Friday, May 18, 2018

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை! கி. வெங்கட்ராமன்

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு
இன்னும் நீதி கிடைக்கவில்லை!"


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


ஆரிய இந்திய வல்லாதிக்க அரசின் ஒருங்கிணைப்பில் உலக வல்லரசுகளின் உதவியோடு, முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ஆற்றொணாத்துயரம் நடந்து முடிந்து, ஒன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 

தமிழ்நாடு உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆறாத காயமாக முள்ளிவாய்க்கால் படுகொலை தங்கி இருக்கிறது. 

மண்ணையும், மானத்தையும் காக்கும் தமிழீழ விடுதலைப் போரில் உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கத்தை மீண்டும் உரித்தாக்குகிறோம்! 

இந்த இன அழிப்பு, பன்னாட்டுச் சமூகத்தின் உறுதியான கேள்விக்கு உட்படாமல் சிங்களப் பேரினவாதம் உலா வருவது அடுத்தப் பெரும் துயரமாகும்! 

நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வந்த பின்னும், பன்னாட்டுச் சமூகம் வெளிப்படையான இந்த உண்மையை இன்றுவரை ஏற்க மறுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழீழத் தனியரசு தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்த மறுத்தும் வருகிறது. 

அதைவிட, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், கடந்த 2015 அக்டோபரில் சிங்கள அரசு முன்மொழிந்து - ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட நடவடிக்கைகள்கூட இன்றுவரை நடைபெறவில்லை!

தமிழீழ மண்ணில் சிங்களக் குடியேற்றம் குறைவதற்கு மாறாக, தீவிரம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் தமிழீழத் தாயகம் என்ற தகுநிலையை கிட்டத்தட்ட இழந்து விட்டது! வரம்பற்ற சிங்களக் குடியேற்றம் நடந்து முடிந்துவிட்டது. 

இப்போது, அது வடக்கு மாகாணத்திலும் விரைவாக நடந்து வருகிறது. தமிழீழக் கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமம் மேலும் மேலும் சிங்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழீழ மீனவர்கள் மீன்பிடித் தொழிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 

தமிழர்களின் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டிடங்கள் மிக வேகமாக புத்த விகாரைகளாகவும், புத்த பிக்குகளின் தங்குமிடமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. 

இன்றும் தமிழீழ மண்ணில் சிங்களப் படைக் குவிப்பு பெருமளவு குறையவில்லை. “பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்த ஒரே நாடு சிறீலங்காதான்” என்று மார்தட்டும் இலங்கையின் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா, “படைக்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று இப்போதும் கொக்கரிக்கிறார் (The Hindu, 16.05.2018). 

ஏறத்தாழ 60,000 ஏக்கர் தமிழர் நிலம் சிங்களப் படையினர் வசம் உள்ளது. அதில், சில நூறு ஏக்கர் தனியார் நிலங்களைத் தவிர பிற எதுவும் மீள வழங்கப்படவில்லை! பண்ணைகள், அரசுக் கட்டடங்கள், பல்வேறு சமூகப் பயன்பாட்டு நிலையங்கள், காடுகள் ஆகியன சிங்களப் படைகளின் பிடியில் இருக்கின்றன. 

ஏ-9 நெடுஞ்சாலையில் வணிக நிறுவனங்கள் சிங்களப் படையணிகளாலேயே நடத்தப்படுகின்றன. உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், விழா நடத்தும் மண்டபங்கள், கேளிக்கை விடுதிகள். தோட்டங்கள், பண்ணைகள், குழிப்பந்தாட்ட (கோல்ஃப்) நிலையங்கள் போன்ற பலவும் இராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. இந்த வகையில், சிங்கள இராணுவமே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல தமிழீழ மண்ணில் செயல்படுகிறது. 

2016இல் இந்தக் குழுமங்களின் வணிக நடவடிக்கைகளால் ஐம்பது இலட்சம் டாலர் தொகை அளவுக்கு சிங்கள இராணுவம் இலாபம் ஈட்டியுள்ளது. இவற்றில் கடைநிலைப் பணிகளில் சற்றுக் கூடுதல் ஊதியத்திற்குத் தமிழர்கள் அமர்த்தப்பட்டு, சிங்களப் படைக்கு இசைவானவர்களாக அவர்களில் கணிசமானவர்களை மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது. 

கல்வி நிறுவனங்கள், வருவாய் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது மக்கள் சேவைத் துறைகளில் 95 விழுக்காடு தமிழீழப் பகுதியில் இன்னும் சிங்களப் படையாலேயே நடத்தப்படுகின்றன. 

ஐ.நா. தீர்மானத்தில், தானே ஒத்துக் கொண்டபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிங்கள அரசு கைவிடவில்லை. 

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக படையினர் மீதோ, சிங்களக் காடையர்கள் மீதோ இதுவரை எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, சரணடைந்த புலிகள் பலரது கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை! 

முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் கடைபிடிக்கும் இயல்பான நிகழ்வுகள்கூட மிகப்பெரும் அடக்குமுறைகளையும் கெடுபிடிகளையும் சந்தித்து வருவது தொடர்கிறது. 

வெளித் தோற்றத்தில் அமைதி திரும்பி வருவதாகவும், சனநாயகம் மீண்டு வருவதாகவும் காட்டப்பட்டாலும், உண்மையில் நிறுவனமயமாக்கப்பட்ட உரிமைப் பறிப்புகள் - சனநாயகக் குலைப்புகள் தீவிரம் பெற்றுள்ளன. 

இதுகுறித்து, பன்னாட்டு அரங்கில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுந்துவிடாதவாறு மிகக் கவனமாக இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது. 

ஐ.நா. உறுப்பு அமைப்புகளில் இதுகுறித்து குரல் எழுப்புவோர் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுகிறார்கள். 2017 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சிங்கள இனவெறியர்களால் மிரட்டப்பட்டது இதற்கொரு சான்று! 

இந்நிலையில், தமிழீழ விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டம் பல கட்டங்களைத் தாண்டி, பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் பல அரங்குகளில் நடத்தப்பட வேண்டிய போராட்டமாக மாறியுள்ளது. இவை அனைத்திற்கும் முதன்மைத் தளமாக தமிழீழ மண்ணின் அம்மக்கள் நடத்தும் போராட்டமே அமையும்! 

காணாமல் ஆக்கப்பட்டோர் மீட்பு, சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படுதல், சிங்களப் படைகள் வெளியேற்றப்படுதல், மனித உரிமை மீட்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழீழ மண்ணில் அம்மக்கள் இருக்கும் வாய்ப்புக்கிடையில் விடாப்பிடியாகப் போராடுவது முதன்மைத் தேவையாகும்! 

அதேபோல், தமிழ்நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் சர்வதேச அரங்குகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெற வேண்டும். 

சிங்கள அரசு இயற்றும் புதிய அரசியல் யாப்பு என்ற மாய வலைக்குள் தமிழர்கள் வீழ்ந்துவிடக்கூடாது! இனப்படுகொலைக்கு எதிரான தற்சார்பான பன்னாட்டு விசாரணை, தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்பு ஆகியவற்றில் தெளிவோடும் உறுதியோடும் நிற்க வேண்டும். 

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் சம்பந்தர் - சுமந்திரன் போன்ற இரண்டகர்களை அடையாளங்கண்டு அப்புறப்படுத்தி, தெளிவான திசைவழியில் தங்கள் போராட்டங்களை உறுதியாக முன்னெடுக்க வேண்டும். 

குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசு பன்னாட்டு அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிது நீதியும் கிடைக்காமல் தடுப்பதை எதிர்த்து, விழிப்போடு போராட வேண்டும்! 

அதுதான் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழர்கள் செய்யும் கடமையாகவும் இருக்கும்! 

No comments: