கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

புதிய கோணத்தில் மார்க்சியத்தை ஆய்வு செய்த சமிர் அமின் அவர்கள் மறைவு!



புதிய கோணத்தில் மார்க்சியத்தை ஆய்வு

செய்த சமிர் அமின் அவர்கள் மறைவு !

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல் !

புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் – மக்கள் இயக்கச் செயல்பாட்டாளர் சமிர் அமின், நேற்று (12.08.2018) பாரீசில் காலமானார். 

தனது 86 ஆவது அகவையில் மறைந்த சமிர் அமின், எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1931 செப்டம்பர் 3ஆம் நாள் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எகிப்து பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். 

எகிப்தில் நாசர் ஆட்சிக்காலத்தில், அந்நாட்டுத் திட்டக்குழுவில் குறுகிய காலம் செயலாற்றினாலும், விரைவில் நாசர் ஆட்சி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியபோது சமிர் அமின் பாரீசுக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 

ஆயினும், மார்க்சியமும், பிற பொருளியல் அரசியல் கோட்பாடுகளும் ஐரோப்பாவை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்திற்கு வந்த சமிர் அமின் 1988இல், “ஐரோப்பிய மையவாதம்” (Euro Centrisim) என்ற ஆய்வு நூல் எழுதினார். 

சமிர் அமின் அறிமுகப்படுத்திய “ஐரோப்பிய மையவாதம்” என்ற சொல்லாடல், மார்க்சியம் உள்ளிட்ட ஆய்வுலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பொருளியல் – அரசியல் ஆய்வில் புதிய போக்கின் தொடக்கமாகவும் அது அமைந்தது. 

சமிர் அமின் மார்க்சியத்தின் மதிப்புக் கோட்பாட்டை வெறும் பொருளியல் வாய்ப்பாடாக முன்வைப்பதை எதிர்த்தார். அவரது “உலகு தழுவிய மதிப்பின் விதி” (The Law of Worldwide Value) என்ற நூல் மேற்குலகம் முன்வைக்கும் “வளர்ச்சி” வாதத்தை கேள்விக்கு உட்படுத்தியது. 

ஒவ்வொரு தேசமும் தத்தமக்குரிய பொருளியல் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்று வலியுறுத்திய அவரது “வர்க்கமும் தேசமும்” (The Class and Nation) என்ற நூல், புதிய புரிதல்களுக்கு இட்டுச்சென்றது. 

கடந்த 2016ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து எழுதியும் மக்கள் இயக்கங்களில் பங்கேற்றும் வந்த சமிர் அமின், மூளைப் புற்றுநோய் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக நினைவு மறதி நோய்க்கு ஆட்பட்டார். 

பாரிசீல் கடந்த ஒரு மாத காலமாக உயர் சிகிச்சையில் இருந்தாலும், பயனின்றி 12.08.2018 அன்று மறைவுற்றார். 

சமிர் அமின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 

0 கருத்துகள்: