆபத்துள்ளது.
இன்னொரு புறம், நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கேரள எல்லைத் தொடங்குகிறது. 10 கிலோ மீட்டர் அளவில் எல்லை இருந்தாலே அந்தத் தொடர்புடைய மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நியூட்ரினோ ஆய்வகம் இது குறித்த தகவல்களைக் கூட தெரிவிக்கவில்லை.
“தேச முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறுவதன் வழியாக, இராணுவ வகையிலான பாதுகாப்புத் தொடர் பான திட்டம் என சுற்றிவளைத்துக் கூறி, எந்த வகை ஆய்விலிருந்தும் தப்பிப்பதற்காக மோடி அரசு எல்லா சட்டங்களையும் மீறுகிறது.
சட்டத்தின் ஆட்சியையே குலைத்து தனது தமிழினப் பகைத் திட்டமான நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவதென ஆரிய இந்தியம் களம் இறங்கிவிட்டது!
தமிழர் மண்ணையும், வாழ்வையும், மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள இன்னொரு தற்காப்புப் போர்க் களம் அழைக்கிறது! ஆரிய இந்தியத்தின் இந்த ஆதிக்கப் போரை தமிழர்கள் சந்தித்து - முறியடித்தே ஆக வேண்டும்!


0 கருத்துகள்: